Published:Updated:

`த்ரில் எழுத்தாளர் ஜேம்ஸ் பட்டர்சன் வருமானம் 86 மில்லியன் டாலர்!’ - ஃபோர்ப்ஸ்

2018-ம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிவரும் பத்து எழுத்தாளர்களின் பட்டியலை, ஃபோர்ப்ஸ் இதழ் சமீபத்தில்  வெளியிட்டது. இதில் முதலிடத்தில் இருப்பவர் மர்மக் கதைகள் எழுதும் எழுத்தாளர் ஜேம்ஸ் பட்டர்சன். அவரின் இந்த ஆண்டு வருமானம் 86 மில்லியன் டாலர்.

`த்ரில் எழுத்தாளர் ஜேம்ஸ் பட்டர்சன் வருமானம் 86 மில்லியன் டாலர்!’ - ஃபோர்ப்ஸ்
`த்ரில் எழுத்தாளர் ஜேம்ஸ் பட்டர்சன் வருமானம் 86 மில்லியன் டாலர்!’ - ஃபோர்ப்ஸ்

திருவிளையாடல் திரைப்படத்தில் சிவ பெருமான் கேட்கும் ‘சேர்ந்தே இருப்பது’ என்ற கேள்விக்குத் தருமி ‘வறுமையும் புலமையும்’ என்று பதில் சொல்லுவார். உண்மையில் எழுத்தாளர்களின் நிலைமை ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. புதுமைப்பித்தன், பாரதி போன்றோரின் வாழ்க்கையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், இதெல்லாம் ‘முன்னொரு காலத்தில்...’ என்று சொல்லும் அளவு நிலைமை இப்போது மாறி இருக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள்  நல்ல வருமானம் பெற்று, பொருளாதார ரீதியிலும் நல்ல நிலைமையில்தான் இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவின் பிற மொழி எழுத்தாளர்கள், குறிப்பாக ஆங்கிலத்தில் எழுதும் இந்திய உலக எழுத்தாளர்களின் வருமானத்தை ஒப்பிடும்போது அந்தத் திருவிளையாடல் வசனம் இன்றும் அப்படியே பொருத்தமாகத்தான் இருக்கிறது. 


2018-ம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிவரும் பத்து எழுத்தாளர்களின் பட்டியலை, ஃபோர்ப்ஸ் இதழ் சமீபத்தில்  வெளியிட்டது. இதில் முதலிடத்தில் இருப்பவர் மர்மக் கதைகள் எழுதும் எழுத்தாளர் ஜேம்ஸ் பட்டர்சன். அவரின் இந்த ஆண்டு வருமானம் 86 மில்லியன் டாலர். இந்திய மதிப்பில் 62 கோடி ரூபாய். இது அவருடைய படைப்புக்குக் கிடைத்த ராயல்டி தொகை. கடந்த 20 ஆண்டுகளில்  பத்தாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார் ஜேம்ஸ். 

இரண்டாவது இடத்தில் ஹாரிபாட்டர் எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங் உள்ளார். கடந்த ஆண்டு 95 மில்லியன் டாலர் வருமானம் வாங்கி முதலிடத்தில் இருந்த ரௌலிங்கின் இந்த ஆண்டு வருமானம் 54 மில்லியன் டாலர். மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார் ஸ்டீபன் கிங். இவரும் மர்மக் கதைகள் எழுதுவதில் மன்னர்.  எழுத்தாளர் ஜான் க்ரிஷ் நான்காவது இடத்தில் உள்ளார். ஐந்தாவது இடத்தை குழந்தைகள் எழுத்தாளர் ஜெப் கின்னே மற்றும் டான் ப்ரவுன் பகிர்ந்துகொண்டுள்ளனர். இவர்களின் ஆண்டு வருமானம் 18.5 மில்லியன் டாலர். 


ஏழாவது இடத்தைப் பத்திரிகையாளர் மைக்கேல் உல்ஃப் என்பவர் பிடித்துள்ளார். இவர் எழுதிய ‘ஃபைர் அண்டு ஃபுர்ரி: இன்சைட் தி ட்ரம்ப் ஒயிட் ஹவுஸ்’ என்ற நூல் விற்பனையில் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்ல 10 இடங்களுக்குள் வந்த புனைவு எழுத்தாளர் அல்லாத முதல் எழுத்தாளரும்கூட. இவரது அடுத்தடுத்த புத்தகங்களுக்கான ராயல்டியும், ஃபைர் அண்டு ஃபுர்ரி-யின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி உரிமையும் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகியுள்ளது.

எழுத்தாளர்கள் டேனியெல்லே ஸ்டீல், நோரா ராபர் எட்டு, ஒன்பதாவது இடங்களைப் பிடித்துள்ளனர். இவர்களின் ஆண்டு வருமானம் 12 மில்லியன் டாலர். இளம் எழுத்தாளர்கள் ரிக் ரியோர்டன் மற்றும் ‘ஃபிப்டி சேட்ஸ் ஆப் க்ரேய்’ என்ற காதல் கதையின் ஆசிரியர் இ.எல்.ஜேம்ஸ் ஆகியோர் பத்தாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். இவர்களின் ஆண்டு வருமானம் 10.5 மில்லியன் டாலர்.


இந்த வரியில் புதிதாகச் சேர்ந்த எழுத்தாளர், உல்ஃப். கடந்த ஆண்டு முதல் பத்து இடங்களில் இருந்து இப்போது அந்த இடத்தைத் தவறவிட்டுள்ளார் பௌலா ஹாக்கின்ஸ். 2016-ல் இவர் எழுதிய ‘தி கேர்ள் ஆன் தி ட்ரெயின்’ என்ற நாவல் விற்பனையில் மிகப்பெரிய சாதனை செய்தது. அதைத் தொடர்ந்து இவர் வெளியிட்ட நாவலான ‘இன்டூ தி வாட்டர்’ எதிர்பார்த்த அளவு விற்பனை ஆகவில்லை.

இப்போது தெரியும் தமிழ் எழுத்தாளர்களின் வருமானம். இதில் ஒரு சதவிகிதம்கூட இருக்காது என்பது இந்தத் தொகையைக் கேட்டதும் நமக்குப் புரிந்துவிடும். ஆங்கில நூல்களுக்கான சந்தை உலகளவிலானது என்பதும் அவர்கள் எழுதும் நாவல்கள் பெரும்பாலும் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களாகத் தயாரிக்கப்படுகின்றன என்பதும் ராயல்டி தொகை அதிகம் என்பதும் இதற்கான காரணங்கள். இதேபோலத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டாலும் அவர்களது படைப்புகள் திரைப்படங்களாக, தொலைக்காட்சித் தொடர்களாகத் தயாரிக்கப்பட்டாலும்கூட இந்த அளவு வருமானம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. குறைந்தபட்சம் இங்கே ராயல்டி தொகையாவது சரியாகக் கிடைக்க வழி செய்தாலே தமிழக எழுத்தாளர்கள் மகிழ்ச்சி அடைவர்.