Published:Updated:

கவிதையின் கையசைப்பு - 5 - நீண்டு செல்லும் வெளிச்சம்

கவிதையின் கையசைப்பு - 5 - நீண்டு செல்லும் வெளிச்சம்
பிரீமியம் ஸ்டோரி
கவிதையின் கையசைப்பு - 5 - நீண்டு செல்லும் வெளிச்சம்

கவிதையின் கையசைப்பு - 5 - நீண்டு செல்லும் வெளிச்சம்

கவிதையின் கையசைப்பு - 5 - நீண்டு செல்லும் வெளிச்சம்

கவிதையின் கையசைப்பு - 5 - நீண்டு செல்லும் வெளிச்சம்

Published:Updated:
கவிதையின் கையசைப்பு - 5 - நீண்டு செல்லும் வெளிச்சம்
பிரீமியம் ஸ்டோரி
கவிதையின் கையசைப்பு - 5 - நீண்டு செல்லும் வெளிச்சம்

ஷ்ய மொழியின் மிகச் சிறந்த பெண்கவிஞர் மரினா ஸ்வேதெவா (Marina Tsvetaeva). ரஷ்ய இலக்கியத்தில் பெண்எழுத்தாளர்களுக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை. அவர்கள் இரண்டாம் தரப் படைப்பாளிகள்போலவே நடத்தப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார் கவிஞர் ஜோசப் பிராட்ஸ்கி. அது மரினா விஷயத்தில் உண்மையாக இருந்தது. ரஷ்ய அரசின் கெடுபிடிகளால் சிறைப்பட்டும் மகளை இழந்தும் துயருற்ற மரினா தொடர்ந்த அதிகாரத்தின் துன்புறுத்தல் காரணமாகத் தூக்கிலிட்டு தற்கொலை செய்து இறந்துபோனார். அத்தோடு அவரது கவிதைகள் பொதுவெளியிலிருந்து மறைந்து போயின.

20 ஆண்டுகளுக்குப் பிறகே மரினாவின் கவிதைகள்மீது வெளிச்சம்பட ஆரம்பித்தது. பின்பு அந்த வெளிச்சம் நீண்டு உலகெங்கும் பரவத் தொடங்கியது. இன்று வரை 23 மொழிகளில் அவரது கவிதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. தன் வாழ்நாளில் அவர் அடையாத அங்கீகாரமும் கௌரவமும் இப்போது வழங்கப்பட்டிருக்கின்றன.

கவிதையின் கையசைப்பு - 5 - நீண்டு செல்லும் வெளிச்சம்

தனிமையில் குரலிடும் குயிலினைப்போலத் தன் இருப்பின் வலியை, மகிழ்ச்சியைக் கவிதையில் வெளிப்படுத்திய மரினா ஸ்வேதெவா ரஷ்யக் கவிதையின் வெள்ளை தேவதையாகக் கருதப்படுகிறார்.

மரினாவின் அப்பா இவான் ஒரு பேராசிரியர். மிகுந்த இலக்கிய ஈடுபாடுகொண்டவர். புஷ்கின்மீது அதிகப் பற்றுகொண்டவர். இதன் காரணமாக புஷ்கினுக்காக அருங்காட்சியகம் ஒன்றை மாஸ்கோவில் உருவாக்கினார். மரினாவின் தாய் மரியா  இசைக்குடும்பத்தைச்சேர்ந்தவர். ப்யானோ வாசிப்பதில் தேர்ந்தவர். அவருக்கு மகளும் இசைக்கலைஞராக வர வேண்டும் என்று ஆசை. ஆனால், மரினா கவிஞராகவே விரும்பினார். அதை அம்மா ஆதரிக்கவில்லை.

‘வீட்டில் என் தங்கைக்குப் படம் வரையக் காகிதம் தருவார்கள். ஆனால், நான் எழுதுவதற்கு வெள்ளைக் காகிதம் தர மாட்டார்கள். சிறுவயது முழுவதும் வெள்ளைக் காகிதம் கிடைக்காதா என ஏங்கியிருக்கிறேன்’ என்று மரினா தனது நாட்குறிப்பில் பதிவுசெய்திருக்கிறார்.

மரினாவின் தந்தைக்கும் தாய்க்கும் 20 வயது இடைவெளி. தாய் மரியா இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துகொள்ளப்பட்டவர். மரியாவிற்கு ஆண்பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்ற ஆசை. அதன் காரணமாகப் பிறக்கப்போகும் பிள்ளைகளுக்குப் பெயர்கள்கூடத் தேர்வுசெய்து வைத்திருந்தார். ஆனால், பிறந்த இரண்டும் பெண்கள். இந்த ஏமாற்றம் மரியாவின் வாழ்க்கை முழுவதும் நீடித்தது. முதல் மகளான மரினாவிற்கு அவள் தேர்வுசெய்திருந்த பெயர் அலெக்சாண்டர்.

மரினா, அவளின் சகோதரி ஆஸ்யா இருவரும் வசதியான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். 1905-ல் ரஷ்யாவில் உழைக்கும் வர்க்கம் போராடத் தொடங்கியது. ஜார் மன்னருக்கு எதிராகப் பொதுவெளியில் போராட்டங்கள் தொடங்கின. ‘அந்த நாள்களில் மாஸ்கோ நகரில் மத்திய தர வாழ்க்கை விரிவடைய ஆரம்பித்தது. ஆடம்பர வீடு, வேலைக்காரர்கள், சாரட் வண்டி, தனி ஆசிரியர்கள், இசை நிகழ்ச்சிகள், விருந்து எனத் தங்கக்கூண்டில் அடைத்து வளர்க்கப்படும் பறவைகளைப் போலவே தானும் தங்கையும் வளர்க்கப்பட்டோம்’ என்கிறார் மரினா.

கவிதையின் கையசைப்பு - 5 - நீண்டு செல்லும் வெளிச்சம்

மரினாவின் அம்மா நாவல்கள் படிக்கக்கூடியவர். படித்த கதைகளைப் பிள்ளைகளிடம் சொல்வார். ஆனாலும், கவிஞராகப் போகிறேன் என்று மரினா விரும்புவதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அம்மாவின் காசநோய் காரணமாகச் சிகிச்சை பெற வேண்டி அவர்கள் குடும்பம் ஐரோப்பாவுக்குக் குடிபோனது. சுக வாசஸ்தலத்தில் தங்கி, மரியா சிகிச்சை பெற்றார். மரினாவின் பதினான்காம் வயதில் அவரது அம்மா இறந்துபோனார். அதன் பிறகு, தான் விரும்பியபடி கவிதைகள் எழுதவும் இலக்கியம் கற்கவும் தொடங்கினார் மரினா.

1912-ல் செர்ஜி எப்ரோன் என்ற இளம் ராணுவ அதிகாரியைத்  திருமணம் செய்துகொண்டார். இரண்டு மகள்களும் ஒரு மகனும் பிறந்தனர்.

ரஷ்யப் புரட்சியின்போது, மரினாவின் குடும்பம் மிகுந்த நெருக்கடிகளைச் சந்தித்து. அவரது வீடு அபகரிக்கப்பட்டது. அடிப்படை வசதிகளுக்கே போராட வேண்டிய நிலை.  மறுபுறம், அவர் புரட்சிக்கு எதிரானவர் என்று கருதி அரசாங்கம் கண்காணிப்பு செய்தது. அவர் செல்லும் நிகழ்வுகளில் ரகசியக் காவலர்கள் கலந்துகொண்டார்கள். மரினா எதற்கும் பயப்படவில்லை.

மாஸ்கோவை வாட்டிய பஞ்சத்தின்போது, சாப்பிட உணவு கிடைக்காமல் ஒருவேளை உணவு மட்டுமே சாப்பிட்டு சிகரெட் புகைத்தபடி நாள்களைக்  கடத்தியிருக்கிறார்.  பசியால் அவதியுற்ற மகளைக் காப்பாற்ற வேண்டி அநாதைக் காப்பகம் ஒன்றில் சேர்த்துவிட்டார். அங்கு பசிக்கொடுமையால் வாடி, மகள் ஐரீன் இறந்துபோனாள். இன்னொரு மகள் தீவிரக் காய்ச்சல்கண்டு நோயாளியானாள். இந்த நாள்களில் மரினா அடைந்த துயரத்தை அவளது கடிதத்தில் காண முடிகிறது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 1922-ல் குடும்பத்தோடு பிராகுவே சென்றார். அங்கிருந்தே அவரது முக்கியக் கவிதைகள் பிறந்தன. 1922 முதல் 1925 வரையிலான காலம் அவரது படைப்பின் உச்சம். மரினாவின் முக்கியக் கவிதைகள் யாவும் இந்த நாள்களிலேயே எழுதப்பட்டன.

1939-ல் மீண்டும் குடும்பத்துடன் ரஷ்யா திரும்பினார். அது பெரும் துரதிருஷ்டமாக மாறியது. யாரும் அவரை வரவேற்கவில்லை. ஸ்டாலின் அரசு, அவரை துரோகியாகக் கருதியது. சந்தேகப் பார்வையுடன் நடத்தியது. மரினாவின் தங்கை ராஜதுரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டார். மரினாவின் உறவினர் பலரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தன்னையும் கொன்றுவிடுவார்கள் என்றே மரினா பயந்தார். ஸ்டாலின் அரசில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் எனப் பலரும் கொல்லப் பட்டார்கள். பலர் உயிர்தப்பி அந்நிய தேசங்களில் குடியேறினார்கள். மரினாவை வெளிப்படையாக ஆதரிக்க ஒரு படைப்பாளியும் முன்வரவில்லை.

காதலும் கவிதையுமே மரினா வாழ்க்கையின் இரண்டு மையப்புள்ளிகள்.  25 வயதில் சோபியா என்ற இளம்பெண்ணுடன் அவருக்கு லெஸ்பியன் உறவு ஏற்பட்டது. இருவரும் இணைபிரியாமல் சேர்ந்து வாழ்ந்தார்கள். அதன்பிறகு, எல்லீஸ் என்ற இளம்கவியுடன் நெருக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு, கவிஞர் ஓசிப் மெண்டல்ஷ்டாம் அவளைக் காதலித்தார். பாஸ்டர்நாக்கிற்கும் மரினாவிற்கும் நீண்டகால கடிதத் தொடர்பு இருந்தது. ஆனாலும், அவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கவேயில்லை. ‘பாஸ்டர்நாக்கோடு உறவுகொண்டு அவர் வழியாக ஓர் ஆண்குழந்தையைப் பெற ஆசைப்பட்டேன்’ என்று மரினா தனது நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார்.

கவிதையின் கையசைப்பு - 5 - நீண்டு செல்லும் வெளிச்சம்

இளங்கவி, ஒவியக் கலைஞர். நாடகக் கலைஞர், நடிகர், பத்திரிகை ஆசிரியர், இளவரசர் என அவரது காதலர்களின் பட்டியல் நீண்டது. ஆனால், எவருடனும் அவரது வாழ்க்கை தொடரவில்லை. ஏமாற்றமும் துயரமும் வருத்தமும்கொண்ட பெண்ணாகவே அவர் கடைசி வரை வாழ்ந்தார். அரசியல் நெருக்கடியிலிருந்து தப்பித்துக்கொள்ளவே அவர் புதிய காதலை உருவாக்கிக்கொண்டார். அந்தக் காதலின் வழியே அவர் அடைந்த ஏமாற்றம் உறவைத் துண்டிக்கவைத்தது. கவிதை எழுதுவதை மட்டுமே செய்வேன் என வாழ மரினாவை உலகம் அனுமதிக்கவில்லை. ஆகவே, அவர் யாரையாவது சார்ந்து வாழ வேண்டிய கட்டாயம் உருவானது.

மரினாவின் மகள் தனது அம்மாவைப் பற்றி நினைவுகூரும்போது, “என் அம்மா ஒரு கவிஞர். வீட்டில் எப்போதும் எதையாவது படித்தபடியோ, எழுதிக் கொண்டோதான் இருப்பார். மற்ற அம்மாக்களைப்போலப் பிள்ளைகளை அவள் கொஞ்சுவதில்லை. அன்றாடக் காரியங்களில் ஈடுபடுவதில்லை. தன்னை அலங்கரித்துக்கொண்டதுகூடயில்லை. பல நேரங்களில் முறையான குளிராடைகள்கூட அணியாமல் அவர் வெளியே சென்றுவிடுவார்.  அவரைத் தேடி வருபவர்களிடம் மணிக்கணக்கில் கவிதை பற்றியும் மரணம் பற்றியும் பேசிக்கொண்டிருப்பார். அம்மாவுக்குக் கவிதை மட்டுமே உலகம். வேறு எதுவுமில்லை” என்கிறார்.

1912-ல் மரினாவின் முதல் கவிதைத் தொகுப்பான ‘ஈவினிங் ஆல்பம்’ வெளியானது. அப்போது அவருக்கு 18 வயது. அந்த நாள்களில் மரினாவிற்கு ஆதர்சமாக இருந்தவர் கவிஞர் அலெக்சாண்டர் பிளாக். அவரது கவிதை வாசிப்பிற்குச் சென்று கவிதைகள் கேட்ட மரினா தயக்கத்தின் காரணமாக நேரில் சந்திக்கவில்லை. ஆனால், அவருக்காகத் தான் எழுதிய பாராட்டுக் கவிதையைக் கொடுத்து அனுப்பினார்.

பிளாக் அக்கவிதையை வாசித்து வியந்து, “எழுதியவர் யார்?” எனக் கேட்டபோது, அதில் எந்தப் பெயருமில்லை. மரினாவும் பிளாக்கும் கடைசி வரை சந்தித்துக் கொள்ளவேயில்லை. ஆனால், மரினா தனது நாட்குறிப்பில், ‘அலெக்சாண்டர் பிளாக் என்ற தேவனே என்னை வழிநடத்தியவன். பிளாக்கின் குரலே என் அகத்தைத் திறந்தது. பிளாக்கை நேரில் சந்திக்கும் தைரியம் எனக்கில்லை. அவரைக் கவிதையின் கடவுளாகவே கருதினேன்’ என்கிறார் மரினா.

மரினாவின் முதற் கவிதைத் தொகுப்பு மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது. பிரபல ரஷ்யக் கவி குமுலேவ், “இந்தக் கவிதைகள் இளம்பெண்ணின் அகவுணர்வுகளைத் துல்லியமாக வெளிப்படுத்துகின்றன. கொந்தளிப்பு மிக்க தனிமையைக் காண முடிகிறது” என்று பாராட்டினார்.

கவிஞர் ரெய்னர் மரியா ரில்கே, இளங்கவிஞனுக்கான கடிதம் ஒன்றில் இப்படிக் குறிப்பிடுகிறார். “கவிஞனாக நீ செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே. அது உனக்குள்ளாக  நீ நுழைய வேண்டும். உன்னை எழுதச் சொல்லும் காரணத்தைக் கண்டறிய வேண்டும்; அந்த வேட்கை உன் இதயத்தின் ஆழத்திற்குள் வேர்விட்டிருக்கிறதா என ஆராய வேண்டும். இரவின் நிசப்த தருணங்களில் உன்னை நீயே கேட்டுக்கொள் – நான் எழுதி ஆகவேண்டுமா? ஆம், என்று தோன்றினால் அதற்கேற்ப உன் வாழ்வைக் கட்டமைத்துக்கொள்; நீ செய்ய வேண்டியதெல்லாம் இயற்கையுடன் நெருங்கிப்போக வேண்டும் என்பதே. உன் வாழ்வில் நீ உணர்ந்தவற்றையும் நேசித்தவற்றையும் இழந்தவற்றையும் உண்மையாகச்  சொல்ல முயற்சி செய். அதுவே உன் கவிதைக்கான திறவுக்கோல்.”

ரில்கே இளம்கவிஞனுக்குச் சொன்ன அறிவுரைபோலத்தான் மரினாவும் நடந்துகொண்டார். அவர் ஒரு பெண்ணாகத் தனது கட்டுப்பாடுகள், நெருக்கடிகள், துயரங்களிலிருந்து விடுபடுவதற்குக் கவிதைகளே வடிகால் என்பதை உணர்ந்தார். “தான் ஒரு கவிஞர், பெண் எனும் அடையாளம் வழியாக உலகைக் காணுபவர்” என்று தன்னைப் பற்றி கூறிக்கொண்டார். பெண்ணாக இருப்பதால் அவருக்கு மறுக்கப்பட்ட உரிமைகளையும் ஒரு விளையாட்டுப் பொம்மையைப்போல ஆண்கள் நடத்தும் விதம் பற்றியும் தனது கவிதைகளில் தொடர்ந்து மரினா வெளிப்படுத்தினார்.

இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு மேஜிக் லான்டர்ன். அதில் பதற்றம், அமைதியின்மை, நிராகரிப்பு ஆகிய உணர்வுகள்கொண்ட  கவிதைகள் அதிகமாக இடம்பெற்றன.

அதன்பிறகு, 1930-களில் அவர் உரைநடையில் அதிக கவனம் செலுத்தினார். நாடகங்களை எழுதினார். அதன் தொடர்ச்சியாகக் கவிதைகள் பற்றிய கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். தனது சமகாலக் கவிஞர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார் மரினா. குறிப்பாக ரில்கே மற்றும் பாஸ்டர்நாக்குடன் அவர் கொண்டிருந்த நட்பு தனித்துவமிக்கது.

ரஷ்யக் கவிஞர் அன்னா அக்மதோவாவின் மீது மிகுந்த பற்றுகொண்டிருந்தார் மரினா. காதலின் மகிழ்வற்ற நிலையை  வெளிப்படையாகச் சொல்லும் அன்னாவின் கவிதைகளை மரினா கொண்டாடினார். அன்னா அக்மதோவாவிற்கு என்று இரண்டு கவிதைகளை மரினா சமர்ப்பணம் செய்து எழுதியிருக்கிறார். அந்தக் கவிதைகள் அன்னா அக்மதோவாமீது அவர் கொண்டிருந்த நேசத்தின் அடையாளமாகவே காணப்படுகின்றன.

இந்த இரண்டு பெண்கவிஞர்களின் வாழ்க்கையும் அரசியல் நெருக்கடி காரணமாகத் துயருற்றன. அன்னா அக்மதோவாவின் மகன் சிறையில் அடைக்கப்பட்டான். மரினாவின் மகள் பசியின் காரணமாக இறந்துபோனாள். அதிகார வெறிக்குப் பிள்ளைகளைப் பறிகொடுத்த இரண்டு தாய்களும் தனது கவிதைகளின் வழியாகவே மீட்சியைத் தேடிக் கொண்டார்கள். அவர்கள் சந்தித்துப் பழகிய நாள்களில் சகோதரிகளைப்போலவே நடந்து கொண்டார்கள். சமையலறையில் அமர்ந்து கவிதை வாசித்தார்கள்.

மரினாவின் கவிதை ஒன்றில், ‘நெற்றியில் இடப்படும் முத்தம் நினைவுகளை அழிக்கக்கூடியது’ என்ற வரி இடம்பெற்றுள்ளது. அபூர்வமான வெளிப்பாடு அது!

கண்களில் தரும் முத்தம் - தூக்கமின்மையை அகற்றும்
உன் கண்களில் நான் முத்தமிடுகிறேன்
இதழில் தரும் முத்தம் - தாகம் நீக்கும்
நான் உன் இதழ்களை முத்தமிடுகிறேன்
நெற்றியில் தரும் முத்தம் - நினைவுகளை அழிக்கும்
உன் நெற்றியில் நான் முத்தமிடுகிறேன்


இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்போது யூதாஸ் அவரை முத்தமிடுகிறான். அந்த முத்தம், இதுபோல  அவனது நினைவுகளை அழிக்கும் முத்தமாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஒரு முத்தத்தின்மூலம் நினைவுகளை அழிக்க முயலும் மரினாவின் உணர்ச்சி வேகம், துயரத்தின் உச்சநிலை என்றே சொல்வேன். தாயின் பரிவை வெளிப்படுத்தும் கவிதையாகவும் இதைக் காணலாம். மறதிக்கென ஒரு தேவதையிருக்கிறது, அந்த தேவதை நெற்றியில் முத்தமிட்டால் கடந்த காலம் முழுமையாக மறந்துபோய்விடும் என்றொரு பழைய நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான் இக்கவிதையா... நெற்றியில் இடப்படும் முத்தம் நட்பின் அடையாளம். கன்னத்தில் இடப்படும் முத்தம் அன்பின் வெளிப்பாடு. காதலின் வெளிப்பாடாக அமைவதே இதழில் தரப்படும் முத்தம். மரினா இந்த மூன்றையும் கடந்து கண்களில் முத்தமிடுகிறாள். அந்த முத்தம் உறக்கமின்மையைப் போக்கிவிடும் என்கிறார். அது கவியின் முத்தம். கவிதையின் வழியாகவே மனம் சாந்தம்கொள்ள முடியும். மீளாத்துயரமே ஒருவனை உறக்கமற்றவனாக்குகிறது. கடந்த காலத்தின் நினைவுகள் கனன்றுகொண்டிருக்கும் வரை உறக்கம் கூடாது. அந்த இரண்டையும் மரினா துடைத்தெறிகிறார். நினைவுகள் அற்ற மனதுடன் ஆழ்ந்து உறங்கச் செய்கிறார். கவி, உலகிற்குத் தரும் கொடை இதுவே.

இன்னொரு கவிதையில் ‘மரங்கள் மூப்படைந்து விட்டன,  வீடும்தான்’ என்றொரு வரி இடம்பெற்றுள்ளது. மரங்களை இளமையின் அடையாளமாகவே நாம் காண்கிறோம். மரினா மரங்களும் மூப்படைகின்றன என்று சுட்டிக்காட்டுகிறார். அந்த மூப்பு முணுமுணுப்பில்லாத, புகார்கள் சொல்லாத மூப்பு. மூப்படைந்த மரங்கள் உறுதியாகின்றன. மனிதர்களைப்போல அவை மூப்பில் தளர்ந்து போவதில்லை. வீடுகளும் மூப்படைகின்றன. வீட்டின் மூப்பு அதற்கு ஒரு கம்பீரத்தை வழங்குகிறது. நினைவுகளின் வெளிச்சத்தால் நிரம்பியதாக உருமாற்றுகிறது.

இரண்டு சூரியன் இருக்கின்றன
ஒன்று சொர்க்கத்தில்
மற்றொன்று மனதில்

என மரினாவின் கவிதை ஒன்றில் குறிப்பிடப்படுகிறது. மரினாவின் மனதிலுள்ள சூரியன் உதிப்பதில்லை; மறைவதுமில்லை. அது ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறது. அந்த வெம்மையில்தான் அவர் கவிஞராக வாழ்கிறார்; கவிதைகள் எழுதுகிறார்.

‘ஒரு வார்த்தையை மொழிபெயர்க்க முடியும். அதன் சப்தத்தை மொழிபெயர்க்க முடியாது’ என்றொரு மரியாவின் வரி, அவர் சொற்களைவிடவும் அதன் இசைத்தன்மைகொண்ட சப்தத்தின் மீது மிகுந்த ஈடுபாடு
கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

மரினா தனக்கு நிகரான கவிஞர்களாக பாஸ்டர் நாக்கையும் ரில்கேயையும் மட்டுமே கருதினார். அவர்களுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். தனது புதிய கவிதைகளை அவர்கள் வாசிக்க அனுப்பிவைத்தார்.

அந்த நாள்களில் ரில்கே, ஸ்விட்சர்லாந்தில் வசித்தார். ரஷ்யாவுக்கும் ஸ்விட்சர் லாந்துக்கும் இடையில் தபால் போக்குவரத்து கிடையாது. காரணம், ஸ்விட்சர்லாந்து ரஷ்யாவோடு ராஜாங்க உறவு கொண்டிருக்கவில்லை. ஆகவே, ஜெர்மனிக்கு எழுதி, அங்கிருந்து வேறு வழியாகக் கடிதம் ஸ்விட்சர்லாந்துக்கு அனுப்பப் பட்டன. ரில்கேயின் அம்மா, தனக்குப் பெண்குழந்தை வேண்டும் என்று கனவு கண்டவள். ஆனால், ஆண் பிறந்த காரணத்தால் அவரை ஒரு பெண்போல வளர்த்தாள். இதன் எதிர்நிலையே மரினாவிற்கு நடந்த விஷயம். ஆகவே, அம்மாவின் கனவுகளை நிறைவேற்றா தவர்களாக அவர்கள் இருவருக்குள்ளும் ஒரு நெருக்கம் உருவானது. இதுபோலவே பாஸ்டர் நாக்கிற்கும் மரினாவிற்கும் உள்ள நெருக்கத்துக்கான மற்றொரு காரணம்,  இருவரது அம்மாக்களும் இசையில் மிகுந்த ஈடுபாடுகொண்டவர்கள். இசையைத் தங்கள் பிள்ளைகள் தொடர வேண்டும் என்று விரும்பியவர்கள். ஆனால், மரினாவும் பாஸ்டர்நாக்கும் அப்படித் தொடரவில்லை.

ரில்கே ரத்தப் புற்றுநோயால் உடல்நலமற்றிருந்தார். கசந்த உறவுகள், தனிமையான வாழ்க்கை. அந்தச் சூழலில் மரினாவின் கடிதங்கள் ரில்கேவிற்கு ஆறுதல் அளித்தன. தனது கவிதைத் தொகுதிகளை மரினாவிற்குக் கையெழுத்திட்டு அனுப்பித் தந்தார் ரில்கே. பாஸ்டர்நாக், தனக்கு ரில்கே எழுதிய கடிதம் ஒன்றை வாழ்நாள் முழுவதும் பாக்கெட்டிலே வைத்துக் கொண்டிருந்தார். மரினா தனக்கு பாஸ்டர்நாக் மற்றும் ரில்கேவிடமிருந்து வந்த கடிதங்கள் யாவையும் மாஸ்கோவை விட்டு விலகிப்போகையில் தனியே ஓர் உறையிலிட்டு  அலெக்சாண்ட்ரா ரபினினா என்ற எடிட்டர் வசம் ஒப்படைத்துவிட்டார். ரில்கே எழுதிய கடிதங்கள் தற்போது அவரது காப்பகத்தில் காட்சிக்குக் கிடைக்கின்றன. பாஸ்டர்நாக் எழுதிய கடிதங்கள் காணாமல்போய்விட்டன. ஒன்றிரண்டே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

1926-ல் ரில்கே இறந்த சில நாள்களில் மரினாவுக்கு தகவல் கிடைத்தது. ‘நான் ரில்கேயை ஒருமுறையாவது காண விரும்பினேன். ஆனால், அது நடக்கவே இல்லை. இனி அந்தச் சாத்தியமே கிடையாது’ என்று வருந்தினார். ரில்கே நினைவாக ‘New Year’s Greeting’ என்ற நீள்கவிதையை எழுதினார். அதில் ரில்கேயின் உடல்தான் மறைந்துவிட்டது, அவரது ஆன்மா தன்னோடு தொடர்பு கொண்டுதானிருக்கும் என்று எழுதுகிறார்.

நாட்டுப்புறக் கதைகளை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுத முயன்றார் மரினா. அது புதுவகையான கவிதையாக உருவானது. கவித்துவ மொழியிலும் படிமங்களிலும் முற்றிலும் புதிய சாத்தியங்களை உருவாக்கினார் மரினா. இதனால், அவரது கவிதை தனித்துவமிக்கதாக மாறியது.

1941 ஆகஸ்ட் 31 அன்று துரத்தி யடிக்கப்பட்டு, வீடிழந்து, போக்கிடம் தெரியாத மரினா, யேலாபுகா என்ற இடத்தில் தூக்கிட்டு இறந்துபோனார். அவரது இறுதிக் கடிதம் மகனிடம் மன்னிப்பு கேட்பதாக இருந்தது. அடையாளம் தெரியாத புதைமேடாக அவரது வாழ்க்கை முடிவுற்றது. இரண்டு மாதங்களின் பின்பு அவரது கணவரும் கொல்லப்பட்டார். 1944-ல் மகனும் கொல்லப்பட்டு இறந்துபோனான். மரினா ஸ்வேதெவாவின் கவிதைகளும் அத்துடன் இலக்கிய வெளியிலிருந்து மறைந்துபோயின. அடுத்த 15 ஆண்டுகளுக்கு அவரை யாரும் நினைவுவைத்திருக்கவே இல்லை.

ஸ்டாலினின் மறைவுக்குப் பிறகு, மரினாவின் மகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவளே, தனது தாயின் கவிதைகளைத் தேடிச் சேகரித்து ஆவணப்படுத்தியவர். 1956-ல் எலியா ஹிரன்பெர்க் தொகுத்த ரஷ்யக் கவிதைத் தொகுப்பில் மரினாவின் கவிதைகளும் அவரைப் பற்றிய குறிப்பும் இடம்பெற்றன. அதன்பிறகே, ரஷ்ய இலக்கியத்தில் அவரது கவிதைகளின் மீது வெளிச்சம் பட ஆரம்பித்தது.

இன்று, இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கவிஞர்கள் வரிசையில் மரினா ஸ்வேதெவா கொண்டாடப்படுகிறார். காலம் அவள் பெயரை உயர்த்திப் பிடித்துவிட்டது. அதுதான் அவரது கவிதையின் வலிமை!

- எஸ்.ராமகிருஷ்ணன்

கவிதையின் கையசைப்பு - 5 - நீண்டு செல்லும் வெளிச்சம்

மரினா ஸ்வேதெவா கவிதைகள்

ஆங்கிலம் வழியாகத் தமிழில்: சமயவேல்

எனது குதிரை
எனது குதிரை அனைத்தையும் உண்ணும் நெருப்பு —
அவன் கனைப்பதில்லை, அவனது குளம்புகள் பிய்வதில்லை.
எனது குதிரை சுவாசிக்கும் இடத்தில், நீரூற்றுகள் பாய்வதில்லை,
எனது குதிரை துள்ளும் இடத்தில், புல் வளர்வதில்லை.
ஓ, நெருப்பே, என் குதிரையே  – சளைக்காமல் உண்பவர்கள் நீங்கள் !
ஓ, நெருப்பே – அவன்மேல் – சளைக்காமல் சவாரி செய்பவள் நீ !
எனது தலைமுடி அவனது பிடரி முடியுடன் கலக்கிறது, மேலும் பறக்கிறது,
பிழம்புகளின் ஒரு சவுக்கடி, வானத்திற்குள்ளே.

வலது  கையும்  இடது  கையும்  இணைந்திருப்பதுபோல
வலது கையும் இடது கையும் இணைந்திருப்பதுபோல
உனது ஆத்மாவும் என்னுடையதும் நிலையாகப் பொருந்திக்கொண்டன, இறுக.
நாங்கள் வெதுவெதுப்பாகவும் பேரானாந்தத்துடனும் இருக்கிறோம், அருகருகே
ஒரு றெக்கையின் வலப்புறமும் இடப்புறமும்போல.
பிறகு ஒரு புயல் வருகிறது – மேலும் ஓர் உடைக்கும் பிளவு
உண்டாக்கப்படுகிறது வலது றெக்கைக்கும் இடதுக்கும் இடையில்.

உனது பேனாவுக்கு நான் ஒரு காகிதத் தாள்

உனது பேனாவுக்கு நான் ஒரு காகிதத்தாள்
நான் முழுவதிலும் நிரம்புவேன். வெண்மையின் ஒரு பக்கம் நான்.

கவிதையின் கையசைப்பு - 5 - நீண்டு செல்லும் வெளிச்சம்


உனது பொருள்கள் மொத்தத்திற்கும் நான் பாதுகாவல்
நான் அதை நூறு மடங்காகப் பெருக்கித் திருப்பிக் கொடுப்பேன்.

கறுப்பும் செழித்த நிலமும்கொண்ட ஒரு கிராமமாய் நான் கிடக்கிறேன்
நீ எனக்கு சூரியனாகவும் மழையின் நீராவியாகவும் இருக்கிறாய்
நீயே பிரபுவாகவும் நீயே குருவாகவும் இருக்கிறாய். நான்
இந்தக் கறுப்பு நிலம், இந்த விரிந்த வெள்ளைக் காகிதம்.     


பிளாக்கிற்கான கவிதைகள்

உனது பெயர் ஒரு – எனது கையிலிருக்கும் பறவை
ஒரு துண்டு – நாக்கின் மேல் ஐஸ் கட்டி
உதடுகளின் ஓர் ஒற்றை இயக்கம்
உனது பெயர்: ஐந்து குறியீடுகள்,
பறக்கும்போது பிடிபட்ட பந்து, ஒரு
வாயில் இருக்கும் வெள்ளி மணி

ஓர் அமைதியான குளத்தில் வீசப்பட்ட, ஒரு கல்
உனது பெயரைத் தெறிக்கச் செய்கிறது, மேலும்
இரவில் தபதப என்று தொடரும்
குளம்புகளின் சப்தம், ஓர் இடிமுழக்கம்போல உரத்து
அல்லது அது பேசுகிறது நேரடியாக எனது நெற்றிக்குள்,
ஒரு குறி வைக்கப்பட்ட துப்பாக்கியின் க்ளிக் போலக் கிறீச்சிடுகிறது.

உனது பெயர் – எவ்வளவு இயலாதது, அது
ஒரு முத்தம் கண்களில் அசைவற்ற
கண்ணிமைகளின் மேல், குளிர்ச்சியாகவும் இனிப்பாகவும்
உனது பெயர் உறைபனியின் ஒரு முத்தம்
சில்லிடும் ஊற்று நீரின் ஒரு மிடறு, ஒரு புறா 
போல நீலம். உன் பெயரைப் பற்றி இருக்கிறது: தூக்கம்.
 
எவரும் எதையும் எடுத்துச் செல்லவில்லை வெளியே

எவரும் எதையும் எடுத்துச் செல்லவில்லை வெளியே —
     அங்கு எனக்கொரு இனிமைகூட இருக்கிறது பிரிந்து இருப்பதில்.
இப்பொழுது நான் உன்னை முத்தமிடுகிறேன் நம்மைப் பிரிக்கும்
     அந்த நூற்றுக்கணக்கான மைல்களின் குறுக்கே.

நான் அறிவேன்: நமது கொடைகள் சமமற்றவை, எனவேதான்
     எனது குரல் – அமைதியானது, முதல் முறையாக.
பள்ளியில் பயிலாத எனது செய்யுள் உனக்கு என்ன  
     பொருளில் இருக்க முடியும், ஓர் இளம் டெர்ழாவினுக்கு. 

உனது பயங்கரமான பறந்தோடலுக்கு நான் உனக்குத் தருகிறேன் ஆசீர்வாதம்
     பிறகென்ன, பறந்து செல், இளம் கழுகே! நீ
உற்றுப் பார்த்துவிட்டாய் கண்ணிமைக்காமல் சூரியனுக்குள்.
      எனது இளம் பார்வை மிகக் கனமாகவா இருக்க முடியும் உனக்கு?

எவருமே ஒருபோதும் என்னை உற்றுப் பார்த்ததில்லை
      வாஞ்சையுடனோ அல்லது நிலைகுத்தியோ உனக்குப் பிறகு...
நான் உன்னை முத்தமிடுகிறேன் – பிரித்துக்கொண்டிருக்கும்
      நூற்றுக்கணக்கான ஆண்டுகளின் குறுக்கே. 

செய்யுள்

மிக நீண்ட காலம் முன்பு எழுதப்பட்டது, நான் ஒரு கவி
     என்றுகூட நான் அறிந்திருக்கவில்லை,
ஒரு நீரூற்றிலிருந்து தெளித்ததுபோல வரிகள் விழுந்தன
     அல்லது ராக்கெட்டிலிருந்து வரும் மின்னல்கள்  

குட்டிப்பேய்கள்போல, அவை சரணாலயங்களுக்குள் வெடித்தன 
     தூக்கமும் தூபப் புகையும்கொண்டு நிரப்பிய, 
இளமை பற்றியும் இறத்தல் பற்றியும் பேசுவதற்காக...
      எனது எல்லா வாசிக்கப்படாத பக்கங்களும்

தூசி படிந்த புத்தகக் கடைகளில் சிதறிக் கிடக்கின்றன
       அங்கே வாங்குவதற்கு ஒருவரும் இல்லை
இந்த நாள் வரையிலும். விலையுயர்ந்த வைன்களைப்போல
       உங்கள் காலம் வரும், எனது வரிகளே.   
 
வேலைக்காகக்
காத்திருத்தல்போல அல்ல இது

வேலைக்காகக் காத்திருத்தல்போல அல்ல இது
இவ்வாறுதான் நீ காத்திருக்கிறாய்
உனக்குத் தேவையான ஒரு கடிதத்திற்காக:
ரிப்பனும் பசையும்கொண்டு
கட்டப்பட்ட ஒரு மென்மையான வஸ்து.

கவிதையின் கையசைப்பு - 5 - நீண்டு செல்லும் வெளிச்சம்


உள்ளே ஒரு குட்டி வார்த்தை.
அவ்வளவுதான். ஆனந்தம்.

ஆனந்தத்திற்காகக் காத்திருக்கிறாயா?
மரணத்திற்காகக் காத்திருப்பதைவிடவும் மேலானது அது.
ராணுவ வீரர்கள் சல்யூட் அடிப்பார்கள் 
மூன்று துண்டுகள் ஈயம்
உனது மார்புக்குள் மோதிப் பாயும்.
உனது கண்கள் பிறகு சிவப்பாய் மின்னும்

இனி மகிழ்ச்சி என்பதே இல்லை.
இப்பொழுது மிக வயதாகிவிட்டது. அனைத்து மலர்தலும் போயின
இன்னும் எதற்காக இப்பொழுது காத்திருக்கிறாய் ஆனால்
ஒரு சதுர முற்றத்தில் ஒரு கருப்பு, வாயை மூடுகிறது.

ஒரு சதுரக் கடிதம். நான் நினைக்கிறேன்
அங்கே மையில் மாய வசீகரம் இருக்கக்கூடும்
நம்பிக்கையில்லை. மேலும் எவரொவருக்கும்கூட
வயதாகிவிடவில்லை, எதிர்கொள்ள மரணத்தை      
            அல்லது அத்தகையதொரு சதுர உறையை.