Published:Updated:

நாடோடிக் கதைகள்

தேடி வந்த தலைவலி !ஹரன்

நாடோடிக் கதைகள்

தேடி வந்த தலைவலி !ஹரன்

Published:Updated:

யூமா வாசுகி
அரேபியா

##~##

அரேபியாவில் ஒரு நகரம். அங்கே அலி என்ற வியாபாரி இருந்தான். ஒரு நாள், அலி தன் கடையில் இருக்கும்போது... ஒரு குள்ளன் வந்து நின்றான். பாட்டுப் பாடி, சிறு சிறு கதைகள் சொன்னான். அதைக் கேட்டு 'ஆஹா ஓஹோ’ என்று சிரித்த அலி, ''நண்பரே, நீங்கள் என் வீட்டிற்கு வரவேண்டும். உங்கள் கதைகளைக் கேட்பதற்கு என் மனைவி மிகவும் விரும்புவாள்'' என்றான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்று மாலையே குள்ளன் அலியின் வீட்டிற்குச் சென்று  கதைகள் சொன்னான். அலியின் மனைவிக்கு சிரித்துச் சிரித்துவயிறு புண்ணாகிவிட்டது. அவள் அறுசுவை உணவு தயாரித்துப் பரிமாறினாள். குள்ளன் அள்ளி அள்ளித் தின்றான். திடீரென குள்ளனின் கண்கள் பிதுங்கின. மூச்சுத் திணறி ஏதேதோ சாடை காட்டினான். பேசவில்லை. முகத்தில் நீலம் படர்ந்தது. மயங்கி விழுந்தான்.

அலியின் மனைவி பதற்றம் அடைந்தாள். ''இவன் இங்கே கிடந்து செத்துவிட்டால்,  வழக்கு, நீதிமன்றம் என்று நாம் அல்லல்பட வேண்டியிருக்குமே...'' என்றாள்.

ஏதோ யோசித்த அலி, ''இதற்கு ஒரு வழி இருக்கிறது'' என்று சொன்னான்.

நாடோடிக் கதைகள்

இருவரும் சேர்ந்து குள்ளனைத் தூக்கினார்கள். பக்கத்தில் உள்ள ஒரு வைத்தியரின் வீட்டுக்குக் கொண்டுசென்று,  வாசல் கதவில் சாய்த்துவிட்டு வந்தார்கள்.

சற்று நேரம் கழித்து வைத்தியர் கதவைத் திறந்தார். அடுத்த நொடி, குள்ளன் உருண்டு உள்ளே விழுந்தான். வைத்தியர் பதற்றத்தில் அரைகுறையாகப் பரிசோதித்துவிட்டு, ''அய்யோ! ஊரார் பார்த்தால் இவனை நான்தான் கொன்றுவிட்டேன் என்பார்களே... அப்புறம் வழக்கு, நீதிமன்றம், ம்...''

வைத்தியர் தீவிரமாக யோசித்தார். 'பிணத்தை அகற்றியே ஆக வேண்டும்.  ரொட்டிக் கடை அப்துல்லாவின் வீட்டிற்குத் தூக்கிச் செல்வோம். அவன் இப்போது வீட்டில் இருக்க மாட்டான்!’ என்று முடிவு செய்தார்.

குள்ளனை இழுத்துச்சென்ற வைத்தியர், அப்துல்லாவின் வீட்டு வராந்தா நாற்காலியில் அமரவைத்துவிட்டு வந்தார்.

சற்று நேரம் கழித்து அப்துல்லா வந்தார்.  நாற்காலியில் யாரோ அமர்ந்து இருப்பதைப் பார்த்தார். ''டேய்... நீ இன்று கையும் களவுமாகப் பிடிபட்டுவிட்டாய். தினமும் என் ரொட்டிகளைத் திருடுவது நீதானே?'' என்றவாறு ஓங்கி ஓர் உதை விட்டார்.

'தொபீர்’ என்று குள்ளன் நாற்காலியுடன் தலைகீழாக விழுந்தான். ''அய்யோ... இவன் செத்துவிட்டால் பெரிய பிரச்னை ஆகிவிடுமே! நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டி இருக்குமே...'' என்று  கதிகலங்கிப் போனார் அப்துல்லா.

'இந்தப் பிணத்தைக் கோடீஸ்வரன் சலீமின் வீட்டில் போட்டுவிடலாம்’ என்று முடிவு செய்தார் அப்துல்லா.

அன்று நள்ளிரவில்... சலீம் அந்தக் காட்சியைப் பார்த்துத் திடுக்கிட்டான். வீட்டுக் கதவில் சாய்ந்து அமர்ந்து ஒருவன் உறங்கிக்கொண்டு இருந்தான். ''அடேய் பயலே! நீ தூங்குவதற்கு என் வீடுதான் கிடைத்ததா..? எழுந்திரு!'' என்றான்.

குள்ளனிடம் எந்த அசைவும் இல்லை. ஓங்கி ஓர் உதை கொடுத்தான் சலீம். சாலையில் உருண்டு போய் விழுந்தான் குள்ளன். அந்தச் சமயம் பார்த்து, அந்த வழியாக படை வீரன் ஒருவன் வந்தான். சற்று முன்பிருந்தே எல்லாவற்றையும் அந்தப் படை வீரன் பார்த்துக்கொண்டுதான் இருந்தான். தன் கண் முன்னால் ஒருவனை சலீம் உதைத்துக் கொன்றுவிட்டான் என முடிவுக்கு வந்த படை வீரன், நீதிபதியிடம் அவனை அழைத்துச் சென்றான்.

விசாரித்த நீதிபதி தீர்ப்புச் சொன்னார்... ''நீங்கள் ஒருவனை உதைத்துக் கொன்றுவிட்டீர்கள். இந்த நீதிமன்றம் உங்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கிறது''

நடந்ததைக் கேள்விப்பட்டு அங்கே வந்த அப்துல்லா, ''நீதிபதி அவர்களே, சலீம் குற்றமற்றவர். அந்தக் கொலையைச் செய்தது நான்தான்!'' என்றார்.

''நான் உங்களுக்கும் தூக்குத் தண்டனை விதிக்கிறேன்!'' என்றார் நீதிபதி.

அப்போது அங்கே வந்த வைத்தியர், ''இவனைக் கொன்றது நான்தான்'' என்றார்.

மிகவும் தடுமாற்றம் அடைந்தார் நீதிபதி. 'இது என்ன தேடி வந்த தலைவலி’ என்றபடியே தீர்ப்புச் சொன்னார். ''நீங்களும்தான் குற்றவாளி. எனவே, உங்களுக்கும் தூக்குத் தண்டனை விதிக்கிறேன்!''

நீதிபதி தன் இருக்கையை விட்டு எழ முற்படும்போது... அலி ஓடி வந்தான்.  ''நீதிபதி அவர்களே! நான்தான் அந்தக் குள்ளனை வைத்தியரின் வீட்டில் போட்டேன். அவன் என் வீட்டில் சாப்பிடும்போதுதான் மரணம் ஏற்பட்டது!'' என்றான்.

நீதிபதி ஒரு குவளை நீர் அருந்தித் தன் பதற்றத்தைத் தணித்துக்கொண்டார். பிறகு, இறுதித் தீர்ப்பை அறிவித்தார் ''ஆமாம்... ஆமாம்! இவனும் குற்றவாளிதான். இவனையும் தூக்கில் ஏற்றும்படி உத்தரவிடுகிறேன்!''

தீர்ப்பைக் கேட்ட ஓர் அதிகாரி, ''நீதிபதி அவர்களே... நான்கு பேரையும் தூக்கில் ஏற்றுவது நியாயமா?'' என்று கேட்டார்.

நீதிபதி அதையும் ஏற்றுக்கொண்டார். ஆனால், யாரைத் தூக்கில் போடுவது? என்று குழம்பினார். அப்போது, அரண்மனையில் இருந்து ஒரு படை வீரன் ஓடிவந்தான். அவனுடன் அரண்மனை வைத்தியரும் வந்தார்.

''நேற்று அரண்மனையில் இருந்து ஒருவன் காணாமல் போய்விட்டான். அவன் ஒரு பாடகன். நகைச்சுவையான கதைகள் சொல்வான். சுல்தானின் அன்பிற்குரிய அவன்ஒரு குள்ளன்.'' என்றான் வீரன்.

நீதிபதி துள்ளி எழுந்தார். ''நீங்கள் பக்கத்து அறையில் கிடக்கிற பிணத்தைப் பாருங்கள். அவனும் ஒரு குள்ளன்தான்'' என்றார்.

நாடோடிக் கதைகள்

பார்த்த படைவீரன், ''இவனேதான்'' என்றான். அரண்மனை வைத்தியர், பிணத்தின் கன்னங்களை அழுத்தினார். நெஞ்சைப் பிசைந்தார். பிறகு உரக்கச் சொன்னார், ''நம் அதிர்ஷ்டம் இந்தக் குள்ளன் இன்னும் சாகவில்லை!''

குள்ளனை பரிசோதித்த வைத்தியர் தன் பெட்டியைத் திறந்து, கம்பி போல் எதையோ எடுத்து, குள்ளனின் தொண்டைக்குள் செலுத்தி இழுத்தார். மீன் முள் ஒன்று வெளியே வந்து விழுந்தது. ''மீன் முள் மூச்சுக் குழாயில் சிக்கி இருந்ததால் மயக்கமாகி இருக்கிறான்'' என்றார் வைத்தியர்.

சற்று நேரத்தில் குள்ளன் கண்களைத் திறந்து பார்த்தான். எல்லோரும் நிம்மதி அடைந்தார்கள். நம்ம காமெடி நீதிபதிக்கும் தலைவலி தீர்ந்தது. அவரது குழப்பத் தீர்ப்பில் இருந்து அனைவரும் உயிர் தப்பினார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism