Published:Updated:

வாசனாதி

வாசனாதி
பிரீமியம் ஸ்டோரி
News
வாசனாதி

வாசனாதி

மூன்றாம் ஜாமம் முடிந்து, அதிகாலை நான்கு மணி.  உலகம்  கரிய இருளாயில்லாமல் சாம்பல் நிறம் நிரம்பியிருந்தது. மேற்கின் இறங்கு வானத்தில் கொஞ்சமாய் நிலவின் வெளிச்சமிருந்தது. வெளியெங்கிலும் எதிரேயிருக்கும் ஏதொன்றையும் காணமுடியாமல் புகைமூட்டமாய் வெம்பா இறங்கிக்கொண்டிருந்தது. வெண்மையான மெல்லிய திரைச்சீலை மாதிரியான தோற்றம், தரையிலும் முழங்காலளவு வெம்பா புகையாய்ப் பரவியிருந்தது.  மெல்லிய இலவம் பஞ்சுகள் பெருமளவு தரையில் கொட்டி நிரம்பிக்கிடப்பது மாதிரியான பொய்த்தோற்றம். வெம்பா கொஞ்சம் விலகும்போது, கரிய மண்தரையும்  அதன்மீது வளர்ந்த மனிதர்களின்  தொடையுயரம் ரோஜா பதியன்களும்  தெரிந்ததன.

காணும் யாவும் நிறங்களற்றுச் சாம்பலும்  கறுத்த நிறத்திலுமிருந்தன. விலகளினூடே எல்லாச் செடிகளின் நுனிகளிலும் ரோஜா மொக்குகள் இருப்பது தெரிந்தது. எதிரே இன்னுமும் பனி விலக... விலக... பதியன்கள் விரிந்து தூரம் கணக்கிட முடியமால் ஆயிரக்கணக்கில்  நீண்டு போய்கொண்டே இருந்தன. பதியங்களின் நடுவிலிருந்து மெல்லிய நூற்பு நூல்போலப் பெண்குரலில் பாடலொன்று பனிப்புகையின்  இடுக்குகளிலிருந்து எல்லாத் திசைக்கும் கசிந்து வந்தது. பாடல் ஒவ்வொரு ரோஜா பாத்தியின் குறுக்கும் நெடுக்குமாய் அங்கேயும் இங்கேயுமாய் முணுமுணுப்பு ஒலிபோல் அலைந்தது. அந்தப் பெரிய தோட்டத்தில், கிட்டத்தட்ட எல்லா சப்தங்களும் ஒடுங்கியிருந்ததால் பாடல் தெளிவாய்க் கேட்டது.

வாசனாதி

‘நறுமணத்தின் அரசியே...
வானத்தை நோக்கி உன் இதழ்களை விரித்துப் பார்.
சிறுமிபோலிருந்தவளே இப்பொது நீ பூப்பெய்தியவள்
வளர்ந்து இளமையானவள்.
உன் மொக்குகளை, பிடித்த ஆணின் கரம்பட்ட முலைபோல் விரி...
……….
……….
நறுமணத்தின் அரசியே...
வானத்தை நோக்கி உன் இதழ்களை விரித்துப் பார்.’


மெலிந்த பெண் குரல் இன்னும் முன்நகர்ந்து  வந்தது. ஒவ்வொரு செடியும் பாடலைக் கேட்கக் கேட்க... கிறங்கி, மயக்க நிலையிலிருப்பதுபோல் தெரிந்தது. சூழல், மண், செடி எல்லாமுமே அப்படித்தான் இருப்பதுபோலிருந்தது. முக்காடிட்ட பெண்  முகம், மெலிந்த தன் கரங்களை நீட்டி ஒவ்வொரு செடியின் மொக்குகளையும் தழுவித் தழுவி... பாடியபடியே கடந்தது. பாடல் ஒலித்துக்கொண்டே நகர்ந்து கொண்டிருந்தது. பாடல் தீவிரமடைந்தது, மொக்குகள் அதன் ஒவ்வோர் இதழையும் பூரிப்பாய் விரிக்கத் தொடங்கியன. அந்த மெலிந்த பெண்ணின் கரம், செடியின் கழுத்தில் தழுவியபடி சாம்பல் நிற இருளுக்குள் நடந்தது. ரோஜாவனத்தின் ஒவ்வொரு பாத்தி வரிசையின் இரு நுனிகளிலும், இரு கரியநிற மனித உருவங்கள் நின்றுகொண்டிருந்தன. பூக்களின் இதழ்கள் விரிய விரிய, அவர்கள் தங்களின் கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் பூஜ்யத்தைப்போல் வைத்துக்கொண்டு இரண்டு விரல்களும் சேருமிடத்தில்வைத்து ஒவ்வொரு பூக்களையும் கொய்து, முடைந்த நார்க்கூடைகளில் நிரப்பிக்கொண்டே நகர்ந்தார்கள். சூழல், சாம்பல் நிறத்தின் அடர்த்தியைக் குறைந்துக்கொண்டே வந்து, மெல்ல வெளுக்கத் தொடங்கியது. கிழக்கு நுனியில் புலர்தலின் மீச்சிறு கீற்றை விரிக்கத் தொடங்கவும், மேற்கின் கடைசிப் பூவைக் கொய்துமுடிக்கவும், அந்த நாளின் முதல் பறவையின் குரல் எழும்பவும், மூன்றும் ஒரே புள்ளியில் சரியாக இருந்தன.

பூக்கள் இல்லாது, மூளியாய் நிற்கும்  பதியனின் முட்களை வருடியபடி  கரங்களில் ரெத்தம் சொட்டச் சொட்ட, தோட்டத்தின் குறுக்கும் நெடுக்குமாய், வலதும் இடதுமாய் நடந்து அந்தப் பெண்குரல் பதியன்களிலிருந்து பூக்களைப் பறித்ததற்கான மன்னிப்புக் கோரும் பாடலைப் பாடினாள். கிட்டத்தட்ட   அதை தனக்கன ஒரு தண்டனையைப்போல அவள் செய்தாள். முட்களின் கீறலால் அவளின் குருதி, செடிகளின்மேல் சிந்தியபடியிருந்தது.

`மன்னியுங்கள்…
நறுமணச் சிறுமிகளே
உங்களைக் கொய்துகொண்டேன்
பதியன்களே... பச்சைத் தாய்களே…
மன்னியுங்கள்...
நாளை உங்கள் அடுத்த பிள்ளையை
வெளித் தள்ளுங்கள்
நான் வருடிக்கொடுக்கிறேன்…
…………………
…………………
மன்னியுங்கள்...
நறுமணச் சிறுமிகளே
உங்களைக் கொய்து கொண்டேன்.’


சிறிது நேரத்திற்கெல்லாம் பொழுது துலங்க, எல்லாக் கரியநிற மனிதர்களும் அவர்களின் இயல்பான நிறத்தோடு மெலிந்த ஆண்கள், பெண்கள், இளமையானவர்கள், கிழடு தட்டியவர்களென வகை வகையாகத் துலக்கமாகத் தெரியத் தொடங்கினர்.

பறிக்கப்பட்ட பூக்கள், ஒரு கண்ணும் பார்த்துவிடாதவாறு, ஒரு பறவையும் காணாதவாறு, பூக்கள் மூச்சுவிடத் தோதாகப் பனிப்புகை மாதிரியான அவ்வளவு மெல்லிய வெண்துணியால் முழுக்கப் போர்த்தப்பட்டு, ஒருவரும் அறியாதபடிக்கு  மரக்கூண்டடைக்கப்பட்டு, முழுக்க மூடப்பட்ட நீளமான கனத்த எருதுகள் பூட்டிய மூன்று வண்டிகளில் ஏற்றப்பட்டு ஆயத்தமாக நின்றது. மூன்றில் இரண்டு வண்டிகள் வடிப்புக் கூடத்திற்கும், ஒரு வண்டி மட்டும் பாதை பிரிந்து மூன்று கல் தொலைவிலிருக்கும் அரண்மனைக்கும் செல்லும். அந்த வண்டியிலிருக்கும் பூக்கள், தேன்சேர்த்து ரோஜா குல்கந்து மற்றும் ரோஜாப் பன்னீர் தயாரிப்புக்கு எனச் செல்லும். ஜலப்பறையின் அத்தனை நீர்மப் பொருள்களோடும் சேர்மானமாய் ரோஜாப் பன்னீர் இருந்தது. ஒவ்வோர் இதழாய் உரித்துப்போட்டு மன்னர் அனுதினமும் நீராடும் தொட்டியில் ஊர வைத்தார்கள்.மேலும், அதனோடு கலப்பாய் ரோஜா பன்னீரும் சேர்க்கப்பட்டது. வேலையாள்கள் கொத்துக் கொத்தாய் நகரத்  தொடங்கினார்கள். யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. அவர்கள் வனத்திலிருந்து இரண்டாள் உயரத்திற்கு அடைக்கப்பட்ட இலந்தை முள் வேலி தாண்டி வெளியேறினார்கள்.

புலர்ந்தபின் தோட்டம் முழுமையும் தெரிந்தது. எல்லோரும் வெளியேறிய பின்னர், தனியே பெண்குரலின் உருவம்  நடந்து தலைவிரிந்த நெல்லி மரத்தினடியில் வந்துஅமர்ந்தது. உருவம், சிவப்புநிறப் பருத்திச் சேலையின் முக்காட்டை நீக்கியது. சுருக்கம் நிறைந்த மெலிந்த சந்தனநிற முகம். உடலிலும் சுருக்கம் ஏறி, தளர்ந்த வயதிலிருந்தது. பின்னந்தலையில் நீண்ட இரு வெள்ளைப் பாம்பைக் குறுக்கும் மறுக்குமாய்ப் பின்னிப்போட்டதுபோலப் பின்னலிட்ட வெள்ளைமுடிக் கற்றைகள். பின்னலைப் பிரித்து உதறி விரித்துப் போட்டாள். வெண் மயிலின் பெரிய தோகைபோலக் கிடந்து மினுங்கியது.

மரத்தின் முதுகில் தன்முதுகைச் சரியக் கொடுத்தபடி குத்துக்காலிட்டு அமர்ந்து, குருதியால் சிவந்து ரோஜாவின் பெரிய இதழைப் போலிருந்த தன் கரங்களை நுகர்ந்து பார்த்தாள். மலர்களையும் முட்களையும் தழுவிய அந்தக் கரங்கள், ரத்தக் கவிச்சியும் ரோஜா வாசனையும் செடியின் பச்சை வாசனையும் கலந்து  அடித்தன. கண்களை மூடி இன்னுமொரு முறை வாசமெடுத்துக்கொண்டாள். யோசித்துப் பார்த்தாள், இன்னும் சிறிது நேரத்தில் வடிப்புக் கூடத்தில் பெரிய பெரிய உருளை நீராவிப் பானைகளின் வயிற்றில், மூன்றில் ஒருபங்கு அளவு காளி நதியின் நீர் ஊற்றப்பட்டு, சிவந்து விரிந்த பூக்களின் விரிந்த உதடுகளை உதிர்த்துப் போட்டு, அடுப்புமூட்டி அதன் நீராவியை வடித்துக் குளிரச் செய்து, ரோஜா வடிப்புத்  திரவமான அத்தர் எடுப்பார்கள். பூக்கள் கொதிபடும் ஓசையும் சித்திரமும் நினைவில் தோன்றின. கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டாள்.

ரசனின் உடைமாற்று அறையின் மர மேசையின்மீது, வாசனாதி எண்ணெய்ப் பூச்சுகள், கேசவிருத்தித் தைலங்கள், சிறுவாசனைத் திரவிய ஜாடிகள், நறுமண நீர், உடற்மெருகூட்டி எண்ணெய்கள், பிசின்கள், என வகைவகையாய் வாய்குறுகிய கண்ணாடிப் போத்தல்களில் அடைக்கப்பட்டுக் கிடந்தது. அருகில், ஓரிரண்டு கலப்புக் கிண்ணங்களும் சிறு  புனல்களும் கிடந்தன. அரசர், சிறு போத்தலைத் திறந்து தனக்கு விருப்பமான ரோஜா அத்தரை உடலில் விரவிக் கொண்டார். கண்களை மூடி காற்றில் பரவும் நறுமணத்தை நாசிக்கு உள்ளிழுத்தார். நாசியின் இரு துளைகளும் கண்களும் சற்றுநேரம் தன்னை அறியாமல் மூடின.

அரசவம்ச வழியினர், ரோஜா அத்தர்மீது   பெருமதிப்பும் விருப்பமும்  வைத்திருந்தனர். கிடடத்தட்ட  கடவுளுக்கு அடுத்தபடியாக  ரோஜா அத்தரின்மீது அவர்களுக்கு மதிப்பிருந்தது. அரசர் பாரசீகமெங்கிலும்  வளர்ந்துகிடக்கும் ரோஜா வகைகளைத் தேர்வுசெய்து அத்தருக்கென வளர்த்தார். இருபதினாயிரம் ரோஜாப் பதியன்களை அவரின் வம்சமூத்தோர் கங்கை நதியோர வண்டலும், காளி நதியின் கரையோர செஞ்சாந்து நிற மண்ணையும் கலந்து   ஊன்றியிருந்தார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வாசனாதி

அவரின் தகப்பன் டெல்லிக்கு ஒரு ராஜ்ஜிய விழாவிற்குச் சென்றபொழுது அந்தப் பரிசை அளித்தார்கள். மிருதுவான துணியில் பொதிந்து, கைக்கடக்கமான சிறுகுப்பி உள்ளே, சிறு குழந்தையின் நீர் உதடுகளைப் போலிருக்கும் நிறத்தில் சில துளிகள். இவனின் பதினாறு வயதில், இவனது தகப்பன், ஒருநாள் காலை தர்பாருக்கு வரும்முன் இரண்டு துளிகளைத் தன்மேல் தெளித்துவைத்திருந்தார். அந்த நறுமணம் அன்றுமுழுக்கக் காற்றில் அரண்மனை முழுவதும் சுற்றி மிதந்தது. எல்லோரும் அன்று முழுவதும் கண்களை மூடியபடி காற்றில் மிதக்கும் அலாதியான  நறுமணத்தைத் தத்தம் நாசியால் நுகர்ந்து தேடிக்கொண்டேயிருந்தார்கள். நறுமணக் கிறக்கத்தில் எதிர் எதிர் வந்தவர்கள் மோதிக் கொண்டார்கள். ஆனால், அதற்காக அவர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொள்ளவோ, முறைத்துக்கொள்ளவோ இல்லை, சிரித்துக்கொண்டார்கள்; மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்கள். சபை முழுக்க அன்று முழுவதும் குறைவான பேச்சுச் சப்தங்களே இருந்தன. எல்லோர் முகத்திலும் நாள் முழுக்கச் சிரிப்பும், புன்னகையுமிருந்தது. தெய்வீக நறுமணம், அவர்களின் கோபத்தைப் பெருமளவு மட்டுப்படுத்தியது. அவரவர் இருந்த இடத்திலேயே இருந்தார்கள். அந்த இரண்டு சொட்டுகளின் வாசம் நகர்ந்து போய்க்கொண்டேயிருந்தது. கண்ணுக்குத் தெரியாமல் நாசிக்கு  மட்டும்  உணரமுடியும்  அதன்வாசம், ஒரு நிமிடத்திற்குமேல் எவரின் நாசியிலும் நிற்கவில்லை. ஆனால், அதன் அமைதியும் பரிசுத்தமும் சுகந்தமும் மென்மையும் நாள்முழுக்க அங்கேயே சுற்றிசுற்றி வந்தது. தர்பார் மண்டபத்தில் புதிதாக நுழையும் எவருக்கும் சட்டென அதன் வாசம் கிடைத்துக் கிறங்கி நின்றார்கள். மன்னன் குனிந்து ஒரு குவளைக்குள் போட்டிருக்கும்  தானியங்களை நுகர்ந்துவிட்டு, மீண்டும் ரோஜா அத்தரின் வாசனையைத் தன் நாசியால் தேடிப்போவான். வாசத்தைத்  தேடினால் மீண்டும் ஒளிந்திருக்கும் வாசம் கிடைத்தது. எல்லோரும் அதுபோலவே செய்தார்கள். தங்கள் துணியின் வாடையை, உடலின் வாடையை நாசிக்கு நுகரக் காட்டிவிட்டு, காற்றில் மீண்டும் அத்தரின் வாசனையைத் தேடினார்கள்.

நாளின் தொடக்கத்திலிருந்து நாளின் நுனி வரை, மன்னர் எப்போதும் தன்மேல் ரோஜா வாசம் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். மன்னர் தினசரிகளில் மூன்று வழிகளில் ரோஜா நறுமணங்களைத் தனக்குத் தருவித்துக்கொண்டார். சருமத்தின் மேல்பூச்சாக அல்லது உடல்மேல் சாத்திக்கொள்ளும் வஸ்திரங்களின்மேலாக, வாயின் வழியாகப் பானமாகவும்     பதார்த்தமாகவும் எடுத்துக்கொண்டார்.இனிப்பு கலந்த பானங்களில் ரோஜாப் பன்னீர் கலந்து பருகினார். தாம்பூலம் தரிக்கும்போது, வெற்றிலையோடும் அல்லது வெற்றிலையின் இணையில்லாமல் தேனும் ரோஜா இதழ்களும் கலந்த குல்கந்துகளை எடுத்துக்கொண்டார். குல்கந்துகளின் கலவையாகவரும் தேனும் அதே ரோஜாத் தோட்டத்தின் கரைகளிலிருக்கும்    மரங்களில் தொங்கும் தேனடைகளிலிருந்து  சேகரிக்கப்பட்டது.

சூரியன் மங்கத் தொடங்கும்போது, அரண்மனையின் கலாமண்டபத்தில், கேளிக்கைகளும் சிரிப்பொலியும் மதுரசம்  நிரம்பியப் பித்தளைக் குடுவைகளின் ஓசையும் கேட்கத் தொடங்கிவிடும். அரசன், மாலையில் ஒருமுறை ரோஜா நீர் கலக்கப்பட்ட நீரில் தன் உடலை முக்கி எடுத்துவிட்டுத் தளராடைகளை உடுத்திக்கொண்டு வந்து அமர்ந்ததும் கவாலி பாடகர் இசைக்கத் தொடங்குவார். மாபெரும் இசைக்கலைஞன், இழுத்துக் கட்டப்பட்ட தந்திக் கம்பிகள்  ஒவ்வொன்றிலும் ஒரு வாசனைத்திரவியத்தை விரவியிருப்பார். அவர்ஒவ்வொரு கம்பியை நிமிட்டும் பொழுதும் அதிலிருந்து இசையும், ஒவ்வொரு வாசனையும் தெறிக்கும். மன்னனையும் குழுமியிருப்பவர்களையும் வாசனையும் இசையும் ஒருசேர மனதை பெருவாரியாய்க்  கிறக்கும். இசைப்பவருக்கு பார்வை இல்லை. அரசரும் ராஜவைத்தியரை அழைத்து பலமுறை ஆலோசித்திருக்கிறான். வைத்தியரின் பதில், ‘இறைவனிடம் அவர்  தன் கண்களைக் கொடுத்துதான் இசையை வாங்கியிருக்கிறார். மீண்டும் கண்கள் கிடைத்தால், ஒருவேளை அவரிடமிருந்து இறைவன் இசையை வாங்கிக்கொள்வானா யிருக்கும். அறுபத்தியோரு வயது இசைக்கலைஞனுக்கு மாபெரும் அழகி மனைவியாயிருந்தாள். அரசன் பலமுறை மஸ்லின் துணியைப்போன்ற மெல்லிய குரலில் அண்ணகனிடம் கேட்டிருக்கிறான்.

“புணர்கையில் எப்படி அவளின் புணருறுப்பை அவன் அறிந்துகொள்வான்?”

 “குருட்டு நாய் இறைச்சியை எப்படி நுகர்ந்து அறிந்துகொள்கிறதோ, அதுபோலத்தான் அவன் நுகர்ந்து அறிந்துகொள்வானாயிருக்கும்”  என்று சொல்லியபடி சிறியகுரலில் சிரிப்பான். அரசன், அண்ணகனின் கேலியான சிரிப்பிற்காகவே அவனிடம் இது போன்ற கேள்விகளை முன்வைப்பான்.

கொஞ்சம் இருள்பரவத் தொடங்கியதும், சரவிளக்குகள், மெழுகுவத்தித் தாங்கிகள், மற்றும் சொருகிவைக்கப்பட்ட எளிய வேலைப்பாடுடன்கூடிய பிடிகொண்ட  பந்தங்கள் நடுவே, மஞ்சள் அறையில் விரிக்கப்பட்ட சிவ்ப்பு ஜமுக்காளங்களின் மேல், உருளைத் திண்டில் சாய்ந்தபடி  தன் உடலுக்கு ஓபியமும் ஹூக்கா புகையிலைகளும் கொடுத்தபடியிருப்பார். பெண்களின் நடனம் தொடங்கிவிடும். இந்த நிகழ்வில் மன்னருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மட்டுமே உடனிருப்பர். கிறக்கத்தோடு பார்ப்பவர்களின்முன் பெண்கள் நடனமாடுவார்கள். அரசனின்முன், அகன்ற பித்தளைத் தாம்பாளத்தில் வெற்றலைகள், மதுவகைகள், இனிப்புப் பதார்த்தங்கள், ஓபியம், மசாலா பூசப்பட்டு தீயில் மொறுப்பாகச் சுடப்பட்ட மரத்தூள் வண்ணக் கோழிகள், ஒருவன் அதற்கென இரவெல்லாம் கரித்துண்டு நெருப்பைப் பக்குவமாய், சீராய்க் கிளறிவிட்டுக்கொண்டேயிருப்பான். நடனத்தின் இறுதியில், தன் கீழுடை குடையென விரியும் அளவிற்குக் கரகரவெனச் சுழலுவார்கள். அதன்பின், அரசன் தனித்துக் கிளம்பி அந்தப்புரம் நோக்கிச் செல்வான்.

அந்தப்புரம் செல்லும் வழியில் காலை ஒளி  நன்குபட்டு விரியும் இடத்தில், ரோஜா வனத்தின் நடுவே முக்காடிட்டு நடந்து செல்லும் இளம்பெண் ஒருவளின் பெரிய ஓவியம் இருந்தது. அதன் எதிர்ச்சுவரில் மாலை ஒளி அகலமாய் விழுந்து சுருங்கும் இடத்தில், பெருமுலை தாங்கிய பெண்ணும் நீண்ட ஆண்குறிகொண்ட ஆணும் சம்போகம்கொள்ளும் ஓவியமொன்று இருந்தது. இறுக்கமான திரைச்சீலையின் பின்புறமிருந்து காமக் கதைகளை வசீகரமாக  ஏற்றஇறக்கத்தோடு வாசித்தபடியிருக்கும்   நபர்கள் இருந்தார்கள். அதைக் கேட்டபடியே  விறைப்பு நீங்காமல் சம்போகிப்பான் ராஜா. பல நேரங்களில் பின்னிரவு தாண்டிதான்  சயன அறைக்குச் செல்வான். ஓரிரு சமயங்களில் அங்கேயே தூங்கி எழுந்து,  காலை ரோஜா பாரம் ஏற்றிய கூண்டு வண்டியிலிருந்து பணியாளர்கள் பூக்களை இறக்கிக்கொண்டிருக்கும்போதுதான் அறைக்குச் செல்வான். அந்த மாதிரியான நாள்களில், பின்மதியம் தாண்டியும் தர்பார் மண்டபத்திற்கு அரசன் வராமல் எல்லோரும் காத்துக்கொண்டிருப்பார்கள்.

பாடலும், பூவிரிப்பும், பூப்பறிப்பும், பலகாலமாய் அன்றடமாயிருந்தது. முதிவளுக்கு இன்னும் பழுத்த வயதாகிக் கொண்டிருந்தது. ஜனவரி மாதக் கொடுங்குளிரில்  ஒருநாள் பாடிக்கொண்டே  நடந்தாள். நடையிலும் குரலிலும் பெருமளவு நடுக்கமும் தடுமாற்றமும் தெரிந்தது, குரல்  கமறியது. மொக்குகளிலிருந்து பனித்துளிகள் உருண்டு உருண்டு கீழேவிழ, பூக்கள் விரியத் தொடங்கின. கரிய உருவங்களின் கரங்கள் வரிசையாகப் பூக்களைக் கொய்துகொண்டே  வந்தன. முதிய பெண்குரல் வற்றி, பாத்திகளின் நடுவே சடாரென விழுந்து நீருக்குள் அமிழ்ந்து கிடப்பதைப்போலத் தரையில் கிடக்கும் வெம்பாவின் உள்ளே அமிழ்ந்துகிடந்தாள். திறந்து கிடந்த அவளின் கண்களுக்குள் அப்போது ஒரு பூ விரிந்தது. கடைசியாக ஒரு பூ விரிப்பதைப் பார்த்தவாறே இறந்துபோனாள். பறிக்கப்பட்ட பூக்களைத் தவிர, மற்ற பூக்கள் அவளின் கை வருடலும் பாடலின் சப்தமும் இல்லாமல் மொக்குகளை விரிக்காமலிருந்தன. சாம்பல் இருட்டுக்குள் கரிய உருவங்களின் கரங்கள், அவள் இறந்ததை அறியாமல் பூக்களைக் கொய்வதில் மட்டும் கருத்தாயிருந்தன.  வழக்கம்போல் பூக்களின் நிறங்களை ஒருவரும் பார்க்காதவாறு விடியலுக்குமுன் வண்டியிலிட்டு நிரப்பி, மென்துணியால்  மூடினார்கள். பாதிப் பூக்களுக்குமேல் கறுத்த நிறத்திலிருந்தன. வடிப்புக் கூடத்திற்கும் அரண்மனைக்கும் வண்டிகளைப் பிரித்து அனுப்பி, பின் இலந்தை முள்வேலிப் படலைத் திறந்து கிளம்பிவிட்டனர்.

வாசனாதி

அரசன் குளிக்கப்பதற்கு ஜலப்பறைக்குள் நுழைந்ததும் கெட்ட வீச்சம் வீசத் தொடங்கியது. நீரில் கிடக்கும் ரோஜா இதழ்களின் நிறம் முழுக்க கறுப்பு நிறத்திலிருந்தது. தாங்க முடியாத கொடுமையான வீச்சம் அடித்தது. கைக்குழிக்குள் நீரைமொண்டு நுகர்ந்து பார்த்தான். நாட்பட்டுப் பழுத்த புண்ணைக் கீறிவிட்ட சீல் நாற்றம் அடித்தது. முகத்தைச் சுளித்துக்கொண்டும் சுருக்கிக்கொண்டும் கண்களைச் சகிக்க முடியாதவாறு இறுக்கமாய் வைத்துக்கொண்டும் இடவலமாய்க் கழுத்தைத் தரை நோக்கிவைத்துச் சிலுப்பினான். குமட்டல் வரப்போய், அந்த இடத்தைவிட்டுஉடனே நீங்கினான்.

அதன் அடுத்த நாளின் சாம்பல்நிற இருளில், மனிதர்கள்  பூப்பறிப்பிற்காக வந்தபோது, எந்தப் பதியனும் தன்னிலிருந்து ஒரு மொக்கைக்கூட வெளித்தள்ளவில்லை.  அவளின் குரல் இல்லாதுபோனதால், பூக்கள் பூக்க  மறுத்துவிட்டன. முதியவளின் குரலைத் தோட்டம் முழுக்கத் தேடினர்.  மனித அரவம்கேட்டு அதிகாலைப் பனிப்புகைக்குள் பத்திருபது காட்டுச் செந்நாய்களின்  முதுகுகள் மட்டும் அசைந்து ஒடி, வேலிப்படலின் சிறு உடைப்புக்கு உள்ளிருந்து வெளியேறுவது தெரிந்தது.  பணியாள்கள் செந்நாய்களின் முதுகுகள் குழுமியிருந்த இடத்திற்குச் சென்றார்கள். பனிப்புகைக்குள்ளிருந்து செத்த வீச்சம்  அடித்தது.  முழங்காலுயரமிருந்த புகையில் யாரோ ஒருவனின் பாதத்தில்  சொதசொதவென எதோ மிதிப்பட்டது. புகைக்குள் கையைவிட்டுத் தரையைத் துழாவினான். அவனின் கரத்தில் முதியவளின் முடி சிக்கியது. அள்ளித்  தூக்கினான். முடியோடு கொஞ்சமாய்ச்  சதைத் துணுக்குகள் மட்டும் ஒட்டியிருக்கும் அவளின் முகம். மண்டையோட்டை உடைத்து, கொழகொழப்பான மூளையைச் செந்நாய்கள் தின்றிருக்க வேண்டும். உடலில்  பெரும்பாலும் சதை இல்லை.

தோட்டக்காரன் முதியவளைத் தோட்டத்தின் மேற்கு மூலையில் புதைத்தான். புதைத்த இடத்தின்மேல் தோட்டக்காரன் சரியாக அவளின் தலையிருந்த இடத்தில் ஒரு ரோஜாப் பதியனை ஊன்றினான். மூன்று மாதம் கழிந்துவிட்டது. எந்தச் செடியிலும் ஒரு மொக்குகூட வெளிவரவில்லை. ரோஜாக்களின் முட்கள்  மட்டும் பெரிதாய் வளரத் தொடங்கின. எவ்வளவு நன்றாய்  நீர் பாய்ச்சினாலும் செடிகள் துவண்டுபோய்க்கிடந்தன.

அரண்மனையின் எல்லாக் குப்பிகளிலும் முழுக்கத் தீர்ந்த பின்தான் அரசனுக்குத் தெரிந்தது. எல்லாக் குப்பிகளிலும் அரைச் சொட்டு, கால் சொட்டாய்ச் சேகரித்து இருபத்தாறு சொட்டு சேகரித்தார்கள். அரசன் அந்தக் குப்பியை எப்போதும் கூடவே  வைத்துப் பாதுகாத்தான். நாள்கள் கழிய, அரண்மனை முழுக்க அழுக்கும் பீடையும் பிடித்திருப்பதைப்போல் பட்டது. நாளுக்கு இருபதுமுறை தோட்டத்திற்கு ஆள் அனுப்பி, ‘ஒரு மொக்காவது விட்டிருக்கிறதா?’ என ஏக்கமாய்க் கேட்கத் தொடங்கினான், எதிலும் லயிப்பற்றுக் கிடந்தான். அத்தர் வாசனை நுகராது, அவனின் குறி விறைப்பற்று தளர்ந்து மண்புழுபோலத் துவண்டுகிடந்தது. எந்தப் பெண்ணையும் அவனால் கூட முடியவில்லை.

பலகாலமாகப் பூக்கள் பூக்கவேயில்லை. தோட்டப் பராமரிப்பு தெரிந்த எல்லோரையும் வரவழைத்துப் பார்த்தார்கள். மற்றொரு புரம், அரசனுக்கு வேறு பூக்களிலிருந்து வாசனாதி தயாரிக்கும் பணிகள் போய்க்கொண்டிருந்தன, எதுவும் தோதுப்படவில்லை. மற்ற நாடுகளிருந்து அத்தர் வரவழைத்து மன்னனுக்கு நுகரக் கொடுத்துப் பார்த்தார்கள். தனது தோட்டத்திலிருந்து கிடைத்த மலர்களிருந்து பிழியப்பட்ட வாசத்தின் நூற்றில் ஒரு பங்கைக்கூட அவை கொடுக்கவில்லை என்று அவற்றையெல்லாம் மறுதலித்து விட்டான்.

 அவனுக்கு  விநோதமான நோய் பீடித்தது. தன் முகத்தின் முன்னால் தோட்டத்தின் தேனீக்கள்  பறப்பது மாதிரியும் ரீங்கரிப்பது மாதிரியுமான பொய்த்தோற்றம். கரங்களை முகத்தின் குறுக்காய் விரட்டுவதுபோல் அசைத்துக்கொண்டேயிருந்தான். ஒரு நாளில் நூற்றுக்கணக்கானமுறை இப்படிச் செய்துகொண்டிருந்தான். அரசனின் இந்த மனக்கோளாறு, தோட்டத்தில் பூக்கள் பூத்தாலொழியச் சரியாக வாய்ப்பிலை என  அரண்மனைக்காரர்கள் பேசிக்கொண்டார்கள்.

ல மாதங்களுக்குப் பின் ஓர் அதிகாலை, கிழக்கு மூலையிலிருக்கும் ஏழு பதியன்களில் மட்டும் மொக்குகள் தள்ளியிருந்தன. மிகுந்த சந்தோசமாய் அரசனிடம் போய்த் தெரிவித்தார்கள். அரசன் உடனே தோட்டத்திற்குக் கிளம்பினான். ஏழில் ஒன்றைப் பறித்து, தன் நாசியின் அருகே தயக்கமாய் நுகரக்கொண்டுசென்றான். மீண்டும் அதே வாசனை நுகரக் கிடைத்துவிட்டது. தோட்டம் முழுக்கக் கேட்கும்படியாய் மகிழ்ச்சியில் ‘`ஹோ...’’ வென்று கத்தினான். அதிகாலையில் எப்போதும் அவன் பெருமளவு யோசனை கேட்கும் வயசாளியின் வீட்டைத் தட்டி அழைத்துவந்தார்கள்.

சூழலை அவதானித்துவிட்டு, அவர் இறுதியாய் முடிவொன்றைச் சொன்னார்:    “காதுகள் பூத்த இந்தச் செடிகள், தாய்மை ததும்பும்  சிறந்த  பாடலோசை கேட்காமல் மலர்ந்திருக்க வாய்ப்பில்லை. கிழக்கு மூலையிலிருந்து பயணத்தைத் தொடங்கினால், அந்தப் பெண் குரலை  நாம் அடைந்துவிடலாம்.” மூன்று நாள் தேடலுக்குப் பின், அவளின் இருப்பிடத்தை அறிந்தார்கள். இரந்துண்டு வாழும் ஒரு பெண்ணைஅவர்கள் அழைத்து வந்தார்கள். மெலிந்த சிறு வயதுப் பெண். முலைகள் மொக்கிலிருந்து விரியத் தொடங்கும் வயது, பதினைந்து முடியக்கூடும். பலகாலம் முன், தன் அன்னையோடு நாற்பது இரவுகளைப் பகிர்ந்துகொண்ட கவாலிப் பாடகனைத் தேடித் திரிவதாய்ச் சொன்னாள். திறமையான கவாலிப் பாடகரான அவருக்கும் தன்னைப்போன்றே பார்வை கிடையாது என்று அடையாளம் கூறினாள். அரண்மனையிலிருக்கும் கவாலிப் பாடகனைப் பற்றி முதியவர் சொல்ல வாயெடுக்கையில், அரசன் வாயில் கைவைத்து மறுத்தபடி சைகைசெய்தான்.

அரசன், அந்த மனிதரைக் கண்டுபிடித்துத் தருவதாகவும் உன்மேல் படிந்திருக்கும் வறுமையை இப்போதே முற்றிலுமாய்த் துடைத்துவிடுவதாயும் வாக்குறுதி கொடுத்தான். பதிலீடாய்த் தனது தோட்டத்தில் தங்கி, அனுதினமும் மூன்றாம் ஜாமம் கழிந்து, அதிகாலையில் பாடியபடி தோட்டத்தின் ஓரம் முழுக்க நடந்துவரும்படிக் கேட்டுக்கொண்டான்.அவளும் தோட்டத்தின் சுகந்தம் பிடித்து ஒப்புக்கொண்டாள். மீண்டும் அனுதினமும் சாம்பல் நிற இருளுக்குள்ளிருந்து முணுமுணுப்பான பாடல் கசியத் தொடங்கியது. மீண்டும் பூக்கள் பூத்துத்  தள்ளின. காரணம் ஏதும்  அறியாது, அவளும் அனுதினமும் ஒரு கடமையைப் போலப் பாடினாள். தோட்டப் பணியாளர்கள் யாரும் ஒரு வார்த்தைகூடப் பேச அனுமதிக்கப்படவில்லை. ஒருநாள் பாடியபடி  பூக்களின் வாசனைக் கிறக்கத்தில் தடுமாறித் தடுமாறி தோட்டத்தின்   பாத்திக்குள் நுழைந்து, ரோஜாப் பதியனின்  தலையில் கைவைத்தாள். அவளின் கை பட்டதும், பூமொக்கு ஓன்று அவளின் கைக்குள் மலர்ந்தது. அவளுக்குக் குறுகுறுப்பாயிருந்தது. சந்தோஷத்தில் உவகையோடு பாடினாள். தோட்டம் முழுக்கப் பாடியபடி, தடுமாறித் தடுமாறி நடந்தாள். ஒவ்வொரு பதியனின் தலையிலும்   கரங்களை வைத்து மொக்குகளின் விரிவை உணர்ந்து அதன் குறுகுறுப்பில் சில்லிட்டுக் கொண்டேயிருந்தாள்.

அவளின் முகத்தில் உறைப்பில்லாத சிறு வெயிலின் கீற்றை உணர்ந்தாள். பணியாள்கள் இலந்தை முள் வேலிப்படலை மூடிவிட்டுக் கிளம்பிவிட்டார்கள். வண்டிகளும் கிளம்பியிருந்தன. அவள் பாடலை நிறுத்தாது பாடிக்கொண்டே யிருந்தாள்.  பதியனின் தலையில் இப்போது தடவிப் பார்க்கையில் பூ இல்லை. கரத்தை கீழே இறக்கித் தேடினாள். முட்கள் அவளைக் காயப்படுத்தின. பாடலை நிறுத்திவிட்டு, எல்லாப் பதியனின் தலையிலும் தடவித் தடவிப் பூக்களைத் தேடினாள். ஏதொன்றிலும் பூ இல்லை. அழுது அழுது வரப்பிற்கு ஏறினாள். மறுநாள் காலையில் அவளின் பாடலுக்காகப் பதியன்களும் பணியாள்களும் காத்திருந்தார்கள். ஒரு பணியாள் வந்து அவளைப் பாட வற்புறுத்தினான். அவள் பாடமறுத்து நின்றாள். பணியாள் மிரட்டலோடு பெரிதும் வற்புறுத்தவே, அழுகையும் விம்மலுமாய் இறப்பின் சுவைபோன்ற பாடலைப் பாடியபடி தோட்டத்தின் குறுக்கும் நெடுக்குமாய் ஓடினாள். பதியன்கள், தனது ஒவ்வொரு மொக்கையும் விரிக்க மறுத்தன. பறிக்கும் கரங்கள் தன்னைத் தொடுவதற்குள் தானே கருகித் தரையில் விழுந்தன.
 
பணியாள்கள், ஒரு பூவையும் பறிக்க இயலாது வெறுங்கையோடு  முள்வேலியைப் பிரித்துக் கிளம்பினார்கள்.  தோட்டத்திலிருந்து தன்னையும் வெளியே கொண்டுபோய் விடச்சொல்லிக் கேட்டாள், எந்தப் பதில் குரலும் இல்லை. இலந்தை முள்வேலிப் படலை அடைத்துவிட்டுக் கிளம்பினார்கள். தானே வெளியேப்போக வழி தேடித் தடுமாறித் தடுமாறி, வேலிப் படலைக் கையால் தடவினாள். ஒரு தடவலில் ஒருநூறு இலந்தை முட்கள் அவளைக் குத்தின. வலி பொறுக்காது கத்தினாள். கொஞ்ச தூரம் நடந்து நடந்து வெளியேறும் பாதை இருக்கிறதாவெனத் தடுமாறித் தடுமாறி நாள் முழுக்கத்  தேடினாள். கோபமாய்க் கத்தியபடி,  பாத்திக்குள் இறங்கிக் கையில் கிடைத்த பதியன்களையெல்லாம் பூமியிலிருந்து உருவி உருவி எறிந்தாள். கையெல்லாம் இலந்தை முட்களும் ரோஜா முட்களும்  குத்திய ரணம். வெளியேறத் தெரியாது  ஓங்கி ஓங்கிக் கத்தியபடி ஆங்காரமாய் இலந்தை முட்களின்மீது தன்னைக் கொண்டுபோய் முட்டிக் கொண்டே யிருந்தாள். ஆயிரமாயிரம் முட்கள், கத்தியபடி இன்னும் ஓங்கி ஓங்கி முட்டினாள். குரல் ஒடுங்கி, இரவுக்குள் உடல் முழுக்க ரத்த வடிப்போடு சரிந்துகிடந்தாள். இரவு, சூன்யமாய்க் கிடந்த ரோஜா வனம் முழுக்க வெம்பா இறங்கி அவளை மூடியது. ஆங்கங்கே வேலிப்படலின் சிறு உடைப்புக்குள்ளிருந்து எல்லாத் திசையிலிருந்தும் ரத்த வாடை நுகர்ந்து, செந்நாய்கள் அவளின் உடலைத் தேடி நுழைந்தன. தரையிலிருந்து முழங்காலளவு நிரம்பிக்கிடக்கும் புனிப்புகைக்குள், நாற்பதைம்பது முதுகுகள் மட்டும்  எல்லாத் திசைகளிலிருந்தும் வந்து, ஒருபுள்ளியில்  நின்றன. தலைமைபோல் தெரிந்த முதல் செந்நாய் பனிப்புகைக்குள் தலையை உள்செலுத்தி, மயங்கிய உடலை முதல் கடி கடித்தது. அநேகமாய் அது அவளின் குரல்வளைதான். பின் எல்லாத் தலைகளும் தலையைப் பனிப்புகைக்குள் நுழைத்தன.

- நரன் ஓவியங்கள் : மணிவண்ணன்