Published:Updated:

கட்சிகள் எல்லாம் கார்ப்பரேட் அடிமைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கட்சிகள் எல்லாம் கார்ப்பரேட் அடிமைகள்!
கட்சிகள் எல்லாம் கார்ப்பரேட் அடிமைகள்!

கட்சிகள் எல்லாம் கார்ப்பரேட் அடிமைகள்!

பிரீமியம் ஸ்டோரி

‘‘என்னைக் கைது செய்தபோதே கொன்றுவிடும் முயற்சிகளில் போலீஸார் ஈடுபட்டார்கள். கைது தகவல் தோழர்களால் வெளியே தெரிந்ததால், சிறையில் தள்ளினார்கள். சாக்கடைக்கு அருகே இருக்கும் அறையில் என்னை அடைத்தனர். மிகையில்லை... பத்தாயிரம், இருபதாயிரம் கொசுக்கள் இருக்கும். கொசுக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டேன். இதை நீதிபதியிடமே முறையிட்டேன். மதுரை தனிமைச் சிறையில், என்னை உளவியல்ரீதியாகவும் சித்ரவதை செய்தனர். சிறையில் இருந்தபோதே இரண்டு தேசத்துரோக வழக்குகள் போட்டனர். தொடர் தொந்தரவு கொடுத்து, மெல்ல மெல்ல சாகடிக்கும் அத்தனை வேலைகளையும் இந்த அரசு செய்தது. இதையெல்லாம் தாண்டித்தான் வெளியில் வந்திருக்கிறேன்’’ என்று சொல்லி சிரிக்கிறார் முகிலன்.

‘சிறை எண் 374’... சுற்றுச்சூழல் போராளி முகிலனை இப்படித்தான் வேடிக்கையாக அழைக்கிறார்கள் அவரின் சகாக்கள். மணல் கொள்ளை, தண்ணீர்க் கொள்ளை என இயற்கையைச் சிதைக்கும் அத்தனை அத்துமீறல்களுக்கும் எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்து, 374 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு நிபந்தனை ஜாமீனில் ஊர் திரும்பியுள்ளார் முகிலன். கரூரில் அவரை சந்தித்தோம்.

கட்சிகள் எல்லாம் கார்ப்பரேட் அடிமைகள்!

‘‘முகிலன், வளர்மதி, மதுரை நந்தினி என்று பலரும் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தாலும், நீங்கள் யாருமே பெரிய அளவில் மக்கள் ஆதரவைப் பெற முடியவில்லையே, ஏன்?’’

‘‘நான் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் இருந்தபோது, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் என்னிடம் செல்பேசியில் பேசினார். அப்போது அவர் அருகிலிருந்த தி.மு.க நண்பரொருவர், செல்பேசியை வாங்கி என்னிடம் நலம் விசாரித்தார். அவ்வளவுதான். என் போனை டேப் செய்த போலீஸார் அவரைத் தேடிச்சென்று, ஒரு பொய் வழக்கில் கைது செய்தனர். என்னைச் சந்திப்பவர்களை கியூ பிரிவு போலீஸார் விசாரணைக்கு உட்படுத்தி டார்ச்சர் செய்துள்ளனர். போராடுபவர்களுக்கு ஆதரவாக மக்கள் நிற்கக்கூடாது என்பதற்காகவே அடக்குமுறைகளை ஏவுகிறது அரசு. உண்மையான போராட்டம் என உணர்ந்தால், இதையெல்லாம் தாண்டி மக்கள் ஆதரவளிப்பார்கள். எங்கோ ஈரோட்டில் பிறந்த என்னை, கூடங்குளம் மக்கள் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக அரவணைத்து பாதுகாப்பு அளித்தது அதனால்தான்.’’

‘‘நீங்கள் சிறையில் இருந்தபோது வைகோ தவிர்த்து பெரிய கட்சிகளின் தலைவர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லையே?’’

‘‘பெரிய கட்சிகள் தொலைநோக்குப் பார்வையில் செயல்படுவதில்லை. ஒரு பிரச்னை என்றால், ஓர் அடையாளப் போராட்டத்தோடு தங்கள் பங்களிப்பை முடித்துக்கொள்கின்றனர். நீட் திணிப்பு, பேருந்துக் கட்டண உயர்வு போன்ற விஷயங்களில் அவர்கள் அடையாளப் போராட்டங்கள் தவிர வேறென்ன பெரிதாக செய்துவிட்டனர்? எந்தப் பெரிய கட்சியினராவது அரசுக்கு எதிராகப் போராடி சிறைக்குச் செல்லும் நடைமுறை இப்போது உள்ளதா? கட்சிகள் எல்லாம் இன்று கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகிவிட்டன. 2010-ம் ஆண்டிலிருந்தே மணல்கொள்ளை, முல்லைப் பெரியாறு, நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட் என்று தமிழ்நாட்டின் பிரச்னைகளுக்காக மக்கள் இயக்கங்களே போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. எனவே, எங்களைப் போன்ற மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பவர்கள், நீண்ட சிறைவாசம் அனுபவிப்பவர்கள், இப்படியான கார்ப்பரேட் அடிமைக் கட்சிகளின் ஒத்துழைப்பையோ, ஆதரவையோ எதிர்பார்க்க முடியாது.’’

‘‘தொடர்ச்சியாக சிறையிலேயே இருப்பதால் எதையாவது இழந்ததாக வருத்தப்படுகிறீர்களா?’’

‘‘அரசு எப்படி ஒடுக்கும் என எனக்கு அரசியல் புரிதல் இருந்ததால், அதன் ஒடுக்குமுறை என்னை எப்போதும் பாதித்ததில்லை. ஆனாலும் சில வருத்தங்கள் உண்டு. 17 ஆண்டுகளாக நான் குடும்பத்துடன் இல்லை. முழுநேர மக்கள் பணிதான். என் தேவை, என் குடும்பத் தேவை என அனைத்தையும் என் இணையர் பூங்கொடிதான் பார்த்துக்கொண்டார். நான் சிறையில் இருந்த காலத்தில், பூங்கொடி ஒரு விபத்தில் சிக்கி பல நாள்கள் மருத்துவமனையில் இருந்தார். அப்போது, அவருக்கு உடனிருந்து என்னால் உதவமுடியவில்லை. என் மகனை பள்ளி, கல்லூரியில் நேரில் சென்று சேர்த்ததில்லை. இவையெல்லாம் கடந்து ஸ்டெர்லைட் போராட்டம் உச்சமடைந்து, துப்பாக்கி குண்டுகளுக்கு மக்கள் இரையான அந்த நேரத்தில் மக்களோடு இல்லாமல் நான் சிறையில் இருந்தது பெரிய வருத்தமாக உள்ளது.’’

கட்சிகள் எல்லாம் கார்ப்பரேட் அடிமைகள்!

‘‘ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து நீங்கள் உணர்ச்சிவசப்படுகிறீர்கள். ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டுமென  ஆயிரக்கணக்கான மனுக்களை மக்கள் கொடுத்ததாக செய்தி வந்துள்ளதே?’’

‘‘ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். நாங்கள் ஈரோடு சுற்றுவட்டாரத்தில் மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடியபோது, ‘மணல் அள்ளும் நிறுவனங்கள் வேண்டும்’ என்று இப்பகுதியில் சில நூறு பேர் ஆட்சியரிடம் மனு கொடுத்தார்கள். மணல் மாஃபியாக்கள் கொடுத்த ஆயிரம் ரூபாய் பணமும், பிரியாணியும்தான் மக்களை இப்படித் தள்ளியது. பிறகு அதே மக்கள், ‘வறுமையின் கொடுமையில் ஆயிரம் ரூபாய் கிடைக்கிறதே என்று சென்றோம்’ என்றார்கள். எல்லா இடங்களிலும் இதுதான் நடக்கிறது.’’

 ‘‘தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து சிறைக்குச் செல்கிறீர்கள். இதனால் ஏதாவது பலன் கிடைத்துள்ளதா?’’

‘‘திருமணம் முடிந்து 1995-ல் என் இணையருடன் முதலில் தேனிலவுக்குச் சென்ற இடம் கோவை சிறைதான். நண்பர்கள் சிலர் சிறையில் இருந்ததால், அவர்களை சந்திக்கச் சென்றோம். அப்போதே என் இணையரிடம், ‘நமக்கு சிறைதான் நிரந்தரம். வெளியே கழிப்பதெல்லாம் விடுமுறைக் காலம்’ என்று சொன்னேன். அது இன்றைக்கும் உண்மையாகவே இருக்கிறது. என் குடும்பமும் இதை உணர்ந்து சமூகப் பங்களிப்பைத் தொடர்கிறது. போராடாமல் இங்கு எதுவுமே கிடைக்காது. 1990 வரை பொதுநலம் என்பது மிகுந்திருந்தது. அதன்பிறகு ஏகாதிபத்தியம், தன்னலத்தை உயர்த்திப் பிடிக்கும் நுகர்வுப் பண்பாட்டை உருவாக்கியது. இதைத் தாண்டியும், சுனாமி பாதிப்பின்போதும், 2015 வெள்ள பாதிப்பின்போதும், ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டத்தின்போதும் பெருந்திரளாக மக்கள் பங்கேற்றனர். காலங்கள் மாறலாம். ஆனால், வரலாற்றில் எப்போதும் பொதுநலப் போராட்டங்கள் தோற்காது.’’

- சே.த.இளங்கோவன் 
படங்கள்: தே.தீட்சித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு