Published:Updated:

`` `கழிமுகம்' நாவலில் இரண்டு குற்றங்களைத் திட்டமிட்டே செய்துள்ளேன்!" - பெருமாள் முருகன்

`` `கழிமுகம்' நாவலில் இரண்டு குற்றங்களைத் திட்டமிட்டே செய்துள்ளேன்!" - பெருமாள் முருகன்
`` `கழிமுகம்' நாவலில் இரண்டு குற்றங்களைத் திட்டமிட்டே செய்துள்ளேன்!" - பெருமாள் முருகன்

"‘பூனாச்சி’ நாவலில் சில அசுரக் கதாபாத்திரங்களை உருவாக்கியிருந்தேன். அவற்றின் தொடர்ச்சியாக இந்நாவலில் வருபவர்களும் அசுரர்களாகவே இருக்கிறார்கள். பூனாச்சியில் தொடங்கிய அசுரவுலகம் இதில் சற்றே விரிந்திருக்கிறது. அவ்வுலகமும் காலத்திற்கேற்ப மிக நவீனமயப்பட்டிருக்கிறது. அவர்களுக்கும் நிறைய பிரச்னைகள். எந்த வாழ்க்கையும் பிரச்னையின்றி அமைவதில்லை."

`மாதொரு பாகன்’ நாவல் குறிப்பிட்ட சாதியை இழிவுப்படுத்துவதாக உள்ளது’ என எழுத்தாளர் பெருமாள்முருகன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, `எழுத்தாளர் பெருமாள்முருகன் இறந்துவிட்டான்’ என அறிவித்து அவர் எழுதுவதையே நிறுத்தியிருந்தார். இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றம் அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளித்ததை அடுத்து, 2016-ம் ஆண்டில் `கோழையின் பாடல்கள்’ என்ற கவிதைத் தொகுப்பு மூலம் எழுத்துலகுக்கு மீண்டும் வந்தார் பெருமாள்முருகன். அதன் பிறகு தொடர்ந்து எழுதிவரும் பெருமாள்முருகன் `பூனாச்சி’ என்ற நாவலைத் தொடர்ந்து இப்போது `கழிமுகம்’ என்ற நாவலை எழுதியுள்ளார். அந்த நாவல் குறித்தும் அதன் கதைக்களம் குறித்தும் நம்மிடம் சில விஷயங்களைப் பகிர்ந்தார்.

``என் எழுத்துகளை 2014-ம் ஆண்டுக்கு முன், 2014-ம் ஆண்டுக்குப் பின் எனப் பிரித்துப் பார்க்க விரும்புகிறேன். 2014-ம் ஆண்டுக்குப் பின் இரண்டு ஆண்டுகள் எழுதாமல் இருந்து 2016 டிசம்பரில் `பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ நாவலை எழுதினேன். அது என் முதல் நாவல். இப்போது 2018 டிசம்பரில் வெளிவந்திருக்கும் `கழிமுகம்’ இரண்டாவது நாவல். சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 

இது மனிதர்களைப் பற்றியதல்ல. `பூனாச்சி’ நாவலில் சில அசுரக் கதாபாத்திரங்களை உருவாக்கியிருந்தேன். அவற்றின் தொடர்ச்சியாக இந்த நாவலில் வருபவர்களும் அசுரர்களாகவே இருக்கிறார்கள். பூனாச்சியில் தொடங்கிய அசுர உலகம் இதில் சற்றே விரிந்திருக்கிறது. அந்த உலகமும் காலத்துக்கேற்ப மிக நவீனமயப்பட்டிருக்கிறது. அவர்களுக்கும் நிறையப் பிரச்னைகள். எந்த வாழ்க்கையும் பிரச்னையின்றி அமைவதில்லை. குமராசுரர், மங்காசுரி என்னும் தம்பதியர் அசுர உலகத்தின் சிறுநகரம் ஒன்றில் வசித்துவருகிறார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு மகன் மேகாஸ். இந்த மூவரும் தம் வாழ்வை வடிவமைத்துக்கொண்டவிதம், அதைத் தக்கவைத்துக்கொள்ளும் பயம், எதிர்காலம் பற்றிய பரிசீலனைகள் என விரிகிறது நாவல். 

மேகாஸ் என்னும் ஒரு குட்டி அசுரனைக் கல்வி கற்கவைப்பதற்குள் அந்தப் பெற்றோர் படும்பாடு பெரிது. அதற்காக அலையும் அலைச்சல்களும் போடும் திட்டங்களும் கேட்கும் ஆலோசனைகளும் எத்தனை எத்தனை! எல்லாம் செய்தாலும் இந்த நவீனகாலத் தொழில்நுட்பமும் பொருள்களும் நடுவில் புகுந்து என்னென்னவோ மாயங்களைச் செய்கின்றன. அவற்றை எதிர்த்து நிற்பது இயல்கிற காரியமா? அவற்றின் பகாசுர வாய் எல்லாவற்றையும் விழுங்கிவிடும் தன்மைகொண்டதல்லவா? தப்பிப் பிழைத்தோடும் உயிர்களையும் மூச்சுக்காற்றால் நசுக்கி ஈர்த்துவரும் வல்லமைகொண்டது அது. இப்படி அசுர உலகத்தின் சமகாலமும் அது உருவாக்கும் பதற்றங்களும் அவற்றால் ஏற்படும் மனச்சிக்கல்களும் காட்சிகளாகியுள்ளன. 

இதன் சொல்முறையில் புதிய பரிசோதனை ஒன்றை முயன்றிருக்கிறேன். அது பகடி செய்தல். மையப்படுத்தப்பட்ட ஒரே ஒரு வாழ்க்கைமுறையை வைத்துக்கொண்டு அல்லலுறுபவர்கள் அசுரர்கள். அந்த வாழ்க்கைமுறையைப் பகடியாக்கிப் பார்த்திருக்கிறேன். பாத்திரங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றைத் தேர்வுசெய்துகொண்டதில் மட்டுமல்ல, பாத்திரங்களின் ஒவ்வோர் அசைவையும் பகடிசெய்வதுதான் நோக்கம். அதற்கேற்ப மொழியை இலகுவாக்கி ஓடவிட்டிருக்கிறேன். தமிழ் எழுத்துமொழி, பேச்சுமொழி என்னும் பிரிவினையை உடையது. அதேபோல பொதுமொழி, வட்டாரமொழி என்றும் பிரிக்கலாம். இந்த நாவலில் பொதுமொழியைத்தான் பயன்படுத்தியிருக்கிறேன். என்னையறியாமல் எங்கேனும் வட்டார மொழி வந்திருக்கலாம். எந்தச் சொல்முறைக்கும் வாகாக இயைந்துகொடுக்கும் மொழியின் அற்புதம் எனக்குப் பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது. 

நூல் எழுதுவதில் நேரும் பத்து அழகுகள், பத்து குற்றங்கள் ஆகியவற்றை வகைப்படுத்திச் சொல்கிறது தமிழ் இலக்கணம். `குற்றம்’ என்று ஒன்றைச் சொல்வதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடில்லை. இலக்கியம் பற்றி வைத்திருக்கும் வரையறைக்குள் ஒன்றை அடக்கிப் பார்க்கும்போது அடங்காதவற்றை `குற்றம்' என்று சொல்ல நேர்கிறது. எப்போதும் வரையறையை மீறுவதும் கடப்பதும் இலக்கியத்தின் தன்மை. இந்த நாவலில் இரண்டு குற்றங்களைத் திட்டமிட்டே செய்திருக்கிறேன். அவை மிகைபடக் கூறல், மற்றொன்று விரித்தல். அசுர உலகத்தின் நடைமுறையில் ஒன்றை மிகைப்படுத்திச் சொல்வதும், மற்றொன்றை விரித்துச் செல்வதும் சாதாரணம். பேச்சுமொழியின் உரையாடல் உத்திகளான அவற்றை நாவலுக்காக எடுத்துக்கொண்டிருக்கிறேன். ஆகவே, குற்றம் புரிந்திருக்கிறேன் என்று சொல்லப்படலாம். யாரேனும் தீர்ப்பு எழுதி தண்டனையும் தரலாம். தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் பொருட்டு நாவல் முழுவதையும் முழுக் கற்பனையாகவே எழுதியிருக்கிறேன். உண்மையல்லாத வரிகளால் நிறைந்திருக்கும் நாவல் இது."

அடுத்த கட்டுரைக்கு