நாஞ்சில் நாட்டு மனிதர்களையும் பண்பாட்டையும் உயிரோட்டமான தன் மண்மொழியால் தூக்கிக் கொண்டாடும் எழுத்துக்காரர் நாஞ்சில்நாடன். நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம், சொல்லகராதி... என இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில் இயங்குபவர். அவரிடம் விகடன் தீபாவளி மலருக்காக உரையாடினோம்.

``வட்டாரப் பெயரையே உங்கள் பெயராக வைத்துக்கொள்ளக் காரணம் என்ன?''

``அப்பா தன் தந்தை பெயரை எனக்குச் சூட்டினார். 1975-ல் நான் எழுத முனைந்தபோது, எனது இயற்பெயரில் ஏற்கெனவே ஏழெட்டுப் பேர் எழுதிக்கொண்டிருந்தார்கள். எனவே, எனக்கொரு தனித்த அடையாளம் அவசியமாயிற்று. மனைவி பெயரில் எழுதலாம் எனில் திருமணமாகியிருக்கவில்லை; மலையாளம் போல நமக்கு இல்லப் பெயர் கிடையாது; பிற மாநில எழுத்தாளர்போல குலப்பெயரும் நமக்கு இல்லை; சாதிப்பெயரும் சம்மதமில்லை; ஆக, மண்ணின் பெயரைப் புனைந்துகொண்டேன். ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை புனைந்து, கைவிட்ட பெயர் இது. அநாமத்தாகப் பழையாற்றின் கரையில் கிடந்தது. நானெடுத்துச் சூடிக்கொண்டேன், `சூடிய பூ சூடற்க' என்றாலும், மற்றபடி நான் எழுதவந்த காலத்தில் நாராயணசாமி, கிருஷ்ணசாமி, கோவிந்தசாமி, ராமசாமி என்போர் தூய தமிழ்ப் பெயர்கள் சூடிக்கொண்டதற்கும் இதற்கும் ஒட்டுமில்லை, உறவும் இல்லை. ஆனால், `நாஞ்சில் நாடன்' என்ற பெயரைப் பார்த்து, என்னை ஒரு மூத்த இயக்க எழுத்தாளனாகக் கருதி ஏமாந்தவர் உண்டு. புனைபெயரின் பிற்பகுதியின் இரண்டாம் குறில் எழுத்தை, நெடிலாகவே இன்றும் பலர் மேடைகளில் என்னை விளிக்கிறார்கள். எனக்கு 2010-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டபோது, குறிலை நெடிலாகக் கருதி, `குலத்துக்குக் கிடைத்த நான்காம் சாகித்ய அகாதமி விருது' என நாகர்கோயில் நகர் எங்கும் சுவரொட்டி அடித்து ஒட்டினார்கள். என் எழுத்தின் ஒரு வரிகூட வாசித்திராத கூட்டம் ஒன்று, `இல்லையில்லை, அவர் எங்கள் குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பு' என்று கொண்டாடியதும் (!) உண்டு. எதுவானால் என்ன? என் எழுத்தை வாசிக்கும் இறுதித் தமிழன் இருக்கும் வரைக்கும் அந்தப் பெயரும் இருக்கும்தானே!''

``சமகால அரசியலைப் புனைகதையில் கொண்டுவருவதில் உங்களுக்குச் சவாலாக இருந்தது எது?''

``புனைகதை உலகில் இன்று நான் தீவிர செயற்பாட்டாளன் இல்லை. நாவல் எழுதி இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆண்டுக்கு மூன்று சிறுகதைகள் எழுதினால் அதிகம். ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் வெளிவந்த எனது கட்டுரைத் தொகுதிகள் 14. அவற்றுள் மூன்று, ஆய்வு நூல்கள். கவிதைத் தொகுப்புகள் மூன்று. என் கட்டுரைகள், கவிதைகள், சமகால அரசியல் சம்பவங்களைப் பேசியிருக்கின்றன. எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமானால், ஈழப்பிரச்னை பற்றி அதிகம் குறிப்பிட்டு எழுதிய எழுத்தாளன் நான். எனது `கும்பமுனிக் கதை'களில் சில, சமகால அரசியல் சம்பவங்களைப் பேசியிருக்கின்றன. சமகால அரசியலைப் புனைகதைத் தளத்தில் கொணர்வது, எந்த எழுத்தாளனுக்கும் ஒரு சவால்தான். `எலுமிச்சம் பழம் புளிக்கும்' என்று சொல்லவே எட்டு நாள் எடுத்துக்கொள்பவர் உண்டு. `எதுக்கு வம்பு? இன்னைக்கு இல்லேன்னா நாளைக்கு, ஏதாவது ஒரு காரியத்துக்கு, அவன் முன்னால போய் நிக்க வேண்டியது இருக்கும்லா?' என்ற மனோபாவம் சிலருக்கு.

தமிழ் எழுத்தாளனுக்கு இருக்கும் ஒரு பாதுகாப்பு, பெரும்பாலான அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், நவீன இலக்கியவாதிகளை வாசிப்பவரும் இல்லை; அறிந்தவரும் இல்லை. திருக்குறளை வீரமாமுனிவரும் கம்ப ராமாயணத்தை உமறுப்புலவரும் எழுதினார்கள் என்று அரசியல் தலைவர்கள் சொற்பொழிவாற்றும் காலகட்டம் இது. மேலும், சமகால அரசியல் சூழல், அரசியல் சம்பவங்களைப் புனைவாகவேனும் எழுத முயல்வோருக்கு அச்சமூட்டுவதாகவே இருக்கிறது. தமிழ் எழுத்தாளனைக் கொல்ல, துவக்கு வேண்டாம், ஒரு சைக்கிள் மோதல் போதும்.''

``நீங்கள் சிறுகதையில் எழுதிய மனிதர்கள் அதைப் படித்துவிட்டுச் சண்டைக்கு வந்ததுண்டா?"

``சிறுகதைகளில் நான் கையாண்ட மனிதரில் சிலர், அதை வாசிக்க உயிருடன் இருந்ததில்லை. உயிருடன் இருந்தவர் வாசித்திருக்க வாய்ப்பும் இல்லை. அன்றைய காலகட்டங்களில் `தீபம், கணையாழி, செம்மலர், சதங்கை' இதழ்களெல்லாம் எளிதில் காணக்கிடைப்பனவும் அல்ல. ஆனால், `ஊதுபத்தி' என்றொரு கதை எழுதினேன் 1992-ல். அந்தக் கதையில் இடம்பெற்ற சம்பவம் நடந்தது 1967-ல். அப்போது பி.எஸ்ஸி படித்துக் கொண்டிருந்தேன். `பேய்க்கொட்டு' என்ற என் சிறுகதைத் தொகுப்பில் அது இடம்பெற்றது. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்து உறுப்புக் கல்லூரிகளுக்கு அந்தத் தொகுப்பு பாடமாக வைக்கப்பட்டது. பல்கலைக்கழகங்களில் கல்லூரிகளுக்குப் பாடநூல் ஆக்குவது என்பதும் ஒரு தொழில். தொழில்போட்டி காரணமாக, `அந்தத் தொகுப்பை, அந்தக் கதையைக் காரணம் காட்டி, பாடத்திட்டத்தில் சேர்க்கக் கூடாது' என்று குமரி மாவட்டப் படைப்பாளி ஒருவர் துணைவேந்தரிடம் புகார் கொடுத்தார். புகாரின் நகல்கள் கல்வித்துறை இயக்குநருக்கும் அமைச்சருக்கும் அனுப்பப்பட்டன. என்றாலும் நடுவர் குழுவுக்கு விடப்பட்டு, அந்தத் தொகுப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்து, மதுரையில் பாராட்டு விழா நடந்தபோது, தனது அறிவாற்றலால் மயிர் பிளந்து பார்க்கும் ஆற்றலுடைய பேராசிரியர் ஒருவர், `ஊதுபத்தி கதை நாஞ்சில் நாடனின் சாதி வெறியை நிரூபிக்கிறது' என்றார். அன்றுவரை நான் எழுதிய எத்தனை சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் அவர் வாசித்திருப்பார் என்பது எனக்குப் போத்தியம் இல்லை.''

``படைப்புகளில், பிறகு எழுதிக்கொள்ளலாம் என வைத்திருக்கும் மனிதர் ஒருவரின் கதையைப் பகிர முடியுமா?"

``வீரநாராயண மங்கலம் என்ற எம் சிற்றூரில் அப்பாவுக்கு ஒரு சேக்காளி. அப்பாவைவிடப் பத்து ஆண்டுகள் மூத்தவர். எங்கப்பா, நான்கு கோட்டை விதைப்பாடு பாட்டம் பயிரிடுகிற ஓர்னேர் சம்சாரி. அவர் சேக்காளி சோத்துக்கு நெல்லும் கறிக்குத் தேங்காயும் தட்டில்லாதவர். எங்கள் வீட்டில் நாங்கள் ஏழு பிள்ளைகள். நான் மூத்தவன். அம்மா, அப்பா, அம்மாவின் அம்மா ஆரிய நாட்டு மாடிப்பிள்ளை, அப்பாவின் அம்மா பறக்கை நெடுந்தெரு வள்ளியம்மை எனப் பதினோரு உருப்படிகள். பட்டினி எமக்குப் பாலபாடம். பிள்ளைகளின் பசிதாங்க முடியாமல், அண்ணன் என்று விளிக்கும் சேக்காளியிடம் போய் ஐந்தோ ஏழோ மரக்கால் நெல் முன்னறுப்புக் கடன் வாங்குவார். சில சமயம் ஐந்தோ பத்தோ கடனும்.

1972-ல் பம்பாய்க்கு வேலை தேடிப்போன நான், 1974-ல் முதல்முறை ஊருக்கு வந்தேன். இரண்டாம்முறை ஊருக்கு வருமுன், 1976-ஏப்ரலில் வயலில் உழும்போது காலில் கொழுப்பாய்ந்து, டெட்டனஸ் வந்து, காப்பாற்ற முடியாமல் அப்பா தனது 55-வது வயதில் இறந்து போனார். அவர் சாதாரண விவசாயி. அப்போது என் வயது 29, திருமணம் ஆகியிருக்கவில்லை. பம்பாயில் மாதம் 210 ரூபாய் சம்பளம். செய்தி வந்தபோது, விமானத்தில் வர எந்தச் சாத்தியமும் இல்லை. இரயில் பிடித்து ஊருக்கு வந்துசேர்ந்தபோது, அவர் எரியூட்டப்பட்டு, சாம்பலும் கரைக்கப்பட்டுவிட்டது. பதினாறாம் நாள் கல்லெடுப்பு அடியந்திரமும் முடிந்து, பம்பாய்க்குப் புறப்படுமுன், அப்பாவின் சேக்காளியிடம் சொல்லிக்கொள்ளப் போனேன்.
வாசல் படிப்புரையில், ஈசி சேரில் சாய்ந்து, பனையோலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தார். முற்பகல் நேரம்.

``பெரீப்பா, நாளைக்கு பம்பாய்க்குப் போறேன்.''

``பத்திரமாப் போய்ட்டு வா மக்கா... அம்மையைக் கெவுனுச்சுக்கிடணும்... தம்பிகளைப் படிக்கவைக்கணும்... பெரிய செமையை உன் தலைலே வச்சுக்கிட்டுப் போயிட்டான் கெணவதி... சூதானமா இருந்துக்கிடணும்... என்னா?''

``பெரீப்பா...''

``என்ன மக்கா? எதாம் செலவுக்கு வேணுமா?''

``இல்ல பெரீப்பா... அடியந்திரத்துக்குப் பிரிஞ்ச பணம் இருக்கு... பின்னே... வந்து... அப்பா உங்கிட்ட ஒருவாடு கடம் வாங்கீருப்பா...''

``அதுக்கு?''

``இப்பம் எங்கிட்டே காசில்ல பெரீப்பா... எவ்வளவுன்னு சொன்னேன்னா அடுத்தமுறை ஊருக்கு வரசில்லே...''

``வெளீல எறங்குலே நாய்க்குப் பொறந்த பயலே! நீ வந்து கடம் தீப்பேண்ணாலே நான் எந்தம்பிக்குக் கடங்குடுத்தேன்...'' என்று கண்ணீர் ஒழுக, தொண்டை கரகரக்கக் கூவினார். கண்ணீர் வழிய நானும் வாசற்படி தாண்டித் தெருவில் இறங்கினேன். அவர் இறக்கும் வரை அப்பா வாங்கியது, எவ்வளவு என்று தெரியாது, கடனைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. ஒரு சிறு கதையாகவும் எழுத முடியவில்லை. எனக்கும் இனி அதிக காலம் இல்லை...''

``உங்கள் நாவல்கள் படமானது குறித்து?"

`` ‘தலைகீழ் விகிதங்கள்', `சொல்ல மறந்த கதை' ஆனபோது 14 நாள்கள்; என் சிறுகதை `இடலாக்குடி ராசா'வும் டாக்டர் டேனியலின் `ரெட் டீ'- யும் `பரதேசி' படமானபோது 30 நாள்கள்; ஞான.ராஜசேகரன் `பெரியார்' படம் எடுத்தபோது காரைக்குடியில் 7 நாள்கள் படப்பிடிப்புகளில் நானும் உடனிருந்தேன். `பரதேசி' அனுபவங்கள் குறித்து நானோர் புத்தகம் எழுதலாம். `சொல்ல மறந்த கதை' படப்பிடிப்பு நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்திலும், கடலூர் பேருந்து நிலையத்திலும், `தியாகவல்லி' எனும் கடற்கரைக் கிராமத்தின் மணத்தேரியிலும் நடந்துகொண்டிருந்தது. மணிவண்ணன், புஷ்பவனம் குப்புசாமி, சேரன் ஆகியோர் பங்கேற்ற காட்சிகள். ஒரு காலையில் கடலூரில் இருந்து, தியாகவல்லி கிராமத்துக்குப் புறப்பட்டோம். மணிவண்ணன் எப்போதும் அவர் பென்ஸ் வேனில் என்னையும் ஏற்றிக்கொள்வார். நல்ல படிப்பாளி. சுவாரசியமாகப் பேசுவார்.''

``குடும்பம் உங்களின் எழுத்துக்கான வெளியை அனுமதிக்கிறதா? குடும்பம் பற்றிச் சொல்லுங்களேன்!''

``மனைவி பெயர் சந்தியா... ரொம்பப் பொறுமைசாலியான, எதற்கும் ஆசைப்படாத, விருந்தோம்புகின்ற, சக மனிதர்களிடம் பரிவுடன் நடந்துகொள்கிற, எனது பதின்மூன்று சகோதர சகோதரிகளும், அத்தான்களும், கொழுந்திமாரும் அன்பு செலுத்துகிற பெண் அவள். எமக்கு வாய்த்ததும் நன் மக்கட் பேறு. மூத்தவள் சங்கீதா, மயக்க மருந்தியல் மருத்துவத்தில் மேற்படிப்பு முடித்தவள். மருமகன் விவேகானந்தன், ஆர்த்தோ மருத்துவர்; கோவை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர். ஆறு வயதிலும் மூன்று வயதிலும் சித்தார்த்தன், அரவிந்தன் என்று இரண்டு பேரன்கள். எம் வீடெங்கும் பரவிக்கிடக்கும் புத்தகங்களில் ஒன்றுகூட இதுவரை கிழிபட்டதில்லை. மகன் கணேஷ், மெக்கானிக்கல் இன்ஜினீயர். அண்மையில் மணமாகி, மனைவியுடன் ஹைதராபாத்தில். மருமகள் ஸ்ரீலேகா, சொந்தவூர் ஸ்ரீகாகுளம். தமிழ் பேசுவாள். அமெரிக்காவில் ஆறாண்டுகள் பணியாற்றிய மகன் சம்பாதித்த காசில் வீடுகட்டி, வாழ்வின் நிறைவுப் பகுதியில் சொந்த வீட்டில் வாசம். என் புத்தகங்கள் சுதந்திரமாக சுவாசிக்கின்றன. என் எழுத்து வெளியைக் குடும்பம் என்றும் ஆக்கிரமித்ததில்லை. `நாஞ்சில் நாடன்' பிள்ளைகள் என்று எதிர்காலத்தில் அவர்கள் கர்வத்துடன் சொல்லிக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. வாழ்க்கைமீது எந்தப் புகாரும் எனக்கு இல்லை.''

``நீங்கள் ருசித்துச் சாப்பிட்ட முதல் சாப்பாடு எதுவென நினைவிருக்கிறதா?''

``ஊருக்கு மேற்கே, இரண்டு கல் தொலைவில் இருந்த, இறச்சகுளம் அரசினர் நடுநிலைப்பள்ளியில் ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். ஊரில் அன்று ஒரு கல்யாணம். கல்யாணம் என்றால் ஊர்ச்சாப்பாடு. ஆனால், பள்ளிக்குப் போகாமல் இருக்கவியலாது. வகுப்பாசிரியரிடம் அனுமதி வாங்கி, விருந்து சாப்பிட ஊருக்கு ஓடி வரும்போது நண்பகல். வகுப்புத்தோழன் எவனும் என்னுடன் வர பிரியப்படவில்லை. கல்யாணப் பந்தலுக்குப் போய் நின்றபோது, அங்கு சாப்பாட்டுப் பந்தி ஒதுங்கி, மிச்சம்மீதி எல்லாம் வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தன. எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. வயசாளி ஒருவர் சொன்னார், ``எல்லாம் ஒதுக்கி வீட்டுக்குப் போயாச்சுப்போ... அங்க போயிக் கேளு...'' என்று. கண்ணீர் வழியத்தான் ஓடினேன். கல்யாண வீட்டில், மணப்பெண்ணின் அம்மா, மைலாடி ஆச்சி, ``அதுக்கு ஏம்லே அழுகே?'' என்று சொல்லி, சுற்றுக் கட்டுப் படிப்புரையில் உட்கார வைத்து, இலைபோட்டு, அவியல், துவட்டல், பச்சடி, கிச்சடி, எரிசேரி, பப்படம், பருப்பு, சாம்பார் புளிசேரி, சம்பாரம், மூன்று பாயசம் என்று எதுவும் குறைவில்லாமல் விளம்பித் தந்தாள். அன்று சாப்பிட்ட சாப்பாட்டில் எனது சில கண்ணீர்ச் சொட்டுகளும் கலந்திருந்தன. பசியுடனும் வெட்கத்துடனும் வாரித்தின்ற அன்றைய சோறு, நான் ருசித்துச் சாப்பிட்ட முதல் சாப்பாடாக என் நினைவில் தங்கிப்போயிற்று.''

``அம்மா கை ருசி என்பதை முடிவு செய்வது நாக்கா, மனமா?''

`` `பசிக்கு ருசி வேண்டாம்; நித்திரைக்குப் பாய் வேண்டாம்' என்பது சொலவம். ஆனால், ஆய கலைகள் அறுபத்து நான்கினுள் சமையலும் ஒரு கலை. இசையில் நாரத கானம், அனுமத் சங்கீதம் என்பதுபோல, கைப்பக்குவத்தில் நளபாகமும் வீமபாகமும் உண்டு. எனவேதான் நளவிலாஸ், பீமவிலாஸ் என்று சாப்பாட்டுக் கிளப்புகளுக்குப் பெயர்கள் வந்தன. `காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு' என்பதை ஒப்ப, அவரவர்க்கு அவரவர் அம்மா கைப்பாகம் உயர்வு. அம்மா கைச் சாப்பாடு என்பது எல்லோருக்கும் சென்டிமென்ட் என்றாலும் சில அம்மாக்கள் சமையல் கலைஞரும் ஆவார். சமையல் என்பதோர் நுண்கலை. அதில் இளக்காரம் பேசுவது அறியாமை. இன்னொரு காரியம் - ஆறு மாதம் முன்பே அரைத்துத் தூளாக்கிக் கலப்படங்கள் செய்த சமையல் பொடி பாக்கெட்டுகளை, எக்ஸ்பயரி தேதிகூடப் பார்க்காமல் வாங்குகிறோம். இஞ்சிக்கும் பூண்டுக்கும் பச்சை மிளகாய்க்கும் பேஸ்ட் வந்துவிட்டது. எதற்கும் ரெடி மிக்ஸ், திடீர் மிக்ஸ். இந்த யோக்கியதையில்தான், எல்லாம் புத்தம் புதியதாய்ப் பொறுக்கி, கல் மண் குப்பை சீர்பார்த்து, வறுத்து, உரலில் இடித்து, ஆட்டுரலில் ஆட்டி, அம்மியில் அரைத்து, நாலு பேர் வாய்ப்படப் போகும் சாதனம் எனும் அக்கறையுடன் அம்மாக்கள் சமைத்தார்கள். சமைக்கும்போது சாப்பிடுபவரின் முகம் பார்த்தார்கள். உண்ணும்போது பார்த்துப் பார்த்துப் பரிமாறினார்கள். உப்புப் புளி காரம் கூடியோ குறைந்தோ போனால் மனம் நொந்தார்கள். முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, அரைக்கீரை, கொடுப்பைக் கீரை ஆய்ந்தார்கள். வாழைப்பூ உரித்து, கள்ளன் களைந்து, அரிந்து, தண்ணீரில் போட்டுக் கறை கழுவி... அம்மா, அம்மா என்று வலிக்காமல் சொல்வதன்றி, அம்மா செய்த பணி அயலார் எவரறிவார்? என்றுமே தாய்ப்பால் தனி.''

`` `கும்பமுனி'யோடு எத்தனை ஆண்டு பழக்கம்?''

``இருபதாண்டுப் பழக்கம். 1998-ல் நானெழுதிய `நேர்காணல்' சிறுகதையில் தொடங்கியது. சிந்துபாத்தின் தோளில் ஏறி அமர்ந்து, இறங்க மாட்டேன் என்று அடம்பிடித்த கிழவனைப்போல எனக்கு இப்போது கும்பமுனி. அவர் தோள்மேல் தவசிப்பிள்ளை. தவசிப்பிள்ளை என்பது சாதி அடையாளப் பெயர் அல்ல; தொழில் அடையாளப் பெயர். `சமையல் செய்பவர்' என்று பொருள். இருவரும் உறங்கும் நேரமாகப் பார்த்து, தலையில் கல் தூக்கிப் போட்டுத்தான் கொல்ல வேண்டும்போல. அல்லது அவர்கள் என்னைக் கொல்ல வேண்டும். நான் அவர்களை ஆண்ட காலம் போய், இப்போது அவர்கள் என்னை ஆள்கிறார்கள். நாஞ்சில் நாடனை வெறுப்பவர்கள்கூடக் கும்பமுனியை விரும்புகிறார்கள். இப்படி இரு கதாமாந்தரைக் கொண்டு உலக மொழிகளில் இத்தனை கதைகள் எழுதப்பெற்றுள்ளனவா என்பதை, அறிந்தவர் கூறுங்கள். இனிமேலும் சில கும்பமுனிக் கதைகளை நான் எழுதக் கூடும். ஜெயமோகன் கும்பமுனி குறித்துக் கட்டுரையே எழுதியுள்ளார். கற்றாரைக் கற்றாரே காமுறுவர். அதைத் தாண்டியும் வேறென்ன மோகம் எனக்கு!''

வெ.நீலகண்டன், விஷ்ணுபுரம் சரவணன் - படங்கள்: தி.விஜய்