சினிமா
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

படம்: சசிகுமார்

கீரி (எ) கிரிதரன்

உப்பு நெல்லிக்காய்க்கு அடித்து
பல் ஆடியபோது
நாங்கள் ஆறாம் வகுப்பு.
புளியங்காய் பறிக்கையில்
உடைந்த கல்லறைச் சிலுவைக்காக
மைதானத்தில் மண்டியிட்டபோது
நாங்கள் ஏழாம் வகுப்பு.
இட்லிக்குப் பழையசாதம்
இலந்தைப் பழத்திற்குக் குச்சி ஐஸ்
மாற்றிக்கொண்டபோது எட்டாம் வகுப்பு.
ஏ பிரிவிற்கும் பி பிரிவிற்கும்
இடைப்பட்ட சுவரில்
ஓட்டை போட்டதற்காக
அவன் அப்பா வந்து
மன்னிப்பு கேட்டபோது
நாங்கள் ஒன்பதாம் வகுப்பு.
உள்ளங்கை வியர்த்தொழுகும்
ஒவ்வாமையால்
கணிதப்படம் எல்லாம்
நான் வரைந்து தரும்போது பத்தாம் வகுப்பு.
பெட்ரோல் பங்க் முன்னே
அட்டைப்பெட்டி அடுக்கிய மிதிவண்டியில்
அவன் மறித்தபோது
அவனுக்குத் திருமணம் ஆகியிருந்தது.
விடுமுறைக்கு இந்தியா வந்தபோது
தன் வண்டியில் இருந்த பழங்களில்
பேர்பாதி பைகளில் திணித்தபோது
அவனுக்கு மூன்று பிள்ளைகள்.
என்னை அவனைத்தவிர
அவர்கள் வீட்டில் யாருக்கும் தெரியாதே
என்கிற ஒன்றுதான்
கீரி (எ) கிரிதரன் இறந்துவிட்டதாக அறிவிக்கும் ஃபிளக்ஸ் தொங்குவதைப் பார்த்தபிறகும்
என் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு
பட்டுத்துணி எடுக்கப் போகச் செய்கிறது.

 - கண்ணன்

சொல்வனம்

நிழற்பூ

மலரென்று
நினைத்திருக்குமோ
உச்சி வெயிலில்
தன் நிழல் மேல் அமரும்
பட்டாம்பூச்சி.

- அரவிந்தன்

தாய்க் கோழி

ஊருக்குச் செல்லும்போதெல்லாம்
ஒவ்வொரு முறையும்
அம்மா வளர்க்கும்
கோழிகளில் ஒன்று
சாப்பாட்டில் ரசமாய் ஓடும்..!
முதன்முறையாக
அம்மா இல்லாத
வீட்டிற்குச் செல்கிறேன்...
வாசலில் நின்று வரவேற்கிறது
தாய்க்கோழியும் அதன் குஞ்சுகளும்..!

 - பழ.அசோக்குமார்

உழைப்பால்...

8 மணி நேரம் எனப்படுவது
அவன் அகராதியில்
கூடுதலாகச் சில மணித்துளிகளும் அடக்கம்
ஞாயிறும் பள்ளிக்கூடம் என்பது
வரையப்படாத சட்டம்
பகலின் கூலி பற்றாமல் போக
காலத்தை வெறித்துப்பார்த்து
நள்ளிரவுத் துயிலையும் அறுத்து ஊட்டினான்  ரெண்டாவது கோழியும் கூவியிருந்தது
வியர்வையுடன் ரத்தம் வழிந்ததை
கடமையென்று பெருமிதம் பூசினான்
எடை இயந்திரத்தில் தன்னை நிறுத்தபோது
தசைகள் ஆவியானதை அர்ப்பணிப்பென்று நாட்குறிப்பில் குறித்தான்
நன்றாகச் சப்பி உறிஞ்சி
தூக்கியெறியப்பட்ட அவன்
எஞ்சியிருக்கும் வயிற்றை இழுத்துக்கொண்டலைகிறான் காலத்தெருவில்.

- பூர்ணா