சினிமா
Published:Updated:

இல்லாதவர்கள் தந்த அமுதம் - சிறுகதை

இல்லாதவர்கள் தந்த அமுதம் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
இல்லாதவர்கள் தந்த அமுதம் - சிறுகதை

18.10.2018 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை...

``எங்க ஊரு வெறும் பொட்டக்காடுடா. வீடு வேற ரொம்பச் சின்னது. அதுக்குள்ளே நானும் எங்க அக்கா, தம்பி, தங்கச்சி, அம்மா, அப்பா எல்லோரும் படுக்கணும். வீட்ல டாய்லெட் கிடையாது. கிணத்துல போயிதான் குளிக்கணும். இதுல உங்களை எங்க கூட்டிக்கிட்டுப் போயி தங்கவைக்கிறது?``  எனக் கேட்டான் சோமு.

இல்லாதவர்கள் தந்த அமுதம் - சிறுகதை
இல்லாதவர்கள் தந்த அமுதம் - சிறுகதை

``அதைப் பற்றி கவலையில்லை. நீ, நான், சீனு மூணு பேரும் உங்க ஊருக்குப் போறோம்’’ என்றேன் நான்.

``சம்மர் லீவுல போகலாம்’’ என இழுத்தான் சோமு.

``இல்லை, செமஸ்டர் லீவுக்கு உங்க ஊருக்குத்தான் போறோம்’’ என்றேன்.

அதைக் கேட்டதும் சோமுவின் முகம் இறுக்கம் அடைந்தது.

``வந்துதொலைங்க’’ என்று சொன்னான்.

சோமு என்கிற சோமசுந்தரம், கல்லூரியில் எங்களுடன் படிப்பவன். நாங்கள் ஒன்றாக மதுரையில் ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்தோம். சோமு பி.எஸ்ஸி பிசிக்ஸ் படிக்கவே விரும்பினான். போதிய மார்க் இல்லை என்பதால், அவனுக்கு பி.ஏ ஆங்கில இலக்கியம் படிக்கவே சீட் கிடைத்தது.

அவனுக்கு இலக்கியம் படிப்பதில் விருப்பமேயில்லை. ஆகவே, பாதி நாள் வகுப்புக்கு வரமாட்டான். சில நாள் வகுப்புக்கு வந்தாலும் பாடம் நடத்துவதைக் கவனிக்க மாட்டான். நோட்டில் வட்டவட்டமாக பேனாவால் கிறுக்கிக்கொண்டிருப்பான். இதற்காக பேராசிரியர்கள் அவனைத் திட்டியிருக்கிறார்கள். வகுப்பை விட்டு வெளியேற்றியிருக்கிறார்கள். வகுப்பில் யாரோடும் பழக மாட்டான். அவனுக்கு நண்பர்களே கிடையாது. எப்போதும் அழுக்கான உடைகளையே அணிந்து வருவான்.

இரண்டாவது செமஸ்டரின்போது ஒருநாள் பேராசிரியர் ரகுராமன், அவனைக் கேலிசெய்யும்விதமாக `வில்லேஜ் இடியட்’ எனப் பேசியபோது மிகுந்த கோபம்கொண்ட சோமு, அவரை அடிக்கப் போனான்.

நிலை தடுமாறிய ரகுராமன், கீழே விழுந்துவிட்டார். அவரை மாணவர்கள் தூக்கிவிட்டார்கள்.

தன்னை சோமு வகுப்பறையில் தாக்கினான் என ரகுராமன் புகார் கொடுத்துவிடவே, கல்லூரி நிர்வாகம் இரண்டு வாரம் அவனை சஸ்பெண்ட் செய்தது.

அப்போதுதான் சோமு முதன்முதலில் என்னிடம் வந்து பேசினான்.

``எனக்கு நூறு ரூபாய் பணம் வேணும்.’’

``ஊருக்குப் போகப்போறியா?’’ எனக் கேட்டேன்

``இல்லை, பழநிக்குப் போயி மொட்டை போடப்போறேன்’’ என்றான்.

கேட்கவே வியப்பாக இருந்தது. அவனுக்குப் பணம் தந்து அனுப்பிவைத்தேன்.

இல்லாதவர்கள் தந்த அமுதம் - சிறுகதை
இல்லாதவர்கள் தந்த அமுதம் - சிறுகதை

பத்து நாளுக்குப் பிறகு சோமு திரும்பி வந்தபோது மொட்டை அடித்து லேசாக மயிர் வளர்ந்திருந்தது.

வாங்கிய பணத்தை, தன்னால் திருப்பித் தர முடியாது என்று வெளிப்படையாகச் சொன்னான் சோமு.

``பரவாயில்லை விடு’’ என்றேன்.

``வேலைக்குப் போய் சம்பாதிச்சுத் தர்றேன்’’ என்றான். அதைக் கேட்கும்போது எனக்கு சிரிப்பு வந்தது. அவனும் சிரித்தான். அப்படித்தான் நாங்கள் நண்பர்களாக மாறினோம். அதன்பிறகு என்னோடு நெருங்கிப் பேசவும் பழகவும் தொடங்கினான். என்னைக் காண்பதற்காக ஹாஸ்டலுக்கு வந்து போக ஆரம்பித்தான்.

ஒருநாள் ஹாஸ்டலில் பேசிக்கொண்டிருந்தபோது, தான் அத்தை வீட்டில் தங்கிப் படிப்பதாகவும், காலை, இரவு இரண்டு வேளை மட்டுமே சாப்பாடு தருவார்கள் என்றும் மதிய உணவு தர மாட்டார்கள். ஆகவேதான் மதிய உணவைச் சாப்பிடுவதேயில்லை என்றான்.

``எத்தனை நாளா இப்படி இருக்கே?’’ எனக் கேட்டேன்

``எட்டு மாசத்துக்குமேல இருக்கும்’’ என்றான்.

``ஏன்டா யார்கிட்டயும் சொல்லலை?’’ எனக் கோபித்துக்கொண்டேன்.

``ஏன்... ஒவ்வொருத்தன்கிட்டயா கையேந்திப் பிச்சை எடுத்துச் சாப்பிடச் சொல்றியா?’’ எனக் கோபமாகக் கேட்டான்

``பிச்சை எடுக்க வேணாம். காசு கடன் வாங்கி, கேன்டின்ல சாப்பிடவேண்டியது தானே!’’ என்றேன்.

`` பசியோடு இருந்தாதான் நான் யாருங்கிறது எனக்கு மறக்காது.’’

``பைத்தியக்காரத்தனம். உன்னை நீயே தண்டிச்சுக்கிட்டா, பசி போயிடுமா?’’

``எங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் அத்தக்கூலிக்குப் போறாங்க. அக்காவுக்கு இன்னும் கல்யாணம் ஆகலே. தம்பி, தங்கச்சி ஸ்கூல்ல படிக்கிறாங்க. வீட்ல சல்லிக்காசு கிடையாது. இந்த லட்சணத்துல என்னை காலேஜ்ல படிக்கவைக்கிறாங்க. அவங்ககிட்ட போயி கேன்டின்ல சாப்பிட பணம் குடுனு கேட்க எப்படிடா மனசு வரும்?’’

``இனி நீ கேட்க வேண்டாம். என்கூடயே சாப்பிடலாம்’’ என்றேன்.

``அதெல்லாம் ஒண்ணும் வேணாம். பட்டினி கிடந்து பழகிருச்சு’’ என்றான் சோமு.

``அப்போ நானும் உன்னை மாதிரி ஒரு வேளை பட்டினி கிடக்கப்போறேன்” என்றேன்.

``ஏன்டா இம்சையா இருக்கே’’ என்றபடியே என்னைப் பார்த்து லேசாகச் சிரித்தான். அவனுக்காக நானும் ஹாஸ்டல் சாப்பாட்டை விட்டு கேன்டினில் மதிய உணவு சாப்பிடத் தொடங்கினேன்.

அதன் பிறகு சோமு என் சட்டையைப் போட்டுக்கொள்ளத் தொடங்கினான். ஒன்றாக சினிமாவுக்குப் போய் வந்தோம். இரண்டு முறை சோமுவை கோவில்பட்டியில் இருந்த என் வீட்டுக்கு அழைத்துப் போய் வந்தேன். வீட்டில் சோமுவை எல்லோருக்கும் பிடித்திருந்தது. குறிப்பாக, அவன் சாப்பிட்ட தட்டை தானே கழுவி வைத்தது அம்மாவை நெகிழச் செய்தது.

செமஸ்டர் ஹாலிடேவுக்கு, அவனைக் கட்டாயப்படுத்தி அவனது ஊருக்குக் கிளம்பினோம். அருப்புக்கோட்டை போய் இறங்கி, அங்கிருந்து டவுன்பஸ் ஏறினோம். குண்டும்குழியுமான சாலை. தூரத்தில் ஒற்றைப் பனைமரம் தெரிந்தது. எல்லா கிராமங்களும் ரோட்டைப் பார்த்துத் திரும்பிக்கொண்டதுபோல் இருந்தன.

டவுன்பஸ் நின்ற இடத்தில், செம்புழுதி பறந்துகொண்டிருந்தது. அருகில் ஒற்றை உடைமரம். அதன் நிழலில் ஆடு மேய்க்கும் கிழவர். தொலைவில் வெயிலை மேய்ந்துகொண்டிருக்கும் ஆடுகள்.

நாங்கள் மூவரும் ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அடிவானம் வரை செந்நிலம் விரிந்து கிடந்தது. விவசாயமே கிடையாதோ என அச்சமாக இருந்தது. தொலைவில் ஒரு பெரிய செல்போன் கோபுரம் வான் உயர நின்றது. ஆகாசத்தில் ஒரு முரட்டுச் சூரியன். வழியில் தென்பட்ட வறண்ட கிணறுகள். மூளியாக நிற்கும் பனைமரம். வேலிப்புதர்கள் அடர்ந்த மண்சாலை. சோமு, மௌனமாக நடந்தான். ஏன் ஊருக்கு வந்தோம் என்பதுபோல இருந்தது அவனது நடை.

பெருநகரங்களின் பேரிரைச்சலிலிருந்து விலகி வந்த எங்களுக்கு, அந்த வெம்பரப்பு மௌனத்தின் தாய்நிலம்போல் இருந்தது. பறவைகளின் சத்தமோ, ஓணான்களின் நடமாட்ட ஓசையோகூட இல்லை. ஊர், தொலைவில் தெரிந்தது. ஒன்றிரண்டு காரைவீடுகள். நிறைய ஓட்டுவீடுகள், கூரைவீடுகள்.

ஊரின் நுழைவாயிலில் முனியசாமி கோயில் இருந்தது. ஒரு வட்டப்பாறை, அதையொட்டி சிறிய பீடம். அதில் ஒரு வெட்டரிவாள். நிறுத்திவைக்கப்பட்ட தீப்பெட்டிபோல சிறிய கோயில். அதன் முன்னால் காய்ந்து சுருண்ட வாழை இலை. உலர்ந்து கருகிய எலுமிச்சைகள். பூமாலையில் பூக்கள் உதிர்ந்து காற்றேறிவிட வெறும் நார் ஆடிக்கொண்டிருந்தது.

சோமுவின் வீடு மிகச் சிறியது. ஓட்டுவீடு. வீட்டின் முன்னால் சிறியதொரு மண்சுவர் தடுப்பு. அதன் உள்ளே சமையல் நடந்துகொண்டிருந்தது. நாங்கள் வருவதைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. சோமுவின் அம்மா, நரைத்த தலையோடு அடர் ஊதா நிறச் சேலை கட்டியிருந்தார். கையில் ரப்பர் வளையல்கள். காதில் வேம்பங்குச்சி செருகப்பட்டிருந்தது. சோமுவின் அக்கா வளர்மதிக்கு மாறுகண். ஆள் மிகவும் குள்ளமாக இருந்தார். குச்சியான ஜடை. அவரது கையிலும் ரப்பர் வளையல்களே!

``தம்பி... இவங்களை வீட்டுக்குள்ளே கூட்டிக்கிட்டுப் போயி உட்காராச் சொல்லு’’ எனச் சொன்னாள் சோமுவின் அக்கா.

``எங்க போயி உட்காரச் சொல்றே? நாங்க மடத்துக்குப் போறோம். நீ மூணு பேருக்கும் சேத்துச் சோறாக்கு’’ என்று கடுமையான குரலில் சொன்னான் சோமு.

இல்லாதவர்கள் தந்த அமுதம் - சிறுகதை
இல்லாதவர்கள் தந்த அமுதம் - சிறுகதை

``கலர் வாங்கிட்டு வரச் சொல்லட்டா?’’ எனக் கேட்டாள் அவனின் அம்மா.

``நாங்களே போயி குடிச்சிக்கிடுறோம். இந்தப் பையை மட்டும் உள்ளே வெச்சிரு’’ என்று அக்காவிடம் எங்களது பையைக் கொடுத்தான் சோமு. அக்கா ரகசியமான குரலில் ``காசு வெச்சிருக்கியா?’’ எனக் கேட்டாள். `இல்லை’ எனத் தலையாட்டினான். அவள் தன் ஜாக்கெட்டில் இருந்து 50 ரூபாயை எடுத்து நீட்டினாள். சோமு அதை வாங்கி தன் சட்டை பாக்கெட்டினுள் செருகிக்கொண்டான்.

சோமு எங்களை அழைத்துக்கொண்டு சந்துக்குள் நடந்தான். சாக்கடை ஓடும் குறுகலான சந்து. அழுக்கடைந்துபோன மண்சுவர்கள். நிறைய வீடுகள், பூட்டப்பட்ட நிலையில் இருந்தன. ஒரு வீட்டின் வாசலில் கிடந்த ஆட்டு உரலில் ஆட்டுக்குட்டி படுத்துக் கிடந்தது. பெட்டிக்கடை ஒன்றை நோக்கிப் போனோம். குனிந்து தலையை உள்ளே நீட்டிப் பொருள் வாங்க வேண்டும்போல் இருந்தது.

கடையில் இருந்த ஆள் சோமுவைக் கண்டதும் சிரித்தபடியே ``மாப்ளே... எப்போ வந்தே?’’ எனக் கேட்டார்.

``இப்போதான் மாமா’’ என்றான் சோமு.

``இதாரு... கூட படிக்கிறவங்களா?’’ எனக் கேட்டார் கடைக்காரர்.

`ஆமாம்’ எனத் தலையாட்டியபடியே ``டொரினோ இருக்கா?’’ எனக் கேட்டான்.

``டொரினோ இல்லை, பவன்டோ இருக்கு’’ என்று மரப்பலகை ஒன்றில் செருகி வைக்கப்பட்டிருந்த பவன்டோவை எடுத்து நீட்டினார்.

கலர் பாட்டில் சூடாக இருந்தது.

``ஃப்ரிட்ஜ் எல்லாம் நம்மகிட்ட கிடையாது’’ என்று சொல்லிச் சிரித்தார்

``பரவாயில்லை’’ என்றபடியே சீனு பவன்டோவைத் திறந்து குடிக்கத் தொடங்கினான். கறுப்பு திரவத்தினுள்ளும் வெயில் கலந்திருந்தது.

வீதியோரம் உடைந்துபோன மாட்டுவண்டி. மாடுகள் இல்லாத மாட்டுத்தொழுவம். கோழி ரோமமும் பிளாஸ்டிக் பைகளும் காற்றில் பறக்கும் குப்பைமேடு. ஒரேயொரு சேவல், தன் தலையைச் சிலுப்பியபடியே கடந்து போனது.

``ஏன்டா ஊரு இப்படியிருக்கு?’’ எனக் கேட்டேன்

``அதான் இங்க வரவேணாம்னு சொன்னேன்’’ என்றான் சோமு.

``நான் கேட்டது, கவர்மென்ட் ஏன் இப்படி வெச்சிருக்குனு’’ என்றேன்.

``அதுவா, எனக்கு நினைவுதெரிஞ்ச நாள்ல இருந்து ஊரு இப்படித்தான் இருக்கு. எந்த சர்க்கார் வந்தாலும் எங்களுக்கு நல்லது நடக்கப்போறதில்லை. கொஞ்சநாள்ல இந்த ஊரு அழிஞ்சு மயானம்போல ஆகிரும் பாரு’’ என்றான்.

``இப்பவே நிறைய வீட்ல ஆளைக் காணோம்’’ என்றேன்.

``கட்டட வேலைக்காக மதுரைப் பக்கம் போயிட்டாங்க. இந்தப் பொட்டக்காட்ல இழுத்துக்கிடந்தாகூட வைத்தியம் பாக்க முடியாது. இங்க மனுஷன் குடியிருப்பானா!’’ எனக் கேட்டான் சோமு.

அவனுக்கு சொந்த ஊர் மீதும், அதன் மனிதர்கள் மீதும், விவசாயத்தின் மீதும் பெருங்கோபம் இருந்தது. அவனது பேச்சில் அது வெளிப்பட்டபடியே இருந்தது. நாங்கள், 16 கற்றூண்கள் கொண்ட மடம் ஒன்றுக்கு வந்து சேர்ந்தோம். `பாண்டியர் காலத்து மண்டபம்’ என்றான். அந்த மண்டபத்தின் சுவர்களில் கரியால் கிறுக்கிவைத்திருந்தார்கள். தரையில் சுண்ணாம்பால் ஆடு புலி ஆட்டத்துக்கான கோடுகள் வரையப்பட்டிருந்தன. அழுக்கு படிந்த தரை. படிகள், தூர்ந்துபோன நிலையில் இருந்தன

``நைட் நாம இங்கதான் படுக்கப்போறோம்’’ என்றான் சோமு.

சீனு வியப்போடு அதைப் பார்த்தபடியே ``ஃபேன் இருக்கா?’’ எனக் கேட்டான்.

சோமு முறைத்தபடியே சொன்னான், ``பேய்தான் இருக்கு.’’

அதைக் கேட்டு நான் சிரித்தேன். மடத்தின் எதிரே இருந்த வீட்டு ஓடுகள் வெயிலின் உக்கிரம் தாளாமல் முணுமுணுப்பதுபோல் இருந்தன. வேப்பமரங்கள் இருந்தும் காற்றேயில்லை. மடத்தின் தரை சூடேறியிருந்தது.
சீனு தன்னுடைய போனை எடுத்துப் பார்த்தபடியே சொன்னான், ``ஃபுல் சிக்னல் இருக்கு. இந்த ஊர்ல செல்போன் ஒண்ணுதான் உருப்படியா வேலை செய்யுது.’’

சோமு முறைத்தபடியே சொன்னான், ``சோத்துக்கு வழிய காணோம். செல்போனாம் செல்போன்!’’

அதன் பிறகு நாங்கள் பேசிக்கொள்ள வில்லை. சோமு எங்களைத் தனியே விட்டு அவனது வீடு வரை போனான்.

மதியம் 2:30 மணி கடந்தபோதும் சோமு எங்களைச் சாப்பிட அழைக்கவில்லை. ``நான் வேண்டுமானால் போய்ப் பார்த்துவிட்டு வரவா?’’ எனக் கேட்டான் சீனு. பசியை அடக்கியபடியே ``வேண்டாம்’’ என்றேன். 3 மணியையொட்டி சோமு வந்து எங்களை வீட்டுக்கு அழைத்துப் போனான்.

சில்வர்தட்டு நிறைய சோறு போட்டிருந்தார்கள்.

``இவ்வளவு எப்படிச் சாப்பிடுறது?’’ எனக் கேட்டான் சீனு.

``இளவட்டப்பிள்ளைக, நல்லா அள்ளிச் சாப்பிடுங்க’’ என்றார் சோமுவின் அம்மா.

பெரிய கரண்டியால் அள்ளி அள்ளி சாம்பாரைச் சோற்றில் ஊற்றினார்கள். உருளைக்கிழங்குப் பொரியல், நார்த்தங்காய் ஊறுகாய்,கெட்டித்தயிர்.

என் வாழ்நாளில் அவ்வளவு சுவையான சாம்பாரை நான் சாப்பிட்டதேயில்லை. உருளைக்கிழங்குப் பொரியலும் அமிர்தமாக இருந்தது. உருளையோடு வெங்காயம் நிறைய போட்டிருந்தார்கள். ஆச்சர்யம், தட்டு நிறைய இருந்த சோற்றையும் சாப்பிட்டோம். மறுசோறும் சாம்பார் ஊற்றிச் சாப்பிட்டோம். `வெறும் சோறும் சாம்பாரும் இவ்வளவு சுவையாக இருக்குமா?!’ என வியந்துபோனேன். அதன் பிறகு கெட்டித்தயிர், சோறு. பசுந்தயிர், கையில் பிசுபிசுப்பாக ஒட்டிக்கொண்டது. நார்த்தங்காய் ஊறுகாயின் சுவை அபாரம். எந்தத் திருமண வீட்டிலும் இவ்வளவு சாப்பிட்டிருக்க மாட்டேன்.

நாங்கள் சாப்பிடுவதை சோமுவின் அக்கா பார்த்தபடியே இருந்தாள். சோமு மிகக் குறைவாகவே சாப்பிட்டான். ஒரு செம்பு நிறையத் தண்ணீர் குடிக்கக் கொடுத்தார்கள்.

கிழிந்துபோன சிவப்புத் துண்டு ஒன்றை, கை துடைக்க சோமு நீட்டினான்.

``சாப்பாடு சூப்பர்’’ என்றான் சீனு. சோமு முகத்தில் மாற்றமில்லை. அவன் எதற்கோ கோவித்துக்கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது.

நாங்கள் மடத்துக்குத் திரும்பும்போது சோமு சொன்னான் ``ஒரு அப்பளம்கூட பொரிக்கலை. என்ன சாப்பாடு, இதுக்குத்தான் வர வேணாம்னு சொன்னேன்.’’

``சாப்பாடு நல்லா இருந்துச்சு சோமு’’ என்றேன்

``நீதான் மெச்சிக்கிடணும்’’ என்றான்.

வெயிலைப் பொருட்படுத்தாமல் மடத்தின் தரையில் படுத்துக்கொண்டோம். எவ்வளவு நேரம் உறங்கினோம் எனத் தெரியாது. கண்விழித்தபோது மாலையாகி இருந்தது. சோமுவைக் காணவில்லை. அவன் தம்பி ஓர் ஓலைக்கொட்டான் நிறைய சுட்ட மக்காச்சோளம் கொண்டுவந்து நீட்டினான்.

``இவ்வளவு மக்காச்சோளம் எப்படிறா திங்குறது?’’ எனக் கேட்டான் சீனு.

``அக்கா கருப்பட்டிப் பணியாரம் வேற செய்துகிட்டிருக்கு. அதையும் நீங்கதான் சாப்பிடணும்’’ என்றான் சோமுவின் தம்பி மணி.

அவன் சொன்னதுபோலவே ஓர் அலுமினியத் தூக்குவாளி நிறையப் பணியாரம் வந்து சேர்ந்தது.

``எவ்வளவுடா சாப்பிடுறது?’’ என்றபடியே, பணியாரத்தை எடுத்து வாயிலிட்டபடியே ``தேனா இனிக்குடா!’’ என்றான்  சீனு. நானும் கருப்பட்டிப் பணியாரம் சாப்பிட்டேன். அப்படியொரு சுவையான பணியாரத்தை நான் சாப்பிட்டதேயில்லை. நாங்கள் சாப்பிடுவதை,  மணி ஆசையாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

``நீ சாப்பிடுறா!’’ என்றபோது ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டான்.

காலிப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு நாங்களே சோமுவின் வீட்டுக்குப் போனோம். சோமுவின் அக்கா ``நல்லா இருந்துச்சா?’’ எனக் கூச்சத்துடன் கேட்டாள்.

``செம டேஸ்ட், ரொம்ப தேங்ஸ்!’’ என்றான் சீனு.

``சோமுவுக்கு எதுவும் பிடிக்காது. எப்போ பாரு கத்துவான்’’ என்றாள் அக்கா.

சோமுவின் அம்மா, எங்களுக்கு டீ போட்டுக் கொடுத்தார். ஏலக்காய் போட்ட டீ மணத்தது. நாங்கள் டீ குடித்துக் கொண்டிருக்கும்போது சோமுவின் அம்மா சொன்னார் ``சோமு படிச்சு வேலைக்குப் போனாதான் நாங்க கையை ஊனி எந்திரிக்க முடியும். வீட்டு நிலைமை அப்படி, தலைக்கு மேல கடன் இருக்கு.’’

இல்லாதவர்கள் தந்த அமுதம் - சிறுகதை
இல்லாதவர்கள் தந்த அமுதம் - சிறுகதை

``அதெல்லாம் நல்லா படிக்கிறான். பெரிய வேலைக்குப் போவான்’’ என்றேன் நான்.

``வீட்ல படிப்பைப் பத்தி எதுவும் சொல்ல மாட்டான். படிக்கிற பிள்ளைக்குச் செலவுக்கு பத்து ரூபா காசு குடுத்துவுட முடியலை. உங்கள மாதிரி கூட்டாளிகள்தான் அவனைப் பாத்துக்கிடணும்.’’

அதைச் சொல்லும்போது அவளது குரல் தழுதழுத்தது.

``கவலைப்படாதீங்கம்மா, நாங்க பாத்துக்கிடுறோம்’’ என்றான் சீனு.

``நாலு நாளைக்கு இருந்துட்டுதான் போகணும். என்னாலே முடிஞ்சதை ஆக்கிப்போடுறேன்’’ என்றாள் சோமுவின் அம்மா.

``இருக்கோம்மா’’ என்றேன்.

சோமு, சைக்கிள் ஓட்டியபடி வந்து கொண்டிருந்தான். சைக்கிளில் இரண்டு பை நிறைய பலசரக்குச் சாமான்கள் தெரிந்தன. அவன் சைக்கிளை விட்டு இறங்கி ``டீ குடிச்சீங்களா?’’ எனக் கேட்டான். தலையாட்டினோம்.

சோமு அம்மாவிடம் பையை ஒப்படைத்துவிட்டு, ``எனக்கு டீ வேண்டாம்’’ என்று சொன்னான்.

இரவு ஆக ஆரம்பித்தவுடன் ஊரின் இயல்பு மாறத் தொடங்கியது. பகலில் காணாத குரல்கள். ஆள் நடமாட்டம் தெரிந்தது. சில வீடுகளில் டிவி ஓடிக்கொண்டி  ருக்கும் சத்தம் கேட்டது. ஒரு வீட்டின் வாசலில் பல்சர் பைக் ஒன்று நின்றிருந்தது. ஒரு பெண் ஈரத்துணிகளைக் கொடியில் காயப்போட்டுக் கொண்டிருந்தாள். யார் வீட்டிலோ குழந்தை அழும் சத்தம் கேட்டது.

நாங்கள் இருட்டுக்குள்ளாகவே ஊரை விலக்கி நீண்ட தூரம் நடந்தோம். அடிவானத்தை நோக்கியபடி ஓர் இடத்தில் அமர்ந்துகொண்டோம்.

``காலையில நாம கிளம்பு வமா?’’ எனக் கேட்டான் சோமு.

``என்னடா அவசரம்? ரெண்டு நாள் கழிச்சிப் போவோம்’’ என்றேன்.

``இங்க என்னடா இருக்கு? வேணும்னா, அருப்புக்கோட்டையில ரூம் போட்டுத் தங்கிட்டு, படம் பார்ப்போம்’’ என்றான் சோமு.

``இல்லை, இங்கயே இருப்போம்’’ என்றான் சீனு.

``சுடுகாட்ல கிடக்கணும்னு ஆசைப்பட்டா கிடந்து சாகுங்க’’ என்றான் சோமு.

``உனக்கு என்னடா கோபம்?’’ எனக் கேட்டேன்.

``கோபம் என்ன கோபம்... ஆற்றாமை, இயலாமை, தரித்திரியம். அதுல கிடந்து கத்துறேன். எனக்கு இந்த ஊரு, வீடு எதுவுமே பிடிக்கலை. வீட்டை விட்டு நாலு தடவை ஓடிப்போயிருக்கேன் தெரியுமில்லே. சந்தேக கேஸ்ல போலீஸ்ல மாட்டினதுதான் மிச்சம். காசு இல்லாதவன் எல்லாம் படிக்கக் கூடாதுறா... மீறிப் படிச்சா, அவமானப்பட்டு தினம் தினம் சாகணும்’’ என்றான் சோமு.

``போடா வெங்காயம். எப்போ பாரு, நெகட்டிவ்வா பேசிக்கிட்டு. முதல்ல உன்னைப் பத்திய நினைப்ப மாத்து. இல்லே... உருப்படவே முடியாது’’ என்றான் சீனு.

``பார்த்தேல்ல, வீடு எப்படி இருக்குனு. வந்த ஆளுங்கள உட்காரவைக்க சேர் கிடையாது. படுக்கவைக்க இடம் கிடையாது. இந்த லட்சணத்துல நான் படிக்கிற படிப்புக்கு என்ன பெருசா வேலைக்குப் போயிட முடியும்? என்னையும் ஏமாத்திக்கிட்டு வீட்டையும் ஏமாத்திக்கிட்டு இருக்கேன். உங்களுக்கு என்னடா, உங்க அப்பா கேட்கக் கேட்க காசு குடுக்கிறார். நான் ஓசி சோத்துல படிக்கிறவன். அட்வைஸ் பண்றது ஈஸிடா, அனுபவிச்சிப் பாரு. அப்போ தெரியும் வலி`` எனக் கோபமாகச் சொன்னான் சோமு.

நாங்கள் இருளை வெறித்தபடியே நெடுநேரம் அமர்ந்திருந்தோம். வானில் நட்சத்திரங்கள் ஓடி விளையாடத் தொடங்கியிருந்தன. ஊரை நோக்கி வந்தபோது கையில் ஒரு டார்ச்லைட்டுடன் சோமுவின் அப்பா எங்களைத் தேடி வந்துகொண்டிருந்தார். ஐந்தடிக்கும் குறைவான உயரம். ஒடுங்கிய முகம். அரை டிராயர், பனியன் அணிந்திருந்தார்.

``பாம்பு கிடக்கப் போகுதுனுதான் டார்ச்லைட் கொண்டு வந்தேன்’’ என்றார்.

``பாம்பு கடிச்சிச் செத்தா செத்துட்டுப்போறோம்’’ என்றான் சோமு.

டார்ச்லைட்டை என் கையில் கொடுத்தார் சோமுவின் அப்பா. அவருடைய கைகள் நடுங்கிக்கொண்டிருப்பதைக் கண்டேன். பாம்பைவிட சோமுதான் அதிகம் கொத்துகிறான் என்பதுபோல சீனு அவனை முறைத்தான்.

இரவு உணவாக ரவா உப்புமா செய்திருந்தார்கள். அதற்குத் தொட்டுக்கொள்ள சீனியும் தேங்காய்ச் சட்னியும் வைத்தார்கள். அல்வாபோல மிருதுவாக, வாயில் நழுவியது உப்புமா. எங்களுக்காக அந்த முழுக்குடும்பமும் பகல் இரவாக வேலை செய்துகொண்டேயிருந்ததைக் கண்டோம்.

சோமுவின் அப்பா, நாங்கள் படுத்துக்கொள்ள இரண்டு கயிற்றுக்கட்டிலை வாங்கிக்கொண்டு வந்து வீட்டையொட்டிய மரத்தடியில் போட்டார்.

``மடத்துக்குப் போறோம்’’ என்றான் சோமு.

இல்லாதவர்கள் தந்த அமுதம் - சிறுகதை
இல்லாதவர்கள் தந்த அமுதம் - சிறுகதை

``வேண்டாம். அங்கே தேளு கிடக்கு’’ என்றார் அப்பா.

வேறுவழியின்றி, கட்டிலை வேப்பமரத்தை ஒட்டியபடி போட்டுவிட்டு, யாரையோ பார்த்து வருவதாகக் கிளம்பிச் சென்றான் சோமு.

சோமுவின் தம்பி ரகசியமாக அருகில் வந்து ``டிவி-யில கிரிக்கெட் ஓடுது, பார்க்க வர்றீங்களா?’’ எனக் கேட்டான்.

``உங்க வீட்ல டிவி இல்லையா?’’ என சீனு கேட்டான்.

``கவர்மென்ட்ல குடுத்த ஓசி டிவி-யை அண்ணே உடைச்சிப்போட்ருச்சி’’ என்றான் மணி.

சோமு திரும்பி வரும் சத்தம் கேட்கவே, மணி வாயை மூடிக்கொண்டு கிளம்பினான். மரத்தடியில் கட்டில் போட்டுத் தூங்குவது இதுவே முதல்முறை. கொசுக்கடியும் வெக்கையும் சேர்ந்து உறங்கவிடவில்லை. இரவில் சோமு வீட்டுக்குள் பேச்சு சத்தம் கேட்டபடியே இருந்தது. என்ன பேசிக்கொள்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், ``மெதுவா பேசு’’ என சோமுவின் அக்கா சொல்வது கேட்டது. அவர்களுக்குள் ஏதோ பிரச்னை என்பது மட்டும் புரிந்தது.

சோமுவின் அப்பா, காலையில் கோழியை அடித்து ரோமத்தை ஆய்ந்துகொண்டிருந்தார். நாங்கள் குளித்து முடித்தவுடன் சூடாக இட்லியும் கோழிக்குழம்பும் வந்தன. கூடவே தேங்காய்ச் சட்னி, மல்லிச் சட்னி, எள்ளுப்பொடி, பருப்புப்பொடி. இத்தனைவிதமாக உணவளிக்க நாங்கள் என்ன விருந்துக்கா வந்திருக்கிறோம் எனக் கூச்சமாக இருந்தது.

``இட்லியை நல்லா பிச்சிப் போடுப்பா’’ என்றபடியே சோமுவின் அம்மா தன் கையால் இட்லியைப் பிய்த்துப்போட்டு அதன் மீது நிறைய கோழிக்குழம்பை ஊற்றினாள். அதைக் கண்டு சோமு முறைத்தான். அதை அவள் பொருட்படுத்தவேயில்லை.

``சாப்பிட ஸ்பூனு வேணுமா?’’ எனக் கேட்டாள் சோமுவின் தங்கை. அந்தக் கேலியை ரசித்தபடியே சாப்பிட்டேன்.

ஒரு கிண்ணத்தில் நெய் கொண்டுவந்து இட்லி மீது ஊற்றினாள் சோமுவின் அக்கா.

போதும் என்றாலும் விடவில்லை.

``அந்த நெய் மேல லேசா தேங்காய்ச் சட்னி விட்டு ஒரு வாய் சாப்பிடுங்க. அடுத்த வாய் கோழிக்குழம்பு. அதுக்கு அடுத்த வாய் மல்லிச் சட்னி’’ என்று சொல்லிச் சிரித்தாள்.

உபசரிப்பு என்றால் இதுதான் உண்மையான உபசரிப்பு. அடுத்தவரை இவ்வளவு சந்தோஷப்படுத்திப் பார்க்கிறவர்கள் வாழ்க்கை ஏன் சந்தோஷமாயில்லை? சாப்பிடுகிறவர்களின் மனசு குளிரக் குளிர உணவளிப்பது என்பதை அன்றுதான் முழுமையாக அறிந்தேன்,

சீனு, `கோழிக்குழம்பு எப்படிச் செய்வது?’ எனப் பக்குவம் கேட்டுக்கொண்டிருந்தான். சோமுவின் அக்கா பக்குவம் சொன்னார். சோமு எதையும் ருசித்துச் சாப்பிடவில்லை. நாங்களோ எங்கள் ஆயுளில் இப்படியான உணவைச் சாப்பிட்டதில்லை என்பதுபோல ருசித்துச் சாப்பிட்டோம். இட்லி சாப்பிட்டு முடித்தவுடன் இனிப்பு திங்க வேண்டும் என ஓர் எள்ளுருண்டை வந்தது. அதையும் சாப்பிட்டு முடித்தோம். சோமு ``கிளம்பலாம்... கிளம்பலாம்’’ என வற்புறுத்திக்கொண்டே இருந்தான்.

``தேவாமிர்தம்டா, மல்லிச் சட்னி எப்படி ருசிக்கும்னு இன்னிக்குத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்’’ என்று சீனு சொன்னபோது, ``இந்தச் சாப்பாட்டை மனுஷன் சாப்பிடுவானா... கருமம்’’ எனத் திட்டினான் சோமு.

கல்யாண மாப்பிள்ளை விருந்தாடுவதுபோல இரண்டு நாள் விதவிதமாகச் சாப்பிட்டோம். உளுந்தம்சோறு, பருப்புத் துவையல், பச்சரிசிப் பாயசம், அயிரைமீன் குழம்பு, அவிச்ச முட்டை, கருவாட்டுக் குழம்பு, இடியாப்பம் - தேங்காய்ப் பால் என, விதவிதமாக உணவு சமைத்துப் போட்டுக் கிறங்கடித்தார்கள். நாக்கு புத்துயிர் பெற்றதுபோல ருசியை உண்மையாக உணரத் தொடங்கியிருந்தது. ஊருக்குக் கிளம்பும்போது கம்புருண்டை, எள்ளுருண்டை இரண்டும் செய்து ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் கொடுத்தார் சோமுவின் அம்மா.

``இதுவேற எதுக்குமா?’’ என்றோம்.

``நீங்களும் என் புள்ளைங்கதான்பா. நல்லா சாப்பிடுங்க. நல்லா படிங்க. எங்களாலே முடிஞ்சது இவ்வளவுதானே. காசு பணமா வெச்சிருக்கோம் தூக்கிக் குடுக்க?’’ என்றாள் சோமுவின் அம்மா.

``உன் புலப்பத்தை நிறுத்தப்போறியா இல்லையா?’’ என்றான் சோமு.

``நான் என்னய்யா தப்பா பேசிட்டேன். என் கையில காசில்லேனு சொன்னது ஒரு தப்பா?’’  - என்னை நோக்கிக் கேட்டார் சோமுவின் அம்மா.

``காசில்லேல்ல, பிறகு எதுக்கு என்னப் பெத்தே... படிக்கவெச்சே? காலேஜ்ல நான் என்ன பாடுபடுறேன்னு உனக்குத் தெரியுமா?’’ எனக் கோபமாகக் கேட்டான் சோமு.

``எனக்கு எப்படிய்யா தெரியும். நீ சொன்னாதானே!’’ என அப்பாவியாகக் கேட்டாள் அவனின் அம்மா.

``அந்த எழவை நான் வேற சொல்லணுமாக்கும். நான் படிக்கப் போகலை, படிச்சவரைக்கும்போதும்.’’

``அப்படிச் சொன்னா எப்படிய்யா... உன்னை நம்பித்தானே நாங்க இருக்கோம்’’ என்றாள் அம்மா.

``யாரு இருக்கச் சொன்னது? நான் காலேஜுக்குப் போக மாட்டேன். போதுமா’’ என, தன் பையை வீசி எறிந்தான்.

சீனு அதைக் குனிந்து எடுத்தபடியே சொன்னான், ``என்னடா முட்டாள் மாதிரி பேசுறே, கிளம்பு, போவோம்.’’

அதைக் கேட்ட சோமுவின் முகம் சட்டென மாறியது. பல்லைக்கடித்தபடியே அவன் கோபமாகச் சொன்னான், ``வாயை மூடுறா... வந்தமா ஒரு வேளை சோறு தின்னமா கிளம்புனமானு இருக்கணும். மூணு நாளைக்கு உட்காரவெச்சு சோறு போடணும்னு எனக்குத் தலையெழுத்தா? ஆமா... நீங்க எல்லாம் யாருடா? என்கூட படிச்சா, இப்படித்தான் கூச்சமில்லாம வந்து தின்பீங்களா? இந்தக் கறி, மீனு எல்லாம் எங்க இருந்து வந்துச்சு? வட்டிக்கு வாங்கித்தானே செஞ்சிருக்காங்க. அதை யாரு கட்டுறது? ஓசி சோத்தைத் தின்னுட்டு, வெட்கம்கெட்ட நாயிங்க பேச வந்துட்டீங்க.’’

சோமுவின் அப்பா பயந்துபோனவராக அருகில் வந்து ``தம்பி, நீங்க கிளம்புங்க அவன் குணம் அப்படித்தான்’’ என்று சமாதானம் செய்தார்.

சீனுவும் நானும் ஓரமாக நின்றுகொண்டோம். சீனு ஆத்திரப்பட்டு தன் பர்ஸில் இருந்த பணத்தை அப்படியே எடுத்து அவன் முன்னால் வீசி எறிந்து ``எடுத்துக்கோடா’’ என்றான். மறுநிமிடம் சோமு அவன்மீது பாய்வது தெரிந்தது. அதைக் கண்ட சோமுவின் அம்மா, தன் தலையில் அடித்துக்கொண்டு ஓங்காரமாக அழுதாள். அந்த அழுகை மனதைத் துவளச் செய்தது.

சோமுவை, அவனின் அக்காவும் அப்பாவும் விலக்கிவிட்டார்கள். கலைந்த தலையுடன் சீனு எழுந்துகொண்டு விடுவிடுவென நடக்க ஆரம்பித்தான். அவன் பின்னால் நானும் சென்றேன்.

இருவரும் வெயிலோடு நடந்து விலக்கு ரோட்டுக்கு வரும்போது சோமு அம்மாவின் அழுகை மனதில் கொப்பளித்தபடியே இருந்தது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு டவுன்பஸ் வந்தது. மதுரை வந்து சேர்ந்து விடுதிக்குப் போனபோதும் சோமு வீட்டில் நடந்த காட்சியை மறக்க முடியவில்லை.

சோமு அதன் பிறகு கல்லூரிக்கு வரவில்லை. நாங்கள் அவனைத் தேடிப் போகவும் இல்லை. அதன்பிறகு எனக்கு ஹாஸ்டல் சாப்பாடு பிடிக்கவில்லை. அத்துடன் எங்கே சாம்பார் ஊற்றிச் சாப்பிட்டாலும் சோமுவின் அம்மா முகம் நினைவில் வந்துபோனது. எந்த வீட்டுச் சாப்பாடும் அவர்கள் போட்ட அமுதத்துக்கு இணையாக இல்லை எனத் தோன்றியது.

இல்லாதவர்களின் கைகளுக்குத்தான் ருசி கூடுகிறதுபோல. மனதில் ஊறும் அன்புதான் ருசியாக மாறுகிறதா... இல்லை வெளிப்படுத்த முடியாத கண்ணீர்தான் கைகளின் வழியே உணவுக்கு ருசியை உருவாக்குகிறதா?

சோமு எதற்காகத் திடீரென இவ்வளவு கோபம்கொண்டான். ஏன் இப்படி நடந்துகொண்டான் எனப் புரியவேயில்லை.

ஹாஸ்டலுக்கு வந்த பிறகு, சீனு இரண்டு முறை சோமுவுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினான். பதில் வரவேயில்லை.

பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் மட்டுமன்றி நஞ்சும் சேர்ந்து வந்ததாகச் சொல்கிறார்கள். சோமு அந்த நஞ்சை மட்டுமே பருகியிருக்கிறான். அவனுக்கு அமுத ருசி தெரியாது. நாங்கள் அதிர்ஷ்டவசமாக அமுதம் ருசித்தவர்கள். ஆயுளுக்கும் அந்த ருசி மறக்காது.

ஒருநாள் ஹாஸ்டலில் சாப்பிடும்போது சீனு சொன்னான், ``என்னால இந்தச் சாப்பாட்டை வாயில் வைக்க முடியலை. சாம்பாரா இது? இந்த சோமுப்பயல் வேணும்னே நம்மளோட சண்டைபோட்டு நட்பை முறிச்சுக்கிட்டான். நாம அவன் ஊருக்குப் போயிருக்காட்டி இது நடந்திருக்காது. நான் செஞ்சது தப்புடா.’’

`` அதெல்லாமில்லை. நாம ஒரு காரணம். அவன் எப்படியும் காலேஜ் படிச்சிருக்க மாட்டான். அவங்க வீட்ல வேறு ஏதோ பிரச்னை’’ என்றேன்.

``அதுவும் உண்மைதான்’’ என்றான் சீனு.

சாப்பாட்டைக் கையில் அள்ளியபடியே கேட்டேன், ``சோமு வீட்ல சாப்பிட்ட சோற்றுக்கடனை எப்படிறா அடைக்கிறது?’’

``அவங்க அம்மாவை நினைச்சு அழுதுதான்’’ என்றபடியே மெஸ் என்பதை மறந்து சீனு தன்னை அறியாமல் கண்ணீர்விடத் தொடங்கினான்.

- எஸ்.ராமகிருஷ்ணன்,  ஓவியங்கள்: ஸ்யாம்

(18.10.2018 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)