Published:Updated:

எஸ்.ராமகிருஷ்ணனின் மகத்தான பங்களிப்புக்கான அங்கீகாரம் இது!

``டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி போன்றோருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவுக்கு அவரும் அவரது இலக்கியப் படைப்புகளும் இருக்கின்றன. அதுமட்டுமல்ல தமிழில் அடுத்த ஞானபீட விருது அறிவிக்கப்படுமானால் அதற்கு முழுத் தகுதியுடைய ஒரு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மட்டும்தான்."

எஸ்.ராமகிருஷ்ணனின் மகத்தான பங்களிப்புக்கான அங்கீகாரம் இது!
எஸ்.ராமகிருஷ்ணனின் மகத்தான பங்களிப்புக்கான அங்கீகாரம் இது!

இந்திய அளவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் மிக முக்கியமான விருதான, சாகித்ய அகாதமி விருதை வாங்குவதுதான் ஒவ்வோர்  எழுத்தாளரின் கனவு. 24 இந்திய மொழிகளிலிருந்து வெளிவந்த சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரை நூல்கள் போன்றவற்றில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து ஒரு லட்ச ரூபாய் பரிசும், கேடயமும் வழங்கப்படும். ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும் இந்த விருது பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் டில்லியில் நடக்கும் விழாவில் வழங்கப்படும்.

விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் நூல் இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்படும் என்பதுதான், அங்கீகாரம் என்பதையும் தாண்டி இந்த விருதின்மீது எழுத்தாளர்களுக்கு அதிக ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. இந்த ஆண்டு தமிழ் இலக்கியத்துக்கான விருது எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய `சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக டிசம்பர் 5-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கை பற்றிப் பேசும் இந்த நாவல் 2014-ல் உயிர்மை பதிப்பகம் வெளியீடாக வந்தது. தற்போது எஸ்.ராமகிருஷ்ணன் தொடங்கியுள்ள தேசாந்திரி பதிப்பகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.


விருது அறிவிப்புக்குப் பின் எழுத்தாளர்கள், வாசகர்கள் என்றில்லாமல் தமிழக முதல்வர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் மட்டுமல்லாது பலதரப்புகளில் இருந்தும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள் குவிகின்றன. ஊடகங்களிலும் பெரிய அளவில் இந்த விருது குறித்தும் எஸ்.ராமகிருஷ்ணன் குறித்தும் பேசப்பட்டது. ``விருது அறிவிக்கப்பட்டதற்கு அடுத்த நாள் கிட்டத்தட்ட ஒருநாள் முழுவதும் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தேன். எழுத்தாளரை இப்போது எல்லா ஊடகமும் திரும்பிப் பார்க்க ஆரம்பித்துள்ளன. விருது அறிவிக்கப்பட்டதற்குப் பின் சஞ்சாரம் நாவல் 1000 பிரதிகள் விற்றுள்ளன. இன்னும் அதிகமாக விற்பனையாகும் என்று எதிர்பார்க்கின்றேன். இது ஒரு ஆரோக்கியமான விஷயம்” என்றார் எஸ்.ரா பெருமையுடன்.

சென்னை ரஷ்ய கலாசார மையத்தில் அவருக்கான முதல் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டிஸ்கவரி புக் பேலஸ், வம்சி புக்ஸ், நாதன் பதிப்பகம், மலைச்சொல் பதிப்பகம், ஜீரோ டிகிரி பதிப்பகம் உட்பட்ட சிலர் இதை ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் நடிகர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் சி.மகேந்திரன், இலக்கிய விமர்சகர் இந்திரன், எழுத்தாளர்கள் ச. கந்தசாமி, சாரு நிவேதிதா, பவா செல்லத்துரை, அஜயன் பாலா, இயக்குநர் லிங்குசாமி உட்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

``இலக்கியத்தில் மட்டும்தான் விருதுக்கான அங்கீகாரமாகப் படைப்பின் தரத்தை விட்டுவிட்டு எழுத்தாளனின் வயதைப் பார்க்கிறார்கள். மற்ற எல்லாத் துறைகளிலும் சிறு வயதிலேயே சாதனைகள் செய்தவர்களைக் கொண்டாடுகிறார்கள். அதேபோல இலக்கியத்திலும் வயதைப் பார்க்காமல் படைப்பின் தரத்தைப் பார்த்துக் கொண்டாட வேண்டும். எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சஞ்சாரம் என்ற நாவலுக்காகக் கொடுக்கப்பட்ட விருது இல்லை. இது அவரது ஒட்டுமொத்த இலக்கியப் பங்களிப்புக்குமான விருது.

டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி போன்றோருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவுக்கு அவரும் அவரது இலக்கியப் படைப்புகளும் இருக்கின்றன. அதுமட்டுமல்ல தமிழில் அடுத்த ஞானபீட விருது அறிவிக்கப்படுமானால் அதற்கு முழுத் தகுதியுடைய ஒரு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மட்டும்தான். எழுத்துதான் தன்னுடைய முழுநேரப் பணி என்று எடுத்த இவரது முடிவு மிகவும் தைரியமானது. அந்தத் தைரியம் அவரது பேச்சிலும் இருக்கும். எழுத்தாளரைப் பாராட்டுவது என்பது வெறும் பாராட்டு விழாவோடு நிற்கக் கூடாது. அவரது முக்கியமான படைப்புகளைப் பிற மொழிகளில், குறைந்தபட்சம் ஆங்கிலத்திலாவது மொழிபெயர்க்க வேண்டும். அப்படி ஒரு எழுத்தாளனை எல்லோரிடமும் கொண்டுசேர்ப்பதுதான் உண்மையில் அவனுக்கான பாராட்டு. வாசிப்பை பரவலாகக் கொண்டு சேர்த்தவர் எஸ்.ராமகிருஷ்ணன்தான்” என்பது போன்ற பல கருத்துகளை வாழ்த்துரை வழங்கியவர்கள் பகிர்ந்துகொண்டார்கள்.


எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இளம் எழுத்தாளர்கள் மூலம் சிறப்பு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பேசிய எஸ்.ராமகிருஷ்ணன், இதுநாள் வரை தன்னுடைய வாழ்க்கைக்கும் எழுத்திற்கும் உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார். நிகழ்வில் பல மூத்த, இளம் எழுத்தாளர்கள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், வாசகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.