ஆட்சியாளர்களை விமர்சிக்கிற, மணல்கொள்ளையை எதிர்க்கிற பலரையும் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் தள்ளும் கரூர் காவல்துறையினர் செயல்பாடுகளைக் கண்டு கொதித்துப்போயிருக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
கரூரில் மணல் குவாரியை முற்றுகையிட்டு சிலர் போராட்டம் நடத்தினர். அவர்களை, சமூக செயற்பாட்டாளர் முகிலன் சந்தித்தார் என்பதற்காக அவர்கள்மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரைப் பற்றிச் செய்தி வெளியிட்டார் என்பதற்காக ஒரு நாளிதழின் இணையதள நிருபரான ஆனந்தகுமார்மீதும் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு போட்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலனிடம் பேசினோம். ‘‘மணத்தட்டையில் மணல் குவாரி இயக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த மணல் குவாரியிலிருந்து 430 மீட்டர் தூரத்திலேயே மணப்பாறை கூட்டுக் குடிநீர்த் திட்ட நீர் ஆதாரம் இருப்பதுதான் காரணம். ராஜேந்திரம் மணல் கிடங்கை இயக்க இன்னும் அனுமதி வாங்கவில்லை. ஆனால், முதலமைச்சர் துணையோடு இதை அதிகாரிகள் இயக்கிவருவதாக மக்கள் சொன்னார்கள். இதனால், மணல் குவாரியையும், மணல் கிடங்கையும் மூடும்படி மாவட்ட கலெக்டர் அன்பழகனிடம் மனு கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால், நாம் தமிழர் கட்சி மற்றும் காவிரி பாதுகாப்பு இயக்கத்தினர் 14 பேர் மணல் குவாரியை முற்றுகையிடச் சென்றனர். அவர்களை போலீஸார் கைதுசெய்து, மாலையில் விடுவிப்பதாக இருந்தனர். நான் போய் அவர்களை சந்தித்தேன். உடனே அவர்கள் மீது எந்த முகாந்திரமும் இல்லாமல் வழக்குப் போட முயற்சி செய்தனர். நான் கலெக்டருக்கு போன் செய்து இதைச் சொன்னேன். ‘உடனே நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று அவரும் சொன்னார்.
ஆனால், 14 பேர்மீதும் பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துவிட்டனர். இதுகுறித்து கலெக்டரை சந்தித்து மனு கொடுக்கப் போனோம். அவர் எங்களைச் சந்திக்கவில்லை. தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுகிறது. கரூர் மாவட்டத்தில் அது இன்னும் கொடுமையாக உள்ளது’’ என்றார் ஆவேசமாக.
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பற்றி செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் ஆனந்தகுமாரை போலீஸார் குறிவைத்துத் தாக்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி ஆனந்தகுமாரின் வழக்கறிஞரான தமிழ் ராஜேந்திரனிடம் பேசினோம். “க.பரமத்தி பகுதியில் உள்ள ஐந்து கல்குவாரிகளில் வருமானவரித் துறை ரெய்டு நடந்தது. அதை ஆனந்தகுமார் வாட்ஸ்அப் குழுக்களில் பதிந்தார். அமைச்சரைப் பற்றி அவதூறு செய்திகளைப் பரப்புவதாக அவரைக் கைதுசெய்த போலீஸார், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். எல்லாமே இந்த சம்பவத்துக்குப் பொருந்தாத பிரிவுகளாகும். தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 67 என்பது ஆபாசமாகச் செய்திகளை அனுப்புவது. ஆனந்தகுமார் அப்படி என்ன ஆபாசமாக செய்தி அனுப்பினார்?” என்றார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த வழக்குகள் பற்றி கரூர் எஸ்.பி ராஜசேகரனிடம் பேசினோம். “அரசு மணல் குவாரியை முற்றுகையிட்டால் சும்மா இருக்க முடியுமா? ‘இங்கே போராட்டம் நடத்த வராதீங்க. வந்தா கைது பண்ணுவோம்’ என்று எச்சரிக்கை செஞ்சோம். அதையும் மீறி வந்தாங்க. கைது பண்ணினோம். வழக்குப் பிரிவுகள் எந்த உள்நோக்கமும் இல்லை. நிருபர் ஆனந்தகுமார் கைது நடவடிக்கை பற்றி எனக்குத் தெரியாது. நான் அப்போது ட்ரெய்னிங்கில் இருந்தேன்” என்றார்.
கரூர் போலீஸாரின் இந்தப் போக்கு சரியல்ல!
- துரை.வேம்பையன், படங்கள்: நா.ராஜமுருகன்