Published:Updated:

அடுத்து என்ன? - அஷேரா நினைவிலும் கனவிலும் பரவியிருக்கும் சா ஓலம்

அடுத்து என்ன? - அஷேரா நினைவிலும் கனவிலும் பரவியிருக்கும் சா ஓலம்
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - அஷேரா நினைவிலும் கனவிலும் பரவியிருக்கும் சா ஓலம்

அடுத்து என்ன? - அஷேரா நினைவிலும் கனவிலும் பரவியிருக்கும் சா ஓலம்

அடுத்து என்ன? - அஷேரா நினைவிலும் கனவிலும் பரவியிருக்கும் சா ஓலம்

அடுத்து என்ன? - அஷேரா நினைவிலும் கனவிலும் பரவியிருக்கும் சா ஓலம்

Published:Updated:
அடுத்து என்ன? - அஷேரா நினைவிலும் கனவிலும் பரவியிருக்கும் சா ஓலம்
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - அஷேரா நினைவிலும் கனவிலும் பரவியிருக்கும் சா ஓலம்

திரை என்கிற பெண், தன்னுடைய மார்பின் குருதிச் சேற்றுக்குள் புதைந்திருந்த சயனைட் குப்பியைக் கடித்துத் தன்னை மாய்த்துக்கொண்ட இறுதிப் பக்கத்தை எழுதி முடித்த நாளில், முதுகில் சுமந்துவாறு அலைந்து திரிந்த ஒரு பெரும் குற்றஉணர்ச்சியை   இறக்கிவைத்துவிட்டுத் தப்பித்துக்கொண்டதைப்போலத் தோன்றிற்று. இனித் தாய்நிலத்திலிருந்து வெளியேறும் படைப்புமனம், புலம்பெயர்ந்த தேசத்தின் மனிதர்களிலும் அவர்களுடைய வாழ்விலும் சஞ்சரிக்கத் தொடங்குமென்றும் துப்பாக்கி வெடிக்காத பிரதியொன்றை எழுதிவிடமுடியுமென்றும் தோன்றிற்று. சிலகாலம் கழித்து, ‘அஷேரா’வை எழுதத் தொடங்கினேன். ‘அஷேரா’, என்பவள் கானானியர்களின் வானரசி. ஏதேனின் ராக்கினி. ஆனாலும் ஒரு பெண்.

இந்த உலகம் பெண்களால் இயங்குகிறதென்பதைச் சிறுவயதுகளிலேயே நம்பினேன். அப்பம்மா, அத்தை, அம்மாவெனப் பெண்கள் தனித்திருந்து  அந்த உலகத்தை இயக்கினார்கள். அவர்களே ஜீவ பாதையைச் செப்பனிட்டார்கள். அந்தப் பாதைவழியே தன்னுடைய மாந்தரை வழிநடத்துவது அவர்களுடைய ஆதிக்குணம் என்ற அறிதல் ஏற்பட்டிருந்தது.

பெண்ணுடைய அதிகாரத்தை ருசித்தல் என்பது ஓர் அலாதியான அனுபவம். ஆனால், பொதுவான ஆண்மனத்திற்கு அது குமைச்சலை ஏற்படுத்துகிறது. அதனால், அவளுடைய ஆளுமையின் சக்தி மூலமாக தானேயிருக்கின்றேன் என்று பாவனை செய்ய ஆரம்பிக்கின்றது. அதைப் பிரகடனம் செய்வதற்காக நிறைய பிரயத்தனம் செய்கிறது. பொருளாதாரத்தையும், மரபான சமூக மதிப்பையும், உடல் வலுவையும் அதற்கான ஆயுதங்களாகப் பிரயோகித்து எக்காளத்துடன் நிறுவ முயல்கிறது. பெண்ணோ தன் வலு உணர்ந்தவள். அவள் ஒருபோதும் போட்டியிடுவதில்லை. ‘இருந்துவிட்டுப் போ’ என்கிற உளப்பாங்கு அவளுடையது.

அடுத்து என்ன? - அஷேரா நினைவிலும் கனவிலும் பரவியிருக்கும் சா ஓலம்

அவளுடைய சுயத்திற்கு முன்னால், தான் தோற்றுக்கொண்டிருக்கிற ‘உண்மையை’த் தெரிந்திருக்கின்ற ஆண், அந்த ஆற்றாமையைத் தாங்கமுடியாமல், சிதைந்து உழலும்போதே அவனுடைய குரூரமும் விகாரமும் பல் இளிக்கத்தொடங்குகின்றன. பேரவலத்தின் தொடக்கம் நிகழ்கிறது. அவன் இயல்பைத் தொலைத்த மிருகமாகிறான். ஆதிப்பெண் தன் கையிலிருக்கும் சாட்டையைச் சுழற்றத் தொடங்குகிறாள்.
இச் சிந்தனைகளின் பின்னணியிலேயே அஷேரா உருவாகினாள். ஐரோப்பாவில் உலவும், தலைமுறை இடைவெளியைக்கொண்ட மனிதர்களான பெண்கள், குழந்தைகள், ஆண்களின் மனவுலகில் உலவுவதான கதையில் எந்தவொரு வரலாற்றுச் சம்பவத்தினதும் இருக்கப்போவதில்லை என்றே நினைத்தேன். ஆனால், அது மனித அகத்தின் புதிரான விசித்திரங்களின் பின்னால் அலைந்து திரிந்தபோது, நான் எதிர்பாராதவாறு குண்டு வெடிப்புகளின் கந்தக மணம் வெளிக்கிளம்பத் தொடங்கிற்று.

ஓர் உண்மைக்குத் தன்னைச் சாட்சியாய் முன்னிறுத்தும் முனைப்பு பெருமளவிற்கு ஈழத்துப் படைப்பிலக்கியத்தின் பண்பாயிருக்கிறது. என்னுடைய இரண்டு நாவல்களும் பகுதியளவிற்கேனும் அவ்வாறிருந்தன. பிற்காலத்தில் என்னில் மாற்றமடையத் தொடங்கியிருந்த இலக்கியம் பற்றிய புரிதல், அஷேராவில் செல்வாக்குச் செலுத்தியபோது, எழுத்தும் மனிதர்களை அதிகமும் அகவயமாகவே சூழ முற்பட்டது. அவர்களுடைய மேன்மையில் கீதம் இசைத்தது. கீழ்மையைத் தோண்டி மோந்தது. இச்சை, வெறுப்பு, குரோதம், காமம், நேசம், காழ்ப்பு, இரக்கம், குயுக்தி, அரவணைப்பு, பழி எனக் கொதிஉலை நீராகக் குமையும் உணர்வுகளின் ஊற்றைத் தேடி விசாரணை செய்தபோது, கடைசியில் ‘காலப்பொந்திற்குள்’ மறுபடியும் ரத்தமும் சதையுமே சிந்திக்கிடந்தன. சாவின் நெடியே வீசியது.

அஷேரா ஒரு வாழ்வை விரித்துப் பரப்பிய கதைப்பிரதியல்ல. அது தெரிந்தெடுத்த மனிதர்களுடைய ஒன்றோடொன்று ஊடும் பாவியும், விலகி வெளியேறுவதுமான கதைகளின் தொகுப்பு. முன்னும் பின்னுமான காலமும் இங்கும் அங்குமான நிலங்களின் அலைவும் பிரதி முழுவதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மனிதர்கள், பெண்ணுடனான காமத்தில் சுகித்திருக்கிறார்கள், அவளுடைய நேசத்தைப் புறந்தள்ளுகிறார்கள், கேலி செய்கிறார்கள், தாய்மையின் மடிச்சூட்டிற்காக ஏங்குகிறார்கள், குழந்தைகளை வெறுக்கிறார்கள், பிரியத்தை எதிர்கொள்ளத் திராணியற்று அதை அலட்சியமாக்கித் தப்பிக்கிறார்கள். யாருடையதோ காலடியில் வீழ்கிறார்கள். யாரையோ காலடியில் வீழச் செய்கிறார்கள், காட்டிக்கொடுக்கிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள், மன்னிப்பை இரக்கிறார்கள், துரோகமிழைக்கின்றார்கள், பிறழ்கிறார்கள். 

அப்போதெல்லாம் அமானுஷ்யமாக ஒரு துப்பாக்கி செவிக்கெட்டாத மாயச்சத்தத்துடன் சன்னங்களைத் துப்பிக்கொண்டிருந்தது. கந்தகம் காட்சியற்ற நெடியாகப் பரவிக்கொண்டிருந்தது.

நஞ்சு ஊறிய விதையிலிருந்து முளைத்த ஒரு பெரு விருட்சத்தின் பூவிலும், காயிலும், விழுதிலும், விறகிலும் விஷமேறியிருப்பதைப்போல, நம்முடைய நினைவிலும் கனவிலும் பரவியிருக்கும் சா ஓலத்திலிருந்து இலக்கியம் எப்படித் தன்னை விடுதலை செய்துவிட முடியும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- சயந்தன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism