Published:Updated:

வாசனை

வாசனை
பிரீமியம் ஸ்டோரி
News
வாசனை

கலாப்ரியா, ஓவியங்கள் : வேல்

தெருவின் அநேக வீடுகளைப் போலவே ஒரே வளவுக்குள் எதிர் எதிராக வைகுண்டம் வீடும் காமாட்சி சுந்தரம் வீடும். வைகுண்டத்தின் சொந்த வீடுகள்தான் இரண்டும். இரண்டு வீட்டுக்கும் பொதுவாக நடுவில் ஒரு முற்றம். தெருவை ஒட்டிய வீட்டில் வைகுண்டம் இருந்தான். அவன் வீட்டு அடுக்களை தெருப்பக்கமாக இருந்தது. நேர் மாறாக எதிர் வீட்டில் அடுக்களை பின்பகுதியில் இருந்தது. அதற்கப்புறம் புறவாசல் என்கிற தோட்டம் வந்துவிடும். அதில் ஒருகாலத்தில் மாட்டுத்தொழு, எருக்குழி, சில மரங்கள், உலர் கக்கூஸுகள் இருந்த சுவடுகள் தெரியும். வைக்கோல் படப்பு அடையும் ஆள்கள், விறகு தரிப்பவர்கள் வரப் போக, மாடுகள் மேய்ந்துவிட்டு வருவதற்கு, இன்னபிற வசதிக்கு என வீட்டை ஒட்டி ஒரு சிறிய முடுக்கு இருக்கும். இந்த முடுக்குகளைத் தங்கள் பலான விஷயங்களுக்குப் பயன்படுத்திக்கொள்கிற ஆள்களும் உண்டு.
 
வைகுண்டம் கொஞ்சநாள் சென்சஸ் ஆபீஸில் வேலை பார்த்தான். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் வேலை பார்த்தபின் அந்த அலுவலகத்தை மூடிவிட்டார்கள். அதை நம்பிக் கல்யாணம் செய்திருந்தான். எந்த வேலையும் இல்லாத நிலையில், சினிமாக் கொட்டகையில் டிக்கெட் கிழிக்கிற வேலை கிடைத்தது. ``பார்த்தா ஏ.வி.எம் ராசன் மாதிரி இருக்கான்; போயும் போயும் டிக்கெட் கிழிக்கிற வேலையா’’ என்று சினிமாவுக்கு வருகிற பெண்களே கிண்டல் செய்வார்கள். எந்த வேலை கிடைத்தாலும் ஐயப்பன் கோயிலுக்கு விரதம் இருந்து மாலை போட்டு வருவதாக வேண்டிக்கொண்டான். அதுபோலவே இரண்டுமுறை போய்வந்தான். சென்சஸ் வேலை பார்த்தவர்களை மீண்டும் ஏதாவது அரசுப் பணியில் சேர்க்கச் சிலருடன் சேர்ந்து வழக்கும் போட்டிருந்தான். அதற்காக மூன்றாம் முறையும் மாலை போட்டிருக்கிறான்.

வாசனை

மூன்றாம் முறை வைகுண்டத்திற்குத் தன் வீட்டில்வைத்து, கட்டுக் கட்டி மலைக்குப் போக வேண்டுமென்று ஆசை. அவன் செல்லும் குழுவில், எல்லோரையும் அநேகமாகக் கழித்துவிட்டார் குருசாமி. இப்போது நாலைந்து பேர்தான் போகிறார்கள். வழக்கமாகக் குருசாமி வீட்டில் கட்டுக் கட்டிப் போவார்கள். அந்த வருடம் அவர் வீட்டில் வசதிப்படவில்லை. ``பக்கத்துக் கோயிலில் வைத்துக் கட்டலாம்’’ என்று குருசாமி சொன்னபோது, ``எங்க வீட்டில் வைத்துக் கட்டலாமா, அப்படியாவது எங்க வீட்டுக்கு விமோசனம் கிட்டட்டுமே’’ என்றான். ``ச்சேச்சே, மாலை போட்டுக்கிட்டு  அப்படில்லாம் பேசக் கூடாது. எல்லாம் நல்லபடியாவே நடக்கும்; நான் அதுக்கு யோசிக்கலை, கட்டுக் கட்டறது நாலு பேருக்குன்னாலும் பஜனை, பூசை, பிரசாதம், சாப்பாடு எல்லாத்துக்கும் ஒன் வீட்டில இடம் போதுமா சாமி? வீட்ல உள்ளவங்களுக்கும் தொந்தரவு இல்லாம பாத்துக்கணும்... அம்புட்டுத்தான்’’ என்றார்.

``அதுங்க சாமி, எதிர்வீட்ல இருக்கற ஜெயாக்கா ரொம்ப ஒத்தாசையா இருப்பாங்க... அவங்க வீட்டில ரெண்டே பேருதான்’’ என்றான். ``நீ அவங்ககிட்ட கேட்டுட்டு வந்து நாளைக்கிச் சொல்லு. மார்கழி மாசம் பொறந்து மறுநாளு, வழக்கம்போலக் கட்டுக் கட்டுவோம். அதுக்குத் தோதா எல்லாம் இருக்கணும் பாத்துக்கோ’’ என்று சிரித்தபடியே சொன்னார் குருசாமி. சிரிப்பின் அர்த்தத்தைத் தாமதமாகக் கண்டுகொண்ட வைகுண்டம், ``அந்த மாளிகைபுரம் சுத்த பத்தமாத்தான் இருப்பாங்க. இப்பக்கூட வீட்டுத் தூரம்லாம் வந்து தலைகுளிச்சிட்டாங்க’’ என்றான். குருசாமி உட்பட எல்லோரும் சிரித்துக்கொண்டார்கள்.  சிலர், “என்ன சாமி இதையெல்லாமா பாத்து வச்சிருக்கே” என்று தனியே கிண்டலும் செய்தார்கள்.

ஜெயாவின் மாப்பிள்ளை, கோயில் வாசலில் வளையல் கடை போட்டிருக்கிறார். அவர் அப்பா, மதுரையிலிருந்து இங்கே இடம்பெயர்ந்து வந்த காலத்திலிருந்தே அங்கேதான் வியாபாரம்.  அப்பா காலத்தின் கடைசியில் வியாபாரம் கொஞ்சம் நொடிக்க ஆரம்பித்தது. அப்போதுதான் காமாட்சி சுந்தரத்துக்குக் கல்யாணம் ஆகியிருந்தது. கடையில் வேலைக்கு ஆள்கூட வைத்துக்கொள்ள முடியாத நிலை. ஜெயாவே கடைக்கு வந்து ஒத்தாசைக்கு நின்றுகொண்டாள். அவள் அப்பா யோசனைப்படி ஆயிரம் வாட் பல்புகள், சீரியல் லைட்டுகள் போட்டுப் பிரகாசமான கடையில் கவரிங் நகைகளும் வைத்து விற்றதில், வியாபாரம் மறுபடி சூடுபிடித்துக்கொண்டது. கடையைக் கடக்கிற யாரும் ஜெயாவையும் கண் விரியப் பார்ப்பார்கள். சிலர் கிசுகிசுத்துக்கொள்வார்கள், “அணைஞ்ச லைட்டுக்கடையா வச்சிருந்தாரு பெரியவரு, இவ வந்த முகுத்தமில்லா சும்மா சீதேவி கொட்டுதா...” என்று சொல்வார்கள். சிலர், ``நாஞ்சொன்னேம்லா... அந்த மதுரை மீனாட்சி, இதுதான்’’ என்று காட்டுவார்கள்.

இந்த ஜாடைப் பேச்சையெல்லாம் கேட்டபின் ஜெயா, ``நான் வீட்டிலேயே இருக்கேன். நான் வந்த முகூர்த்தம்தான் லாபம் வந்துதுன்னா, வீட்ல இருந்தாலும் வராமலா போயிரும். அப்படியே செஞ்சு பார்ப்போம்; நாளைப்பின்ன ஒரு லாப நட்டம்னா மறுபடி வந்துகிடறது... சரிதானே காமாட்சி’’ என்று வீட்டுக்குள் அடைந்து கொண்டாள். அவளுக்குச் சந்தோஷமோ, உறுத்தலான யோசனை வந்தாலோ, கேலிசெய்தாலோ, சுந்தரத்தை, காமாட்சி என்று  ரெண்டாம் பேருக்குத் தெரியாமல் கூப்பிடுவாள். உண்மையில் சுந்தரத்திற்கு அவள் கடையில் இருப்பதில் எந்தக் கஷ்டமும் எரிச்சலும் இல்லை. அவன் ரொம்ப நல்ல சுபாவம்.

ஜெயாவுக்கும் மதுரைப் பக்கம்தான். அவள் நடை உடை பாவனையிலெல்லாம் மதுரை வாசனை அடிக்கும். மதுரைபோய் வரும்போதெல்லாம் அங்கேதான் ஜாக்கெட் தைத்துக்கொண்டு வருவாள். பக்கத்து வீட்டில் இவளது மார்புகளை எடுப்பாகக் காட்டுகிற `கட் ஜாக்கெட்’ போலத் தங்களுக்குத் தைத்து வாங்கி வரக் கேட்பார்கள். அதற்காக  அவளே அங்கே ஜாக்கெட் கட் பண்ணப் படித்து வந்தாள். அவளுக்குத் தையலும் தெரியும். ஆனாலும், ``அண்ணாச்சிங்க தைச்சாத்தா ஜாக்கெட் நல்லா அமையும்’’ என்று அடிக்கடி சொல்லுவாள்.

வைகுண்டம் ஜெயாவிடம் வந்து சொன்னான், ``இந்த வருசம் எங்க வீட்ல வச்சுத்தான் கட்டுக் கட்டிப் பயணம் போறோம். அக்கா நீங்க கொஞ்சம் ஒத்தாசை பண்ணணும்’’ என்று. உடனே ஜெயா பரபரப்பாகிவிட்டாள். ``அதுக்கென்ன நல்லபடியா செஞ்சிரலாம். உங்க வீட்ல பூசை, இருமுடி கட்டுறது எல்லாம் வச்சுக்கிட்டு, இங்கன சாப்பாடு பந்தியெல்லாம் வச்சுக்குவோம். எப்போ மாசப்பிறப்புக்கு மறுநாளா... அதுக்கு இன்னும் நாள் இருக்கு, அத்தானிடம் சொல்லி வீட்டை வெள்ளை அடிச்சிரச் சொல்லுதேன்’’ என்றாள். ``நானே அடிச்சுத் தாரேன். நீங்க ஒதுங்கவச்சு மட்டும் குடுங்க’’ என்றான். ``அதையெல்லாம் நாங்க பாத்துக்கிடுதோம். நீ ஓம் பொண்டாட்டி, ஆத்தாகிட்ட சொல்லிட்டியா? அவ பேருக்கேத்த காளியாத்தா, ஆடித் தீத்திரப் போறா. முன்வாசல் கொடியில, புள்ளைதுணி கொடியில் கிடந்தது. மழைக்கு இருட்டிக்கிட்டு வருதேன்னு அவசரமா எடுத்தா, `சும்மாவா சொல்லுதாங்க அணவடைத்துணியை மோந்து மோந்து பாப்பா மலடினு…’ என்று ஒரே ஏச்சு. நான் வெக்கிப்போயி ஓடியாந்துட்டேன். நெசமாவே மழையில அம்புட்டும் நனைஞ்சிதான் போச்சு.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வாசனை

``ஆமாமா, அதுதான் எனக்கும் தெரியும்லா. இதை நான் அவகிட்ட தன்மையாச் சொல்லிருதேன்’’ என்றான் வைகுண்டம்.

வைகுண்டத்தின் பொண்டாட்டி காளிக்குக் கொணமே காணாது. கல்யாணத்துக்கு முந்தியே அவள் கொஞ்சம் புத்திபிசகின மாதிரித்தான் நடந்துக்கிடுவான்னு கல்யாணத்துக்கு அப்புறம் சொன்னார்கள். புள்ளை பெத்ததுக்கு அப்புறம் அது கூடித்தான் போச்சு. எப்போதும் எல்லாரும் தன்னையே கவனிக்கணும்கிற மாதிரி ஒரு குணம். குழந்தையை அழ அழப் போட்டுவிட்டு, வீட்டு ஓட்டைப் பார்த்துக்கொண்டிருப்பாள். தெப்பமாக ஒன்றுக்கிருந்துவிட்டுக் குழந்தை அதிலேயே தூங்கிக்கொண்டிருக்கும். மூத்திரத்தைத் துடைக்க வேண்டும்; மூத்திரச் சாக்கை எடுத்து நனைத்து வெயிலில் போட வேண்டும் என்றெல்லாம் செய்ய மாட்டாள். அதேநேரம் யாராவது வந்துவிட்டால், ஓடியாடி வேலை செய்வதுபோல நடிப்பாள். ``இப்பத்தான்க்கா துணியை யெல்லாம் கசக்கிப் போட்டுட்டுப் புதுத் தொட்டில் வேட்டி கட்டினேன். அதுக்குள்ள பன்னீர் தெளிச்சு வச்சுருக்கான் ஓம் மகன், பாருக்கா’’ என்பாள். வந்தவள் மூக்கைப் பொத்திக்கொண்டு, தொட்டில் வேட்டியைப் பார்ப்பாள். அதில் மஞ்ச மஞ்சேன்னு மூத்திரக் கரை காஞ்சு போயிருக்கும். அவள் தன் தலை முடியையெல்லாம் சடை விழுந்து ஈரும் பேனும் மிதக்கிற மாதிரித்தான் வைத்திருப்பாள்.

வைகுண்டத்திடம் காரணகாரியமில்லாமல் சண்டை போட்டுக்கொண்டிருப்பாள். அப்போதெல்லாம் ஜெயாதான் தன் வீட்டின் திண்ணையில் ஓரமாய் நின்றுகொண்டு, `நீ சும்மா இரு’ என்பதுபோலக் கண்ணைக் காட்டுவாள். அவனும் தலையைத் தொங்கப்போட்டபடி கொஞ்ச நேரம் இருந்துவிட்டு, மெதுவாக நகர்ந்து பக்கத்து முடுக்கு வழியே தோட்டத்துக்கு வந்து, ஜெயா வீட்டு அடுக்களையில் நுழைந்து, `பாருக்கா என் நிலைமையை’ என்பதுபோல் உட்கார்ந்திருப்பான். அவனை உட்காரவைத்துக் கொண்டே சமையலை ஓடியாடிப் பார்ப்பாள். வைகுண்டம் கொஞ்ச நேரம் அழுத முகத்தோடு இருப்பவன், அவளது சேலை தழையும் போதெல்லாம் மார்பைப் பார்த்துக்கொண்டிருப்பான். அவள் தலைப்பை லேசாகச் சரிசெய்தால்கூட அடுத்த விலகல் வரைக்கும் பொறுக்காமல் தலையைச் சாய்த்து அல்லது ஒருக்களித்துக்கூடப் பார்ப்பான். ஜெயா சிரித்துக்கொண்டே, ``அந்தா காளி வாரா பாரு’’ என்பாள். ``போக்கா’’ என்று அவனது ஒளிவான இடத்திலிருந்து எழுந்து வாசலை மெதுவாக எட்டிப் பார்க்கையில், ``காளி, இந்தா பாத்துக்க’’ என்று சொல்லிக்கொண்டே அவனைப் பின்னாலிருந்து கட்டிக்கொள்வாள். அவனும் நிஜமென்றே நம்பி, ``எங்கேக்கா, பாக்காளா?’’ என்பான். ``அடக் கோட்டிக்காரா, நீ இங்க இருக்கேனு தெரிஞ்சாலே, வாசல்ல நின்னு ஒரு ஆட்டம் ஆடி சலுப்பை இழுத்திருக்கமாட்டாளா... சரியான மக்கு நீ’’ என்பாள். ‘ஆளைப் பாத்தா அழகுபோல, வேலையப் பாத்தா எழவுபோல’ என்பதுபோல, உண்மையிலேயே மக்குதான் வைகுண்டம். அப்படி அவள் கிண்டலடிக்கும்போதே சொல்வான், ``ஜெயாக்கா ஓம்மேல இருந்து வர்ற வேர்வை மட்டும் எப்படிக்கா வீச்சம் இல்லாம இருக்கு? அங்கேயெல்லாம் சினிமாக் கொட்டகையில டிக்கெட்டுக்குச் சண்டை போட்டுக்கிட்டு வர்ற பொம்பளைக கிட்டே இருந்து கெடு வீச்சம் வருங்க்கா’’ என்பான்.

``ஒன்னையப் போயி யோக்கியன்னு நினைச்சு பொம்பளை டிக்கெட்ல நிப்பாட்டியிருக்காங்க பாரு, அந்த முதலாளியைச் சொல்லணும். ஒவ்வொருத்தி வாசனையையும் அளந்துகிட்டு இருக்கியோ நீ. ஏன், திருவிளையாடல் சினிமாவில வர்ற மாதிரி அது இயற்கையா, செயற்கையான்னு கேக்கக் கூடாது? அது சரி, காளிகிட்ட இருந்து என்னடே வரும், அது வாசனையா வீச்சமா?’’ என்பாள். ``அவ கிட்டக்கவே நான் போகறதே இல்லையே’’ என்று அவன் சொன்னால், ``போகாமத்தான் புள்ளையப் பெத்தியோ’’ என்பாள். ``சரி சரி சமையல் முடிஞ்சாச்சு. இங்கே எனக்கு வேகுது. நீ வந்த மாதிரியே  முடுக்கு வழியாகவே போ. உங்க அண்ணாச்சிக்குச் சாப்பாடு குடுத்துவிடணும்’’ என்று மார்பு தெரிய முந்தானையை எடுத்து முகத்தை விசிறிக்கொள்வாள். ``நான் கொண்டுபோய்க் குடுத்துட்டு சினிமாக் கொட்டகைக்குப் போறேன்’’ என்பான். ``அதெல்லாம் வேண்டாம். நீ பரமேன்னு கொண்டுபோவே, நீ எப்படி அங்கே போனேன்னு பேச்சு வரும். அப்படியே ஓஞ்சம்சாரம் எனக்கு நாலு மலட்டுப் பட்டம் கட்டுவா. எதுக்கு வம்பு, ஆளை விடுறா சாமி’’ என்பாள் ஜெயா. ``அக்கா, இந்த வாட்டி மலைக்குப் போகும்போது உனக்கு ஐயப்பன் பொறக்கணும்னு வேண்டிக்கிட்டு வரேன். உனக்காக ஒரு எக்ஸ்ட்ரா நெய்த்தேங்கா இருமுடியில் கட்டிட்டுப் போறேன். நெய் நிரப்பும்போது மட்டும் நீ வந்து ஒரு கை தொட்டுக்க’’ என்பான். ``இப்பவே தொட்டுக்கிடுதேன்’’ என்று அவன் தலையைத் தொட்டுச் சிரிப்பாள். ``இது என்ன தேங்காயா’’ என்று அவன் சிரிப்பான். ``ஏயப்பா, நீகூடச் சிரிப்பாணியாப் பேசுதியே’’ என்று மார்போடு அணைத்துக்கொள்வாள்.

``இன்னைக்கு அதே ஞாவகமா அக்கா, நம்ம வீட்டிலேயே கட்டுக் கட்டினா, உனக்கு ஒரு நெய்த்தேங்கா அடைக்கிறதுக்கு வசதியாப் போயிரும்’’ என்றான். ``எல்லாம் செய்யலாம். நீ காளி கிட்டயும் அவ அம்மாகிட்டேயும் சமாச்சாரத்தைச் சொல்லிரு, அந்தம்மா கொஞ்சம் வயனம் உள்ள பொம்பளை, இப்படிக் கூறு இல்லாம சண்டை போடாது’’ என்று சொல்லி அனுப்பினாள் ஜெயா.

பூசைக்கு ரெண்டு நாள் முன்னாலேயே காளியின் அம்மா வந்துவிட்டாள். முதலில் அதெல்லாம் நம்ம வீட்ல வச்சுச் செய்யப்படுமா என்று சந்தேகப்பட்டாள். ``சரி, அப்படியாவது இந்தப் புள்ளைக்கி நல்ல புத்தி வருதான்னு பாக்கலாம். சரி வாரேன்’’ என்றாள். வீட்டில் கிடந்த அட்டு அடைசல்களை எல்லாம் ஒளித்து, பூசைக்குப் பாட்டாசலையும் குழந்தைக்கு நடுக்கட்டினையும் ஒதுங்கவைத்தாள். ஆயிரம் தடவை சொன்னாள், ``காளி இது விளையாட்டுக் காரியமில்லே... அவன் மலைக்குப் போயிட்டு வருந்தன்னியும் வீடு சுத்தமா இருக்கணும்.  இப்படிப் பீக்காடும் மூத்திரக் காடுமா வச்சிருக்காதே. புள்ளைத் துணியையெல்லாம் குடு, நான் வாய்க்காலுக்குக் கொண்டுபோயி துவைச்சுட்டு வாரேன். தோட்டத்தில காயப்போட்டு எடுக்கலாம்’’ என்றாள். ``அங்க போடாதம்மா, அந்தத் திருட்டு முண்டை எடுத்து மோந்து மோந்து பாப்பா. புள்ளை துணின்னா அவ பேய் மாதிரி வருவா, அது புள்ளைக்கி ஆகுமா’’ என்றாள் காளி. ``ச்சீ மூதேவி, மாலை போட்ருக்க வீட்ல பேசற பேச்சா இது, வாயை அடக்குட்டி’’ என்று மெதுவாகச் சத்தம் போட்டாள் அம்மாகாரி.

எல்லாரையும்விட சுந்தரம்தான் கூடின ஒத்தாசையாக இருந்தான். ஜெயா அவனிடம் லேசாகத்தான் சொல்லியிருந்தாள், ``ஏங்க அந்தத் தம்பி ரொம்ப ஆசைப்படுது. நம்மளைத்தான் மலை மாதிரி நம்பியிருக்கு. நல்ல காரியம்தானே, செய்வோமே’’ என்று. அவனே கடைப்பையனை விட்டுத் தன் வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் பண்ணி வைத்தான். அவனுக்கு உள்ளூற ஓர் ஆசைதான், வைகுண்டம் சொல்லற மாதிரி இந்த வீட்டிலயும் நாலு சாமிமார் கால்பட்டு இவளுக்கு ஒரு புள்ளை பிறந்துதுன்னா எம்புட்டு சந்தோஷமாருக்கும் என்று. ஆனால், காளி வழக்கம்போல ரெண்டாங்கட்டில் மூத்திர வாசனை இருக்கும்படி பார்த்துக்கொண்டாள். கூட இரண்டு தரம் பிள்ளையை அழவிட்டாள். பானகம் கரைச்சுத் தாரேன் என்று எலுமிச்சம்பழத்தை யெல்லாம் இறுக்கிப் பிழிந்து கசப்பாக்கிவிட்டாள். ``சாமிக்குப் படைக்கிறதை ருசியா பாக்க முடியும்’’ என்று விண்ணானம் பேசினாள்.

மலைக்குப் போய்த் திரும்பும் ஒரு வாரம் வரைதான் சும்மா இருந்தாள் காளி. ராத்திரியாகிவிட்டது வீட்டுக்கு வர. வந்து பூசை எல்லாம் முடிந்து, காலையில் படத்தையும் மாலையையும் வழக்கம்போல் பக்கத்துக் கோயிலில் போய் மாட்டிவைத்தான் வைகுண்டம். காளியின் அம்மாகாரி போய்விட்டாள்.  ``ஜெயாக்காவிடம் பிரசாதத்தைக் கொடுத்துவிட்டு வருகிறேன்’’ என்று சொன்னதும் பிடித்துக்
கொண்டு விட்டாள். ``அன்னைக்கே பாத்தேனே, அவ தேங்காயில் நெய்யடைக்கேன்னு உங்களை உரசிக்கிட்டே நின்னாளே’’ என்று பழிச்சண்டை போட்டாள். ``அய்யோ பாவம் அதுக்கு ஒரு பிள்ளை பொறக்கட்டுமேன்னு நான்தான் நெய்த்தேங்காய் கொண்டுபோய் அபிஷேகம் பண்ணுதேன்னு சொன்னேன்.’’

வாசனை

``ஆமா நீங்கதான் அவளுக்கு கர்ப்பதானம் குடுக்கப் போறீங்கன்னு தெரியுமே’’-இப்படிக்கூடப் பேசத் தெரியுமா என்று தோன்றியது வைகுண்டத்திற்கு. ஜெயாவுமே கேட்டுக்கொண்டுதானிருந்தாள். இவ பைத்தியக்காரி இல்லை, விசம்பம் புடிச்சவன்னு சொல்லுதாங்களே, அப்படி ஆளு என்று  கூசிப்போய்க் கதவை அடைத்துக்கொண்டாள். சுந்தரமும் கடைக்குக் கிளம்பியிருக்கவில்லை. அன்றைக்குப் பார்த்து கொட்டகையில் நாலு காட்சிகள். காலைக் காட்சிக்கு எட்டு மணிக்குள்ளாவது கொட்டகையில் நிற்க வேண்டும். போய் விட்டான் வைகுண்டம்.

புதுப்படம், நிறைய கூட்டம். செகண்ட் ஷோ முடிந்து, தியேட்டரில் ஏகப்பட்ட குப்பைக்கூளம். ``கொஞ்சம் நின்னு போடே, எவனாவது எதையாவது தொலைச்சிட்டேன்னு வந்து நிப்பான். நாளைக்குவேற பத்து மணி ஷோ இருக்கு’’ என்று முதலாளியே சொல்லிவிட்டார். வீடு வருவதற்கு நேரமாகிவிட்டது. காளி தூங்கியிருந்தாள். குழந்தையும் தூங்கிக்கொண்டிருந்தது. ஜெயா வீட்டுக் கதவை ஒஞ்சரித்துச் சாத்தி வைத்திருந்தாள். சுந்தரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். வைகுண்டம் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான். ஜெயா, ``வா’’ என்றாள். குரலில் அவ்வளவு சுரத்து இல்லை. ``அந்த மூதேவி சொன்னதுக்கு என்னமும் நினைச்சுக்கிட்டீங்களாக்கா’’ என்றான். ``என்ன சொன்னா, நான் ஒண்ணும் கேக்கலையே’’ என்றாள் ஜெயா. ``நீங்க சொல்றது பொய்யின்னு உங்க பேச்சே காட்டிக்கொடுக்குது. எத்தனை படம் பாக்கேன், எவ்வளவு வசனம் தினமும் காதில விழுது எனக்கு’’ என்றான் வைகுண்டம், கொஞ்சம் சத்தமாக.

``சத்தம் போடாதே, கதவை நல்லா சாத்து, உன் வீட்டுக்காரி முழிச்சுவைக்காம’’ என்றவள், ``சாப்பிட்டியா’’ என்று கேட்டுவிட்டு, ``நீ கஞ்சப் பிசுநாரில்லா, ரெண்டு ரூவாய்க்குக் கடையில நாலு இட்லி தின்னுட்டு வராம, வீட்டுக்கு வந்து நீயே தோசை சுட்டுத் திம்பே. இரு, ஸ்டவ்வைப் பத்தவச்சு தோசை சுடுதேன்’’ என்று கல்லைப் போட்டுவிட்டு, காலை நீட்டி அம்மியில் தோசைக்குச் சட்னி அரைப்பவளின் கெண்டைக் காலையும் அதன் பூனைமயிரையும் பார்த்துக்கொண்டிருந்தவனின் தட்டில், மணமாக ஒரு தோசை விழுந்ததும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ஜெயாவிடம் எந்த எதிர்வினையும் இல்லை.

இரண்டு தோசையோடு போதும் என்று எழுந்தான். கையைப் பிடித்து இழுத்து, ``உட்காரு, இன்னும் ஒண்ணாவது சாப்பிடு. ஊத்திட்டேன் பாரு’’ என்றவள் கண்ணில், ஓரிரண்டு துளி அரும்பிப் பொங்கியது. அவள் இழுத்த இழுப்பில் நெருக்கமாக உட்கார்ந்தான். ``அவளுக்கு எப்படிப்பா, என்னவோ தானம் அது இதுன்னெல்லாம் சொல்லத் தெரிஞ்சுது’’ என்றாள். வைகுண்டம் மௌனமாய் அவள் முகத்தையே பார்த்தான். பார்வை தாங்காமலோ என்னவோ, சட்டென்று அவன் தோளில் சாய்ந்தாள். தோசை லேசாகக் கருகிக் கல்லில் பிடிக்க ஆரம்பிக்கையில் தோளை விடுவித்துக்கொண்டு தோசையைத் திருப்பிப் போட்டாள். வைகுண்டம், ``அக்கா ஒரு விஷயம்லா, இந்தத் தடவை பதினெட்டாம் படிகிட்ட நிறைய கூட்டம் நெருக்கியடிச்சுது. பக்கத்தில் ஒரு சாமி உடம்பில இருந்து ஓம்மேல அடிக்குமே அதே வேர்வை வாசனை அப்படியே அடிச்சிது. நான் ஒன்னைத்தான் நெனைச்சுகிட்டேன்.’’ அவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ``எங்க போயி என்னை நெனைச்சிருக்க பாரு, அப்ப ஒம் புண்ணியம் பூரா எனக்குத்தான்போல’’ என்று சொல்லிக்கொண்டே தோசையை அவன் தட்டில் போட்டுவிட்டு, அடுப்பை அணைத்ததும், சிகரெட் வாசனை வீட்டிற்குள் வந்தது.

``ஒங்க அண்ணாச்சி வந்துட்டாகபோல’’ என்று எழுந்து வந்து கதவைத் திறந்தாள். சுந்தரம் திண்ணையில் உட்கார்ந்து சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தான். ``அப்பவே வந்திட்டீங்களா, கதவை அடைச்சதையே மறந்திட்டேன். நீங்க தட்டினா என்ன’’ என்றாள். அவன் ஒன்றுமே சொல்லவில்லை. ``சாப்பிட்டீங்களா’’ என்றதற்கு மட்டும், சிகரெட் உதட்டிலேயே இருக்க, `ஆமாம், ஆச்சு’ என்பதுபோலத் தலையை ஆட்டினான்.  திடீரென்று  வைகுண்டத்திடம், ``தம்பியாபுள்ளை ரொம்ப சுவாரசியமாப் பேசிக்கிட்டு இருந்தீகபோல, புதுப் படத்துக் கதையா, ரெண்டு தரம் தட்டினேன். அப்புறம் காளி முழிச்சுருவாளோன்னு திண்ணையில உக்காந்து ஒரு தம் அடிக்க ஆரம்பிச்சேன்’’ என்றான். வைகுண்டத்திற்கு அவன் ஏன் ஜெயாவை விட்டுவிட்டுத் தன்னிடம் பேசுகிறான் என்று ஒரு பயம் எழுந்தது. அமைதியாய் இருந்தான்.

``வாரும் உட்காரும்,  ஒரு தம் போடலாம்’’ என்று நீட்டினான். அவன் தயங்கினான். ``அதுதான் விரதமெல்லாம் முடிஞ்சாச்சுல்லா, சும்மா சத்தங்காட்டாம குடியும். மலைக்குப் போய்ட்டு வந்தப்புறம் ஒரு தெளிச்சி கூடியிருக்குவே உம்ம முகத்தில’’ என்றவன், சிகரெட் முடிந்ததும், முற்றத்து அடி பம்பில் வைகுண்டம் தண்ணீர் அடிக்க, வாய், முகம், கை, காலெல்லாம் கழுவிவிட்டு, ``காலையில பாப்போம் என்று போனவன் திரும்பி, ``வே தம்பி, புள்ளையோட அணவடைத்துணிக ராத்திரி நேரம் கொடியில கிடக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க, எடுத்து மடிச்சு வையும்’’ வைகுண்டம் தோளில் தட்டிவிட்டு வீட்டிற்குள் போனான் சுந்தரம். வைகுண்டம் தெருவுக்குப்போய் ஒன்றுக்கிருந்துவிட்டு வந்து, வெளித் தார்சாலிலேயே படுத்துக்கொண்டான். அது அவனுக்குப் பழக்கம்தான். படுத்தபடியே ஜெயா வீட்டைப் பார்த்தான், கதவெல்லாம் கப்சிப்பென்று அடைத்திருந்தது. வீட்டிற்குள்ளிருந்து லேசான கிசுகிசுப்பும், சத்தமாக ஜெயாவின் வெட்கச் சிரிப்பும் கனத்த நிலைக்கதவை மீறி வைகுண்டத்திற்கும் கேட்டது. ஏதோ மலை ஏறி, பதினெட்டாம் படியை மிதித்த சந்தோஷம்போல இருந்தது. கூடவே ஜெயாவின் வியர்வை வாசனையும் நாசிக்குள் சுழன்றது. உடலில் ஏதோ ஒரு மின்சாரம் பாய, குப்புறத் திரும்பிப் படுத்துக்கொண்டான்.