Published:Updated:

அமிதாப் பச்சனுக்கு பெயர் சூட்டிய கவிஞர் சுமித்ராநந்தன் பன்ட் நினைவுதினப் பகிர்வு!

அமிதாப் பச்சனுக்கு பெயர் சூட்டிய கவிஞர் சுமித்ராநந்தன் பன்ட் நினைவுதினப் பகிர்வு!
அமிதாப் பச்சனுக்கு பெயர் சூட்டிய கவிஞர் சுமித்ராநந்தன் பன்ட் நினைவுதினப் பகிர்வு!

வாழ்க்கையைப் பற்றிய கேள்விகள், எல்லோருக்கும் எழுவதுண்டு. கேள்விக்கு பதிலைத் தேடுபவர்கள் படைப்பாளிகளாக உருவாகிறார்கள். பன்ட் படைப்பாளியாக உருவான பிறகு, கேள்விக்கான பதிலை நோக்கிப் பயணிக்கிறார்.

விஞர்கள், வாழ்வு குறித்தான கட்டற்ற சிந்தனையில் தங்களைத் தொலைப்பவர்கள். பிரபஞ்ச உயிர்களின் உன்னதத் தருணங்களை, பிறழ்ந்த நிலையை, துர்நிகழ்வை, பிரகாசமான துளிப் புன்னகையைத் தன் சொற்களில் கடத்த எத்தனிக்கும் பணி, கவிஞனுடையது. பல நேரத்தில் மக்களுக்கு எதிரான அரசின் நிலைப்பாடுகளுக்கும் கவிதைகள் எதிர்க்குரல் எழுப்பும். காந்தியையும் கார்ல் மார்க்ஸையும் தனது ஆதர்சமாக்கி, கவிதைகள் படைத்தவர் கவிஞர் சுமித்ராநந்தன் பன்ட். அவரது நினைவு தினம் இன்று.  

சுமித்ராநந்தன் பன்ட், இந்தியில் மிகப் பரவலாக அறியப்படும் கவிஞர். ஞானபீடம், சாகித்ய அகாடமி, பத்ம பூஷண், நேரு அமைதி விருது உட்பட பல முக்கிய விருதுகளைப் பெற்றவர். உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள கௌவ்சானியில் 1900, மே மாதம் 20-ம் தேதி பிறந்தார், பன்ட். கௌவ்சானி மலைநகரம்தான் அவரது கவிதைக்கான முதல் உத்வேகம். நிலத்திலிருந்து 1,890 மீ உயரத்தில் உள்ள கௌவ்சானியில்  பைன் மரங்கள் நிரம்பிக் கிடக்கும். பன்ட் கவிதைகளின் பிறப்பிடம் இதுதான். 

பிறந்த சில மணி நேரத்திலேயே தாய் இறந்துபோக, பாட்டியின் அரவணைப்பிலும், அவரது கதைகளிலும் நகர்ந்தது வாழ்க்கை. `கோசைன் தத்' என்பது இவரது இயற்பெயர். பின்னாளில் தன் பெயரை `சுமித்ராநந்தன் பன்ட்' என மாற்றி அமைத்துக்கொண்டார். ஏழு வயதிலேயே கவிதைகளுக்குள் நுழைந்தவர்.  

இவரது ஆரம்பகாலக் கவிதைகள் அழகியல் சார்ந்திருந்தன. அவற்றை `வீணா' என்ற தொகுப்பாக 18 வயதில் வெளியிட்டார். இளம்வயதிலேயே இலக்கிய ஆளுமைகள் மத்தியில் அறியப்பட்டார். ஆரம்பகாலக் கல்வியை, அல்மோரா மற்றும் காசியில் படித்தார். பிறகு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். விடுதலைப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலம் அது. காந்தியின் வருகையால் இளைஞர்களிடம் தேசப்பற்று அதிகமாகிக்கொண்டிருந்தது. காந்திஜி சத்தியாகிரகப் போராட்டத்துக்கு அழைக்க, படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு சுதந்திரப் போராட்டங்களில் தன்னை இணைத்துக்கொண்டார். அழகியல் சார்ந்து மட்டுமே எழுதிக்கொண்டிருந்த பன்ட், காந்தியின் கருத்துகளின் மீதான தாக்கத்தால் அகம் சார்ந்த கவிதைகளை எழுதினார். `சுக்-துக்' என்கிற கவிதையில், `I dont want eternal sadness, the game of happiness and sadness, opens the mouth of the life' என எழுதியிருப்பார்.

இரவீந்திரநாத் தாகூர், வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், ஷெல்லி உட்பட பல கவிஞர்களால் ஈர்க்கப்பட்டவர் பன்ட். உலகளாவிய இலக்கிய மனிதர்கள் மட்டுமல்லாது, கார்ல் மார்க்ஸ் போன்ற சமூகச் சிந்தனையாளர்களின் தாக்கமும் பன்ட்டிடம் காணப்பட்டது. `Human beings should not be divided on the basis of case and creed, Money should be earned by hard work and there shouln't be public labour exploitation' போன்ற வரிகள் இதற்குச் சான்று.

வாழ்க்கையைப் பற்றிய கேள்விகள், எல்லோருக்கும் எழுவதுண்டு. கேள்விக்கு பதிலைத் தேடுபவர்கள் படைப்பாளிகளாக உருவாகிறார்கள். பன்ட் படைப்பாளியாக உருவான பிறகு, கேள்விக்கான பதிலை நோக்கிப் பயணிக்கிறார். தென்னிந்தியாவை நோக்கி வருகிறார். அரவிந்தரைச் சந்திக்கிறார். ஆன்மிகம், தத்துவம் சார்ந்து தெளிவு பெறுகிறார். அதைப் பற்றி அதிகமாகச் சிந்திக்கத் தொடங்குகிறார். தன்னை அறிந்துகொள்வதன் வழியாக, தத்துவம் சார்ந்து கவிதையின் வேறொரு பரிணாமத்தை அடைகிறார். அவருடைய கவிதைகளை அழகியல், உளவியல், உலகியல் எனப் பிரிக்கலாம். கவிதை மட்டுமல்லாது, சிறுகதை, நாடகம், பாடல்கள் ஆகியவற்றையும் எழுதியுள்ளார். கவிதைகள் பேசப்பட்ட அளவுக்கு அவருடைய மற்ற படைப்புகள் பேசப்படவில்லை. அவர் காலத்தில் எழுதிய மற்ற கவிஞர்களுக்கு மத்தியில், அரசியல் சார்ந்து ஈடுபட்ட முக்கியமான கவிஞராகவும் பன்ட் உள்ளார்.  

கவிஞர் ஹர்வன்ஷ் ராய் பச்சன், இவரின் நெருங்கிய நண்பர். ஹர்வன்ஷுக்குக் குழந்தை பிறந்தபோது `அமிதாப்' என்று பெயரிட்டவர் இவர்தான். `அமிதாப் பச்சன்' என்று அறியப்படும் இந்தி சூப்பர் ஸ்டார் இவர்தான். சாயாவத் கவிதை பாணியின் மிக முக்கிய ஆளுமைகளுள் இவரும் ஒருவர்.

`கலா ஔர் புத்தா சன்ட்' என்ற புத்தகம் பிரபலமான ஒன்று. அதற்கு சாகித்ய அகாடமி விருதும் கிடைத்தது. 25-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். உத்ரகாண்ட் அரசு, இவரின் நினைவைப் போற்றும் வகையில் 2015-ம் ஆண்டு தபால்தலை வெளியிட்டு சிறப்பு செய்தது. இமயமலையின் எல்லையில், கௌவ்சானி மலை உச்சியில், சுமித்ராநந்தன் பன்டின் நினைவாக அவரது படைப்புகள் அடங்கிய அருங்காட்சியம் இன்றும் உள்ளது. அழகின் எல்லையின்மையையும், வாழ்க்கை சார்ந்த கேள்விகளையும் முன்வைக்கும்போது தவிர்க்க முடியாத கவிஞராக, காலத்தின் எல்லையில் படர்ந்து நிற்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு