சினிமா
Published:Updated:

மோஸா - சிறுகதை

மோஸா - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
மோஸா - சிறுகதை

18.10.2018 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை...

மிழ் சினிமாவைப் பற்றிக் கொஞ்சம் உங்களுக்குத் தெரிந்திருந்தால், என்னையும் கொஞ்சம் அறிந்திருப்பீர்கள். மூன்று மாதங்களுக்கு முன்பு, எல்லா மியூசிக் சேனல்களிலும் பட்டையைக் கிளப்பிய `குஸ்ஸி குட்டான்… லஸ்ஸி போட்டான்’ என்ற சங்கத்தமிழ்ப் பாடல் இடம்பெற்ற படத்தின் இயக்குநர் நான். இதுவரை மூன்று படங்கள் இயக்கியிருக்கிறேன். 

மோஸா - சிறுகதை

பத்து ஆண்டுகள் உதவி இயக்குநராக நாக்குத்தள்ளி... சிலபல அவமானங்கள், பலபல துரோகங்கள்… ஏராளமான கண்ணீர் இரவுகளைக் கடந்து நான் இயக்கிய முதல் படம் சூப்பர் ஹிட்டாக, வாழ்க்கையே தலைகீழாக மாறியது. `வழுக்கைத்தலை’ என்று என்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்த அக்கா மகள், நள்ளிரவில் எனக்கு போன் போட்டு, ``சின்னப்பிள்ளையா இருக்கிறப்ப, சந்தையில எனக்கு வாட்ச் மிட்டாய் வாங்கித் தந்தியே… ஞாபகமிருக்கா மாமா?’’ என்று கேட்க, ``இல்லை’’ என்று போனை வைத்துவிட்டேன். அதுவரையிலும், `இது தேறாத கேஸ்’ என்று என்னை ஒதுக்கியிருந்த உறவினர்களும் நண்பர்களும், ``பத்து வருஷத்துக்கு முன்னாடி, எங்க வீட்டுல இட்லி சாப்பிட்டுட்டுதான் அவன் மெட்ராஸுக்கு பஸ் ஏறினான்’’ என்று எனது வெற்றிக்கு, அவர்கள் வீட்டு இட்லிதான் காரணம் என்றார்கள்.

ஆனால், எனது வெற்றிக்குக் காரணம் இட்லி அல்ல. ஒரு கொரியப் படத்தில், கொஞ்சம் ஆண்டிப்பட்டி, மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டு, டாடா சுமோ, லோ ஹிப் தாவணிக் கதாநாயகி... எனக் கலந்தடித்துத் தமிழ்ப்படுத்தினேன். வெற்றி தேவதை என்னை இறுக்கமாகக் கட்டிப்பிடிக்க, நாளது தேதியில் தயாரிப்பாளர்கள் மத்தியில் நான் ஒரு சுமாரான வான்ட்டட் இயக்குநர்.

இரண்டாவது படத்துக்கான கதைத் தேடலில் இருந்தபோது, நான் கப்பலில் சீனா செல்வது போல் தினம்தோறும் கனவு வந்தது. மிகவும் தாமதமாகத்தான் அது ஒரு குறியீடு என உணர்ந்து, ஒரு சீனப்படத்தை உல்டா செய்தேன். இந்த விஷயம் கேள்விப்பட்டு ஜப்பான், `ஒருகாலத்துல சீனாவுக்கே தண்ணிகாட்டினவங்க நாங்க. எங்கள கொஞ்சம் கண்டுக்கக் கூடாதா?’ என்று கோபித்துக் கொள்ள, மனசு கேட்காமல் ஒரு ஜப்பான் படத்தையும் உல்டா பண்ணியாகி விட்டது. இரண்டு படங்களும் சேட்டிலைட் மற்றும் ஓவர்ஸீஸ் உரிமையுடன் போட்ட காசை எடுக்க, இப்போது தயாரிப்பாளர்கள் எனக்கு ஜி.எஸ்.டி-யைக் கழித்துக்கொண்டு, இரண்டு கோடி ரூபாய் வரை சம்பளம் தரத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், பேர்தான் கொஞ்சம் கெட்டுவிட்டது.

உலகின் எந்த மூலையில் வந்த படத்தைக் காப்பியடித்தாலும், அதைக் கண்டுபிடிக்க வென்றே ஒரு கூட்டம் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் உலவிக்கொண்டிருக்கிறது. பொறாமை பிடிச்சவனுங்க. பரீட்சையில காப்பி அடிச்சு பாஸ் பண்ணுன பசங்க எல்லாம், என்னை `காப்பிகேட் டைரக்டர்’ என்று முத்திரை குத்திவிட்டார்கள். அதனால் இனிமேல் யாரும் கேள்வியேபட்டிராத படத்திலிருந்து காப்பி அடிப்பது என்று சபதமெடுத்திருக்கும் நான், இப்போது ஒரு பெரும் சிக்கலில் இருக்கிறேன்.
ஒரு தயாரிப்பாளர், முன்னணி நடிகர் ஸ்டீபனின் கால்ஷீட் அடுத்த மாதம் 22-ம் தேதியிலிருந்து இருப்பதாகக் கூறி, ஸ்டீபனை வைத்து ஒரு படம் டைரக்ட் செய்யச் சொல்லி 50 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார். இன்னும் 40 நாள்கூட இல்லை. அதற்குள் கதை ரெடி பண்ண வேண்டும். முழுக் கதைகூட வேண்டாம். ஒன்லைன்... ஒரே ஒரு கோல்டன் லைன் கிடைத்துவிட்டால் போதும். மானே, தேனே, பொன்மானேவெல்லாம் நான் சேர்த்துக்கொள்வேன். 

மோஸா - சிறுகதை

அந்த ஒன்லைனைப் பிடிக்க… நானும் என் மூன்று உதவி இயக்குநர்களும் கடந்த ஒரு மாதமாக தினசரி சராசரியாக நான்கு படங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், எதுவும் சிக்கவில்லை. இன்னும் அதிக நாள் இல்லை என்பதால், இன்று ஒரு கதையை இறுதிசெய்யும் முடிவுடன், என் உதவி இயக்குநர் வினோத்துடன் அலுவலகத்துக்குள் நுழைந்தேன்.

 என்னைப் பார்த்தவுடன் வார இதழ் படித்துக்கொண்டிருந்த என் அசிஸ்டென்ட் டைரக்டர் ஜான், புத்தகத்தை மெ...து...வா....க டீப்பாயில் வைத்தான். அதைவிட மெதுவாக எழுந்து, ``குட்மார்னிங் சார்…’’ என்று கூறிவிட்டு, ஜன்னலுக்கு வெளியே கத்திக் கொண்டிருந்த காகத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். அவனின் சுறுசுறுப்பற்ற தன்மைக்குக் காரணம் நான்தான்.

ஜான் கண்ணாடி போட்டுக்கொண்டு, தலையில் எண்ணெய் தடவாமல், அயல்நாடுகளிலிருந்து வரவழைக்கும் பாரீஸ் ரெவ்யூ, கிரான்ட்டா, டின் ஹவுஸ் போன்ற இலக்கியப் பத்திரிகைகளைப் படிக்கும், ஏராளமான ஆர்ட் ஃபிலிம்கள் பார்க்கும் அறிவுஜீவி சாதி. குறிப்பாக, ஒரே இடத்தில் ஒரே ஷாட்டில் ஒண்ணரை மணி நேரம் ஓடும் ஆர்ட் ஃபிலிமைக்கூட, பத்தாண்டுகளுக்கு முந்தைய சன்னி லியோனைப் பார்ப்பதுபோல் ஆர்வத்துடன் பார்ப்பான். எனவே, கதை சுடுவதற்காக ஆர்ட் ஃபிலிம்களைப் பார்க்கும் வேலையை ஜானிடம் ஒப்படைத்தேன். எப்போதும் காகங்கள் கத்தும், கதாபாத்திரங்கள் மிகவும் மெதுவாக நடந்து, அதைவிட மெதுவாகப் பேசும் ஆர்ட் ஃபிலிம்கள் பார்ப்பதற்கு போராக இருந்தாலும், அதில் அற்புதமான சில லைன்கள் கிடைக்கும். எனவே, கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து ஆர்ட் ஃபிலிம்களைப் பார்த்துப் பார்த்து, ஜான் எல்லாக் காரியங்களையும் ஆர்ட் ஃபிலிம் கதாபாத்திரங்கள்போல் மெதுவாகச் செய்ய ஆரம்பித்துவிட்டான்.

``டேய்... `டோஸார்’ பெங்காலிப் படம் பார்த்துட்டியா?’’ என்றேன் சத்தமாக. அதற்கு ஜான், ஐந்து நிமிடத்துக்கு முன்பு தனது குடும்பத்தையே ஒரு விபத்தில் பறிகொடுத்தாற் போல் முகத்தை வைத்துக்கொண்டு, ஜன்னலுக்கு வெளியே கத்திக்கொண்டிருந்த காகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு, தலைகுனிந்து தரையைப் பார்த்தபடி பின்முடியைக் கோதினான். நான் வினோத்திடம், ``டேய்... `டோஸார்’ படம் பார்த்துட்டியான்னு கேட்டேன். ஒரு `ம்’ சொல்றானா பாரு’’ என்றேன்.

``பாவம் சார். லாஸ்ட் ஒன் மன்த்ல மட்டும் மொத்தம் 118 அவார்டு படம் பார்த்து இப்படி ஆகிட்டான். இதாச்சும் பரவால்ல. முந்தாநேத்து ராத்திரி, `நீ சாப்டுட்டியா?’னு கேட்டேன். மறுநாள் காலையில நான் தூங்கி எந்திரிக்கிற வரைக்கும் பக்கத்துலேயே உட்கார்ந்திருந்து நான் எந்திரிச்சவுடனே, `சாப்பிட்டுட்டேன்’னு சொல்றான்’’ என்றவுடன் அதிர்ந்தேன்.

இப்போது நிமிர்ந்த ஜான், ``ம்... நேத்து... ராத்திரி... பார்த்தேன்... ரிதுபர்ணகோஷ்... கலக்கிட்டாரு’’ என்று சொல்லி முடிப்பதற்குள், நான் மாடி அறையில் என் இருக்கையில் உட்கார்ந்திருந்தேன்.

``குட்... கதையச் சொல்லு’’ என்றவுடன் ஜான் திரும்பி ஜன்னலில் கத்தும் காகத்தைப் பார்த்தான். கடுப்பான நான் வினோத்திடம், ``முதல்ல ஆபீஸைச் சுத்தியிருக்கிற அத்தனை காக்காவையும் பிடிச்சுக் கொல்லுடா’’ என்று கூறிவிட்டு, ``டேய் ஜானு, தினம் நூறு காக்கா கத்தும்டா... முதல்ல நீ கதையைச் சொல்லு’’ என்றவுடன், அவன் திரும்பி மேலே சுற்றும் ஃபேனைப் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

``ஐயோ..! காக்காவ விட்டா ஃபேன பாக்க ஆரம்பிச்சுடுவான்டா... முதல்ல ஆபீஸ்ல இருக்கிற ஃபேன எல்லாம் கழட்டி எறிங்கடா’’ என்ற நான் ஜானின் அருகில் சென்று, ``டேய், ப்ளீஸ்டா... இன்னும் 40 நாள்ல ஷூட்டிங் போகணும்டா. தயவுசெஞ்சு கதையச் சொல்லிடுடா’’ என்றேன். அடுத்து ஐந்து நிமிடம் எடுத்துக்கொண்டு ஜான், ``ஹீரோ கௌசிக் தனது கள்ளக்காதலியோட... அவளும் மேரீட்... ஹோட்டல்ல தங்கிட்டுத் திரும்பி வர்றப்ப...’’ என்று ஆரம்பிக்க, வினோத், ``ஹோட்டலுக்கு எதுக்குப் போனாங்க?’’ என்று அப்பாவியாகக் கேட்டான்.

கடுப்பான நான், ``ம்... ரவாதோசை சாப்பிட. கள்ளக்காதலர்கள் எதுக்குடா ஹோட்டல்ல தங்குவாங்க? அவனே இப்பதான் கதைய சொல்ல ஆரம்பிச்சிருக்கான். நீ சொல்லுடா’’ என்றேன் ஜானிடம்.

மோஸா - சிறுகதை

ஜான் தொடர்ந்து, ``ஹோட்டல்ல இருந்து ரிட்டர்ன் வர்றப்ப ஆக்ஸிடென்ட்ல கள்ளக்காதலி செத்துடுறா. ஹீரோ பொழச்சுக்குறான். ரெண்டு பேரு வீட்டுலயும் விஷயம் தெரிஞ்சுடுது. அப்புறம் என்னாவுதுன்னு கதை’’ என்ற ஜானை முறைத்தேன். தொடர்ந்து ஜான், ``அதுக்கு நடுவுல இன்னொரு கிளைக் கள்ளக்காதல் கதையும் வருது’’ என்றான்.

``நாசமாப்போக... அது ஏன் சார் அவார்டு படத்துல எல்லாரும் தன் பொண்டாட்டிய காதலிக்காம, ஊரான் பொண்டாட்டியவே காதலிக்கிறாங்க?’’ என்றான் வினோத்.

``நீ வேற ஏன்டா கடுப்பேத்துற... ஜானு, நான் அடல்ட் கன்டென்ட் கதை கேட்கலடா. கள்ளக்காதலெல்லாம் இல்லாம, ஏதாச்சும் புதுமையான யூத் கதை இருந்தா சொல்லுடா’’ என்றேன்.

``புதுமையான யூத் கதைன்னா... `மல்லிலா’ன்னு ஒரு தாய்லாந்து ஃபிலிம். ஹோமோசெக்ஸுவல் லவ்வர்ஸ் பத்தின கதை.’’

உடனே வினோத், ``சூப்பர் சார்... ஸ்டீபனையே டபுள் ஆக்ட்டுல ஹோமோவா போட்டுடலாம்’’ என்ற வினோத்தின் மண்டையில் ஓங்கி அறைந்த நான், ``டேய் வீணாப்போனவன்ங்களா… நான் அவார்டு படம் எடுக்கக் கதை கேக்கலடா. நல்லா கமர்ஷியலா அடாப்ட் பண்ற மாதிரி தீம் இருந்தா சொல்லுங்கடா. நீ மகேந்திரன வரச்சொல்லு’’ என்றேன் வினோத்திடம்.

மகேந்திரன், 25 வயது விஸ்காம் பையன். அவனை, கடந்த 1960 மற்றும் 1970-களில் வெளிவந்த தமிழ்ப் படங்களைப் பார்க்கச் சொல்லியிருக்கிறேன். இந்தப் பழைய படங்களில் மிகையான நடிப்பும், படுசெயற்கையான காட்சிகளும் இருந்தாலும் சில படங்களிலிருந்து அருமையான ஒன்லைன் கிடைக்கும். ஆனால் அதில் ஒரு பிரச்னை என்னவென்றால்... வேண்டாம், மகேந்திரன் வந்தவுடன், தானா உங்களுக்குத் தெரிந்துவிடும்.

மடாரெனக் கதவைத் திறந்துகொண்டு வேகமாக ஓடிவந்த மகேந்திரன், ``சார்... இந்தப் பாவிய மன்னிச்சுடுங்க சார்... மன்னிச்சுடுங்க. பக்தன் கூப்பிட்டுதான் தெய்வம் வரணும். தெய்வம் கூப்பிட்டு பக்தன் வரக் கூடாது. தெய்வம் வந்ததையே இந்தப் பாவி பக்தன் கவனிக்காமப்போயிட்டேன். மன்னிச்சுடுங்க சார்... மன்னிச்சிடுங்க’’ என்று கண்கலங்க, நான் வெறுத்துப்போய் தலையில் கையை வைத்துக்கொண்டு வினோத்திடம், ``ஜான் அண்டர்ப்ளே... இவன் ஓவர் ஆக்ட்...’’ என்றேன்.
``கோச்சுக்காதீங்க சார். மொத்தம் 187 பழைய படம் பார்த்து...’’

``தெரியுது...’’ என்று மகேந்திரனை நோக்கி, ``நேத்து என்ன படம் பார்த்த?’’ என்றேன். அப்போது தெருவில் ஏதோ இரண்டு வாகனங்கள் மோதும் சத்தம் கேட்டது. உடனே பழைய படக் கதாநாயகிகள்போல் மகேந்திரன் தனது வலதுகை விரல்களை விரித்து, புறங்கையால் தனது வாயை மூடிக்கொண்டு, ``ஆ...’’ என்று கத்த... எனக்கு வெடவெடத்துவிட்டது. ஓடிப்போய்ப் பார்த்ததில் இரண்டு பைக்காரர்கள் மோதிக் கீழே விழுந்திருந்தார்கள். அவ்வளவுதான்.

மோஸா - சிறுகதை

``இதுக்கு ஏன்டா இந்தக் கத்துக் கத்தற... சரி, நேத்து என்ன படம் பார்த்த?’’

`` `ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படம் பார்த்தேன். அதுல ஒரு மலைக்கிராமத்துல வசிக்கிற சிவகுமார் மனைவி தீபாவுக்கும், அந்த ஊருக்கு வர்ற சிவச்சந்திரனுக்கும்...’’ என்றவுடன் அவன் தலையில் தட்டிய நான், ``காலங்காத்தால ஏன்டா வரிசையா கள்ளக் காதல் கதையா சொல்லி உயிரெடுக்குறீங்க? என்னை ஃபீல்டவிட்டு அனுப்புறதுன்னே முடிவுபண்ணீட்டீங்களா? ஏதாச்சும் டிஃபரென்ட்டா லைன் பிடிங்கடா.’’

``சார்... `பிஃபோர் சன்ரைஸ்’ படம்... இல்லைன்னா `பிஃபோர் சன்செட்’ட உல்டாப் பண்ணி...’’

``அதெல்லாம் கண்டுபிடிச்சிடுவாங்கடா. ரொம்ப பாப்புலர் இல்லாத படமா இருக்கணும். போன வருஷம் வந்ததே... அது என்ன படம்? ராபின் கேம்ப்பில்லோ டைரக்ட் பண்ணது.’’

``120 மினிட்ஸ் பர் பீட்’’ என்றான் ஜான்.

``ம்... அது நல்லாதான் இருக்கு. பேசாம அதையே பண்ணிடுவோமா?’’
 
``வேண்டாம் சார். டைரக்டர் ஜோ சார் அந்த லைன்லதான் படம் பண்ணியிருக்காரு. படம், அடுத்த மாசம் ரிலீஸ்’’ என்றான் வினோத்.

``டேய்... இப்பதான்டா அந்தப் படம் ஆன்லைன்லயே வந்துச்சு.’’

``ஆமாம்... லாஸ்ட் இயர் கோவா ஃபிலிம் ஃபெஸ்டிவல்ல அந்தப் படத்தைப் பார்த்திருக்காங்க சார்...’’ என்றான் வினோத். நான் ஆத்திரத்துடன், ``திருட்டுப்பசங்க... ஒரு படத்தை விட்டுவைக்கிறானுங்களா? உங்கள கோவா ஃபெஸ்டிவலுக்குப் போங்க, போங்கன்னு தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன். கேட்டீங்களாடா?’’ என்றேன். 

``சார்... `தி மேன் ஃப்ரம் நோவேர்’னு போன வாரம் ஒரு கொரியன் படம் பார்த்தோம்ல? அதை…’’ என்றவுடன் கையெடுத்துக் கும்பிட்ட நான், ``அய்யா சாமி... இந்தக் கொரியா சங்காத்தமே வேண்டாம். நம்மாளுங்க இப்ப கொரியன் கன்சுலேட்ல கொரியன் மொழி கத்துக்கிட்டு, சப்டைட்டில் இல்லாமலேயே கொரியா படம் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. ஒரே கதைய நாலு பேரு எடுத்துட்டிருப்போம். அப்புறம்... அதுக்கு பஞ்சாயத்து ஓடும். ரெண்டாவது... `காப்பிகேட் டைரக்டர்’னு எனக்குக் கெட்டபெயராயிடுச்சு. இந்தப் படத்துல அதை பிரேக் பண்ணணும்.’’

``அப்ப... இனிமே காப்பியே அடிக்கப்போறதில்லையா சார்?’’

``சேச்சே... அது எப்படி முடியும்? காப்பிதான் அடிக்கிறோம். ஆனா இங்க... இந்தியாவுல ஒரு ஜீவனுக்குக்கூட அது காப்பிக் கதைன்னு தெரியக் கூடாது.’’

``அது எப்படி சார்? ஒரு நல்ல கதைன்னா எல்லாரும் பார்த்திடுறாங்க.’’

``அந்தப் படம், ஆன்லைன்ல இருக்கக் கூடாது; டிவிடி-லயும் இருக்கக் கூடாது; ஃபிலிம் ஃபெஸ்டிவல்லயும் ஸ்கிரீன் பண்ணியிருக்கக் கூடாது. அந்த மாதிரி வெளிநாட்டுப் படம் என்னன்னு கண்டுபிடிக்கிறோம்.’’

``சரி... அந்தப் படத்தை நம்ம எப்படிப் பார்க்கிறது?’’ என்று வினோத் கேட்டவுடன், நான் அமைதியானேன். அவன் கேட்பதும் சரிதான். கண்களை மூடி, சில விநாடி யோசித்தேன். சட்டென்று கண்ணைத் திறந்த நான், ``நேரா அந்த நாட்டுக்கே போய்ப் பார்த்துட்டு வருவோம்’’ என்றவுடன் என் அசிஸ்டென்ட்ஸ் மூவரும் அசந்துவிட்டனர். இரண்டு நிமிடம் ஒருவரும் பேசவில்லை. முதலில் மகேந்திரன்தான் சுதாரித்துக்கொண்டு தடாலென்று என் காலில் விழுந்து, ``சார்... இன்னும் இருபது வருஷத்துக்கு உங்கள யாரும் அடிச்சுக்க முடியாது சார்… சினிமாவுக்குன்னு ஒரு தெய்வத்தக் கண்டுபிடிச்சா, அதோட சிலைய உங்கள மாதிரிதான் செய்யணும் சார்’’ என்று கூற, ஜானும் வினோத்தும் இன்னும் பிரமிப்பிலிருந்து விடுபடாமல் என்னைப் பார்த்தனர்.

மோஸா - சிறுகதை

தொடர்ந்து நான், ``ஆனா நீங்க இதை யாருகிட்டயும் மூச்சு விடக் கூடாது’’ என்றேன்.

``மூச்... அப்புறம் நாங்க டைரக்டராயி இதை ஃபாலோ பண்ணவேண்டாமா?’’

``குட்... அந்த மாதிரி ஒரு படத்தை செலெக்ட் பண்ணிவைங்க’’ என்று கூறிவிட்டு எழுந்தேன்.

மறுநாள் நான் அலுவலகம் சென்றபோது, ஜான் ஜன்னலுக்கு வெளியே கத்தும் காகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். நான் வேகமாகச் சென்று ஜன்னலைச் சாத்திவிட்டுத் திரும்ப, ஜான் மேலே சுழலும் ஃபேனைப் பார்த்தான். நான் ஃபேனை நிறுத்திவிட்டு, ``டேய்... நான் சொன்னது என்னடா ஆச்சு?’’ என்றேன்.

``ரெடி... `தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ இந்திப் படம், மும்பை `மராத்தா மந்திர்’ தியேட்டர்ல தொடர்ச்சியா ஆல்மோஸ்ட் 20 வருஷம் ஓடியிருக்கு. ஆனா, அதையும் தாண்டி ஒரு படம் 22 வருஷமா ஒரே தியேட்டர்ல இன்னும் தொடர்ச்சியா ஓடிட்டிருக்கு.’’

``என்னா படம்டா... ஏதாச்சும் இங்கிலீஷ் படமா?’’

``இல்ல... இங்கிலீஷ் படம்னா மாட்டிக்குவோம். நான் முதல்ல யாரும் கேள்விப்பட்டிராத மொழிகள் பேசுற 54 நாடுங்கள ஷார்ட்லிஸ்ட் பண்ணினேன். அப்புறம் அந்த 54 நாட்டுல, சினிமா எடுக்கிற 22 நாடுங்கள ஷார்ட்லிஸ்ட் பண்ணினேன். அப்புறம் அந்த நாட்டுல இருக்கிறவங்கள ஃபேஸ்புக்லயும், ட்விட்டர்லயும் கான்டாக்ட் பண்ணி சாட் பண்ணினேன். அவங்க ஊர்ல எந்தப் படம் ரொம்ப ஹிட்டுன்னு விசாரிச்சேன். ஒரு படம் ஓகேன்னு தோணுது.’’

``என்ன படம்?’’

``மோஸா’’

``மோஸா?’’ என்று நாங்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

``நீங்க இன்டர்நெட்ல சர்ச் பண்ணினா இதைப் பத்தி ஒரு தகவல்கூட இருக்காது. ஏன்னா, இது அதிகம் பாப்புலர் இல்லாத ஒரு நாட்டுல ஓடிக்கிட்டிருக்கு.’’

``எந்த நாடு?’’

``வெஸ்ட் ஆப்பிரிக்காவுல, நைஜீரியா பக்கத்துல இருக்கிற மொங்கிஸ்ட்ரியா. அங்க ரிஜோனா மொழில 1996-ல இருந்து `மோஸா’ படம் ஓடிக்கிட்டிருக்கு.’’

``இன்னும் தியேட்டர்ல ஓடுதாடா?’’

``ஆமாம். மொங்கிஸ்ட்ரியா கேப்பிட்டல் ரொஸாம்பில இருக்கிற அக்குஜாங்கிற தியேட்டர்ல 22 வருஷமா ஓடிக்கிட்டிருக்கு. அதில்லாம இன்னைக்கும் அந்த நாட்டுல இருபது தியேட்டர்ல ஓடிக்கிட்டிருக்கு.’’

``கதை ஒன்லைன்கூட நெட்ல இல்லையாடா?’’

``ஒரு ஸ்டில்கூட இல்லை.’’

``இது போதுமே... பின்னிடலாம்டா...’’ என்ற நான் எழுந்து அவன் கையைப் பற்றிக் குலுக்கி, ``அந்த நாட்டுக்கு எப்படிடா போறது?’’ என்றேன்.

``இங்கிருந்து நைஜீரியா கேப்பிட்டல் அபூஜாவுக்கு ஃப்ளைட் இருக்கு. அங்க போய் கனெக்ட்டிங் ஃப்ளைட்டப் பிடிச்சு ரொஸாம்பிக்குப் போகணும். ஆனா, போய்ச் சேரவே இருபது மணி நேரம் ஆகிடும். இதில்லாம, ஒரு ஆள் போயிட்டு வர டிக்கெட்டே ரெண்டு லட்சம் ரூபாய் ஆகிடும்.’’

``எவ்ளோ நாளானாலும், எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல. நாலு பேரும் போறோம்’’ என்றவுடன் மூவர் முகமும் மலர்ந்தது. யாராவது ஒருவரை அழைத்துக் கொண்டு, மற்றவர்களை விட்டுச் சென்றால் வம்பு. கடுப்பில் வெளியே மேட்டரை லீக் செய்துவிடுவார்கள். தொடர்ந்து நான், ``மேக் டை ட்ரிப்ல என்னைக்கி டிக்கெட் அவெய்லபிள்னு பாரு’’ என்றேன்.

``பார்த்துட்டேன். வர்ற 18-ம் தேதிக்கு டிக்கெட்ஸ் இருக்கு. டிராவல்ஸ்ல பேசிட்டேன். ஒரே ஒரு பிரச்னைதான். மொங்கிஸ்ட்ரியா கன்சுலேட் மெட்ராஸ்ல இல்ல. டெல்லி சிவாஜி நகர்லதான் இருக்காம். ஸோ... விசாவுக்கு டெல்லி போகவேண்டியிருக்கும்.’’

``அதெல்லாம் போயிடலாம். அது சரி... மொங்கிஸ்ட்ரியா போய் லோக்கல் பாஷை தெரியாம என்ன பண்றது?’’

``அதுக்கும் ஏற்பாடு பண்ணிடலாம். என்னோட ஃப்ரெண்டு ஒருத்தனோட தங்கச்சி நிமிஷா, அங்கதான் ஆயில் ரிஃபைனரி புராஜெக்ட்ல ஒர்க் பண்ணிட்டிருக் கான்னு இப்பதான் ஒரு ஃப்ரெண்டு சொன்னான். நான் ஃப்ரெண்டுகிட்ட பேசிடுறேன். கடகடன்னு வேலையைப் பார்க்குறோம். 18-ம் தேதி ரொஸாம்பில இறங்குறோம்.’’

 இறங்கினோம்.

ரொஸாம்பி ஏர்போர்ட்டில் இந்திய ஒரு ரூபாய்க்கு லோக்கல் ஜிகுரா ரூபாய், 14 ரூபாய் தந்தார்கள். ஏர்போர்ட்டில் எங்களைத் தவிர அனைவரும் கறுப்பின மக்களாகவே இருந்தனர். ஆண்கள் பெரும்பாலும், நீளமாக பாவாடை போன்ற கீழாடையும் சட்டையும் அணிந்திருந்தார்கள். பெண்கள், இப்படித்தான் என்று சொல்ல முடியாத விநோதமான ஆடைகளில் இருந்தார்கள். நாங்கள் அவர்களையும், எங்களை அவர்களும் வேடிக்கை பார்க்க... நாங்கள் காபி ஷாப்பில் காபி வாங்கிக்கொண்டு நிமிஷாவுக்காகக் காத்திருந்தோம்.

``என்னடா... ஒரு டூரிஸ்ட்டையும் காணோம்?’’ என்றேன்.

``இது... கொஞ்சம் டெவலப் ஆகாத நாடு. இப்பதான் பெட்ரோலெல்லாம் கண்டுபிடிச்சு, பிசினஸ்ல ஒரு விர்ஜின் மார்க்கெட் ஓப்பன் ஆகிருக்கு. அதனால லாஸ்ட் ஒன் இயராத்தான் வெளியாளுங்க வர ஆரம்பிச்சிருக்காங்க’’ என்று ஜான் கூறிக்கொண்டிருக்கும்போதே தூரத்தில் பேன்ட்டும் டீஷர்ட்டும் அணிந்து கொண்டு ஓர் இளம் இந்தியப் பெண் வருவது தெரிந்தது. ``ஷீ மஸ்ட் பீ நிமிஷா’’ என்றான் ஜான்.

அருகில் நெருங்கி வந்தவளின் டீஷர்ட் மார்புப் பகுதியில், ``டோன்ட் ஸீ ஹியர்!’’ என்று எழுதியிருந்ததால், அனைவரும் அங்கேயே பார்த்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் எழுந்தோம். எங்களைப் பார்த்தவுடன் அருகில் நெருங்கிய நிமிஷா, அழகிக்கும் பேரழகிக்கும் நடுவில் இருந்தாள். மாநிறத்தை ப்ளீச் செய்து வெள்ளையாக்க முயன்று பாதிதான் ஜெயித்திருந்தாள். அழகிகள் தாங்கள் மேலும் அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என நினைக்கும்போது, தங்கள் நெற்றிமுடியை மேல்நோக்கி ஒதுக்கிக் கொள்வார்கள். எனவே, நிமிஷாவும் ஒதுக்கிக் கொண்டாள்.

எங்களை நோக்கி வந்து, ``ஜான்?’’ என்று கேள்வியுடன் பார்க்க... ``யெஸ்...’’ என்று ஜான் கையைக் குலுக்கினான். அப்போது திரும்பி என்னைப் பார்த்த நிமிஷா, ``ஒன் மினிட்’’ என்று வேகமாக அருகில் இருக்கும் ஒரு கடையை நோக்கிச் சென்றாள். இரண்டு நிமிடத்தில் ஒரு தொப்பியோடு வந்தாள். நாங்கள் ஒன்றும்புரியாமல் பார்த்துக் கொண்டோம். வேகமாக என் அருகில் வந்த நிமிஷா, அந்தத் தொப்பியை என் தலையில் மாட்ட... நான் வெறுத்துப்போய்விட்டேன். `வழுக்கையான தோற்றத்தில் அவ்வளவு கேவலமாக இருக்கிறேனா என்ன?’ எனது முகம் மாறுவதை கவனித்துவிட்ட நிமிஷா, ``தப்பா எடுத்துக்காதீங்க. உங்க பாதுகாப்புக் காகத்தான்’’ என்றாள்.

``என் பாதுகாப்புக்கு என்ன?’’ என்றேன் குழப்பத்துடன்.

``ஆப்பிரிக்கன் கன்ட்ரீஸ்ல நிறைய மூடநம்பிக்கை இருக்கு. மொசாம்பிக் நாட்டுல, வழுக்கைத்தலையர்கள் தலையில் தங்கம் நிறைய இருக்கும்னு ஒரு நம்பிக்கை. அதனால லாஸ்ட் இயர் அங்க மூணு வழுக்கைத்தலைக் காரங்களைக் கொன்னு, மண்டைய உடைச்சு, தங்கம் இருக்கான்னு பார்த்திருக்காங்க’’ என்றவுடன் நான் அதிர்ந்தேன். என் அசிஸ்டென்ட்ஸ் மூவரும் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கினர்.

``போன வருஷம் நியூஸ்பேப்பர்ல எல்லாம் வந்துச்சே… பார்க்கல?’’ என்றாள் நிமிஷா. நான் அசட்டுத்தனமான சிரிப்புடன், ``ஞாபகமில்ல... சரி, அதுக்கென்ன இப்ப... மொஸாம்பிக்லதான?’’ என்றேன்.

``ஆமாம். ஆனா அந்த வதந்தி பரவி, இப்ப இந்த நாட்டுக்கும் வந்துடுச்சு. அதனால...’’ என்று இழுத்தாள். ``பரவால்ல சொல்லுங்க’’ என்றேன்.

``இங்கயும் தங்கத்துக்காக வழுக்கைத் தலைக்காரங்கள கொல்ல ஆரம்பிச்சுட்டாங்க’’ என்றவுடன் எனக்கு அடிவயிறு கலங்கியது. தொடர்ந்து நிமிஷா, ``நேத்துதான் நாலு பேரக் கொன்னாங்க. இங்க ரொஸாம்பி அவுட்டர்லகூட, ஒரு வழுக்கைத் தலைக்காரர இன்னைக்கி விடியக்காத்தால கொன்னு மண்டைய உடைச்சுப் பார்த்திருக்காங்க’’ என்றாள்.

உடனே வினோத், ``தங்கம் இருந்துச்சா?’’ என்று கேட்க... நான் அவனை முறைத்தேன்.

சிரித்த நிமிஷா, ``அதனால… போலீஸ் எல்லா வழுக்கைத் தலைக்காரங்களையும் எச்சரிக்கையா இருக்கச் சொல்லியிருக்காங்க’’ என்றாள்.

அரண்டுபோன நான் பீதியுடன், ``என்ன மேடம்... வந்தவுடனே திகில ஏத்துறீங்க? எனக்கு இன்னும் கல்யாணம்கூட ஆகலங்க. 30 வயசாவுது... சினி ஃபீல்டுல இருக்கன்னு பேரு. சத்தியமா சொல்றேன்ங்க... இன்னைய வரைக்கும் ஒரு கிஸ்கூட ஒரு பொண்ணுக்கும் கொடுத்ததில்லங்க’’ என்றேன்.

``எரியல் கம்ப்ளீட் விர்ஜின் சிங்கிள்’’ என்று ஜான் கூறியவுடன் சத்தமாகச் சிரித்த நிமிஷா, ``பயப்படாதீங்க. ஒண்ணும் ஆயிடாது. தனியா எங்கயும் போயிடாதீங்க’’ என்றாள்.

ஏர்போர்ட்டிலிருந்து வெளியே வந்தவுடன் சாலையோரமாக ஒரு பெரிய பாம்பை அடித்துப் போட்டிருந்தார்கள்.

``என்னங்க... சிட்டியில பாம்பெல்லாம் வருது!’’ என்றேன்.

``சிட்டின்னாலும் இது மலைப்பகுதி நாடு. பக்கத்துலேயே காடெல்லாம் இருக்கு. பயப்படாதீங்க. இந்தப் பாம்பு கொத்தாது. படம் எடுத்துதான் காண்பிக்கும். அப்படி படம் எடுத்து காமிக்கிறப்ப, ஒரு அடி ஹைட்டுக்கு தலை மட்டும் இருக்கும்.’’

``அது இருந்துட்டுப்போகுது. கொத்தாதுல்ல?’’

``கொத்தாது. ஆனா, அப்படியே விஷத்த நம்ம கண்ணப் பார்த்து பீய்ச்சியடிக்கும். அதனால இதை `ஸ்பிட்டிங் கோப்ரா’ன்னு சொல்வாங்க’’ என்றவுடன் எனக்கு லேசாக வியர்த்தது.

சாலையில் செல்லும்போது கார்க் கண்ணாடியைத் திறக்க முடியாதவாறு லாக் செய்திருந்தார்கள். தூரத்தில் நகருக்கு வெளியே மலை முகடுகள் மங்கலாகத் தெரிந்தன. சாலை குறுகலாக இருந்ததால், ஏகப்பட்ட வாகனங்கள் நெருக்கியடித்துக் கொண்டு மெதுவாகச் சென்றன. ஒரு ஏடிஎம் வாசலை நோக்கி இருபது, முப்பது பேரை போலீஸ் காவலுடன் அழைத்துச் சென்றார்கள்

``ஏடிஎம்-க்கு ஏங்க போலீஸ் காவலோட போறாங்க?’’

``தனியா போனா, திருடங்க அவங்கள சுட்டுக்கொன்னுட்டு பணத்த எடுத்துடுவாங்க. அதனால இங்க கம்பெனிங்கள்ல சம்பளம் போட்டவுடனே, போலீஸ் காவலோட எல்லா ஸ்டாஃபும் ஏடிஎம் போய் சம்பளத்தை எடுத்துட்டு வருவாங்க’’ என்றவுடன் எனக்கு நாக்கு உலர்ந்து, எச்சிலை விழுங்கினேன். உயிரைக்கொடுத்து சினிமா எடுப்பது என்பார்களே. அது இதுதானா?

ஹோட்டல் அறைக்கு வந்து கதவைச் சாத்தியவுடன்தான் சற்று நிம்மதியாக இருந்தது. தொப்பியைக் கழற்றிக் கீழே வைத்துவிட்டு நிமிஷாவிடம், ``நீங்க `மோஸா’ படம் பார்த்திருக்கீங்களா?’’ என்றேன்.

``இல்ல... ஐயம் நாட் இன்ட்ரஸ்டட் இன் மூவீஸ். நான் கடைசியா பார்த்த படம்... ஸ்கூல்ல படிக்கிறப்ப...’’ என்று இழுக்க, ``சுத்தம்...’’ என்று என் ஆர்வம் தணிந்தது.

``அந்தப் படத்துல வந்த பாட்டுக்குக்கூட நான் ஸ்கூல்ல ஆடியிருக்கேன். என்ன பாட்டு... ம்... ஊ... லலல்லா...’’

``மின்சாரக்கனவு...’’

``யா… யா... சம்திங் லைக் தட்... அதான்  நான் கடைசியா பார்த்தது.’’

``ரொம்ப சந்தோஷம். இந்த நாட்டப் பத்தி நீங்க சொல்றதையெல்லாம் கேட்டா திகிலா இருக்கு. நீங்க மொதல்ல அந்த `மோஸா’ படத்துக்கு அழைச்சுட்டுப்போங்க. இன்னைக்கே செகண்ட் ஷோ பார்த்துட்டு நாளைக்கி ஊரப் பார்க்கப் போய்ச் சேர்றோம்.’’

``நேத்து ஜான் ஃபோன்ல சொன்னப்பவே நான் விசாரிச்சுட்டேன். லாஸ்ட் வீக்தான் அந்தப் படத்த எடுத்தாங்களாம்.’’

``ஐயய்யோ! அப்புறம்...’’

``பயப்படாதீங்க. வேற ஏதோ ஊர்ல ஓடுதுன்னு சொன்னாங்க. விசாரிக்கச் சொல்லியிருக்கேன். நாளைக்கி அழைச்சுட்டுப் போறேன். பை...’’ என்று கூறிவிட்டு வெளியே சென்றாள்.

சில நிமிடத்தில் ரூமின் காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. நான் எழுந்து கதவை நோக்கி நடந்தேன். அப்போது ``சார்..!’’ என்று பயங்கரமாகக் கத்திய மகேந்திரன், அப்படியே அந்தரத்தில் பாய்ந்து என் இடுப்பைப் பிடிக்க... நான் அப்படியே கீழே விழுந்து உருண்டேன். வேகமாக எழுந்த நான், ``என்னடா ஆச்சு... உன் ஓவர் ஆக்டிங்குக்கு அளவே இல்லையா?’’ என்றேன்.

அவன், ``சார்...’’ என்று என் தொப்பியை நீட்ட... நான் அவனை நன்றியுடன் பார்த்தேன். அருகில் நெருங்கி அவன் தோள்களை ஆதரவாகப் பிடித்து, ``தேங்க்ஸ்டா’’ என்றேன். கதவைத் திறந்தேன். வெளியே நின்றிருந்த ரூம்பாய் இரவு உணவு குறித்து விசாரிப்பதற்காக வந்திருந்தான்.

 அன்றிரவு என் கனவில் நான்கு முறை ஸ்பிட்டிங் கோப்ரா வந்து, புளிச் புளிச்சென என் கண்களில் விஷத்தைத் துப்ப, சரியாகத் தூங்கவேயில்லை.

மறுநாள் காலை 10 மணிக்கு அறைக்கு வந்த நிமிஷா, ``யூ ஆர் லக்கி. இங்கிருந்து 40 கிலோமீட்டர் தாண்டி ஒரு டவுன்ல அந்தப் படம் ஓடுது. இன்னைக்கி ஈவ்னிங் 4’O clock show இருக்கு’’ என்றவள் வெளியே பார்த்து, ``அகோ...’’ என்று அழைக்க... கறுப்பினப் பெண்மணி உள்ளே வந்தாள்.

``இவதான் இங்க என் அசிஸ்டென்ட். இவளோட கிராமத்தத் தாண்டித்தான் அந்த டவுனுக்குப் போகணும். ரொம்ப நாளா சாப்பிட என்னைக் கூப்பிட்டுக்கிட்டிருக்கா. இன்னைக்கி என் இண்டியன் ஃப்ரெண்ட்ஸோடு வரலாமான்னு கேட்டேன். ஓகேன்னு சொல்லிட்டா.’’

நாங்கள் ஹோட்டலை விட்டு வெளியே வந்தபோது காற்றில் சடாரென என் தொப்பி பறக்க... என் உயிரே போய்விட்டதுபோல் இருந்தது. ``டேய்... தொப்பிய பிடிங்கடா...’’ என்று கத்த, ஜானும் மகேந்திரனும் பாய்ந்து ஓடி என் தொப்பியைத் தேடினர். அதற்குள் சிலர் என் தலையையே பார்க்க, எனக்கு வெடவெடவென நடுங்க ஆரம்பித்துவிட்டது. ``ஐயோ... என்னைக் குறிவெச்சுட்டாங்க’’ என்று அலறிய நான், நிமிஷாவின் கையைப் பிடித்துக்கொண்டு வேகமாக எங்கள் காரை நோக்கி ஓடினேன். கதவைத் திறந்து உள்ளே நுழைந்து, அப்படியே நிமிஷாவின் மடியில் தலையைப் புதைத்துக்கொண்டேன்.
 
``பயப்படாதீங்க, எந்திரிங்க...’’ என்று கூற, நிமிர்ந்து வெளியே பார்த்தேன். ஜானும் மகேந்திரனும் என் தொப்பியுடன் வந்து காரில் ஏறினர்.

``ஏற்கெனவே பாம்பு பயம். இப்ப மண்டைப் பிரச்னை வேற. `மோஸா’ படம் பார்க்கிறதுக்குள்ள உயிர் போய் உயிர் வந்துடும்போலிருக்கு’’ என்றேன்.

``என்ன பாம்பு பயம்?’’

``நேத்து ராத்திரி கனவுல வரிசையா பாம்பா வந்துச்சு.’’

``சூப்பர்… கனவுல பாம்பு வந்தா நல்லது. கல்யாணமாகாதவங்க கனவுல பாம்பு வந்தா, அவங்களுக்கு சீக்கிரமே கல்யாணமாவும்பாங்க.’’

``அதுக்கு பாம்புகிட்டயே கடி வாங்கலாம்’’ என்ற ஜானைப் பார்த்துச் சிரித்தான் மகேந்திரன்.

``எனக்கு நாலு தடவை வந்துச்சுங்க’’ என்றேன்.

``அப்ப நாலு தடவை கல்யாணமாவுமா?’’ என்று நிமிஷாவிடம் வினோத் கேட்க... நிமிஷா அவனை முறைத்தாள்.

``உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?’’ என்றேன்.

``எனக்கும் ரெண்டு நாளா பாம்புக் கனவு வந்துகிட்டேயிருக்கு. அம்மாகிட்ட ஃபோன்ல சொன்னேன். அவங்கதான் சொன்னாங்க’’ என்றாள். `ஸோ... பாப்பாவுக்கு இன்னும் கல்யாணமாகல’ என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.

அந்தக் கிராமத்துக்கு வெளியே இருந்த வீட்டுவாசலில் காரை நிறுத்தியவுடனே அதிர்ந்தோம். மரத்தால் ஆன அந்த வீட்டுவாசலில் மட்டன் ஸ்டாலில் ஆடுகளை உரித்துத் தொங்க விட்டிருப்பதுபோல் நிறைய மிருகங்களை, தோலை உரித்துக் காயப்போட்டி ருந்தார்கள். நான் திகிலுடன் நிமிஷாவைப் பார்த்து ``என்னங்க இது, வீட்டுவாசல்ல துணி காயப்போடுற மாதிரி...’’ என்றேன்.

``இது ஒண்ணுமில்ல...’’ என்று ஒவ்வொரு மிருகத்தின் மீதும் கை வைத்த நிமிஷா, ``இது குரங்கு… இது பூனை... இது முயல்... இங்க எல்லாரும் ரொம்ப நல்ல டைப்பு. மிருகங்களக் கொன்ன உடனே சாப்பிட மாட்டாங்க. மூணு நாளு அப்படியே வெளிய காயவெச்சு அப்புறம்தான் சாப்பிடுவாங்க’’ என்றாள்.

வீட்டுக்குள் நுழைந்தவுடன் நிமிஷாவின் அசிஸ்டென்ட் அகோ, தன் தந்தையை அந்த ஊரின் இனக்குழுத் தலைவர் என அறிமுகப்படுத்திவைத்தாள். அவர் சம்பிரதாய விசாரிப்புகளுக்குப் பிறகு, எங்களை டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்றார். டேபிளில் ஒரு பெரிய பாட்டிலில் இருந்த மதுபானத்தைக் காண்பித்து அகோவின் தந்தை மோசமான ஆங்கிலத்தில், ``இது இந்த நாட்டின் ஸ்பெஷல் மதுபானம். சட்டோவா. சாப்பிடுறீங்களா?’’ என்றார். சினிமா பார்க்கப் போகவேண்டும் என்பதால் ``வேண்டாம்’’ என்று மறுத்துவிட்டேன். அகோ, ``இந்திய விருந்தாளிகள் என்பதால் குரங்கு, பூனை போன்றவற்றையெல்லாம் சமைக்கவில்லை’’ என்று கூற, நிம்மதியாகச் சாப்பிட அமர்ந்தோம்.

ஒரு பெரிய தட்டில் சிக்கன் துண்டுகள் இருந்தன. பக்கத்துத் தட்டில் எனக்குப் பிடித்த இறாலைப் பார்த்தவுடன் எடுத்து வாயில் போட்டேன். நம் ஊர் இறால்போல இல்லையென்றாலும், அது வித்தியாசமான டேஸ்ட்டாக இருந்தது.
அகோ, ``யூ லைக் இட்?’ என்றாள்.

``சூப்பர்’’ என்றேன்.

``திஸ் இஸ் சில்லி ஸ்நேக்’’ என்று அகோ ``சில்லி பரோட்டோ” என்பதுபோல் அசால்ட்டாகக் கூற. அரண்டுபோன நான் அதைத் துப்பினேன். பயங்கரமாகக் குமட்டிக்கொண்டு வர, அந்த டேபிளில் இருந்த சட்டோவா மதுபானத்தை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தேன்.

அப்போதும் குமட்டல் அடங்கவில்லை. டேபிளில் இருந்த உணவுப்பொருள்களை எல்லாம் பார்க்கப் பார்க்க வாந்தி வருவதுபோல் இருந்தது. ``சாப்பாடு வேண்டாம்’’ என்று கூறிவிட்டு சட்டோவாவை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். நினைக்க நினைக்க குமட்ட. சட்டோவாவை வேக வேகமாக அருந்திய பிறகுதான் குமட்டல் குறைந்தது. எனவே, தொடர்ந்து அருந்திக்கொண்டிருந்தேன். அவர்கள் உணவருந்திவிட்டு வெளியே வந்தபோது, எனது போதை, ராஜபோதையை எல்லாம் கடந்து எமபோதையில் இருந்தேன். எழுந்தபோது தலை கிர் கிர்ரெனச் சுற்ற, தடுமாறியபடி நடந்து காரில் ஏறினேன்.                                                                                                                                    
தியேட்டரில் நாற்காலியில் அமர்ந்தவுடன் எனது தொப்பி கீழே விழ, அவ்வளவு போதையிலும் ஞாபகமாக எடுத்து தலையில் மாட்டிக்கொண்டேன். கடும்போதையில் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் செருகின. படம் ஆரம்பிப்பதற்காக விளக்கை அணைத்தபோது, நான் அப்படியே சாய்ந்து கண்களை மூடிவிட்டேன். ``சார்.... சார்... படம் போட்டுட்டாங்க’’ என்ற ஜானின் குரல் மெலிதாகக் கேட்க... மூன்றே விநாடியில் நான் சுத்தமாக ஃப்ளாட். கண் திறந்தபோது தியேட்டரிலிருந்து அனைவரும் சென்றுகொண்டிருந்தார்கள். தலை பயங்கரமாக வலிக்க, நான் நிமிஷாவைப் பார்த்து, ``இன்டர்வெலா?’’ என்றேன்.

``இல்லை... படம் முடிஞ்சிடுச்சு’’ என்றவுடன் நான் வேகமாக எழுந்த பிறகுதான் கவனித்தேன். எப்போதும் அமைதியாக இருக்கும் ஜான், சேரில் தலையை முட்டிக்கொண்டு  ``ஐயோ ஐயோ... அம்மா... பாவிம்மா. நான் மகாபாவி. நான் பண்ண பாவத்துக்கு இப்படி ஒரு தண்டனை?’’ என்று புலம்பிக்கொண்டிருந்தான். வினோத் ஒன்றுமே பேசாமல், வெறும் திரையை வெறித்துப் பார்த்தபடி ஆடாமல் அசையாமல் இயந்திரம்போல் அமர்ந்திருந்தான். மகேந்திரன் என்னைப் பார்த்து, ``ஐயோ... சார், மோஸாவால நம்ப மோசம் போயிட்டோம் சார்... மோசம் போயிட்டோம்’’ என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு அலறினான்.

``என்னடா... ஏதாச்சும் பணத்தத் திருடிட்டாங்களா?’’ என்றேன்.

“இல்ல சார்… இந்த `மோஸா’ படம் அப்படியே நம்ம ‘பாட்ஷா’ கதை சார்.  பாட்ஷா படம் 1995-ல ரிலீஸாச்சு. எங்கயோ பாத்துட்டு ஒரு வருஷம் கழிச்சு, ஸீன் பை ஸீன் மாத்தாம க்ளைமாக்ஸ் வரைக்கும் அப்படியே காப்பி அடிச்சிருக்கானுங்க சார்” என்று கூற, “ஆ…” என்று அலறிய நான் மீண்டும் மயக்கமானேன்.

- ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

ஓவியங்கள்: ரமணன்

(18.10.2018 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)