சினிமா
Published:Updated:

பொதியவெற்பன் என்னும் இலக்கியப் பயணி!

பொதியவெற்பன் என்னும் இலக்கியப் பயணி!
பிரீமியம் ஸ்டோரி
News
பொதியவெற்பன் என்னும் இலக்கியப் பயணி!

பொதியவெற்பன் என்னும் இலக்கியப் பயணி!

‘அய்யா ஒரு நிமிடம்...’

பொதியவெற்பன் என்னும் இலக்கியப் பயணி!காரசாரமான இலக்கியக் கூட்டங்களில் கேட்கும் கணீர் குரலுக்குச் சொந்தக்காரர், பொதிய வெற்பன். சுமார் 50 ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியத்தின் அனைத்து விவாதங்களிலும் இவரின் பெயர் இடம்பெறும். கவிஞர், நிகழ்த்துகலைஞர், பத்திரிகை ஆசிரியர், விமர்சனத்தையே படைப்பாகத் தரும் அற்புதப் படைப்பாளி எனப் பன்முக ஆளுமை கொண்டவர். இவரின் இன்னோர் அழுத்தமான அடையாளம், இலக்கியக் கூட்டங்களில் புத்தகங்களைப் பந்தி வைப்பவர். ஆம்! கல்யாண வீட்டின் பிரதான அம்சமான சாப்பாட்டுப் பந்திபோல, வாங்குபவரின் தேவைகளை உணர்ந்து, அவர்களுக்குரிய நூல்களை அளிப்பவர். ‘சிலிக்குயில் புத்தகப் பயணம்’ என்பது இவர் நடத்திய புத்தக நிலையத்தின் பெயர். அவருடன் நடத்திய உரையாடலிலிருந்து...

“பொதியவெற்பன் - இந்தப் புனைபெயருக்கான பின்னணி..?

“இந்தப் பெயர் மட்டுமல்ல, இன்னும் சில புனைபெயர்களும் இருக்கின்றன. எல்லாமே இயக்கங்களின் தாக்கத்தால் பிறந்தவையே. 1968-ம் ஆண்டு, அண்ணாமலைப் பல்கலையில் படிக்கும்போதே, மு.சண்முகசுந்தர நேதாஜி என்ற இயற்பெயரை வே.மு.பொதியவெற்பன் என்று அரசிதழில் அறிவித்து, அதிகாரபூர்வமாக மாற்றிக்கொண்டேன். என் அம்மாவின் பெயர் வேலம்மா.  ‘வே’ என்பது, அம்மா பெயரின் முதலெழுத்து. ‘மு’ என்பது, அப்பா பெயரின் முதலெழுத்து. தனித்தமிழியக்கத் தாக்கத்தால், கனல் வேந்தி; புதுமைப்பித்தன் தாக்கத்தால், பித்தகுமாரன்; தலித்தியத் தாக்கத்தால் கூத்தப்பறையன்; ‘திகம்பர கவிகள்’ இயக்கத்தின் தாக்கத்தால், சூர்யமுகி; திமுக தாக்கத்தால் மு.வ.தாசன்; சித்தர் மரபுத் தாக்கத்தால் பொதிகைச் சித்தர் என்றும்  ஏராளமான புனைபெயர்களில் எழுதியுள்ளேன்.”

பொதியவெற்பன் என்னும் இலக்கியப் பயணி!

“இலக்கியத்தின் மீதான ஆர்வம் எப்போதிருந்து ஏற்பட்டது?”

“பதின்பருவத்திலிருந்தே எனக்குக் கலை இலக்கிய ஈடுபாடுகள் வந்துவிட்டன. கும்பகோணம் குருசாமிதாஸ் எனும் நாட்டார் தெருப்பாடகர்தான் என் கலை ஈடுபாட்டுக்கான மூலவித்து. என்.எஸ்.கே., எஸ்.எஸ்.ஆர்., எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர்., எனத் திரைப்பட ஈடுபாடாகவும், சிதம்பரம் ஜெயராமன், நாகூர் ஹனிபா சிவகங்கை சேதுராசன் என இசை கலைநிகழ்ச்சிகள் ஈடுபாடாகவும் வளர்ந்தன. திமுக வாசக சாலைகள், சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் ஆகியவற்றின் மூலம் செய்தித்தாள், நூல்கள் வாசிப்புப் பழக்கம் உருவானது. இலக்கிய வாசிப்பு மு.வரதராசனாராலேயே என்னுள் விதைக்கப்பட்டது. இவை அனைத்துக்கும் அடிப்படையாக இருந்தது திமுக ஈடுபாடே. காலம் செல்லச் செல்ல, மு.வ மீதான ஈர்ப்பு, எம்.ஜி.ஆர் மீதான அபிமானம் ஆகியவற்றில் இருந்து மாறினேன்.”

“புத்தக விற்பனையில் மறக்கமுடியாத அனுபவம்..? நெழ்ச்சியான வாடிக்கையாளர் குறித்துச் சொல்லுங்களேன்...”

“சிலிக்குயிலின் புத்தகப் பயண வரலாற்றில்,  நிறைய விபத்துகளைச் சந்தித்திருக்கிறோம். திருச்சியில் புத்தகத் திருவிழாவின் கடைசி நாள்களில் புயலில் சிக்கினோம். புத்தகக் காட்சி நடந்த பகுதி ‘காஸ்மாபாலிடன் ஏரியா’ என்பதனால், புயலில் சிக்கிய மக்கள் பொழுதுபோக்குக்கு வேறெங்கும் போகமுடியாமல் புக் ஃபேரில் குவிந்து விற்பனையை எகிறவைத்து எங்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டனர். மதுரையில் ஒருமுறை வெள்ளப் பாதிப்பால் புத்தக விற்பனை பாதிக்கப்பட்டது. சென்னைப் புத்தகக்காட்சியில் தீ விபத்து ஏற்பட்டபோது மூலதனத்துக்கே மோசம் வருமளவுக்குப் பாதிப்பு.

பொதியவெற்பன் என்னும் இலக்கியப் பயணி!

அதன் பாதிப்பில்,

‘எம் சாம்பல்’ என்று கவிதை எழுதினேன்.  அது சுபமங்களா உள்ளிட்ட பல இதழ்களிலும் வெளியாயிற்று. ‘சிலிக்குயிலுக்குக் கை கொடுப்போம்’ எனும் வேண்டுகோளுடன் அக்கவிதையை அச்சிட்டு, சிலிக்குயில் முகவரி எழுதப்பட்ட ஒரு மணியார்டர் ஃபார்மையும் இணைத்து,  ‘பிரபலமானவர் விலாசங்கள்’ நூலின் முகமறியா முகவரிக்கெல்லாம் அனுப்பி உதவினார் ஒரு வாடிக்கையாளர். அவர், மறக்கவேமுடியாத மகத்தான என் நண்பர், அபூர்வமான எழுத்துக் கலைஞர், கோபிகிருஷ்ணன்.”

‘` பின்நவீனத்துவம் போன்ற பல சிந்தனைகளைத் தொடங்கிவைத்த  ‘நிறப்பிரிகை’ பத்திரிகையின் உருவாக்கத்தில் இடம்பெற்றவர் நீங்கள். தமிழ்ச் சூழலில், ‘நிறப்பிரிகை’ நிகழ்த்திய பாதிப்பு என எதைச் சொல்வீர்கள்?’’

“எங்களைப் போன்றவர்களிடம் நீங்கள் பேட்டி எடுக்க முன்வந்துள்ளீர்கள் அல்லவா! அதுகூட ‘நிறப்பிரிகை’யின் பாதிப்புதான். கருத்தியல் தளத்தில் முரண்பட்டவர்களாலும் இருட்டடிக்க முடியாததே அதன் சிறப்பு. தமிழ்ச் சூழலில், ‘நிறப்பிரிகை’ முன்னெடுத்த பணிகள் தனித்துவம் மிக்கவை. புதுப்புதுக் கருத்தாக்கங்கள், பன்முகமான சமூகச் சிக்கல்கள் மீதான கூட்டு விவாதங்களை நிகழ்த்தியது, ‘நிறப்பிரிகை’ மட்டுமே. அதற்கு முன்னுதாரணமோ, பின்தொடர்ச்சியோ இல்லை.

டானியல் கருத்துவிதை விதைத்தார். பொ.வேல்சாமி, அ.மார்க்ஸ், து.ரவிக்குமார் ஆகியோருடன் நானும் ‘தோழமை’யின் பதிப்பாசிரியராகப் பணியாற்றினேன். ‘தோழமை’ சார்பில் இதழ் நடத்துவது குறித்து நாங்கள் கலந்துரையாடியபோது, ‘நிறப்பிரிகை’ எனும் பெயரை பிரேமும்; ‘பறை’ என்ற பெயரை நானும் ரமேஷும் முன்மொழிந்தோம்.  முதல் இதழில், ‘ஆசிரியர் குழுவில் என் பெயரும் இடம்பெற்றிருந்தது. நிறப்பிரிகையில் இலக்கியத்துக்கு இடமே இல்லாதது  எனக்கு ஏற்புடையதாக இல்லை. எனவே, ஆசிரியர் குழுவிலிருந்து விலக நேர்ந்தது.  நிறப்பிரிகையின் பெருமைக்கெல்லாம் சொந்தக்காரர்கள்
அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி, ரவிக்குமார், பிரேம் ரமேஷ், ராஜன்குறை, அழகரசன் போன்றோரே.”

‘`புரட்சிப் பாடகர் கத்தாரை அழைத்து நிகழ்ச்சி நடத்தியவர் நீங்கள். இப்போது அவர் ஆன்மிகம் பக்கம் சாய்ந்துவிட்டாரே?’’

“கத்தாரைக் கும்பகோணத்துக்கு அழைத்து நிகழ்ச்சி நடத்தினோம். ‘கத்தார் வருகை’ என்று நாங்கள் விளம்பரப்படுத்தியதை, ‘கர்த்தர் வருகை’ என்று தவறாகப் புரிந்துகொண்டவர்களும் உண்டு. (சிரிக்கிறார்) கத்தார்  தன் படை வீரர்களுடன் (`மை சோல்ஜர்ஸ்’ என்றே அழைப்பார்) என் வீட்டில்தான் தங்கினார். எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ், கத்தார் குறித்து நெகிழ்ந்து எழுதினார். இப்போது ம.க.இ.க. பாடகர் கோவனை, கத்தார் வாரிசு என்று சொல்லலாம். விகடன் பேட்டியில் கத்தார் முன்னிறுத்தும் பக்தி குறித்த நிலைப்பாடு, மதம் குறித்த மார்க்சிய நிலைப்பாடுகளுக்கு முரணானதே. ஆனால், அவர் ஏந்திய கம்பில் செங்கொடியுடன் நீலக் கொடியையும் பிணைத்திருப்பது ஏற்புடையதே. மதவாத அரசியலை எதிர்கொள்ள மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகியவற்றுடன் காந்தியம், சூழலியல், பெண்ணியம், வள்ளலார் சிந்தனைகள் ஆகியவையும் இணைய வேண்டும்”

பொதியவெற்பன் என்னும் இலக்கியப் பயணி!

‘`பெரியாருடன் நடந்த சந்திப்பு பற்றி...’’

“குடந்தையில் பி.யூ.சி படிக்கும்போது, ‘விடுதலை’ ஆசிரியர் வீரமணியின் சகலர், சா.ரு.சம்பந்தன் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். அவருடைய வழிகாட்டுதலில், ‘தமிழ் மாணவர் கழகம்’ எனும் அமைப்பில் செயல்பட்டோம். திராவிட இயக்க ஈடுபாட்டுச் செயற்பாடுகள் அந்தப் புள்ளியில் தொடங்கியதே. பின்னர், அண்ணாமலைப் பல்கலையில் ந.அரணமுறுவலும் நானும் திராவிட மாணவர் கழகத் தலைமைப் பொறுப்புகளில் இயங்கினோம். நாவலர் நெடுஞ்செழியன் அங்கு படித்த காலகட்டத்தில் பெரியார், அண்ணாமலைப் பல்கலைக்கு அழைக்கப்பட்டார். நீண்ட கால இடைவெளிக்குப் பின் நாங்கள் பொறுப்பில் இருந்தபோதுதான், பொதுப்பேரவைக் கூட்டத்தில் பெரியாரையும், திருவாரூர் தங்கராசை, அண்ணாமலை நகர் வீதிக்கூட்டத்திலும் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பங்கேற்க வைத்தோம். பெரியாரிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ளச் சென்றபோது, மேலே பெரிய தொகை நோட்டுகளையும் உள்ளே சின்னதொகை நோட்டுகளையும் செருகி, பணக்கட்டைக் கொடுத்தோம். அருகிலிருந்த கட்சிக்காரர், ‘அய்யா, கொஞ்சமாகக் கொடுத்து ஏமாத்தப் பாக்கிறாங்கய்யா’ என்றார். ‘சரி சரி விடு, பசங்கன்னா அப்படித்தான்’ என்று அவரை அடக்கிவிட்டு, படம் எடுத்துக்கொள்ள அனுமதித்தார்.’’

‘`திராவிட இயக்கத்தைத் தமிழ்ச் தேசியத்துக்கு முரணாக நிறுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்களா?’’

‘`இனத்தூய்மைவாதமும் திராவிட இயக்க எதிர்ப்பும் தமிழ்த்தேசியத்தை இந்துத்துவத்தில்தான் கொண்டுபோய் நிறுத்தும். முருகனையும் சேயோனையும் முப்பாட்டன் என்றால், மாயோன் (திருமால்) நம்பாட்டன் இல்லையா என்ற கேள்வியும் எழத்தானே செய்யும்? ‘நாம் தமிழர்’ சீமானின் நிலைப்பாடுகள் ஏற்புடையன அல்ல. இளைய தலைவர்களில் திருமாவளவனே நம்பகத்துக்குரிய தலைமைப்பண்பு உடையவராகத் திகழ்கிறார்.”

‘` ‘சூரியக் குளியல்’ தொகுப்புக்குப் பின்னர், நீங்கள் ஏன் கவிதைத் தொகுப்பு முயற்சியைத் தொடரவில்லை?’’

“ ‘சூரியக் குளியல்’ புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் வெளியீடு. அதில் இடம்பெற்ற கவிதைகளிலிருந்து தலைப்பைத் தேர்வுசெய்தவர், தெலுங்கு எழுத்தாளர் வரவர ராவ். வெவ்வேறு தளங்களில் இயங்கும் சிறுகதைகளைப் புதுமைப்பித்தன் எழுதியுள்ளார். அது, நான் அவரிடமிருந்து கற்ற பாடம். நானும் வெவ்வேறு வகையான சோதனை முயற்சிகளைக் கவிதைகளில் எழுதிப்பார்த்துள்ளேன். அவற்றைத் தொகுத்து  நூலாகக் கொண்டுவரவிருக்கிறேன்”

“தற்போது வெளியாகியுள்ள, தயாரிப்புப் பணியில் உள்ள நூல்கள் குறித்து...”

‘`இம்மாதம் ‘அகரம்’ பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்’, புனைகதை விமர்சனம் மற்றும் கதையாடலாய்வு நூலாகும்.  தயாரிப்பு நிலையில் உள்ள நூல்கள்... ‘என் அரை நூற்றாண்டுக் கவிதை ஆல்பம்’ மற்றும் ‘காந்தியமும் பின்னை காந்தியமும்’ எனும் கட்டுரைகளின் தொகுப்பு. காந்திமீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இந்த நூலில் விவாதித்துள்ளேன்.”

“உங்கள் புத்தகப் பயணத்துக்குக் குடும்பத்தினர் அளித்த ஒத்துழைப்பு பற்றி...”

“வணிகரீதியாக வெற்றிகரமாக அமையாத என் விற்பனை முயற்சிகளுக்கு, ‘வேண்டாத வேலை எதற்கு?’ என்பதாகத்தானே அவர்கள் நிலைப்பாடாக இருக்க இயலும்! குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி, என் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியவர்  என் துணைவி ஆண்டாள். அவர் ஆங்கில இலக்கியம் பயின்றவர். வையாபுரியார் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் இருவருக்குமே கொள்ளுப் பேத்தி. இத்தகைய குடும்பப் பின்னணியில் இருந்து வந்ததால், என் இலக்கியப் பணி பற்றிய புரிந்துணர்வு அவருக்கு இருந்தது.”

- விஷ்ணுபுரம் சரவணன்,  படங்கள்: தி.விஜய்

ஓவியம்: பிரேம் டாவின்ஸி