Published:Updated:

ஐந்திலே ஒன்று - சிறுகதை

ஐந்திலே ஒன்று - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
ஐந்திலே ஒன்று - சிறுகதை

ரவிபிரகாஷ் - ஓவியங்கள்: ஸ்யாம்

ஐந்திலே ஒன்று - சிறுகதை

ரவிபிரகாஷ் - ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
ஐந்திலே ஒன்று - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
ஐந்திலே ஒன்று - சிறுகதை

வெளிச்சம்னா என்ன, இருட்டுன்னா என்ன, பகல்னா என்ன, இரவுன்னா என்ன, கறுப்பு, வெளுப்பு, சிவப்பு, நீலம் இதெல்லாம் என்ன,  நிறம்னா என்ன, கண்ணுக்கு அழகானதுன்னா அது எது, அழகற்றது எது... இப்படிப் பல கேள்விகளுக்கு விடை தெரியாது அவனுக்கு. முதல்ல, பார்க்கிறதுன்னா என்ன? பார்வைன்னா என்ன? அதுவே புரியலை. எத்தனையோ பேர் எத்தனையோ விதமா விளக்கிச் சொல்லியும் கண்ணனால்  புரிஞ்சுக்கவே முடியலை. 

ஐந்திலே ஒன்று - சிறுகதை

குழந்தை பிறந்த சில நாள்களிலேயே அவன் அம்மா ராஜிக்கு அந்த வித்தியாசம் புரிஞ்சுபோச்சு. அப்பாக்களுக்கு ரெண்டும் ரெண்டும் கூட்டினா நாலு எப்படி வரும்கிறதை விளக்கிச் சொல்லணும். அம்மாக்களுக்குத் தேவையில்லை. குழந்தை ஏன் இப்படி சதாகாலம் விட்டத்தையே வெறிச்சுப் பார்க்கறான், குழந்தை முகத்துல ஏன் இத்தனை கடுகடுப்புன்னு ராஜி கேட்டதுக்கு சிவராமன் சிரிச்சான். “பைத்தியமே, நம்ம கோபுவுக்குக் குழந்தை பிறந்தப்போ நாம ரெண்டு பேரும்தானே போய்ப் பார்த்துட்டு வந்தோம். ‘அது ஏங்க இப்படி என்னை முறைச்சுப் பார்க்குது?’ன்னு கேட்டியே, மறந்துபோச்சா? குழந்தைங்கன்னா அப்படித்தான். இந்தப் பயல் இத்தனை காலம் இருட்டறைக்குள்ள உருண்டுக்கிட்டு இருந்தான். இப்பத்தான் இந்த வெளிச்ச உலகத்துக்கு வந்திருக்கான். இங்க இருக்கிற எல்லாமே இவனுக்குப் புதுசு. அதனால ஒவ்வொண்ணையும் உன்னிச்சுப் பார்த்து, அது என்னன்னு புரிஞ்சுக்க முயற்சி பண்றான். அது உனக்குக் கடுப்பா தோணுது” என்று சிம்பிளாகச் சொல்லி, அவளின் அறியாமைக்காக மீண்டும் சிரிச்சான்.

டாக்டருக்குக்கூட ஆரம்பத்தில் இந்த வித்தியாசம் புரியலை. “இத ஸ்க்வின்ட் கண்ணுன்னு சொல்வோம்மா. பிறந்த குழந்தைகளுக்கு இப்படி மாறுகண் இருக்கறது சகஜம்தான். மூளையின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய புலன் உறுப்புகள் இன்னும் கத்துக்கலை இல்லியா, அதன் விளைவுதான் இந்த வெறிச்சுப் பார்த்தல். இதை ஸ்ட்ராபிஸ்மஸ்னு சொல்லுவோம்...” என்று என்னென்னவோ, அவரும் அவளுக்குப் புரிகிற விதத்தில் விளக்க முயற்சி பண்ணினார்.

 இமை மூடித் தூங்குகிற குழந்தையின் முகத்தில் டார்ச் அடிச்சாலே அது ஒளிச்சலனத்தால் இமைகளைச் சுருக்கும். கொட்டக் கொட்ட முழிச்சிட்டிருக்கப்பவே இவன் மூஞ்சில டார்ச் அடிச்சா, கொஞ்சமும் அசராம என்ன இப்போன்னான். அம்மாக்காரிதான் அந்த வேலையைச் செய்தது. அம்மாக்களுக்கு இருக்கிற அக்கறையும் கவலையும் அப்பாக்களுக்கோ டாக்டர்களுக்கோ இருக்கமுடியாதில்லையா?

அப்புறம் தலையைச் சொறிந்துகொண்டே சொன்னார் டாக்டர், “ஆமாம்மா... நீங்க பயந்தது சரிதான். குழந்தைக்குப் பிறவியிலேயே பார்வை இல்லை.”

ராஜி அழுதாள். சிவராமன் செய்வதறியாமல் நின்றான். “எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்லை!” என்று ஒப்புக்குக் கதறுவதற்குக்கூடத் தனக்கு யோக்கியதை இல்லை என்பது தெரிஞ்சுதான் மரம் மாதிரி நின்றிருந்தான்.

கண்ணன் வளர்ந்தான். அப்பாவும் அம்மாவும்தான் அவனின் பார்வைக்குறைக்காக மாய்ந்து மாய்ந்து மருகினார்களே தவிர, அவன் தனக்கு ஒரு குறை இருப்பதாகவே நினைக்கலை. பார்ப்பது என்றால் என்ன என்று தெரிந்திருந்தால்தானே, அது இல்லையென்பதற்காக அழவோ துக்கப்படவோ முடியும்? சொல்லப்போனால், அவர்களோ வேறு யாருமோ அவனுக்காக உச்சுக்கொட்டுவது அவனுக்கு எரிச்சலாகத்தான் இருந்தது. இப்போ என்ன தலைமுழுகிப் போச்சுன்னு இவங்க என்மேல பரிதாப்படுறாங்க என்றே நினைத்தான்.

ஆரம்ப காலத்தில் எல்லாம், குழந்தைக்குக் கண் தெரியாதே என்று அவனுக்கான விஷயங்களைப் பார்த்துப் பார்த்துச் செய்தாள் ராஜி. நடந்து செல்லும்போது வழியில் இருக்கும் மேஜையில், சுவரில் முட்டிக்கொள்ளப்போகிறானே என்று பாய்ந்தோடித் தூக்கி, வேறு இடத்தில் விடுவாள். சாப்பாட்டுத் தட்டைத் தேடி அவன் கைகள் துழாவினால், அவற்றைப் பிடித்துத் தட்டில் பரிமாறப்பட்டிருக்கும் சாப்பாட்டில் வைப்பாள்.

ஒரு நாள், அவனைப் பார்க்க வந்திருந்த பாட்டியம்மா, ராஜியை அப்படிச் செய்யவிடாமல் தடுத்தாள். இன்றுவரை கண்ணனைக் கண்ணனாக மட்டுமே பார்க்கிற பாட்டியம்மா. அதனாலேயே அவள்மீது அவனுக்குக் கொள்ளைப் பிரியம்.

ஐந்திலே ஒன்று - சிறுகதை

“அடியே, அவனைச் சுதந்திரமா அங்கே இங்கே போக விடு. பார்வை இல்லாத பிள்ளைகளுக்குக் கை காலு காது மூக்கு எல்லாமே கண்ணுங்கதான். உனக்குத்தான் பார்க்கக் கண்ணு வேணும்; உன் மவன் காதாலயே பார்ப்பான். அதுக்கான சக்தியை அவனுக்குக் கொடுத்துதான் உன்கிட்ட அனுப்பி வெச்சிருக்கான் அந்தக் கடவுள். அந்தச் சக்தியை நீ கெடுத்துப்புடாதே! வவ்வாலு என்னிக்காச்சும் தனக்குக் கண்ணு இல்லேன்னு குறைப்பட்டுக்கிச்சா, கொஞ்சம் யோசனை பண்ணு!”

ராஜி கெட்டிக்காரி. பாட்டி சொன்ன நாலே வாக்கியங்களில் தெளிச்சியடைந்துவிட்டாள். கண்ணன் அதற்குப்பிறகு சுவாதீனமாக வீட்டுக்குள் உலாத்தினான். சுவர் அருகில் வந்ததுமே உஷாராக யு டர்ன் எடுத்தான். தரையில் சின்ன டம்ளர் உருண்டிருந்தாலும், ஆச்சர்யப்படும்விதமாக அதைச் சரியாகக் குனிந்து எடுத்தான். ஈயின் சிறகடிப்பைக்கூட அவன் காதுகள் கூர்மையாகக் கேட்டன. சத்தம் வந்த திக்கில் திரும்புவது மட்டுமல்ல, அந்தச் சத்தம் வரும் தொலைவைக்கூட அவனால் சரியாகக் கணிக்க முடிந்தது; சத்தம் போடும் வஸ்து அல்லது ஆசாமி யார் என்று தீர்மானிக்க முடிந்தது. தெருமுனையில் கேட்கும் பைக் சத்தத்தை வைத்தே, ‘இது பலூன் மாமா’ என்று இனம்காண முடிந்தது. இத்தனைக்கும் அந்தத் தெருவில் இருப்பவை எல்லாமே ஒரே பிராண்ட் பைக்குகள்தான்; ஒரே விதமான ஹாரன் கொண்டவை தான். அவற்றின் ஓட்டுநர்களும்கூட ராக ஆலாபனைகளில், வாத்தியக் கருவிகளில் நாட்டம் கொண்டவர்கள் அல்ல. சம்பிரதாயமாக ‘கீய்க்’ என்றோ, ‘கீங்ங்’ என்றோதான் சத்தம் எழுப்புகிறவர்கள்தான். நீளமாகச் சத்தம் எழுப்பினால் கடுப்பாக இருக்கிறார்கள் என்றும், விட்டுவிட்டுத் தொடர்ச்சியாகச் சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தால் அவசரத்தில் இருக்கிறார்கள் என்றும் புரிந்துகொள்ளலாமே தவிர, வாகன சத்தத்தை வைத்து அதில் வருபவர்கள் யார் என்று ராஜியாலும் சிவராமனாலும்கூட யூகிக்க முடியாதிருந்தது. அவ்வளவு ஏன், யார் அழுத்தினாலும் வீட்டு அழைப்பு மணி ஒரே மாதிரிதானே ஒலிக்கும்? ஆனால், கண்ணன் கண்டுபிடித்துவிடுவான், வெளியே நிற்பது வீட்டைக் கூட்டிப் பெருக்கும் வேலைக்காரம்மாவா, பேப்பர் போடும் பையனா, போஸ்ட்மேனா அல்லது வேறு எவருமா என்பதுவரை!

கொஞ்சம் வளர்ந்ததும் அவனைப் பார்வையற்றோருக்கான பிரத்யேகப் பள்ளியில் சேர்த்தார்கள். ‘இது என்ன?’ என்று அந்த டீச்சரம்மா ஒரு பொருளைக் கண்ணனின் கைகளில் வைத்த  அடுத்த விநாடி, அதைப் பிடித்துக்கூடப் பார்க்காமல் ‘லெமன்’ என்று சொல்லி அசத்தினான். டீச்சரம்மா அடுத்து அதே சைஸில் ஒரு ரப்பர் பந்தை அவன் கைகளில் வைத்தாள். ‘பால்’ (Ball) என்றான். டீச்சரம்மா முகத்தில் வியப்பு. அவள் அடுத்து ஒரு சின்ன வஸ்துவை அவன் உள்ளங்கையில் வைக்க, ‘சேஃப்டி பின்’ என்றான் தீர்மானமாக. “ஏம்மா, நெஜமாத்தான் சொல்றீங்களா, உங்க பையனுக்குக் கண்ணு தெரியாதுன்னு? இத்தனை துல்லியமா சொல்றானே!” என்றாள் டீச்சரம்மா. சந்தேகக் கேள்வியல்ல அது; வியப்பின் உச்சம்!

ராஜி தன் அழுகையை நிறுத்திவிட்டாள். மகனுக்குக் கண் பார்வை இல்லை என்பதையே அவள் கிட்டத்தட்ட மறந்துவிட்டிருந்தாள். கண்ணன் பிரெய்லி முறையில் சரளமாகப் படித்தான். மொறுமொறுப்பான டெக்ஸ்ச்சர்டு தாளில் அவன் விரல்கள் தடவியபடி நகர்கிறபோதே, அவை அதில் புதைந்திருக்கும் சாராம்சத்தை ஸ்கேன் செய்து அவன் மூளைக்குள் உடனுக்குடன் பதிவேற்றிவிடும். சொல்லப்போனால், பார்த்துப் படிப்பவர்களைவிட இவன் வேகமாகப் படித்தான்; வேகமாகப் புரிந்துகொண்டான்; வேகமாக இயங்கினான்.

வசதி சற்றே கூடிய ஒரு காலகட்டத்தில், சிவராமன் ஒரு நப்பாசையில்  தன் மகனை சங்கர நேத்ராலயாவுக்கு அழைத்துச் சென்றிருந்தான், அவனுக்குப் பார்வை கிடைக்கச் செய்ய முடியுமா என்று பார்க்க. மருத்துவர்கள் கண்ணனின் இரண்டு கண்களையும் சோதித்துவிட்டு, ஒரு கண்ணில் ஒளியை உணரும் தன்மை இன்னும் கொஞ்சநஞ்சம் உயிர்ப்போடு உள்ளதாகவும், கார்னியாவை மாற்றி ஒரு முயற்சி செய்து பார்க்கலாமென்றும், ஆனால், பார்வை திரும்பக் கிடைக்கும் வாய்ப்பு 40 சதவிகிதம் மட்டுமே உள்ளதாகவும், சில லட்சங்கள் செலவாகும் என்றும் சொன்னார்கள். தன்னுடைய ஒட்டுமொத்த சேமிப்புகளுக்கு மேல் கடன்வாங்கி சிகிச்சை செய்தும் பலனின்றிப்போனால் என்னாகும் என்கிற குழப்பத்தில் கண்ணனுக்குக் கொடுப்பினை இல்லை என்பதாக அம்மட்டோடு தன் முயற்சியில் மனம் தளர்ந்து ஒதுங்கிவிட்டான்.

கண்ணன் அதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அவன் உற்சாகமாகவே வளைய வந்தான். பக்கத்து பிளாட் பத்மா உள்ளே நுழையும்போதே, ‘வாங்க ஆன்ட்டி, என்ன, அம்மாவுக்கு ரவா இட்லி கொண்டுவந்திருக்கீங்களா?’ என்று வரவேற்பான். “எப்பிட்றா..?!” என்று பத்மா வியக்க, ‘அதான் வாசம் பத்து ஊருக்கு மூக்கைத் துளைக்குதே’ என்றான். பத்மாவுக்கோ, ராஜிக்கோ ஒரு சின்ன மணம்கூட எட்டவில்லை. “அங்கே பாருங்கம்மா, சுவர்ல ஒரு மரப்பல்லி ஊர்ந்து போகுது” என்பான் ஒரு திக்கைக் காட்டி. சொல்லிவைத்தாற்போல் உயரே ஒரு கட்டைப் பல்லி நகர்ந்துகொண்டிருக்கும். ‘அது கத்துச்சே உங்களுக்குக் கேட்கலையா?’ என்பான். 

கண்ணனைப் பற்றிய கட்டுரை பிரபல தமிழ் வார இதழ் ஒன்றில் விரிவாக வெளியானது. அதில் கண் பார்வையற்றவனாக இருந்தும் அவன் உயர்கல்வியில் மிகுந்த தேர்ச்சி பெற்றது, ரிஸ்ட் வாட்ச் போன்ற நுட்பமான பாகங்களைக் கொண்ட உபகரணங்களையும் பிரித்துப்போட்டு அவன் அநாயாசமாகப் பழுது பார்ப்பது, மற்ற எவரின் காதுகளிலும் விழாத மீச்சிறு ஒலிகளையுங்கூடக் கேட்டறியும் அசாத்திய செவித் திறன் என அவனுடைய சாதனை வாழ்வு பற்றி எழுதிவிட்டு, கண்பார்வை இல்லையென்கிற குறை அவனை இம்மியளவும் மற்றவரிடமிருந்து குறைத்து மதிப்பிடச் செய்யவில்லை எனவும், அவன் செய்யக்கூடிய சில விஷயங்களை பார்வையுள்ள மற்றவரால் செய்ய முடியாது தோற்க வேண்டி வரும் எனவும்... இன்னும் பலவிதமாகவும் அவனை வியந்து வியந்து ‘ஹ்யூமன் ஸ்டோரி’ எழுதியிருந்தது.

கண்ணன் பிரபலமானான். இந்தப் பேட்டி வெளியான அடுத்த வாரத்தில் சமூக சேவைகள் பல செய்து வரும் அறக்கட்டளை ஒன்று கண்ணனின் பார்வை திரும்பக் கிடைப்பதற்குப் பொறுப்பேற்பதாக முன்வந்தது. அவனுக்காகும் அறுவைசிகிச்சை செலவு தொடங்கி மருத்துவச் செலவுகள் வரை அனைத்தையும் ஏற்பதாக உறுதியளித்தது.  சிவராமன் இரண்டாவது முறையாகத் தன் மகனை இருபத்தொரு வயதில் சங்கர நேத்ராலயாவுக்கு அழைத்துச் சென்றான். 

ஐந்திலே ஒன்று - சிறுகதை

டாக்டர் இந்த முறை இன்னும் விளக்கமாகப் பேசினார். கண்ணனின் பார்வைக் குறைபாடு என்ன மாதிரியானது என்று பாமரனுக்கும் புரியவைக்கும் மெனக்கெடலோடு விவரித்தார். லிம்பல் ஸ்டெம்செல் ட்ரான்ஸ்பிளான்ட் என்றார்; கன்ஜக்டிவா என்றார். செயற்கை கார்னியா செயல்படும் விதம் பற்றிச் சொன்னார். புரிந்ததோ புரியவில்லையோ, தலையைத் தலையை ஆட்டி உம் உம்மென்று கேட்டுக் கொண்டிருந்தான் சிவராமன். அவனுக்கு எப்படியாவது தன் மகனுக்குப் பார்வை திரும்பக் கிடைத்தால் போதுமென்றிருந்தது. கடைசியாக, எம்.ஓ.ஓ.கே.பி முறையில்தான் கண்ணனுக்குப் பார்வை அளிக்க வாய்ப்பிருப்பதாகச் சொன்னார் டாக்டர்.

‘அது என்ன முறை டாக்டர்?’ என்று சிவராமன் கேட்டான், அவர் விளக்கினால்  ஏதோ  தனக்குப் புரிந்துவிடுகிறாப்போல. டாக்டர் வாயைத் திறக்கும் முன்பே, ‘மாடிஃபைடு ஆஸ்டியோ ஓடான்ட்டோ  கெரட்டோப்ராஸ்தசீஸ்’ என்று பதில் வந்தது கண்ணனிடமிருந்து.

“எக்ஸலென்ட்” என்று தனது பாராட்டை வெளிப்படுத்தினார் டாக்டர். அவன் கையை எடுத்துக் குலுக்கினார். அதுகுறித்து அவனுக்கு மேலும் என்னென்ன தெரியும் என்றறிய ஆவல் கொண்டார்.

``செயற்கை கார்னியாவாகச் செயல்படுவது ஓர் ஆப்டிகல் சிலிண்டர்; செயற்கையான பொருள்களை நம் உடம்பு பெரும்பாலும் ஏற்றுக்கொள்வது கிடையாது. அத்தனை பிடிவாதம்! அறுவைசிகிச்சைகள் தோல்வியுறுவது இந்த விஷயத்தில்தான். அதனால், இந்த ஆப்டிகல் சிலிண்டரை நிஜமான அங்கம் போலவே மாற்றிப் பொருத்தி, நமது உடம்பை ஏமாற்றிவிட வேண்டும். அதற்கு என்ன வழி? பேஷன்ட்டின் வாயிலிருந்தே ஒரு கோரைப் பல்லை வேரோடு பிடுங்கி, அதன் மையத்தில் மெல்லிய சவ்வு போன்ற பகுதியில் துளையிட்டு, இந்த ஆப்டிகல் சிலிண்டரை அதனுள் பொருத்தி, அதை அந்த பேஷன்ட்டின் கன்னத்தில் வைத்துத் தைத்துவிட வேண்டியது. ஒரு நாலைந்து மாதகாலம் அப்படியே விட்டால், ரத்த ஓட்டம் பாய்ந்து, நோயாளியுடன் ஒட்டிப் பிறந்த உறுப்பு போலவே இது தன்னை உருமாற்றிக் கொண்டுவிடும். அப்புறமென்ன, அதை மீண்டும் அங்கிருந்து எடுத்து, கண்ணின் மேல், கருவிழி இருக்கும் இடத்தில் பொருத்திவிட்டால், பார்வைக்கு நூறு சதவிகிதம் உத்தரவாதம்’’ என்று கண்ணன் மடமடவெனச் சொல்ல, டாக்டர் திகைத்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தார்!

“எல்லாம் சரி. ஆனால்...” என்று டாக்டர் இழுத்தார். சிவராமன் புரியாமல் விழித்தான்.

“வழக்கமான கார்னியா மாற்று ஆபரேஷன் இல்லை இது. அதை உங்க பையனுக்குப் பண்ணவும் முடியாது. அதனால், செயற்கையான பொருளை உள்ளே வைக்கிறோம். பார்வைக்கு நான் கேரன்ட்டி. ஆனால் கிங் படத்துல விக்ரம் ஒரு சீன்ல முட்டைக் கண்ணை வெச்சுக்கிட்டு வருவார் பார்த்திருக்கீங்களா, அது மாதிரி விழி வெளியே துருத்திக்கிட்டு, பார்க்கக் கொஞ்சம் கோரமா தெரியும். கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டா எந்தப் பிரச்னையும் இல்லே!”

இதுவா, அதுவா...? முக்கியமான பிரச்னைகளில் நாலைந்து ஆப்ஷன்கள் கிடைப்பதேயில்லை. சிவராமனுக்குக் குழப்பம். பையனின் கருத்தையும் கேக்கணுமில்லையா? கேட்டான்.

“பார்க்கவே முடிஞ்சாலும் உங்க கண்ணை உங்களால பார்க்க முடியாதில்லையா... என்னைப் பார்ப்பவர்களுக்குத்தான் சங்கடம். எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை; எந்த ஆட்சேபனையும் இல்லை’’ என்றான் கண்ணன்.

ஆபரேஷன் முடிந்து கண்கள் குணமாகி கண்கட்டுப்பிரிக்கிற நாளில் ராஜியையும் உடன் அழைத்து வந்திருந்தான் சிவராமன்.

“மேடம், உங்களை முன்கூட்டியே எச்சரிக்கை பண்றேன்... பையனைப் பார்த்துப் பதறாதீங்க; பயப்படாதீங்க. ஆபரேஷன் சக்சஸ். இப்ப உங்க பையனால க்ரிஸ்டல் க்ளியரா உலகத்தைப் பார்க்க முடியும். உங்க பையனுக்காகவே இரண்டு கூலிங்கிளாஸ் கொடுத்திருக்கோம். அதுல பக்கவாட்டுலயும் மறைப்பு இருக்கு. எப்பவும் அதைப் போட்டுக்கிட்டே இருக்கச் சொல்லுங்க. அது அவனுக்காக இல்லே; அவனைப் பார்க்கிற மத்தவங்களுக்கு நெருடல் இல்லாம இருக்கிறதுக்காக. நீங்களும் அவனைக் கண்ணுக்குக் கண் பார்க்காம இருக்கிறதே பெட்டர். நீங்க பயப்படுறது மட்டுமில்லாம, உங்க பயமும் வருத்தமும் அழுகையும் அவனையும் தாக்கிச் சோர்வடையச் செய்துவிடலாம்...”

நான்ஸ்டாப்பாகப் பேசிக்கொண்டே போனார் டாக்டர். சிரிப்பால் குறுக்கிட்டான் கண்ணன்.

“என்ன டாக்டர்... ‘ஆனா நான் அழுது என் சோகம் உன்னைத் தாக்கிடுமோ’ங்கிற குணா கமல் மாதிரி என்னென்னவோ சொல்றீங்க? நார்மல், அப்நார்மல், அழகு, குரூரம் இதுக்கெல்லாம் என் அகராதியில் இடமே இல்லை. அம்மா பயந்துடுவாங்கன்னு சொல்லுங்க, நியாயம். ஆனா, அதனாலெல்லாம் எனக்குச் சோர்வோ வருத்தமோ ஏற்படாது.”

ஐந்திலே ஒன்று - சிறுகதை

கண்ணனின் கண் கட்டைப் பிரிக்கிறபோது, டாக்டரிடம் பிடிவாதம் பிடித்து, தானும் அருகில் இருந்தாள் ராஜி. கட்டு முழுக்க அவிழ்த்து, ஐ வாஷ் கிளீனர் உபயோகித்துப் பஞ்சால் ஒற்றி ஒற்றிக் கண்ணனின் கண்ணைத் துடைத்து, திறந்து பார்க்க அவனை ஆயத்தப்படுத்தினார்கள்.

கண்ணன் கண்களை மெது மெதுவாகத் திறந்தான். விழிகள் நிலைகுத்திக் கூரையில் தைத்தன. அவன் இமைகளைத் திறந்திருக்கிறானா மூடியிருக்கிறானா என்பது ராஜிக்குச் சந்தேகத்துக்கிடமாக இருக்கவே, கிட்டே சென்று மகனைக் குனிந்து நெருக்கமாகப் பார்த்தாள். அடுத்த கணம் வீலென்று அலறிக்கொண்டு, மயக்கமாகிச் சரிந்தாள். சிவராமனும் மகனின் கண்களை நேருக்கு நேர் சந்திக்க பயந்து, முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

கண்ணன் பார்த்தான். “ஹௌ டூ யூ ஃபீல் மை பாய்?” என்று அவன் தலையை வருடினார் டாக்டர். “நைஸ் டாக்டர்! நான் உங்கள் உருவத்தைப் பார்க்கிறேன். நீங்கள்தானே டாக்டர் செழியன்?” என்றான் கண்ணன். “எக்ஸாட்லி!” என்றவர், அருகில் நின்றிருந்த நர்சுகளை ஒவ்வொருவராகக் கண்ணனின் அருகே அழைத்து, “ஹாய்” சொல்லச் சொன்னார். ஒவ்வொரு நர்சும் அருகில் வந்ததுமே, “யூ ஆர் மீரா”, “ஹாய், யூ ஆர் கவிதா. இந்த டிசம்பர்ல உங்களுக்கும் ஒரு ஸ்லாட் ஒதுக்கிட்டாங்களா?”, “ஹாய் நிம்மி, ஸாரி மேம், நிர்மலா, உங்க பையன் அருண் இப்பவும் படுக்கையை நனைச்சுக்கிட்டிருக்கானா?” என்றெல்லாம் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அடையாளம் கண்டு அசரடித்தான். அப்படித்தான் ராஜி வருவதற்குள்ளாக அவளைத் தன் அம்மா என்று அடையாளம் கண்டு அழைப்பதற்குள் அவள் மயங்கிச் சரிந்துவிட்டாள்.

ராஜி விழித்தெழுந்ததும், குளிர்கண்ணாடி அணிந்தவனாக அவளின் கையைப் பற்றிக்கொண்டு, “அம்மா, நான் பிறக்கும்போதே கூலிங்கிளாஸோடு பிறந்தேன்னு நினைச்சுக்குங்க, கர்ணன் கவச குண்டலத்தோடு பிறந்த மாதிரி” என்றான். “உங்களை இப்போ நான் கண்ணால பார்க்கிறேன். அது உங்களுக்கு மகிழ்ச்சிதானே?”

“கண் இத்தனை பெரிசா இருக்கேடா... வலிக்கலையா?” என்று அழுகையும் விம்மலுமாய் ராஜி கேட்டாள். “கொஞ்சம்கூட இல்லை. உங்க பாஷைல சொன்னா, ஐயம் நார்மல்!” என்று சிரித்தான்.

எல்லாரும் நினைக்கிற மாதிரி, கண்ணைத் திறந்தான், பார்த்தான், அடடா, இது எவ்வளவு அழகா இருக்குன்னு ரசிச்சான்னு கிடையாது. அவனுக்கு எல்லாமே அழகாகத்தான் இருந்தது. ஒரு புதிய உபகரணத்தைப் பயன்படுத்தக் கற்பது மாதிரி, அவன் கொஞ்சம் கொஞ்சமா கண்களால் பார்க்கப் பழகிக்கொண்டான். பல நேரங்களில் இமைகளைத் திறக்காமலே அங்கும் இங்கும் நடந்தான். கூடாதுன்னு இல்லை; தோணலை. அப்புறம், மனதில் பதிந்த உணர்வுகளோடு கண்ணில் தெரியும் ஒளிக்காட்சிகளும் சேரும்போது, இரண்டும் எப்படிப் பொருந்திப் போகுதுன்னு புரிஞ்சுக்க முயற்சி பண்ணினான்.

ஒரு குழந்தை பிறந்து வளரும்போது, அது குப்புறக் கவிழறது, உட்கார முயற்சி பண்றது, தவழறது, நிக்கறது, அம்மா விரலைப் பிடிச்சுக்கிட்டே நடக்க ஆரம்பிக்கிறதுன்னு ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் எத்தனை முயற்சிகளைப் போடும்... அப்படி ‘கண்ணால் பார்க்க’ முயற்சிகளைப் போட வேண்டியிருந்தது கண்ணனுக்கு; பிரயத்தனப்பட வேண்டியிருந்தது.

டிஸ்சார்ஜாகி வீட்டுக்கு வந்ததும், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் ஒரு நடை வந்து அவனைப் பார்த்துட்டுப் போனாங்க. இல்லை, அவன்தான் அவர்களைப் ‘பார்த்தான்’. பழனிவேல் தாத்தாவுக்கும் பத்மா ஆன்ட்டிக்கும் இடையில் அறுபது வித்தியாசம் இருந்தாலும், ஆறு வித்தியாசம்கூட அவனுக்குப் புரியலை. காக்காய்களில் எல்லாக் காக்காயும் ஒண்ணாத்தானே இருக்கு.

நேத்து சிவப்பா இருந்த பத்மா ஆன்ட்டி, இன்னிக்கு எப்படி மஞ்சளா மாறினாங்கன்னு ஒரு குழப்பம் வரும் அவனுக்கு. இப்படித்தான் மனிதர்கள் ஒவ்வொருநாளும், நேரத்திற்கேற்றபடி நிறம் மாறுவாங்களான்னு யோசிப்பான். அது ஒவ்வொருத்தரும் அணியும் டிரஸ்ஸுக்கேற்ப மாறுபடுவதுன்னு உறைக்கவே அவனுக்குச் சில காலம் பிடிச்சுது. அடிப்படையா டிரஸ்ஸுனு ஒரு கான்செப்ட்டை அவனுக்குப் புரியவைக்கவே படாத பாடு படவேண்டியிருந்தது. சிரமம்தான். ஒருகட்டத்துல, சிவராமனுக்கும் ராஜிக்கும் அவன் முன்னே இருந்த மாதிரியே இருந்துட்டா  தேவலையோன்னு ஆயிடுச்சு.

திர் பிளாட் வாசக்கதவு திறந்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை. ஹஸ்பண்டு, வொஃய்ப் ரெண்டு பேருமே வீட்டுல இருக்காங்கபோல. குரல் கேட்டுது. கண்ணன் அங்கே போனான். கண்ணு தெரியாதப்பவும் போயிருக்கான்.  வழக்கமா போறதுதான். ஏ, பி, சி, டி...ன்னு வரிசையா எழுத்தட்டைகளைக் கலைச்சுப் போட்டு ‘ஜி எடு, எக்ஸ் எடு’ன்னா, பழக்கப்பட்ட ஒரு கிளி கரெக்டா எடுக்கிறது பார்க்க வேடிக்கையாவும் ஆச்சர்யமாவும் இருக்குமில்லே... அப்படி, கண்ணு தெரியாத இவன் சில விஷயங்களை சரியா சொல்றதை, செய்யறதை ஒரு வேடிக்கை போல, விளையாட்டு போல பொண்டாட்டியும் புருஷனும் அப்படி ரசிப்பாங்க. ஆச்சர்யப்பட இதுல என்ன இருக்குன்னு இவனுக்குத் தோணினாலும், அவங்க சந்தோஷத்துக்காக அதைப் பண்ணுவான். பார்வை கிடைச்ச பிறகு, கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு அங்க போறது இது முதல் தடவை.

“லதாக்கா”ன்னு குரல் கொடுத்தான். “வாடா, சோபால உக்காரு. ஜோ, டி.வியைப் போட்டுவிடுங்க. புரியுதோ புரியலையோ, கண்ணன் பார்த்துட்டிருக்கட்டும். அவனும் ஒவ்வொண்ணா கத்துக்கணுமில்லியா?” என்று வேறு ஓர் அறையிலிருந்து குரல் வந்தது. ஜெயராம் என்பதன் சுருக்கம் ‘ஜே’தான்; ஆனால், அவள் ஜோ என்பாள். அது அவள் இஷ்டம். அதிலெல்லாம் நாம் தலையிட முடியாது; கூடாது!

கண்ணன் குரல் வந்த திக்கைத் திரும்பிப் பார்த்தான். அந்த அறையின் கதவு மூடியிருந்தது.

கிச்சனில் சப்பாத்தி போட்டு எடுத்துக்கொண்டிருந்த ஜெயராம், “ஹாய் கண்ணா, எப்படியிருக்கே? இப்ப பெய்ன் எதுவும் இல்லையே?” என்றபடி கைகளைத் துடைத்துக்கொண்டு வந்தான். டி.வி. ரிமோட்டை ஆன் செய்தான். சட்டென சின்னத்திரை  ஒலியெழுப்பியபடி ஒளிரத் தொடங்கவும், சின்னக் குழந்தை ஆர்வத்தோடு திரும்பிப் பார்க்கிற மாதிரி டி.வி. பக்கம் திரும்பினான் கண்ணன். அவன் வீட்டில் டி.வி. இல்லை.

முரசு டிவியில், “கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்” என்று பாடிக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.

“இவர்தான் டி.எம்.எஸ்ஸா அங்கிள்?” என்று கேட்டான் கண்ணன்.

அவன் தலையைத் தடவி, “இல்லைடா, இவர் எம்.ஜி.ஆர். நீ இன்னும் நிறைய கத்துக்க வேண்டியிருக்கு. சரி, நீ டிவி பார்த்துட்டிரு. லதா வந்து குருமா பண்ணித் தருவா. இருந்து ரெண்டு சப்பாத்தி சாப்பிட்டுட்டுப் போ” என்று புளூ டூத் இயர்போனைக் காதில் மாட்டிக்கொண்டு, செல்போனையும் கையில் எடுத்துக்கொண்டு, ரெஸ்ட் ரூமுக்குள் போய்க் கதவைச் சாத்திக்கொண்டான் ஜெயராம்.

அவன் அங்கே போய் செட்டிலான அடுத்த நிமிஷம், இங்கே வெளியே லதா குரல் கொடுத்தாள். “ஜோ... ப்ளீஸ், ப்ளீஸ்! கொஞ்சம் கோச்சுக்காம, சோபாவுல போட்டிருக்கிற அந்த செவப்பு டர்க்கி டவலைக் கொண்டு வந்து கொடுப்பியாம். எடுத்து வெச்சேன். கொண்டு வர மறந்துட்டேன்ப்பா!”  என்றாள். செல்லமும் சிணுங்கலுமான குரல்.

கண்ணன் திரும்பினான். அருகில் சோபா முதுகில் சிவப்பு டர்க்கி டவல். எதிரே பார்த்தான். ரெஸ்ட் ரூம் ரெஸ்ட்டே இல்லாமல் உள்ளே ஜரூராக இயங்கிக்கொண்டிருந்தது. கண்ணன் எழுந்தான். டவலைக் கையில் எடுத்துக்கொண்டான். குரல் வந்த அறையை நோக்கி நடந்தான்.

“ப்ளீஸ்ப்பா... வெடவெடன்னு நடுங்கிட்டிருக்கேன். சீக்கிரம், ஜல்தி ஆவோ!” என்றாள் லதா உள்ளிருந்து.

கண்ணன் அருகில் நெருங்கவும், கதவு கீறலாகத் திறந்தது. ஈரம் படிந்த வழுவழுப்பான கை மட்டும் வெளியே நீண்டது. நீட்டிய கையில் டவலைக் கொடுக்கத் தெரியவில்லை கண்ணனுக்கு. கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான். ஜோதான் ரொமான்ஸ் மூடில் விளையாடு கிறான் என்கிற நினைப்பில், “ஏய்... என்ன இது, அங்க அந்தப் பிள்ளை உட்கார்ந்துட்டிருக்கான்” என்று கிசுகிசுத்தவாறே அவனை உள்ளே அனுமதித்துவிட்டாள் லதா.

கண்ணன் நுழையவும், கட்டடமே அதிர்கிற மாதிரி வீலென்று அலறினாள். கண்ணன் திடுக்கிட்டான். அவள் அலறியதன் காரணம் அவனுக்குப் புரியவில்லை. கூலிங்கிளாஸ் அணிந்திருக்கிறோமா என்று தொட்டுப் பார்த்துக்கொண்டான். இருந்தது. பின்னே ஏன் தன்னைப் பார்த்து பயப்படுகிறாள் என்று நினைத்தான்.

அவன் கையில் இருந்த டவலைப் பறித்துத் தன் உடம்பில் சுற்றிக்கொண்டாள் லதா. வளப்பமான அவள் தேகத்தை அது பூரணமாய் மூடுவதாயில்லை. கண்ணனோ சற்றும் சலனமில்லாமல் அவளைப் பார்த்தபடி அசையாமல் நின்றிருந்தான். பெண் உடல் குறித்த குழப்பத்தோடு நின்றுகொண்டிருந்தான்.

“வெளியே போடா நாயே! ஜோ... ஜோ... எங்கே போய்த் தொலைஞ்சே ஜோ! சீக்கிரம் வா, இந்த நாயை அடிச்சுத் துரத்து!” என்றபடி கண்ணனைப் பிடித்து வெளியே தள்ளினாள் லதா. கதவை மறுபடி உள்ளே தாழிட்டுக் கொண்டாள். அந்தச் சில விநாடிச் சம்பவம் அவள் உடம்பில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. அவள் உடல் இப்போது குளிரால் அல்ல, கூச்சத்தால் நடுநடுங்கிக்கொண்டிருந்தது.

மூடிய கதவைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு கண்ணன் நிதானமாக நடந்துவந்து சோபாவில் அமர்ந்துகொண்டான். லதாவின் கூச்சலைக் கேட்டு, அக்கம்பக்கத்து பிளாட்டுகளில் இருந்து சிலர் வந்து எட்டிப் பார்த்தார்கள். உரிமையோடு சிலர் உள்ளே வந்து, “என்னப்பா சத்தம்?” என்று கேட்டார்கள். தெரியவில்லை என்பதாக உதட்டைப் பிதுக்கினான் கண்ணன்.

இதற்குள் தனது கடன்களை முடித்துக்கொண்டு ஒருவழியாக வெளியே வந்தான் ஜெயராம். எல்லாரும் நிற்பதைப் பார்த்து, “என்ன ஆச்சு?” என்றான். “தெரியலைப்பா. உன் பெண்டாட்டி அலர்ற சத்தம் கேட்டுது. ஓடி வந்தோம். இவனானால் தெரியாதுங்கிறான். கண்ணு தெரிய ஆரம்பிச்சவுடன் காது மக்கர் பண்ண ஆரம்பிச்சுடுச்சோ என்னவோ?” என்றார் ஒரு மாமா.

“முதல்ல அந்த நாயை அடிச்சு வெளியே துரத்திட்டு இங்கே வா, ஜோ” என்று கிழிபடும் குரலில் உள்ளிருந்து கத்தினாள் லதா. “என்னம்மா, பல்லி பூரான் ஏதானும் பார்த்து பயந்துட்டியா?” என்றபடி கதவருகில் போனான் ஜெயராம்.

“அந்த ராஸ்கலை என் தம்பி மாதிரி நினைச்சுப் பழகினேன். நீ இருக்கேன்னு நினைச்சுத் துண்டு எடுத்துக் கொடுக்கச் சொன்னேன். அதைப் பயன்படுத்திக்கிட்டு இந்த நாய் கதவைத் தள்ளிக்கிட்டு உள்ளே வந்துடுச்சு! ஐயோ... ஐயோ... ஐயோ... ஷேம், ஷேம்! நான் என்ன செய்வேன், மானம் போச்சே! இந்த அசிங்கத்தை எப்படித் துடைப்பேன்...” என்று அலறினாள் லதா.

ஜெயராமின் உடலெங்கும் ஒரு விறைப்பு ஏறியது. இறுகிப்போன முகத்தோடு கண்ணனின் எதிரே வந்து நின்றான். “பாத்ரூம் கதவைத் திறந்துக்கிட்டு உள்ளே போனியா?” என்றான். குரல் கடினப்பட்டிருந்தது. “ஆமாம்” என்றான் கண்ணன். “லதா குளிச்சிட்டிருக்கான்னு தெரிஞ்சும் போனியா?” என்றான். “ஆமாம். குளிக்கிறது நல்ல விஷயம்தானே?” என்றான் கண்ணன், சூழல் புரியாமல். அடுத்த விநாடி கண்ணனின் தாடையில் இடியாய் இறங்கியது ஜெயராமின் கை. கண்ணனின் கூலிங்கிளாஸ் தெறித்து அப்பால் விழுந்தது. பொறி கலங்கி உட்கார்ந்திருந்த அவனது சட்டையைக் கொத்தாகப் பிடித்துத் தூக்கினான் ஜெயராம். தரதரவென்று இழுத்து வந்து, வாசல் கதவுக்கு வெளியே தள்ளினான். கீழே உருண்ட அவனைக் கால்களால் எத்தினான். “நாயே, இன்னொரு தடவை இந்தப் பக்கம் வந்தே, மிதிச்சே கொன்னுடுவேன்!” என்று சீறினான். பின்னர் உள்ளே போக யத்தனித்தவன் திரும்பி, சந்தேகத்துக்கு இடமில்லாமல் இன்னொரு தடவையும் கண்ணனின்  இடுப்பில் ஒரு மிதி மிதித்தான்.

இதற்குள்ளாகச் சத்தம் கேட்டு ராஜியும் சிவராமனும் ஓடி வந்தார்கள். “ஐயோ, எம்புள்ள” என்று ஓடி வந்து தன் மகனைத் தூக்கினாள் ராஜி. “ஏண்டா ஜெயராமா, என்னடா இது, பச்சைப் புள்ளையைப் போட்டு இப்படி உதைக்கிறே. இது உனக்கே நல்லாருக்கா. இப்பத்தான் குழந்தை கண் ஆபரேஷன் ஆகி வந்திருக்கான். அப்படி என்ன கெடுதல் பண்ணிட்டான் இவன் உனக்கு?” என்றான் சிவராமன்.

“குழந்தையா இவன், கோட்டான். ஏய்யா யோவ், உம்புள்ளைக்குக் கண் இல்லேன்னு எவன்யா அழுதான்? இவனை அப்படியே குருட்டுக் .....யா அலையவிட்டிருக்கணும்யா! பழகினவனாச்சேன்னு பார்க்கிறேன். இல்லாட்டி போக்சோ சட்டத்துல இவனையெல்லாம் தூக்கி உள்ள போட்டு, முட்டிக்கு முட்டி தட்ட வெச்சிருப்பேன்” என்றபடி, வாசல் கதவைப் படாரென்று அடித்துச் சாத்திக்கொண்டு உள்ளே போய்விட்டான் ஜெயராம்.

“சிவராமன், ஏதோ ஜெயராமன் நல்ல மனுஷனா இருந்ததொட்டு இதோட விட்டான். தலை தப்பிச்சது தம்பிரான் புண்ணியம்னு நினைச்சுக்கோ. உன் புள்ளை பண்ணின காரியம்... உவ்வேக்! கேக்கவே அசிங்கமா இருக்கு. இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும். வேணாம்ப்பா... நாங்களும் பெண்டு பிள்ளைகளைப் பெத்து வச்சிருக்கோம். இது தாங்காது. உன் புள்ளைக்கு நல்ல புத்தி சொல்லி, உடனே வீட்டை காலி பண்ற வழியைப் பாரு, அதான் உனக்கும் நல்லது, எங்களுக்கும் நல்லது!” என்று ஸ்ட்ரிக்டாகச் சொல்லிவிட்டுத் தத்தம் கூடுகளுக்குள் புகுந்துகொண்டனர் மற்றவர்கள்.

கண்ணனை அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்குள் சென்றார்கள் ராஜியும் சிவராமனும்.

“ஏம்மா, துண்டு கேட்டாங்க. அங்கிள் ரெஸ்ட் ரூம் போயிருந்தார். அதனால, நான் கொண்டு போய்க் கொடுத்தேன். ஹெல்ப்தானே பண்ணேன். அது தப்பாம்மா?” என்று கேட்டான் கண்ணன்.

“துண்டு கொடுத்தது தப்பில்லைப்பா. பாத்ரூமுக்குள்ளே போனதுதான் தப்பு” என்றாள் ராஜி.

“அதுல என்ன தப்பும்மா? அப்பத்தானே அவங்களை நான் நேருக்கு நேர் பார்க்க முடியும்?”

“குளிக்கிற பொண்ணைப் பார்க்கிறது தப்பில்லையாப்பா, அது அவளுக்கு மானக்கேடில்லையா?” என்றாள் ராஜி.

“மானம்னா என்னம்மா?” என்று கேட்டான் கண்ணன்.

“ப்ச்... உனக்குப் புரியாதுடா!” என்றாள் ராஜி சலிப்பாக.

இந்தப் பிள்ளையை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்று கவலையும் கண்ணீருமாகத் தலையில் கை வைத்து ஓய்ந்து உட்கார்ந்திருந்த அம்மாவின் முதுகைத் தொட்டுச் சொன்னான் கண்ணன்...

“எனக்கு ஒண்ணு மட்டும் புரியுதும்மா. கண்ணைப் போல மட்டமான உறுப்பு வேற இல்ல. இப்படி ஒண்ணு எனக்கு இல்லேன்னா வருத்தப்பட்டுட்டிருந்தீங்க இத்தனை நாளு..? என்னை அப்படியே என்போக்குல விட்டிருக்கலாமேம்மா. நானும் சந்தோஷமா இருந்திருப்பேன், மத்தவங்களும் சந்தோஷமா இருந்திருப்பாங்களே. எதுக்கும்மா எனக்குக் கண் ஆபரேஷன் பண்ணி, பார்வையை வரவழைச்சீங்க?”

பிதுங்கி நின்ற விழியோடு கேட்ட தன் மகனை அணைத்துக்கொண்டு, பதில் சொல்லத் தெரியாமல் குலுங்கிக் குலுங்கி அழுதாள் ராஜி.