Published:Updated:

நாளைய காந்தி

நாளைய காந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
நாளைய காந்தி

நாளைய காந்தி

ல.சு.ரங்கராஜன், சத்தியாகிரக நூற்றாண்டை முன்னிட்டு ஒரு சிறிய நூலை எழுதியுள்ளார். அதில், காந்தி தொடங்கிய சத்தியாகிரகப் போராட்டங்கள் மற்றும் வெவ்வேறு உண்ணாவிரதங்கள் நிகழ்ந்த பின்புலம் மற்றும் காலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. 1934 ஆகஸ்ட் 7 – 14 வரையிலான காலங்களில், பண்டிதர் லால்நாத் தாக்கப்பட்டதைக் கண்டித்து உண்ணாவிரதமிருந்தார் என்றொரு தகவல் இருந்தது. புதிய தகவலாக இருக்கிறதே என ரங்கராஜனின் கட்டுரையை வாசிக்கத் தொடங்கினேன்.

நாளைய காந்தி

காந்தி நாடெங்கும் அரிஜன யாத்திரை செல்கிறார். நிதி திரட்டுகிறார், தீண்டாமைக்கு எதிராகத் தீவிரமாகப் பிரசாரம் செய்கிறார். லால்நாத் எனும் சனாதனி, காந்தியின் தீண்டாமை எதிர்ப்பைக் கடுமையாக நிராகரித்தவர். இந்து மதத்தில் தீண்டாமைக்கு சாத்திர ஆதாரம் இல்லை என்பதே காந்தியின் தரப்பு. அதை எதிர்த்து, காந்தி செல்லும் இடங்களில் பிரசாரம் செய்தார் லால்நாத். அஜ்மீரில் காந்தி பேசுவதற்கு முன், தன் தரப்பு வாதங்களை மக்களிடம் வைக்க அனுமதி வேண்டும் என காந்தியிடம் கோரியதை காந்தியும் ஏற்றார். காந்தி வருவதற்கு முன்னரே அங்கு வந்த லால்நாத் கோஷ்டியினர், அவருக்குக் கறுப்புக் கொடிகாட்டி கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது கூடியிருந்த மக்கள் ஆத்திரமடைந்து லால்நாத்தைத் தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்டது. காந்தி மக்களைக் கண்டித்து, லால்நாத்தை மேடையேற்றிப் பேசச் சொல்கிறார். ஆனால், கூட்டம் அனுமதிக்கவில்லை. லால்நாத் என்ன சொல்கிறார் என கேட்க விருப்பமில்லை என்றால், தான் சொல்வதையும் கேட்க எவருக்கும் விருப்பமில்லை என்பதே பொருள்.  ‘வன்முறையால் எந்தப் பலனும் இல்லை’ என மனம்கசந்து பேசிவிட்டு கராச்சிக்குச் செல்கிறார். அங்கிருந்து,  ‘இதயபூர்வமாக ஆழ்ந்து அலசி யோசித்து நான் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன். வார்தா திரும்பிப் போனதும், ஆகஸ்ட் 7-ம் தேதி முதற்கொண்டு ஏழு நாள்கள் பண்டிதர் லால்நாத்தும் அவரைச் சார்ந்த சனாதனர்களும் தாக்கப்பட்டதற்கு எனது குறைந்தபட்ச பிராயச்சித்தமே இவ்வுண்ணாநோன்பு’ என அறிக்கைவிடுகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நாளைய காந்தி

இன்றைய தேதியில் இப்படியான ஒரு நிகழ்ச்சியை கற்பனைசெய்வது வேடிக்கையாக இருக்கும். காந்தி, அமைப்புகளை உருவாக்கியவர். ஆனால், எப்போதும் அவற்றின் இறுக்கத்திற்கு மனிதர்கள் பலியாகிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தவர். அமைப்புக்குள் இருந்த கலகக்குரல், அமைப்புக்குள் இருக்கும் தனி மனிதன் அல்லது அமைப்புக்குள் ஓர் அரசின்மைவாதி என முரண்பட்ட நிலைகளை காந்தி வாழ்நாள் முழுவதும் மேற்கொண்டுவந்தார். போராட்டம் என்பது, காலம் காலமாக ஓர் எதிரிக்கு எதிராக நிகழ்ந்ததாகவே இருந்திருக்கிறது. ஆனால், சத்தியாகிரகம் இவ்விலக்கணத்தை மாற்றியமைக்கிறது. சத்தியாகிரகத்திற்கு தம்மவர் - அயலவர் எனும் பாகுபாடில்லை. ஆகவே, அது தனக்கும் தன்னைச் சார்ந்தவரின் பொருட்டும்கூட அதே தீவிரத்துடன் நிகழ முடியும்.  சத்தியாகிரக நீதி என்றும் சத்தியம் என்றும் நம்பும் விழுமியங்களின் பாற்பட்டது. காந்தியின் லட்சியப் போராட்ட வடிவத்தில் வெறுப்புக்கு இடமில்லை. பெரும் கருணையையும் அன்பையும் உள்ளீடாகக்கொண்டது. காந்தியின் உண்ணாவிரதங்கள் பலவும் பிழைநிகர் செய்வதை நோக்கமாகக் கொண்டவை. ஆசிரமப் பூசல்களுக்கு, காங்கிரசின் ஊழலுக்கு என வெவ்வேறு சிறிய காரணங்களுக்காகவும்கூட உண்ணாவிரதம் இருந்திருக்கிறார் காந்தி.

ஆல்டஸ் ஹக்ஸ்லி, அத்வைத வேதாந்தத்தின் சமாதி நிலைக்கும் போதிசத்வரின் விடுதலைக்கும் இடையிலான வேறுபாட்டை விவாதிக்கிறார். வேதாந்தம் தன்மீட்சியை முன்வைக்கிறது. அத்வைதிக்கு, அவனுக்கு அப்பால் எதன்மீதும் எந்தக் கடப்பாடும் இல்லை. ஆனால், போதிசத்வன் ஞானமடைந்தும் முழு விடுதலையை அடையாமல், மீண்டும் சகமனிதர்களின்மீது கருணையும் பரிவும்கொண்டு அவர்களையும் ஞானத்தின் பாதையில் இட்டுச்செல்ல திரும்பிவருகிறான். ஏனெனில், அவன் பார்வையில் தனி மனிதனின் முழு விடுதலைக்கு எந்தப் பொருளுமில்லை. மொத்த மானுடமும் விடுதலையடைவதே முழு விடுதலை. இல்லையேல் அது விடுதலையல்ல. ஆக, நிகழ்த்துவதற்கும் நிகழ்த்தாமல் வெறும் சாட்சியாக இருப்பதற்கும் என எல்லாவற்றுக்கும் ஏதோ ஒருவகையில் நாமும் பொறுப்பாகிறோம். காந்தி, தன்னைச் சுற்றி நிகழும் நன்மை தீமைக்குப் பொறுப்பேற்கிறார்.

எழுத்தாளர் பிரேம், ‘காந்தியைக் கடந்த காந்தியம்’ நூலில், காந்தியின் ஆன்மிக அரசியலைப் பற்றி மிக விரிவாக விவாதிக்கிறார். ‘தன்னளிப்பு’ என்றொரு சொல்லை காந்தியுடைய ஆன்மிகத்தின் மையமாகச் சொல்கிறார். அண்மை காலங்களில் எனக்குப் பெரும் உவகை அளித்த சொற்கள் என இரண்டைச் சொல்வேன். பிரேம் பயன்படுத்திய ‘தன்னளிப்பு’ மற்றும் ஜெயமோகன் (எழுதிக் கொண்டிருக்கும் ‘வெண்முரசு - மகாபாரத நாவல் வரிசை’யில் அரவான் பலியைக் குறிக்கும்போது) பயன்படுத்திய சொல்லான ‘தற்கொடை’. காந்தியின் கனவுச்சமூகம் ஒன்றையொன்று அழுத்திச் சுரண்டும்  மேல் கீழ் அடுக்குகளால் ஆனதல்ல. அவற்றை அவர், ஒன்று மற்றொன்றில் தன்னைக் கரைத்துகொள்ளும் ‘பேராழி வட்டங்கள்’ (Oceanic circles) என்றே உருவகப்படுத்துகிறார். இந்தச் சுழியின் மையத்தில் தனி மனிதன் இருக்கிறான். தன்னைக்காட்டிலும் பெரிய வட்டத்திற்காகத் தன்னை அளிக்கிறான்.

காந்தி, ‘செளரி சௌரா’ சம்பவம் நிகழும்போது, தேசமெங்கும் பொங்கிய சுதந்திர உணர்வைப் பொருட்படுத்தாமல்,  ‘ஒத்துழையாமை போராட்டத்தை’ சட்டென நிறுத்துகிறார். வன்முறை நிகழ்வுகளுக்குப் பொறுப்பேற்கிறார். பிரிவினைக் காலங்களில் நிகழ்ந்த மத வெறியாட்டுக்கு மனமுவந்து பொறுப்பேற்கிறார். காந்தியைப் பொறுத்தவரை எதுவும் எங்கோ எவருக்கோ நிகழ்வதில்லை. ஒவ்வொரு செயலுக்கும் பொறுப்பேற்கும்போது, எதிரி என வெளியில் எவரும் இல்லாமல் ஆகிறார்கள்.

உலகமயமாக்கம் மற்றும் தகவல் தொழில்நுட்பப் புரட்சி, தனி அடையாளங்களைக் கரைத்து, உலகளாவிய ஒற்றைப் பொதுத்தன்மையை உருவாக்கும் என்றே நம்பப்பட்டது. ஆனால், உலகெங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கும் வலதுசாரி எழுச்சி, அடையாள அரசியலை மையத்திற்கு இழுத்து வருகிறது. அடையாளங்கள், பண்பாட்டுக் கூறுகள் என்றவகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு பக்கம் பண்பாட்டு அழிப்பு, அடையாளப் புறக்கணிப்பின் எதிர்வினை என்றுகூட வலதுசாரி எழுச்சியைப் புரிந்துகொள்ள முடியும். அடையாளங்கள் இங்கே தரப்புகளாக மனிதர்களைப் பிளவுபடுத்தவும், அதன்வழி அதிகாரத்தை அடைய வலுதிரட்டவும் பயன்படுத்தப் படுகின்றன. ஆகவே, அந்நியர்களை உருவாக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அச்சமும் பாதுகாப்பின்மையுமே மனிதர்களை ஒருங்கிணைக்கும் ஆற்றலாகின்றன. காலம் காலமாக இவையிரண்டுமே மனிதர்களை ஒன்றுதிரட்ட பயன்படுத்தப்படுகின்றன. காந்தி, இந்திய மரபில் அன்பு வெகுமக்களை திரட்டியதை உணர்ந்தவர். ஆனால், பக்தி இயக்கங்களும்கூட ஒற்றைப்படைத் தன்மையை அடைந்து, அந்நியர்களை உருவாக்கின. தன்னளிப்பு இல்லாத அன்பு வெறும் தளையாகவே இருக்க முடியும். ராம நாமத்தை ஒரு பக்தி இயக்கத்தன்மையோடு வெகுமக்களைத் திரட்ட பயன்படுத்திய காந்தி, கிராம மறுக்கட்டமைப்பு, அரிஜன சேவை எனத் ‘தன்னளிப்பை’ச் சேர்த்தே முன்னெடுத்தார். இங்கு ஒரே வர்ணமே உள்ளது. நாம் எல்லோரும் சூத்திரர்கள். நானோர் அதிசூத்திரன் என மொழிந்ததன் பின்னணி, உடலுழைப்பின் மீதான ஏளனத்தைப் போக்கி, தன்னளிப்பை ஒரு விழுமியமாக முன்னிறுத்துவதுதான்.

நாளைய காந்தி

அரசுக்கு இணக்கமாகச் செயல்பட்டு, அரசிடம் இரந்துபெறும் மிதவாதிகள் ஒருபக்கம், அவர்களுடைய நடத்தையை ஏற்காமல் ஆயுதப் போராட்டத்தை வலியுறுத்தும் தீவிரவாதிகள் மறுபக்கம், என இரண்டு தரப்புகளுக்கும் மாற்றாக காந்தி எழுந்துவந்த வரலாற்றுச் சித்திரத்தை ம.பொ.சி ‘பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும்’ நூலில் அளிக்கிறார். செயலின்மையும் அல்ல வன்முறையும் அல்ல, காந்தியின் வழிமுறை, வன்முறையின்றி தீவிரத்துடன் செயலாற்றுவது; எல்லோரையும் உள்ளடக்கியது. காந்தியின் வழிமுறையை, செயல்வழி யோகம் என்றே வரையறை செய்யலாம். காந்திய லட்சியவாதத்தின் மிக முக்கியமான கூறு என்பது, வெறும் வறட்டுச் சித்தாந்தமாக இல்லாமல், எப்போதும் நடைமுறைச் சிடுக்குகளைக் கருத்தில் கொள்கிறது. ஆகவே, உயிர்த்திருக்கிறது; உருமாற்றம் அடைகிறது.

இந்நிலையைப் புரிந்துகொள்ள தரம்பாலின் ‘காந்தியை அறிதல்’ நூலில் சுட்டியுள்ள இந்நிகழ்வு உதவக்கூடும். காந்தி, ‘தானுள்ள இடத்திலும் தன்னால் நடந்து செல்லக்கூடிய மிகக் குறுகிய எல்லையிலும், தன்னால் ஆக்கப்பூர்வமாக என்ன நிகழ்த்த முடியுமோ அதுவே தனக்கு நிறைவளிக்கும்’ என்றார்.  அப்போது ஒரு வாசகர், காந்தியின் இந்தக் கருத்துக்கும் அவரது ரயில் பயணங்களுக்கும் இடையில் முரண்பாடு இருக்கிறது என்று கேலிசெய்து அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதற்கு காந்தி இவ்வாறு பதிலளித்தார்:

“என்னுடைய லட்சியத்திற்கும் எனக்கும் உள்ள இடைவெளியை வாசகர் உணர வேண்டும் என்பதற்காகவே அது குறித்து எழுதினேன். என் லட்சியத்தை நோக்கிச் செல்லும் பாதையில், நான் எதிர்கொள்ளும் தோல்விகளையும் பலவீனங்களையும் உலகறிய வெளிப்படுத்திக்கொள்கிறேன். இதன்மூலம் போலித்தனங்களிலிருந்து நான் என்னைக் காப்பாற்றிக்கொள்கிறேன். அதுமட்டுமில்லை, தோல்வியால் ஏற்படும் அவமானம் கருதியாவது லட்சியத்தை அடைய நான் தொடர்ந்து முயல்வேன்” என்றதோடு நில்லாமல், “நான் ஒரு நடைமுறைவாதியாக இருப்பதாகச் சொல்லிக்கொள்கிறேன். ஆனால், முழுக்க முழுக்க நான் சொன்னதைச் செய்ய வேண்டும் என்ற முட்டாள்தனமான வெளித்தோற்றத்திற்காக ரயில் பயணத்தையோ மோட்டார் பயணத்தையோ தவிர்ப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை” என்றும் எழுதினார்.

‘வழிமுறைகளே லட்சியத்தின் தன்மையை நியாயப்படுத்துகின்றன’ என்ற நம்பிக்கையை ஒருபோதும் தளர்த்திக்கொள்ளாத காந்தி, இலக்குக்கும் வழிமுறைக்குமான உறவுநிலையைக் கவனமாகப் பேணுகிறார். சமரசங்களைத் தோல்விகளாக காந்தி கருதியதில்லை. அதிரடி மாற்றங்களின்மீதும் புரட்சிகளின்மீதும் காந்திக்கு நம்பிக்கை இருந்ததில்லை. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அற நிர்பந்தங்கள் ஏற்படுத்தி, உரையாடல் வழியாக மாற்றங்களை நிதானமாக ஆனால், நிரந்தரமாக ஏற்படுத்த முடியும் என்பதே காந்தியின் வழிமுறை. அது, மாற்றுத் தரப்புகளின் நியாயத்தையும் உரையாடல் வழியாகத் தனதாக்கிக் கொள்கிறது. ‘இந்திய சுதந்திரம் இந்தியர்களுக்கு எந்த அளவிற்கு விடுதலை அளிக்கிறதோ, அதேயளவு ஆங்கிலேயர்களுக்கும் அளிக்கிறது’ என்பதே காந்தியின் வாதம். சுரண்டப்படுபவர்கள் மட்டுமல்ல, சுரண்டுபவர்களின் விடுதலைக்கும் போராடியவர் காந்தி.

அரசுக்கும் மக்களுக்குமான உறவை காந்தி தெளிவாகப் புரிந்துகொண்டிருந்தார். வெகுமக்கள் போராட்டங்களில் காந்தியின் வழிமுறைகளின் ஆழத்தையும் வீச்சையும் இன்னமும்கூட நாம் உணர்ந்து கொள்ளவில்லை. அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களில், மக்கள் கூட்டத்தைக் கும்பலாக்கும் முயற்சிகளிலேயே அரசு எப்போதும் ஈடுபடும். ஏனெனில், கும்பல் கட்டற்றது, எந்த எல்லைக்கும் செல்லக்கூடியது. அதுவே, அவர்களின் மீதான அடக்குமுறைக்கான நியாயமாகவும் அரசுக்கு ஆகிவிடக்கூடும். தங்களுக்கு வாகான இடத்திற்குப் போராட்டத்தை வளைத்துவிட்டால் போதும். போராட்டக்காரர்களின் மீறல்களைக் காட்டி, ஒட்டுமொத்தப் போராட்டத்தின் தார்மீகத்தையும் கேள்விக்குள்ளாக்கி நசித்துவிட முடியும். மேலும், அரசின் படை என்பது, அவசியமான இடங்களில் கூட்டாக இயங்கப் பயிற்றுவிக்கப்பட்டதும் ஆயுதபலமும் கொண்டதாகும். எனவே, போராடும் தரப்புக்கே இழப்பு அதிகமாகும். கும்பல் அளிக்கும் ஆற்றலின் மீதேறி அதிகாரத்தைக் கைப்பற்றிவிட முடியும் என பலரும் நம்புகிறார்கள். கும்பலின் ஆற்றல் மிதமிஞ்சியது. ஆனால், தற்காலிகமானது. கும்பல் வழி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள், அச்சத்தை அங்குசமாகப் பயன்படுத்தி சர்வாதிகாரி களாகக் காலம்தள்ளுகிறார்கள்.

‘சௌரி சௌரா’விற்கு பின்பான காலகட்டங்களில், இந்தியா முழுக்க நரம்புப் பின்னலை உருவாக்கி, தன்னார்வலர்களைத் தயார்ப்படுத்தும் அமைப்புகளை உருவாக்குகிறார் காந்தி. தரம்பால், காந்தியின் ஆசிரமங்களை  ‘அகிம்சை சேனையை உருவாக்கும் பயிற்சிக்களம்’ என்றே சொல்கிறார். உப்பு சத்தியாகிரகமோ, தனி நபர் சத்தியாகிரகமோ தேர்ந்தெடுத்த சத்தியாகிரகிகளால் முன்னெடுக்கப்பட்டது. அரசியல் களத்தில் பயிற்சியற்ற வெகுமக்களை நேரடியாகப் போராட்டத்தில் ஈடுபடுத்துவதைத் தவிர்த்தார். காரணம், அவர் எல்லோருக்கும் பொறுப்பேற்றார். விதிவிலக்கு, ‘இந்தியாவைவிட்டு வெளியேறு’ போராட்டம் மட்டும். (‘வெள்ளையனே வெளியேறு’ எனும் பதம் காந்திய விழுமியங்களுக்கு உகந்த சொல்லாடல் அல்ல. இந்தப் பயன்பாடு ஓர் எதிரியை, அதுவும் நிறரீதியாக அடையாளப் படுத்துகிறது).

காந்தியின் பங்களிப்பு குறித்து பல தளங்களில் பேசமுடியும். ராஜ்மோகன் காந்தி அடையாளப்படுத்துவதுபோல், அரசியல் விடுதலை, சமூக விடுதலை மற்றும் மத நல்லிணக்கம் என காந்தி ஒரே நேரத்தில் குறைந்தது மூன்று முதன்மை இலக்குகளை நோக்கிப் பயணித்தார். முழு வெற்றி அடைந்தாரா, அவருடைய முயற்சிகள் போதுமானவைதானா போன்ற கேள்விகளை எழுப்பி விவாதிப்பதற்கு எப்போதும் இடமுண்டு. ஆனால், இம்மூன்று தளங்களில் இன்றைக்கோர் உரையாடலைத் துவங்கினாலும் அதில் காந்தியின் பங்களிப்பைக் கணக்கில்கொண்டே முன்நகர முடியும். இவை தவிர, கிராம தன்னாட்சி, சூழலியல் சிக்கல்கள், கட்டற்ற நுகர்வு, தொழில்நுட்ப ஆதிக்கம் குறித்த எச்சரிக்கை, மானுட வளத்தின் முக்கியத்துவம் எனப் பல்வேறு தளங்களில் காந்தி வருங்காலங்களில் நம்முடன் தொடர்ந்து பயணிக்கப்போகிறார்.

இறுதியாக, உலகம் தரப்புகளாகப் பிரிந்து சமரிட்டுக்கொண்டிருக்கிறது. எல்லாத் தரப்புகளுக்கும் அவரவருக்கான அரசியலும் நியாயமும் தேவையும் இருக்கக்கூடும். ஆனால், எங்கோ ஒரு குரல் ‘நாம் அனைவரும் சகோதரர்களே’ என்று அழுத்திச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. காந்தி,  நானறிந்த வரையில் எதிரிகளை உருவாக்காத போராட்டக்காரர். எதிர்த்தரப்புகளின் நியாயத்திற்குச் செவிசாய்த்தவர். விடுதலை என்பது எதிர்த்தரப்பையும் உள்ளடக்கியது எனச் சொன்னவர். அனைத்துச் சித்தாந்தமும் மற்றமையை உருவகித்து தனது வலுவைத் திரட்டிக்கொண்டிருக்கும் சூழலில், காந்தியத்திற்கு நல்லிணக்க, நன்னம்பிக்கைச் சூழலை உருவாக்கும் பொறுப்பு இருக்கிறது.

குறிப்பு- ‘நேற்றைய காந்தி’ என்றொரு கட்டுரையை பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் எழுதியிருக்கிறார். ஜெயமோகன் ‘இன்றைய காந்தி’ என்றொரு நூலை எழுதியிருக்கிறார். ‘நாளைய காந்தி’, இனிவரும் காலங்களில், காந்தி நமக்கு எங்கெல்லாம் தேவைப்படுவார் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளத் தேர்ந்த தலைப்பு.