Published:Updated:

“குஜராத்திகளுக்கு வாசிப்பதற்கெல்லாம் நேரம் இல்லை!”

“குஜராத்திகளுக்கு வாசிப்பதற்கெல்லாம் நேரம் இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“குஜராத்திகளுக்கு வாசிப்பதற்கெல்லாம் நேரம் இல்லை!”

“குஜராத்திகளுக்கு வாசிப்பதற்கெல்லாம் நேரம் இல்லை!”

‘மாட்டுத் தோலை
தண்ணீரும் உப்பும் கலந்து
வெறுங்காலால் சுத்தப்படுத்துவாள்.
இதன் கூலியாகக் கொண்டுவருவாள் அம்மா,
எனக்கான துண்டு மாமிசத்தை.’

தன் வாழ்வனுபவங்களைக் கலாபூர்வமாகத் தம் கவிதைகளில் பதிவுசெய்துவருபவர் ஜெயந்த் பர்மர். குஜராத்தைச் சேர்ந்த இவர், உருது மொழியின் மிக முக்கியமான கவிஞராகத் திகழ்ந்துவருபவர். சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர். சமீபத்தில், ‘இந்திரன் 70’ விழாவில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தோம்...


“உங்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகம்?”

“அப்பா புருஷோத்தம் தாஸ் பர்மர், மில் தொழிலாளி. அம்மா மாதவ்ஜி பர்மர். அப்பா, அம்மா இருவருமே படித்தவர்கள் இல்லை. நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி. நான் மூன்றாவது பையன். நான் படித்தது அகமதாபாத்தில். எங்கள் பகுதிகளில் முஸ்லிம்கள், இந்துக்கள், ஜைனர்கள் எனப் பல மதத்தினரும் கலந்து வசித்தனர். அதனால், அங்கே அடிக்கடி மதக்கலவரங்கள் நடக்கும். இந்தக் கலவரங்கள் அரசியல்வாதிகளின் வேலைதான். இது எங்கள் படிப்பைப் பாதித்ததால், அந்த இடத்தைவிட்டு வெளியேறினோம். கல்லூரிப் படிப்பை, குஜராத் இன்ஸ்டிட்யூட்டில் ‘புள்ளியியல்’ துறையில் முடித்தேன், ஆறு, ஏழு வயது இருக்கும்போது கரித்துண்டுகளால் சுவர்களில் வரைய ஆரம்பித்தேன். யாரும் தடுக்காததால், சுவர் முழுக்க வரைந்து தள்ளினேன். பின்னாளில் இதுவே உருது லிபியைக் கற்றுக்கொள்ள கைகொடுத்தது. இதுவரை, ‘ஔர்’ (1999), ‘பென்சில் ஔர் தூஸ்ரி நஜுமெய்ன்’ (2006), ‘மானிந்த்’ (2007),  ‘அந்த்ரால்’ (2010) ஆகிய கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. இவற்றில், ‘பென்சில் ஔர் தூஸ்ரி நஜுமெய்ன்’ என்ற நூலுக்கு 2008-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. எனது கவிதைகள் ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி, கன்னடம், மராத்தி, பெங்காலி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இப்போது, அலகாபாத்தில் ஒரு வங்கியில் பணியாற்றி வருகிறேன்.”

“குஜராத்திகளுக்கு வாசிப்பதற்கெல்லாம் நேரம் இல்லை!”

“உங்களுடைய தாய்மொழி குஜராத்தி. ஆனால், நீங்கள் உருது மொழியில் உங்கள் படைப்புகளை எழுதிவருகிறீர்கள். உருது எப்போது படித்தீர்கள்?”

“என் தாய்மொழி குஜராத்திதான். தொடக்கத்தில் குஜராத்தியில் எழுதவும் செய்திருக்கிறேன். ஆனால், உருது கற்றுக்கொண்ட பின்னர்தான் என் உணர்வுகளை, குஜாராத்தியைவிடவும் உருது மொழியில் அழுத்தமாகச் சொல்ல முடியும் எனத் தோன்றியது.

எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது, அம்மா மசூதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே, மசூதிச் சுவர்களில் பூக்களைப்போன்ற ஓவியங்களைப் பார்த்தேன். பின்பு ஒருநாள் மார்க்கெட் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது, பழைய புத்தகக் கடை ஒன்றில், அதேபோன்ற ஓவியங்கள்கொண்ட நூல் ஒன்றினைப் பார்த்தேன். இயல்பிலேயே எனக்கு ஓவியத்தில் ஆர்வமிருந்ததால், அது என்னை ஈர்த்தது. அந்த நூலில் உள்ளவற்றை வரைந்து பார்க்க வேண்டும் என்ற ஆவலில் அதை வாங்கினேன். அதன் பின்னர்தான் அந்த நூல், குஜராத்தி வழியே உருது கற்றுக்கொள்ளும் நூல் என்றும், அதிலுள்ளவை ஓவியங்கள் அல்ல உருதுச் சொற்கள் என்றும் தெரியவந்தன. அந்த அளவுக்கு உருது மொழியின் வரிவடிவம்கூடத் தெரியாமல்தான் அன்று இருந்தேன். பின்னர், உருது லிபியை எழுதவும் வாசிக்கவும் கற்றேன். மூன்று மாதங்களிலேயே நான் உருதுமொழிக்குள் நன்றாக நுழைந்துவிட்டேன். உருது மொழியில் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன்.  உருது மொழி, ஆழமான பண்பாட்டுப் பின்புலம்கொண்டது; இசைத்தன்மை மிக்கது; மிகவும் நெகிழ்வான எழுத்துருக்களைக்கொண்டது. எனக்கு உருது மொழி பிடித்துப்போனதற்கு இவையும் காரணங்கள். உருது மொழியில் எழுதிய ஆரம்பகட்ட கவிதைகள் பிரசுரமாகும்வரை, நான் எழுதியது உருதுதான் என்ற முழுமையான தெளிவு அன்று என்னிடம் இல்லை.” (சிரிக்கிறார்).

“உருது மொழி குறித்த ஆழமான புரிந்துணர்வற்ற அப்போதைய உங்களின் கவிதைகள், பலராலும் பாராட்டப்படும் அளவிற்கு அமைந்தது எப்படி?”

“உருது மொழியில் எழுதிவிட்டேனே தவிர, அது சரியா... உருது மொழியின் தன்மைகொண்டிருக்கிறதா என்ற தயக்கமும் கேள்விகளும் என்னிடமும் இருந்தன. ஆனாலும், எனது கவிதைகளை இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வெளிவந்த பல பத்திரிகைகளுக்கு அனுப்ப ஆரம்பித்தேன். அவர்களும் அதைப் பிரசுரித்தார்கள். அது எனக்கு மிகப் பெரிய ஆச்சர்யமாக இருந்தது. ஒவ்வொரு கவிதையும் வேறுபட்ட உணர்வுகளில், தொனிகளில் எழுதப்பட்டிருப்பதை வாசித்துவிட்டு பலரும் எனக்குக் கடிதங்கள் எழுதினார்கள். அகமதாபாத்திலிருந்து பல எழுத்தாளர்கள் ‘யார் இந்தக் கவிஞர்?’என்று என்னைத் தேடி வந்தனர். தேடிவந்த அனைவரும், ‘உனக்கு 50 வயதிருக்கும் என்றல்லவா நினைத்தோம். ஆனால், நீயோ 25 வயது இளைஞனாக இருக்கின்றாயே?’ என்று ஆச்சர்யப்பட்டனர். அப்போது எனக்கு 30 வயதுதான் ஆகியிருந்தது.  உருது கற்றுக்கொண்டவுடன் அம்மொழியில் உள்ள செவ்விலக்கியங்கள், அதன் முக்கியக் கவிஞர்களின் படைப்புகளை மிகத் தீவரமாக வாசித்தேன். முந்தையவர்களை முழுமையாக உள்வாங்கிக்கொண்டேன் என்றாலும், நான் அவர்களின் பாதையைப் பின்பற்றவில்லை. பெரும்பாலும் உருது மொழியில் எழுதிய எல்லோரும் ‘கஸல்’ வகைக் கவிதைகளையே எழுதினர். அதனால், நான் அதன் உருது மொழியில் உள்ள மற்றொரு  வடிவமான ‘நஜும்’ என்ற கவிதை வடிவத்தில் எழுதத் தொடங்கினேன். பலருக்கும் ‘வான்கா’ என்றாலே யாரென்று தெரியாத சூழலில், நான் எனது கவிதைகளில்  அவரைப் பற்றி 25 கவிதைகள் எழுதினேன். பாகிஸ்தானில் வெளியான ‘ஔராக்’ பத்திரிகையில் அவை பிரசுரமாகின. 

“உருது மொழியில் உங்களுக்கான தனித்துவத்துவ அடையாளத்தை எப்படி உருவாக்கிக்கொண்டீர்கள்?”

“1930-களின் தொடக்கத்தில், பொதுவுடைமைக் கட்சிகளின் தாக்கத்தால் எல்லோரும் குறிப்பிட்ட கருவில் எழுத நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆனால், 60-களுக்குப் பிறகு, மொழிநடையில் ஒரு புதுமை வந்துசேர்ந்தது. அப்போதுதான் நான் எழுதத் தொடங்கியிருந்தேன். உருது மொழியில் எழுதுபவர்களெல்லாம் இஸ்லாமியர்கள் என்ற பொதுப்புத்தி இருந்த காலகட்டம் அது. ஆயினும், நான் எழுதியதை எல்லோரும் வரவேற்றார்கள். என் தனித்த நுட்பமான அனுபவங்களைச் சுமந்த கவிதைகள் எனக்கான தனித்த இடத்தைப் பெற்றுத்தந்தன. உங்கள் வாழ்க்கையை, உங்கள் கற்பனையில் நீங்கள் எழுதினால் யாரால் என்ன செய்ய முடியும்? சாதாரணமான உருதுக் கவிதைகளைவிட என் கவிதைகள் பேசுபொருளில் வித்தியாசமாக அமைந்திருந்தன. அவற்றின் தலைப்புகளும்கூட. அதனால்தான், பெரிய எழுத்தாளர்களும்கூட என்னை ஏற்றுக் கொண்டார்கள். உருது மொழியின் மிக முக்கியமான நாவலாசிரியரான சம்சூன் உர் ரஹ்மான் என் கவிதைகளைப் பாராட்டி எழுதினார். கோபிசந்த் நாரங் 1999-ல் வெளியான என் கவிதைகளைப் பற்றிய நீண்ட கட்டுரை ஒன்றை எழுதிப் பாராட்டினார். உருது மொழியின் மிக முக்கியமான ஆய்வாளர் முகமது சலீல், என் கவிதைகள் பற்றி ஆழமாக எழுதியுள்ளார்.”

“உங்கள் கவிதைகளில் தலித் அரசியல் மிகுந்திருந்தனவா?”

“என்னுடைய கவிதைகளில் தலித் அரசியல் காணப்படுவதாகச் சொல்கிறார்கள். அவை தலித் அரசியல் இல்லை; அனுபவங்கள். அதாவது, நான் தனியாக தலித் அரசியல் என்று எழுதுவதில்லை. ஒரு தலித்தாக என் சொந்த வாழ்க்கை, பயணங்கள், அனுபவங்கள், பார்வைகள் என எல்லாவற்றையும் எழுதுகிறேன். நான் தலித் என்பதால் அக்கவிதைகள் அனைத்தும் தலித் கவிதைகளாக இருக்கின்றன. அவை தலித் கவிதைகள் என்பதால், அவை தலித் அரசியலைப் பேசுகின்றன. இது திட்டமல்ல, கலையில் இயல்பாக நடக்கிறது. தமிழ் எழுத்தாளர் பாமாவின் படைப்புலகில் நிகழும் அனுபவங்களைப்போல குஜராத்திலும் உண்டு; உரிமைக்கான போராட்டங்கள் உண்டு. இரண்டு மாநிலங்களும் மொழியும் இந்தியாவுக்குள்தானே இருக்கின்றன!

இன்று, தலித்துகள் பலர் கல்வியில் முன்னேற்றம் பெற்று, தங்கள் அனுபவங்களை எழுதுகிறார்கள். முந்தைய தலைமுறையின் கவிதைகள் வேறுவிதமான அனுபவங்களைப் பேசின. அதன் தயக்கங்கள் இன்று இல்லை. புதியவர்கள், தங்களின் அனுபவங்களை நேரடியாகவும் வெளிப்படையாகவும் பேசுகிறார்கள்.”

“சாகித்ய அகாடமி விருது பெற்ற உங்களின்  ‘பென்சில் கவிதைகள்’ தொகுப்பு பற்றி...?”

“என்னளவில் மிக முக்கியமான தொகுப்பாக அதைக் கருதுகிறேன். அது பல இடங்களில் எனக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தானின் குறிப்பிடத்தக்க ஏழு கவிஞர்களில் என் பெயரும் இடம்பெறக் காரணமாக இருந்தது. இக்கவிதைத் தொகுப்பை முன்னிட்டுத்தான் 2011-ல்  ‘லாஹூர் இலக்கிய விழா’வுக்கு என்னை அழைத்துப் பாராட்டினார்கள்.”

“உங்கள் கவிதைகளில் யாருடைய தாக்கமாவது இருப்பதாக நினைத்திருக்கிறீர்களா?”

“நான் யாரைப்போலவும் எழுத விரும்பவில்லை. எல்லோரையும் வாசிக்கிறேன். ஆனால், என்னைப்போல மட்டுமே எழுத விரும்புகிறேன்.”

“நீங்கள் கவிதை எழுதும் முறை பற்றி...?”

“கவிதை மனநிலை உண்டாகும்போது எழுதுவேன். குறிப்பிட்ட நேர வரையறையெல்லாம் கிடையாது. தொடர்ந்து அனுபவங்களைச் சேகரித்தபடியே இருக்க வேண்டியதுதான். ஓர் அனுபவத்தைப் பெற்ற பிறகு, ஆறு மாதங்கள் கழித்துக்கூட அதற்கான கவிதை மனநிலை உண்டாகலாம். நான் எழுதத் தொடங்கியபோது, எதைப் பற்றி எழுத வேண்டும் என்று யோசித்தெல்லாம் எழுதவில்லை. பென்சிலை வைத்துக்கொண்டு தியானிக்கும்போது, உள்ளிருந்து என்ன வருகிறதோ அதுவே என் கவிதைகளாகின. அவை, முன்பாகவே தயார் செய்யப்பட்ட திட்டமிட்ட கவிதைகள் அல்ல. எழுதுகிற  கவிதைகளை, பதிப்பாளருக்கு அனுப்பும்வரை தினமும் வாசித்துத் திருத்திக்கொண்டே யிருப்பேன். என்னைப் பொறுத்தவரை, இஸங்கள் அது இதுவென்று கவிதைகளில் குழப்பிக்கொள்வதில்லை. கவிதை நன்றாக இருக்கிறதா... அவ்வளவுதான். கவிதை எனக்கு உலகை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதையும், எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதையும் கற்றுத் தந்திருக்கிறது.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“குஜராத்திகளுக்கு வாசிப்பதற்கெல்லாம் நேரம் இல்லை!”

“உங்களின் ஓவிய முயற்சிகளைப் பற்றிப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?”

“எனது கவிதைகளுக்கான காட்சிப் படிமங்கள் என் ஓவியங்களிடமிருந்துதான் வருகின்றன. கவிதை எழுதத் தொடங்கிய பிறகு, என் தூரிகைகளையும் வண்ணங்களையும் நான் விட்டுவிட்டேன். என் கவிதைகளே என் ஓவியங்களாக அமைந்தன. பல வருடங்கள் கழித்து மீண்டும் வண்ணங்களில் வரைய ஆரம்பித்திருக்கிறேன். கவிதையும் ஓவியமும் உருவாகுமிடம் ஒன்றுதான் எனினும், எழுதுவதற்கும் வரைவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. உடல்ரீதியாக மனரீதியாக... கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆயினும், ஓவியங்களே மிக நெருக்கமாக இருக்கின்றன.”

“கவிஞர் இந்திரனின் விழாவில் பேசியபோதுகூட, கவிதையில் உள்ள இசைத்தன்மை குறித்தே குறிப்பிட்டீர்கள்...”

“கவிதை என்பதே இசைதான். அதன் ஒவ்வொரு வரியுமே இசைதான். நவீனக் கவிதையோ, மரபுக் கவிதையோ எல்லாவற்றிலுமே இசை உண்டு. தேவைப்பட்டால் நான் இலக்கணங்களையும் பயன்படுத்துவேன்.  உருது மொழியில் 19 அசைகள் உண்டு.”

“தற்கால குஜராத்தி இலக்கியப் போக்கு பற்றி?”

“குஜராத்தி இலக்கியத்தில், நல்ல புனைவுகள் இப்போது மட்டுமல்ல எப்போதுமே குறைவுதான். உமாஷங்கர், ரமாஷங்கர், கமல் லோஹ்ரே போன்று பலர் தனித்துவத்துடன் எழுதக்கூடிய கவிஞர்கள் இருந்தார்கள். ஆனால், இப்போதைய தலைமுறையில் அப்படிக் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஆளுமைகள் இல்லை. கஸல் கவிதைகள் மட்டுமே பிரபலம் என்பதால், எல்லோருமே அந்தக் கிணற்றுக்குள் விழுந்துவிட்டார்கள். சிலர் கீத் (காதல் கவிதைகள்) எழுதுகிறார்கள். புதிய வடிவங்களில் முயற்சிகள் நடைபெறவில்லை. நவீன பரிட்சார்த்த  முயற்சிகள் குஜராத்தின் இலக்கியச் சூழலில் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. மராத்திக்கு அடுத்து, அதிகமான தலித் கவிஞர்கள் இருப்பது இங்கேதான் என்றபோதும், காத்திரமான படைப்புகள் வெளிவரவில்லை.”

“கஸல் கவிதைகளை நீங்களும் எழுதுகிறீர்கள். ஆயினும், கஸல் கவிஞர்கள் மீது ஏன் இத்தனை விமர்சனம்?”

“நான் பலவிதமான பாடுபொருள்களில், பலவிதமான வடிவங்களில் எழுதுகிறேன். ஆனால், கஸல் எழுதும்போது பல கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டியிருக்கிறது. என் கஸல்களின் காட்சிகள் சாதாரணமானவை; எளிமையானவைதான். ஆனால், மிகவும் வித்தியாசமான கோணத்தில் பார்வையில் உருவானவை. புல்புல் பறவைகளைப் பாடும் பழைய கஸல்கள் அல்ல என்னுடையவை. சுருக்கமாகச் சொல்வதென்றால், கஸல்களில் காட்சிகள் பழையதாகிவிட்டன, என் கஸல் கவிதைகளின் காட்சிகள் புதுமையானவை.”

“விவசாயிகளின் நடைப்பயணம் தொடங்கி, பல்வேறு போராட்டங்கள் அங்கே நடைபெற்று வருகின்றன. இவை குஜராத் இலக்கியத்தில் பதிவாகியுள்ளனவா?”

“இன்றும் தலித் போராட்டங்கள் தொடர்ந்தபடியேதான் இருக்கின்றன. முந்தயை தலைமுறையினரைப்போல, தற்போதைய தலைமுறைக்கு நேரடி அனுபவங்கள் அதிகமில்லை. அனுபவம் இல்லாமல் எங்கிருந்து படைப்புகள் வரும்? பல இயக்கங்கள் இருந்தாலும், அவற்றின் நிழல், இலக்கியங்களில் படியவில்லை. அரசியல் இயக்கங்களின் செயல்பாடுகளோ, போராட்டங்களோ இலக்கியத்தில் பதிவு செய்யப்படுவதில்லை. யார் கண்டார்? இன்னும் 50 வருடங்களில் ‘தலித் இலக்கியம்’ என்ற ஒன்றே இல்லாமல் போய்விடலாம். இருந்தபோதும், நீரவ் படேல், ப்ரவீன் காட்வே உள்ளிட்ட சிலர் போராட்ட உணர்வினைப் படைப்பாக்கி வருகின்றனர் என்பது ஆறுதல் அளிக்கிறது.”

“2002-ல் நடந்த ‘குஜராத் கலவரம்’  குறித்து  தேசம் முழுக்க விவாதிக்கப்பட்டது. அந்தக் கலவரம் குறித்து, குஜராத்தி இலக்கியத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறதா?”

“அதன் வலிகளைச் சொல்லும் படைப்புகளைத் தாங்கி, ‘உத்தரகாண்ட்’ என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியானது. ஆனால், அதை குஜராத்திகள் வாசித்தார்களா என்றெல்லாம் சொல்ல முடியாது. குஜராத்திகளுக்கு வாசிப்பதற்கெல்லம் நேரம் இல்லை. ஏனென்றால் அவர்கள் வியாபாரிகள்.” (சிரிக்கிறார்)

“தற்போது பல மாநிலங்களில் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக, அறிவுஜீவிகள் மீது வன்முறை நிகழ்த்தப்படுப்பட்டுவருகிறது. குஜராத்தில் நிலை என்ன?”

(சிறிது நேரம் யோசிக்கிறார்) “குஜராத்தில் எதற்குமே பெரிய எதிர்ப்பு வருவதே இல்லை. ஏனென்றால், அங்கு அரசாங்கமே வேறு மாதிரியானது. வெளியில் வந்து கருத்து சொன்னால், என்ன ஆகும் என்ற பயம் எல்லோரிடமும் இருக்கிறது.”

“கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்றோர்களின் கொலைகளின்போது மற்ற மாநிலத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குஜராத்தில் இது குறித்த உரையாடல்கள் நடந்தனவா?”

“சரூப் த்ரூவா என்ற ஒரு சமூகச் செயற்பாட்டாளர், இந்தக் கொலைகள் தொடர்பாகப் பல போராட்டங்களை நடத்தினார். (சிறிது நேரம் மெளனமாக இருக்கிறார்)

ஒவ்வொருவரும் தங்களால் முடிந்ததைச் செய்துவருகிறார்கள். ஆள்பவர்களிடம் அதிகாரம் இருக்கிறது. நம்மிடம் இருப்பது எதிர்ப்புக்குரல் மட்டும்தானே? அதை நாம் பதிவுசெய்துகொண்டே இருக்க வேண்டும். என் பார்வையில் ஹிட்லரைவிட மோசமானவர்கள் நமது ஆட்சியாளர்கள். ஹிட்லராவது ஒரு காஸ் சேம்பரில் வைத்து ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றார். ஆனால், இங்கே, தினம் தினம் மக்கள் சாகிறார்கள். அதிகார பீடத்தில் அமர்ந்திருக்கிற நமது ஆட்சியாளர்கள், தங்களது குற்றங்களுக்காகச் சிறையில் இருக்கவேண்டியவர்கள். நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்குப் புரியும்!” (சிரிக்கிறார்)

“பிராந்தியம் கடந்த, ‘இந்திய இலக்கியம்’ என்ற ஒன்று உருவாகியிருக்கிறதா?”

“இந்தியாவின் சிறப்பே அதன் பன்முகத் தன்மைதான். அந்தந்த மொழிகளின் இலக்கியமும் அப்படித்தான். சிந்தி மொழியில் மட்டுமே இந்தியாவுக்கான இலக்கியத்தைத் தேட முடியுமா? ஆதிவாசி மக்களிடையே மிகச் சிறப்பான இலக்கியம் உருவாகிவருகிறது. வடகிழக்கு மாநிலங்களிலிருந்து நல்ல படைப்புகள் வருகின்றன. மொழி, கலாசாரம், பழக்க வழக்கம் எல்லாமே மாறுபடும் நாட்டில், ஒற்றை மொழி, ஒற்றை இலக்கியம் என்பது மிகவும் கடினமானதும் அவசியமற்றதுமான ஒன்று; சாத்தியமற்றதும்கூட. ஒவ்வொரு பகுதியின் இலக்கியமும் தனி குண இயல்புகளைக்கொண்டவை.”

“தமிழ் இலக்கியப் படைப்புகளை வாசித்திருக்கிறீர்களா?”

“பாரதியின் கவிதைகளை வாசித்திருக்கிறேன். தலித் இலக்கியத்தில் பாமா, சுகிர்தராணி, மீனா கந்தசாமி உள்ளிட்டோரின் படைப்புகளை வாசித்திருக்கிறேன். செழுமையான மொழியாகத் தமிழை நான் உணர்கிறேன்.  தமிழ் எழுத்தாளர்கள், தம் எழுத்துகள் மூலமாகத் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகிறார்கள். அது மகிழ்ச்சியளிக்கிறது; நம்பிக்கையளிக்கிறது!”

- ஜெயந்த் பர்மர்

சந்திப்பு: விஷ்ணுபுரம் சரவணன், ச.அழகுசுப்பையா

படங்கள்  : க.பாலாஜி

தமிழில்: சு.நாராயணி

நன்றி: கவிஞர் இந்திரன்

ஜெயந்த் பர்மர் உருது மொழிக் கவிதைகள்

தமிழில்:இந்திரன்

தோல் பதனிடும் அம்மா

தோல்பதனிடும் இடத்தின் நாற்றம்
என்னை என் பள்ளி வரை தொடர்ந்து வரும்.

சூரியக் குடையின் கீழ் என் அம்மா
வெறுங்காலுடன் இறங்குவாள்
தோல்பதனிடும் இடத்தில்.

மாட்டுத் தோலை
தண்ணீரும் உப்பும் கலந்து
வெறுங்காலால் சுத்தப்படுத்துவாள்.
இதன் கூலியாகக் கொண்டுவருவாள்
எனக்கான துண்டு மாமிசத்தை.

இன்றுகூட
நான் எனது காலணியை
செர்ரிபிளாசம் பாலீஷ் போட்டு
பளபளப்பாக்குகையில்
அதில் மின்னுகிறது
என் தாயின் முகம்.

தோல்பதனிடும் இடத்தின் நாற்றம்
இன்னும் தொடர்கிறது என்னை
எனது அலுவலகம் வரை.

சூரியகாந்தி

ன்பான வான்கோ
ஒரு காரணமுமில்லாமல் நீ எங்களைவிட்டுப் பிரிந்து
ஏழாவது உலகில் போய் அமர்ந்திருக்கிறாய்.
ஆனால் இந்த உலகத்தில்
உனது சமாதிக்குப் பக்கத்தில்
பூக்கள் மலர்கின்றன –
சூரியகாந்திப் பூக்களை நீ எப்படி தீட்டினாயோ
அதேபோல காட்சியளித்துக்கொண்டு
பூக்கின்றன.
ஒரு நாள் முழுவதும் இந்தச் சூரியகாந்திப் பூக்கள்
உனது சமாதியின் மீது சாய்ந்து
உனக்கான பிரார்த்தனைகளைச் சொல்கின்றன.