Published:Updated:

முட்டு வீடு - சிறுகதை

முட்டு வீடு - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
முட்டு வீடு - சிறுகதை

தமிழச்சி தங்கபாண்டியன் - ஓவியங்கள்: டிராட்ஸ்கி மருது

`புடலங்காய்க் கொடிகள், பாம்புகளாகி, தோள் சேர்த்து ஒப்பாரிவைக்கின்ற கைகளாகின்றன. பச்சை நரம்புகளிலிருந்து ரத்தம் பீறிட்டடிக்க, அத்தனை கைகளும் என் கழுத்தைச் சுற்றுகின்ற அழுத்தம் பயத்துக்குப் பதில் கிறங்கவைக்கிறது. கட்டி அணைத்து அழுகின்ற பெண்களின் கறுத்த முகங்கள் முதுகுப்பக்கமாக இருக்க, அதிலிருந்து நீண்ட நாக்குகள் யானையின் தும்பிக்கையைப்போல தரை துழாவுகின்றன. தரையெங்கும் கொழகொழத்து ஓடுகின்ற ரத்தத்தைச் சுழற்றி ருசித்து, உறிஞ்சி தலைக்குமேல் பீய்ச்சி அடிக்கின்றன. இரண்டு சொட்டுகள் என் கழுத்து வழி இறங்கி, செந்நிற முலைப்புள்ளிகளாகின்றன. திறந்தே கிடக்கின்ற மார்புவழி வாய் உறிஞ்சுகிற சிசு, கடைவாயில் ரத்தம் கசியச் சிணுங்கித் திரும்புகிறது - தன் ஒரு பக்கம் வளர்ந்த மீசையுடன்.’

முட்டு வீடு - சிறுகதை

அரண்டுபோய் கண் விழித்துப் பார்க்கிறேன். அது கனவு என்பதைப் புலன்களுக்குக் கடத்த அறிவு முயன்றாலும், `ஒரு பக்க மீசை எங்க?’ என்று முனகியிருப்பேன்போல. அழகேஸ்வரி, என் தொடையில் கிள்ளி ``பகல்லயே கனாவா? அத்துவானத்துல கார் நின்றுருச்சு. மீசைய திரும்புறப்ப பாரு’’ என்றாள்.

கூச்சமாகிவிட, அழுத்தமாக முகத்தைத் துடைத்துக்கொண்டேன். ஜாக்கெட்டின் கீழ் பட்டன்கள் திறந்திருக்க, முந்தானை குறித்த எந்தக் கவனிப்புமின்றி, குழந்தையைத் தோளுக்கும் இடுப்புக்கும் நடுவில் ஒருக்களித்து, ஒரு மாதிரி சாய்வில் தூங்கவைத்திருந்தாள். வியர்வையுடன் குட்டிகுரா பவுடர் உப்புக்கரித்தலின் கோடாக அவளது பின்கழுத்தில் படிந்திருந்தது. குழந்தை கையிலிருந்த வசம்பு மணமும், கடைவாயின் பால்கவுச்சியும் அத்தனை புழுக்கத்திலும் ஒரு மூச்சின் உள்ளிழுத்தலைச் சுகந்தமாக்கியது.

ஐந்து பேர் பின் சீட்டில் நெருக்கி அமர்ந்திருந்த கசகசப்பு குறைய, கொம்பூதிச் சின்னம்மாவும் அழகேஸ்வரியின் புருஷனும் காரைவிட்டு இறங்கியிருந்தார்கள். அழகேஸ்வரியின் மூத்த மகள் ஸ்ரீலேகா, காலியான லேஸ் பாக்கெட்டுகளை ஊதிக்கொண்டிருந்தாள். சாயல்குடியிலிருந்து கிளம்பியவுடன் தூக்கம் அப்பிக்கொண்டதில், எங்கு, எதற்காகக் கார் நிற்கிறது என்று என்னால் நிதானிக்க முடியவில்லை. வியர்த்து ஒட்டிக்கொண்டிருந்த கால்களைக் கொஞ்சம் அகலித்துக்கொண்டு காரை விட்டு வெளியே வந்தேன்.

``ஏ... லேகா... எறங்கு... எறங்கு...’’ என்றபடி கைக்குழந்தையை ஒருச்சாய்த்து அழகேஸ்வரியும் இறங்கினாள்.

``செருப்பெங்கே அழகு?’’ என்றேன்.

``கேத வீட்டுக்கு எப்பவும் செருப்பு போட மாட்டேன். எவளாச்சும் களவாண்டுட்டுப் போயிடுவா’’ என்று தூரத்தில் தம்மடித்துக்கொண்டிருந்த புருஷனைப் பார்த்தபடி சொன்னாள். எரிச்சல் `சிடு சிடு’வென வழியும் முகத்தில் ஒரு பாட்டில் தண்ணீரை அடித்து விளாவிக்கொண்டிருந்தாள் சின்னம்மா. பின் சீட்டில் ஐந்து பேர் நெருக்கி உட்கார்ந்து கசங்கிக்கொண்டு வந்ததைப் பற்றிய நினைப்பே இல்லாமல் தாட்டியமாக முன் ஒற்றைச்சீட்டில் கால் பரப்பி உட்கார்ந்து வந்த கொம்பூதிச் சித்தப்பாவும் குட்டி டர்க்கிடவலைத் தண்ணீரில் நனைத்து அலுத்துச் சலித்ததுபோலத் துடைத்துக்கொண்டார். ``கெரகத்த... இப்டி வந்து மாட்டிக்கிட்டமே, ஒரு வாய் அள்ளிப் போட்டுக்கிட்டுக் கௌம்பிருக்கலாம்’’ என்றார்.

``கேதச் சேதி கேட்டப்புறமும் உலைய வைக்க முடியுமாக்கும்?’’ என்று சிடுசிடுத்த சின்னம்மா, அலண்டுபோயிருந்தாள். பெரிதான அவளது குங்குமப்பொட்டு, கழுவிய தண்ணீரில் தீசலாய் சித்தப்பாவின் டர்க்கிடவலில் ஒட்டியிருந்தது. அந்த அகலப்பொட்டு இல்லாமல் அவளைப் பார்க்கவே முடியாது. ``செந்துருக்க டப்பாவும் அம்பரையும் எப்பவும் முடிஞ்சு வெச்சுக்குவேன். இன்னிக்குப் போட்டது போட்டபடி பஸ் ஏறியாச்சு’’ என்றவளிடம் ``செத்த பிடி இவள...’’ என்று ஆறு மாத பாப்பா ஐஸ்வர்யாவைக் கைமாற்றிவிட்டு என் பக்கமாக வந்தாள் அழகேஸ்வரி. ``ஒன்னுக்கு முட்டிட்டு வருது. எங்கிட்டு ஒதுங்க?’’ என்று அவள் கேட்டபோது எனக்குள்ளும் அதே அசௌகரியம்.

ஒதுங்க எங்கே மறைவான மரம் இருக்கிறது எனத் தேடும்போதுதான் நிற்பது அதிக செழிப்பில்லாத கீழ்க்காட்டுப் பகுதி என்பது உறைத்தது. டிரைவர் பாண்டியைக் காணோம். கருவேல மரங்கள் சரிவாக ரோட்டோரத்தில் எங்கேயாவது தென்படுகின்றனவா எனப் பார்த்துக்கொண்டே நடந்தோம். லேகா குட்டியும் ஒரு மாதிரி நொண்டி யடித்துக்கொண்டே பின்னால் வந்தது.

``மெயின் ரோடு மாதிரி தெரியலியே. குறுக்கால போறேன்னு பார்த்திபனூருக்கு முள்ளுக்காட்டு வழியில கூட்டியாந்து டயர பஞ்சராக்கிட்டாப்ல’’ என்றபடி தலைமுடியைச் சேர்த்து முடிந்து கொண்டாள் அழகு. அப்பவும் முந்தானை அக்கடா என்றிருந்தது.

``என்ன பார்க்கிற... திறந்தே கெடந்து மரத்துப்போச்சு. ஊருக்கே பந்தி வைக்கிறன்னு மாமா வசவு நாறும். தூக்கணாங்குருவிக் கூட்டப்போலத் தொங்கிட்டுக் கெடக்குறத பந்திலதா வைக்கணும்’’ என்ற அழகு, சலிப்பின் கோட்டுச்சித்திரமாக இருந்தாள். ஒவ்வொரு தேரோட்டத்துக்கும் வளையல், ரிப்பன், ஸ்டிக்கர் பொட்டு எல்லாமே மேட்சாகப் போட்டுக்கொண்டு அன்றைய தேதியில் விருதுநகர், மதுரையில் பிரபலமாக இருக்கின்ற புடவையை முதல் ஆளாக வாங்கி உடுத்திக்கொண்டு கொலுசு அதிர தேர் பின்னால் நடந்த அழகு, ஒரு சிமிட்டலில் தெரிந்து மறைந்தாள். பொட்டுபோலக் கம்மலையும் தாலிக்கயிற்றையும் தவிர உடம்பில் வேறு நகை இல்லை.

``யம்மா... கால் வலிக்கி... தூக்கு’’ என்ற லேகா குட்டியின் முதுகில் ஒன்று வைத்தாள். அது சடக்கென தன்தரையாக உட்கார்ந்து அழ ஆரம்பித்தது. ``வந்துருவா... நீ பாட்டுக்கு வா. ஒன்னுக்கு நெருக்குது’’ என்றபடி காட்டுக் கத்தாழைப் புதர் பக்கம் இருந்த இரண்டு கருவேலங்களைக் காட்டினாள். மறைவாக ஒதுங்கி உட்காருகையில், ``மணிய பார்த்தேன். ஆளு, ஒடம்புவெச்சு பளபளன்னு இருந்தான்’’ என்றாள். பதில் பேசாமல் தண்ணீர்பாட்டிலை நீட்டினேன். ``அவனோட பொண்டாட்டியும், பெரண்டைத் துவையலும் குச்சிக்கருவாட்டுக் குழம்பும் நல்லா வைப்பாளாம். பால்பன்னு வாங்கிட்டு வந்திருந்தான்.’’

``வந்திருந்தானா... எங்கே?’’ என்றேன். பதில் சொல்லாமல் பாட்டிலைத் திருப்பிக் கொடுத்தாள்.

மேடு ஏறி இருவரும் கார் நின்ற இடத்துக்கு வந்தபோது, லேகா குட்டியை அழகேஸ்வரி புருஷன் தூக்கி வைத்துக்கொண்டு பராக்குக் காட்டிக்கொண்டிருந்தான். சின்னம்மாவும் சித்தப்பாவும் கொஞ்சம் தள்ளிக் கிடந்த பனம் தண்டில்மேல் உட்கார்ந்து சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஐஸ்வர்யா பாப்பாவை கார் சீட்டில் படுக்க வைத்திருப்பாள்போல. கார் கண்ணாடிக் கதவுகள் இறக்கியிருக்கின்றனவா எனச் சரிபார்த்துவிட்டு வந்த என்னைப் பார்த்தவுடன் சின்னம்மா, ``பாட்டில் ஒட்டுக்கத் தீத்தாச்சா? கேத வீட்டுத் தீட்டுப் போக ஒடனே தலை முழுகாம ரோட்டுல ஒக்காரவெச்சுட்ட. இதுல ஒன்னுக்குப் போனா தண்ணி வேணுமேன்னு போகாம ஒக்காந்திருக்கேன்’’ என்றாள். சித்தப்பாவும் தன் பங்குக்கு எதையோ முனங்கிக்கொண்டார்.

``இவ தீட்டுல தீய வைக்க. கேத வீட்டுல கை நனைக்கக் கூடாதுன்னு கொலப்பட்டினியா கூட்டியாந்துட்டா. வீட்டுலயும் திங்கவிடல. கைப்புள்ளக்காரிக்குப் பாலு காத்தக் குடிச்சா ஊறும்?’’ அழகேஸ்வரி என்னிடம் நொடித்தாள். அம்மாவுக்கும் மகளுக்கும் ஆகாது. சின்னம்மா, தன் தம்பிக்கே பதினைந்து வயசு சின்னவளான அழகேஸ்வரியை மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீப்பெட்டியைக் காட்டி மிரட்டிக் கட்டிவைத்தாள்.

பாண்டி வருகிறவழியைக் காணோம். ஐஸ்வர்யா அழத் தொடங்க, கார்க் கதவை `நங்’கென்று அறைந்து சாத்திவிட்டு, பால் கொடுத்தாள் அழகேஸ்வரி. ``திமிரெடுத்தவ... கட்டிக்கொடுத்தும் அடங்கல. எந்தம்பியப் பிச்சுப் பேனாக்கிருவா’’ என்றவளை முறைத்த சித்தப்பாவைப் பார்த்து, ``முன்னால ஒக்காந்திருக்க முழு ஆம்பள, வழிய பாக்க வேணாமா? டவுனு டிரைவருக்கு, குறுக்கு வழியெல்லாம் சொகப்படுமா?’’ என்றாள்.

``இல்ல சின்னம்மா, பழகின ஆள்தான். இப்படி ஸ்டெப்னி இல்லாம வருவாப்லனு நினைக்கல’’ என்றேன்.

``அம்மா பசிக்கி...’’ என்று ஓடிவந்த லேகா குட்டியை, சின்னம்மாவின் முழியை வைத்தே அனுமானித்து என் பக்கம் இழுத்துக்கொண்டேன்.  `போகிற வழியில் இறக்கிவிடுகிறேன்’ என்று இவர்களைக் கூட்டிவந்ததும் நல்லதுக்குத்தான்’ என்று நான் நினைத்ததைப் படித்தது மாதிரி சித்தப்பா, ``நல்லவேளைத்தா... நாங்க கூட வந்தோம். இல்லைன்னா பொம்பளப்புள்ள தனியா நின்றிருப்ப’’ என்றார்.

போனில் பாண்டியிடம் எங்கு போயிருக்கிறான் எனக் கேட்கலாம்தான். ஆனால், வேண்டியிருக்கவில்லை. கொஞ்சம் நடந்தால் பிரதானசாலை பார்வையில் படுகின்ற வகையில் உள்ளொடுங்கி இறங்குகிற கிளைச்சாலையான இந்த இடம் பிடித்திருந்தது. எப்பவும் அரை மணி நேரத்துக்குமேல் நான் உட்கார்ந்து பேசியிராத சின்னம்மாவும், சிணுங்கும் குழந்தையுடன் உச்சிக்கொண்டை தெரிகின்ற அழகுவும் வழமையான ஒரு நாளின் சலிப்பைக் குலைக்கப் போதுமானதாக இருந்தார்கள். மடித்துக் கட்டிய கைலியோடு வந்த அழகுவின் புருஷன் பொத்தாம் பொதுவாக, ``நா மெயின் ரோட்டுல ஏதாச்சும் சைக்கிள், டூவீலர் வருதான்னு பார்க்குறேன்’’ என்றபடி கிளம்பினான். சின்னம்மா அவனது கைலியை என்னருகில் வரும்போது இறக்கும்படி கண்ணாலேயே சைகை செய்ததை அவன் கண்டுகொள்ளவில்லை. ``அப்பா நானு...’’ என்று அழுத லேகா குட்டியை, யாரும் சமாதானப்படுத்துவதாகத் தெரியவில்லை. அவளுக்கு அது பசி அழுகை என எனக்குப் புரிந்ததால் என்ன சொல்வது எனத் தெரியாமல், ``வா, முன் சீட்டுல ஒக்காரலாம்’’ எனத் தூக்கிப் போனேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
முட்டு வீடு - சிறுகதை

பின் சீட்டில் அழகு வாய் கோண உறங்கிப்போயிருந்தாள். கீழ் பட்டன்கள் அவிழ்ந்த கவலையின்றி வெக்கைக்காற்றின் லேசான குளுமைக்கு தன்னை ஒப்புக்கொடுத்த அவளது அயர்ச்சியான முகமும், தூக்கத்தின் நடுவில் முலை சப்பும் குட்டிப்பாப்பாவும், அதிகாலை தொடங்கி கவிழ்ந்த கேத வீட்டின் சவக்களையின்மேல் ஒரு பச்சயம்போல படர்ந்திருந்தார்கள். ``பெரியம்மா... பால் ஐஸ் வண்டிச் சத்தம்!’’ என்று லேகா குட்டி குதித்து ஓட, சித்தப்பா அவளைக் காபந்து பண்ணுகிற பொறுப்பை ஏற்றுக்கொள்கிற பாவனையில் கார் அருகே வந்தார்.

பசித்த வயிறு, தலை நடுவில் ஏறிக் கிண்ணென்றது. பூச்சிமருந்து குடித்துச் செத்துப்போன 67 வயசு காமாட்சிச் சின்னம்மா, கறிக்குழம்பு சாப்பிட்டவுடன் விடுகின்ற புளி ஏப்பத்தின் கவுச்சி மணம், கார் எங்கும் ஒரு கணம் நிறைந்து கனத்தது. மருந்து குடிக்கிற முடிவெடுப்பவளாக காமாட்சிச் சின்னம்மாவை ஒருபோதும் கற்பனை செய்ய முடியவில்லை. கறிச்சோறும், வெற்றிலையும், கொண்டை மல்லிகையும், மதுரை சுங்கிடிச்சேலையுமாக தன்னளவில் மலர்ந்தவளாகவே அவளைப் பார்த்திருக்கிறேன். கொடுவந்தான் சித்தப்பாவைக் கலியாணம் செய்துகொண்டு, அவர் சிங்கப்பூரிலும் இவள் சாயல்குடியிலும் பிரிந்து வாழ்ந்தது பற்றி அவள் குறைப்பட்டுக்கொண்டதே இல்லை. ``சருகுபோலத்தான் இந்தச் சீலையெல்லாம் - ஒன் வயசுப்புள்ளகளுக்கு சரி’’ என்று அவள் பரிசளித்த புடவைகளை நினைத்துக்கொண்டேன். அதில் கத்திரிப்பூ கலரில் வெள்ளை நிற சிறிய பார்டர் புடவை எனக்கு மிகப் பிடித்தம். அதைக் கட்டும்போதெல்லாம் அந்தப் புடவையில் பாச்சா உருண்டை மணத்தைவிட காமாட்சிச் சின்னம்மாவின் புளியேப்ப வாசனையே அதிகமிருப்பதாகத் தோன்றும். அவளது தங்கப்பல்லை நான் கேலிசெய்யும்போதெல்லாம், ``சிரிப்பு சிங்கப்பூர்ல இருக்கு. தங்கப்பல்லு மட்டும் சாயல்குடியில’’ என்பாள்.

புருவ மத்தியில் சுத்தியல் அடிபோல் அடிவயிற்றுப் பசி மேலேறியது. வெக்கைகூடிய உச்சிவெயில், பசி நரம்பை கண்களுக்கிடையில் முறுக்கேற்றியது. சட்டெனச் சலாத்தலாகத் தூங்கும் அழகுமீது எரிச்சல் வர, திரும்பாமலேயே ``எந்திரி அழகு!’’ என்றேன். குரலின் கடுமையில் அரக்கப்பரக்க எழுந்தவள் ``ஆச்சா?’’ என்றபடி ஜாக்கெட் பட்டன்களைப் போட்டுக்கொண்ட பிறகு, குழந்தையைத் தோளில் சாய்த்தவுடன், அது `அவுக்’ என மெலிதான ஏப்பம்விட்டது. காமாட்சிச் சின்னம்மாவின் கறிச்சோற்று ஏப்ப வாசம், மறுபடியும் காருக்குள். ஒன்றும் பேசாமல் காரைவிட்டு இறங்கி சத்தமாகக் கதவை மூடினேன்.

``இப்ப ஒம் முறையாக்கும்? பாண்டிப்பய வர்றதுக்குள்ள கதவைக் கையில் எடுத்திருங்க’’ என்ற கொம்பூதிச் சின்னம்மா ஒரு கையூன்றி பனம்தண்டிலிருந்து எழுந்தாள். பின்பக்கம் வட்டமாக வியர்த்து பாவாடையோடு ஒட்டியிருந்த புடவையை உதறிவிட்டபடி ``ஒங்கூட வராம, பஸ்ல போயிருந்தாக்கூட இந்நேரம் கேத வீட்டுத் தீட்டுப் போக தலை முழுகியிருப்பேன்’’ என்றவளை அழகு இடைமறித்து, ``எழவே விழாத வீட்ல பொறந்து, வாக்கப்பட்டிருக்க பாரு - எப்பப் பாத்தாலும் ‘தீட்டு, தீட்டு’னுட்டுக் கெடக்க. தீட்டு வெளியாகாமத்தான் நீ பொறந்தியாக்கும்?’’ என்றாள்.

கொம்பூதிச் சின்னம்மா வௌமெடுத்தவளாக, ``ஒன்னியப் படிக்கவச்சது தப்பு. சாவும் பிரசவமும் நடந்த வீடு, முப்பது நா கேதத் தீட்டு, `முட்டு வீடு’ தா. நா கட்டையில போறவரைக்கும் அந்த வீடுகள்ல முப்பது நாளைக்குக் கை நனைக்க மாட்டேன்’’ என்றாள்.

``ஒம் புருஷன் செத்தாலுமா?’’
``ஆமாண்டி அரைக்கிறுக்கி, ஒம் புருஷன் செத்தாலுந்தா.’’
``எம் புருஷன் ஒந் `தொம்பி’ல்ல?’’
``எம் புருஷன் ஒன் `அப்பன்’ல்ல!’’
``அப்பன்னு பேச்சியாத்தாமேல சத்யம் பண்ணு.’’

அழகு முடிப்பதற்குள், எட்டி அவள் தலைமுடியைப் பிடித்து ஓர் அறைவிட்டாள் சின்னம்மா. அழகு, பதிலுக்கு அவளை முதுகில் அப்பினாள். பசியில் தலை கிறுகிறுக்க நின்றிருந்த எனக்கு, சட்டென்று ரெண்டு நல்லதுகள் படமெடுப்பதுபோல ஒரு தோற்றச் சலனம். எந்த முகாந்திரமும் இல்லாமல் சண்டைக்கு எக்குவது இருவருக்கும் வாடிக்கை என்பதுபோல சித்தப்பா அலட்டிக்கொள்ளாமல் கருவேலமரங்களின் சரிவிலிருந்து வந்துகொண்டிருந்தார்.

``விடுங்க சின்னம்மா... ஏ... அழகு...’’ என்ற என் வார்த்தைகளை அவளது இடுப்பில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தையின் அழுகை மழுங்கடிக்க, கண்கள் எரிய அழகுவை எட்டிப்பிடித்துப் பாப்பாவை எடுத்தேன். ``ராத்திரி கஞ்சி குடிச்சது. சப்பிக்கிட்டே கெடந்தா பாலு வருமா கழுதைக்கு...’’ என்று ஆங்காரத்தோடு பாப்பாவை அடிக்கப்போன அழகுவின் கண்களில் பசி அப்பட்டமாகச் சிவந்து அப்பியிருந்தது.

பாண்டிக்கு போன் போட செல்போனை எடுப்பதற்காக காரின் கதவைத் திறக்கும் முன் ‘விர்ரா விர்ரா’ன்னு கத்தியது பாப்பா. உடம்பு கன்றிச் சிவந்த ஓயாத அழுகையை அமர்த்த, தோளில் போட்டுக்கொண்டே போனை எடுக்காமல் கதவை மூடினேன். பக்கத்தில் வந்த சித்தப்பா ``அந்தா, நாலஞ்சு பனை கும்பலா தெரியுதுல்ல. அங்கன ஒரு சின்னக் காரை வீடு கண்ணுக்கு அம்புட்டது. எறங்கி எல்லாரும் போனாக்க, தண்ணி, நீர்மோராச்சும் கேக்கலாம். பாண்டிப்பய வரட்டும். பைகள எடுத்துக்கங்க’’ என்றபடி பதிலுக்குக் காத்திராமல் நடக்க ஆரம்பித்தார். லேகா குட்டியும் அழகு புருஷனும் எங்கே என்று கேட்க வாயெடுப்பதற்குள், தோளில் லேகாவைத் தூக்கியபடி அவன் வருவது தெரிந்தது. லேகா குட்டியின் சிவப்பு ரிப்பன் முடிச்சு உச்சியில் அவிழ்ந்து ஆடிக்கொண்டிருக்க, ``கொலுச அமுக்காதப்பா’’ என்று லேகா குட்டி கத்துவது கேட்டது. இந்தக் கத்தலுக்கு வயிற்றுக்குள் அவளுக்கு ஏதாச்சும் இறங்கியிருக்கும் என நினைத்துக்கொண்டேன்.

`அழகு என் கைப்பையை எடுத்துக்கொண்டு வருவாள்’ என முன்னாக நடக்கத் தொடங்கினேன். அவளும் சின்னம்மாவும் ஒன்றும் பேசவில்லை யென்றாலும் தொடர்ந்த காலடிகளின் வேகத்தில் கோபச் சூடும், பசிக்காந்தலும் புழுதியைக் கிளப்பின. திரும்பாமலேயே அழகு புருஷனும் லேகா குட்டியும் அவர்களுக்குப் பின்னாகச் சேர்ந்து கொண்டதை லேகா குட்டியின் கிணுகிணுக்கும் கொலுசு சொல்லியது. 20 நிமிட நடையில் மோட்டார் ரூமோடு ஒட்டி ஓடு வேய்ந்திருந்த காரை வீடு தென்பட்டது. எண்ணி ஏழெட்டுப் பனைமரங்கள், சீலையைத் தூக்கித் தொடை தெரிய வட்டமாகக் கட்டிய, பரட்டைத்தலை நெட்டச்சிகளைப்போல அணைவாக நின்றிருந்தன. வேலிப்படலின் வாசல் கொக்கி மீது கரட்டாண்டி கை பட்டவுடன் தெறிக்க ஓடியது.

சித்தப்பா, ``ஏப்பே... யாரு வூட்டுல?’’ எனக் குரல் கொடுத்தார். வேலிப்படலைத் தாண்டி ஒரு கயிற்றுக் கட்டில். சாய்வான திண்ணையையொட்டி தகரக்கதவு போட்ட அந்த வீடு அசையவில்லை. கதவு பூட்டப்படாமல் ஒருக்களித்துச் சாத்தியிருந்தது. சித்தப்பா, பின்பக்கமாக ஆள் அரவமிருக்கா எனப் பார்க்கப் போனார். உள்ளே வந்த சின்னம்மாவும் அழகுவும் ஆளுக்கொரு திண்ணையில் தூண் ஓரமாகச் சாய்ந்து உட்கார்ந்துவிட்டதைப் பார்த்த லேகா குட்டி, அப்பாவை விட்டு இறங்கி அழகுவிடம் ஓடியது. ஆட்டுப்புழுக்கைகள் சிதறிக் கிடந்த மண்தரையில் கயிற்றுக்கட்டிலுக்கு மட்டும் இரட்டைப்பனைகள் ஓர் இணுக்கில் நிழலூட்டிக்கொண்டிருந்தன. நான் அதில் உட்கார்ந்து பாப்பாவை மடியில் கிடத்திக்கொண்டேன். புழுக்கைக் கவுச்சியை மீறிய பால் மணம் பசியைக் காதடைக்கத் தூண்டிவிட்டது.

``சருகாப்போன கெழவி ஒருத்தி படுத்துக் கெடக்கா கொல்லையில. சத்தம் போட்டு வரச்சொல்லிருக்கேன்’’ என்றபடி வந்த சித்தப்பாவும் பொறுமை இழந்துபோய் பசியோடு வசவுகளுக்கும் சண்டைக்கும் தயாராக இருந்தார். சின்னம்மாவும் அழகுவுமோ சத்தின்றிக் கிறங்கி, சண்டைக்குத் திராணி யற்றுப்போயி ருந்தார்கள். ``தாத்தா, தண்ணி தவிக்கி’’ என்று காலைக் கட்டிக்கொண்ட லேகா குட்டியிடம் ``போய் கெணத்துல குதி, தண்ணியக் குடிக்க’’ என்று எரிந்து விழுந்தார். பயந்தபடி லேகா குட்டி என்னை ஒண்டிக்கொண்டது. பனைமரத்தைச் சுரண்டியபடி அழகு புருஷன் வேறு பக்கமாகத் திரும்பிக்கொண்டான்.

தகரக்கதவு திறந்து தவழ்வதுபோல ஒரு கூன் கிழவி, மடித்த கிழிசல் போர்வைபோல வெளியே வந்து காத்திரமான குரலில், ``வாங்க தாயி உள்ள...’’ என்றது. தொட்டால் பொடிப்பொடியாக உதிர்ந்துவிடுவாளோ எனப் பயப்படுகின்ற அளவுக்கு பலவீனமாக இருந்தவளுக்கு ``கட்டுவிடாத குரலைப் பாரேன்’’ என்று நான் பார்த்ததை அழகு புரிந்துகொண்டு நமட்டுச்சிரிப்புச் சிரித்தாள். மூன்று பேரும் உள்ளே நுழைந்தோம். மெலிதான இருட்டுக்குப் பழக, கண்கள் தடுமாறின. ஒரு பெரிய அறையைத் தடுத்து உள் அறை ஒன்று மூடப்பட்டிருந்தது. ஒரு மூலையில் சமையல் அறைக்கான தட்டுமுட்டு சாமான்களும் விறகு அடுப்பும் இருந்தன. அறையின் ஊடாகக் கொடிகட்டி, வேட்டி, ரேஷன்கடைப் புடவைகள் ஒன்றிரண்டு, அழுக்குத் துண்டுகளோடு தொங்கிக்கொண்டிருந்தன. பிடிபடாத ஒரு கவிச்சி மணம் நாசிக்குள் நுழைய முயன்றதை இழுத்துப் பிடித்து அது இன்னதெனக் கணிக்க முடியாமல் அழகுவைப் பார்த்தேன். அவளுக்கும் மூக்கு விடைத்திருந்தது. கிழவியிடம் சின்னம்மா அநேகமாக ஒதுங்குவதற்கு இடம் கேட்டிருக்க வேண்டும். கொல்லைப்புறத்துக்கு அவளைக் கிழவி கூட்டிக்கொண்டு போனவுடன், அழகுவும் நானும் ஒரே சமயத்தில் ``பழகிய கவுச்சி மணம் வருதுல்ல’’ என்று சொல்லி மூக்கை விடைத்துக்கொண்டோம்.

பாப்பாவை என்னிடமிருந்து கை மாற்றி அழகு எடுத்துக்கொள்ள, அது பாலுக்கு முண்டியது. கொடி தலை தட்டாமல் வாகாகக் கீழே உட்கார்ந்துகொண்ட பிறகும், அந்தக் கவிச்சி வாசம் பிடிபடவில்லை. மழைவிட்ட பிறகு ஊறுகின்ற மரவட்டைபோல உள்ளே வந்த கிழவி ஈயத்தட்டுகள் இரண்டை வெளியே எடுத்துப்போய்க் கழுவி வந்தாள். இரண்டு பெரிய லோட்டாக்களில் நீர்மோர் கொண்டுவந்து வைத்துவிட்டு, ``ரெண்டுதா வீட்டுல இருக்கு தாயி’’ என்றபடி ஈயத்தட்டுகளில் அவித்த சீனிக்கிழங்குகளை வைத்தாள். மூடியிருந்த உள்ளறையில் அசைவுகளை உணர முடிந்தது. சின்னம்மா கை கால் கழுவி வந்த தெம்பில் சீனிக்கிழங்கைச் சாப்பிட்டபடி, ``அப்பாவுக்கு எடுத்துட்டுப்போறேன்’’ என்று ஒரு தட்டோடு வெளியே போனாள்.

கிழவியாகச் சொல்லாமல் `வீட்டில் வேறு யாரும் இல்லையா?’ எனக் கேட்பது நாகரிகமாக இருக்காது என்கிற புரிதலில் நானும் அழகுவும் அந்த அறையின் ஏதுவான அமைதிக்கு இசைந்தவாறு கிழங்கைச் சாப்பிட்டு, மோர் லோட்டாக்களைக் கையில் எடுத்தோம். முழுசாகக் கூன்போட்டதால் கிழவி பார்க்கிற திசையைக் கணிக்க முடியவில்லை என்றாலும், அவள் உள் அறையை அடிக்கடி பார்த்துக்கொண்டது தெரிந்தது. ``கம்பங்களி கிண்டவா தாயி’’ என்றவளை ``வேண்டாம், கிளம்பறோம்’’ என்று மறுத்தபோது குழந்தையின் சிணுங்கல் லேசாகக் கேட்டது. அழகு, தன் மார்பைப் பார்த்தாள். குட்டிப்பாப்பா தூங்கியிருந்தது. சட்டென இதுவரை போக்குக்காட்டிய கவிச்சி மணம், என் மூக்கில் பிடிபட்டது. இது குழந்தை பெற்ற பச்சை உடம்புக்காரி இருக்கிற வீட்டு வாசம்.

``நல்லா இருப்ப. கண்ணுல உசிரு வந்துச்சு’’ என்றபடி சின்னம்மா உள்ளே வந்தாள். ``சீனிக்கெழங்கு நல்லா பசி தாங்கும். வீட்டுக்குப் போய் தலை முழுகிற வரை’’ என்றவளிடம் கிழவி, ``பச்சை ஒடம்புக்காரியா பேத்தி இருக்கா. புள்ள பெத்து மூணு நா தா ஆச்சு. அம்மாக்காரி கமுதிக்குச் சாமான் வாங்கியாறப் போயிருக்கா. புருஷனும் கரன்ட் பில்லு கட்டப் போயிட்டான். `முட்டு வீட்டுல’ வேற ஒண்ணும் சமைச்சு வைக்க நேரமில்ல தாயி’’ என்றாள்.

கொம்பூதிச் சின்னம்மாவுக்கு முகம் கறுத்து, சங்கு நுனி தொண்டைக்குழியில் ஏறி இறங்கியது. கண்கள் சுருங்க, உதடுகளை இறுக மடித்துக்கொண்டாள். விருட்டெனத் திரும்பித் தகரக்கதவை சத்தமாகத் திறந்தவளிடம் கிழவி, ``பையத்தா, அசந்து ஒறங்குதா பச்ச ஒடம்புக்காரி’’ என்றாள். கிளம்பு முன் அழகு, கிழவியிடம் ``துந்நூறு இருந்தா வெச்சுவுடு பாட்டி’’ என்றாள். சீலை முந்தியில் இருந்த திருநீற்றைப் பூசியபடி ``எப்படித்தா பார்த்த இத?’’ என்று சிரித்துக்கொண்ட கிழவியிடம் நானும் திருநீறு பூசிக்கொண்டேன். வேலிப்படலுக்கு வரும் வரையில் அவளும் மெதுவாகக் கூட வந்தாள். சித்தப்பாவும் லேகா குட்டியைத் தூக்கிக்கொண்டு அழகு புருஷனும் முன்னே போவது இங்கிருந்தே தெரிந்தது. சின்னம்மாவின் முதுகுப்பக்க அதிர்விலிருந்தே அவளது கொதிப்பு கூடியிருப்பது புரிந்தது. வேலிப்படலின் முள்கதவைத் திறந்து மூடுமுன் கிழவியிடம் ``என்ன குழந்தை?’’ என்றேன்.

``பேச்சியாத்தா’’ என்றாள்.

காருக்கு வரும்வரை அழகுவும் நானும் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் சின்னம்மாவை நினைத்துச் சிரித்துப் பூத்துக்கொண்டிருந்தோம். `முட்டு வீட்டு’த் தீட்டு பார்க்கும் அவளின் மீது முனி அடித்தாற்போல ஒரு சீனிக்கிழங்கு ஓங்கி மிதித்தது அவ்வளவு இனிப்பாக இருந்தது.

பாண்டி ஸ்டெப்னியை மாட்டிவிட்டு, எங்களின் எரிச்சலான கேள்விகளை எதிர்பார்த்துத் தயாராக `ரெடிமேடு’ சிரிப்போடு காத்திருந்தான். சித்தப்பா மட்டும் ஏதோ அவனிடம் முணுமுணுத்தார். அழகு புருஷன் பாண்டியிடம் இன்னும் இரண்டு சிகரெட்டுகளை வாங்கிக்கொண்டு காரின் பின்சீட்டுக்குச் சென்றான். முதல் ஆளாக, பசி மறைந்த முகத்தில் அவமானமும் தோல்வியுமாக சின்னம்மா காரில் ஏறிவிட்டிருந்தாள். அழகு புருஷன் நான் ஏறட்டும் என ஒதுங்கி நிற்கையில், அழகு அவனைப் பார்த்தபடி என்னை நிறுத்தி, காதோரமாகக் கண்சிமிட்டி, ``புருஷன் ஒதுக்கிவெச்சா, இஷ்டப்படாமக் கட்டிக்கிட்டவள ஆதரவா அணைக்காம கொடுமைப்படுத்தினா, பூச்சிமருந்து குடிக்கணும்கிறதில்ல, இன்னொரு புள்ளயவும் பெத்துக்கலாம்’’ என்றாள்.

`அப்படியா?’ என்பதுபோலப் பார்த்தேன். ``மணிக்கு வலதுகால் மேல் முழங்காலில் படர்தாமரைபோல மச்சமிருக்கும்’’ என்று கிசுகிசுத்துவிட்டு என்னைக் காருக்குள் தள்ளினாள். உம்மென்றிருந்த சின்னம்மாவுக்கு அடுத்து உட்கார்ந்து குட்டிப்பாப்பாவை வாங்கிக்கொள்ளக் கை நீட்டினேன். வலதுகால் முழங்கால் மச்சத்தோடு அது என்னிடம் தாவி வந்தது. அழகு பக்கத்தில் லேகா குட்டியோடு அவள் புருஷன் உட்கார்ந்துகொள்ள, பாண்டி வண்டியைக் கிளப்பினான். சீனிக்கிழங்கும் பால்கவிச்சியுமாக நானும் அழகுவும் நெருக்கிச் சாய்ந்துகொண்டோம்.

*முட்டு வீடு: தமிழகத்தின் தெக்கத்திக் கீழ்க்காட்டுப் பகுதிகளில் பிரசவம் நடந்து ஒரு மாதம் முடிந்திராத வீட்டைக் குறிப்பது.