Published:Updated:

சென்னை டூ தனுஷ்கோடி மீனவர்கள் வாழ்வை கதைகளாகச் சொல்லும் `கடலாடு காதை!’

சென்னை டூ தனுஷ்கோடி மீனவர்கள் வாழ்வை கதைகளாகச் சொல்லும் `கடலாடு காதை!’
சென்னை டூ தனுஷ்கோடி மீனவர்கள் வாழ்வை கதைகளாகச் சொல்லும் `கடலாடு காதை!’

லை சமூகத்தில் என்ன செய்யும்? மனித சமூகம் எப்போதும் கலையை தன் வாழ்வின் நீட்சிக்கான ஓர் அங்கமாகவே பார்க்கிறது. கலைஞன் தன் கலையைக் கொண்டு இந்தச் சமூகத்தை ஆவணப்படுத்தவும், அரவணைக்கவும் முயல்கிறான். தான் கண்ட தனது சமூகத்தை, மக்களை, தன் கண் கொண்டு பார்ப்பதற்கு கற்றுக்கொடுக்கிறான். அவை மனித மனங்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்துகிறது. அப்படியொரு நிகழ்வுதான் `கடலாடு காதை'. புகைப்படங்கள் அரசியல் ரீதியாகவும், மனிதம் குறித்தும் மாபெரும் விவாதங்களை, மாறுபட்ட கண்ணோட்டத்தை வழங்கியுள்ளது. மீனவர்கள் வாழ்வை `கடலாடு காதை' எனப் புகைப்படங்களாகப் பதிவு செய்திருந்தார்கள். 

``மக்களின் ஒரு முகத்தை மட்டுமே திரும்பத் திரும்பக் காட்டிக்கொண்டிருந்தால், அவர்களின் மற்ற முகங்கள் மறைந்து அவர்கள் அந்த ஒரு முகத்திலேயே மறைந்துவிடுவார்கள்” 

- சிமாமாண்டா நகோசி அடிச்சி

இந்தக் கூற்றுக்கு நியாயம் சேர்க்கும் விதமாக அமைந்திருந்தன புகைப்படங்கள். புகைப்படங்களை அழகாகக் காட்சிப்படுத்த வேண்டும் என்கிற நோக்கமின்றி, புகைப்படங்களின் வழியாக மீனவ மக்களின் வாழ்வை ஆவணப்படுத்திப் பொதுமக்களிடம் கொண்டு செல்ல எத்தனித்ததில் `கடலாடு காதை’ கவனம் பெறுகிறது. புகைப்படங்கள் முழுக்க மனிதர்கள். அந்த மனிதர்கள் கதைக்கிறார்கள், உழைக்கிறார்கள். அதைவிட முக்கியமாக அவர்களின் செதில் பூசிய கதைகளைக் கேட்பதற்கு நம்மை உப்புக் காற்றுக்கு அழைக்கிறார்கள். 

``12 வயதில் தொழிலுக்காகக் கடலில் இறங்கிய நாகராஜுக்கு தற்போது 48 வயது. கண்ணாடி மட்டுமே அணிந்து வேறு எந்த உபகரணமும் இல்லாமல் நீருக்குள் மூழ்கி மீன் பிடித்தொழில் செய்திடும் அவரது கண்களில் அனுபவமும், பட்ட இன்னல்களும் தெரிகிறதா?” என்ற வரிகளைத் தாங்கி நிற்கிறது ஒரு புகைப்படம். அந்தப் படத்தில், படகிலமர்ந்து வான் நோக்கிப் பார்க்கிறார் மீனவர் ஒருவர்.

கருவாட்டுக் கூடைகளுக்கு மத்தியில் அமர்ந்து கூடி நிற்கும் மக்களிடம் கதைசொல்லிக்கொண்டிருக்கும் பாட்டியின் புகைப்படம், கடலின் மாற்று பாலினத்தை நீலமாகக் காட்டிக்கொண்டிருக்கும் புகைப்படம் உட்பட அனைத்துப் புகைப்படங்களும் ஏதோ ஒரு கதையைச் சொல்கிறது. புகைப்படங்கள் கடல், கடற்கரை மணல், படகு, வலை, மீன் ஆகியவற்றுக்கும் அந்த மீனவனுக்கும் இடையிலான உறவை அழகாக வெளிப்படுத்திக்கொண்டிருந்தது. நிலம் சார்ந்து அரசியல் ரீதியான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில் நிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் புகைப்படங்கள் ஆவணமாகின்றன. விவாதப்பொருளாக மாறுகின்றன எனலாம். 

``கடலூரில் புகைப்படம் எடுக்கச்சென்ற போது பெண்கள் புடவைக்கட்டி கம்பீரமாகக் கடலில் இறங்கி மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். இதை மற்ற மீனவர்களிடம் சொல்லும்போது ஆச்சர்யத்துடன் கேட்டனர். அவர்களின் ஆச்சர்யத்தைவிட நேரில் பார்க்கும்போது நாங்கள் மிகவும் ஆச்சர்யமாக உணர்ந்தோம்” என்று அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் புகைப்பட கலைஞர் சோமசுந்தரம், கண்காட்சியை நடத்தும் `காணி நிலம்' என்ற அமைப்பின் முழுநேரச் செயற்பாட்டாளராக உள்ளார். சொல்லப்படாத கதைகளை புகைப்படங்கள் வழியாக மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயல்பட்டுவருகிறார். மற்றொரு புகைப்படக்கலைஞரான ஆபா முரளீதரனும் காணி நில அமைப்பின் செயற்பாட்டாளராக உள்ளார். 

சுமார், மூன்று மாதங்களாக சென்னை முதல் தனுஷ்கோடி வரையிலான மீனவ மக்களின் இடங்களுக்குச் சென்று அவர்களுடன் பேசி, பழகி எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தாம் இவை. கடந்த 23-ம் தேதி தொடங்கிய கடலோடு காதை கண்காட்சி, டிசம்பர் 27 வரை நடைபெறுகிறது. ஸ்கில் சார்ந்த பல நிகழ்ச்சிகளையும் இக்கண்காட்சியில் நடத்தி வருகின்றனர். மீனவர்களை அழைத்து வந்து அவர்களின் உணவு சமைக்கும் முறை, பறையாட்டம், சிலம்பாட்டம், குழந்தைகளுக்கான நிகழ்ச்சி கஜா புயல் பாதிப்பு பற்றிய ஆவணப்படம் திரையிடல், எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

புகைப்படம் எடுத்த எல்லாப் பகுதிகளிலும் இந்தக் கண்காட்சியை நடத்த முடிவு செய்துள்ளனர். அதன் ஆரம்பமாகத்தான் சென்னையில் சேத்துபட்டு எகோ பார்கில் இக்கண்காட்சியை நடத்தி வருகின்றனர். நீங்களும் சென்று வாருங்கள். கருவாட்டுக் கூடையுடன் உப்புக் காற்று சுமந்த புன்னகையுடன் கதைகளைச் சொல்ல அந்தப் புகைப்படங்கள் காத்திருக்கின்றன!