Published:Updated:

“இலக்கியத்தின் அரசி கவிதை!” - தமிழச்சி தங்கபாண்டியன்

“இலக்கியத்தின் அரசி கவிதை!” - தமிழச்சி தங்கபாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
“இலக்கியத்தின் அரசி கவிதை!” - தமிழச்சி தங்கபாண்டியன்

நேர்காணல்

“இலக்கியத்தின் அரசி கவிதை!” - தமிழச்சி தங்கபாண்டியன்

நேர்காணல்

Published:Updated:
“இலக்கியத்தின் அரசி கவிதை!” - தமிழச்சி தங்கபாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
“இலக்கியத்தின் அரசி கவிதை!” - தமிழச்சி தங்கபாண்டியன்

மிழ் இலக்கியத்தில், தமிழ் நிலத்தின் வாசனையைப் பரவச்செய்யும் படைப்புகளுக்குச் சொந்தக்காரர், தமிழச்சி தங்கபாண்டியன். நாம் மறந்தபோன தாவரங்களை, பூக்களை, பாத்திரங்களை, உறவுகளை, சொலவடைகளை இவரின் கவிதை, சிறுகதை, கட்டுரைகளில் காணமுடியும். `எஞ்சோட்டுப் பெண்', `வனப்பேச்சி', `மஞ்சணத்தி', `அருகன்' ஆகிய கவிதை நூல்களும் `பாம்படம்', `சொல் தொடும் தூரம்' ஆகிய கட்டுரை நூல்களும் வெளிவந்துள்ளன. சென்னை, ராணி மேரி கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தற்போது, அரசியலில் களம் கண்டுவருபவரிடம் நடத்திய உரையாடல்...

``சுமதி, தமிழச்சி ஆன கதை என்ன?''

``நான் எழுத வந்தபோது `சுமதி' என்ற பெயரில் ஒரு கவிஞர், ஒரு நாவலாசிரியர் உட்பட சிலர் எழுதிக்கொண்டிருந்தனர். அதனால், எனக்கென ஒரு புனைபெயர் வைத்துக்கொள்ள விரும்பினேன். அது என் மண், மொழி, கிராமம் ஆகிய மூன்றையும் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதால், `தமிழச்சி' என்று வைத்துக்கொண்டேன்.’’

“இலக்கியத்தின் அரசி கவிதை!” - தமிழச்சி தங்கபாண்டியன்

``இலக்கிய ஆர்வம் தொற்றிக்கொண்ட சூழல் எது?''

``அதை என் பால்யத்திலிருந்து தொடங்க வேண்டும். மல்லாங்கிணறு என்ற கிராமம்தான் நான் பிறந்து, வளர்ந்த ஊர். அம்மா ராஜாமணி, அப்பா தங்கபாண்டியன் இருவரும் ஆசிரியர்கள். 1949-லிருந்து, அப்பா தி.மு.க உறுப்பினர். அதனால் பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்களின் பேச்சுகளைக் கேட்பது, எனக்கு அன்றாட நிகழ்வுகளில்  ஒன்றாக இருந்தது. இன்னொரு பக்கம், அம்மா பெருமாளை வழிபடும் வைஷ்ணவர். ஆழ்வார் பாசுரம், ஆண்டாள் பாசுரம், மார்கழி பஜனை என பக்தி இலக்கியத் தமிழும் அறிமுகம். ஆண்டாளை, நான் இவ்வளவு நேசிப்பதற்கு அதுவும் ஒரு காரணம். இப்படி இரண்டு முரண்கள் மத்தியில் வளர்ந்தேன். அப்பா, ஒருபோதும் `இதைத்தான் பின்பற்ற வேண்டும்' என்றெல்லாம் வலியுறுத்தமாட்டார். புத்தகங்களைப் படிக்கச் சொல்வார். அம்மா நடனம், பாட்டு கற்றுக்கொடுப்பார். இந்த இரண்டு பாதைகளில், 17, 18 வயதுகளில் நான்தான் முடிவெடுத்து பெரியார் வழியைத் தேர்ந்தெடுத்தேன். அதேசமயம், பக்தி இலக்கியத்தில் கருத்தியலில் மாறுபட்ட கருத்து இருந்தாலும், தமிழுக்குச் செய்த கொடையை மறுக்கக் கூடாது என்று நினைப்பேன். ஆங்கில வழிக்கல்வி கற்றாலும், தமிழ்ச் சங்க இலக்கியங்களைக் காதலோடு படித்தேன். அதை அழகாகக் கற்றுத்தந்த ஆசிரியர்களும் இருந்தனர்.''

``உங்களை வெளிப்படுத்த கவிதையைத் தேர்ந்தெடுக்கக் காரணம்?''

``நாவல், சிறுகதை, கட்டுரை வடிவங்கள்மீது அளப்பரிய மதிப்புகொண்டவள். ஆயினும், அவற்றில் பக்கம் பக்கமாகச் சொல்லப்படுகிற ஒரு விஷயத்தை, மொழிக்கான சுருக்கத்தோடு, ஓர் அழகியலோடு சொல்கிற சவால் கவிதையில்தான் இருக்கிறது. இலக்கியத்தின் அரசி கவிதைதான். `தனக்குத்தானே கட்டிக்கொண்ட கைகளைப் போல...' என்று ஒரு கவிதையில் எழுதியிருப்பேன். இப்படியான வரி திட்டமிட்டு வருவது அல்ல... எழுதும்போது சட்டென்று விழுகிற வரி. இந்தப் புதிர்த்தன்மையும், வெளிப்பாடு தரும் மகிழ்ச்சியும், திருப்தியும், அது திறந்துவிடும் ஒரு வெளியும் எனக்குப் பிடித்திருந்தன. உதாரணமாக, ஒரு கூட்டத்தில் நான் பேசுவதாக அழைப்பிதழில் போட்டிருந்தார்கள். நானும் சென்றிருந்தேன். ஆனால், கூட்டம் முடியும் வரை என்னைப் பேச அழைக்கவே இல்லை. இது ஏமாற்றத்தையும் பெரும் மன அழுத்தத்தையும், வலியையும் தந்தது. வீட்டுக்குவருகிறேன். எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தனர். இதை யாரிடமாவது பகிர்ந்துகொண்டால் ஆறுதலாக இருக்கும் எனத் தவிப்பாக இருந்தது. அந்தப்பொழுதில் வீடு எனக்கு எப்படித் தாய்மடியாக இருந்தது என்பதைப் பற்றி `கணப்பெடுப்பு' என்ற கவிதையை எழுதினேன். ஒரு கணத்தின் சாட்சியாக, வலியின் வெளிப்பாடாக... என அவ்வளவு அந்தரங்கமானது அந்தக் கவிதை. இப்படிக் கவிதைகளே எளிதில்  என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்திக்கொள்ளும் வடிவமாக இருந்திருக்கிறது. அதனால், நான் கவிதையை எனக்கான வடிவமாகத் தேர்ந்தெடுத்தேன்.''

``உங்கள் கவிதைகளில் வீசும் ஊர் வாசம் அவற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலா, அங்கிருக்க முடியவில்லையே என்ற ஏக்கத்திலா?''

``இரண்டும்தான்... என் கவிதைகள் பெரும்பாலும் கிராமம் சார்ந்தே எழுதப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு உண்டு. என்னுடைய பிராந்தியத் தன்மையை, வட்டார அடையாளத்தை அடகுவைத்து உலகளாவிய அங்கீகாரத்தை நாடத் தேவையில்லை என்பது என் நிலைப்பாடு. என் கவிதைகளில் என் ஊரில் என்னை பாதித்த மனிதர்களைப் பற்றிய கதைப் பாடல்களை எழுதியிருந்தேன். அண்ணன் அறிவுமதி, `இவை நாம் இழந்துகொண்டிருக்கும் பண்பாட்டுக்கான முக்கியமான பதிவுகள்; எனவே, ஆவணப்படுத்த வேண்டும். அதற்காக புகைப்படங்களோடு கொண்டுவரலாம்' என்று தொகுப்பாக்கினார். இதை ஆவணப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளோடு எழுதவில்லை. நான் எங்கள் ஊரைவிட்டு முழுமையாக வெளியேறிவிடவில்லை. மனதளவில் அங்கேதான் இருக்கிறேன். உலகிலேயே எனக்கு ரொம்பப் பிடித்த இடம் எதுவென்று கேட்டால், மல்லாங்கிணற்றைத்தான் சொல்வேன்.''

``வட்டார மொழியை உங்கள் படைப்புகளில் பயன்படுத்தும்போது நெருக்கமாக உணர்ந்த இடம் எது?''

``முழுக்க வட்டார மொழிநடையில் `களவாணி மழை' என்ற சிறுகதை எழுதியிருந்தேன். அது `ஆனந்த விகட'னில் வெளிவந்தது. விஷத்தை, `பச்சை நாவி' என்று குறிப்பிட்டிருப்பேன். உடல் முழுக்க வெறுப்பு பரவிய மனநிலையை விஷம் என்பதைவிட, பச்சை நாவி எனும்போது, அதை முழுமையாகச் சொன்னதைப்போல உணர்ந்தேன். இது பேச்சு வழக்கில் உள்ள சொல். ஆனால், எவ்வளவு நேர்த்தியாக வந்து அமர்ந்துவிட்டது என நினைப்பேன்.''

``அதேநேரம் கொஞ்சம் விலகலாக நினைத்தது?''

``என் பால்யம் பற்றி, வட்டார மொழியில் எழுதிய தொடரில் லிங்கம்மாவைப் பற்றி எழுதியிருப்பேன். லிங்கம்மாவுக்குக் கடலைப் பார்க்க வேண்டும் என்பது அவ்வளவு ஆசை. ஆனால், குடும்பச் சூழல் காரணமாகக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாள். அவளைப் பற்றி எழுதியபோது, `அவளறிந்த கடல் அதுதான்' என்று முடித்திருப்பேன். இதை வட்டார வழக்கில் எழுதுவதில் எனக்குப் போதாமை இருந்தது. எனவே, அப்போது பொதுத்தமிழைக் கையாண்டேன்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இலக்கியத்தின் அரசி கவிதை!” - தமிழச்சி தங்கபாண்டியன்

``நாடகங்களில் நடிக்கும் விருப்பம் வந்தது எப்போது? மேடையேறும் வாய்ப்பு எப்போது கிடைத்தது?''

``மேடையேறுவது எட்டாம் வகுப்பு படிக்கும்போதே தொடங்கிவிட்டது.

அரு.ராமநாதனின், `ராஜராஜசோழ'னிலும், `தங்க வங்கம்' என்ற நாடகத்திலும் நடித்தேன். கல்லூரியில், `மீனாட்சி கல்யாணம்', `ஆண்டாள் கல்யாணம்,' `குற்றாலக் குறவஞ்சி' போன்ற நாட்டிய நாடகங்களில் நடித்தேன். சென்னை வந்த பிறகுதான், பிரசன்னா ராமசாமி, மங்கை,

வெளி.ரங்கராஜன் போன்றவர்களின் நாடகங்களில் முழுவீச்சில் நடித்தேன். நாடகம் என்பது பெண்ணின் சுதந்திரவெளி. அந்த மேடையில் ஆண், பெண் பேதமில்லை பார்வையாளர்களிடையே கிடைக்கும் உடனடி பாராட்டு தரும் உற்சாகம் ருசி மிகுந்தது. மேடையைவிடவும், ஒத்திகையில் கிடைக்கும் அனுபவங்கள் அதிகம்.  என்னை மறந்து நானிருக்கும் இடம், நாடக மேடைகள்தான்.''

``ஒரு கதாபாத்திரத்தை எழுத்தில் வடிப்பதற்கும், அதுவாகவே மாறி நடிப்பதற்கும் இடைப்பட்ட வேறுபாடான மனநிலையைப் பற்றி?''

`` `தியேட்டர் லேப்' ஜெயராவின் `மகாத்மா காந்தியின் கடைசி ஐந்து விநாடிகள்' நாடகத்தை, நான் நரேட்டராக அதாவது, கதையின் மையத்தை நோக்கிப் பார்வையாளர்களை அழைத்துச்செல்லும் விதமாக 10 நிமிடங்கள் நடித்துத் தொடங்க வேண்டும். இயக்குநர் வசனத்தைத் தந்து, உடல்மொழியை என் விருப்பத்துக்கு விட்டுவிட்டார். அதற்காக, நான் என்னை மனதளவில் தயார் செய்வது எப்படி என யோசித்தேன். அப்போது எனக்கு நினைவுக்கு வந்தவர், ஹாலிவுட் நடிகர் லாரன்ஸ் ஒலிவயர். ஷேக்ஸ்பியர் நாடகத்தில்  `ஈடிபஸ்' மன்னன் கதாபாத்திரம். ஒரு பெண்ணின்மீது காதல்கொண்ட அரசன் வேடம். அவன் காதல்கொண்ட பெண், தன் தாய் என்ற உண்மை தெரிந்ததும் அந்த வலியை வெளிப்படுத்தும் விதமாக எவ்வாறு நடிப்பது என்பதை அவரால் கற்பனைசெய்ய முடியவில்லை. அதற்காக, பனிப் பிரதேசம் ஒன்றுக்குச் செல்கிறார். அங்கு, குறிப்பிட்ட வகைக் கரடிகளின் தோல்களை எடுப்பார்கள். கரடி இறந்ததும் தோலை எடுப்பது கடினம் என்பதால், சாப்பிட்டதும் கொஞ்சம் கொஞ்சமாகச் சாகும் ரசாயனப் பொருளை உணவோடு வைத்திருப்பார்கள். அதைச் சாப்பிட்டபின், மெள்ள மெள்ளச் சாகும் கரடியின் உடலிலிருந்து தோலைப் பிய்த்தெடுக்கும்போது, அதன் மரண ஓலத்தைக் கேட்டார் லாரன்ஸ். அதையே மேடையில் பிரதிபலித்தார்.

காந்தியின், மனிதத் துன்பத்தை ஏந்திக்கொள்ளும் நேயத்தை, மேடையில் கொண்டுவரச் செய்வதற்கு என்னைத் தயார் செய்துகொள்ள நான் சென்ற இடம், சென்னை, ஜெமினி பாலத்துக்கு அருகில் உள்ள பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி. என் பிறந்தநாளின்போது நான் அங்கு சென்று வருவது வழக்கம். நாடகத்துக்காக, அவர்களோடு ஒருநாள் முழுக்கத் தங்கியிருந்தேன். `எல்லோருமே ஒரே மாதிரியாகத்தானே பிறந்தோம்... இவர்களுக்கு மட்டும் ஏன் இந்தக் குறைபாடு?' எனப் பல கேள்விகள் ஒவ்வொரு நொடியும் எழுந்தன. அவை, காந்தி என்ற மாமனிதரின் முக்கியத்துவத்தை என் மனதுக்குள் இறக்கின. அந்த உணர்வை மேடையில் பகிர்ந்துகொண்டேன். இன்றும் பலர், தங்களின் மனதில் அந்தப் பத்து நிமிடங்கள் நிரந்தரமாகத் தங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.''

 ``கவிதை எழுதுவதைப்போல, திரைப்பாடல் எழுதும்போது சுதந்திரமாக எழுத முடிந்ததா?''

`` `பிசாசு' படத்தில் `போகும் தூரம்...' தான் என்னுடைய முதல் பாடல். அதன் இயக்குநர் மிஷ்கினும் கவிஞர் என்பதால், கவித்துவமாக எழுத முடிந்தது. அதற்கு அடுத்த பாடல்களில் அந்த வடிவத்துக்குள் எழுதுவது சவாலாகத்தான் இருந்தது. கொடுக்கப்படும் மெட்டுக்குள் இயக்குநர் சொல்லும் உணர்வுக்கு நம் வரிகளைக் கொண்டுவருவது எளிதான ஒன்றல்ல. சமீபத்தில் `பாரீஸ் பாரீஸ்' என்ற படத்துக்கு இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறேன். அதில் ஒன்று கல்யாணப் பாடல். நவீன இலக்கியத்தில், திரைப்படப் பாடல் எழுதுவதைச் சற்றுக் குறைத்துப் பார்க்கும் போக்கு இருக்கிறது. நான் அப்படி நினைப்பதில்லை.''

``உங்களை நெகிழவைத்த உள்ளூர்ப் பெண் பற்றி?"

``நிறைய பேர் இருக்கிறார்களே(யோசிக்கிறார்)! என் பெரியம்மா மகள் எங்கள்மீது பாசமாக இருப்பார்; அதே நேரம் ரோஷமாகவும் இருப்பார். அப்பா இறந்தபோது, அவரிடம் என் தம்பி தங்கம் தென்னரசு, `என்ன வேண்டும்?' எனக் கேட்டபோது, அவருக்கு எவ்வளவோ தேவைகள் இருந்தபோதும், `அப்பாவின் ஞாபகமாக ஒரு வேட்டி, சட்டை எடுத்துக்கொடு' என்றார். அது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. அதேபோல, கோமதி அக்கா என்னை வியக்கவைத்தவர். அவரின் தன்னம்பிக்கை அளவிட முடியாதது. கணவரிடம் இருக்கும் ஒட்டுதலைப்போலவே, சுயசார்பும் இருக்கும். அவர் அருகில் இருக்கும்போது சிரிக்காமல் ஒரு நொடியும் இருக்க முடியாது. ஒருநாள், `உனக்கு வெயில் பிடிக்குமா?' எனக் கேட்டதற்கு, `பிடிக்காமப் போறதுக்கு அது என் வீட்டுக்காரரா என்ன?' என்றார். அந்த இடமே சிரிப்பால் அதிர்ந்தது. இன்னொரு முறை, `போகிப் பண்டிகைக்கு மட்டும் ஊருக்கு வந்துட்டு, எல்லாத்தையும் கொளுத்திட்டுப் போற?' என்றதற்கு, `அங்கனக்குள்ள எல்லாத்தையுமா கொளுத்திட முடியும்?' எனச் சிரிப்போடு, கூர்மையாகப் பதிவு செய்வதைப் பார்த்து வியக்காமல் என்ன செய்ய? என்னைக் கிண்டல் செய்வதென்றால், எங்கள் ஊர்ப் பெண்களுக்குக் கொண்டாட்டம்தான். ஒரு பாட்டி, என்னைப் பார்த்ததும், `எறும்பை எண்றவ வந்துட்டா?' என்று சொல்லும்.  அப்பா இறந்தபோது பாலத்தில் தனியாக உட்கார்ந்திருந்தபோது, கத்திரிக்காய் விற்றுக்கொண்டுவந்த அக்கா கூடையைக் கீழே இறக்கி வைத்துவிட்டு, `மனசை விட்டுடாத ஆத்தா' என்று மட்டும் சொல்லிட்டு, அருகில் சிறிதுநேரம் உட்கார்ந்துவிட்டு எழுந்து போனார். அது பெரும் ஆறுதலைக் கொடுத்தது.  இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள்.''

``நிறைய பயணங்கள் செல்கிறீர்கள்... உங்களால் மறக்க முடியாத பயணம் எது?"

``லண்டன் சென்றது. அங்கு புகழ்பெற்ற எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களின் கல்லறை வாசகங்கள் அடங்கிய அருங்காட்சியகம் சென்றபோது பிரமிப்பாக இருந்தது. நான்கு நாள்கள் தினமும் அங்கு சென்று, நோட்டில் அனைத்தையும் எழுதினேன். அடுத்ததாக, ஷேக்ஸ்பியரின் வீட்டுக்குச் சென்றேன். அவர் பிறந்த அறையில் தொட்டில், கட்டில் என அனைத்தையும் வைத்திருக்கிறார்கள். நான் அந்தத் தரைக்கு முத்தம் கொடுத்தேன். அங்கு பணிபுரிபவருக்கு அதைப் பார்த்ததும் பெரிய சந்தோஷம்.''

``காவல்துறையில் பணியாற்றிய கணவர், உங்கள் பிள்ளைகள் பற்றிச் சொல்லுங்கள்?”

``நான் அப்பா பொண்ணு. அதனால், அவர் சொன்னவரைத் திருமணம் செய்துகொண்டேன். என் கணவர் வெள்ளந்தியான கிராமத்து மனிதர். வீட்டின் வெளியே ஷூவோடு அலுவலக நினைப்பையும் கழற்றிவிட்டுத்தான் வருவார். அவருக்கு வெளியே இருக்கும் பிம்பத்தை ஒருபோதும் வீட்டுக்குள் காட்ட மாட்டார். பாடல்கள் கேட்பார்; நிறைய பேசுவார். முரட்டுக் குரல்... ஆனால், மென்மனது. அவர் காவல் துறையில் பரபரப்பாக இருந்தபோது, வீட்டின் பொறுப்புகளைப் பெரும்பாலும் நான்தான் பார்த்துக்கொள்வேன். தற்போது அரசியலில் நான் ஈடுபடுவதால், வீட்டுப் பொறுப்புகளை அவர் அதிகம் எடுத்துக்கொள்கிறார். இந்தப் புரிந்துணர்வு இருப்பதால் மகிழ்ச்சியாகச் செல்கிறது வாழ்க்கை.

எங்களுடன் இரண்டு மகள்களும் வீட்டிலிருக்கும் பொழுதுகளில், வேறு எந்த நினைவும் இல்லாமல் வீடு முழுக்கச் சிரிப்பாக இருக்கும். எனக்குத் தொழில்நுட்ப விஷயங்கள் தெரியாது. `செல்போன் சார்ஜர் ஒயர் பெரிதாக இருந்தால், சார்ஜ் ஆக ரொம்ப நேரமாகும்; ஒயர் சிறிதாக இருந்தால், சீக்கிரம் சார்ஜாகிவிடும்' என்று மகள்கள் சொன்னதை ரொம்ப நாள் நம்பிக்கொண்டிருந்தேன் (சிரிக்கிறார்). எங்களின் 25-வது ஆண்டுத் திருமண நாளின்போது, நான் வெளியூரில் இருந்தேன். மூத்த மகள் சரயூ வெளிநாட்டில் இருந்தாள். திடீரென்று போன் செய்து சென்னைக்கு வரச் சொன்னாள். அடித்துப்பிடித்து வந்தால், அவளும் வந்திருந்து எங்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து, தாஜ்மகாலைப் பார்க்கக் கூட்டிச் சென்றாள். என்றோ ஒருநாள், `இதுவரை தாஜ்மகாலைப் பார்த்ததே இல்லை' என்று சொல்லியிருப்பேன்போல. அதை நினைவில் வைத்திருந்து, இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தாள். அந்த நாளை இப்போது நினைத்தாலும் சந்தோஷமாக இருக்கிறது!''

- விஷ்ணுபுரம் சரவணன், படம்: க.பாலாஜி