Published:Updated:

டொம் வருது... டொம் வருது !

தமிழச்சி தங்கபாண்டியன் பாரதிராஜா

டொம் வருது... டொம் வருது !

தமிழச்சி தங்கபாண்டியன் பாரதிராஜா

Published:Updated:
##~##

ஒரு காட்டில் முயல்குட்டி ஒண்ணு இருந்துச்சாம்.  ஒரு நாள், அதுக்கு சரியான விருந்து கிடைச்சது.  கேரட், தக்காளி, முட்டைக்கோஸ் எல்லாத்தையும் ஒரு பிடி பிடிச்சது. சிலுசிலுனு காத்து வர்ற ஓடக்கரை பக்கமா வந்துச்சு. 'மெத் மெத்’ புல்வெளியில் படுத்தது. அடுத்த நிமிஷமே ஆனந்தமாத் தூங்கிருச்சு.

கொஞ்ச நேரம் போனதும், 'டொம்’னு ஒரு சத்தம், 'ஏதோ கனவு’னு அரைத் தூக்கத்தில் புரண்டு படுத்துச்சு. மறுபடியும் 'டொம்’ சத்தம். 'என்னடா இது?’னு எழுந்து பார்த்துச்சு. ஒண்ணையும் காணோம். மறுபடி கண்ணை மூடிப் படுத்தால், அதே 'டொம்’ சத்தம். முயல்குட்டி  ஏற்கெனவே டைனோசர் பத்தி  கேள்விப்பட்டு இருக்கு. போதாததுக்கு, நண்பன் குரங்கு வேறு 'வித்தியாசமான விலங்குகள்’ பற்றிய புத்தகத்தைக் காட்டிப் பயமுறுத்தி இருந்தது. 'அந்த மாதிரி ஏதோ வந்துடுச்சோ?’னு முயல் யோசிச்ச சமயம், மறுபடியும் ஒரு 'டொம்’ சத்தம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்த நிமிஷம் துள்ளி எழுந்த முயல், ''அய்யய்யோ!  டொம் வருது''னு கத்தியபடியே ஓட ஆரம்பிச்சுது. அப்போ எதிரில் வந்த யானை, ''ஹேய்... ஏன் இப்படி ஓடுறே?''ன்னு கேட்டுச்சு.

''டொம் வருது... சீக்கிரம் ஓடு''னு சொல்லிக்கிட்டே முயல்குட்டி ஓடிச்சு. யானையும் ''பெயரே பயமுறுத்துற மாதிரி இருக்கே... இங்கே நிக்கிறது சேஃப்டி இல்லை’ன்னு  முயல்குட்டி பின்னாடியே ஓட ஆரம்பிச்சது.

இதைப் பார்த்த ஒரு கரடி, ''யானை அண்ணே... எங்கே ஓடுறீங்க?'' என்று கேட்டுச்சு.

''விஷயமே தெரியாதா? டொம் வருதாக்கும்'' என்று சொல்லிக்கிட்டே ஓடிச்சு யானை. 'யானையே பயந்து ஓடுதுன்னா, அந்த டொம்கிட்டே நாம மாட்டினா சட்னிதான்''னு அதுவும் ஓட ஆரம்பிச்சது.

இப்படியே ஒட்டகச்சிவிங்கி, மான், குரங்கு, கழுகு, புறா என எல்லாமே, 'டொம் வருது... டொம் வருது’னு ஓடினதைப் பார்க்கிறப்ப, விலங்குகள் மாரத்தான் மாதிரி இருந்துச்சு.

எல்லாம் சேர்ந்து சிங்க ராஜா  முன்னாடிபோய் நின்னாங்க. ''ராஜா... ராஜா டொம் வருது காப்பாத்துங்க''ன்னு அலறினாங்க.

டொம் வருது... டொம் வருது !

கொஞ்சம் முன்னாடிதான் ராணியோடு சண்டை போட்டு, அந்தக் கடுப்பில் உட்கார்ந்து இருந்தாரு சிங்க ராஜா. அதுக்கு செம கடுப்பு. 'டொம்மா... அது யாரு?''ன்னு கேட்டாரு.

''அது பயங்கரமான விலங்கு. யானையைவிட பத்து மடங்கு வெயிட்.  ஒட்டகச்சிவிங்கியைவிட இருபது மடங்கு ஹைட்... உங்களைவிட நூறு மடங்குத் திறமைசாலி''னு ஒரு குரங்கு அடிச்சுவிட்டுச்சு.

சிங்க ராஜாவின் கடுப்பு உச்சி வெயில் மாதிரி கிர்ர்ர்னு ஏறிப்போச்சு. ''ஓகோ... அந்த டொம் அவ்வளவு பெரிய ஆளா? அதை ஒரு கை பார்த்துடுறேன்''னு கிளம்பிடுச்சாம்.

முயல்குட்டி வழிகாட்ட, எல்லோரும் ஓடக்கரைக்கு வந்து சேர்ந்தாங்க. அங்கே யாருமே இல்லை. முயல்குட்டியோ... ''ஐயோ, அந்த டொம் இங்கேதான் இருக்கு. ஒரு வேளை கண்ணை மூடிக்கிட்டாத்தான் வரும் போலிருக்கு''னு சொல்லிச்சு.

''சரி, எல்லோரும் கண்களை மூடுங்க''னு சொல்லிச்சு சிங்க ராஜா. அப்படியே  கண்களை மூடின கொஞ்ச நேரத்துல 'டொம்’னு சத்தம்.

''பார்த்தீங்களா.... பார்த்தீங்களா... டொம் வந்துடுச்சு''னு அலறிச்சு முயல்குட்டி.

கண்ணைத் திறந்து பார்த்தால் யாரும் இல்லை. சிங்க ராஜாவுக்கே பயம் வந்துருச்சு. 'சரி, இப்போ எல்லோரும் அமைதியா இருந்து கவனிப்போம்''னு சொல்லிச்சு.

எல்லா விலங்குகளும் கண்களைக் கோலிக் குண்டு கணக்கா முழிச்சுக்கிட்டு கவனிச்சாங்க. முயல்குட்டி மட்டும் பயந்துட்டு கண்ணை மூடிட்டே இருந்துச்சு. அப்போ, 'டொம்’னு பெரிய சத்தத்தோடு, ஓடக்கரையில் இருந்த தென்னை மரத்தில் இருந்து, ஒரு பெரிய இளநீர் தண்ணிக்குள்ளே விழுந்துச்சு.

''ஐயோ... டொம் வந்திருச்சு''னு சொல்லிக்கிட்டே முயல்குட்டி கண்ணைத் திறந்து பார்த்துச்சு. எல்லா விலங்குகளும் தன்னையே முறைக்கிறதைப் பார்த்து, அதுக்கு ஒண்ணும் புரியலை.

''ஒண்ணு இல்லே... ரெண்டு இல்லே... எத்தனை டொம் உன்னைத் துரத்தப்போகுது பாரு'' என்ற சிங்க ராஜா, ''ரெடி ஸ்டார்ட்''னு சொல்லிச்சு.

அத்தனை விலங்குகளும் 'டொம்... டொம்’னு சொல்லிக்கிட்டே முயல்குட்டியைத் துரத்த ஆரம்பிச்சது. ''ஆகா! சாப்பிட்டது எல்லாம் செரிச்சுடும் போலிருக்கே''னு அலறிக்கிட்டே ஓட ஆரம்பிச்சது முயல்குட்டி.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism