பிரீமியம் ஸ்டோரி

ரவேற்பறையில் பியானோவின் இசை ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இப்போதெல்லாம் பியானோ இசையை திவ்யா அதிகம் கேட்கிறாள். சமைக்கும்போது, நகம்  வெட்டும்போது, புத்தகம் வாசிக்கும்போது, குளிக்கும்போது, உடை மாற்றும்போது, உறங்கும்போது, எனக்காகக் காத்திருக்கும்போது என, எப்போதும் அவள் பியானோவின் இசையைக் கேட்டபடிதான் இருக்கிறாள். அவளுக்கு இப்படியொரு பழக்கத்தை யார் பழக்கிவிட்டார்கள் எனத் தெரியவில்லை. பியோனோ இசை குறித்து எனக்கு எந்த ஞானமும்  இல்லை. பாடல்களில் கேட்டிருக்கிறேன். இப்படித் தனித்து ஒலித்து, அதிகம் கேட்டதில்லை. கேட்கக் கேட்க, வேண்டாமென்று தூக்கி வீசப்பட்ட ஒரு குழந்தையின் நெடுநேர அழுகைபோலிருக்கிறது இந்த பியானோ இசை.

பேய் - சிறுகதை

``நீ ஏன் எப்பவும் பியானோ இசையைக் கேட்டுக்கிட்டே இருக்கிற?’’

``பிடிச்சிருக்கு. ஏன் கேட்கிற?’’

``இல்ல, சும்மா கேட்டேன். எல்லா வேலையையும் பியானோ இசை கேட்டுக்கிட்டுதான் செய்வியா என்ன…  பியானோ இசை கேட்காம இப்பல்லாம் எதுவும் நீ செய்றதில்லபோல!’’

``பியானோ இசை கேட்காமன்னா…  உன்கிட்ட விளையாட முடியும். ஆனா, அப்பவும் என் மண்டைக்குள்ள பியானோ இசை கேட்டுக்கிட்டுதான் இருக்கும். அது நல்லாயிருக்கும்.’’

``ம்ம்ம்... ஆனா, இப்பெல்லாம் நீ அதிகமா பியானோ இசை கேட்கிற மாதிரி எனக்குத் தோணுது. உனக்கு அப்படி எதுவும் தோணுதா?’’

``ஆமா… இப்பெல்லாம் நான் பியானோ இசைதான் அதிக நேரம் கேட்கிறேன். ஏன்னா, முன்னாடி எனக்கு முகத்துல பரு அதிகமா இருக்கும்ல... இப்ப பாரு எவ்வளவு கம்மியாயிடுச்சுன்னு. எல்லாம் பியானோ இசை கேட்டுதான்.’’

``என்னது... பியானோ இசை கேட்டா, முகப்பரு கம்மியாகுமா! இது என்னடி புதுக்கதையா இருக்கு.’’

``ஆமாம் கம்மியாகும். என் பியூட்டியின் ரகசியம் பியானோ இசைதான், போதுமா! அப்படித்தான் நானும் நம்புறேன். நீயும் வேணும்னா கேளு, அதுவும் குளிக்கும்போது கேளு... கொஞ்ச நாள்ல எப்படி ஆகுறேனு பாரு.’’

``எப்படி ஆவேன்?’’

``அந்த பியானோ இசை மாதிரியே ஆகிடுவே. அப்படியே பளபளனு ஆகிடுவே!’’

``சரி சரி… கேட்கிறேன். ஆனா, இப்போ நாம இங்க பெட்ரூம்ல இருக்கோம். அங்க பியானோ இசை ஒலிச்சுக்கிட்டிருக்கிறது ஒருமாதிரியா இருக்குல?’’

``ஏன்... என்ன ஒரு மாதிரியா இருக்கு?’’

“நம்ம வீட்டுக்குள்ள நம்மளத் தவிர மூணாவது ஆள் இருக்கிற மாதிரி தோணுது. உனக்கு அப்படி எதுவும் தோணலையா?’’

``எனக்கு அப்படியெல்லாம் தோணலை. நம்ம வீட்டுக்குள்ள நமக்குத் தெரியாம ஒரு பியானோ இருக்கிற மாதிரிதான் தோணுது. அதுவாவே அதை வாசிச்சிக்குதுனு தோணுது.’’

``ம்கூம், ஆமா ஆமா... போய் நல்லாப் பாரு... ஏதாவது பேய் கீய் வந்து ஆற அமர உட்கார்ந்து உனக்காக வாசிச்சுக்கிட்டு இருக்கப்போவுது.

``பேயா... போடா லூஸு! அப்படில்லாம் பயம்காட்டாத, அப்புறம் நீ இல்லாதப்போ எனக்கு ஒரு மாதிரி தோண ஆரம்பிச்சுடும்.’’

``சும்மா... சும்மா சொன்னேன் லூஸு. பேயாவது நம்ம வீட்டுக்குள்ளே வர்றதாவது. பேய்களை தூர நின்னே பொசுக்கும் தூய ஒளிகூடியவை உன் கண்கள்.’’

``அட, அடிப்பொலி மாமா! இந்த மாதிரி அப்பப்போ பேசு. பியோனோவின் இசையையும் மிஞ்சக்கூடியவை உன் வரிகள். சரி மாமா, சீரியஸா கேட்கிறேன்... பேய், பிசாசு எல்லாம் இருக்கா என்ன?’’

``இருக்கு. இல்லாமலா அந்த வார்த்தையைக் கேட்டவுடனே உன் மூக்கு இப்படி விடைக்குது?’’

``…நிஜமா சொல்லு, நீ எப்பயாவது பேயைப் பார்த்திருக்கியா?’’

``பேயை, பேய்தான்னு தெரிஞ்சு பார்த்ததில்லை. ஆனா, பேய்னு தெரியாம நிறைய பேய்களைப் பார்த்திருக்கேன், பேசியிருக்கேன். அவ்வளவு ஏன், நானேகூட சில நாள் பேயா வாழ்ந்திருக்கேன்.’’

``என்னடா சொல்ற, பேயா இருந்திருக்கியா... எப்போ, எதுக்கு?’’

``போ, பியானோவின் சத்தத்தை இன்னும் கொஞ்சம் குறைச்சுட்டு வா, சொல்றேன்.’’

திவ்யா போய் பியோனோவின் சத்தத்தைக் குறைத்துவிட்டு வந்தாள். இப்போது வரவேற்பறையில் அந்த பியானோ தனக்குத்தானே இசைக்கத் தொடங்கியிருந்தது.

``உனக்கு எங்க பெரியப்பா பையன் முத்துக்குமாரைத் தெரியுமா?’’

``யாரு, தூத்துக்குடியில போலீஸ்காரரா இருக்காரே... அந்த முத்துக்குமாரா? இப்போகூட `சொந்த அத்தைப்பொண்ணை, யாருக்கும் தெரியாமப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டார்’னு சொன்னியே அவரா?’’

``ஆமா, அவன்தான். அப்பெல்லாம் ஊர்ல நானும் அவனும்தான் நிறைய நாள் ஏன் எதுக்குன்னே தெரியாம ஒட்டிக்கிட்டே அலைவோம். அவனுக்கு, காதல்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா, காதலிக்கத் தெரியாது. எனக்கு காதல்னா அவ்வளவா பிடிக்காது. ஆனா, நல்லா காதலிக்கத் தெரியும்.’’

``என்னது... உனக்கு காதல்னா பிடிக்காதா?’’

``ஏய் லூஸு... நான் அப்போ சொல்றேன். எது காதல்னு தெரியாம அலைஞ்சதைச் சொல்றேன்.’’

``அதுக்குன்னு அப்படிச் சொல்வியா நீ?’’

``இப்போ உனக்கு, கதை வேணுமா... வேணாமா?’’

``வேணும்.’’

``அப்போ கதையை மட்டும் கேளு. பேய் வரும்போது மட்டும் என்னைக் கட்டிப்பிடிச்சுக்கோ, சரியா?’’

``ம்ம்... சரி சொல்லு!’’

``அதனாலயோ என்னமோ எங்க ரெண்டு பேருக்கும் பேசுறதுக்கு நிறைய விஷயம் இருந்துக்கிட்டே இருக்கும். அவனுக்குப் பிடிச்ச ஒரு பொண்ணைப் பத்தி என்கிட்ட பேசாம அவனால இருக்கவே முடியாது. நான் பழகிய பொண்ணைப் பத்தி என்னாலயும் அவன்கிட்ட சொல்லாம இருக்கவே முடியாது. பள்ளிக்கூடம் போகும்போது, குளிக்கப் போகும்போது, விளையாடப் போகும்போது, மீன்பிடிக்கப் போகும்போது, வாழைக்காய் சுமக்கப் போகும்போது, தோட்டத்துக்குப் போகும்போது, இந்த மாதிரி எப்பவும் எங்கேயாவது போனா அவனுக்கு நான் வேணும்... எனக்கு அவன் வேணும். அது மொட்டப் பகலா இருந்தாலும் சரி, நடுராத்திரியா இருந்தாலும் சரி.’’

``ஓ… அப்போ கதையில ரெண்டு பேய் இருக்கா?’’

``ஒழுங்கா கதையக் கேட்கிறியா, இல்ல...’’

``சரிம்மாமாவோவ், கோபப்படாத என் தங்கம்... சொல்லு சொல்லுமா... இனி எதுவும் பேச மாட்டேன், சரியா!’’

``ஒரு நாள், ரோட்டடி வாழைக்குத் தண்ணீர் பாய்ச்சப் போகணும்னு சொல்லி, சாயங்காலம் ஆறு மணிக்கு வந்து முத்து என்னைக் கூப்பிட்டான். அவன்கூடப் போனா, அது ராத்திரி மாதிரியே தெரியாது. அதனால உடனே கிளம்பிப் போயிட்டேன். ரோட்டடி வயல்னு சொன்னேன்ல, நல்லா ஞாபகம்வெச்சுக்கோ. கரெக்டா சுடுகாட்டுக்குப் பக்கத்துல இருக்கிற வயல் அது. நாங்க போறதுக்கு முன்னாடியே தண்ணீர் கொஞ்சம் பாய ஆரம்பிச்சிடுச்சு. எங்களோட வேலை, தண்ணீர் பாயுற வாய்க்காலைச் சுத்தப்படுத்தி, அகலப்படுத்தி, அதைச் சீக்கிரமா பாயவெக்கணும். அப்புறம், பாயுற வரைக்கும் பக்கத்துலேயே இருந்து வாய்க்கா தண்ணியை யாரும் திருப்பிப் பக்கத்துத் தோட்டத்துக்குக் கொண்டு போகாத மாதிரி காவல் காக்கணும், அவ்வளவுதான். நாங்க நிறைய ராத்திரி நின்னு செஞ்ச வேலைதான். அதனால வேக வேகமா வேலையை ஆரம்பிச்சிட்டோம். அவன்தான் எல்லா வேலையையும் ஒரே ஆளா செய்வான். நான் எப்பவும்போல வரப்புல உட்கார்ந்து வாயடிச்சுக்கிட்டு இருப்பேன். அன்னிக்கு, செல்வலட்சுமிக்கு நான் கண்ணாடி போட்டுவிட்ட கதையை ரசிச்சு ருசிச்சுச் சொல்லிக்கிட்டு இருந்தேன்.’’

``எந்த செல்வலெட்சுமி?’’

``எல்லாம் உனக்குத் தெரியும். டெய்லி சொல்ல முடியாது... அப்புறம், இந்தக் கதைக்கும் அவளுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவ இந்நேரம் யார்கூட இருந்து பியானோ இசை கேட்கிறாளோ என்னமோ!’’

``போதும்... நீ கதையச் சொல்லு!’’

``ம்ம்... சொல்லிக்கிட்டு இருந்தேனா, அப்போதான் பக்கத்து வயல்காரர் செல்லதுரை தாத்தா அங்க வந்தாரு. எங்க ரெண்டு பேர் முகமும் உனக்கு கதை கேட்கும்போது அப்படியே அஷ்டகோணலா தெரியுதில்ல?’’

``ஆமா…’’

``அப்படின்னா உனக்கு செல்லதுரை தாத்தா முகமும் தெரியணும். நல்லா கேட்டுக்கோ, அவர் எப்படி இருப்பார்னா... நீ `சேரன் பாண்டியன்’ படம் பார்த்திருக்கேல்ல. அதுல நாகேஷ் எப்படி இருப்பார்? அப்படியே அச்சு அசலா அதே ஒல்லியான வளைஞ்சு நெளியுற உடம்பு, மூக்கு, அங்க இங்க வீங்கி முடி நல்லா நரைச்ச தலை. ஆனா என்ன... கலர் மட்டும் அவர் நாகேஷ் கலர் கிடையாது. அப்படியே என் கலர்!’’

``உன் கலரா… அது என்ன கலர் மாமா?’’

``ம்ம்... உன் கண் மை கலர், போதுமா!’’

``ம்ம்... சூப்பர்! லவ்யூ மாமா. உம்மா, ம்ம்... கதையைச் சொல்லு. இனி நிச்சயமா தொந்தரவு பண்ண மாட்டேன்.’’

``இப்போ அவர் முகம் உனக்குத் தெரியும்னு நினைக்கிறேன். தோள்ல மண்வெட்டியோட அவரும் அவர் வயலுக்கு தண்ணி பாய்ச்சத்தான் வந்திருந்தார். எங்க வயல்ல தண்ணி பாய்ஞ்சதுக்கு அப்புறம்தான் அவர் வயல்ல பாயணும். அதுதான் ஊர் கட்டு. இப்போ கதைக்குப் போலாமா?”

“என்னடே, கரெக்டா வந்தீட்டியளா! இன்னும் நல்லா அகலமா வெட்டிவிடுல, சீக்கிரம் பாயட்டும். மேலே குளத்துல வேற தண்ணி ரொம்பக் கம்மியா கெடக்காம். கீழக் கடைசி வயல்வரைக்கும் பாயுமான்னே தெரியல. என்ன ஆகப்போகுதோ!’’ 

பேய் - சிறுகதை

அவர் வயலுக்குப் பாயுறதுக்கு முன்னாடியே குளத்துல தண்ணீரை அடைச்சிடுவாங்களோன்னு பயம் அவருக்கு இருந்துச்சு. இது, கீழ இருக்கிற வயல்காரர் எல்லாருக்கும் இருக்கும். அதனால பல ராத்திரி தூங்காம வயக்காட்டுக்குள்ளேயே எலி மாதிரி கிடப்பாங்க. கிட்டத்தட்ட அவரும் எலி மாதிரிதான் மாறியிருந்தார்.

``ம்ம்... இப்போ நல்லா சல்லுன்னு பாயுதுல்லா… கண்டிப்பா விடியக்காலைக்குள்ளயே பாஞ்சிடும்னு நினைக்கேன். என்ன..?’’

``ஆமா தாத்தா… அதுக்கு அப்புறம் நீங்க வாய்க்கால் அடைப்பை உடைச்சு உங்களுக்குப் பாய்ச்சிக்கோங்க, சரியா!’’

``ம்ம்... சரி. அப்போ நான் கெளம்புறேன். போயிட்டு காலையில வாரேன். நீங்க இங்கேயேவா இருக்கப்போறீயடே?’’

``ஆமா தாத்தா, பாயுறவரைக்கும் இருக்கணும்லா. நடுராத்திரி அடைப்பு தன்னால உடைஞ்சிடுச்சுன்னா?’’

``அது எப்படிடே உடையும்? அதெல்லாம் உடையாது. இந்த அடைப்புக்காக இளவட்டப் பயலுவ அர்த்த ராத்திரி இங்க கெடப்பியலோ. பேசாம எல்லாரும் வீட்டுக்குப் போயிட்டு காலையில வரும்வம்டே, என்ன?’’

``வீட்ல போய் என்ன தாத்தா பண்ணப்போறோம்? தூங்கத்தானபோறோம். அதையே இங்க வரப்புல ஜம்முன்னு நிலாவைப் பார்த்துக்கிட்டே வாழைக்கு நடுவுல தூங்கவேண்டியதான்.’’

``இங்கேயே வேணாம்டே... இது கார்த்திகை மாசம் சின்னப்பயலுவ நீங்க, விளையாடாதீங்க!’’

``கார்த்திகை மாசம்னா என்ன ஆவும்?’’

``என்ன ஆவுமா… பொருத்திவெச்ச விளக்கை யெல்லாம் எடுத்துக்கிட்டு எல்லாச் சாமியும் கோயிலுக்குள்ள போய் கதவை அடைச்சிக்கும். அப்புறம் வெளிய யாரு அலைவா... பன்னியும் முனியும்தான அலையும்.’’

``முனியா?’’

முத்துவும் அவரும்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் வரப்பில் படுத்துக்கிடந்தேன். `முனி’ என்ற வார்த்தையைக் கேட்டதும்தான் எழுந்து உட்கார்ந்தேன்.’’

``ஏன் தாத்தா, எத்தனை நாள் ராத்திரி இந்த வாழைக்காட்டுக்குள்ள விடிய விடிய கெடந்திருக்கோம். எந்த முனி வந்து எங்களை என்ன செஞ்சுச்சு?’’

``எப்பா, எல்லா நாளும் ஒரே மாதிரியா இருக்கும்? தினமும்தான் பஸ்ல போறோம். ஆக்ஸிடென்ட்டா நடக்குது? ஆனா, என்னிக்கோ ஒருநாள் நடந்திருதுல, அதுமாதிரிதான். நாம கொஞ்சம் பார்த்து பதனமா இருந்தா நல்லதுதானே.’’

``பக்கத்துல சுடுகாடு இருக்குன்னு சொல்றீயா தாத்தா?’’ என்றான் முத்து.

``அட லூஸுப் பயலுவலா. என்னிக்கு சுடுகாட்ல பேய் இருந்திருக்கு? அங்க வெறும் எலும்புக்கூடுதான் இருக்கும். முனியும் பேயும் காத்துலலா இருக்கும். அதுவும் காத்து குளிர்ந்து இருக்கிற இடத்துலதான் அது மிதக்கும்.’’

``நீ பார்த்திருக்கியா என்ன?’’ - நான் கேட்டேன்.

``பார்த்தா, கண்ணுக்குத் தெரியுமா என்ன? கழுத்தை நெரிச்சாக்கூட கண்ணுக்குத் தெரியாது. வாய்ல வழியிற ரத்தத்துலதான் அது தெரியும்.’’

``இன்னிக்கு காத்து குளிருதா என்ன?’’ - இது, சத்தியமா முத்துதான் கேட்டான்.

``ஏன் உங்களுக்கு குளிரலயா என்ன? அங்க பாரு, அடிக்கிற குளிருல வாழையெல்லாம் எப்படி நடுங்குது பாரு. பாயுற தண்ணி வேற இங்க இருக்கிற காத்த இன்னும் குளிரவெச்சிரும்னு நினைக்கேன். பேசாம, வாங்கடே வீட்டுக்குப் போயிட்டு காலையில வரலாம். இதுக்கு அப்புறம் இங்க எவன் வரப்போறான்?’’

என்ன நினைத்தானோ தெரியவில்லை. மண்வெட்டியைக் கழுவி தோளில் போட்டுக்கொண்டு கிளம்பத் தயாராகிவிட்டான் முத்து. அவனே கிளம்பலாம்னு முடிவு எடுத்த பிறகு, எனக்கு எப்படி அங்க இருக்கணும்னு தோணும்? தாத்தா சொன்ன மாதிரி நிஜமாவே காத்து குளிர்றது என் கண்ணுக்குத் தெரிய ஆரம்பிச்சிட்டு.

``காத்து குளிர்றது, நிஜமாவே உன் கண்ணுக்குத் தெரிஞ்சிச்சா மாமா?’’

``தெரிஞ்ச மாதிரி இருந்துச்சின்னு சொல்லலாம். செல்லதுரை தாத்தா வெச்சிருந்த ஒரே பேட்டரி லைட் வெளிச்சத்துல கரெக்டா தடத்தைப் பிடிச்சு எந்த வாழையிலயும் போய் முட்டிக்காம, சரியா பத்து மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டோம். ஊருக்குள்ள அடிச்சிக்கிட்டிருந்த காத்து ஒண்ணும் அவ்வளவு குளிர்ந்த மாதிரி தெரியலை. அதனால எல்லாத்தையும் மறந்துட்டு, வீட்டுக்குப் போயிட்டோம்.

பனிரண்டு மணி தாண்டியிருக்கும்னு நினைக்கிறேன். நான் அப்போதான் தூங்கப் போகலாம்னு திண்ணையில இருந்து வீட்டுக்குள்ளே போனேன். அதுக்குள்ள முத்து வந்து கூப்பிட்டுட்டான்.’’

``ஏலேய்... என்ன, தூக்கம் வந்துடுச்சா?”

``ஆமா, நீ என்ன இப்போ இங்க வந்திருக்க... என்ன ஆச்சு?”

``ஒண்ணுமில்ல, நம்மள அங்க நிக்கவுடாம செல்லதுரை தாத்தா கூட்டிட்டு வந்துட்டாம்லா. அதான் கொஞ்சம் சந்தேகமாவே இருக்கு.”

``என்ன சந்தேகம் உனக்கு?”

``இல்ல... பேய் அது இதுன்னு சொல்லி நம்மள கூட்டிட்டு வந்து வீட்ல விட்டுட்டு, அவரு மறுபடியும் போய் அடைப்பை உடைச்சி அவர் வயலுக்கு தண்ணி பாய்ச்சலாம்னு நினைச்சிருப்பாரோனு தோணுது, அதான்.”

``ச்சீ! என்னல நீ இப்படி யோசிக்கிற… அந்தத் தாத்தா பேசினதைப் பார்த்தா எனக்கு ஒண்ணும் அப்படித் தெரியல. நம்மளவிட குளிர்ந்த காத்து எங்க அடிச்சிடுமோன்னு அவர்தான் ரொம்ப பயந்தாரு. அவரு எப்படிடா... அங்க அதுவும் இந்த நேரத்துல போவாரு?”

``இல்லல இந்தக் கெழடுகள நம்பவே முடியாது. நீ வாயேன், கொஞ்சம் போய்ப் பார்த்துட்டு வருவோம். அவர் இல்லைன்னா என்ன, நாம நம்ம அடப்பைப் பார்த்துட்டு வந்துருவோம், என்ன?”

பேய் - சிறுகதைமுத்து எந்த நேரத்துல எங்க கூப்பிட்டாலும் என்னால போகாம இருக்க முடியாதுன்னு சொல்லிருக்கேன்லா, அதான் நானும் கெளம்பிட்டேன். எங்ககிட்ட பேட்டரி லைட் எல்லாம் இல்லை. இளவட்டப் பயலுவதான, நிலா வெளிச்சத்துல வாழையைத் தடவித் தடவிப் போனோம். எனக்கென்னவோ காத்துல குளிர் கூடிக்கிட்டே வர்ற மாதிரி தோணிக்கிட்டேயிருந்தது. முத்து நினைச்சது தப்பில்ல. தூரத்துல போய்க்கிட்டு இருக்கும்போதே யாரோ வயல்ல அடைப்பை உடைக்கிற சத்தம் எங்களுக்குக் கேட்க ஆரம்பிச்சிடுச்சி.

முத்து மெதுவா சொன்னான், ``ஏலேய் நான் சொன்னேன்லா, கெழவனுங்கள நம்பவே முடியாதுன்னு. இப்போ பார்த்தியா, பார்ட்டி எந்த நேரத்துல, எங்க வந்து... என்ன வேலைபார்க்குதுன்னு.”

``இப்போ என்னல பண்ணலாம்?”

``ஏதாவது பண்ணணுமே… ம்ம்ம்... நம்மள பேய் அது இதுன்னுதான பயம்காட்டி போகவெச்சார். அதே பேய வரவெச்சுதான் இவரை ஓடவிடணும்.”

``பேய வரவைக்கிறமா... எப்படி?”

``நீயும் நானும்தான் இப்போ பேய்.”

``என்னல சொல்ற?”

``இங்க பாரு... நீ அந்தப் பக்கமா போ, நான் இந்தப் பக்கமா போறேன். அவரை ரெண்டு பேருக்கும் நடுவுல வெச்சுக்கிடலாம். திடீர்னு நான் ஓடினா, நீ நின்னுக்கிட்டே அழு. நான் நின்னுட்டா நீ ஓடிக்கிட்டே சிரி. நான் கத்துனா நீ ஊளையிடு. நான் ஊளையிட்டா நீ கத்து. காட்டுக்கத்துக் கத்தணும். நான் போடுற ஆட்டத்துல இனி அந்தக் கெழவன் வம்பட்டியைத் தூக்கிக்கிட்டு வாழைத் தோட்டத்துக்குள்ளேயே வரக் கூடாது, சரியா!”

எனக்கு இந்த விளையாட்டு பிடிச்சிருந்தது. அவன் ஊர்ந்து சத்தமில்லாம இருட்டோடு இருட்டா அந்தப் பக்கம் போனான். நானும் என்னை இருட்டாக மாற்றிக்கொண்டு முத்து சொன்ன திசைக்குள்ளே போனேன். முதல்ல முத்துதான் ஒரு நரியைப்போல ஊளையிட்டான். அப்படியொரு சத்தத்தைக் கேட்டதும் பதறிய கிழவர், முத்து மீது பேட்டரி லைட் வெளிச்சத்தைப் பாய்ச்ச முயல, அதுக்குள்ள அடிபட்ட நாயைப்போல நான் அழ ஆரம்பிச்சேன்.

``நாய் அழுமா மாமா?’’

``நாய்கள் நடுராத்தியில அழும். அந்த அழுகையைக் கேட்ட மனுஷனால தூங்கவே முடியாது. அதுவும் கண்ணுக்குத் தெரியாத ஒரு நாயின் அழுகை, ஒரு மனுஷனைத் தற்கொலைக்கே தூண்டக்கூடியது. நான் கிழவருக்கு, கண்ணுக்குத் தெரியாத நாய். என் அழுகையைக் கேட்டதும் என் பக்கம் வெளிச்சத்தைத் திருப்ப, முத்து வாழைக்குள் ஓடிக்கிட்டே சிரிக்கத் தொடங்கிட்டான்.’’

``ஏய்... ஏய்... ஏய் யாரு... யாரது? என்ன... என்ன யார்கிட்ட விளையாடுறீங்க? ஏய்... யாரது?”

கிழவருக்கு பயம் வந்துவிட்டதுனு அவர் போட்ட கூச்சலிலேயே எங்களுக்குத் தெரிஞ்சுடுச்சு. முத்து, தண்ணிக்குள்ளே இறங்கி ஆட்டம்போட, நான் வாழைக்குள் அங்குமிங்குமாக அலறியபடி ஓட, கிழவர் என்ன செய்றதுன்னு தெரியாம வாழைக்குள் இருந்து ஒரே தாவலில் மேட்டுக்கு ஓடினார். அங்க நின்னுக்கிட்டு பேய்களிடம் பேசத் தொடங்கினார்.

``என்ன என்ன... குளிர் அப்படிக் கூடுதோ உங்களுக்கு! யார்கிட்ட வந்து ஆட்டம் போடுதியே. நான் யார் தெரியுமா, சந்தனமாரிக்குப் பூசை போடுறவன். நாக்கைத் துருத்திக்கிட்டு அவ இப்போ இறங்கி எனக்குள்ள வந்தான்னா, உங்க கதி என்ன ஆகும் தெரியுமா? ம்ம்ம்ம்ம் ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ஏய்ய்ய் சந்தனமாரி, அவ காத்தயே நின்னு எரிப்பா! யார்கிட்ட, ஓடிப்போயிடுங்க... போங்க ம்ம்ம்ம்ம்!”

அவர் அப்படிக் கத்தக் கத்த, எங்களுக்கு அடிச்ச காத்துல குளிர் கூடிக்கிட்டே போக ஆரம்பிச்சிடுச்சு. `இவரை இன்னிக்கு விடக் கூடாது. அவரோட சந்தனமாரியா... நாமளான்னு பார்த்திடணும்’னு எங்களுக்குத் தோணுச்சு. ரெண்டு பேரும் ரெண்டு திசையில இருந்து ஆயிரம் ஆந்தை அலறிக்கிட்டு பறந்த மாதிரி ஓட ஆரம்பிச்சதும்தான், செல்லதுரை தாத்தா பொத்துன்னு மேட்ல இருந்து விழுந்து `ஐயோ... அம்மா...’னு அலறிக்கிட்டு ஊரைப் பார்த்து ஓட ஆரம்பிச்சார். நாங்களும் விடல… அழுதுக்கிட்டே விரட்டினோம், சிரிச்சுக்கிட்டே துரத்தினோம், ஊளை யிட்டுக்கிட்டே ஓடினோம். பாவி மனுஷன் அங்க முட்டி இங்க முட்டி, பள்ளம் எது மேடு எதுன்னு தெரியாம ஒரே பாய்ச்சல்ல பாஞ்சி உசுரக் கையில புடிச்சுக்கிட்டு ஊருக்குள்ள ஓடிட்டாரு. அவரு நடு ஊருக்குள்ள போனதுக்கு அப்புறமும் அவரோட அலறல் சத்தம் ஊருக்கு வெளிய இருந்த எங்களுக்குக் கேட்டுச்சுன்னா பார்த்துக்கோ, அவரு எவ்வளவு பயந்து என்ன ஆகிருப்பாருன்னு.’’

```சே, பாவம் மாமா. வயசானவரைப்போய்... என்ன மாமா நீ, இப்படி இருந்திருக்க!’’

``இருடி, முழுக்கதையையும் கேளு.’’

``ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா. நடிகர் நாகேஷ் ஓடின மாதிரி கதையைக் கற்பனை பண்ண எனக்கே இப்படி இருக்குன்னா, நிஜமாவே அவருக்கு எப்படி இருந்திருக்கும்... போ மாமா.”

``உனக்கு முழுக் கதையும் வேணுமா... வேணாமா?”

``சொல்லு, இனி என்ன, எதையாவது சொல்லி உங்கள நியாயப்படுத்தப்போறீங்க அதான… சொல்லித்தொல.”

வர் அப்படி அலறிக்கிட்டு அடிச்சிப்புரண்டு ஓடினதைப் பார்த்து நாங்களே ஒரு நிமிஷம் பயந்துபோயிட்டோம். எங்க ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் நிஜமான பேயாவே மாறிட்ட மாதிரி தோணுச்சு. கைகாலை வாய்க்கால்ல கழுவிட்டு, பேசாம வீட்டுக்கு வந்து யாருக்கும் தெரியாமப் படுத்துக்கிட்டோம்.

காலையில எந்திரிச்சுப் பார்த்தா, ஊரே அல்லோலகல்லோலப்பட்டு கெடக்கு. `செல்லதுரைய, முனி அடிச்சிட்டாம்’னு ஊர் முழுக்கப் பேச்சு. நினைச்ச மாதிரியே முத்து என்னையப் பார்க்க வந்துட்டான். மெதுவா காதுக்குள்ளே வந்து பேசினான்.

``ஏலேய்... நாம நினைச்சதைவிட பேய் பயங்கரமா வேலையைக் காட்டிடுச்சு. கெழவன், கட்டில்ல படுத்த படுக்கையா கெடக்காராம். ஊரே பயந்துபோய் பார்த்துட்டு வருது. இதுக்கு அப்புறம் நாமதான் விளையாண்டோம்னு தெரிஞ்சுச்சு, அவ்வளவுதான். நம்ம வீட்லயே நம்ம தோலை உரிச்சிடுவாவ. அதனால சொல்றேன், லீலா பல்ல காட்டிக் கேட்டா... ராஜி மூக்க பார்த்துக் கேட்டா, சந்துக்குள்ள வெச்சு சபீதா கேட்டான்னு எவகிட்டயாவது வாயத் தொறந்த... அப்புறம் நான்தான் உனக்கு பேய். நிஜமான பேய் பார்த்துக்கோ!’’

இப்படிச் சொன்னதோடு மட்டுமில்லாம, அம்மா மீது சத்திய மெல்லாம் வாங்கிக்கிட்டுதான் முத்து கிளம்பிப் போனான். அவன் போன பிறகு ராத்திரி நடந்ததை, நினைத்ததை கொஞ்சம் நினைத்துப் பார்த்தேன். உடனே போய் செல்லதுரை தாத்தாவைப் பார்த்தே ஆகவேண்டும்போலிருந்துச்சு.

அப்பா, ஒரு சாமி கொண்டாடி. அவ்வப்போது பேயும் ஓட்டுவார். பூஜைகள் செய்வார். அதனால அப்பா, கிழவரைப் பார்க்கக் கிளம்பிக்கொண்டிருந்தார். அவரோடே கிளம்பிட்டேன்.

எப்படிச் சொல்வது அதை? பெரிய லாரியில் அடிபட்டு, நடுச்சாலையில் நஞ்சிபோய்க் கிடக்கும் செத்த நாயைப்போல சணல் சாக்குகள் விரிக்கப்பட்ட ஒரு கயிற்றுக்கட்டிலில் கிடந்தார் செல்லதுரை தாத்தா. பக்கத்துல போய்ப் பார்க்க, சிலருக்கு பயம்போல. தூரமாவே நின்றபடி வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தாங்க. அப்பாகூட கையில் வேப்பிலையோடுதான் பக்கத்துல போனார். என் கையிலயும் ஒரு கொத்து வேப்பிலையை வலுக்கட்டாயமா திணிச்சார். 

பேய் - சிறுகதை

உடம்புல அங்கங்க கொஞ்சம் காயமும் கீறலும் இருப்பது தெரிஞ்சது. பக்கத்துல போனவுடனே அப்பாவை அடையாளம் கண்டுக்கிட்டு, மெதுவாப் பேசினார்.

``வா உச்சினி. நீ எப்போ பார்க்க வருவேன்னுதான் காத்திருந்தேன்.’’

அப்பா, உச்சினிமாகாளி அம்மனுக்கு பூஜை செய்யக்கூடிய சாமி கொண்டாடி. அப்பாவும் பேசினார்.

``என்னாச்சு, யாரு வந்தா... உன்கிட்ட எப்படி வர முடியும்?”

அப்பாவை இன்னும் கொஞ்சம் பக்கத்துல வரச் சொன்னவர், தொண்டைக்குள் கிடந்த சொற்களை மெதுமெதுவாக உருட்டி எடுத்துகொண்டு வந்து, அப்பாவின் மடியில் கொட்டத் தொடங்கினார்.

``யாரா... வேற யாரு அந்த பொய்லா தே....தான். கூட ஒருத்தியையும் கூட்டிட்டு வந்திருந்தா. அவ யார்னு தெரியலை. ரெண்டு பேரும் என்னா ஆட்டம் போட்டாளுக தெரியுமா? ஒருத்தி அழுறா, ஒருத்தி சிரிக்கா, ஒருத்தி ஓடுனா... ஒருத்தி நிக்கா, ஒருத்தி அலறுனா... ஒருத்தி பாடுதா, கால் தரையில படாம என்ன மாதிரி பறந்தாளுவ ரெண்டு பேரும்!”

``கண்ணுக்கு நல்லா தெரிஞ்சாளுவளா?”

``தெரிஞ்சாளுவளா... கல்யாணமான புதுசுல ஒரு நாள் பொய்லா சத்தத்தைக் கேட்டிருக்கேன். செனப்பன்னி கத்துற மாதிரி இருக்கும். இன்னிக்குதான நேர்ல பார்த்தேன். அவளுக்குத் துளி வயசு கூடலைய்யா!

கண்ணு ரெண்டுலயும் தீப்பந்தம் எரியுது. கால் விரலுக்கு நடுவுலவெல்லாம் சூரிக் கத்தியைச் செருகிவெச்சிருக்கா. இடுப்புல போட்டிருந்தா பாரு மண்டை ஓடு, எப்பா... எத்தனைன்னு எண்ண எவனாலயும் முடியாது. அதுமட்டுமா, அவளோட ஒவ்வொரு முலையும் நம்ம தங்கமணியோட பன்னி கனம் இருக்கும். அத வெச்சுக்கிட்டு அவ போட்ட ஆட்டம்... எப்பா, அவளால மட்டும்தான் முடியும். மூக்குல பசிய வெச்சுக்கிட்டு எவன சாப்பிடலாம்னு முறுக்கிக்கிட்டு வர்றா… நாக்க துருத்துறா, ஊளையிடுறா. நானா இருக்கப்போய் அவளை கொஞ்சம்  அதட்டி உருட்டி தப்பிச்சு வந்தேன்.’’

சொல்லிக்கொண்டிருக்கும்போதே என்னை ஏறிட்டுப் பார்த்தவர் கஷ்டப்பட்டு ஓர் எக்கு எக்கி, கைகளைப் பற்றிக்கொண்டு சொன்னார், ``செல்வராஜி... நேத்து பொய்லா என்னைய திங்குறதுக்கா வந்தான்னு நினைச்ச? இந்தா நிக்காம் பாரு, இவனுவள திங்கிறதுக்குல்லா திட்டம் போட்டு வந்திருக்கா? நல்லவேளை எப்படியோ புள்ளையல நேக்கா பேசி, வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன். அது ஒண்ணு போதும். கிழவன்... நான் இருந்தா என்ன, செத்தா என்ன? என் புள்ளையல அவகிட்ட இருந்து காப்பாத்திட்டேன்லா. இனி அவ என் உசுரப் புடுங்குனாலும், அது என் மசிரப் புடுங்கின மாதிரிதான்.”

``இப்படியா மாமா சொன்னார்? அந்தத் தாத்தா, ச்சே! நல்ல மனுஷன்ல. நீ என்ன மாமா பண்ணினே அப்போ?’’

``என்ன பண்ணினேனா, கண்ல இருந்து வந்த கண்ணீரை அடக்கிக்கிட்டு, வெளிய ஓடி வந்துட்டேன். அப்படியும் அழுகைய நிறுத்த முடியல. எங்கேயாவது போய் சத்தம் போட்டு அழணும்போல இருந்துச்சு. சின்ன ஆலமரத்த பார்த்து ஓடிட்டேன். அங்க போய் அழுதேன். பேய் மாதிரி அழுதேன். நிஜமான பேய் மாதிரி அழுதேன்.’’

``அந்த பொய்லா  மாதிரியா அழுத?”

``ஆமா அந்த பொய்லா மாதிரிதான் ஓங்கி அழுதேன்.”

``பொய்லா எப்படி அழுவா... எங்க, எனக்கு கொஞ்சம் அழுது காட்டேன். ஏய்... என்ன, இப்போ எதுக்கு இப்படி கண்ணீர் வடிக்கிற நீ? மாமா... இங்க பாரு, மாமா என்ன பாரு மாமா...”

``ஒண்ணுமில்ல, நீ போய் அந்த பியானோவை நிப்பாட்டு. ஒருமாதிரி இருக்கு. போ திவ்யா, ஒண்ணுமில்ல. அந்தச் சத்தத்தை நிப்பாட்டு.’’

வரவேற்பறையில் ஒலித்துக்கொண்டிருந்த பியானோவின் சத்தத்தை நிறுத்தினாள் திவ்யா.

மாரிசெல்வராஜ் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு