Published:Updated:

``தென்கலை களரி தமிழகக் கலை. அதை அழியவிட மாட்டேன்!’’ - வெள்ளைச்சாமி

``தென்கலை களரி தமிழகக் கலை. அதை அழியவிட மாட்டேன்!’’ - வெள்ளைச்சாமி
``தென்கலை களரி தமிழகக் கலை. அதை அழியவிட மாட்டேன்!’’ - வெள்ளைச்சாமி

"தென்கலை களரி, தமிழகக் கலை. அதை தமிழர்கள் கைவிட்டதாலேயே, அது கேரளாவுல பரவியிருக்கு. அதை அழியவிடக் கூடாதுன்னுதான் நான் ஆடு மேய்க்கிற இடத்துல செஞ்சி காட்டுறேன். மத்தவங்களுக்கும் சொல்லிக்கொடுக்கிறேன்."

`நான் மெத்த படித்தவனாக்கும். நான் இந்த வேலையைச் செய்ய மாட்டேன்' என்று நம்மில் பலரும் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையைத் தேடித் தேடி, கிடைக்கும் வேலையைச் செய்யாமல் வாழ்க்கையை இருட்டாக்கிக்கொள்கிறோம். ஆனால், வெள்ளைச்சாமி அப்படியல்ல. படித்தது பி.லிட், பி.எட். தென்கலை களரி, ஆசனங்கள், வர்மக்கலை ஆகியவற்றைக் கற்றிருக்கிறார். மரபுக்கவிதை தொடங்கி, புதுக்கவிதை, ஹைக்கூ, நவீனம், பின்நவீனத்துவக் கவிதைகள் என, தமிழ் இலக்கியம் மீது அதீத ஆர்வம்கொண்டவர். 

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் மாவட்டத்தின் தென்கோடி கடைசி எல்லையாக அமைந்திருக்கிறது தெற்கு அய்யம்பாளையம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, கடவூர் மலையடிவாரத்தில் ஆடுகள் மேய்த்துக்கொண்டே, சக கூட்டாளிகளுக்கு தான் கற்ற களரி வித்தைகளைச் செய்துகாட்டி, அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தார். அவரைச் சந்தித்து, ``ஆடு மேய்க்கிற உங்களுக்குள்ள எப்படி இப்படி ஒரு கலை ஆர்வம்?" என்று பேசினேன். தொண்டையைக் செருமியபடி பேசத் தொடங்கினார். 

``எனக்கு சொந்த ஊர் இதுதான். வறுமை வாட்டும் குடும்பத்துலதான் பொறந்தேன். அப்பா சின்ன வயசுலேயே தவறிட்டார். அம்மாதான் ஆடு, மாடு மேய்ச்சு, என்னை நல்லா படிக்கவைச்சார். விவேகானந்தர்போல ஆகணும்னு சின்ன வயசுலயிருந்தே எனக்கு ஆசை. ஆனா, அம்மாவுக்கு அது புடிக்கலை. 16 வயசுல கேரள அமிர்தானந்தமயிகிட்ட தீட்சை வாங்கினேன். இன்னொரு பக்கம் பி.லிட்., பி.எட் படிச்சு முடிச்சேன். சின்ன வயசுலேயே கவிதை, கட்டுரைன்னு எழுதுற ஆர்வமும் தொத்திக்கிச்சு. கவிதை எழுதுறதைவெச்சு என்ன சம்பாதிக்க முடியும்? வருமானத்துக்கு வேலை தேடினேன். ஒண்ணும் சரியா அமையலை. அதனால, 2000-ம் வருஷம் பொழப்பு தேடி கேரளா போனேன். அங்க, `அதிகம் படிச்சிருக்கோம்'னு நினைக்காம, கிடைச்ச கூலிவேலைகளைச் செய்தேன். அங்கதான் தென்கலையான களரி மீது ஆர்வம் வந்து, அஞ்சரை வருஷம் போராடித்தான் காளிதாஸ் குருக்களிடம் முறையா கத்துக்கிட்டேன். அதுக்கப்புறம் வர்மக்கலையையும் கத்துக்கிட்டேன். அதோடு, பாடி மசாஜ் செய்றது, மசாஜ் செய்ய பயன்படும் தைல வகைகள் தயாரிக்கிறது, தியானம் பண்றதுனு பலதையும் கத்துக்கிட்டேன். `கல்யாணம் பண்ணிக்கலைன்னா, நான் செத்துருவேன்'னு அம்மா மிரட்டியதால, 2008-ம் ஆண்டு ஊருக்கு வந்தேன்.

`கல்யாணம் பண்ணிக்க. நானே வந்து பொறப்பேன்'னு அம்மா சொன்னாங்க. அவங்க உடனே இறந்துட்டாங்க. அம்மா ஆசையை நிறைவேற்ற, வளர்மதியை திருமணம் பண்ணிக்கிட்டேன். பெண் குழந்தை பொறந்துச்சு. அம்மா சொன்னதை நினைச்சுக்கிட்டேன். மறுபடியும் ஒரு பெண் குழந்தை. பொறுப்பு கூடிட்டதால, ஏதாச்சும் தொழில் பண்ணலாம்னு முடிவுபண்ணினேன். நான் கற்ற களரி, வர்மக்கலை, பாடி மசாஜை தொழிலா செய்யலாம்னா, ஒருத்தரும் அதை கத்துக்க ஆர்வம் காட்டலை. அதனால, கடனவுடன வாங்கி, மனைவி நகைகளை அடகுவெச்சு, 2010-ம் ஆண்டு டி.கூடலூர்ல பேன்சி ஸ்டோர் வைச்சேன். முன்னபின்ன தெரியாத தொழிலை செய்ததால, 1,85,000 ரூபாய் நஷ்டம். இடி விழுந்தாப்புல ஆயிட்டு. அந்தக் கடனைச் சமாளிக்க முடியாம, `குடும்பத்தோடு செத்துரலாமா?'னுகூட யோசிச்சோம். ஆனா, என் மகள்கள்தான் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தாங்க. பிரச்னைகளைச் சமாளிக்கிறதுன்னு முடிவுபண்ணினோம். இந்தப் பிரச்னைகளைச் சமாளிக்க மூணு வருஷம் ஆயிட்டு.

2013-ல கோயம்புத்தூர்ல ஒரு கம்பெனியில கணக்கு எழுதுற வேலையில சேர்ந்தேன். அந்த வருஷமே ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதினேன். காத்திருப்புப் பட்டியலில் இடம்பெற்றேன். அதையும் நம்ப முடியாதுன்னு, 2016-ம் ஆண்டு வரை கோயம்புத்தூர் கணக்கர் வேலையிலேயே இருந்தேன். அதன் பிறகு, வருமானமும் பத்தாம, குடும்பத்தைப் பிரிஞ்சு இருக்கிற கஷ்டத்தால, நிரந்தரமா ஊருக்கே வந்துட்டேன். நான் கற்ற கலைகளை வெச்சு தொழில் செய்யலாம்னு நினைச்சேன். ஆனா, முடியலை. எங்க ஊரு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒன்றரை வருஷம் இலவசமா சொல்லிக்கொடுக்க மட்டுமே முடிஞ்சுது. எனக்கு வர்மக்கலை, பாடி மசாஜ் கலைகளைச் சொல்லிக்கொடுத்தவர் போன் பண்ணி, `லட்சம் லட்சமா சம்பாதிக்ககூடிய கலைகளைத் தெரிஞ்சுக்கிட்டு, இப்படி இருக்கிறியே'னு சொன்னார். அந்தக் கலைகளை மக்களிடம் புரியவெச்சு, அதை காசாக்கும் கார்ப்பரேட் புத்தி என் மண்டையில இல்லையே. தவிர, அந்தக் கலைகளை அப்படி காசாக்க எனக்கு பெரிய விருப்பமும் இல்லை. நான் என்ன பண்ண?

குடும்பத்துல வறுமை தாண்டவமாடுச்சு. அதனால, படிச்ச படிப்பு கிடக்கட்டும், கற்ற கலை இருக்கட்டும், குடும்பப் பாரம்பர்யத் தொழிலைப் பார்ப்போம்னு முடிவுபண்ணினேன். ஆடுகளை வாங்கி மேய்க்கத் தொடங்கினேன். அது பெருகுச்சு. அதை அடைச்சு வைக்க, ஷெட் போட்டேன். எனக்கு சொந்தமான அந்த இடத்தை பக்கத்து வீட்டுக்காரன் சொந்தம் கொண்டாட, பிரச்னையாகிடுச்சு. அதுல அஞ்சு லட்சம் ரூபாய் வரை நஷ்டம். அவ்வளவு துக்கப்பட்டு, கண்ணீர்விட்டு அழுதது அப்போதான். இருந்தாலும், கண் முன்னே இருக்கும் மனைவி, கொள்ளு விரையாட்டம் நிக்குற இரு பிள்ளைகளோட முகங்கள் என்னை உந்தித் தள்ளுச்சு. அவங்க என் கண்ணீரைத் துடைச்சாங்க.

`ஆடு, மாடு மேய்ச்சாலும் ஆளா ஆவலாம்'னு துணிஞ்சு கடன் வாங்கி இன்னும் பல ஆடுகளை வாங்கி மேய்ச்சேன். ரெண்டு வருஷம் ஆவுது. அஞ்சு லட்சம் ரூபாய் கடன் அடைச்சு, குழந்தைங்க படிப்புச் செலவுக்கு உதவி, குடும்பத்தைப் பழுதில்லாமல் ஓட்ட, இந்த ஆடுகள் தரும் வருமானம்தான் இப்போ உதவுது. கிருஷ்ணனே மாடு மேய்ச்சார்னு மனசைத் தேத்திக்கிட்டேன். ஆனா, கற்ற கலையை விடகூடாதில்லையா?

தென்கலை களரி, தமிழகக் கலை. அதை தமிழர்கள் கைவிட்டதாலேயே, அது கேரளாவுல பரவியிருக்கு. அதை அழியவிடக் கூடாதுன்னுதான் நான் ஆடு மேய்க்கிற இடத்துல செஞ்சி காட்டுறேன். மத்தவங்களுக்கும் சொல்லிக்கொடுக்கிறேன். ஆசனங்களையும் விடாமச் செய்றேன். இந்தக் கலையை எப்படியும் கரூர் மாவட்ட அளவிலாவது பரப்புவேன்.

எந்த வேலையும் இங்கே கெட்டவேலை இல்லை. பொய் சொல்றது, திருடுறதுதான் தப்பான வேலை. படிச்ச படிப்புக்கு ஏத்த வேலைக்காக ஒவ்வொருத்தரும் தேடி அலைஞ்சுக்கிட்டு இருந்தா, காலம்தான் ஓடும். காலடியில் எத்தனையோ வாய்ப்புகள் கிடக்கும். எனக்கு ஆடு மேய்க்கிற தொழில் கிடைச்ச மாதிரி. அதை கப்புன்னு புடிச்சு போய்க்கிட்டே இருந்தா, லைஃப் நல்லா இருக்கும். `அப்புறம் படிச்சப் படிப்பு எதுக்கு?'ன்னு நீங்க கேட்கலாம். படிச்ச படிப்பும், கற்ற கலைகளும் நமக்கு ஏற்படும் வாழ்க்கை மீதான அவநம்பிக்கைகளைத் துடைச்சுப் போடும் கைகுட்டையா இருக்கும். எனக்கு அப்படித்தான் இருந்துச்சு" என்று நம்பிக்கை டானிக் கொடுத்தார் வெள்ளைச்சாமி!

அடுத்த கட்டுரைக்கு