Published:Updated:

'ஸ்டீவ் ஜாப்ஸிடம் இந்தப் பெயருக்குத்தான் அதிகம் போராடினாள் மகள் லிசா..!’ #SmallFry புத்தகம் ஒரு பார்வை

“நான் சாகும்போது, என்னை ஓர் ஆப்பிள் மரத்தடியில் புதை” வாழ்வின் ஏதோ ஒரு தருணத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் தன் மகளிடம் கூறிய வார்த்தைகள் இவை. சவப்பெட்டிகள் ஏதும் இல்லாமல் மரத்தினடியில் தாம் புதைக்கப்பட்டால், அந்த மரம் தன்னை முழுமையாக உறிஞ்சித்தீர்க்கும் என்று என்று ஸ்டீவ் நம்பினாரோ என்னவோ. 

கூர்மையான கண்கள், தாடையின்மேல் கைவைத்தபடி பார்க்கும் அந்த மந்தகாசம் நிறைந்த முகம் – ஸ்டீவ் ஜாப்ஸ் என்று கூறியதும் மறக்க முடியாமல் நினைவிற்கு வருவது இவைதான். கேட்ஜட்டுகளில் தனித்துவமான அழகியலைத் தேடி அலையும் அனைவருக்கும் ஆப்பிள் மீதான மோகம் என்றும் தணிந்ததே இல்லை. தனித்துத் திமிர்ந்து நிற்கும் ஆப்பிள் இலச்சினையின் பின்னுள்ள அந்த மனிதனின் தனிப்பட்ட வாழ்வை, ஒரு மகளாக இருந்து பதிவு செய்திருக்கிறார் லிஸா ப்ரென்னன் ஜாப்ஸ். திருமணமாகாமல் இணையராக வாழ்ந்த ஸ்டீவ் –க்றிஸ் ப்ரென்னன்னுக்கு மகளாகப் பிறந்த லிஸாவை, தன்னுடைய மகள் என்று ஸ்டீவ் வெகு காலத்திற்குப் பொதுவெளியில் ஒப்புக்கொள்ளவே இல்லை. பல்வேறு சிக்கல்களும், சவால்களும் நிறைந்த ஒரு குடும்ப உறவானது வளர்பருவத்தில் எப்படி எல்லாம் லிஸாவைப் பாதித்தது, தன் தந்தையின்மேல் மற்றவர்கள் கொண்ட பெரும் பிம்பத்திற்கும், அருகிலிருந்தாலும் அந்நிய உணர்வோடு இருக்கும் அவருடைய தனிப்பட்ட பிம்பத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்று அடர்த்தியான பல உணர்வுகளைத் தன்னுடைய எழுத்தின் வழியே நமக்கும் கடத்தி விடுகிறார் லிஸா. #SmallFry

லிஸாவுடைய தாயாரின் குழந்தைப்பருவம், அத்தனை உவப்பானதாக அமையவில்லை. சற்று மனச்சிதைவு உள்ள தாயின் சுடுசொற்களிலிருந்து அவரைக் காப்பாற்றிக்கொள்ள ஸ்டீவின் காதலைத் தேர்ந்தெடுத்தார். சுற்றித்திரிவதை இயல்பாகக் கொண்டு, புதிய எண்ணங்களைப் பேசி, நிறுவனமயமாக்கப்பட்ட கல்வியை எதிர்த்து நடக்கும் ஸ்டீவின் காதல், ஓவியத்தில் ஆர்வம் நிறைந்த ப்ரென்னனின் மனதிற்குப் பெரும் ஆறுதலாக அமைந்தது. 

Photo :  Brigitte Lacombe

கருணையற்ற காலம், அந்த இணையரைப் பிரித்தது. ஒற்றைப் பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைக்கு இருக்கும் ஏக்கத்தையும், வலியையும் அவ்வளவு உண்மைத்தன்மையோடு பதிவு செய்திருக்கிறார் லிஸா. பாதுகாப்பையும், கதகதப்பையும் ஒரு குழந்தைக்கு வழங்க வேண்டிய தாய், “இது நடந்திருக்க வேண்டாம், நீ பிறந்திருக்கக் கூடாது” என்று காருக்குள் கீச்சொலி நிறைய வெடித்து அழுகிறார். அதைக் குழப்பத்தோடு பார்க்கும் குழந்தை லிசாவிற்கு அப்போது என்னவெல்லாம் தோன்றியிருக்கும்? 

அந்தத் தாயின் கீச்சொலி நிறைந்த அழுகைக்குக் காரணமாக இருந்தவர், ஸ்டீவ். லிஸா தன்னுடைய குழந்தை என்று பொதுவெளியில் பல ஆண்டுகளாக மறுத்தும், மறைத்தும் வந்த அவர், அதற்காக நடந்த மரபணுப் பரிசோதனைகளைக் கூட மிகுந்த எள்ளலோடும், இளக்காரத்தோடும்தான் எதிர்கொண்டார். அவர் உருவாக்கிய கணினிக்கு அவர் சூட்டிய பெயர், ‘லிஸா’. இந்தக் கணினி சந்தையில் தோல்வியடைந்தாலும், இதன் பெயர்க்காரணம் தான்தானா என்று லிஸா கேட்டபோது ‘இல்லை’ என்றே மறுத்தார் ஸ்டீவ். 
ஸ்டீவ் – ப்ரென்னன் ஆகிய இருவருக்கும் தனிப்பட்ட வாழ்வில் இருந்த சிக்கல்கள்தான், லிஸாவை வெகுவாகப் பாதித்தன. லிஸாவிற்கும் அவருடைய அம்மாவிற்கும் எப்போதும் சண்டைகள் வெடித்துக்கொண்டேயிருந்தன. லிஸா பிறந்திருக்க வேண்டாம் என்று அவரிடமே நிறைய முறை கூறியிருக்கிறார் அவர். ஸ்டீவ்வுடனான உறவோ அவருக்கு மிக வித்தியாசமான ஒன்றாக இருந்தது. எவ்வளவு வித்தியாசமாக என்று கேட்டால், லிஸா அவரை ‘அப்பா’ என்றுகூட அழைத்தது கிடையாது! நினைவு தெரிந்த பருவத்திற்குப் பிறகே அவரை முதல் முறையாகச் சந்திக்கும் லிஸா, தன் தாயைப்போலவே அவரும் ‘ஸ்டீவ்’ என்றே அழைக்கிறார்! 

லிசாவிற்கும், அவருடைய தந்தைக்கும் இடையிலான உறவு, ஒரு சராசரியான அப்பா மகளுக்கான உறவாக இருந்ததில்லை. நூற்றாண்டு காலம் பழைமை வாய்ந்த ஓக் மரங்களுக்காக ஒரு பண்ணை வீட்டையே வாங்கச் சித்தமாக இருக்கும் அப்பாவிற்கும்,  இருக்க ஓர் இடமின்றி மன உளைச்சலில் அலையும் அம்மாவிற்கும் இடையில் லிஸா ஊசலாடிக்கொண்டே இருந்திருக்கிறார். ஸ்டீவிற்குத் தன்னுடைய மகளுடன் எப்படிப் பழகவேண்டும் என்றுகூடத் தெரியாது. புதன்கிழமை தோறும் அவரை அழைத்துச் செல்வதும், நீச்சல் குளத்தில் விளையாட விட்டு, திரைப்படங்கள் பார்க்க மட்டுமே உடனிருக்கும் ஸ்டீவ், அவருக்கு என்ன எல்லாம் பிடிக்கும் என்று கேட்கவும், அவருடன் மழலை மொழியில் பேசவும் சித்தமாக இல்லை. சில சமயங்களில் இதற்கு மாறாக லிசாவுடன் ஸ்கேட் விளையாடியும் பழகியிருக்கிறார் ஸ்டீவ். 

தன்னுடைய அம்மாவின் காதலர்களுடனும், அப்பாவின் காதலிகளுடனும் லிஸா பழகியிருக்கிறார். அவர்களுடன் கழித்த பொழுதுகள் தன்னுடைய வாழ்க்கைக்கு எப்படி எல்லாம் மாற்றங்களை வரவழைத்தன என்று அவர் குறிப்பிடத் தவறவில்லை. குழப்பங்களும், சிக்கல்களும் நிறைந்த ஸ்டீவின் மறுபக்கம் நம்ப முடியாத அளவிற்கு ஒரு மெல்லிய, நுண்ணிய இழை போல இருந்ததன் காரணம்தான் லிஸாவை எப்போதும் சற்று குழப்பத்தில் வைத்திருக்கிறது. காலப்போக்கில் ஸ்டீவ், லாரின் எனும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார். அந்தத் திருமணத்தில் பிறக்கும் முதல் குழந்தையை ஸ்டீவ் அணுகிய விதத்திற்கும், லிசாவை அணுகிய விதத்திற்கும் தான் அவ்வளவு வேறுபாடுகள். 

அப்பா ஒரு புறம், அம்மா ஒரு புறம் என்று வாழும் ஒரு குழந்தைக்கு, யாரோடு தான் சேர்ந்திருக்க வேண்டும் என்ற குழப்பம் நிறையவே வரும். லிஸாவையும் அத்தகைய குழப்பம், அம்மாவுடன் இருக்கும்போது அப்பாவுடன் இருக்கவும், அப்பாவுடன் இருக்கும்போது அம்மாவின் பிரிவையும் அவருக்கு உரைத்தபடி இருக்கின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், ஸ்டீவிற்கு அமையும் புதுக் குடும்பத்தில் தானும் ஓர் அங்கமாக மாட்டோமா என்று ஏங்கிப்போகும் லிஸா, அதே சமயத்தில், வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் தன்னை நன்றாகப் பார்த்துக்கொள்ளும் அம்மாவையும் நினைத்துக் கொள்கிறார். 

லிஸாவிற்கான முழுமையான அங்கீகாரத்தை ஒருபோதும் ஸ்டீவ் கொடுக்கவில்லை என்றுகூட நாம் நினைத்துக்கொள்ளலாம். முதல் கணினியின் பெயர்க்காரணம் நானா என்று பலமுறை லிஸா கேட்டபோதும்கூட, ஸ்டீவ் மறுத்துவந்திருக்கிறார். “அது நீ இல்லை. என் முன்னாள் காதலியின் பெயர்தான் லிஸா” என்று கூறியவர், பிற்காலத்தில் ஐரோப்பாவில் ஒரு விருந்தில். ஆப்பிள் லிஸா கணினியின் பெயர்க்காரணம் அவர்தான் என்று ஒப்புக்கொள்கிறார். பதினான்கு வயதில், ஜப்பான் கல்விச்சுற்றுலாவில் திடீரென்று தன் தந்தையைச் சந்திக்கும் லிஸா, என்ன செய்வது என்று தெரியாமல் அவரது மடியில் ஓடிச் சென்று அமர்ந்து கொள்கிறார். அப்பாவின் அந்த அக்கறையும், ஸ்பரிசமும், பரிவும் எப்போதும் நமக்குக் கிடைக்காதா என்று ஏங்கியவர், இறுதிக்காலத்தில் புற்றுநோயுடன் ஸ்டீவ் போராடுகையில், “உனக்கு ஒரு நல்ல குழந்தைப்பருவத்தை நான் அளித்திருக்க வேண்டும்” என்று கைகளால் நலிந்த முகத்தைப் புதைத்து வெடித்து அழும்போது, எப்படிப்பட்ட மனநிலையில் இருந்திருப்பார் என்பது அவருக்கே வெளிச்சம். 

புரிந்துகொள்ளவே முடியாத ஒரு பிம்பத்தைத் தனக்காகக் கட்டமைத்துக்கொண்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அந்தப் பிம்பம் அவரைக் காப்பாற்றியது என்றாலும், அந்தப் பிம்பத்தால் தனிப்பட்ட வாழ்க்கையில் அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் சிக்கல்களுக்கு உள்ளானார்கள் என்பதே உண்மை. கடல் போன்ற போராட்டங்கள் நிறைந்த ஒரு வாழ்வினைத் திரும்பிப் பார்க்கும்பொது ஏற்படும் ஆசுவாசத்தையும், நடுக்கங்களையும் சேர்த்தே பதிவு செய்திருக்கிறார் லிஸா. அவரது செல்லப்பெயர் 'Small Fry'. அதாவது குட்டி மீன்குஞ்சு. இந்தப் புத்தகத்திற்கும் அதே பெயரை அவர் சூட்டியிருப்பது அழகான பொருத்தம் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்?!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு