Published:Updated:

உங்களைப் பாத்துட்டே இருக்கேனே! - சிறுகதை

உங்களைப் பாத்துட்டே இருக்கேனே! - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
உங்களைப் பாத்துட்டே இருக்கேனே! - சிறுகதை

ஓவியங்கள்: ரவி

உங்களைப் பாத்துட்டே இருக்கேனே! - சிறுகதை

ஓவியங்கள்: ரவி

Published:Updated:
உங்களைப் பாத்துட்டே இருக்கேனே! - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
உங்களைப் பாத்துட்டே இருக்கேனே! - சிறுகதை

திருமண விசேஷங்களுக்குச் செல்வது என்றால் எனக்கு முன்பெல்லாம் முடியாத ஒரு விஷயமாகவே இருந்தது. `முடியாத விஷயம்’ என்று சொல்வதைவிட, `சகிக்க முடியாத விஷயம்’ என்று சொல்வதே நல்லது என நினைக்கிறேன். சில சமயங்களில் எனக்குத் தற்கொலை எண்ணங்களும் வருவதுண்டு!

உங்களைப் பாத்துட்டே இருக்கேனே! - சிறுகதை

ஒரு தற்கொலையை எப்படித் தனக்குத்தானே நிகழ்த்திக்கொள்வது என்ற அடிப்படை விஷயம்கூட எனக்குத் தெரியாது. சிறுபிள்ளைத்தனமாக, கடைகளில் விற்கும் எலி மருந்துப்பொட்டலம் வாங்கி வந்து குடித்துவிட்டாலும், என்னை என் வீட்டில் உள்ளோர் காப்பாற்றிவிடுவார்கள். பக்கத்து வீட்டாரெல்லாம் பதைபதைப்போடு இயங்கத் தொங்கிவிடுவார்கள். சைரன் ஒலியோடு மருத்துவமனை வாகனம் என்னை அள்ளிப் போட்டுச் செல்ல வாசலுக்கே வந்துவிடும். மருத்துவமனை, என்னை வாய் பிளந்தபடி வரவேற்று ஏசி அறைக்குள் தூசு, தும்பு படாமல் படுக்கவைத்து வைத்தியம் பார்க்கும். அறையின் வாசலில் என் பெற்றோரும், என்னை அறிந்த வர்களும் மருத்துவரின் நல்ல தகவலுக்காகக் காத்திருப்பார்கள். நான் ஆபத்தான நிலையைக் கடந்த பிறகு, ஏசி அறையிலிருந்து வேறு அறைக்கு என்னை மாற்றிவிடுவார்கள். பார்க்க வரும் எல்லோரும் கண்ணீர் சிந்துவார்கள். என் பெற்றோருக்கு வெட்டிச்செலவை உருவாக்கித்தந்த மகளாகிவிடுவேன். நினைக்கையில், எல்லாமே வேடிக்கையாகவே இருக்கின்றன.

சமீபகாலங்களில் நான் அதிகம் யோசித்துக்கொண்டேயிருக்கிறேன். நல்ல விஷயங்களென்றும், கெட்ட விஷயங்களென்றும் பல வடிவங்களில் என் யோசனை சென்றுகொண்டேயிருக்கிறது. மனதை, டிவி நிகழ்ச்சிகள் பார்ப்பதிலாவது ஒன்றச்செய்யலாம் என்றாலும், வர வர அதுவும் வெற்று பொம்மைகளின் பேச்சுகளாகவே இருக்கின்றன. எப்போதேனும் வீடு வந்து போகும் உறவினர்கள், என் உடல் நிலையைப் பற்றிக் கவலைகொண்டு, பல அறிவுரைகளைச் சொல்லிச் செல்கிறார்கள்.

நான்கைந்து வருடத்துக்கு முன்பாக இவர்களே என் பெற்றோரிடம், `கட்டிக் குடுத்துட்டா உங்களுக்கும் பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கும். மாப்பிள்ளை பார்த்துட்டுதானே இருக்கீங்க? ஊஞ்சலூர்ல ஒரு மாப்பிள்ளை இருக்காரு. காடு, தோட்டம்னு பத்து ஏக்கரா தேறும். மாப்பிள்ளை டவுன்ல எலெக்ட்ரிக்கல் கடை வெச்சிருக்காரு’ என்றே பேசினார்கள். வீடு தேடி வந்து பெண் பார்க்க அமர்ந்திருப்பவர்களுக்கு, எந்த முகத்தை வைத்துக்கொண்டு காபி எடுத்துப் போய்க் கொடுப்பது என்பதுதான் என் பிரச்னை. என்னை யார் கட்டிக்கொள்ள விரும்புவார்?

எனக்கு வெளியில் தலைகாட்டவே விருப்பமில்லை. என் உடலெங்கும் வெண்படை வளர்ந்துகொண்டேயிருக்கிறது. என் பெற்றோருக்கு, பத்து வருடம் கழித்துப் பிறந்தவள் நான். என்னை எப்படிச் சீராட்டி, தாலாட்டி வளர்த்திருப்பார்கள் என நீங்களே யோசித்துப்பாருங்கள். சிறுவயதில் நான் ஆசைப்பட்ட பொருள்கள் அனைத்தையும் என் பெற்றோர் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தார்கள். நான் என் அம்மாவைவிட சிவப்பு என்பதில் நெருங்கிய சொந்தங்களுக்குப் பெருமை. அம்மாவே என்னைப் பார்த்துப் பொறாமைப்படும் சிவப்பழகியாக நான் என் பள்ளி வாழ்க்கைக்குள் அந்தக் குறுநகரில் நுழைந்தேன்.

திரும்ப என் பள்ளிப் பருவத்தை நினைக்கையில், எனக்குள் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடுகிறது. வாழ்க்கையைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாத பருவம்தானே அது. நான் இன்னமும் குழந்தையாகவே ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்துக்கொண்டே இருந்திருக்கலாம்தான். இந்த உடல் வளர்ச்சியும், வகுப்பு உயர்வுகளும் அப்போது மகிழ்ச்சியான விஷயங்களாகவே இருந்தன. பத்தாம் வகுப்பில், அந்தப் பள்ளியிலேயே முதல் மாணவியாக நான் தேர்ச்சிபெற்றேன். மேற்படிப்புக்காக நான் வேறு நகரத்துக்கு பேருந்துப் பயணம் செய்யவேண்டி வந்தது.

உங்களைப் பாத்துட்டே இருக்கேனே! - சிறுகதை

கல்லூரிப் படிப்புக்காக நான் பெண்கள் கல்லூரியில் கால் வைத்தபோதுதான் எனக்குத் தோல் பிரச்னை ஆரம்பமாயிற்று. காதோரத்திலும் கைவிரல்களிலும் வெண்மை நிறத்தில் சிறு படலங்கள் தோன்றத் தொடங்குகையில் முதல் செமஸ்டர் எழுதியிருந்தேன். பிறகு உதடுகளுக்குக் கீழாக அந்த வெண்படலம் தோன்றத் தொடங்குகையில், என் பெற்றோர் என்னை நகரில் சிறந்த வைத்தியரிடம் அழைத்துப் போனார்கள்.

அவரின் தன்மையான பேச்சு, இந்தப் பிரச்னையிலிருந்து சீக்கிரமே வெளிவந்துவிடலாம் என்ற நம்பிகையைக் கொடுத்தது. காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் அவர் பரிந்துரைத்த மாத்திரை வில்லைகளை உணவுக்கு முன், உணவுக்குப் பின் என விழுங்கத் தொடங்கினேன். கல்லூரியில் என் அருகில் அமர்ந்திருந்த தோழி வேறு நாற்காலிக்கு மாறியபோது சொன்னாள், ``மொண்ணைப்பாம்பு நக்கிடுச்சுன்னா இப்படித்தான் ஒடம்பு பூராவும் வெள்ளை வெள்ளையா வந்துரும்!”

நான் கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டேன். மாத்திரை வில்லைகள் என் நோயை குணப்படுத்துவதற்குப் பதிலாக அதிகப்படுத்துவதுபோல்தான் எனக்குத் தோன்றியது. ஒருகட்டத்தில் என் உதடுகள் வெண்மை நிறத்துக்கு மாறிவிட்டன. கண்ணாடியில் என் முகம் காணச் சகியாது, கட்டிலில் குப்புற விழுந்து அழுது புலம்ப ஆரம்பித்தேன். அம்மாவும் அப்பாவும் எவ்வளவோ சொல்லித் தேற்றி, மருந்து மாத்திரைகளை விழுங்கவைக்க முயன்றனர்.

என் கால்களில் கிட்டத்தட்ட வெண்படலம் நிறைய பரவிவிட்டது. மாத்திரைகளை நான் ஒதுக்கியபோது நோயின் ஆதிக்கம் குறைந்துவிட்டதாக நம்பினேன். வீட்டினுள்ளிருந்து வெளியில் வர அஞ்சினேன். என் நோய், மற்றவர்களின் பார்வைக்கு உடனே தெரியவரும் நோய். `எப்பிடி தைரியமா ரோட்டுல வர்றா பாரு நோவுக்காரி, என்னையும் பாரு என் அழகையும் பாரு’ என்று எல்லோரும் முணுமுணுத்துச் செல்வதுபோன்றே இருக்கும். ``இந்த நோயை நான் உங்கிட்ட இருந்து வாங்கிக்க முடிஞ்சதுன்னா வாங்கிக்குவேனே சாமி!’’ என்றே அம்மா சில சமயங்களில் அழும்.

என்னைப் பெண் பார்க்க, மூன்று வருடம் முன்பாக ஒரே மாதத்தில் மூன்று பேர் குடும்பம் சகிதமாய் வந்தார்கள். முதலில் வந்தவர்கள், `இந்தக் காலத்துல இருக்கிற மருத்துவ வசதிக்கு, இதையெல்லாம் ஆறே மாசத்துல சரிபண்ணிக்கலாம்’ என்றே அழகுறப் பேசிச் சென்றார்கள். பிறகு, பதிலெதுவும் இல்லை என்கிறபோது அப்பா அடுத்த மாப்பிள்ளையை வீட்டுக்கு வரச்செய்தார்.

மாப்பிள்ளை, பார்ப்பதற்கு ஒல்லிப்பிச்சானாகக் காட்சியளித்தார். அவ்வப்போது லொக்கு லொக்கென இருமினார். பேசுகையில் மிக மெதுவாகப் பேசினார். மாப்பிள்ளையின் அம்மா, நகைநட்டு விஷயத்தில் கறாராகப் பேசியது என் அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. மூன்றாவதாக வந்த மாப்பிள்ளை, முதலில் எதுவும் பேசவில்லை. அவரின் அப்பா மட்டுமே வாழ்க்கையில் பட்ட சிரமங்களையும், தரத்தில் உயர்ந்த கதையையும் சொல்லிக்கொண்டிருந்தார்.

பிறகு மாப்பிள்ளை என்னிடம், ``உன்னைக் கட்டிக்க எனக்குச் சம்மதம். ஆறு மாசத்துல உன் உடம்புல இருக்கிற இந்த வெள்ளைக் கருமங்களையெல்லாம் மருந்து சாப்பிட்டு சரிபண்ணிக்கோ. அதுக்குப் பிறகு நமக்குக் கல்யாணம்’’ என்றார்.

அன்றிலிருந்து இன்று வரை எந்த மாப்பிள்ளையும் வாசல்படி ஏறக் கூடாது என அப்பாவிடம் சொல்லிவிட்டேன். ஒரு வருடம் கழித்து அப்பா மீண்டும் மாப்பிள்ளை விஷயத்தை ஆரம்பிக்கையில், ``என்னப்பா, மறுபடியும் அதே விஷயத்தை ஆரம்பிக்கிறீங்க? நான் உங்களுக்கு பாரமா இருக்கேன்னு தோணுதாப்பா? அப்படியே நீங்க சொல்ற மாப்பிள்ளை என்னைக் கட்டிக்கிட்டாலும் எப்படிப்பா என்னை வெளி இடங்களுக்கு ஜோடியா கூட்டிட்டுப் போவாரு? அப்படியெல்லாம் இங்க ஆளுங்க இருக்காங்களாப்பா?’’ என்றேன். இதற்குப் பிறகு அப்பா என்னிடம் திருமண விஷயத்தைப் பேசுவதில்லை.

இன்று எங்கள் பங்காளிப் பெண்ணுக்குத் திருமணம். அவளுக்கு 24 வயது ஆகிறது. ``உனக்கும்தான்’’ என்று அம்மா சொல்கிறாள். அனைவரும் சென்றாகவேண்டிய கல்யாணம். அப்பா, மண்டபத்தில் சில சீர்களில் கலந்தாக வேண்டும். எனக்கு விருப்பம் இல்லாவிடினும் வீட்டில் தனித்து இருக்கவிட மாட்டார்கள். மூன்று மாதம் முன்பாகவும் தவிர்க்க முடியாத திருமணத்துக்கு பெற்றோருடன் செல்லவேண்டியிருந்தது.

உங்களைப் பாத்துட்டே இருக்கேனே! - சிறுகதை

அன்றுதான் எனக்குத் தெரியவந்த விஷயம் ஒன்றிருந்தது. அப்பாவின் பங்காளிக் குடும்பங்கள் அந்த மண்டபத்தில் ஒன்றுகூடி மகிழ்வாய் இருந்தனர். என் படலங்களை மறந்து, என்னோடும் மகிழ்ச்சியுடன் பேசினார்கள். அவர்கள் கொஞ்சிப் பேசுகையிலெல்லாம் எனக்கு வெட்கமாக இருந்தது. நான் அந்த மண்டபத்தில் என் வியாதியை மறந்து மகிழ்வாய் இருந்தேன், சேகரைப் பார்க்கும் வரை.

முன்பாக சேகரை `சேகர்’ என்றே எனக்குத் தெரியாது. அவனாகத்தான் மண்டபத்தில் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துக்கொண்டு அங்கங்கே தட்டுப்பட்டுக்கொண்டே இருந்தான். அவனின் பார்வை, என்னை எதுவோ செய்யத் தொடங்கிற்று. `எதற்காக இவன் என்னை இப்படி குறுகுறுப்பாய்ப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்? இன்று திருமணம் நடப்பது மகேஷ்வரிக்கு. அவள்தான் அன்று என் கைகளைப் பிடித்துக்கொண்டு பிரியாமல் ஒட்டிக்கொண்டு இருந்தவள். இப்படி யெல்லாம் கைகளைப் பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தால், இவளுக்கும் என் வியாதி ஒட்டிக்கொண்டுவிடுமோ?’ என்ற பயம் எனக்குத்தான். அந்தளவுக்கு என் வியாதியை நான் வெறுத்துக்கொண்டி ருந்தேன். இந்த வியாதி, ஒட்டுவாரொட்டி வியாதி அல்ல என்பது உலகத்துக்கே தெரியுமோ என்னவோ... எனக்கு மட்டும் தெரியவில்லை. இதனால்தான் நான் மண்டபத்தில் மகிழ்வாக இருந்தேன்.

மகேஷ்வரி, அவன் பார்வையைச் சிறிது நேரத்தில் புரிந்துகொண்டாள்போலிருந்தது. ``சேகரு உன்னையே பார்த்துட்டு இருக்கான் நிர்மலா’’ என்றாள். எனக்கு சேகரையும் தெரியாது சேவகரையும் தெரியாதே! அவளேதான் தொடர்ந்து அவனது சரித்திரத்தைச் சுருக்கமாகச் சொன்னாள். குறுநகரில் இருசக்கர வாகனப் பழுது நீக்கும் கடை வைத்திருக்கிறானாம். அவனது வீட்டில் அம்மா மட்டும்தானாம். அக்காவை வெளியூரில் கட்டிக்கொடுத்து வருடம் ஒன்றாகிவிட்டதாம். இப்போது அவள் மாசமாக இருப்பதால் இந்தத் திருமணத்துக்கு வரவில்லையாம்.

இவனுக்குப் பெண் தேடிக்கொண்டி ருக்கிறார்கள் என்றாலும், ஏனோ அதைத் தட்டிக்கழித்துக்கொண்டே இருக்கிறானாம். போக, சேகர் அவள் இருக்கும் கிராமத்தில்தான் அம்மாவோடு இருக்கிறானாம். மகேஷ்வரி சொல்லச் சொல்ல அதைத் தடுக்கும் எண்ணம் எதுவும் இல்லாமல் விஷயத்தைக் கேட்டுக்கொண்டேன். எனக்கு அவன் பார்வை பிடித்திருந்தது அப்போது. நான் நிரம்ப நாள்களுக்குப் பிறகாக மகிழ்வாய் இருக்கிறேன். எனக்கு றெக்கைகள் கிடைத்தால் இந்த மண்டபத்தினுள் எல்லோர் முன்பாகவும் பறந்து மகிழ்வேன்.

நானும் மகேஷ்வரியும் செல்லு மிடமெல்லாம் தொடர்ந்துகொண்டே யிருந்தான் சேகர். ``கடை வீதி வரை போய் வரலாமா நிர்மலா? அவன் நம்மகிட்ட ஏதாச்சும் பேசினாலும் பேசுவான். ஒரு டெஸ்ட் ரைடிங் போவோமே!’’ என்று மகேஷ்வரி கேட்கவும், மறுப்பேதும் சொல்லாமல் அவளுடன் கைகோத்தபடி மண்டபத்தை விட்டு வெளியேறினேன்.

நாங்கள், வாகனங்கள் குறைவாகச் செல்லும் சாலையின் ஓரத்தில் `பின்னால் சேகர் வருகிறானா?’ என்று பார்த்தபடி சென்றோம். அவனை எங்கள் பின்னால் காணோம். இருந்தும் நாங்கள் ஒரு மளிகைக்கடை வாசலில் நின்றிருந்தோம். எதிரே சாலையோரத்தில் சேகர் நின்றிருந்தான். `உன்னைத்தான் தொடர்ந்து வருகிறானோ மகேஷ்வரி?’’ என் சந்தேகத்தை அவளிடமே கேட்டேன்.

``இல்ல நிர்மலா, என்னைப் பார்க்கிறாப்ல இருந்தா இப்பவா? எப்பவோ ஊருக்குள்ள வெச்சு பாசத்தைக் கொட்டியிருப்பானே. ஆனாலும் எனக்கு ஆச்சர்யமாத்தான் இருக்கு இன்னிக்கு. சரி வா போவோம்” என்று என் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டு மீண்டும் மண்டபம் நோக்கிச் சென்றாள் மகேஷ்வரி. சேகர் இப்போது கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல், பின்னால் விரைவாக வந்தான். வந்தவன், மகேஷ்வரியைத்தான் பெயர் சொல்லி முதலில் அழைத்தான். மகேஷ்வரி `என்ன?’ என்பதுபோல நின்றாள்.

``புது ஃப்ரெண்டு புடிச்சுட்டே போலிருக்கே... மண்டபத்துக்கு வந்து எனக்கெல்லாம் அறிமுகம் செஞ்சுவைக்க மாட்டியா மகேஷ்வரி?” என்றான். அவன் குரல்கூட எனக்குப் பிடித்திருந்ததைச் சொல்லியே ஆகவேண்டும்.

``எனக்கே இப்பதான் மூணு மணி நேரமா பழக்கம். உறவு, ஜனத்தையெல்லாம் இப்படி ஏதாவது ஒரு விசேஷத்துல பார்த்தாதானே உண்டு” என்று மகேஷ்வரி சொல்லிக்கொண்டிருக்கையில், அவன் என் முகத்தையே வீதி விளக்கு வெளிச்சத்தில் பார்த்துக்கொண்டிருக்க, எனக்கு வெட்கம் கூடிக்கொண்டது.

``என் பேரு சந்திரசேகர். உங்க பேரைத் தெரிஞ்சுக்கலாமா?”

``இவ பேரு தெரிஞ்சு என்ன பண்ணப்போறீங்க நீங்க? உங்களுக்குத்தான் கல்யாணம்னாவே பிடிக்காம, வர்ற ஜாதகத்தையெல்லாம் தட்டிக்கழிச்சுட்டே இருக்கீங்களே!” மகேஷ்வரி இப்படி திடீரெனக் கேட்பாள் என நான் எதிர்பார்க்கவில்லை. ஏதோ என்னை பெண் பார்க்க வந்தவர் போன்றே இவள் பேசுகிறாளே!

``கல்யாணம்னா பிடிக்காதுதான் மகேஷ்வரி. மனசுக்குப் பிடிச்ச மாதிரி பொண்ணு கிடைக்கிற வரைக்கும்தான். இந்தத் தோல் நோய்க்கு ஏதாச்சும் மருந்து சாப்பிட்டுட்டு இருக்கீங்களா நீங்க? இதுக்கு சித்தவைத்தியம்தான் நல்லது!” என்று சேகர் பேசப் பேச, எனக்கு என் நிலைமை அப்போது ஞாபகத்துக்கு வந்துவிட்டது. என்ன கேவலம் இது?

அங்கே நிற்கப் பிடிக்காமல் நான் மகேஷ்வரியின் கைகளை விட்டுவிட்டு விரைவாக மண்டபம் நோக்கி நடக்கத் தொடங்கினேன். எனக்கு உதடுகள் பிதுங்கிக்கொண்டே இருந்தன. அமைதியான இருளில் அமர்ந்து உரக்க அழவேண்டுமாய்த் தோன்றியது. பிறகு நான் மண்டபத்தில் மணமகள் அறைக்குள் சென்று விழுந்துவிட்டேன். மகேஷ்வரி தேடிச் சலித்து, மணமகள் அறைக்குள் வந்துவிட்டாள்.

``என்ன இப்படிப் பண்ணிட்டே நிர்மலா... சேகர் உன்கிட்ட தப்பாவெல்லாம் பேசலியே. அவருக்கு சித்தவைத்தியர் ஒருத்தரைத் தெரியுமாம். இந்த மாதிரி இருக்கிறதை சீக்கிரமா சரிபண்ணிடுவாராம் அவரு. அதைச் சொல்லத்தான் நினைச்சாராம்!” என்றவளுக்கு நான் பதில் எதுவும் சொல்லவில்லை. `அப்ப என் வியாதிக்கு மருந்து சொல்லத்தான் அப்படிப் பின்னால் வந்தானா சேகர்? அவன் மனசுல வேற ஒண்ணுமே என்னைப் பற்றி இல்லையா?’

காலையில் முகூர்த்தம் முடிந்த பிறகு, சாப்பிடாமலேயே அம்மாவிடம் வீட்டின் சாவி கேட்டேன். சேகர், என் பார்வை படும்விதமாக நின்று நின்று சலித்தான். அம்மாவுக்கு மகளைப் பற்றித் தெரியாதா? சாவி கைக்குக் கிடைத்ததும் பேருந்துநிறுத்தம் நோக்கி நடந்தேன். சேகர் பின்னால் வந்தான். ஆனால், என்னிடம் எதுவும் பேச முயலவில்லை. பேருந்து ஏறுகையில் நிறுத்தத்தில் நின்றிருந்தவனைக் கவனித்தேன். அவன் உதடுகள் `ஸாரி’ என முணுமுணுப்பதைக் கேட்டேன்.

இன்று திருமண மண்டபத்துக்குள் நுழைகையில் மனதெங்கும் சேகரே நிறைந்திருந்தான். மண்டபத்துக்கு நாங்கள் மாலையில் நேரமே வந்திருந்தோம். `மாப்பிள்ளை வீட்டார், இரவு 9 மணிபோலத்தான் வந்து சேர்வார்கள்’ என்று பேசிக்கொண்டார்கள். மணமகள் அறையில் மேக்கப் எதுவுமின்றி மகேஷ்வரி உறவுக்காரப் பெண்மணியுடன் அமர்ந்திருந்தாள் பாயில்.

மகிழ்ச்சியோடு வரவேற்றவள் என்னை அருகில் அமர்த்திக்கொண்டாள். இயல்பாய் என் கைகளைப் பிடித்துக்கொண்டாள். என் கழுத்து முழுவதிலும் வெண்படலங்கள் புதிதாய்த் தோன்றியிருப்பதைப் பார்த்தவள், அதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. எனக்கோ சேகரைப் பற்றி ஏதாவது அவள் சொல்வாள் என்றே ஆர்வம் பீறிட அமர்ந்திருந்தேன். அவளோ, இன்னும் ஒரு மணி நேரத்தில் தனக்கு மேக்கப் செய்ய சுகுணா அக்கா வந்துவிடுவாள் என்றே பேசிக்கொண்டிருந்தாள்.

``மணப்பெண் தோழியா நீயே இருக்கியா நிர்மலா?” என்று கேட்டவளுக்கு, எப்படி என் நிலையைச் சொல்வது எனத் தெரியாமல் தவித்தேன். வீடியோ, புகைப்படம் என எல்லாவற்றிலும் நானே இவளுடன் இருப்பேன். பார்க்கும் சொந்தமெல்லாம் என்னைக் காலத்துக்கும் அசிங்கம் பேசுவார்கள். நான் யோசிப்பது தெரிந்து மகேஷ்வரியே ``சரி, பரவாயில்ல விடு!’’ என்றாள். அவள் கைகளை அழுத்தமாய்ப் பற்றிக்கொண்டேன். எங்கேயும் தொடரும் என் நிலை, எனக்கே மன அழுத்தத்தைக் கொண்டுவந்துவிட முயன்றுகொண்டிருந்தது.

``சேகரு உன் போன் நம்பர் கேட்டு பல தடவை என்கிட்ட வந்தான். நான் குடுக்கல நிர்மலா! போன்லயும் உனக்கு அவன் ஏதாச்சும் டார்ச்சர் குடுத்துட்டா என்ன பண்ணுறதுன்னு எனக்குக் கவலை. ஆனா, அவன் நல்லதுதான் உனக்குச் சொல்வான். நீதான் அவனைப் புரிஞ்சுக்க மாட்ரே!” என்று அவள் சொல்லவும் மீண்டும் என்மீதே எனக்கு வெறுப்பு தலைதூக்கி நிற்க, நான் அவளிடமிருந்து எழுந்தேன். ``பார்த்தியா, அவனைப் பற்றிப் பேசினாலே கோச்சுக்கிறே!’’ என்று மகேஷ்வரி சொல்ல, ``அப்படியெல்லாம் இல்ல மகேசு’’ என்று சொல்லிவிட்டு வெளிவந்தேன்.

மண ஹாலில் இருந்த சேரில் அமர்ந்தேன். மணமேடையில் அலங்கார வேலைகள் முடிந்திருந்தன. யோசனையில் ஆழ்ந்துவிட்டால் எனக்குச் சுற்றுப்புறம் மறந்துவிடும். கொஞ்சமாய் தலைவலிப்பதுபோலிருந்தது. மண்டபத்தில் யார் பேசினாலும் கலங்கலாய் எக்கோவாகக் கேட்டுக்கொண்டிருந்தது எனக்கு. குழந்தை ஒன்று அழும் குரலும் கேட்டது. நான் கண்களை மூடிக்கொண்டேன்.

``இந்த அடர்நீலவண்ணச் சேலையில அழகா இருக்கீங்க நிர்மலா!” என, பின்னால் குரல் ஒன்று கேட்டது. அது என் பிரமையாகக்கூட இருக்கலாம். இந்தத் தலைவலிக்கு மருந்துக்கடை நோக்கிச் சென்று மாத்திரை வாங்கி வரவேண்டும். அதுவும் மாலை வெளிச்சம் அகலுவதற்குள்ளாகவே! நெற்றியில் விரல்களை வைத்துத் தேய்த்தேன்.

``எனக்கு உங்களை நிரம்பப் பிடிச்சிருக்குங்க நிர்மலா! மூணு மாசமா உங்க தோழிகிட்ட `ஸாரி சொல்லிடு’ன்னு சொல்லிட்டே இருக்கேன். மகேஷ் உங்ககிட்ட சொன்னாளா?” இந்தக் குரலை எங்கோ கேட்டதுபோலிருக்க, விழிகளைத் திறந்து பின்னால் பார்த்தேன். சேகர்தான் எனக்குப் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தான். எதுவாவது அவன் பேசட்டும் கேட்டுக்கொண்டே இருப்போம் என, எழாமல் மீண்டும் கண்களை மூடி அமர்ந்துகொண்டேன்.

“கோவிச்சுக்கலைன்னா ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கங்க. எனக்கு நாட்டுவைத்தியர் ஒருத்தரைத் தெரியும். அவரை நீங்க நம்பலாம் நிர்மலா” என்றவனுக்கு பதிலாய், `எந்திரிச்சுப் போடா இங்கிருந்து! ஏன்டா என்னை நோகடிக்கிறே? எனக்கு வியாதி இருந்தா இருந்துட்டுப் போச்சாதுடா! அதை ஏன் சரிபண்ணிக்கோன்னு சொல்றே? என்னை அப்பிடியே பிடிக்காதாடா உனக்கு?’ எனக் கத்தலாம்போலிருந்தது எனக்கு.

அங்கே அமர்ந்திருந்தால் இனி தலை சுக்குநூறாக வெடித்துவிடும்போலிருக்கவே, உடனே எழுந்தேன். அம்மா எங்கே இருக்கிறதோ இந்தப் பெரிய மண்டபத்தில்? உடனே `எனக்கு வீட்டின் சாவி வேண்டும். என்னை என் வீட்டில் எந்த பூதமும் தூக்கிச் சென்றுவிடாது. இங்கே மண்டபத்தில் இருந்தால்தான் பூதங்கள் தூக்கிப் போக வாய்ப்புண்டு’ என நினைத்தபடி அவளை நெருங்குகையில், அம்மா வரவேற்பில் சிரித்தபடி வேறொரு பெண்ணுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். `இப்போது போய்க் கேட்பதா வேண்டாமா?’ என்ற குழப்பத்தில் நின்றேன்.

உங்களைப் பாத்துட்டே இருக்கேனே! - சிறுகதை

இங்கே இருந்து சீக்கிரமாய் ஓடிவிடவேண்டும். எனக்கு வெண்படலங்கள் கைகள், கழுத்து, கால்களிலும் பரவிவிட்டன. நான் ஒரு வெள்ளைக்கார யுவதி போன்ற தோற்றத்துக்கு மாறிக்கொண்டிருக்கிறேன். உறவுகளின் சனத்தில் நான் தப்பிப் பிறந்த வெள்ளைக்காரி.

இன்னும் என் மார்பகங்களிலும், வயிற்றிலும், முன் நெற்றி மற்றும் கன்னத்திலும்தான் அந்த வியாதி பரவ நேரமெடுக்கிறது. மண்டபத்தில் இருந்தால், இன்றே அதுவும் பூரணமாகிவிடும். சீக்கிரம் இங்கிருந்து சென்றுவிட வேண்டும் வீட்டுக்கு. என் அறைதான் எனக்குப் பாதுகாப்பு.

அம்மா என்னைப் பார்த்ததும் என் நிலையைப் புரிந்துகொண்டதுபோல் இருந்தாள். ``என்ன... சாவி வேணுமா?’’ என்றதும்தான் எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்துவிட்டது. ``ஏய் இது மண்டபம்டி... நம்ம வீடு இல்லை!” அம்மா என்னைக் கட்டிக்கொண்டு முதுகை வருடிவிட்டாள். எனக்கும் இது மண்டபம் எனத் தெரியவர, இரண்டு நிமிடமே ஆயிற்று.

``இப்பவே மணி 5:30 ஆகிடுச்சுடி. இனி பஸ்ல போயி நம்ம வீட்டுக்குப் போறப்ப இருட்டாகிடும். அங்க போய் தனியா என்னதான் செய்வேடி? அம்மா சொல்றேன்ல சாமி... நீ என் கூடவே இருந்துக்கடா! இல்லைன்னா விடு, நானும் உன்கூட வீட்டுக்கு வர்றேன். நீ போய் மகேஷ்வரிகிட்ட சொல்லிட்டு வந்துடு. நான் போய் அவ அம்மாகிட்ட சொல்லிட்டு வந்துடுறேன்” என்று அம்மா சொல்லவும்தான் எனக்கு புத்தியில் ஏதோ உறைத்தது. நான் போய் மகேஷ்வரியிடம், வீட்டுக்குப் போறேன் என்று சொல்லிவிட முடியுமா? அம்மாதான் உடனே போய் என்ன சொல்லிக் கிளம்பிவிட முடியும்? ஒரு விசேஷத்துக்கு வந்துவிட்டு இதென்ன பயத்தில் ஓட்டம்?

``இல்லம்மா, நான் வீட்டுக்குப் போகலை. நான் இங்கியே இருக்கேன். நீ யார்கிட்டவும் போய் எதுவும் சொல்லிட்டுக் கிளம்ப வேண்டாம்” என்றேன். அம்மா நிம்மதியாய் என்னைக் கட்டிக்கொண்டிருந்த பிடியை விலக்கிக்கொண்டாள். ``நான் வரவேற்புல உன் அப்பாவோடு நிற்கணும். நீ போய் மகேஷ்வரியோடு இருடி’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

நான் மீண்டும் ஹாலுக்குள் நுழைந்தேன். சேர்களில் இப்போது கூட்டம் கணிசமாக நிரம்பியிருந்தது. சேகர், அதே சேரில் தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தான். நான் பழையபடி அவன் அமர்ந்திருந்த சேரின் எதிர் சேரில் சென்று அமர்ந்தேன். இனி அவன் என் வியாதியைப் பற்றியும், அதைத் தீர்க்கும் வழி பற்றியும் எது வேண்டுமானாலும் பேசலாம்... நான் கேட்பேன்.

நான் அமர்ந்த மறுகணமே சேகர் பேசினான். ``ஏங்க நிர்மலா, அழுதீங்களா இப்ப? நீங்க அழகா இருக்கீங்கன்னு சொன்னதுக்கெல்லாமா அழுவீங்க? சரி, விடுங்க அதை. நான் வண்டி பார்க்கிங் கிட்ட நிற்கிறேன். எது பேசினாலும் அழுறதுக்கு நீங்க தயார்னா அங்க வந்து அழுங்க. நீங்க வரலைன்னா நான் அப்படியே மண்டபத்தை விட்டுப் போயிடுறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

`என்ன திமிர்? என்னை அழுமூஞ்சிப்பிள்ளை என நினைத்து விட்டானே! நீ போ நான் வர்றேன். அப்படி நீ என்ன சொல்லி இனி என்னை அழவெக்கிறேன்னு பார்த்துடுறேன். நான் வியாதியோடு வாழ்பவள். எனக்கு இந்த வியாதி பழகிவிட்டது. எனக்கு சேகரைப் பிடித்திருக்கிறது. சேகர் என்னை விரும்புபவனாக, என் வியாதியையும் விரும்புபவனாக இருக்க வேண்டும். `மருந்து தர்றேன் மாத்திரை தர்றேன்’னு என் அம்மா-அப்பா மாதிரி அவன் பேசாமல் இருந்தாலே போதும். எனக்கு எல்லாமும் குணமாகிவிடும்’ என நினைத்தபடி இதோ நானும் எழுந்துவிட்டேன்.

பார்க்கிங் பகுதியில் ஒன்றிரண்டு கார்களும், இருசக்கர வாகனங்களும் நின்றிருந்தன. மேலும், பல வாகனங்கள் மண்டபத்தினுள் வந்தபடியிருந்தன. சேகர் என்னைப் பார்த்து மகிழ்ச்சியடைவது எனக்கே தெரிந்தது. ஏதோ தைரியத்தில் கிளம்பி வந்துவிட்டேன். அவன் அருகே செல்லச் செல்ல மனம் படபடத்தது. இருந்தும் இனி பின்வாங்கிச் செல்ல முடியாது. அது என் காதலை அவனுக்குக் காட்டிக்கொடுத்துவிடும்.

அமைதியாக நின்றிருந்தவன் அருகில் சென்று நின்றேன். அவனாக ஏதாவது பேசுவான் என்று பார்த்தால் என்னையே சாப்பிட்டுவிடுவதுபோல் பார்த்துக்கொண்டே நின்றிருந்தான்.

``சொல்லுங்க, எதுக்கு என்னைக் கூப்பிட்டீங்க? ஓ! அழவெக்கிறதுக்குன்னு சொன்னீங்கதானே!” என்றேன். அவன் முகம் புன்முறுவலுக்கு உள்ளானது. அந்த நொடியில் ஒரு கணம் வாழ்ந்துவிட்ட நிம்மதியை உணர்ந்தேன். எனக்கு இதெல்லாம் புதிதான விஷயம். என் 24-வது வயதில் நான் ஒரு கணம் வாழ்ந்திருக்கிறேன் அல்லது வாழத் தொடங்கியிருக்கிறேன்.

``நான் எது பேசினாலும் தப்பாவேபோயிடுதுங்க நிர்மலா. அதனால, எதுவும் பேசாம உங்களைப் பார்த்துட்டே இருக்கேனே.”

``இந்த அசிங்கத்தையா? அப்புறம் ஏன் நாட்டு வைத்தியர் அது இதுன்னெல்லாம் பேசினீங்க என்கிட்ட!”

``நீங்க கோவிச்சுட்டுப் போகாம இருந்தா ஒண்ணு சொல்லட்டுங்களா நிர்மலா? மூணு மாசத்துக்கு முன்னால நான் பார்த்ததைவிட இப்போ நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!” என்று அவன் சொன்னதுமே, என் கண்களில் நீர் வழியத் தொடங்கிவிட்டது. `இதை முன்னாடியே சொல்லியிருந்தா, நான் ஏன் உன்னைவிட்டு ஓடுறேன்? வைத்தியர், அது இதுன்னு சொல்லி நோகடிச்சியே!’ என்றெண்ணியபடி நான் என் கண்களில் வடிந்த நீரைத் துடைத்துக்கொண்டேன்.

``நீங்க மண்டபத்துக்கு எப்படி வந்தீங்க?” என்றேன். சேகர், இருசக்கர வாகனத்தில் வந்ததாகச் சொன்னான்.

``அப்படின்னா, பைக்குல என்னைக் கூட்டிட்டு எங்காச்சும் போங்க! ரெண்டு மணி நேரம் கழிச்சு, நாம மண்டபத்துக்கு வரலாம்” என்றேன் சேகரிடம்.

மகிழ்வாய் தன் இரு சக்கர வாகனம் நின்றிருக்கும் இடம் நோக்கிச் சென்றவனை, பார்வையால் நான் தின்றேன்.

வா.மு.கோமு