Published:Updated:

``ஈழத்தை, ஈழ மக்களை, மொழியை கொச்சைப்படுத்தி வந்த படைப்புகள்தான் அதிகம்!’’ - அகர முதல்வன்

யுத்தம் அதன் விதிகளுக்குள்தான் மனிதனை வைத்துக்கொள்ளும். மனிதனின் விதிகளுக்குள் யுத்தம் என்றைக்கும் அடங்காது. நமக்கு யுத்தம் என்பது மனிதர்களைக் கொல்லும் என்பது தெரியும். ஆனால், சாவை விரும்பிச் செல்பவர்களை யுத்தம் கொல்லாமலும் விட்டுவிடும் என்பது நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

``ஈழத்தை, ஈழ மக்களை, மொழியை கொச்சைப்படுத்தி வந்த படைப்புகள்தான் அதிகம்!’’ - அகர முதல்வன்
``ஈழத்தை, ஈழ மக்களை, மொழியை கொச்சைப்படுத்தி வந்த படைப்புகள்தான் அதிகம்!’’ - அகர முதல்வன்

``தமிழ் ஈழப் படைப்பின் பிரதிநிதி, நானும் என்னைப் போன்ற ஈழப் படைப்பாளர்களும்தான். ஆனால், நாங்கள்தான் ஒட்டுமொத்த ஈழப்படைப்புகளுக்கும் ஏகப் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ள முடியாது. அப்படிச் சொன்னால், எங்கள் மீது விமர்சனங்களை வீசலாம்.” 

இதுவரை தன்னுடைய கதைகள், கவிதைகள், குறுநாவல்கள் என எழுத்துகளின் வழியே ஈழநிலம் பற்றி எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர் அகரமுதல்வன், முதல்முறையாக குறும்படம் வழியே அந்த நிலத்தைச் சொல்ல முயன்றுள்ளார். அதுபற்றிய அவருடனான உரையாடலில் அவரிடமிருந்து வந்த வார்த்தைகள்தான் மேற்குறிப்பிட்டவை. தொடர்ந்து அவரிடம் அந்தக் குறும்படத்தைப் பற்றி உரையாடினேன். 

``யுத்தம், அதன் விதிகளுக்குள்தான் மனிதனை வைத்துக்கொள்ளும். மனிதனின் விதிகளுக்குள் யுத்தம் என்றைக்கும் அடங்காது. யுத்தம், மனிதர்களைக் கொல்லும் என்பது நமக்குத் தெரியும். ஆனால், சாவை விரும்பிச் செல்பவர்களை யுத்தம் கொல்லாமலும் விட்டுவிடும் என்பது நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதை மையமிட்டதுதான் `எல்.பங்கர்' என்ற இந்தக் குறும்படம்.

பங்கர்கள் என்பது, பதுங்குக்குழிகள். நீள்சதுர வடிவம், மூடிய வடிவம், திறந்து இருப்பது எனப் பல வடிவிலான பங்கர்கள் இருக்கின்றன. அப்படி ஒருவகை பங்கர்தான் இந்த `எல் பங்கர்'. அதில் மாட்டிக்கொண்ட ஒரு பெண்ணின் நிலையைத்தான் இந்தக் குறும்படம் சொல்கிறது. ஈழத்தமிழராக இந்தக் கதையைக் கேட்டால் மிகச் சாதாரணமானதாக இருக்கும். ஆனால், வெளியிலிருந்து கேட்பவரிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

எழுத்தின் வழியாக மக்களைச் சென்றடைவது, தமிழில் மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கிறது. அதனால் மாறிவரும் இந்தத் தொழில்நுட்பக் காலகட்டத்துக்கேற்ப என்னுடைய கதையை காட்சி ஊடகமாகப் பதிவுசெய்யலாம் எனத் தோன்றியது. ஏனெனில், காட்சி ஊடகத்தின் வழியாக ஒன்றைப் பதிவுசெய்யும்போது அது வேறொரு பரிமாணத்தில் அதிக எண்ணிக்கையில் போய்ச்சேரும். அதனால்தான் இந்தப் புதிய முயற்சியில் இறங்கியுள்ளேன். அதுமட்டுமல்ல, கலையின் வடிவாகச் சொல்லப்படும் உண்மை, உலகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புபவன் நான். என்னளவில் உலகில் என்னவிதமான கலைகள் இருக்கின்றனவோ, அவை அனைத்திலும் நான்பட்ட துயரத்தைப் பதிவுசெய்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

அப்படித்தான் யூத இன அழிப்பு தொடர்பாக, இரண்டாம் உலகப்போர் தொடர்பாக திரைப்படங்கள் இன்னும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவை வெற்றியும் பெறுகின்றன. ஆனால், மாபெரும் அழிவுகளைச் சந்தித்த ஓர் இனம். சூரியன் உதிக்கும் நாட்டிலிருந்து சூரியன் அஸ்தமிக்கும் நாடு வரை பரவிவரும் ஓர் இனம். நூற்றாண்டுப் பிரச்னைகளைச் சுமந்து திரியும் ஓர் இனம். அதன் பிரச்னைகளைப் புரிந்துகொண்டவர்களால் பதிவுசெய்யப்படாமல் அந்த இனம் சந்தித்த வலி, இழப்பு என எதுவும் இந்த உலகத்துக்குக் கொண்டுசேர்க்கப்படாமல், அப்படிக் கொண்டுசேர்க்கப்பட்டவையும் அவற்றைக் கொச்சைப்படுத்துபவையாக வைத்திருக்கிற இனத்தின் அவல உண்மையை வெளியே கொண்டுவந்த படைப்புகள் எவையும் இல்லை. ஏனென்றால், இந்தப் போரால் குணா கவியழகன் பெற்ற அனுபவம் என்பது வேறு, எனக்கு அது கொடுத்த அனுபவம் என்பது வேறு. நாங்கள் பதிவுசெய்யும்போது அதை அப்படியே வெளியில் கொண்டுவர முடியவில்லை எனும்போது அதைக் கேள்விப்பட்டவர்களால் எப்படிக் கொண்டுவர முடியும்? அனைவரும் பதிவுசெய்யும் வலி ஒன்றுதான். அதை எங்களைத் தவிர வேறு யாராலும் அவ்வளவு நுட்பமாகப் பதிவுசெய்ய முடியாது என்று நம்புகிறேன்.

எனவேதான் என்னுடைய எழுத்தில் போர்க்கதைகளை எழுதிக்கொண்டிருந்த நான், அடுத்தகட்ட நகர்வின்போதும் போர்க்கதைகளையே கதையாகவும் களமாகவும் எடுத்துக்கொண்டுள்ளேன். இதற்கெல்லாம் ஒரே ஒரு காரணம், நான் என்னுடைய வாழ்க்கையில் போர் தந்த வலியைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்பதால்தான். 

எழுதும்போது ஏற்பட்டதைவிட, பலமடங்கு பெரிய சிக்கல்களை குறும்படம் இயக்கும்போது சந்தித்தேன். அப்போது யாவரும் பதிப்பகத்தார்தான் `யாவரும் திரை’ என்ற ஒன்றை உருவாக்கி இந்தக் குறும்படத்தின் தயாரிப்புச் செலவை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் சரியான நேரத்தில் எனக்கு உதவவில்லை என்றால், இது இப்போது சாத்தியமாகியிருக்காது.

இவர்களுக்கு இருக்கும் புரிதல் என்பது புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு ஏன் இல்லை என்ற கேள்வி எனக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. யூத இனம் அழித்தொழிக்கப்பட்டது தொடர்பாக பல படைப்புகள் வந்ததற்குக் காரணம், அந்த இனத்தின் மீது அந்த அவலத்தைப் பதிவுசெய்யவேண்டியதன் தேவையின் மீது கலைஞர்களுக்கும் அதை ஆதரிப்பவர்களுக்கும் இருந்த விருப்பம்தான். ஆனால், ஈழ இன அழிப்பு தொடர்பாக லைக்கா மாதிரியான ஈழத்தமிழர் நடத்தும் தயாரிப்பு நிறுவனம்கூட எந்த அளவுக்கு ஆர்வம்காட்டுவார்கள் எனத் தெரியவில்லை.

ஈழ மக்களைப் பெரிய அளவில் சார்ந்திருக்கும் தமிழ் சினிமாவில் அப்படியொரு படைப்பு வருமா என்றால், அது ஒரு பெரிய கேள்விக்குறியே. இதுவரை வந்த படைப்புகளும் ஈழத்தை, ஈழ மக்களை, மொழியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொச்சைப்படுத்தி வந்த படைப்புகள்தான். காரணம், இவர்களுக்கு அந்த நிலத்தைப் பற்றியோ, அந்த நிலத்தில் நடந்தது பற்றியோ, அனுபவ அறிவில் எழுந்த படைப்புகளாக அவை இல்லை. வெறும் கேள்விப்பட்டதால் உருவானது என்பதே காரணம். அதை என்னைப் போன்ற அந்த நிலத்தில் வாழ்ந்து உணர்ந்தவர்களால்தான் சரியாகப் பதிவுசெய்ய முடியும். அதற்கான வாய்ப்பெல்லாம் கிடைக்குமா என்பதே பெரிய கேள்விதான்.

இந்தக் குறும்படத்தையே இன்னும் திறம்படச் செய்திருக்கலாம்தான். ஆனால், அந்த அளவுக்கு என்னிடம் பொருளாதாரம் இல்லை. இதைப்போல ஆயிரம் ஆயிரம் கதைகள் இருக்கின்றன. இது சமுத்திரத் தும்மலின் ஒரு துளிதான். அதை திரைப்படம் ஆக்குவதற்கான ஒரு துருப்புச்சீட்டாகத்தான் இதைப் பார்க்கிறேன். சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது இதைவிடப் பல மடங்கு வீரியமான கதையின் மூலம் இங்கே இருப்பவர்களுக்கு ஈழத்தின் கதையைச் சொல்லக் காத்திருக்கிறேன். அப்படிச் சொல்லும் என்னுடைய திரைக்கதைகள் மூலம் எங்களின் வலியை, மொழியே தெரியாதவர்களாலும் புரிந்துகொள்ள முடியும்.''