பேட்டி-கட்டுரைகள்
கதைகள்
சினிமா
இலக்கியம்
ஆன்மிகம்
Published:Updated:

அவரவர் கோகிலா - கவிதை

அவரவர் கோகிலா - கவிதை
பிரீமியம் ஸ்டோரி
News
அவரவர் கோகிலா - கவிதை

அவரவர் கோகிலா - கவிதை

கோகிலாவைப் பார்த்ததிலிருந்து
என்று நான் எழுதிய கவிதையில்
என்னைத் தாண்டியும்
பிறர் கண்கள் துழாவின கோகிலாவை.
கோதுமை நிறமுடைய
குறுநகை இதழுடைய
இடை சிறுத்த
இளநீரை நிகர்த்த
இன்னும் இன்னும் வெவ்வேறாக
கோகிலா பார்க்கப்படுகிறாள்.
அனுமதி கோராமல் பார்ப்பதில்
குற்றமோ குறையோ
குதர்க்கமோ காமமோ இல்லை.
ஒரே ஒரு சந்தேகமுண்டு,
ஊரே அவளை
முன்னும் பின்னும் பார்க்க,
கோகிலா ஏன் யாரையுமே
பார்ப்பதில்லை?

அவரவர் கோகிலா - கவிதை

கோகிலாவின்
மடியில் சரிந்துகொண்ட கவிதை
தாய்மையின் நடுக்கத்தை
தனிமையின் குழப்பத்தை
சொல்வதற்காக உறங்காமலிருக்கிறது.
கோகிலா அருகிலிருக்கையில்
தூக்கமும் கவிதையும் ஒருசேர
வருமென்று நம்புவதெப்படி?
கோகிலாவால் உறங்காத உலகம்
உறங்கவிடுவதில்லை,
கோகிலாவையும்.

கோகிலா தன் ஆடைகளை
மொட்டைமாடியில் உலர்த்துகிறாள்.
அவளது ஒரே நோக்கம்
ஈரமுடைய எதையும் காயவைப்பதுதான்,
அவளால் காய்ந்ததாகக் கருதப்படும்
தானியங்களும் வடகங்களும்கூட
காதல் கடாயில் பொரிகின்றன
இதயங்களாக.

கோகிலா நெட்டி முறிக்கையில்
விலகிக்கொள்ள விரும்பாத சோம்பல்
கலைந்துகிடக்கும் தலையணைக்குள்
பதுங்கிக்கொள்கிறது கூச்சத்துடன்.
கோகிலா இப்போது விரட்ட நினைப்பது
சோம்பலையோ கூச்சத்தையோ அல்ல,
எங்கேயோ இருந்து பார்க்கும்
ஏக்க விழிகளை.
எழிலார்ந்த அவள் மேனியின்
கதகதப்பில் இறைந்துகிடக்கும் சொற்கள்
பெற்றுவிடுகின்றன,
காவிய அந்தஸ்தை.

அவரவர் கோகிலா - கவிதை

கோகிலாவால் கழுவிக் கவிழ்க்கப்பட்ட
காபி டபராக்களில்
திட்டுத் திட்டாய்த் தென்படுகின்றன
அவள் வீட்டு ஆண்களின் கறைகளும்.
அவளுக்கு மிகப் பிடித்தமான
சின்ன வயது புல்லாங்குழலே
கேஸ் பற்றவைக்கும் லைட்டராக
உருமாறியதை உணர்ந்து சிரிக்கிறாள்,
அர்த்தமுடைய அந்தச் சிரிப்புகளில்
வெந்து கருக மனமில்லாது
வெளியேறுகிறது
வாழ்க்கை.

தூரத்தில் வருகிறபோதே
கோகிலா தனது குணத்தைத்
தெரிவித்துவிடுகிறாள் அசைவுகளில்.
குதறி எறியும் பார்வைகள்
அவளுக்குப் பிடிப்பதில்லை.
குற்றம் பார்க்கும் சுற்றங்களை
கூட்டிக்கொண்டே திரிகிறாள்.
கோகிலாவை உங்களுக்கும்
பிடித்துதானே இருந்தது,
அவள் ஒரு குழந்தைக்கு அம்மா என்று
சொல்லும்வரை?

கோகிலா முத்தமிடுகிறாள்
ஆதிக்காதலின் மிச்சத்தை உணர்த்த,
அவளுடைய ஒற்றை முத்தத்தில்
ஜாதி மல்லிகளும் கீழா நெல்லிகளும்
ஓங்கி உயர்ந்து வளர்ந்தன,
வெப்ப மண்டலத்தில்
விடாது பெய்யத்தொடங்கின
மாமழை மேகங்கள்.
அவள் அந்த
முத்தத்தின் வழியே
மூதாதையர்களின் எலும்புக்கூடுகளை
உயிர்பெறச் செய்கிறாள்.
பலவான்களை அடித்து நொறுக்கி
அடுத்த வேளை உணவிற்கு
சோறு பொங்குகிறாள்.
கோகிலாவின் முத்தமென்பது
நாபிக்கமலத்தை மலரச்செய்வது,
அவள் முத்தத்தை வாங்க
மீண்டும் மீண்டும் ஒருவனே
வந்துகொண்டிருக்கிறான்
வரிசையில்.

அவரவர் கோகிலா - கவிதை

தையல் மிஷினில் அமர்ந்த கோகிலா
மிகச் சின்ன ஊசித் துளையில்
உற்றுப்பார்க்கிறாள் யுகத்தின் குறுகலை.
அதைவிடவும் சின்ன துவாரத்தில்
தானும் தன் வாழ்வும்
திணிக்கப்பட்டதை
அறியாதவாறு.

கோ
கிலா தனது மேலாடையை
அவ்வப்போது சரிசெய்வது
எதன் பொருட்டென்று
எல்லோருக்கும் தெரியும்.
கண்களால் காயமுற்ற
அவளது தேகத் தளும்புகளை
விதவிதமான துணிகளால்
முடிந்தவரை மூடிக்கொள்கிறாள்.
பொதுவெளியில் ஆணாகத்
தன்னை நிறுவ முயலும் அவள்
அறுத்தெறியவா விரும்புகிறாள்
ஸ்தனங்களை?

குழந்தையுடன் விளையாடுவதும்
கோகிலாவுடன் விளையாடுவதும் ஒன்றுதான்,
இரண்டுபேருமே
தோல்வியின் கங்குகளைத் தொடவோ
சகாயம் கிடைக்காதபோது
ஆட்டத்தைக் கலைக்கவோ தயங்குவதில்லை.
தன்னை முன்வைத்தே எதையும்
தீர்மானிக்கும் கோகிலா,
தடாலடி முடிவுகளால் கூட இருப்பவரை
அதிர்ச்சியுறச் செய்திருக்கிறாள்,
மனப்பொருத்தம் வாய்க்காத,
கைநிறைய சம்பாத்யம் இல்லாத,
அடிக்கடி சந்தேகப்படுகிற,
அவ்வப்போது துரத்துவிடுகிற,
கணவனுக்காக அலகுகுத்தி
அம்மன் கோவில் வாசலில்
தீ மிதிக்கிறாளென்றால்
நம்பவா முடிகிறது?


டந்துபோன சொப்பனங்களில்
தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் கோகிலா
சைவ உணவிற்கு மாறிவிட்டாள்.
உயிர்களைக் கொல்வது பாவமென்றல்ல
உயிர் வாழ்வதே பாவமென்னும்
யோசனையில்.
அவள் அதட்டலுக்கு பம்மிய நாய்
அவளுக்காக எறிந்துவிட்டுப் போகிறது
ரொட்டித் துண்டுகளை.
உங்களுக்குத் தெரியும்தானே,
நாயென்று நான் சொல்வது
நாயை இல்லையென்று?

காலம் உருட்டிய சகடையில்
கொஞ்சகாலம் எக்ஸ்போர்ட் வேலைக்குப்
போய்வந்த கோகிலாவுக்கு
மூட்டுவழி ஏற்பட்டது.
அவள்தான் என்ன செய்வாளோ,
மூன்றாவது பிரசவமும்
சிசேரியன் என்றால்.

ஞானக்கூத்தனின் சைக்கிள் கமலத்தை
கோகிலாவுக்குத் தெரியாது.
தெரிந்திருந்தால் எப்போதோ
அவளும் பழகியிருப்பாள் சைக்கிள் ஓட்ட,
அங்கேயும் இங்கேயும் நடந்து நடந்து
கால் வலி கண்டதுதான் மிச்சம்.
கோகிலா தற்போது
வேளாங்கண்ணி மாதாவிடம்
வேண்டியிருக்கிறாள்,
வலி சரியாகும் பட்சத்தில்
உப்பை எடுத்துக்கொண்டு
நடந்தே வருவதாக.
கூர்ந்து கவனிக்கத் தக்கதே,
அம்மனைத் தொழுதுவந்த அவள்
மாதாவிடம் சரணடைந்தது.

அவரவர் கோகிலா - கவிதை

திருபுவனத்தில் எடுத்த
விலையுயர்ந்த திருமணப் புடவையை
அடகு வைத்த கோகிலா,
அதை மீட்பதற்காக சிலநாள்
சித்தாள் வேலைக்குப் போனாள்.
அதன்பிறகு பெரும்பாடாகிவிட்டது
புடவையைவிடவும்
தன்னை மீட்பது.

தையும் மனதிலேயே
வைத்திருக்கும் கோகிலா
இப்பொழுதோ தேடிக்கொண்டிருக்கிறாள்,
மனதை எங்கே வைத்தோமென்று.
இருந்த ஒரு மனதையும்
எங்கேயோ வைத்துவிட்ட அவள்
யாருடைய மனதில் குடியேறுவாளோ?
கூச்சத்தின் விரல்பிடித்து
நடை பழகிய அவளை,
வயது முதிர்ந்த தோற்றத்தில் பார்ப்பது
வருத்தமில்லை.
இப்பொழுதும் எனக்கெழும்
ஒரே ஒரு சந்தேகம்,
இந்த வயதிலும் அவள் ஏன்
ஒருவரையும் பார்ப்பதில்லை,
உடம்புக்கு அப்பாலுள்ள வாழ்வை
தெரியவே தெரியாதா
கோகிலாவுக்கு?

- யுகபாரதி, ஓவியங்கள்: ஸ்யாம்