வெங்கடேசனைப் பார்க்க, ஏகாவின் பையன் ஆறுமுகம் வந்திருந்தான். கையில் கொஞ்சம் பணமிருப்பதாகச் சொல்லி, `முகப்பேரில் இந்த பட்ஜெட்டில் வீடு வாங்க முடியுமா' என விசாரித்தான். அவனுடைய அப்பா சேர்த்தது, இவன் சேர்த்தது எல்லாமாக ஒரு பத்து ரூபாய் இருந்தது. மீதி லோன் போட்டுக்கொள்ளலாம் என்பது திட்டம். வெங்கடேசன் வீட்டு புரோக்கர் இல்லை என்றாலும் நிலவரம் ஓரளவுக்குத் தெரியும்.

``ஒரு வாரத்தில் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்'' என்று அனுப்பிவைத்தான். பைக்கில் அவனுக்கும் அவன் மனைவிக்கும் இடையில் இரண்டு குழந்தைகள். ஒரு டாக்ஸி புக் பண்ணிக்கொண்டு வராமல் இப்படிப் பயணம் செய்கிறானே என்ற அச்சம் வெங்கடேசனுக்கு அவன் தெருமுனையைத் திரும்புகிற வரை இருந்தது. ஆனாலும் அப்பனைவிடப் பரவாயில்லை எனத் தேற்றிக்கொண்டான். ஏகா எப்படியெல்லாம் சேர்த்தான் என்பது இன்றைக்கு எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருக்கும். ஐம்பது ஆண்டுக்கு முன்னால் 30 ரூபாய் சம்பளத்தில் இருந்தவன், ஒரு ஒரு பைசாவாகச் சேர்த்தது அது.

சென்னையில் சரஸ்வதி என்ற பெயரில் ஒரு தியேட்டர் இருந்தது எத்தனை பேருக்கு நினைவிருக்கும் எனத் தெரியவில்லை. அந்தத் தியேட்டரில் `குலேபகாவலி' பார்க்க வேண்டும் என்பது ஏகாம்பரத்தின் நீண்டநாள் கனவு... ஆசை. பெஞ்ச் டிக்கெட் முப்பது பைசா. சேர் 50 பைசா, முதல் வகுப்பு 65 பைசா என மூன்றே பிரிவினைதான் அந்த தியேட்டரில். அதில் மாடி கிடையாது. 30 பைசா டிக்கெட்டுக்குமேல் ஆசைப்பட்டதில்லை. ஆனால், அதுவே பெரிய பட்ஜெட்டாக இருந்தது. `அடுத்த மாதம் சம்பளம் வாங்கியதும் முதல் வேலையாக குலேபகாவலி பார்க்க வேண்டும். ராமச்சந்திரன் புலியோடு சண்டைபோடும் காட்சியை மனதார ரசிக்க வேண்டும்' என்பது ஏகாம்பரத்தின் ஜென்ம சாபல்யம். கையில் காசு இருக்கும்போதோ `திருநீலகண்டர்', `ராஜமுக்தி' இப்படி எதையாவது போட்டுவிடுகிறார்கள்... காசு இல்லாதபோது `குலேபகாவலி'... சம்பளத்தை உண்டியலில் போட்டுவிட்டால் அதன்பிறகு அதைத் தொடமாட்டான். இதுவரை நான்கு மாம்பழ உண்டியல்கள் சம்பளத்தால் நிரம்பிவிட்டன. அது, கல்யாணச் செலவுக்கு.

`கல்யாணம் பண்ணிட்டு ஜோடியா போய் பயாஸ்கோப்பு பாருடா' என்றுகூடக் குடித்தன வாசலில் கிண்டல் செய்துவிட்டார்கள். அது கிண்டல் இல்லை, நிஜம் என்பது மீஞ்சூரில் இருந்து அத்தை வந்துவிட்டுப் போனதும்தான் தெரிந்தது. ஏகாம்பரம் இருக்கிற பத்துக்கு எட்டு அறையில் தன் மருமகப்பிள்ளை கையிருப்பாக, சிக்கனமாகக் குடியிருக்கிற அழகைப் பார்த்துப் பூரித்துப்போய், புஷ்பவள்ளிக்கு ஏற்ற புருஷன்காரன் இவன்தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள். நான்கு உண்டி நிறைய சம்பளப் பணத்தைப் போட்டு வைத்திருக்கிற அழகை, அதிசயத்தைச் சொல்லியே பெண்ணைச் சம்மதிக்க வைத்துவிட்டாள். குட்டையாக, கட்டையாக இருந்தாலும் சிவப்பாக இருக்கிறான் என்ற காரணத்துக்காகத் தன்னை `ராமச்சந்திரன் கலரு' என அவனே சொல்லிக்கொள்வான்.

ஏகாம்பரத்தின் `குலேபகாவலி' ஆசையும் புஷ்பவள்ளியின் வரவும் ஒரு புள்ளியில் இணைந்தன. குடித்தனக்காரர்களின் கிண்டல் பலித்தது. ஆனால், அதற்கும் வந்தது ஒரு வேட்டு. முதல் முறையாகப் பெண்டாட்டியோடு படத்துக்குப் போகிறவன் முதல்வகுப்பில் படம் பார்க்க வேண்டும் எனச் சொல்லியிருந்தார்கள். அதாவது 65 பைசா டிக்கெட். அதுவும் இரண்டு பேருக்குத் தனித்தனியாக 65 பைசா என்றபோது அவனுக்குத் தலையே சுற்றியது.

``நாம பெஞ்ச்லயே உக்காந்து படம் பார்க்கலாமா?'' எனக் கேட்டான். மீஞ்சூரில் தரை டிக்கெட், பெஞ்ச் இரண்டு வகையறாதான். பெஞ்சில் அமர்ந்து பார்க்கலாமா எனக் கேட்டதில் புஷ்பவள்ளிக்குப் புல்லரித்துப்போனது. நாணத்தால் முகம் சிவந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அவள் இதுவரை பெஞ்சில் உட்கார்ந்து படம் பார்த்ததே இல்லை. எண்கள் ஓரளவுக்குப் பரிச்சயம். எழுத்து விஷயத்தில் பூஜ்ஜியம். கணவன் சொல்லே மந்திரம்.

மனைவியின் ஏகோபித்த ஆசையுடன் பெஞ்ச் டிக்கெட் எடுக்க முடிவெடுத்தான். பெஞ்ச் டிக்கெட்டில் ஒரு வில்லங்கமான வழக்கம் இருந்தது. பெண்கள், பெண்களுக்கான க்யூவிலும் ஆண்கள் ஆண்களுக்கான க்யூவிலும் நின்று டிக்கெட் எடுத்து தியேட்டருக்குள் வரவேண்டும். பெஞ்ச் டிக்கெட் வரை தியேட்டரை இரண்டாக வகிடெடுத்ததுபோலப் பிரித்து வைத்திருப்பார்கள். பெண்களுக்கு இடப்பக்கம் இருக்கை. ஆண்களுக்கு வலப்பக்கம் இருக்கை. ஆணும் பெண்ணும் சேர்ந்து அமர்வதற்குச் சட்டம் இல்லை. அவசரத்தில் இதை யோசிக்கவில்லையே என்றிருந்தது. புஷ்பவள்ளிக்கு ஏகாம்பரத்தினும் எம்.ஜி.ராமச்சந்திரனைச் சென்னையில் வந்து பார்க்கிற பரவசம். பெண்கள் பகுதியில் புகுந்து ஃபேன் இருக்கிற இடமாகப் பார்த்து அமர்ந்துகொண்டாள். ஏகாம்பரம் ஒரு சின்னக் கணக்குப் போட்டிருந்தான். இந்தப் பால் பிரிவினைக்கு இடையே சம்பிரதாயத்துக்கு ஓர் அட்டையை வைத்திருந்தார்கள். பெண்கள் பிரிவில் அவளும் ஆண்கள் பிரிவில் இவனும் அந்த அட்டையை ஒட்டி இடம்பிடித்துவிட்டால் இருவரும் சேர்ந்து அமர்ந்து படம் பார்த்தமாதிரி ஆகிவிடும் என நினைத்தான். அவளை அழைத்துத் தன் பக்கம் உட்காரவைத்தான். அந்த சமயோசித புத்தி அவளுக்குப் பிடித்துப்போய் கண்கள், வாய் எல்லாம் விரிய ஆச்சர்யப்பட்டாள். 30 பைசா டிக்கெட்டின் கடைசி வரிசையில் இருவரும் அமர்ந்தனர்.

இப்படியாக அவர்கள் சுமார் பதினைந்து ஆண்டுகள் ஒன்றாகப் படம் பார்த்தனர். டிக்கெட் விலை அப்போது ஒரு ரூபாய் ஆகிவிட்டது. முதல் வகுப்பிலோ டிக்கெட்டை ஒரே அடியாக இரண்டு ரூபாய் ஆக்கினார்கள். ஆனால், 65 பைசாவாக இருந்தபோது 35 பைசா மிச்சமானது. இப்போதோ ஒரு ரூபாய் மிச்சம். அவனுடைய பொருளாதார மூளை ஒவ்வொரு படம் பார்க்கும்போதும் ஒரு ரூபாய் மிச்சமாவதை உணர்த்தியது. அதாவது மாதத்துக்கு ஒருமுறை இப்படியாக ஒரு ரூபாய் சேமித்தான். பையனுக்கு 14 வயசு வரை அரை டிக்கெட்டுதான். இன்னும் ஐந்து வயசு ஆகவில்லை எனச் சாதித்து மடியிலேயே உட்கார வைத்துக்கொள்வான்.

ஒரே மகன், ஆறுமுகம். அதற்குமேல் வேண்டாம் என இருவருமே முடிவெடுத்தார்கள். அவர்களின் தாம்பத்யச் சிக்கன நடவடிக்கை அது. அந்தப் பத்துக்கு எட்டு அறை மூன்று பேருக்கும் போதுமானதாக இருப்பதாக அவர்கள் தினமும் சொல்லிக் கொள்வார்கள். விருந்தினர்கள் யாரும் வருவதில்லை. வந்தால் ஐந்து நிமிடங்களுக்குமேல் தங்கி மூச்சு முட்டிச் சாக விரும்புவது இல்லை. அந்தச் சின்ன அறைக்குள்ளாகவே சுவரில் சாமி படங்கள் மாட்டி அதற்கு ஸ்கிரீன் போட்டு மூடிவைத்திருந்தார்கள். விசேஷ நாள்களில் ஸ்கிரீன் விலகும். தீபாவளிக்கு 100 கிராம் ஆட்டிறைச்சி வாங்குவான். எலும்பு, ஈரல் எனக் கொசுறு கேட்டு இன்னொரு 100 கிராம் தேற்றிவிடுவான்.

நெற்றி நிறைய பட்டை போடுவான். எந்தக் கோயிக்குப் போனாலும் கை நிறைய விபூதி வாங்கி அதைத் தயாராகக் கொண்டுவந்த பேப்பரில் பத்திரப்படுத்திச் சேகரிப்பான். நீறில்லா நெற்றி பாழ் என அவனை யாரும் இகழ்ந்துவிடாதபடிக்கு எப்போதும் திருநீறு வீட்டில் இருக்கும்படியாக விபூதிக்காக ஒரு காலி ஹார்லிக்ஸ் பாட்டில் (அது மகன் பிறந்தபோது கம்பெனி ஊழியர்கள் சார்பில் வழங்கப்பட்டது) நிறைய விபூதி உஷார் செய்துவைத்திருந்தான்.

கல்யாண வீடுகளுக்கு மூவருமாகச் செல்வார்கள். குறைந்தது இரண்டு வேளை சாப்பாடாவது கல்யாணத்தில் முடித்துவிடுவார்கள். இரண்டு ரூபாயிலிருந்து ஐந்து ரூபாய் வரை மொய் எழுதுவது வழக்கம். அது சாப்பாட்டை உத்தேசித்துத்தான்... மனுஷாளின் பழக்கமோ போக்குவரத்தோ அதில் சம்பந்தப்படாது.

இந்த மாதிரியான காலகட்டத்தில் ஒருநாள் வெங்கடேசனை வழியில் பார்த்தான் ஏகாம்பரம். ஏகாம்பரத்தின் மாமன் மகன். நனைந்த கோழிபோல பஸ் ஸ்டாண்டில் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு நின்றிருந்தான் வெங்கடேசன். “இன்னா கண்ணு இங்க நின்னுன்கிற?'' என விசாரித்தான்.

“நம்ம மீசார் பேட்டை முத்து இல்ல... அவங்க வீட்ல வாத்துக்கறி வாங்கியாறச் சொல்லியிருந்தாங்க. ஊருக்குப் போனா வாங்கியாறேன்னு சொல்லிவெச்சிருந்தேன்.''

``கையில இன்னா வாத்துக்கறியா?''

``ஆமா.. இப்ப இன்னாடான்னா. இன்னிக்கி கிர்த்திகையாச்சே... நாங்க கவுச்சி சாப்பிட மாட்டம்னு சொல்லிட்டாங்க. என் பிரெண்டு அபுபக்கர் வருவான்... வந்தா அவன்கிட்ட கொடுத்துல்லாம்னு நிக்கறன்.''

``காசுக்கா?''

``காசாவது கீசாவது... காலையிலேருந்து இத யார் தலையிலயாவது கட்டில்லாம்னு பாத்தா... கிர்த்திக... அமாசன்னு பஜனை பாட்றாங்கோ.''

``சும்மாதான் குடுக்கப்போறன்னா... என் கிட்ட குடுப்பா'' என்று கேட்டபடியே கிட்டத்தட்ட பிடுங்கிக்கொண்டான்.

``நீங்க கிர்த்திக...'' அவனுடைய விபூதிப் பட்டையைப் பார்த்தபடி கேட்டான் வெங்கடேசன்.

``நம்ம வூட்ல சாமிக்கி ஒரு ஸ்கிரீனு. அத மூடிட்டா சாமி வேற, நான் வேற. இல்லாட்டி அத்தனூண்டு வூட்ல ஒரு புள்ளையப் பெத்திருக்க முடியுமா?'' கண் சிமிட்டி வேகமாக வீட்டுக்குக் கிளம்பினான். சென்னையில் ஒரு வீடு வாங்க வேண்டும் என ஏகாவுக்கு ஒரு லட்சியம் இருந்தது. அதையாவது கொஞ்சம் காலை நீட்டிப் படுப்பதுபோல வாங்குவானா எனத் தெரியவில்லை.

அன்று, ஏகாவின் அடுப்பு அந்த ஆண்டு இரண்டாம் முறையாகக் கறிசுமந்தது. சிக்கனம் என்றால் மாட்டுத் தோலில் வடிகட்டிய சிக்கனம். துணி எடுப்பது, மளிகை சாமான் வாங்குவது எல்லாவற்றிலும் ஒரு கணக்கு. அதைத் தாண்ட மாட்டான். வீட்டில் ஒரே ஒரு 15 வாட்ஸ் பல்பு மட்டும்தான். ஃபேன் காத்து உடம்புக்குச் சூடு என அவனே ஒரு மருத்துவக் கருத்து வைத்திருந்தான்.

சரஸ்வதி தியேட்டரில் கக்கூஸுக்குப் பக்கத்திலேயே கேன்டீன். இன்டர்வெல் விட்டால் அனல் பறக்கச் சிறுநீர் கழித்துவிட்டு, நேராக வந்து அதே விரலில் சமோசா சூடாக இருக்கிறதா என்று அமுக்கிப் பார்ப்பார்கள். கேன்டீன் கவுஸ் பாய் சமோசாவுக்குத் தனியாக உப்புப்போட வேண்டிய அவசியம் இருக்காது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஏகா, சமோசா எதுவும் நாளதுவரை வாங்கியது இல்லை. சமோசாவின் விலையை விசாரிக்கிற சாக்கில் சமோசாத் தூள்களை எடுத்து உரிமையாக வாயில் போட்டுக்கொள்வான்.

சேமித்த பணத்தை கிசான் விகாஸ் பத்திரத்தில் ஐந்தே ஆண்டுகளில் இரட்டிப்பாக்கினான். இரட்டிப்பை மீண்டும் இரட்டிப்பாக்கினான்.சீட்டு கட்டினான்... சீட்டுப் பிடித்தான். வட்டிக்குப் பணம் கொடுத்தான். எல்லாம் ஐந்து வட்டி. அப்போதே அவனிடம் இரண்டு லட்ச ரூபாய் ரொக்கம் இருந்ததாகப் பேசிக்கொண்டார்கள். அப்படிச் சேர்த்த பணம்.

ஒருநாள் இரவு வந்து படுத்த ஏகா தூக்கத்திலிருந்து எழாமலேயே மாரடைப்பால் இறந்துபோனான். அப்போது அவனுக்கு 51. ``கம்பெனியிலயே ரெண்டு தபா மய்க்கமாயிட்டான். `ப்ரஸரு இருக்கு.. டெஸ்ட் எடுத்துப் பாரு'ன்னு கம்பெனி டாக்டரு சொன்னாரு'' கம்பெனியிலிருந்து வந்திருந்த அவனுடைய சகாக்கள் உச் கொட்டி வருத்தப்பட்டார்கள். வீட்டில் அவன் கிடத்தப்பட்டிருந்த பாய் அவனுக்கே சரியாக இருந்தது. பாக்கெட்டில் மகாலட்சுமி டாக்கீஸ் டிக்கெட் இருந்தது. 2.90 பாக்ஸ் டிக்கெட் அது. அவன் கனவிலும் கற்பனை செய்யாத டிக்கெட். அது எப்படி அவன் பாக்கெட்டுக்குள் வந்தது என யாருக்கும் தெரியவில்லை. புஷ்பவள்ளிக்கும் தெரியவில்லை. மரணத்தைவிட அதிகமான அதிர்ச்சியாக இருந்தது எனச் சொல்வது ஒரு துயரச் செய்தியின் மதிப்பைக் குறைப்பதாக இருக்கலாம். ஒப்பாரி வைத்து ஓலமிட்ட நிலையிலும் புஷ்பவள்ளிக்கு அந்த ரோஸ் நிற 2.90 டிக்கெட் ஓயாமல் நினைவைக் கிளர்வதாக இருந்தது.

சாவுக்கு வந்திருந்த வெங்கடேசனைத் தனியாக அழைத்துச் சென்றான் ஆறுமுகம். டீக்கடையில் வெங்கடேசன் இரண்டு டீ என இரண்டு ரூபாயை எடுத்து நீட்டியபோது, ஆறுமுகம் தடுத்துவிட்டு அவனே காசு கொடுத்தான்.

``கொஞ்ச நாளாவே எனக்கும் அப்பாவுக்கும் சண்டை மாமா.'' எதற்காக இதை இப்போது சொல்கிறான் என அவதானிக்க முயன்றேன். அவனே தொடர்ந்தான். இவ்ளோ பணம் வெச்சுக்கிட்டு எதுக்கு இந்த வூட்ல இருக்கணும்னுதான்.''

``அவரு சிக்கனமாவே இருந்து பழகிட்டாரு.''

``அன்னைக்கு நீங்க வாத்துக்கறி கொண்டாந்தபோதே எனக்கு மனசு வுட்டுப் போச்சு. ஊர்ல இருந்து எவ்ளோ கஷ்டப்பட்டுக் கறி எடுத்தாந்தீங்க. நீங்க காசு கொடுத்துதானே வாங்கியாந்திருப்பீங்க? அதைச் சுலுவா வாங்கிச் சாப்பிட்டுட்டாரு. நான் அதைத் தொடவே இல்ல.''

``அதனால ஒண்ணுமில்லப்பா. பழைய கதை. அதையெல்லாம் கிளறாதே...''

``வீட்ல பீரோவுல ஒரு ட்ரங்க் பெட்டி நிறைய ரூபாத் தாளா சேர்த்துவெச்சிருந்தாரு. என்ன கருமத்துக்குன்னே தெரியலை... அதான் நான் எடுத்துச் செலவு பண்ண ஆரம்பிச்சேன். தினம் ஒரு பத்து ரூபா செலவுக்கு எடுக்க ஆரம்பிச்சேன்.'' `அப்பனுக்குப் பிள்ளை தப்பாமப் பொறந்திருக்கு. பெட்டி நிறைய பணம் இருந்தாலும் தினம் பத்து ரூபாய் எடுப்பானாம்' என வெங்கடேசன் நினைத்தான்.

வெங்கடேசனுக்கு இதற்கு என்ன தீர்ப்புச் சொல்வதென்று தெரியவில்லை. அமைதியாக இருந்துவிட்டான். அதன்பிறகு பத்து வருஷம் கழித்து ஆறுமுகத்தை இப்போதுதான் பார்க்கிறான். `அம்மாவுக்கு உடம்புக்கு முடியவில்லை. அவர் இருக்கும்போதே வீடு வாங்கி அம்மா பெயரை வீட்டுக்கு வைக்க வேண்டும்' எனத் தனக்குள் இருக்கும் சபதத்தைச் சொன்னான். சரஸ்வதி, மகாலட்சுமி தியேட்டர்களின் படம் பார்த்த கதையை எல்லாம் சொன்னான். அப்பாவின் நினைவுகளில் மூழ்கியவன் திடீரென ஒரு கட்டத்தில் உடைந்து பேசினான்.

``அப்பாவை நான்தான் கொன்னுட்டேன்'' எனக் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தான்.

``என்னடா சொல்றே?'' வெங்கடேசன் நிஜமாகவே பயந்துபோனான்.

``மகாலட்சுமில பாக்ஸ் படம் பார்த்துட்டு, நான் படிக்கெட்ல இறங்கி வரும்போது அப்பா பாத்துட்டாரு. டிக்கெட்ட காட்டுன்னு கேட்டாரு. கொடுத்தேன். அதைக் கொஞ்ச நேரம் பாத்துட்டு பாக்கெட்ல வெச்சுக்கிட்டாரு. அப்புறம் வேகமா போய்ட்டாரு.''

2.90 என ஒரு டிக்கெட் இருப்பதை அவர் மனதாலும் ஏற்றுக்கொள்ளாதவர்தான். ஆறுமுகம் சொல்வது ஒருவேளை உண்மையாக இருக்கலாம். பேச்சு வீடு வாங்குவது சம்பந்தமாகத் திரும்பியதில் நிலைமை சகஜமானது. வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி வீட்டைக் கட்டும் சபதம். அவன் வாங்கி வந்து தந்துவிட்டுப் போன சாத்துக்குடி நான்கு டேபிளின் மீது கிடந்தன.

தமிழ்மகன், ஓவியம்: கோ.ராமமூத்தி