
மண்ட்டோ வாழ்கிறார்!
``என்னுடைய கதைகளை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை எனில், நாம் அத்தகைய சகித்துக்கொள்ள முடியாத சூழலில் வாழ்கிறோம் என்று பொருள்.”
- மண்ட்டோ
இந்திய - பாகிஸ்தான் பிரிவினையையும், இருநாட்டவர் மீதும் அது நிகழ்த்திய தாக்கங்களையும் தன் எழுத்தின் வழி ரத்தமும் கண்ணீருமாகப் பதிவு செய்தவர் சாதத் ஹசன் மண்ட்டோ. இன்று வரை உலகமெங்கும் கொண்டாடப்படும் எழுத்தாளர்.

நாஸ்டாலிக் (உருதின் கிளை மொழி ) மொழிச் சிறுகதைகளின் வழி பேரன்பும் வக்கிரமும் நிறைந்த மனித மனங்களைத் தொடர்ந்து பதிவு செய்தவர். ஓர் இயக்குநராக, அப்படிப்பட்ட மனிதரின் வாழ்வை அற்புதமான சினிமாவாக மாற்றியிருக்கிறார் நந்திதா தாஸ்.
ஓர் எழுத்தாளனின் வாழ்வில் அவன் தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கிற காலம்தான் முக்கியமானது. அப்படி மண்ட்டோவின் பிரபலமான படைப்புகளான `பத்து ரூபாய்’, ‘நூறு விளக்குகளின் வெளிச்சம்’, ‘தண்டா கோஷ்த்’, ‘திற’, ‘டோபா டேக் சிங்’ போன்ற சிறுகதைகள் உருவான தருணங்களின் வழி மண்ட்டோவின் வாழ்வு சொல்லப்படுகிறது. அந்தச் சிறுகதைகளும் போற்றுதலுக்குரிய வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
மண்ட்டோவின் சிறுகதைகளையும், அவர் வாழ்வையும் பிணைத்துத் திரைக்கதையாக்கிய விதத்திலும் அதைக் கவித்துமான திரைமொழியில் காட்சிப்படுத்திய விதத்திலும் உயர்ந்து நிற்கிறார் நந்திதா தாஸ்.
அமிர்தசரஸில் பிறந்து வளர்ந்து அந்த நகரத்தை நேசித்த மனிதர் மண்ட்டோ. பாலிவுட்டில் பிரபலமான திரைக்கதை எழுத்தாளராக வாழ்ந்துகொண்டிருக்கிறார். அங்கே பாலியல் விடுதிகளில் தான் சந்திக்கும் புறக்கணிக்கப்பட்ட பெண்களின் வாழ்வை எழுதத்தொடங்குகிறார். இந்திய அரசு அவருடைய கதைகளுக்குத் தடை போடுகிறது. அவர் யாருக்கும் அஞ்சுவதில்லை.

சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் நிம்மதியாகத் தன் நாள்களைக் கடத்த முடியும் என நம்புகிறார். பம்பாயில் தன் தாய் புதைக்கப்பட்ட இடத்துக்குப் பக்கத்தில் தானும் புதைக்கப்பட வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால், அவரின் நண்பரும் நடிகருமான ஷ்யாம் சத்தார் ஒரு கலவரமான சூழலில், `முஸ்லிம் என்பதால் உன்னையும் கொல்வேன்’ என்று கூறிவிட, லாகூருக்குச் செல்ல முடிவெடுக்கிறார்.
``இதோ இங்கு இருக்கும் பான் கடையில் ஒரு ரூபாய் பாக்கி இருக்கிறது” என்று பம்பாய் நகரை விட்டு வெளியேறும் தருணத்தில் மண்ட்டோ கூற, ஷ்யாம் அந்தப் பாக்கியை அடைத்து விடுவதாகக் கூறுகிறார். ``வேண்டாம். நான் இந்த நகரத்துக்கு என்றென்றும் கடன்பட்டவனாக இருக்க விரும்புகிறேன்” என்கிறார் மண்ட்டோ. இந்திய நினைவு களைச் சுமந்தபடி கப்பலில் பாகிஸ்தான் கிளம்புகிறார்.
இந்திய-பாக் பிரிவினைக்குப் பிறகு அதன் சுவடுகள், அது விட்டுச்சென்ற தழும்புகள் என விதவிதமான மனிதர்களையும் துயரங்களையும் கதை களாக்குகிறார். பாகிஸ்தானில் எழுத்தாளராகப் பணம் ஈட்ட முடியவில்லை. வறுமையில் குடும்பம் தவிக்கிறது. இன்னொரு பக்கம் மீண்டும் திரும்ப முடியாத பிறந்த மண்ணின் நினைவுகள் தரும் ஏக்கம் அவரை விரட்டுகின்றன. துக்கத்தை மறக்க முழுநேரக்குடிகாரர் ஆகிறார்.
அவருடைய முற்போக்கான கதைகளை பாகிஸ்தானின் அடிப்படைவாத அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. நீதிமன்றத்தில் நிறுத்துகிறார்கள். இருந்தும் மண்ட்டோ தன் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறார். குடியிலிருந்து மீள மருத்துவமனையில் சேர்கிறார். வறுமையிலும் போராட்டமான வாழ்விலும் தொடர்ந்து எழுதுகிறார். அவருடைய ஆகச்சிறந்த கதைகள் எல்லாம் இந்தப் போராட்டமான வாழ்விலிருந்து மலர்கின்றன.

மண்ட்டோவாக இதற்கு முன்னர் வெவ்வேறு நடிகர்கள் நடித்திருந்தாலும், நவாஸுதீன் சித்திக்கி அளவுக்கு யாருக்கும் அது அவ்வளவு எளிதாய்க் கைகூடவில்லை. வெள்ளை ஜிப்பா, கண்ணாடி, எப்போதும் இதழ்களில் புகையும் சிகரெட், கலைந்த தலைமுடி, எதைப்பற்றியும் கவலை கொள்ளாத ஓர் அலட்சியப்பார்வை, புத்தகங்களின் அட்டைப்படங்களிலும், கதைகளிலும் கேட்ட, பார்த்த மண்ட்டோவின் முகத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் நவாஸுதீன் சித்திக்கி. மண்ட்டோவின் மனைவியாக வரும் சஃபியா (ரசிகா துகல் ), நண்பர் ஷ்யாம் சத்தார் (தஹிர் ராஜ் ), தோழியாக வரும் இஸ்மத் சுக்தாய் (ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே) போன்றவர்களின் அபாரமான நடிப்பு படத்தை மேலும் அழகுறச் செய்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் கார்த்திக் விஜயின் ஒளிப்பதிவும் இந்தப் படைப்புக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கின்றன.
பொருளாதார ரீதியாகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகுதான் படத்தை எடுத்து வெளியிட்டிருக்கிறார் நந்திதா. படம் அவருடைய சொந்தத்தயாரிப்பு. மண்ட்டோவின் மேல் உள்ள அன்பில், இப்படத்திற்காக நவாஸுதீன் ஒரு ரூபாயைச் சம்பளமாகவும், ரிஷி கபூர், பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், பல தொழில்நுட்பக்கலைஞர்கள் சம்பளமே பெறாமலும் வேலை பார்த்திருக்கிறார்கள்.
இன்று எங்கும் வரலாற்று ரீதியிலான பழைமைவாத வெறுப்புப்பேச்சுகளும், சாதிமதப் பிரிவினைவாதங்களும் ஒலிக்கிற சூழல். கருத்துச்சுதந்திரம் என்பது வெறும் சொற்களாக மாறிவிட்ட காலம். இந்த நேரத்தில் மதங்கள் கடந்த மானுட அன்பையும், எல்லைகளற்ற உண்மையான சுதந்திரத்தையும் வலியுறுத்திய மண்ட்டோ எல்லோருக்குமே அவசிய மானவராகிறார். அவருடைய படைப்புகளும் கருத்துகளும் மீள்வாசிப்பு செய்யப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கான தொடக்கப்புள்ளியாக இருக்கிறது நந்திதாவின் படைப்பு.
கார்த்தி