Published:Updated:

காற்றில் மூன்று துப்பாக்கி ரவைகள்

காற்றில் மூன்று துப்பாக்கி ரவைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
காற்றில் மூன்று துப்பாக்கி ரவைகள்

(காந்தி, பாத்திரமாக இடம்பெற்ற மூன்று தமிழ் படைப்பாக்கங்கள் குறித்து...)

ந்தவொரு புனைவுப் பிரதிக்கும் சவால்விடும் சுவாரஸ்யத் தன்மைகொண்டது காந்தியின் வாழ்க்கை. இலக்கியப் படைப்பின் ஆதாரத்தன்மைகளில் ஒன்று முரண்; அதன் மாபெரும் உருவமாக காந்தி இருந்தார். எனவே, அவரது பேச்சும் எழுத்தும் நம்பிக்கைகளும் செயல்பாடுகளும் - தீவிரமும் வேடிக்கையுமான புனைவுப் பிரதிகளுக்கு மிக நெருக்கமாகவே அமைந்திருந்தன, அவை உண்மை என்றபோதும். காந்தியின் பல்வேறு கருத்துகள், குறிப்பாக ‘பிரம்மச்சர்ய பரிசோதனை முயற்சிகள்’ பற்றிய செய்திகள் இன்றைய தலைமுறையினருக்கும்கூட அதிர்ச்சியளிக்கக்கூடியவைதான். ஒரு கலைஞனைக்காட்டிலும் விளையாட்டு வீரனைக்காட்டிலும் ஆராய்ச்சியாளனைக் காட்டிலும் தனது உடலைப் பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபடுத்திப் பார்த்தவர் காந்தி. ‘சாக்ரடீஸ், இயேசுவுக்குப் பிறகு, மனிதர்களின் குற்றவுணர்வை மிகநுட்பமாகப் படைப்பாக்கத் திறனோடு உபயோகித்தவர் காந்தி’ என்று குறிப்பிடுகிறார் அசீஷ்நந்தி. காந்தியின் போராட்ட வடிவங்கள் மிக உணர்ச்சிகரமான நாடகத்தன்மைகொண்டவை. அப்படி காந்தி உருவாக்கிய காட்சிகளின் தீவிரத்தில் பல வரலாற்றுத் திருப்பங்கள் நடந்தேறியுள்ளதை நாம் அறிவோம். இப்படியாக, சரி தவறுகளுக்கு அப்பால், காந்தி எப்போதும் வியப்புக்கும் விவாதத்துக்குமானவாரக இருக்கிறார்.

காற்றில் மூன்று துப்பாக்கி ரவைகள்

காந்தியை அரசியல் தளத்தில் தத்துவத் தளத்தில் விவாதிப்பது என்பது, காந்தி வாழ்ந்தபோதும் சரி, அவரது மரணத்துக்குப் பின்னும் சரி, ஓயாத ஒன்றாக இந்தியச் சூழலில் இருந்துவருவதுதான். ஆனால், இலக்கியத்தின் வழியே காந்தி எவ்வாறு விவாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு சுவாரஸ்யமான பகுதி. கருத்தாளனைப்போல் அல்ல, ஒரு படைப்பாளியின் அணுகுமுறை முற்றிலும் விசித்திரமானது. மிகுந்த உளவியல் நுட்பம்கொண்ட அவ்வெளியில் காந்தி என்னவாக வெளிப்படுகிறார் என்பது ஆர்வத்திற்குரியது. ஒரு வாசகனாக அதை அறியும் பேராவல் எனக்கும் உண்டு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காற்றில் மூன்று துப்பாக்கி ரவைகள்

‘தீமைக்கும் நன்மை செய்’ என்ற குஜராத்திப் பாடலும் ‘அரிச்சந்திர நாடக’மும் அடிப்படையில் தனது ஆளுமையை மிக ஆழமாகப் பாதித்ததாகத் தனது எழுத்துகளில் குறிப்பிட்டிருக்கிறார் காந்தி. இந்திய மனத்தின் நினைவுகளில், புழக்கத்தில் ராமாயணப் பிரதி எவ்வளவு ஊடாடிக் கிடக்கிறது என்பதை அறிந்து, அந்தப் பிரதியின் நாயகனைத் தனது கனவு தேசத்தின் அரசியல் கருத்தியல் வடிவமாக முன்வைத்தார். பகவத் கீதை எனும் மத  (புனைவு) நூலை தனக்கு மிக அந்தரங்கமான ஒன்றாக எப்போதும் வைத்துக்கொண்டார். டால்ஸ்டாயின் எழுத்துகளால் உத்வேகம்கொண்டார். திருக்குறளை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தால், தமிழ் கற்றுக்கொள்ள முயன்றார். மத நூல்களான ‘பைபிள்,’ ‘குரான்’ உள்ளிட்ட நூல்களின் புனைவுகளிலுள்ள சாரத்தை தனது ஆன்மிக வெளியில் பயன்படுத்திக்கொண்டார்.(அது அவரது தொண்டர்களால் என்னவாக உள்வாங்கிக்கொள்ளப்பட்டது என்பது விவாதத்திற்குரியது). அன்றைய இரு பெரும் கலைஞர்களான பாரதியை, ரவீந்திரநாத் தாகூரைப் பாதித்தார். இப்படியான, காந்திக்கும் கலை இலக்கியத்துக்குமான தொடர்பு, விரிவாக எழுதப்பட வேண்டியது. அவரை முன்வைத்து இந்திய அளவில் உருவான படைப்புகள் தொகுக்கப்பட வேண்டியவை.

மிழில் நவீன வரலாற்றுப் புனைவுகள் எழுதப்பட்டிருப்பினும், அம்முயற்சிகள் மிக மிகக் குறைவே. காந்தி குறித்து மட்டுமல்ல, வேறு எந்த ஒரு வரலாற்றுப் பாத்திரம் குறித்துமே விரல்களால் எண்ணிவிடும் அளவுக்கே வெற்றிகரமான படைப்புகள் உருவாகியிருக்கின்றன. 2000-க்குப் பிறகுதான் இம்முயற்சிகள் தீவிரப்படத் தொடங்கியிருக்கின்றன. காந்தி குறித்த புனைவுகள் என்றதும், சட்டென நினைவுக்கு வந்த மூன்று பிரதிகளை மட்டுமே இங்கு அறிமுகத்திற்காக எடுத்துக்கொண்டிரு க்கிறேன். இந்தத் தேர்வில் ஓர் எளிய சௌகர்யம் இருக்கிறது; இவை மூன்றுமே நுட்பமான குறும்புனைவுகள். அதேசமயம், ஒரு சிறிய கட்டுரைக்குள் பேசுவதற்கான வாய்ப்பை அவை அனுமதிக்கும் என்ற எனது அசட்டு நம்பிக்கையும் ஒரு காரணம். மேலும், மூன்றும் வேறு வேறு வடிவங்களில் எழுதப்பட்டவை. முதலாவது, தேவிபாரதியின் ‘பிறகொரு இரவு’ (சிறுகதை). இரண்டாவது, ரமேஷ் பிரேதனின் ‘காந்தியைக் கொன்றது தவறுதான்’ (கவிதை). மூன்றாவது, அசோகமித்திரனின் ‘ஆகா கான் மாளிகை’ (நாடகம்).

`பிறகொரு இரவு’ - தேவிபாரதி

‘பிறகொரு இரவு’ கவித்துவமான மொழிநடையில் எழுதப்பட்ட சற்று நீண்ட சிறுகதை. விடுதலைக்குப் பிறகான பிரிவினைக்காலப் பனியிரவுகளில் காந்தியின் கொந்தளிப்பான மனநிலையைச் சித்திரிக்கும்படியான புனைவு. உறக்கமற்ற காந்தி, தனது மரணத்தைப் பற்றியும், தேசத்தின் வன்முறை மிகுந்த சூழல் குறித்தும், அஹிம்சையின் எதிர்காலம் சார்ந்தும் கலக்கமுற்றவராகத் தனது உதவியாளர் தனிக்லாலுடன் உரையாடுவதில் தொடங்குகிறது கதை.

தேசம் செல்லும் பாதை - அதில் தன் பங்கு - தனது ஆன்மிக உய்வு - மரணம் குறித்த எதிர்பார்ப்பு என்று உளவியல் ரீதியாகப் பல்முனைத் தாக்குகுதலுக்கு உள்ளாகிறார் காந்தி. உறவுகளைத் துறந்துவிட்டு, தனது மாளிகையிலிருந்து வெளியேறி, ஒரு ரயில்வே ஸ்டேஷனில் உயிர்விட்ட டால்ஸ்டாயை முன்னுதாரண மாகக்கொண்டு, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ‘பிர்லா’ மாளிகையிலிருந்து வெளியேறுகிறார் காந்தி. வியாபாரத்திற்காக, போலீஸின் தாக்குதலிலிருந்து தப்பிக்க, பயணச்சீட்டு வாங்காமலிருக்க எனப் பல்வேறு காரணங்களுக்காக காந்தி வேஷம் போட்ட கூட்டத்தில், காந்திகளோடு காந்தியாகப் பயணிக்கிறார் மகாத்மா. உண்மையான காந்திக்கும் போலி காந்திகளுக்குமான உரையாடல் மிக  சுவாரஸ்யமானது. காந்தி, தனது உயிர் பிரியவிருக்கும் ‘அந்த’ ஸ்டேஷனைத் தேடியபடியே வருகிறார். வழியில், தனது மனசாட்சியை ஒத்த ஒரு ஸ்டேஷன் மாஸ்டரைச் சந்திக்கிறார். அவரின் கேள்விகளை எதிர்கொள்கிறார். அந்த உரையாடலுக்குப் பிறகான மனநிலையில், அவர் மீண்டும் ‘பிர்லா’ மாளிகை திரும்புகிறார். பிரார்த்தனைக்குச் செல்ல நேரமாகிவிட்டதை எண்ணி, குளியலறைக்குள் விரையும் காந்தியிடம், “அவர் வந்துவிட்டார்” என்று சொல்லப்படுகிறது. “நான் வந்துவிடுகிறேன், அவரைக் காத்திருக்கச் சொல்லுங்கள்” என்கிறார் காந்தி. அந்த ‘அவர்’ துப்பாக்கியுடன் காத்திருக்கும் கோட்சே-வாகவோ காந்தியை மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும் ராமனாகவோ இருக்கலாம் என நாம் யூகித்துக்கொள்ளும் வகையில் சிறுகதை முடிவுறுகிறது.

கதையின் மையக்கரு இவ்வளவுதான் என்றாலும், காந்தி தனது 78 வயதில், மரணத்துக்கு முந்தைய சில நாள்களில், என்னவாக இருந்திருப்பார் என்கிற உண்மைக்கு மிக நெருக்கமான புனைவாக எழுதப்பட்டிருக்கிறது ‘பிறகொரு இரவு.’

மதக் கலவரங்கள் குறித்து வரும் செய்திகளால் மனஅழுத்தமுற்று, பிரக்ஞை நழுவ, கொடூர அகக்காட்சிகளைக் காண்கிறார் காந்தி. அந்த இடத்தில் ஒரு படைப்பாளியாக மிக நுட்பமாக வெளிப்பட்டிருப்பார் தேவிபாரதி. இஸ்லாமியச் சிறுமியொருத்தி தனக்கு நேர்ந்ததைச் சொல்லுமிடம், காந்தியின் மதிப்புமிக்க புனிதமான கண்களை, பற்களைப் பாதுகாப்பதற்காகப் பிடுங்கிச் செல்லும் மக்கள், ‘எரிக்கப்படும் மனித உடல்களிலிருந்து மேலெழும் கரும்புகை தன் அறையின் ஜன்னல்கள்மீது படர்வதை அவர் பார்க்கிறார்’ என்ற வரிகள் என காந்தி தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் வன்முறை சார்ந்த மனக்காட்சிகள் மிக தத்துவார்த்தமாகச் சித்திரிக்கப் பட்டிருகின்றன.

காற்றில் மூன்று துப்பாக்கி ரவைகள்

ஒரு வரலாற்றுப் பாத்திரத்தைக்கொண்டு புனைவை எழுதும்போது, அதற்குச் செய்ய வேண்டிய எல்லா நியாங்களையும் செய்திருக்கிறார் ஆசிரியர். காந்தியின் ஆன்மிகம், பிடிவாத குணம், கவலை, மனப்போராட்டம், மரணம் சார்ந்த விருப்பங்கள், உடல் பற்றிய அபிப்ராயம் என அனைத்தையும் காந்தியின் மனஉரையாடல் வழிச் சித்திரித்தது மிக நல்ல உத்தி. மரணத்தின் தருவாயில் தனது கடைசி வாக்கியத்தைச் சொல்ல வேண்டுமே எனப் பதற்றமுறும் காந்தி, ‘கஸ்தூர்பா இருந்திருந்தால் அதற்கும் தேவையிருக்காது’ என்று எண்ணுகிறார். அந்த இடத்தில், ‘பா அளவுக்கு காந்தியின் மௌனத்தைப் புரிந்துகொண்டவர்கள் யாரும் இல்லை’ என்று எழுதுகிறார் தேவிபாரதி. ஒரு சிறுகதைக்குள் வலிந்து திணிக்காமல், இயல்பில் ஒரு வரலாற்று மனிதரின் கதையை அவரது ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களோடு சொல்வது, நிச்சயம் சவால்தான். குஜராத் கலவரம் தன்னைப் பெரிதும் பாதித்ததாகவும் அதுவே இந்தக் கதைக்கு மூலஉணர்வு என்றும் பேச்சில் குறிப்பிட்டார் தேவிபாரதி. உணரமுடிகிறது! இந்தச் சூழலில் அவசியம் மீள்வாசிப்பு செய்ய வேண்டிய சிறுகதை.

`காந்தியைக் கொன்றது தவறுதான்’ - ரமேஷ் பிரேதன்

இந்த நூல், ரமேஷ் பிரேதன் தனித்து எழுதிய முதல் கவிதைத் தொகுப்பு. நூறு கவிதைகளுக்குள், நூல் தலைப்பின் கீழ் எழுதப்பட்டவை 10 கவிதைகள்.

கலை இலக்கியம் ஏன் மானுடத்தின் தனிச்சிறப்பான ஒன்று? ஏனென்றால், அதைப்போல மனிதர்களிடம் அந்தரங்கமாகப் பேசும் வேறு ஊடகம் நம்மிடமில்லை. ‘நான் காந்தியைக் கொன்றது தவறுதான்!’ என்றொரு வரியை நீங்கள் கட்டுரையில் எதிர்பார்க்க முடியுமா? புனைவின், கவிதையின் சாத்தியம் அதுதான்.

தொகுப்பில் உள்ள கவிதைகளில், காந்தியைக் கொன்றவனாக, கொன்றதை மறுப்பவனாக, கொல்லப்பட்ட காந்தியாக, காந்தியைக் கொல்ல விரும்பியவனாக, தன்னைக் கொன்றதற்காக நன்றி சொல்லும் காந்தியாக எனப் பல்வேறு மனநிலையிலான குரல் வெளிப்படுகிறது. மாறி மாறி அலைவுறும் தீவிரமனதின் சொற்கள். ஆயினும், ஒட்டுமொத்த வாசிப்பனுபவத்தில், மையப்படுத்திச் சொல்லவேண்டுமெனில், காந்தியின் மரணம் (கொலை) சார்ந்த கேள்விகளையும் மரணத்தின் வழியே மீண்டும் உயிர்த்தெழுந்துவிட்ட (உறுதிபட்ட!) மகாத்மா என்ற புனித பிம்பத்தின்மீதான விமர்சனத்தையும் முன்வைக்கும் கவிதைகள் இவை என வகைப்படுத்தலாம்.

‘காந்தி தன்னைக் கொன்றுகொள்ள
நியமிக்கப்பட்ட மிக அந்தரங்கமான
ஆயுதம் நான்’

‘சுட்டதற்கான பலனை நான் அனுபவித்துவிட்டேன்
சுட்டதற்கான கூலியை அவர்
இன்னும் எனக்குத் தரவில்லை
ஆம், ஒரு கொலைகாரன்
புரட்சிக்காரனையும்
மகாத்மாவையும் உருவாக்குகிறான்’

‘உண்மையாகத்தான் சொல்கிறேன்
நான் இன்னும் சாகவில்லை
ஏன் அவனை என்பொருட்டு
கொன்றீர்’


‘காந்தி கொல்லப்படவில்லை. அது, அவர் தேர்ந்துகொண்ட நுட்பமான தற்கொலை என்கிறது கவிதை.

காந்தி அவ்வாறுதான் தனக்கு மரணம் நிகழ வேண்டும் என விரும்பினார். தனது சாவு அர்த்தமற்றதாக, வரலாற்று முக்கியத்துவமற்றதாக இருந்துவிடக் கூடாது. தனக்குக் கடவுளாக ஆவதற்கு இருக்கும் கடைசி வாய்ப்பைத் தவறவிட்டுவிடக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கிய ‘அதிஉடல்’ ஒன்றைச் சாதரணமாக எல்லோரையும் எடுத்துச்செல்லவரும் மரணத்திடம் தந்துவிடக் கூடாது என்று அவர் கவனத்தோடு இருந்தார். ‘அவருக்குச் சாதகமாகவே எல்லாம் முடிந்தது’ என்று வருந்தும் குரலில் ஒலிக்கின்றன கவிதைகள்.

‘துள்ளிக் குதித்தோடும் புத்தன்
காந்தியின் மீது மோதிக்கொள்கிறான்’


என்ற வரியை அவ்வளவு எளிதாகக் கடந்துசெல்ல இயவில்லை. கவிதைக்குள் இருக்கும் மெல்லிய விமர்சனத்தையும் கேலியையும் நாம் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்தத் தலைப்பிற்குள் வராத, ஆனால் கவனிக்க வேண்டிய ஒரு கவிதை இத்தொகுப்பில் உண்டு. அது ‘அம்பேத்கரின் கண்ணீர்’.

‘ததாகதனே அம்பேத்கரே
உனது கண்ணீரின் ஒரு துளி
எனக்கு வேண்டும்’


என்று கவிஞர் வேண்டுகிறார். இங்கே, ஒரே வரியில் எந்தப் பிரச்னையும் இன்றி அம்பேத்கரும் புத்தரும் இடித்துக் கொள்ளாமல் நிற்பதற்கான வழிவகையைச் செய்திருக்கிறார் கவிஞர். அதே கவிதையில் அம்பேத்கரை ‘அழிவற்ற மகாத்மாவே’ என்றும் அழைக்கிறார். காந்தி சார்ந்த விமர்சனம் இங்கு அழுத்தமாக உறுதிபடுகிறது. ஏனென்றால், காந்தி குறித்த மற்றொரு கவிதையில், ‘குட்டிகளுக்கானது அந்த மடி என்று தெரிந்தும், ஆட்டுப்பாலைக் குடிக்கும் நீ எப்படி மாகாத்மா?’ என்று கேட்கிறார் கவிஞர். காந்திக்கு எதிராக புத்தரையும் அம்பேத்கரையும் முன்வைப்பதாக இந்த ஒப்பீட்டைக்கொண்டு புரிந்துகொள்ள முடியும். அதேசமயம், காந்தி, “தனது மரணத்தின் பொருட்டு எப்படி ஒருவரைக் கொல்லலாம்?” என்று நம்மை நோக்கி கேட்கிற உன்னதக் குரலையும் வெளிப்படுத்துகிறார் கவிஞர்.

இத்தொகுப்பின் தலைப்பை மிகக் கவனமாக அர்த்தப்படுத்தினால்,

‘காந்தியைக் கொன்றது தவறுதான்!’

‘ஏன்?’

‘ஏனென்றால், அதன் வாயிலாகத்தான் அவர் கடவுளாகும் கடைசி வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார்!’

காந்தியைக் கொண்டாடுதல், அவர்மீது விமர்சனம் வைத்தல் என்கிற இருமைகளைக் கடந்து, நமது வரலாற்றில் நிகழ்ந்த மிக முக்கியமான ஒரு கொலையை, மரணத்தை, தற்கொலையை நோக்கிய கேள்விகளைக் கவிதைகளாக்கியது முக்கியமான ஒன்று. ரமேஷ் பிரேதனின் இக்கவிதைகளுக்குள் நுழையும்போது, காந்தி இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டியவராகிறார்.

காற்றில் மூன்று துப்பாக்கி ரவைகள்

`ஆகா கான் மாளிகை’ -அசோகமித்திரன்

இந்த நாடகம்தான், அசோகமித்திரனின் கடைசிப் படைப்பாக இருக்குமென்று நினைக்கிறேன். ‘விருட்சம்- 101’ இதழில் வெளியானது இந்த நாடகம். இவ்வளவு இலக்கிய முயற்சிகளுக்குப் பிறகு, இதை ஏன் நாடகமாக எழுத நினைத்தார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. நேர்காணலின்போது, இந்தக் கேள்வியை அவரிடம் கேட்காமல் போனதை நினைத்து வருந்துகிறேன்.

புனேவிலுள்ள ‘ஆகா கான் மாளிகை’யில் பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் காந்தியும் கஸ்தூர்பாவும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். காந்திக்கும் கஸ்தூர்பாவுக்குமான தனி அறையில் நிமோனியா காய்ச்சலில் போராடிக் கொண்டிருக்கிறார் கஸ்தூர்பா. உடனடியாக அவருக்குச் சிகிச்சையளிக்க வேண்டும் என்கிறார் மருத்துவர். அவர் வெளியே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதில் காந்திக்கு விருப்பமில்லை. அந்தச் சிகிச்சையளிப்பு காந்தியின் பிடிவாத்தால் நடக்காமல்போகிறது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ‘பென்சிலின்’ மருந்தோடு இளையமகன் தேவ்தாஸ் அங்கு வருகிறார். தனது மரபார்ந்த நம்பிக்கையால், நவீனத்துக்கு எதிரான மனநிலையால், ‘அந்த மருந்தை பா-வுக்குக் கொடுக்கக் கூடாது’ என்று தடுக்கிறார் காந்தி. இறுதியில் நோயோடு போராடி கஸ்தூர்பா, ‘ஆகா கான் மாளிகை’ எனும் சிறையிலேயே இறந்துபோகிறார் (உண்மையில் கஸ்தூர்பா அங்குதான் இறந்தார்). இவ்விடத்தில்  ‘கஸ்தூர்பாவின் மாளிகை எனும் வீட்டுச்சிறை’ என்றொரு மிகக் காத்திரமான விமர்சனப் படிமம் உண்டாகிறது.

நாடகத்தினிடையே, காந்தியின் மூத்த மகன் ஹரிலால், நிஜமாகவோ இருவரின் மனவிருப்பமாகவோ (Imagination) அந்த அறைக்கு வருகிறார். காந்தியைக் கடுமையாகத் திட்டுகிறார். அம்மாவின் மீது அன்பைப் பொழிகிறார். காந்தி அவரை ஓர் உண்மையான முழு இந்தியனாக வாழுமாறு கேட்டுக்கொள்கிறார். ஹரி மறுத்து காந்தியைத் திட்டுகிறார்.

நாடகத்தின் மையக்கரு இதுதான். ஆனால், கஸ்தூர்பா, காந்தி, ஹரிலால், தேவ்தாஸ், டாக்டர் உள்ளிட்ட ஐந்து பாத்திரங்களுக்கும் இடையிலான உரையாடலில் பல நுட்பமான தகவல்கள், உணர்வுகள் வெளிப்பட எழுதிச் செல்கிறார் அசோகமித்திரன்.

காந்தியின் அறைக்குள் கட்டிலோ நாற்காலியோ மேஜையோ கிடையாது (உண்மையிலும்). ஜெயில் நிர்வாகம் தருவதாகச் சொன்ன கட்டிலை, ‘வேண்டாம்’ என்று மறுத்துவிட்டதாகச் சொல்கிறார் காந்தி. “உங்களுக்கு வேண்டாம் சரி, நோயாளியான எனக்கு ஏன் வேண்டாம் என்று சொன்னீர்கள்?” என்று கேட்கிறார் கஸ்தூர்பா. இது நோய்மையான சந்தர்ப்பத்தில் ஆற்றாமையில் கஸ்தூர்பாவால் கேட்கப்படும் சாதாரண கேள்வி என்று கடக்க முடியாது. பின்னோக்கி, காந்திக்கும் கஸ்தூர்பாவுக்குமான மொத்த வாழ்க்கைச் சம்பவங்களிலும் பொருத்திக் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.

தென்னாப்பிரிக்கா போய் தொழில் செய்த காந்தி, மகன் ஹரிலாலைப் படிப்பதற்கு இங்கிலாந்து செல்ல அனுமதிக்கவில்லை. தந்தையின் மீதான வெறுப்பில் சாராயத்தின் பின்னே சென்ற ஹரிலாலின் மொத்த வாழ்வும் சிதைந்துபோனது. நாடகத்தில், “உனக்கு ஒரு நீதி, எனக்கு ஒரு நீதியா?” என்று கேட்கிறார். கோபத்தில் காந்தியை நோக்கி, “வாயை மூடுடா... நீ மகாத்மாவா? இல்லை, என் அம்மாதான் மகாத்மா!” என்கிறார். இளையமகன் தேவ்தாஸோ, “என்னையும் ஹரிலால்போல ஆக்கிவிடாதீர்கள்!” என்கிறார். காந்தியின் மனநிலையோ இன்னும் சிக்கலானதாகச் சித்திரிக்கப்படுகிறது.

காந்திக்கு அவர் எடுத்த எல்லா முடிவுகள் குறித்தும் சந்தேகம் உண்டாகிறது. மட்டுமல்லாது, எப்போதோ தனக்குப் பிடிக்கும் என்று சொன்ன ஆட்டுப்பாலை இப்போது பிடிக்கவில்லை என்று சொல்ல இயலாத பிம்ப - தத்துவார்த்தச் சிக்கலில் தவிக்கிறார். ‘ஆட்டுப்பால் இப்போது தனக்குப் பிடிக்கவில்லை’ என்ற ஓர் எளிமையான உண்மையைக்கூட வெளியே சொல்ல முடியாத காந்தியின் நிலை என்று அசோகமித்திரன் சித்திரிக்கும் காட்சி மிக நுட்பமானது, பல்வேறு தளங்களில் விரித்து அர்த்தப்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.

அசோகமித்திரனை நான் நேரில் சந்தித்தபோது “டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, காந்தி, நேரு எனப் பெரிய ஆளுமைகள் என்று நான் நினைத்திருந்த பலர்மீது இன்று எனக்குக் கடுமையான விமர்சனம் உண்டாகியிருக்கிறது” என்றார். அது இந்த நாடகத்திலும் கோபமாக வெளிப்பட்டிருக்கிறது. கஸ்தூர்பாவின் கோபமும் ஆதங்கமும்கொண்ட இதயத்தைத் தன்னுடையதாக வரித்துக்கொண்டதில் அசோகமித்திரனின் இந்நாடகம் முக்கியமான வாசிப்பிற்குரியது(காந்தி, மருத்துவர் இருவரும் சில இடங்களில் பிராமணத் தமிழில் பேசிக்கொள்வதை எடிட்டிங்கில் கவனித்திருக்கலாம்).

வேறுபட்ட வாழ்வியலும் படைப்பு மனமும்கொண்ட மூன்று படைப்பாளிகள் எழுதிய இப்படைப்புகளின் உள்ளே அடிநாதமாக ஒரு நரம்பு ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. ஒன்றில் விடுபட்டதை மற்றொன்று பேசுகிறது. ஒன்று ஆதரிப்பதை மற்றொன்று விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறது. மூன்றையும் இணைத்து வாசிப்பது பார்வையை முழுமைப்படுத்துகிறது. உதாரணமாக தேவிபாரதியின் கதையில், காந்தியிடம்  “சொல்லுங்கள்... இந்த மண்ணில் எந்தக் கடவுளிடமிருந்து அஹிம்சையைக் கற்றுக்கொண்டீர்கள்?” என்று ஸ்டேஷன் மாஸ்டர் கேட்கும்போது, காந்தி அமைதியாக இருக்கிறார். ஆனால், ரமேஷ் பிரேதன் தன் கவிதைகளில் அதற்குப் பதில் சொல்லிவிடுகிறார். ‘துள்ளிக் குதித்தோடும் புத்தன்/ காந்தியின் மீது மோதிக்கொள்கிறான்’ என்கிறார். ரமேஷ் பிரேதன் காந்தியின்மீது வைக்கும் சில விமர்சனங்களுக்கு தேவிபாரதியிடம் பதிலிருக்கிறது. அசோகமித்திரன் இருவரிடமிருந்தும் விலகி கஸ்தூர்பாவை முன்னிலைப்படுத்துகிறார். ஆனால், தன் மரணம் எப்படி நிகழ வேண்டும் என்ற காந்தியின் தீரா பதற்றத்தைக் குறித்து மட்டும் மூவருமே தங்கள் படைப்பிற்குள் விவாதித்திருக்கிறார்கள். இதுதான் கலைஞர்கள் இயங்கும் விதம்!

நாம் ஏற்கெனவே அறிந்துவைத்திருக்கும் காந்தியை இன்னும் மிக ஆழமாகப் புரிந்துகொள்ள இந்தப் படைப்புகளை வாசிப்பது உதவும் என்று நம்புகிறேன். கருத்தியல் ரீதியாகக் சற்றுக் குழப்பமான, ஆனால், அடிப்படை மனித அறம் சார்ந்த உறுதியான மனசாட்சியாக காந்தி திகழ்ந்தார். அந்த மனசாட்சிக்கான தேவை காலத்தால் தீராதது. அதை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கான வழிகளில் ஒன்று படைப்பிலக்கியம். அதில், காந்தி எனும் பாத்திரத்தைக்கொண்டு சொல்வதற்கு இன்னும் எவ்வளவோ கதைகள் இருக்கின்றன.

- வெய்யில் ஓவியம் : ஹாசிப்கான்