சினிமா
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

ஓவியம்: இளையராஜா

வலி...

னக்கு நினைவுதெரிந்த
நாள்களுக்கு முன்பிருந்தே
குடும்ப பாரத்தைத்
தூக்கிச் சுமக்கும் அம்மா
ஒருவழியாய்
வாழ்வின் கவலைகள்
வடியத் தொடங்கிய நாளொன்றில்
காலில் முள் குத்திவிட்டதென
எடுத்துவிடச் சொன்னாள்.
அவளின் தேய்ந்து வெடித்த பாதங்களில்
இதற்குமுன்  எத்தனையோ முட்கள்
ஆணியாகியிருந்தன...
ஒரு சிறுமுள்ளின்
வலியை உணரவே
அம்மாவுக்கு
அரை நூற்றாண்டு வாழ்க்கை முடிந்துவிட்டிருந்தது...

- சாமி கிரிஷ்

சொல்வனம்

ஒரு சொல்

ரு சொல்
நாக்கு நுனியைச்
சிலிர்க்கவைக்கும்
தேன் துளி

ஒரு சொல்
மலைப்பகுதியில் தற்கொலை
செய்பவனின் எதிரொலி

ஒரு சொல்
உப்புத் துகள்கள் நிறைந்த
துணிப்பையினால் கொடுக்கும் ஒத்தடம்

ஒரு சொல்
உத்தரத்தில்
தொங்கும் தூக்குக்கயிறு

ஒரு சொல்
கடற்கரை நண்டின் விளையாட்டு
எதிர்பாராத மின்னலில் பிறந்த நெருப்பு

ஒவ்வொரு சொல்லும் எங்கோ
உதிர்ந்த இலை அருவியில்
மிதந்து வருவதைப்போல
நம்மை வந்தடைகிறதென்பதை
மட்டும் மறவாதீர்கள்.

- சீதா

இருபது வருடங்களுக்குப் பிறகு...

தி
ண்ணைக் கிழவி செத்துவிட்டது
சாலை விரிவாக்கத்தில் 
ஆலமரம் காவு வாங்கப்பட்டது.
மருது தேநீர்க்கடை இருந்த
இடத்தில் பெரிய மனிதர் ஒருவரின்
பண்ணை வந்திருக்கிறது.
இரண்டாவது தெருவுக்குச்
செல்லும் சுலபமான வழியைக்
கட்சிக்காரர் ஒருவரின் சுற்றுச்சுவர்
அடைத்துக்கொண்டது.
கிராமத்து மாமா வீட்டுக்குச்
செல்லும் பால்யத்தின்
அடையாளம் எல்லாம்
போய்விட்டதாகப் புலம்பிய
என்னிடம் மிகச் சாதாரணமாக
வழி கூறினான் மாமனின் பேரன்
``டாஸ்மாக்குக்கு ஜஸ்ட் எதுத்த வீடு மாமா...”

- கவிஜி

இரவல்

நெ
த்திச்சுட்டியும்
காதுமடலையும்
பக்கத்து வீட்டு
ஆனந்திகிட்டேயும்...
இரு கைக்கு
மணி சித்தியின்
இரண்டு சவரனையும்...
பிரியா சித்தியின்
நெக்லஸ் கொஞ்சம் சின்னதா
இருந்தாலும் பரவாயில்லைனும்...
அந்தக் காவியா பொண்ணோட
கால் கொலுசை வாங்கி
தேவைப்பட்டாலும் படும்னு
மணிபர்ஸ்ல வெச்சிக்கிட்டு
தோழி கல்யாணத்துக்குப்
புறப்பட்ட எங்க அக்காவுக்கு,
பணக்காரக் களையை மட்டும்
எங்க, எப்படி, யார்கிட்ட
வாங்குறதுனு
சுத்தமா தெரியலை.

- கலசப்பாக்கம் சீனு