Published:Updated:

அடுத்து என்ன? - சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை!

அடுத்து என்ன? - சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை!
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை!

அ.கரீம், படங்கள் : தி.விஜய்

அடுத்து என்ன? - சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை!

அ.கரீம், படங்கள் : தி.விஜய்

Published:Updated:
அடுத்து என்ன? - சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை!
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை!

‘வேப்பமரத்தின் கொழுந்து இலையைப் பற்றிக்கொண்டு, தனக்கு வளர்ந்த புதுச் சிறகுகளை விரித்துப் பறக்கத் தயாரானது பச்சைநிறத் தயிர்வடைப் பூச்சி. முதன்முறையாகப் பறக்கத் துடிக்கும் உற்சாக மிகுதியில், தனது சிறகுகளைப் படபடவென அடித்துக் கிளம்பிப் பறந்து தொப்பென்று தார்ச்சாலையின் மீது விழுந்தது. வாகன நடமாட்டமில்லாச் சாலையில், தனது நீண்ட தலையை வலது இடது புறமாய்த் திருப்பித் திருப்பிப் பார்த்து, முன்னாலிருக்கும் வேகத்தடை மீது ஏற ஒவ்வோர் அடியாய் முன்னெடுத்துக் கால்களை வீசி நடந்து, அதன்மீது ஏறிநின்று மீண்டும் பறக்க றெக்கைகளைப் படபடவென அடித்துக் கிளம்ப எத்தனித்தபோது, ‘பச்’சென்று போலீஸ் ஜீப்பின் டயர் அதன் தலைமீது ஏறி நசுக்கிச் சென்றது’ அரசியல், அதிகாரம், சாதி, மதம், இனம் என்ற பல சக்கரத்தில் சிக்கிச் சிதைந்துபோகும் குரலற்ற எளிய பூச்சிகளைப் பற்றித்தான் எனது கதைகளை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயல் என்றோ விபத்தென்றோ சொல்லிவிட முடியாத சூழலில்தான் எழுத்துக் குகைக்குள் நுழைந்தேன். ஒரு நகரத்தில் நடந்த கொலையும் அதனையொட்டி நிகழ்ந்த தொடர் வன்முறையில் எதற்குமே சம்பந்தப்படாத மனிதர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் கொலைகளும் குண்டுவெடிப்புமே எழுத்தாளனாக நான் பரிணமிக்கக் காரணம். ஒருவேளை நடந்தவற்றை ஏதேனுமொருவரோ அல்லது இலக்கியக் கர்த்தாக்களோ பதிவுசெய்திருந்தால், எழுதும் விபத்து எனக்கு நிகழாமல் இருந்திருக்கக்கூடும். காலம் வரலாற்றை யாரேனும் ஒருவரால் ஏதேனுமொரு வகையில் பதிவுசெய்யும். எனக்குத் தெரிந்த, பார்த்த, கேட்ட கொடுமைகளே சிறுகதைகளாக மாறியிருக்கின்றன. பள்ளிகூடப் பருவத்திலேயே பழகிய புத்தக வாசிப்பு, எழுத்தில் பெரிய தயக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், நான் எழுதியது கதைதானா என்ற சந்தேகம் மட்டும் வந்தது.

அடுத்து என்ன? - சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை!

எனக்கு உண்மையாகவே கதை எழுத வருமா, நான் எழுதியது கதைதானா, கதைக்கென்ற கட்டுமானத்திற்குள் நான் எழுதியது வருமா... என்று பல கேள்விகள் தலைக்குமேல் சுற்றிக்கொண்டிருந்த நேரத்தில், எழுதிய முதல் கதையை எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவுக்கு அனுப்பிவைத்தேன். ‘புதுவிசை’ காலாண்டிதழில் அதை வெளியிட்டு அது சிறுகதைதான் என்ற உத்தரவாதத்தைத் தந்தார். “கலவரம் நடந்த இடத்தின் மேல் நீங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களால்தான் அவற்றை உயிரோட்டமாகச் சிதறாமல் பதிவுசெய்யமுடியும்” என்று சொல்லி கதைக்குளத்தில் நெட்டித் தள்ளினார். கொஞ்சம் கொஞ்சமாக நீச்சல் பழகி (இப்போதும் பழகிக்கொண்டுதான் இருக்கிறேன்) அதன்பின் வரிசையாக எழுதிய கதைகள் ‘தாழிடப்பட்ட கதவுகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பாக வந்தது.

அந்தத் தொகுப்பில் ‘கலவரக் கதைகள்’ மட்டும் இல்லாமல், இஸ்லாம் சமூகத்தில் வளர்ந்து வரும் அடிப்படைவாதம், பிற்போக்கு சிந்தனைகள், எளிய மனிதர்களின் வாழ்வியல் போராட்டம்  போன்றவையும் கதைகளாக இடம்பெற்றன. எதிர்பார்த்ததைவிடத் தமிழ்ச் சமூகம் கூடுதலாகவே வரவேற்றது. ஒரு தொகுப்புக்கு ஒரு மறுபதிப்பு வருவதே பெரும் போராட்டமாக இருக்கும் காலத்தில், ஒரே ஆண்டில் மூன்று பதிப்புகளைக் கண்டபோது, தொடர்ந்து எழுதலாம் என்ற நம்பிக்கை வந்தது. மூத்த எழுத்தாளர்கள் பிரபஞ்சன், ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் ‘தாழிடப்பட்ட கதவுகள்’ தொகுப்பைத் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள். எழுத்தில் நேர்மை இருந்தால், அது நிச்சயம் கைவிடாது என்று நான் உணர்ந்த தருணம் அது.
         
ஒவ்வொரு கலவரத்திலும் சாமான்ய மக்களே பெரும் இன்னலுக்கு உள்ளாகிறார்கள். தனக்கு  நடந்ததை எங்கு எப்படிச் சொல்வது, யாரிடம் நியாயம் கேட்பது என்ற எந்தப் புரிதலும் இல்லாத கையறுநிலையில்தான் நிற்கிறார்கள். குரலற்ற மனிதர்களின் குரலை என் கதைகள் பதிவுசெய்கிறது. அந்த மக்களின் குரலை, கதைமாந்தர்கள் வழியே பேசவைத்து ஒடுக்கிய சமூகத்தை நோக்கி, ‘ஏன் எங்களை இப்படி இம்சை செய்கிறீர்கள்?’ என்று அது கேட்கிறது. அந்தக் குரலில் உள்ள நியாயம் புரிந்தால், ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களின் வலியும் புரியும். எனது முதல் தொகுப்பு வந்தபோது, வாசித்த பலர் அவர்களின்  கதையைச் சொன்னார்கள். அதில், ஒரு தாயின் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் குண்டு வெடிப்பில் இரண்டு கைகளும் பறிபோனது பற்றி எழுத்தாளர் ஞானபாரதி சொன்னார். அந்தத் தாயின் சோகத்தை, நியாயத்தை, குழந்தைகளின் வலியை, இப்படியான துயரங்களைத் தேடித் தேடிப் பதிவுசெய்கிறது என் எழுத்தின் பணியெனக் கொள்கிறேன்.

ஒரு படத்தில் பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டிருந்த குழந்தை, மற்றொரு படத்தில் நெஞ்சில் குண்டு துளைத்துச் சரிந்துகிடப்பது எவ்வளவு பெரிய கொடுமை. அந்தக் குழந்தைக்கு என்ன தெரியும்? எந்த இனத் தூய்மை வாதமும் தெரியாத பிஞ்சு குழந்தையை இரக்கமற்ற வகையில் கொலை செய்வதைப் பார்த்தும் பார்க்காதவாறு ஒரு சிவில் சமூகம் கடந்துபோகுமென்றால், என்ன மாதிரியான மனிதச் சமூகத்தைக் கட்டமைத்துக்கொண்டிருக்கிறோம் நாம் இந்த நூற்றாண்டில்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்து என்ன? - சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை!

  கோழியின் தலையைத் திருகி உடலையும் தலையையும் தனித்தனியே வீசியெறிவதைப்போல, மியான்மாரில் குழந்தைகளின் தலையைத் திருகினார்களே... அந்தத் குழந்தைக்குத் தெரியுமா, எந்தக் காரணத்திற்காகத் தான் கொலை செய்யப்படுகிறோம் என்று? எட்டு வயதுச் சிறுமியை ஒரு மாதம் வரை கோவில் கருவறையில் வைத்துத் தொடர் பாலியல் வன்முறை செய்து, விலா எலும்பை உடைத்துக் கொன்றார்களே... அந்தத் குழந்தைக்குத் தெரியுமா, எந்தக் காரணத்திற்காகத் தான் கொலை செய்யப்பட்டோம் என்று? உடலை மையமாகவைத்து பெண்கள்மீதும் குழந்தைகள்மீதும் நிகழ்த்தப்படும் எல்லா விதமான வன்முறைகளையும் திணிக்கப்படும் துன்பங்களையும் கதறும் பெண்குரலையும் கதைகளாக எழுதியிருக்கிறேன். பெரும்பாலும் இதையே பேசுபொருளாகக்கொண்ட எனது அடுத்த சிறுகதைத் தொகுப்பின் தலைப்பு, ‘சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை’.

அரசின் அதிகார பலத்தால் சாமான்யர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் அதை மக்கள் எதிர்கொள்வதையும் கதைகளாக எழுதியிருக்கிறேன். பல ஊர்களுக்கு இன்னும் அடிப்படை சாலை வசதியே இல்லாதபோது, அவற்றைத் தீர்க்க வேண்டிய அரசு, ஏதோவொரு கார்ப்பரேட் நிறுவனத்துக்காக நிலம் எடுப்பதும் அதை எடுக்க வேண்டாமென்று சம்சாரி கதறுவதையும் ‘நிலம்’ என்ற சிறுகதையில் பதிவுசெய்திருகிறேன். வாகா எல்லையில் தேசப்பற்று எப்படி மடைமாற்றம் செய்யப்படுகிறது என்ற அரசின் அரசியலை ‘அகழியாகும் கோடுகள்’ என்ற கதையின் வழியே பதிவுசெய்திருக்கிறேன். வாகா எல்லையின் கடந்தகாலம் பெரும் துன்பகரமானது. பத்து லட்சம் பேரின் உயிர்போன இடம் அது. பார்க்கும் திசையெங்கும் பிணங்களே சிதறிக்கிடந்தன. மத அரசியலுக்காகத் தீட்டப்பட்ட பகைமை, இப்போதும் நுட்பமாக எப்படி இருபுறமும் வளர்க்கப்படுகிறது என்ற அரசியலை அக்கதையில் பதிவுசெய்திருக்கிறேன். எனது அடுத்தச் சிறுகதைத் தொகுப்பு, முக்கியமான பதிவுகளை, எளிய மக்களின் வாழ்க்கையைக் கதைகளாகத் தாங்கி வரும்.

வாழ்க்கை கொண்டாட்டமானது. அந்த ஒரு வாழ்க்கையை நிம்மதியாகக் கழிக்கவே பெரும்பான்மை மனிதச் சமூகம் விரும்புகிறது. அதை ஏதேனும் ஒரு ‘சிறுபான்மைச் சமூகம்’ கெடுக்கவே விரும்புகிறது. இலக்கியம் காலத்தின் கண்ணாடி. அது எதிர்காலச் சமூகத்திற்குக் கடந்தகால வாழ்க்கையை காட்சிபடுத்தி நிற்கும். இன்றைய சமூக மனிதர்களை எதிர்காலச் சமூகம் கொண்டாடுமா? தூக்கி எறியுமா? என்பதைப் பதிவாகும் மக்கள் இலக்கியமே தீர்மானிக்கும்!

- அ.கரீம், படங்கள் : தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism