Published:Updated:

ஆவதறிந்த காந்தி

ஆவதறிந்த காந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
ஆவதறிந்த காந்தி

சுப.உதயகுமாரன், ஓவியம் : பாரதிராஜாதொகுப்பு : வெய்யில், ச.அழகுசுப்பையா

வீன இந்தியாவின் சமூக - பொருளாதார - அரசியல் அரங்கின் நடுவில் அட்டகாசமாய் அமர்ந்திருக்கும் அபாரமான யானைதான் மகாத்மா காந்தி. யானையின் பல்வேறு பாகங்களைத் தொட்டு நிற்கும் பார்வையற்றோர், முழுப் புரிதல் கொண்டவர்கள் அல்லர். யானையை அப்பாகங்களின் முழுமையாய்ப் பார்க்க வேண்டும். ஒரு பாகன் போல!

ஆவதறிந்த காந்தி

பாகங்கள் பலவிதம். அவற்றின் எண்ணிக்கையோ ஆயிரமாயிரம். பார்ப்பவரின் பின்புலம், பார்வையின் தனித்துவம், பார்ப்பதன் நோக்கம் என ஏராளமான அம்சங்கள் பொதிந்து கிடப்பதாலும், அவை முழுப் புரிதலைக் கடினமாக்குவதாலும் நம்மில் பலர் பாகப் புரிதலையே பாரியப் புரிதலாக ஆக்கிக்கொள்கிறோம்.

யானையைப் பாகன் போலப் பார்ப்பதுதான் சிறப்பு. அவர் தரைமீது நின்று யதார்த்தமாகவும் பார்க்கிறார், அதன் தலைமீது அமர்ந்து தத்துவார்த்தமாகவும் பார்க்கிறார். தரைமீது நிற்கும்போது, காந்தியின் (இந்து) மதப்பற்று, தூய்மைவாதம், துறவுநிலை போன்றவை நம்மை மிரட்சிகொள்ளச் செய்கின்றன. ஆனால், தலைமீது அமரும்போது காந்தியம் நம் முன்னே பரந்து விரிகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆவதறிந்த காந்தி

உண்மை, உடலுழைப்பு, எளிமை, இயற்கை போற்றல், தொழிற்கல்வி, தற்சார்பு, ஆத்ம பரிசோதனை, கிராம நலன், எளியோர் நலம், சமத்துவம், சுயாட்சி, மாந்தநேயம், சத்யாகிரகம், சர்வோதயம், அகிம்சை, அறப்போர், விடுதலை என காந்தியம் படர்ந்து வியாபிக்கிறது. ஆனால், இவை அனைத்தையும்விட, காந்தியின் ஆகப்பெரும் தனிச்சிறப்பு என்பது, வருங்காலத்தைக் கருத்திற்கொண்டு வகுக்கும் செயல்பாடுகள்தான். ‘அறிவுடையார் ஆவதறிவார்’ என்கிறது வள்ளுவம். அந்த ஆவதறிந்த காந்தியைப் பார்ப்பது மிகவும் பயனளிக்கும்.

இராமராச்சியம்

விடுதலைக்கு முன்பு இந்தியாவில் நூற்றுக்கணக்கான அரசர்களும், சிற்றரசர்களும், குறுநில மன்னர்களும் ஆண்டுகொண்டிருந்தனர். பரப்பளவையும் வரலாற்று முக்கியத்துவத்தையும் கணக்கிற்கொண்டு, பிரிட்டிஷ்காரர்கள் 88 அரசர்களுக்கு 11 அல்லது அதற்கு அதிகமான குண்டுகள் முழங்க வரவேற்பளித்து வந்தனர். இந்தப் பேரரசர், சிற்றரசர், குறுநில மன்னர்கள் போன்றோருக்கிடையேயான உறவுகள், இவர்களுக்கும் பிரிட்டிஷ் அரசுக்குமிடையேயான தொடர்புகள் என மிகவும் நுண்மமான, சிக்கலான ஒரு சூழலில், வருங்காலச் சுதந்திர இந்தியாவைக் கற்பனை செய்வது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. ஆனாலும், முகிழ்த்துவரும் இந்தப் புதிய நாட்டை மனக்கண்ணால் பார்க்க, அதை நவீன உலகிற்குள் கொண்டுசேர்க்க பெருத்தத் தேவை இருந்தது.

இந்துத்துவம், இந்து-முசுலீம் இரு தேசக் கொள்கை, தாழ்த்தப்பட்டோருக்கான தனி அமைப்புக்கள், பிராந்திய அரசியல் குழுமங்களின் கனவுகள் எனக் குழம்பிக்கிடந்த தெற்காசியாவில், காந்தியின் ‘இராமராச்சியம்’ அல்லது ‘தர்ம ராச்சியம்’ மக்கள் கவனத்தைக் கவர்ந்தது. மக்கள் மத்தியில் பிரசித்திப்பெற்ற  ‘இராமாயணம்’ எனும் இதிகாசக் கதையைக் கையிலெடுத்த காந்தி, சுயாட்சி பற்றிச் சொல்லிக்கொடுக்கும் பாடமாக அதை மாற்றினார்.

சனவரி 24, 1928 அன்று மோர்வி எனுமிடத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றிய காந்தி, இப்படி விவரித்தார்: “ஆள்பவரும் மக்களும் இருவருமே நேர்மையாக இருக்கும் அரசைத்தான் ‘இராமராச்சியம்’ என்றழைக்கிறோம். இரு தரப்புமே இதயத்தால் சுத்தமானவர்களாக, தியாகங்கள் செய்வதற்கு அணியமானவர்களாக, உலக இன்பங்களை அனுபவிக்கும்போது சுயக்கட்டுப்பாடு உடையவர்களாக, ஒரு தகப்பனுக்கும் மகனுக்குமிடையேயான உறவைக் கொண்டிருப்பவர்களாக இருக்க வேண்டும். இதை மறந்துவிட்டதால்தான், ‘சனநாயகம்’,  ‘மக்களரசு’ என்று பேசிக்கொண்டிருக்கிறோம். எனது இராமராச்சியத்தில் மக்கள் கருத்தை, தலைகளை எண்ணியோ, கைகளை உயர்த்தியோ அளக்க முடியாது.”

தனது கனவரசை விவரித்த காந்தி தொடர்ந்தார்: “இராமச்சந்திரன் எல்லா உயிர்களையும் தனது அங்கமெனக் கருதியதால், இராமராச்சியத்தில் ஒரு நாய்கூடத் துன்புறுத்தப்படாது. அந்த அரசில் ஒழுக்கங்கெட்ட செயல்களோ, பித்துக்குளித்தனங்களோ, தவறுகளோ இடம்பெறாது. மக்களின் அரசு, அத்தனை உண்மையோடு நடைபெறும்.” பிப்ருவரி 12, 1927 அன்று அமல்னெர் எனுமிடத்தில் பேசிய காந்தி, “ஒவ்வொருவரும் தமது கடமையை நன்கறிந்து அதை நடைமுறைப்படுத்தினால், நாம் இராமராச்சியத்தைப் பெறலாம்” என்றார். யூலை 3, 1947-ல், தான் எழுதிய ஒரு கடிதத்தில்  ‘நாமனைவரும் பயத்தை விட்டொழித்து, கடவுளை நம்பி, தைரியசாலிகளாக மாறினால்தான் இராமராச்சியத்தைப் பெற முடியும்’ என்று குறிப்பிட்டார்.

காந்தியின் இராமராச்சியம் வெறும் பகல் கனவல்ல. தெளிவான இலக்குகள்கொண்ட உறுதியான அரசியல் திட்டம். டிசம்பர் 27, 1936 அன்று ஃபைஸ்பூர் எனுமிடத்தில் பேசிய காந்தி, அரசியல் சுதந்திரம், பொருளாதாரச் சுதந்திரம், சமூக ஒழுக்கங்கள், தர்மம் எனும் நான்கு முனைகள்கொண்ட ‘சுயாட்சி சதுரம்’ பற்றி விவரித்தார். “ஏதாவது ஒரு முனையின் கோணம் சற்றே மாறினாலும், சதுரம் தனது வடிவத்தை இழந்துவிடும்” என்றார் அவர். அவரது தன்னாட்சித் திட்டத்தில், “35 கோடி மக்களுமே (அப்போதைய இந்திய மக்கட்தொகை) எசமானர்கள். 3.5 கோடி வாக்காளர்கள் அவர்களின் வேலைக்காரர்கள். 150 மக்கள் பிரதிநிதிகள் மேற்குறிப்பிட்ட இருவருக்குமே வேலைக்காரர்கள்” என்று வர்ணித்தார் காந்தி.

“மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை திடீரென விழித்து வாக்களித்துவிட்டு, மீண்டும் தூங்கச் சென்றுவிட்டால், வேலைக்காரர்கள் எசமானர்கள் ஆகிவிடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு பேரிடரைத் தவிர்க்கும் ஒரே வழி, 35 கோடி மக்களும் கடின உழைப்பாளர்களாக அறிவாளிகளாக இருப்பதுதான்” என்றுரைத்தார் காந்தி. 

“இந்தியர்கள் காதி உடுத்து, மத ஒற்றுமையைப் பேணி, போதைப் பொருள்களைத் தவிர்த்து, தீண்டாமையை விட்டொழித்தால் தேவையற்ற துன்பங்களைச் சந்திக்காமல், விரைவில் தன்னாட்சி பெறலாம்” என்றார்.

ஆவதறிந்த காந்தி

எளியவர்களின் எதிர்காலம்

காந்தியின் ஆவதறியும் திறன் ஏழை எளியவர்களை, சக்தியற்றவர்களைக் குறித்தே சிந்தித்தது. 1925-ம் ஆண்டு அக்டோபர் மாதம், பெண்கள் கூட்டம் ஒன்றில் பேசிய காந்தி, “நான் இராமராச்சியத்தை நிறுவ விரும்புகிறேன். ஆண்களிடம் நான் இது குறித்துப் பேசுவதில்லை. காரணம், இதை நிறுவிடப் பெண்கள் உறுதிபூண்டால், ஆண்கள் தாமாகவே முன்வந்து உதவுவார்கள். எனவே, பெண்களிடம் பேசும்போதெல்லாம் நான் இராமராச்சியம் பற்றித்தான் பேசுகிறேன்” என்று குறிப்பிட்டார். சீதாப்பிராட்டி வாழ்ந்த காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட ஆடைகள் இல்லை என்று சுட்டிக்காட்டிய காந்தி, அந்தக் காலத்தில் அனைவருமே ராட்டை சுற்றியதாகவும் கதர் ஆடைகளையே அணிந்ததாகவும் சொன்னார்.

1926-1927 காலகட்டத்தில் சபர்மதி ஆசிரமத்தில் பேசிய காந்தி: “பழைய சட்டங்கள், நியமங்கள் அனைத்தும் ஆண் சாமியார்களால் உருவாக்கப்பட்டவை. எனவே, பெண்களின் அனுபவங்கள் அவற்றில் இடம்பெறவில்லை. ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே, யாரையும் உயர்ந்தவராகவோ தாழ்ந்தவராகவோ கருதக் கூடாது” என்றார். இராமராச்சியத்தில் சீதாக்களை அதிகாரத்துக்குக் கொண்டுவர முயன்றார் காந்தி. அனைத்துப் பெண்களும் துணிகள் நெய்யும்போது, கோடிக்கணக்கான பணம் இந்தியாவைவிட்டு வெளியேறுவதைத் தடுத்து, தன்னாட்சி பெறமுடியும் என்று நம்பினார் காந்தி. “யாரையும் தீண்டத்தகாதவர்கள் என்று நம்பாதீர்கள்” என்று பெண்களைக் கேட்டுக்கொண்ட காந்தி, குழந்தைத் திருமணத்தைத் தடுக்கவும், குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்கவும், தங்கள் நகைகள், பொக்கிசங்களைக் கதருக்காக விட்டுக்கொடுக்கவும் பெண்களைக் கேட்டுக்கொண்டார்.

இராமராச்சியம் நிறுவுவதற்கான பெரும் தடையாகச் சாதியத்தைக் கருதினார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் போராடியபோது, இந்தியர்களுக்காகத் தனிப் பள்ளிகள் நிறுவுவது தீண்டாமையை நீட்டிக்கும் என்பதால் அதை உறுதிபட எதிர்த்த காந்தி, இந்தியா வந்த பிறகு, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தனியே பள்ளிகள், கோவில்கள், கிணறுகள் அமைப்பதை ஏற்றுக்கொண்டார். இவை அனைத்துமே அனைவருக்குமானவை. ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களே முதலுரிமை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றார்.

டிசம்பர் 20, 1926 அன்று வர்தாவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, “இந்தியாவின் அனைத்து இந்துக்களும் எனக்கு எதிராக அணிசேர்ந்து, இந்துமத சாத்திரங்களும் வேதங்களும் தீண்டாமையை ஆதரிப்பதாகச் சொன்னாலும், அந்தச் சாத்திரங்கள், வேதங்கள் அனைத்தும் தவறானவை என்று நான் அறிவிப்பேன்” என்றார் காந்தி. இராமராச்சியத்தின் சாவி நகரங்களில் இல்லை; கிராமங்களில்தான் உள்ளது என்று சொன்ன அவர், ஒருசிலர் மட்டும் செல்வத்தில் உருண்டுபுரண்டு, பெரும்பான்மையோர் உணவே இல்லாமல் தவிக்கும் நிலையில் இராமராச்சியம் வரவே வராது என்று அறிவித்தார். ஏழ்மையற்ற, மேலோர்-கீழோர் எனும் பேதமற்ற நிலையே இராமராச்சியம் என்று கருதினார் காந்தி.

அரசியல் சுதந்திரமும், பொருளாதாரத் தற்சார்பும், சமூகத் தன்னம்பிக்கையும், மக்களின் பங்கேற்பை உறுதிசெய்யும் பெண்கள், குழந்தைகள், தாழ்த்தப்பட்டவர்கள், ஏழைகள் போன்றோரின் நலன்களை பாதுகாக்கும் உள்நாட்டு சனநாயகமும் தழைத்தோங்கும் இந்தியா குறித்து கனவுகண்டார் காந்தி. இந்திய பாரம்பர்யத்தைப் பேண வேண்டும் என்று காந்தி நினைத்தாலும், அதன் தீய அம்சங்களைக் கடுமையாக எதிர்த்தார். அவரது வருங்காலவியல் என்பது, தனது எண்ணங்களை மேலிருந்து திணிக்கும் கொடுங்கோல் செயலாக அன்றி, மக்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் சனநாயகத் தன்மையதாய் இருந்தது.

எதிரதாக் காக்கும் அறிவினார்

வருங்காலம் விரும்புவோர் வாழ்க்கையைப் போற்றியாக வேண்டும். சாவையும் அழிவையும் எதிர்த்தாக வேண்டும். பெரும்பான்மையோரின் பெரும்பாலான நலன்களைப் பாதுகாப்பது என்றில்லாமல், அனைவரின் அனைத்து நலன்களையும் பாதுகாக்க வேண்டும். மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்து, கண்ணியத்தைப் பெருக்கி, அவர்கள் தங்களின் மனிதாபிமானத்தை மீட்டெடுக்கவும் சமத்துவத்தைக் கோரவும், அநியாயமான சமூக-பொருளாதார-அரசியல் ஏற்பாட்டோடு எந்தவிதத்திலும் ஒத்துழைக்காமல், அறவழியில் நேரடியாகப் போராடவும் தயாரித்தார் காந்தி.

காந்தியின் வருங்காலவியல் எந்தத் தரப்பு மக்களையும் தள்ளிவைக்கவில்லை. ‘இந்துமதக் கடவுளின் பெயரைச் சொல்லி, இராம நாமத்தை உச்சரித்து நடத்தப்படும் பிரார்த்தனைக் கூட்டங்கள் குறித்து முசுலீம்கள் எப்படி உணர்வார்கள்?’ என்று காந்தியிடம் கேட்கப்பட்டது. “என்னுடைய மதத்தை நான் திறந்தவெளித்தன்மையோடு கடைபிடிப்பது எப்படி அடுத்தவரைப் புண்படுத்தும்?” என்று எதிர்க்கேள்வி கேட்டார். வழக்கம்போலவே படைப்புத்திறன்மிக்க பல வழிகளை அவர் சுட்டிக்காட்டினார். “இந்த பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வருவது கட்டாயமில்லை. வந்தாலும் பிரார்த்தனையில் பங்கேற்க வேண்டியதில்லை” என்றார்.

“இராமராச்சியம் என்பது, மிகவும் வசதியான, ஆழமான சொல். இதன் அர்த்தத்தை லட்சக்கணக்கான மக்களுக்கு வேறு எந்தச் சொல்லாலும் உணர்த்த முடியாது” என்றுரைத்த காந்தி, “பெரும்பான்மை முசுலீம் மக்களிடையே பேசும்போது, இராமராச்சியத்தை ‘குதாய் ராச்சியம்’ என்று குறிப்பிடுகிறேன்; கிறித்தவர்களிடையே பேசும்போது ‘கிங்டம் ஆஃப் காட்’ (Kingdom of God) என்றழைக்கிறேன்” என்றார். இராமராச்சியம் என்பதன் மூலம், தான் இந்துக்களின் ஆட்சியைக் குறிப்பிடவில்லை; இராம் என்பது குதா, காட் என்பவற்றின் இன்னொரு பெயர்தான் என்றார் காந்தி. அவரின் அரசியல் உண்மைத்தன்மையும் தனிப்பட்ட நேர்மையும் மதவெறியில் திளைத்தவர்களுக்குப் புரியவில்லை.

இந்து-முசுலீம் மதக் கலவரங்களும், நாட்டின் பிரிவினையும், அகதிகள் அனுபவித்த துன்பங்களும் காந்தியைக் கலங்கடித்தன. அக்டோபர் 4, 1947 அன்று புது தில்லியில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில், காந்தி வருந்திப் பேசினார்: “இராமராச்சியம் வெறும் கனவாகிப் போய்விட்டது. தற்போது நாட்டில் எந்தவிதமான அரசும் இல்லை. இந்த நிலை மாறவில்லையென்றால் உடனே என்னை எடுத்துக்கொள்ளும்படி என் இதயம் கடவுளை நோக்கி அழுது பிரார்த்திக்கிறது. இந்நிகழ்வுகளைப் பார்ப்பதற்காக நான் ஏன் இருக்க வேண்டும்?”

வருங்காலம் பற்றிக் கனவு கண்டுகொண்டிருந்த காந்தி, நண்பர்களிடம் சொன்னார்: “உங்கள் வழியை உங்களால் பார்க்க முடியவில்லை என்றால், எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே தங்கிவிடுவது நல்லது.” அதன் அர்த்தம், தனது கனவு வருங்காலத்தைக் கைவிடுவதல்ல; மாறாக, தைரியமான தன்மதிப்பீடு ஒன்றில் இறங்குவது; அண்மை நிகழ்வுகளுக்காகப் பிறரைப் பழிப்பதைவிட, தானே பொறுப்பேற்றுக்கொள்வது; எல்லாவற்றுக்கும் மேலாக, தான் விரும்பும் வருங்காலத்தைத் தானே வாழ்ந்து காட்டுவது, தன் கனவுகளைக் கைவிடாமலிருப்பதுதான்.

1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம், தனது புது தில்லி பிரார்த்தனைக் கூட்டமொன்றில் பேசிய காந்தி, கம்பளிப் போர்வைகளின்மூலம் மக்களை இராமராச்சியத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றார். அகதிகள் முகாமில் துன்புறுவோரின் பிரச்னைகளைச் சுட்டிக்காட்டிய காந்தி, அத்தனை பேருக்கும் இந்திய அரசாலோ வெளிநாடுகளாலோ  கம்பளிப் போர்வைகள் வழங்க இயலாது என்பதை எடுத்துரைத்து, “நம்மில் பலர் தேவைக்கதிகமான கம்பளிப் போர்வைகள் வைத்திருக்கிறோம். எவ்வளவு போர்வைகள் தர முடியுமோ அவற்றைத் தாருங்கள். கடவுளுக்கான காணிக்கையாகத் தாருங்கள். இந்துக்களுக்கும் சீக்கியருக்கும் மட்டுமே கொடுங்கள் என்று நிபந்தனை விதிக்கக் கூடாது. உங்கள் கம்பளிகள் முசுலீம்கள் உள்ளிட்ட தேவைப்படுவோருக்குக் கொடுக்கப்படும். மனிதகுலம் ஒன்றேதான்” என்று பணித்தார்.

ஆவதறிந்த காந்தி

சமூகவியல் அறிஞர் யொஹான் கால்டுங் சொல்வதுபோல, காந்தியின் இராமராச்சியம் என்பது, அப்படியே தோற்றுவிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல, தோராயமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அது மனதில் நிறுத்திக்கொள்ளப்பட வேண்டிய ஓர் உருவமே தவிர, ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துக் கட்டப்பட வேண்டிய கட்டட வரைபடம் அல்ல. காந்தி கனவுகண்டு சொன்ன இராமராச்சியம் என்பது வருங்காலம் குறித்த அறிவியல்பூர்வமான முன்னறிவிப்பு அல்ல, அது ஓர் ஆற்றல்மிக்க ஓவியம். காந்தி தன்னை ஒரு தீர்க்கதரிசியாகக் கருதாமல், விழுமியங்களை உயர்த்திப் பிடிக்கும் உண்மையோடு பரிசோதனைகள் செய்யும் ஒரு யதார்த்தமான கொள்கையாளராகவே தன்னைப் பார்த்தார்.

இந்திய மக்கள் பெரும்பாலானோரின் உள்ளங்களைக் கவர்ந்த இதிகாசம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதன் ஆகர்ச சக்தியைப் பயன்படுத்தி, மக்கள் மத்தியில் கருத்துப் பரிமாற்றம் ஒன்றை நிகழ்த்த, அரசியல் உத்வேகத்தை ஏற்படுத்த முனைந்தார் காந்தி. மக்கள் பேசும் மொழியைப் பேசி, அவர்கள் உள்ளங்களைக் கொள்ளைகொள்ளத் தெரிந்த காரியசித்தியும் படைப்புத்திறனும் கொண்டவர் அவர். காந்தியின் இத்திறமைகள் பெரும்பாலான தலைவர்களுக்கு வாய்க்கவில்லை என்பதுதான் உண்மை.

வலதுசாரி இராமராச்சியம்

காந்தியின் முற்போக்குக் கனவுகளை, பிற்போக்கு வலதுசாரி பாசிச சக்திகள் களவாடியிருக்கின்றன. 1947-ம் ஆண்டு ஜெய்ப்பூர், ஜோத்பூர் நிலப்பிரபுக்கள் சிலர் சேர்ந்து ‘ராம் ராஜிய பரிஷத்’ எனும் ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கினார்கள். மதச்சார்பின்மை, பசுவதை போன்றவற்றுக்கு எதிரான இந்தக் கட்சி, இராமராச்சியத்தை இந்தியாவில் கொண்டுவரவிருப்பதாய் அறிவித்தது. பல அரச குடும்பங்களும் இந்துமத குருமார்களும் இந்தக் கட்சியை ஆதரித்தாலும், காங்கிரசுக்கு மாற்றாக இந்தக் கட்சியால் உருவாக முடியவில்லை.

பாரதிய ஜனதா கட்சி, 1980-களில் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துவிட்டு, இராமர் கோவில் கட்டும் வேலைகளில் ஈடுபட்டபோது, (1992-ல் அது பெரிய அளவில் நடந்தது. ஆனால், அதற்கான ஆரம்ப வேலைகள் அப்போதே ஆரம்பித்துவிட்டன) இராமராச்சியம் எனும் ஆயுதத்தை ஏற்றெடுத்தது. 1989-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், அதன் பின்னர் நடந்த மாநிலத் தேர்தல்களிலும்  ‘கட்சியின் மற்றும் நாட்டின் இலக்காக’ இராமராச்சியம் அறிவிக்கப்பட்டது.  ‘இராமராச்சியம் நோக்கிச் செல்வோம், பா.ஜ.க-வோடு செல்வோம்” எனும் முழக்கம் 1991 தேர்தலில் பலமாக ஒலித்தது. “காந்தியின் கனவான இராமராச்சியத்தைக் கண்டடையும் சுதந்திர அரசியல்கொண்ட அரசாக நமது தேசியப் பயணத்தைத் தொடங்குவதுதான் அயோத்யா இயக்கத்தின் குறிக்கோள்” என்று அறிவித்தது பா.ஜ.க.

இதைக்கண்டு மிரண்டுபோன காங்கிரசுக் கட்சியும் அதே வழியில் பயணிக்க ஆரம்பித்தது. இராமானந்த் சாகரின் புகழ்பெற்ற ‘இராமாயண்’ தொலைக்காட்சித் தொடரில் இராமனாக நடித்த அருண் கோவில் எனும் நடிகரை, 1988 அலகாபாத் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய இறக்கியது. 1989 பொதுத்தேர்தல் பிரசாரத்தை அயோத்யாவில் தொடங்கிய ராஜீவ் காந்தி, இராமபிரான் வாழ்ந்த அந்த இடத்திலிருந்து பிரசாரத்தைத் தொடங்குவது பெரும் நிறைவைத் தருவதாகக் குறிப்பிட்டார். தேர்தலில் தங்கள் கட்சி வென்றால், இராமராச்சியத்தைக் கொண்டுவருவோம் என்றும் ராஜீவ் காந்தி பறைசாற்றினார். 1991 ஏப்ரல் 2-3 ஆகிய நாள்களில், தில்லியில் நடந்த ‘சாது சம்மேளன’த்தில் “இராமராச்சியத்தைக் கொண்டுவரும் ஒரே வழி ஒவ்வோர் இந்துவும் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதுதான்” என்று அறிவிக்கப் பட்டது.

மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தி எனும் கிராமத்தில் அன்னா ஹசாரே உருவாக்கியிருந்த இராமராச்சியம் குறித்து ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஹெச்.வி.சேஷாத்ரி இயக்க ஏடான ‘ஆர்கனைசர்’ இதழில் தொடர் கட்டுரைகள் எழுதினார். அதில் ஹசாரே சொன்ன ஒரு கருத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்: “எங்கள் கிராமத்தில் ஜெயின் மதம், புத்த மதம், இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால், முசுலீம்கள், கிறிஸ்தவர்கள் கிடையாது.” அதேபோல, விவசாயம், கல்வி வளர்ச்சி போன்றவற்றுக்காக அமைக்கப்பட்டிருக்கும் குழுக்களுக்குத் தேர்தல் நடத்துவதில்லை. பொறுப்பாளர்கள் கிராம சபாவால் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள். இவ்வாறான வாதங்களிலிருந்து வலதுசாரிகள் விரும்பும் இராமராச்சியம் எத்தகையது என்பது நமக்கு விளங்கும்.

காந்தியின் இராமராச்சியத்துக்கும் வலதுசாரிகளின் இராமராச்சியத்துக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் தெளிவானவை. காந்தியின் உலகளாவிய மனிதத்தில் நாயகர்களும் (இராமன்), நாயகிகளும் (சீதா) இருந்தார்களே தவிர, எதிரிகள் (இராவணன்) இருக்கவில்லை. ஆனால், வலதுசாரிகள் இராவணன்களின் இடத்தில் பாபர்களையும் அவுரங்கசீப்களையும் மட்டுமல்ல, மொத்த முசுலீம்களையும் கிறிஸ்தவர்களையும், தலித் மக்களையும், பெண்களையும் இட்டு நிரப்புகிறார்கள். பெண்கள், குழந்தைகள், தாழ்த்தப்பட்டவர்கள், ஏழைகள் போன்ற பலவீனமானவர்களை மேம்படுத்துவதன் மூலம் தனது இராமராச்சியத்தைக் கொண்டுவர காந்தி முயன்றார். ஆனால், வலதுசாரிகள் பார்ப்பனியமும் முதலாளித்துவமும் ஆதிக்கம் செலுத்தும் இராமராச்சியத்தைக் கொணர எத்தனிக்கின்றனர்.

காந்தியின் கனவு, பொதுமக்களை வருங்காலத்துக்கு இட்டுச் செல்ல முயல்கையில், வலதுசாரிகளின் சதித்திட்டம் மக்களைப் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. காந்தி கண்ட கண்ணியமான வருங்காலக் கனவு, தற்போது அரசியல் வியாபாரிகளால் களவாடப்பட்டு, தேர்தல் வியாபாரப் பொருளாக சந்தைப்படுத்தப்படுவது கேவலமானது.