சினிமா
Published:Updated:

எப்படி இங்கு வந்து சேர்ந்தார்?

எப்படி இங்கு வந்து சேர்ந்தார்?
பிரீமியம் ஸ்டோரி
News
எப்படி இங்கு வந்து சேர்ந்தார்?

எப்படி இங்கு வந்து சேர்ந்தார்?

வீட்டிலிருந்து இந்த வெட்டவெளியை

எப்படி இங்கு வந்து சேர்ந்தார்?


வந்தடைய
எவ்வளவு தூர பிரயாணம்
தேவைப்பட்டிருக்கும்?

வெளியூர்ப் பேருந்து நிலையத்தின்
ஓரத்தில்
மாநகராட்சி குப்பைத் தொட்டி அருகில்
படுக்கை அமைத்திருக்கிறார்
நான்கைந்து சேலைகள் தலையணை
அருகில் தண்ணீர் பாட்டில்

காலையில் ஆங்கில வகுப்பு
வழக்கம்போலத் தொடங்குகிறது
“இப்பவுள்ள குட்டிகளுக்கு பாடத்தில்
கவனமே இல்லை
எப்படித்தான்
வரப்போகுதுகளோ’’
அதே கணீரென்ற குரல்

குரல் தவிர்த்து பழைய அடையாளங்கள்
அத்தனையும்
கைவிட்டுப் போய்விட்டன
மதியத்தில் தனது பைரவரிடம்
எப்படி என் பின்மதிய
முற்றம்
எத்தனை பேருந்துகள்
ஓடுகின்றன பார்த்தாயா
எனப் பெருமை பேசுகிறார்

எப்படி இங்கு வந்து சேர்ந்தார்?

மாலையில் வந்து இணைகிறார்
ராமன் குட்டி
பேருந்து நிலைய நாய்க்குட்டிகள்
அத்தனைக்கும்
தந்தை அவர்
மாராப்பை சீராக்கி
பாண்ட்ஸ் பௌடர் பூசிய
முகத்துடன்
“உமக்கு எப்போதுமே
சந்தேகம்தான்
நேற்று அதைச் சொன்னேனே செய்தீரா?
அறிவு எப்போது உமக்கு வரும்?”
வாய்க்கு வந்தபடி தாக்கி
முரண்படுகிறார்
வயதை
வெல்ல முடியாத
பத்மா டீச்சர்
சிறுமி உள்ளத்திலிருந்து குதிக்க
தலைகுனிந்து ராமன் குட்டி
‘‘இத்தனை வயதில்
எப்போதாவது நிம்மதியாக இருக்க விட்டிருக்காயா?”
எனக் கேட்டுத் தேம்பித் தேம்பி
அழுதுகொண்டிருக்கிறார்
ஒவ்வொரு நாளின் மாலையிலும்

இருவரும் கணவன் மனைவியாக இருப்பார்களோ
எனக் கேட்கிறான்
உடன் வந்த நண்பன்.
அப்படியில்லையாயினும்
அப்படித்தானே இருக்க வேண்டும்
என பதில் கூறி
நான்

மாயை விட்டகன்று
வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறேன்

- லஷ்மி மணிவண்ணன்,  ஓவியம்: செந்தில்