Published:Updated:

கவிதையின் கையசைப்பு - 6 - நவீன சீனக் கவிதையின் முகம்

கவிதையின் கையசைப்பு - 6 - நவீன சீனக் கவிதையின் முகம்
பிரீமியம் ஸ்டோரி
News
கவிதையின் கையசைப்பு - 6 - நவீன சீனக் கவிதையின் முகம்

எஸ்.ராமகிருஷ்ணன்

மிழின் சங்கக் கவிதைகளைப் போலவே சீனக்கவிதைகளும் இயற்கையை வியந்து போற்றக்கூடியவை. பிரிவையும் காத்திருப்பையும் முதன்மையாகப் பாடுபவை. இயற்கையை ஓர் ஊடகமாகக் கொண்டு மனித உணர்வுகளைப் பிரதிபலிப்பவை. கி.மு.340-277-ல் வாழ்ந்த கவிஞர் யு யுவான் சீனக்கவிதையின் தந்தையாகக் கொண்டாடப்படுகிறார்.

சீனக்கவிதையை, சீன தேசத்தை ஆண்ட மன்னர்களின் வம்சங்களால் அடையாளப் படுத்துகிறார்கள். டாங், சோங், யுவான், மிங், க்விங் சமகால நவீனக் கவிதை என்றே இதை வகைப்படுத்துகிறார்கள். சீனாவில் நவீனக் கவிதை 1920-களில் உருவாகிறது. அங்கும் புதுக்கவிதையை எளிதாக ஏற்றுக் கொள்ளவில்லை. நீண்ட போராட்டத்தின் பின்னர் புதுக்கவிதை அங்கீகரிக்கப்பட்டது.

தமிழ்போலவே சீனக்கவிதைகளுக்கும் நீண்ட பாரம்பர்யம் இருக்கிறது, கவிதைகளைத் தொகுத்துத் தொகைநூலாக வெளியிடுவதில் சீனா முன்னோடியாகும். அதுபோலவே பெண்கவிஞர்களுக்குச் சம இடம் கொடுத்து அங்கீகரித்ததும் சீனக் கவிதைகளின் தனித்துவமாகும்.

கவிதையின் கையசைப்பு - 6 - நவீன சீனக் கவிதையின் முகம்

அரசர்கள் தொடங்கி, விவசாயிகள் வரை பலரும் கவிஞர்களாக இருந்தார்கள். தத்துவமும் கவிதையுமே மனித வாழ்வின் ஆதாரங்களாகக் கருதப்பட்டன. மலைகளும் நதிகளும் பறவைகளும் ஆகாசமும் படகும் நிலவொளியும் காற்றும் நீங்காத படிமங்களாகக் கவிதையில் இடம்பெற்றன.நீர்வண்ண ஓவியத்தின் வண்ணம்போல மொழியைக் கரைந்தோடும்படி பயன்படுத்தினார்கள்.

சீன மரபுக் கவிதையின் முக்கிய நோக்கம், வாசிப்பவனின் முன்னால் ஒரு காட்சியைத் தோன்றச் செய்வது. அத்துடன் கவிஞன் விலகிக்கொண்டுவிடுகிறான். கவிதை நேரடியாக வாசகனை அந்த உலகிற்குள் இழுத்துக்கொள்கிறது. கவிதையின் வாசலைத் திறந்துவிடுவது மட்டுமே கவிஞனின் வேலை. ஆகவே, சீன மரபுக் கவிஞர்கள் எதையும் உரத்துச் சொல்வதில்லை. கண்ணாடியை முன் காட்டுவதுபோலக் காட்சிகளைக் காட்டுகிறார்கள்.

‘தண்ணீருக்குள் ஒருவன் இறங்கும்போது, தண்ணீர் எப்படி அவனை மௌனமாக உள்வாங்கிக்கொள்கிறதோ, அதுபோலவே கவிதையினுள்ளும் வாசகன் உள்செல்ல வழிகள் இருக்கின்றன. கவிதை அவனைத் தன்வசப்படுத்திக்கொள்ளும்’ என்கிறார்கள் சீனக் கவிஞர்கள்.

மரபான சீனக்கவிதைகள் இயற்கையைப் பற்றியதாகப் புறத்தில் தெரிந்தாலும் அவை மனதின் இயக்கத்தினை, கொந்தளிப்பைத்தான் காட்சிப்படுத்துகின்றன. ஆகவே, மனமே இயற்கையென விரிவுகொள்கிறது. இதன் இன்னொரு கோணத்தில், இயற்கை மனதை தன்வசப்படுத்தி இயக்குகிறது என்றும் கருதலாம். படகின் இரண்டு துடுப்புகளைப்போல இரு வழிகளிலும் கவிதை செயல்படுகிறது. சீன மொழியானது சித்திர வடிவம் கொண்டது. ஆகவே, சொற்கள் ஒவ்வொன்றும் ஒரு காட்சிப் படிமமாக விரிவு கொள்ளக்கூடியது.

புகழ்பெற்ற சீனக்கவிஞரான ஜீ ஸி யுவான் ஹுவா ஷுவான் கவிதையைப் பாருங்கள்:

‘சிறியதும் பெரியதும் கற்கள்
சதுரங்கப் பலகையொன்றின் காய்களைப்போல
உறவுகொண்டவை.
நீரருகே உள்ள சிறு கற்களோ
தாய்ப்பாறையின் அரவணைப்புக்குக் கைகள் நீட்டி
சூழ்ந்திருக்கும் குழந்தைகள்போலிருக்கின்றன.
வயதில் மூத்த
மலைமீதிருக்கும் பெரிய பாறை,
தன்னைச் சுற்றிச் சூழ்ந்துகொள்ள
குழந்தைகளை அழைக்க முனைவதுபோல் தெரிகிறது.
பாறைகளின் மத்தியிலும்
நேசமிருக்கிறது.’


இக்கவிதையில் பாறைகள் தன் கடினத்தன்மையை இழந்து நெகிழ்வுகொள்கின்றன. கற்கள் விழித்துக்கொண்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. மனிதர்களைப்போலவே கற்களும் ஒன்றையொன்று நேசிக்கின்றன; உறவுகொள்கின்றன.

வயதில் மூத்த பெரும்பாறை, தன்னைச் சுற்றிச் சூழ்ந்து கொள்ளச் சிறு கற்களை அழைக்கிறது. எத்தனையோ முறை நாம் கண்டு கடந்துபோன ஒரு காட்சியைக் கவிதை உருமாற்றுகிறது. பாறைகளின் மத்தியிலும் நேசமிருக்கிறது என்ற வரியின் வழியே கவிதை இது பாறைகள் குறித்த கவிதையில்லை என்பதை அடையாளப்படுத்துகிறது.

பாறைகள் மனிதர்களின் குண இயல்புகளாக மாறுகின்றன. ஓடும் நீரின் இயல்பை உலகம் அறிந்திருக்கிறது. ஆனால் ஓடாத நீரின் தனிமையை, அது தன்னில் நிலவை, சூரியனை பிரதிபலிப்பு செய்வதை, காற்றை எதிர்கொள்வதைக் கவிதையே விளக்குகிறது.

‘யாவும் நிசப்தத்திலே
துவங்குகின்றன
மறைவதும்
நிசப்தத்திலேயே’


என இன்னொரு சீனக் கவிதை சொல்கிறது. இயற்கை யின் இந்தப் பெரும் மௌனமே மரபான சீனக்கவிதையின் மூல ஊற்று. அந்த ஊற்றிலி ருந்தே சீனக்கவிதைகள் பொங்கிவழிகின்றன.

சீனக் கவிதைகளின் பொற்காலமாக டாங் அரச வம்ச காலத்தைக் கூறுகிறார்கள். அந்தக் காலகட்டத்தில் 2,500 கவிஞர்கள் இருந்ததாகவும் அவர்கள் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியதாகவும் சீன இலக்கிய வரலாறு கூறுகிறது.

இதில் ‘துஃபு’, ‘லீ போ’, ‘பாய் ஜுய்’ ஆகிய மூவரும் மிக முக்கியமான கவிஞர்கள். இவர்களின் கவிதைகள் இன்றும் விரும்பி வாசிக்கப்படுகின்றன. இவர்களது கவிதைகள் மேற்குலகின் பாதிப்பில்லாத அசலான பார்வையும் மொழியும்கொண்டிருக்கின்றன.

சீனக்கவிதைகளின் தொகைநூலாக கி.மு.600-ல் வெளியான ‘The Book of Poetry’ மிக முக்கியமானது. இயற்கையை வியத்தலும் அரசனைப் புகழ்ந்து பாடுவதும் அறம் உரைத்தலுமே பழஞ் சீனக்கவிதைகளின் மையப் பொருளாகும். நவீன சீனக்கவிதை மரபிலிருந்து விலகி, புதிய பாடுபொருளுடன் புதிய மொழியுடன் சமகால வாழ்வின் வெளிப்பாடாக உருவானது. இந்த முயற்சிக்கு முக்கியத் தூண்டுதலாக இருந்தவை ரஷ்ய மற்றும் ஐரோப்பியக் கவிதைகளே. குறிப்பாக லோர்காவும், ரில்கேயும், பிரெக்டும், நெருதாவும் நவீன சீனக் கவிஞர்களை அதிகம் பாதித்துள்ளார்கள்.

கவிதையின் கையசைப்பு - 6 - நவீன சீனக் கவிதையின் முகம்

பௌத்த மரபில் இக்கணம் மிக முக்கியமானது. சீனக்கவிதைகள் இக்கணத்தையே முதன்மைப்படுத்துகின்றன. ஒரே ஒரு தற்கணம் மட்டும்தான் எப்போதுமிருக்கிறது. அதை முழுமையாக அனுபவிப்பது மட்டுமே வாழ்வின் ஆதாரம். எந்த ஒரு பொருளும் ஒற்றைத்தன்மை உடையது அல்ல. அதில் இன்னொரு பொருளின் சாயலும் இருக்கவே செய்கிறது. ஆகவே, ஒன்றைச் சொல்லி இன்னொன்றை நினைவுபடுத்த கவிதை முயல்கிறது.

நவீனக் கவிதை, நாம் அறிந்த பொருள்களிலிருந்து அதன் பரிச்சயத்தை நீக்குகிறது. மறு நிமிடம் அப்பொருள் அறியாத ஒன்றாக உருமாறுகிறது. இப்படி அறிந்த உலகை அறியாத உலகமாக மாற்றுவதும் அறியாத உலகின் மர்மங்களை விலக்கி அதை விளையாட்டுப் பொருளாகக் கையாளுவதும் நவீனக் கவிதையின் இயல்பாகும்.

நவீன சீனக்கவிதையுலகின் முக்கியமான கவிஞர் பெய் தாவோ (Bei Dao). 1949-ல் பிறந்தவர். இவரது தந்தை ஓர் அரசு நிர்வாகி. அம்மா ஒரு செவிலியர். இளமையில் சில காலம் செம்படை வீரராகப் பணியாற்றியிருக்கிறார். பெய் தாவோவின் இயற்பெயர் ஜாவோ ஷென்காயின். இவர் சீனாவின் கலாசாரப் புரட்சிக்கு எதிராக நடந்துகொண்ட கவிஞர்களின் குழுவான ‘மிஸ்டி பொய்ட்டின்’ மிக முக்கியக் கவிஞர்.
‘The August Sleepwalker’, ‘Old Snow’, ‘Unlock’,  ‘Landscape over Zero’, ‘Midnight’s Gate and Waves’ போன்றவை இவரது முக்கிய நூல்கள். கவிதைகள் மட்டுமின்றி சிறுகதைகளும் நிறைய எழுதியிருக்கிறார்.

1989-ல் பெய்ஜிங் நகர தியானமென் சதுக்கத்தில் ஜனநாயக உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த மாணவர்கள், சீன ராணுவத்தால் ஒடுக்கப்பட்டார்கள். அந்தக் கிளர்ச்சியில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர் என்று இன்றுவரை துல்லியமாக யாருக்கும் தெரியாது. தியானமென் மாணவர்கள் போராட்டத்தின்போது, கவிஞர் பெய் தாவோவின் கவிதைகளே முக்கிய முழக்கங்களாக ஒலிக்கப்பட்டன.

பெய் தாவோ அந்த நாள்களில் பெர்லினில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்காகச் சென்றிருந்தார். தியானமென் சதுக்கப் போராட்டத்தைத் தூண்டிவிட்டதாகக் காரணம் காட்டி, அவர் சீனாவிற்குள் நுழைவதற்குத் தடை விதித்தது அரசு. அதுபோலவே அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரைச் சீனாவைவிட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. ஆறு வருடங்கள் குடும்பத்தைப் பிரிந்து ஐரோப்பாவில் வாழ்ந்தார் பெய் தாவோ. ஆறு வருடங்களுக்குப் பின்னரே அவரது குடும்பம் ஒன்றிணைந்தது. நாடுகடந்து இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, ஸ்வீடன், டென்மார்க், நெதர்லாந்து, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளில் வாழ்ந்த பெய் தாவோ அங்கே இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார். எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தான் ஒரு கவிஞன், தனது வேலை கவிதை எழுதுவது மட்டுமே எனத் தீவிரமாகக் கவிதைகள் எழுதித் தள்ளினார். அவரது கவிதைகள் 25 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

1966-ல் சீனாவில் மாவோ அரசால் கலாசாரப் புரட்சி தொடங்கியபோது, பெய் தாவோ உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வயது 17. கலாசாரப் புரட்சி காரணமாக மரபான கல்விமுறை அப்போது கைவிடப்பட்டது . பள்ளிகள் மூடப்பட்டன. ஆகவே, அவரும் படிப்பைக் கைவிட்டார். மாணவர்கள் பொதுச்சேவையில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதால், கிராமப்புறச் சேவை செய்வதற்காக அவர் பயணம் மேற்கொண்டு கட்டடத் தொழிலாளியாகப் பத்து ஆண்டுகள் பணியாற்றினார். அந்த நாள்களில் புத்தகங்களைத் திருடிப் படித்ததாகத் தனது நினைவுக் குறிப்பொன்றில் கூறியிருக்கிறார். வரலாறு, தத்துவம் மற்றும் அரசியல் சார்ந்த புத்தகங்களை அதிகம் வாசித்தார்.

கிராமப்புறத்தில் பணியாற்றிய காலத்தில் பெய் தாவோ சீனாவின் உண்மையான முகத்தை அறிந்துகொள்ளத் தொடங்கினார். கிராமப்புறங்களில் வறுமை மற்றும் பின்தங்கிய நிலைமை அதிகமிருப்பதை நேரடியாக அறிந்தார். ஆனால், அரசாங்கம் அப்படி எதுவுமில்லை என்று பிரசாரம் செய்தது. இந்த முரணை உணர்ந்து கொண்டதும் தனது எதிர்ப்பினைக் கவிதைகளாக எழுதத் தொடங்கினார்.

கலாசாரப் புரட்சியின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் கலைஞர்கள் பல நகரங்களிலும் உருவானார்கள். அவர்களை ஒன்றுபடுத்தி ‘டுடே’ என்ற இதழைக் கொண்டுவந்தார். அது முக்கியமான அரசியல் விழிப்புஉணர்வு இதழாக உருமாறியது.

தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தும் விதமாகக் கவிதைகள் எழுதி, பொதுச்சுவர்களில் ஒட்டும் வேலையிலும் கவிஞர்கள் இறங்கினார்கள். அச்செயல் பெரிய வரவேற்பினைப் பெற்றது. பெய் தாவோவின் கவிதைகளைப் பொதுமக்கள் விரும்பி வாசித்தார்கள். இளைஞர்கள் அவரது கவிதைகளை வகுப்பறையில் பாடினார்கள். கூடிப் படித்து விவாதித்தார்கள். மரபான சீனக் கவிதைகளிலிருந்து பெய் தாவோவின் மொழி முற்றிலும் மாறுபட்டது. திரைப்படங்களில் வெளிப்படும் மாண்டேஜ் காட்சிகள்போல துண்டு துண்டான காட்சிகளை ஒன்றோடு ஒன்று பொருத்தி, புதிய பொருளை உருவாக்குவதாக இருந்தன அவரது கவிதைகள்.
பெய் தாவோவின் கவிதைகளில் வெளிப்படும் சீனா முற்றிலும் புதியது. ஊடகங்களிலிருந்து நாம் அறிந்துள்ள சீனாவிலிருந்து மாறுபட்டது. சீனாவைப் பொறுத்தவரை, நேரடி அரசியல் போராட்டங்களைவிடவும் எதிர்ப்புகொண்ட கலை இலக்கியச் செயல்பாடுகளையே முக்கிய ஆபத்தாகக் கருதுகிறது. ஆகவே, அரசை எதிர்க்கும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்; கைது செய்யப்படுகிறார்கள். சிலர் நாட்டைவிட்டு வெளியேறி, வேறு தேசங்களில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.

கவிதையின் கையசைப்பு - 6 - நவீன சீனக் கவிதையின் முகம்

பெய் தாவோ அதிகாரத்தின் பயமுறுத்தல்களை மீறி, தைரியமாகத் தனது குரலை ஒலிக்கிறார். உலகெங்குமுள்ள கவிதை அரங்கில் அவரது கவிதைகள் வாசிக்கப்படுகின்றன. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் அவரது கவிதைகள் குறித்து விரிவான உரைகளும் விவாதங்களும் நடைபெறுகின்றன. 1980-கள் சீனாவின் வரலாற்றில் முக்கியமான காலம். ஜனநாயகப் போராட்டங்கள் அப்போதுதான் வலுப்பெற்றன. இன்றுள்ள புதிய தலைமுறையினர், ‘தாங்கள் எண்பதுகளிலிருந்து உருவானவர்கள்’ என்றே தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

பெய் தாவோவின் கவிதைகள், எதையும் நேரடியாகச் சொல்வதில்லை; மாறாகச் சிதறடிக்கப்பட்ட காட்சிகளை, தருணங்களை முன்வைக்கின்றன. அதிகாரத்தின் ஒடுக்குமுறையையும் சுதந்திரத்திற்கான ஏக்கத்தையும் பிரதானமாகப் பேசுகின்றன. அடையாளம் இழத்தலின் வலியைப் பேசுகின்றன.கடந்தகாலத்தின் நினைவுகளை வெறும் ஏக்கமாகக் கருதாமல், இழந்துபோன வாழ்க்கையின் அடையாளமாக மாற்றுகின்றன. நம்பிக்கை இழந்த தலைமுறையின் குரலையே அவரது கவிதைகளில் கேட்க முடிகிறது. ‘அதுவே தன் காலத்தின் யதார்த்தம்’ என்கிறார் பெய் தாவோ.

‘நாங்கள் இரண்டு அநாதைகள்
ஒரு வீட்டை உருவாக்கினோம்’
எனத் தொடங்கும் ஒரு கவிதையில்,
‘இந்த உலகம் சமாதானத்தை அறியாதது
பூமியின் இறக்கைகள் சிதறி விழுகின்றன
அநாதைகள் வானத்தில் பறக்கிறார்கள்’

என முடிக்கிறார் பெய் தாவோ.

‘இல்லாதவர்களுக்கு இந்த உலகம் எதையும் தராது’ என்ற குரலை இக்கவிதையில் நாம் அழுத்தமாகக் கேட்க முடிகிறது.

புத்தம் புதிய காட்சிப் படிமங்களை உருவாக்குவதே பெய் தாவோவின் கவிதைகளின் தனித்துவம். மாயக்காட்சிகளைப்போல அன்றாட நிகழ்வுகளை உருமாற்றிவிடுகிறார். மனவெளியிலிருந்து பிறக்கும் இப்படிமங்கள் உலகை முற்றிலும் புதியதாக அடையாளப்படுத்துகின்றன. ஆகவே, இவரது கவிதைகளை ‘உண்மையற்ற கற்பனைகள்’ என்கிறார்கள்.

மரபான சீன செவ்வியல் கவிதைகளில் இடம்பெறும் காட்சிப் படிமமான ‘டிராகன்’ என்பது பெருமைக்குரிய மனிதரைக் குறிக்கும். ‘இடியோசை’ என்பது அநீதியைக் குறிக்கக்கூடியது. இதுபோலவே ‘உதிரும் இலை’ என்பது நிலையாமையைக் குறிக்கக்கூடியது. நவீனக் கவிதைகளில் இந்தப் படிமங்கள் இதே அர்த்தத்தைத் தருவதில்லை. மாறாக, இவை புதிய அர்த்தம்கொள்கின்றன. இரவு அவரது கவிதைகளின் தொடர்ந்த புதிரான படிமமாக உருக்கொள்கிறது. இரவு என்பது விழிப்புஉணர்வின் அடையாளமாக மாறுகிறது. தனது கட்டுரை ஒன்றில் காஃப்கா, ‘இரவில் தான் விழித்திருந்து கதைகள் எழுதாவிட்டால், அவை பகலில் மறைந்து போய்விடும். தன்னால் அதைப் பின்தொடர முடியாது’ எனக் குறிப்பிட்டது நினைவிற்கு வருகிறது.

பள்ளி மாணவர்கள் பயிலுவதற்காக ஒரு கவிதைத் தொகுப்பு உருவாக்கித் தந்திருக்கிறார் பெய் தாவோ. அதற்குக் காரணம் அவரது மகன். ஆரம்பப் பள்ளி ஒன்றில் அவரது மகன் படித்த நாளில், மனப்பாடப் பாடல் ஒன்றைத் திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டிருந்திருக்கிறான்.அந்தப் பாடல், ‘நான் ஒரு சாக்பீஸாக இருந்தால் என்னை அழித்துக்கொள்வதில் சந்தோஷப்படுவேன்’ என்பதாகும். இந்தப் பாடலின் சந்தம் சீராக இல்லாத காரணத்தால் பையனால் பாடலை உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. இதை அறிந்த பெய் தாவோ, மாணவர்கள் மிகச் சிறந்த பாடல்களை, கவிதைகளைத் தங்கள் இளவயதில் பயில வேண்டும் என்று நினைத்து,  அவர்களுக்காக ஒரு கவிதைத் தொகுப்பினை உருவாக்க முனைந்தார்

இதற்காக உலகெங்குமுள்ள கவிஞர்களின் சிறந்த கவிதைகளிலிருந்து தேர்ந்தவற்றை மொழியாக்கம் செய்து, 101 கவிதைகள் கொண்ட ஒரு தொகுப்பினைக் கொண்டுவந்தார். அதில், 31 சீனக் கவிஞர்களும் 70 பிற தேசக் கவிஞர்களும் இடம்பெற்றிருந்தார்கள். இந்தத் தொகுப்பு மாணவர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, சிறார்களுக்காக இதுபோன்ற ஐந்து கவிதைத் தொகுப்புகளைக் கொண்டுவந்திருக்கிறார். இந்தத் தொகுப்பிற்கான முன்னுரையில், ‘பள்ளி வயதில் மாணவர்கள் அவசியம் கவிதைகளைக் கற்க வேண்டும். காரணம் கவிதைகள் என்பது வழிகாட்டும் பலகையைப் போன்றது. உலகைப் புரிந்துகொள்ளவும் உறவுகொள்ளவும் கவிதை கற்றுத்தருகிறது. உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவுகிறது; மாற்றங்களை எதிர்கொள்ள வழிகாட்டுகிறது’ என்று குறிப்பிடுகிறார்.

இன்றைய சீனக்கவிதை எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னை இணையதள உலகில் அதன் இடம் என்ன என்பதே. கவிதை நூல்கள் அதிகம் விற்பனையாவதில்லை. கவிதை குறித்த ஆழ்ந்த தேடுதலும் புரிதலும் பொதுவெளியில் இல்லை. ஆகவே, இணையம் கவிதையை உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருள்போல மாற்றியிருக்கிறது.

‘இணையத்தில் உருவாகிவரும் கவிதைகளில், கவிதையின் தரம் மற்றும் கவிதை எழுப்பும் எதிர்வினை முக்கியமானதாகக் கருதப்படவில்லை. வசீகரமான ஒரு பெண்ணின் புகைப்படம் பகிரப்படுவதுபோலவேதான் கவிதையும் பகிரப்படுகிறது. ஒன்று, அதை விரும்புகிறார்கள் அல்லது வெறுக்கிறார்கள் என்ற அடையாளத்தைத் தவிர வேறு எதையும் கவிதை அடைவதில்லை. சென்ற நூற்றாண்டுவரை, கவிதை குறித்து மரபான எண்ணங்கள் கவிஞர்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தன. ஆனால், நவீனக் கவிதை உருவாகத் தொடங்கியதும் கவிதை குறித்த எண்ணங்களும் வெளிப்பாட்டு முறைகளும் குழப்பமடையத் தொடங்கின.

‘எது கவிதை?’ என்ற கேள்விக்கு ஒற்றைப் பதில் இப்போது கிடையாது. ஆனால், ஒவ்வொரு கவிஞரும் கவிதை குறித்துத் தன்னளவில் தெளிவான புரிதலைப் பெற்றிருக்கிறார்கள்; அதை வெளிப்படுத்துகிறார்கள் என்பதே நவீனக் கவிதையின் சிறப்பு. கவிதையின் தரத்தை முடிவுசெய்யும் நடவடிக்கைகளுக்கு இணையத்தில் இடமில்லை. பொதுப் பேச்சினைப்போலவே கவிதையும் நேரடி அர்த்தம்கொண்டதாக மட்டுமே அணுகப்படுகிறது. கவிதையின் நிலைத்த தன்மை மற்றும் தனித்துவம் குறித்து இணைய உலகில் யாரும் கவலைப்படுவ தில்லை’ என்கிறார் மைக்கேல் வுட்.

இது சீனக்கவிதைகளுக்கு மட்டுமில்லை, தமிழ்க் கவிதைகளுக்கும் பொருந்தக்கூடியதே!

கவிதையின் கையசைப்பு - 6 - நவீன சீனக் கவிதையின் முகம்

தமிழில்: சமயவேல்

ஓர் உள்ளூர் உச்சரிப்பு

நான் சீன மொழியில் பேசுகிறேன் கண்ணாடியுடன்
ஒரு பூங்காவிடம் அதற்கே சொந்தமான குளிர்காலம் இருக்கிறது
நான் இசையைத் தொடங்குகிறேன்
குளிர்காலம் ஈக்களற்று இருக்கிறது
அவசரமின்றி நான் காபி தயாரிக்கிறேன்
சொந்த பூமி என்பதன் பொருளை ஈக்கள் புரிந்துகொள்வதில்லை
கொஞ்சம் சர்க்கரையை நான் சேர்க்கிறேன்
ஒரு சொந்த பூமி என்பது ஒரு வகையான உள்ளூர்ப் பேச்சுமுறை
எனக்குக் கேட்கிறது எனது திடீர் பயம்
தொலைபேசி இணைப்பின் மறுமுனையில்.

ஒரு படம் (டியான்டியானின் ஐந்தாவது பிறந்த நாளுக்காக)

காலை வருகிறது ஒரு கையில்லாத உடையில்
ஆப்பிள்கள் உருள்கின்றன பூமி முழுவதும்
எனது மகள் ஒரு படம் வரைகிறாள்
எவ்வளவு பரந்தது ஓர் ஐந்து வயது ஆகாயம்
உனது பெயரில் இரண்டு ஜன்னல்கள் இருக்கின்றன

ஒன்று திறக்கிறது கடிகார-முட்கள் இல்லாத ஒரு சூரியனை நோக்கி
மற்றது திறக்கிறது உனது அப்பாவை நோக்கி
அவர் ஒரு நாடு கடத்தப்பட்ட முள்ளம்பன்றியாக ஆகிவிட்டவர்
அவரோடு ஒருசில புரிந்துகொள்ள முடியாத கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டு
மேலும் ஒரு பிரகாசமான சிவப்பு ஆப்பிள்
அவர் உனது ஓவியத்தை விட்டுப் போய்விட்டார்
எவ்வளவு பரந்தது ஓர் ஐந்து வயது ஆகாயம்.

இரண்டு பக்கக் கண்ணாடி

கண்ணாடியில் நாம் பார்த்துவிட்டோம்
விஷயங்களை ஒரு தொலைதூரக் கடந்த காலத்திலிருந்து
நடுத்தண்டுகளின் ஒரு காடு, உயிர்த்திருக்கும் கால்கள்
தீவைக்கப்பட்ட படிப்பு மேஜைகளின்
மேலும் உலராத மைக்கறைகள் வானத்தில்
கண்ணாடியின் மறுபக்கத்திலிருந்து வருகிறது சப்தம்
எதிர்காலத்தின் மேல் நோக்கிய பாதை
ஒரு பிரமாண்டமான வழுக்கும் நிலச்சரிவு
பைத்தியம் போன்ற ஆனந்தத்தை அறிந்த பிறகு
ஒரு ஞானியின் நிலைப்பாட்டிலிருந்து
நாம் கண்ணாடியிலிருந்து பிறந்தவர்கள்
மேலும் இங்கே தங்கியிருக்கிறோம் என்றென்றும் கவனித்தவாறு
விஷயங்களை ஒரு தொலைதூரக் கடந்த காலத்திலிருந்து.

கவிதையின் கையசைப்பு - 6 - நவீன சீனக் கவிதையின் முகம்

கடிதம்

எங்கிருக்கிறாய் நீ
எங்கிருக்கிறது ரோஜாக்களின் நேர்மை
எங்கிருக்கிறது நெருப்பின் ஊடே செல்லும் சாலை
எங்கிருக்கிறது தனது வாக்குறுதியை மறந்த சிகரம்
எங்கிருக்கிறது பேரிக்காய்
அதன் உடல் ஒரு சிப்பியைப்போல மூடுகிறது
எங்கிருக்கிறது உலகம் அழிவதற்கு முந்தைய நாள் களியாட்டம்
எங்கிருக்கிறது கொடியின் வெற்றிகரமான விண்மீன்
எங்கிருக்கிறது அடர்ந்த மூடுபனியின் மையம்
எங்கிருக்கிறாய் நீ
எங்கிருக்கிறோம் நாம்

மொழிகள்

பல மொழிகள்
உலகைச் சுற்றிலும் பறக்கின்றன
அவை மோதும்போது தீப்பொறிகளை உண்டாக்குகின்றன
சில சமயங்களில் வெறுப்பால்
சில சமயங்களில் காதலால்
காரணத்தின் மாளிகை
ஒரு சப்தமும் இல்லாமல் நொறுங்குகிறது
எண்ணங்களால் பின்னப்பட்டக் கூடைகள்
மூங்கில் சிம்புகள்போல அவ்வளவு பலவீனமானவை
விஷக்காளான்களால் நிரம்பியிருக்கிறது

மலையுச்சி மேல் மிருகங்கள்
வேகமாக ஓடுகின்றன, மலர்களை நசுக்கியவாறு
ஒரு கொக்கிரவல்லிச் செடி வளர்கிறது ரகசியமாக
ஒரு குறிப்பிட்ட மூலையில்
அதன் விதைகளைக் காற்று தூக்கிச் செல்கிறது

பல மொழிகள்
பறக்கின்றன உலகைச் சுற்றிலும்
மொழிகளின் உற்பத்தி
கூட்டவோ குறைக்கவோ முடியாது
மனிதகுலம் மௌனமாகத் துயருறுவதை.

கவிதையின் கையசைப்பு - 6 - நவீன சீனக் கவிதையின் முகம்

ஒரு மலர்க்கொத்து

எனக்கும் உலகுக்கும் நடுவில்
நீ ஒரு விரிகுடா, ஒரு கப்பல்
ஒரு கயிற்றின் உண்மையுள்ள முனைகள்
நீ ஒரு நீரூற்று, ஒரு வீசும் காற்று
ஒரு கிரீச்சிடும் குழந்தைப்பருவ அழுகை

எனக்கும் உலகுக்கும் நடுவில்
நீ ஒரு படச்சட்டகம், ஒரு ஜன்னல்
காட்டுப்பூக்களால் மூடிய ஒரு வயல்
நீ ஒரு சுவாசம், ஒரு படுக்கை
நட்சத்திரங்களுடன் உறவாடும் ஓர் இரவு

எனக்கும் உலகுக்கும் நடுவில்
நீ ஒரு நாள்காட்டி, ஒரு திசைகாட்டி
மனச்சோர்வு வழியாக நழுவும் ஓர் ஒளிக்கீற்று
நீ ஒரு வாழ்க்கை வரலாற்றின் சுருக்கம்,
ஒரு புத்தக அடையாளம்
இறுதியில் வரும் ஒரு முன்னுரை

எனக்கும் உலகுக்கும் நடுவில்
நீ ஒரு மென்சல்லா திரைச்சீலை, ஒரு மூடுபனி
எனது கனவுகளுக்குள் மின்னும் ஒரு விளக்கு
நீ ஒரு மூங்கில் புல்லாங்குழல், சொற்களற்ற ஒரு பாடல்
கல்லில் செதுக்கப்பட்ட ஒரு மூடிய கண்ணிமை

எனக்கும் உலகுக்கும் நடுவில்
நீ ஒரு பூமிப்பிளவு, ஒரு நீச்சல்குளம்
ஒரு நரகம் பாதாளத்தில் வீழ்கிறது
நீ ஒரு மாடிப்படி கைப்பிடித் தூண், ஒரு சுவர்
ஒரு கேடயத்தின் நித்திய படிவம்.