Published:Updated:

அதற்கு மேல் - சிறுகதை

அதற்கு மேல் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
அதற்கு மேல் - சிறுகதை

வண்ணதாசன் - ஓவியங்கள்: ஸ்யாம்

அதற்கு மேல் - சிறுகதை

வண்ணதாசன் - ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
அதற்கு மேல் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
அதற்கு மேல் - சிறுகதை

சுலோச்சனா நிற்பதாக காந்திமதிதான் சொன்னாள்.

கையில் ஒரு வெள்ளைச் சடை நாய்க்குட்டியுடன் நின்று கொண்டிருந்தாள். நான்கைந்து இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கப்படும் நிலையில் இருக்கும் ஒர்க்‌ஷாப் அது. மழையில் அவளைப்போலவே இன்னும் நான்கைந்து பேர் அங்கே ஒதுங்கி நின்றார்கள். பக்கத்தில் ஒரு டீக்கடையில் சத்தமாகப் பேசியபடி டீ குடித்துக்கொண்டி ருந்தார்கள். மழை, எல்லோர் முகத்திலும் ஒரு சிரிப்பைக் கொடுத்திருந்தது. குடித்துவிட்டு வைத்த கண்ணாடி டம்ளர்களை அங்கங்கே இருந்து எடுத்துக்கொண்டிருந்த பையன், மூன்று கிளாஸ்களை விரல்களுக்குள் செருகியபடி, அடுத்த கையை வெளியே நீட்டி உள்ளங்கையில் மழைநீரை வாங்கி, தரையில் சொட்டாக விட்டுக்கொண்டிருந்தான். அதற்கு முன்பாக, நாய்க்குட்டியுடன் நிற்கும் இவளிடம் வந்து, நாய்க்குட்டியைத் தடவிக்கொடுத்து, வெளியே தொங்கிக்கிடந்த கால் பாதங்கள் இரண்டையும் மெதுவாகக் குலுக்கி முத்தமிட்டுவிட்டுப் போயிருந்தான்.

அதற்கு மேல் - சிறுகதை

ராமராஜன், ஆட்டோவைக் கொஞ்சம் பின்னுக்கு நகர்த்தச் சொன்னான். ஆட்டோ டிரைவருக்கு அது தெரிந்த ஒர்க்‌ஷாப்போல. பின்னுக்குத் தள்ளி நகர்த்தி, அதற்கு அருகில் நிறுத்திய கையோடு வலதுபக்கமாக இறங்கி இவனைப் பார்த்துச் சிரித்து, கடைப்பக்கமாக ஓடினார். மழை பெய்யும்போது யார் இப்படி மழையில் நனையாமல் இருப்பதற்காக ஓடினாலும் நன்றாகத்தான் இருக்கிறது. அவர்கள் எப்படியும் கொஞ்சம் நனைந்தும் விடுகிறார்கள்.

``கொஞ்சம் நீங்க அவளுக்குக் கையைக் காட்டுங்க’’ என்று காந்திமதி இடது ஓரம் இருந்த ராமராஜனிடம் சொன்னாள். ராமராஜனுக்கு, `சுலோச்சனா’ என்ற பெயரைச் சொல்லிக் கூப்பிட ஆசையாகத்தான் இருந்தது. எத்தனையோ தடவை இதற்கு முன்னால் பார்த்திருந்தாலும் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டதில்லை.

``ஹலோ... ஹலோ...’’ என்று முதலில் கூப்பிட்டான். கையை அசைத்தான். உரக்க சத்தம் வரும்படி கைதட்டினான். ஒவ்வொரு முறையும் பெயர் சொல்லிக் கூப்பிடுவது போன்ற கிளர்ச்சி அவனுக்கு இருந்தது. சுலோச்சனா கவனிக்கவில்லை. இதற்கிடையில் ஆட்டோவின் உட்பக்கம் காந்திமதி முடிந்தமட்டுக்கும் இவன் நெஞ்சுக்கு முன்னால் குனிந்து ``ஏ...’’ என்று சத்தம் கொடுத்தாள். அவளுக்கும் சிரிப்பு வந்தது... ராமராஜனுக்கும் சிரிப்பு வந்தது.

சுலோச்சனாவுக்குப் பக்கத்தில் நின்றவர், ``உங்களை யாரோ ஆட்டோவுல இருந்து கூப்பிடுதாங்க’’ என்று சொல்லியிருக்க வேண்டும். அப்படித்தான் அவர் சைகைகள் இருந்தன. இவர்கள் நிறுத்திய ஆட்டோ தவிர, இவர்களுக்குப் பின்னால் மேலும் இரண்டு வந்து இப்போது நின்றிருந்தாலும் சுலோச்சனா சரியாக காந்திமதியின் கை அசைப்பைக் கண்டுபிடித்துவிட்டாள்.

ராமராஜனைப் பார்த்து சோகையாகச் சிரித்தாள். ராமராஜனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ``பார்த்துட்டாங்க’’ என்று உட்பக்கம் சொன்னான். மழையையும் பாராமல் அவன் கீழே இறங்கி நின்று, ``நல்லா இருக்கீங்களா?’’ என்று சுலோச்சனாவிடம் கேட்டுக்கொண்டே, ``காந்தி, நீ வேணும்னா இறங்கிப் பேசு’’ என்றான்.

சுலோச்சனா, அந்தப் பழுதுபார்க்கப்படும் வாகனங்களுக்கும் மழைக்கு ஒதுங்கி நிற்கும் நான்கைந்து பேருக்கும் மத்தியில் வெள்ளைச் சடை நாய்க்குட்டியுடன் நிற்பது ரொம்ப அழகாக இருந்தது. எங்கே இருந்தாலும் சிலபேர்தான் இப்படி அழகாக இருக்க முடிகிறது.

ஒருதடவை ராமராஜன் யாரையோ ரயில்வே ஸ்டேஷனில் வழி அனுப்பிவிட்டு வந்து கொண்டிருக்கிறான். பஸ் ஸ்டாண்டில் ஐந்தாம் நம்பர் பஸ் பிடிக்க வேண்டும். பழைய புத்தகக்கடைக்கும் பழக்கடைக்கும் மத்தியில் சுலோச்சனாவின் கணவர் பைக்கில் காலை ஊன்றிக்கொண்டிருக்கிறார். அவரைப் பார்த்ததும் ராமராஜனுக்கு உடனே சுலோச்சனா ஞாபகம்தான் வந்தது.

``என்ன பரி, நீங்க மாத்திரம் இங்கே தனியா... அவங்களைக் காணோம்?’’ என்று கேட்டான். பரிமேல் அழகர் வெறுமனே சிரித்து, ஹெல்மெட் வைத்திருக்கும் கையை பாரத் காபிக்கடைப் பக்கம் ஆட்டினார். ராமராஜன் பார்த்தான். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதற்கு மேல் - சிறுகதை

காபிப்பொடி விற்கும் சின்னக் கடையில்கூட சுலோச்சனாவின் தோற்றம் அப்படி இருந்தது. அப்போதுதான் வாங்கித் தலையில் வைத்திருக்க வேண்டும். பிச்சிப்பூ, ஒரு சாணுக்குத் தோளில் தொங்கிக்கொண்டிருந்தது. ராமராஜன், அன்று மிகச் சாதாரண உடையில் ஆபீஸிலிருந்து பஸ் பிடித்து நேராக ரயில்வே ஸ்டேஷன் வந்து வழியனுப்பிவிட்டு வந்துகொண்டிருக்கிற தோற்றத்தில் இருந்தான். ``மேடத்துக்கிட்டே சொல்லுங்க. இப்போ 5A ஒண்ணு உண்டு. அதை விட்டா, லேட் ஆயிடும்’’ என்று சுலோச்சனா வருவதற்குள் நகர்ந்துவிட்டான்.

இன்றைக்கு அப்படி இல்லை. ராமராஜன், காந்திமதி இருவருமே நல்ல உடையில் இருக்கிறார்கள். மகள் நவீனா, காந்திமதியின் அக்கா வீட்டில் இவர்கள் திரும்பும் வரை இருப்பாள். டவுனுக்குப் போய் துணி எடுத்துவிட்டு, மத்தியானக் காட்சி சினிமாவும் பார்த்துவிட்டு வருகிறார்கள். படம், இரண்டு பேருக்குமே பிடித்திருந்தது.

படம் விடுவதற்குக் கால் மணி நேரத்துக்கு முன்பே நல்ல மழை. காந்திமதிக்கு அப்படி தியேட்டருக்குள் இருக்கும்போது மழை பெய்வது பிடித்திருந்தது. ``நல்லா இருக்குல்லா சத்தம்?’’ என்று ராமராஜனின் காதில் சொன்னதும், ``ஜவுளிக்கடைப் பையெல்லாம் இருக்கு. பேசாமல் ஒரு ஆட்டோ பிடிச்சிருவோம்’’ என்று அப்போதே சொல்லிவிட்டான். தியேட்டரை விட்டு வரும்போதே, மற்ற ஆட்டோக்களோடு இந்த ஆட்டோவும் வாசலில் நின்றது.

``ஆறுமுகச் சாமியின் அண்ணன்தானே நீங்க?’’ என்று காந்திமதி ஆட்டோ டிரைவரிடம் கேட்டாள்.

``ஆமா மதினி. ஏறுங்க’’ என்று அவர் இருந்த இடத்திலிருந்து சாய்ந்து கதவைத் திறந்து விட்டார்.

``ஜவுளி எடுத்துட்டு வார பாதையா அண்ணாச்சி?’’ என்று ராமராஜனிடம் ஒரு மரியாதைக்குக் கேட்டார். ராமராஜனுக்கு அவரைத் தெரியவில்லை. காந்திமதி இத்தனைக்கும் வீட்டோடுதான் இருக்கிறாள். அவளுக்கு எப்படியோ நிறையபேரைத் தெரிந்திருக்கிறது.

சுலோச்சனாவையும் அப்படித்தான். அவளை காந்திமதிக்கு முன்னேபின்னே எல்லாம் தெரியாது. சுலோச்சனா, சார்-பதிவாளர் அலுவலகத்தில் வேலைபார்க்கிறாள். மனவளக்கலை மன்றத்தில் இவள் போய்ச் சேர்ந்தபோது, சுலோச்சனாவும் அதே பயிற்சிக்கு வந்திருப்பாள்போல. பிறந்த ஊர், வளர்ந்த ஊர் என்ற பேச்சு வந்தபோது, இவள் ``திருப்புடைமருதூர்’’ என்று சொல்ல, சுலோச்சனா தனக்கு ``வீரவநல்லூர்’’ என்று சொல்ல, இவ்வளவு போதாதா? அதிலிருந்து இரண்டுபேரும் ரொம்ப நெருக்கம். எவ்வளவு நெருக்கம் என்றால், சுலோச்சனா வெளியூர் போகும்போது இந்தச் சடை நாய்க்குட்டியை இரண்டு நாள் காந்திமதி பொறுப்பில் விட்டுவிட்டுப் போகும் அளவுக்கு ஆகிவிட்டது.

அப்படி இந்த நாய்க்குட்டியைக் கொடுக்க, சுலோச்சனா வருவாள் என்று காந்திமதி சொல்லியிருந்தாள். பாசிப்பயற்றுச் சுண்டல் அவித்திருந்த காந்திமதியிடம் அதையெல்லாம் சுலோச்சனாவுக்குக் கொடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு `குட் டே’ பிஸ்கட்டும் ஜாய் பேக்கரியில் வெஜிடபிள் பஃபும் வாங்கி வந்தான். வீட்டில் இருந்தால், ராமராஜன் சட்டை போடுவதில்லை. அன்று தேய்த்த சட்டை போட்டுக்கொண்டதில் காந்திமதிக்கு சந்தோஷம். வாய்விட்டே சொல்லிவிட்டாள்.

``எங்கே சுலோச்சனா வரும்போது மொட்டை மொழுக்கட்டைன்னு நிப்பீங்களோன்னு நினைச்சேன். உங்ககிட்டே சொல்லுததுக்கும் யோசனை.’’

ராமராஜன் வெறுமனே, ``அது எப்படி இருப்பேன்?” என்றான். அவளின் பின்பக்கத்தில் ஓர் அறைகூட வைத்தான். அப்படியெல்லாம் அவன் செய்கிறவனே அல்ல.

சுலோச்சனா, அன்று சுரிதாரில் வந்திருந்தாள். 35, 40 வயதில் அந்த உடையில் ராமராஜன் வீட்டுக்கு அதுவரை யாரும் வந்ததில்லை. நாய்க்குட்டியை மடியில் வைத்துக்கொண்டே நாற்காலியில் அமர்ந்து எதிரே ராமராஜனையும் காந்திமதியையும் உட்கார்த்திவைத்து இரண்டு நாள்கள் அதைப் பார்த்துக்கொள்ளவேண்டிய முறைகளைப் பற்றிச் சொன்னாள். பிரத்யேக உணவுகள் எதையும் அது எதிர்பாராது என்றாலும், அதற்குக் கொடுக்கவேண்டிய ஒருவகை பிஸ்கட் போன்ற எலும்பும் அல்லாத ஒரு திட உணவைப் பற்றியும் பாலின் அளவு பற்றியும் காந்திமதியிடம் சொன்னவள், ராமராஜன் பக்கம் திரும்பினாள்.

நேருக்குநேர் ராமராஜன் கண்களைப் பார்த்துப் பேசுவதில் சுலோச்சனாவுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. சுலோச்சனாவுக்கு அதிகம் பருமனான கண்கள் அல்ல. ஆனால், வசியம் நிரம்பியவையாக ராமராஜன் நினைத்தான். முதலில் சற்றுத் தயங்கியபடியே அவளைப் பார்த்தான். ``நல்லா கேட்டுக்கிடுங்க எல்லாத்தையும்’’ என்று காந்திமதி அவனிடம் சொன்னதும் அவனால் தொடர்ந்து சுலோச்சனாவின் முகத்தைப் பார்க்க முடிந்தது. ஊருக்குப் போவதை முன்னிட்டு அவள் தலைக்குச் சாயம் அடித்திருக்கிறாள் என்பது முதலில் தெரிந்தது அவனுக்கு.

``நீங்கள், ரீனாவைக் காலையில் வெளியே நடத்திச் செல்கிற பொறுப்பை எனக்காக ஏற்றுக்கொள்ள வேண்டும். ரீனா ரொம்ப பயந்த பிள்ளை. முக்கியமா தெருநாய்களின் குரைப்பைக் கேட்டால் அவளால் எதையும் வெளியேற்றவே முடியாது. அடக்கிக்கொண்டு கஷ்டப்படுவாள்’’ – சுலோச்சனா சொல்லச் சொல்ல, ராமராஜனுக்கு எரிச்சலும் ஆவலும் வந்தன.

``அதையெல்லாம் நான் பார்த்துக்கிடுதேன். நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க’’ என்றான்.

இப்படி ராமராஜன் வாக்குறுதி அளிக்கும்போதே, சுலோச்சனா தன் மடியில் இருந்த சடை நாய்க்குட்டியை அப்படியே அள்ளி ராமராஜனிடம் நீட்டினாள். 

அதற்கு மேல் - சிறுகதை

``நீங்கள் கையில் வாங்கக்கூட வேண்டாம். அப்படியே இருங்கள். உங்கள் மடியில் வைத்துவிடுகிறேன். அவள், பரியிடமும் கௌதமிடமும் அப்படி ஒட்டிக்கொள்வாள். ஆண்களை அவளுக்கு அதிகம் பிடிக்கும். உங்களை அவள் காந்திமதியைப்போலக் காதலிப்பாள்’’ என்று காந்திமதி பக்கம் பார்த்தாள்.

காந்திமதி, தன் நாற்காலியிலிருந்து கை நீட்டி எட்டி சுலோச்சனாவை அடித்தாள். ராமராஜனுக்கு, காந்திமதியைக் கட்டிக்கொள்ளவேண்டும் என்ற வேட்கை மிகுந்தது. அது சுலோச்சனாவை அல்ல, நிச்சயமாகக் காந்திமதியைத்தான் என்று நம்பினான். சுலோச்சனா மடியில் வைத்த நாய்க்குட்டியை, காந்திமதி வந்து குனிந்து தடவிக்கொடுத்தாள். காந்திமதி இன்று சீயக்காய் போட்டுத் தலைக்குக் குளித்திருப்பாள்போல. ராமராஜனின் புலன்கள் அன்று அதிக மடங்குகள் கூர்மையாகியிருந்தன.

பக்கத்து வீட்டுப் பிள்ளைகளோடு விளையாடப் போயிருந்த நவீனா, நேரே நாய்க்குட்டியிடம் வந்தாள். ராமராஜன் மடியில் இருந்த நாய்க்குட்டியின் தலையைத் தடவிக்கொடுத்தாள்.

``ரீனா சிரிக்கிறா பாரு நவீனா’’ என்று சுலோச்சனா சிரித்தாள்.

``நவீனாவுக்கு பயமே இல்லை பாருங்க’’ என்று காந்திமதி சந்தோஷப்பட்டாள்.

``அவ எம் மகள்லா’’ என்று ராமராஜன் அவளைக் கொஞ்சி, இறுக்கிக்கட்டி முத்தம் கொடுத்தான். நவீனாவை இப்படிச் செல்லம் கொஞ்சி முத்தம் எல்லாம் கொடுத்திருப்பது உண்டா என்றால், இல்லவே இல்லை என்றுதான் சொல்ல முடியும்.

``திங்கள்கிழமை ஒருநாள் லீவு போட்டிருக்கிறோம். செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்து ரீனாவைக் கூப்பிட்டுக்கொள்வோம்’’ என்று சுலோச்சனா சொல்லியிருந்தாள்.

ராமராஜனுக்கு, செவ்வாய்க்கிழமை என்பது தவறாமல் ஞாபகத்தில் இருந்தது. அவன் அன்றைக்கு சீக்கிரம் எழுந்து ரீனாவைக்கூட வெளியே விடிந்தும் விடியாத வெளிச்சத்தில் கூட்டிவிட்டுப் போய் வந்திருந்தான்.

``கீரைத்தண்டு விற்றுக்கொண்டு போனார்கள். நன்றாக இருந்தது. வாங்கிக்கொண்டு வந்தேன்’’ என்று ராமராஜன் சாப்பாட்டு மேஜையில் வைத்தது அதிசயமான விஷயம். அப்போது காந்திமதி, நவீனாவை எழுப்பிவிட்டுக்கொண்டிருந்தாள்.

``கொஞ்ச நேரத்தில் ரீனா போயிரும் குட்டி’’ என்று மகளின் தூக்கக்கலக்க முகத்தைத் தடவிக்கொடுத்தாள். ராமராஜன், சுலோச்சனாதான் அப்படித் தூங்கி எழுந்திருப்பதாக ஒரே ஒரு நொடி யோசித்தான். மிகுந்த அவசரத்துடன் அதை மாற்றிக்கொள்வதுபோல நவீனா பக்கம் வந்து அவள் தலையை வருடிக்கொடுத்தான். சடை நாய்க்குட்டி, படுக்கை அறை வந்துவிட்டு அந்த எல்லையின் வாசனை ஒவ்வாததுபோல உடனே திரும்பி முதல் அறைக்குப் போனது.

அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்டது. ராமராஜன் அந்த அவசரத்திலும் ஹவாய் செப்பலைப் போட்டுக்கொண்டு போய்த் திறந்தான். சுலோச்சனா வரவில்லை. பரிமேல் அழகர் ஹெல்மெட்டும் கையுமாகச் சிரித்துக்கொண்டு, ``ரீனா...’’ என்று குரல் கொடுத்தார். ரீனா, ஓடியே வந்து பரியின் இடுப்பின் உயரத்துக்கு முன்கால்களை வைத்துக்கொண்டு நின்றது. அது வரைந்த வட்டத்தை அதுவே சுற்றுவதுபோல ஏதேதோ குரைப்பில்லாத ஓர் ஊமைக்குரலிட்டு, அது வெளிவரும் முன்பே அந்தக் குரலை விழுங்கியது. மறுபடி முன்கால்களைப் பரியின் இடுப்பில் வைத்து நின்று வாலாட்டியது.

காந்திமதி, சிரித்த முகத்தோடு சேலையில் கையைத் துடைத்துக்கொண்டே அடுப்படியிலிருந்து வந்தாள். ``அது ஒரு சேட்டை பண்ணலை. அன்னம்போல இருந்தது’’ என்றாள்.

ராமராஜன் ``அவங்களும் ஊர்ல இருந்து வந்தாச்சு இல்லையா?’’ என்று கேட்டான். சுலோச்சனா வெளியூரிலேயே இருந்துவிடுவாளோ என்ற பதற்றம் அந்தக் குரலில்.

பரி ``அவளுக்குக் களைப்பாக இருக்கிறது. அலுவலகம் வேறு போக வேண்டும்’’ என்றார்.

ராமராஜன், ``உடம்புக்கு ஒண்ணுமில்லையே!’’ என்று கரிசனப்பட்டதற்குப் பதில் சொல்லாமல், நவீனாவைப் பார்த்து ``ரீனாவை உங்க வீட்ல வெச்சுக்கிடுதியா?’’ என்று கேட்டதும் நவீனா `சரி’ என்று தலை அசைத்தாள். சிறுகுழந்தைகள், சரியான விஷயங்களுக்குச் சரியாகத் தலையசைப்பது எவ்வளவு நன்றாக இருக்கிறது.

``இப்போ வேண்டாம். அது அத்தையைத் தேடிக்கிட்டிருக்கும். இன்னொரு நாளைக்கு. சரியா?’’ என்று பரி சொன்னதும், ``ஆன்ட்டியே கொண்டாந்து உனக்குத் தருவாங்கடா’’ என்று ராமராஜன் மேலும் ஒரு சமாதானத்தைச் சொன்னான்.

பரி, ரீனாவுடன் புறப்பட்டபோது ராமராஜன் வாசல் வரை போகவில்லை. காந்திமதியும் நவீனாவும் போய் வழியனுப்பிவிட்டு வந்தார்கள்.

``அதைக் கொண்டுபோகிறதுக்கு என்று ஒரு பிரம்புக்கூடை வெச்சிருக்காங்க. அழகா இருக்கு’’ என்று காந்திமதி அவனிடம் சொன்னதை ராமராஜன் காதில் வாங்கிக்கொள்ளவேயில்லை.

இப்போது மழைக்கு ஒதுங்கி இந்த ஒர்க்‌ஷாப்பில் நிற்கிற சுலோச்சனா, அப்படி கூடை எதிலும் எடுத்து வந்ததுபோல் தெரியவில்லை. நாய்க்குட்டியை நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருக்கும் சுலோச்சனாவைப் பார்த்து, ``சார், ஒரு பிரம்புக்கூடை வெச்சிருப்பாரே இதுக்குண்ணு!’’ என்று கேட்டான். சுலோச்சனா பதில் சொல்லாது, ஆட்டோவிலிருந்து இறங்கி இவள் பக்கம் வருகிற காந்திமதியையே பார்த்துக்கொண்டு நின்றாள்.

இடையில் தேங்கிக் கிடக்கும் மழைத்தண்ணீரை காந்திமதி பொருட்படுத்தாது ஒரு சிறு தாவலில் தண்ணீர் பாளமாகச் சிதற, சுலோச்சனாவின் பக்கத்தில் வந்துவிட்டாள். வழுக்கிவிடுமோ என்ற கவனம் அதுவரை அவளுக்கு உள்ளே இருந்திருப்பதால், நின்றதும் காந்திமதி தன் உடலை நிதானிப்பதற்கு சுலோச்சனாவின் தோளில் கையை ஊன்றியதும் சற்றுச் சாய்ந்த சுலோச்சனாவை, ``பார்த்து... பார்த்து’’ என்று முதுகுப்பக்கம் தாங்கப்போவதுபோல ராமராஜன் கைகளை அகலமாக வைத்துக்கொண்டான். தோளில் ஊன்றிய கையை இப்போது காந்திமதி சுலோச்சனாவின்மேல் புஜத்தில் வைத்துப் பிடித்த பெருவிரலின் கீழ் சுலோச்சனாவின் கைச் சதை அமுங்கியது. அந்த இடத்தில் விழுந்த சிறுகுழியை ராமராஜனால் பார்க்காமல் தவிர்க்க முடியவில்லை.

சுலோச்சனா பக்கத்தில் நின்றவர்கள், இவனுக்கும் காந்திமதிக்கும் இடம் விட்டு ஒதுங்கிக்கொண்டார்கள். இவ்வளவு நேரம் சுலோச்சனாவைப் பார்த்தபடி சிகரெட் குடித்துக்கொண்டு இருந்தவர், இப்போது காந்திமதியைப் பார்க்க ஆரம்பித்திருந்தார். காந்திமதிக்கு இது தெரிந்தது. ``வாங்க எல்லாரும்... இங்கே நிக்கிறதுக்கு, ஆட்டோவுக்குப் போயிரலாம்’’ என்று சொல்லி சுலோச்சனா முதுகில் கையை வைத்து நகர்த்தினாள்.

சுலோச்சனா, டீக்கடையில் வேலைபார்க்கும் அந்தச் சின்னப் பையனையே பார்த்துக்கொண்டு ஆட்டோவில் ஏறினாள். ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரியில் இருந்து பேறுகாலம் முடிந்து பிள்ளையை எடுத்துக்கொண்டு ஏறும் ஒரு பெண்ணைப்போல சுலோச்சனா நாய்க்குட்டியுடன் ஏறுவது இருந்தது. அடுத்து காந்திமதி ஏறினாள். ராமராஜன், ஆட்டோ டிரைவர் இருக்கிற ஒர்க்‌ஷாப் ஸ்டூலைப் பார்த்தான். அவரும் இங்கேயே பார்த்துக்கொண்டு, ஒரு நிமிடத்தில் வந்துவிடுவதாகக் குரல்கொடுத்தார்.

``ரீனா என்ன சத்தமே போடக்காணோம்... காய்ச்சல்காரப்பிள்ளை மாதிரி சோர்ந்துபோய்க் கிடக்கு?’’ என்று சொன்ன காந்திமதி, ``நீயும் அப்படித்தான் இருக்கே. ஆள் சரியில்லை?’’ என்று சுலோச்சனாவின் நெற்றியில் கை வைத்தாள்.
வெளியே நின்ற ராமராஜன், ``நானும் கவனிச்சேன். அவங்க இப்படி டல்லா இருக்கவே மாட்டங்களேன்னு தோணுச்சு’’ என்றான். சுலோச்சனா, ராமராஜனைப் பார்க்கவேயில்லை. வெளியே மழையையே பார்த்துக் கொண்டிருந்தாள். மழையைப் பார்க்க ஆரம்பித்த சுலோச்சனாவின் முகம், அவளுடையதுபோலவே இல்லை.

``இவளுக்கு ரெண்டு மூணு நாளா உடம்புக்குச் சரியில்லை. பரிக்குத் தெரிஞ்ச வெட்னரி டாக்டர் ஒருத்தர் இந்தப் பக்கம் இருக்கார். அவர்கிட்டே காண்பிச்சுட்டு வந்துகிட்டிருந்தேன். அதுக்குள்ளே வண்டி ஏதோ ரிப்பேர். ஆஃப் ஆகி அப்படியே நின்னுட்டுது. பக்கத்துல இந்த ஒர்க்‌ஷாப் தெரிஞ்சுது. விட்டுட்டு என்னன்னு பார்க்கச் சொல்றதுக்குள்ள இப்படி ஒரு மழை’’ என்றாள்.

``வண்டி எப்ப ரெடியாகும்னு நீங்க வேணும்னா கேளுங்களேன்’’ காந்திமதி, ராமராஜனிடம் சொன்னாள். இதை அவனே சுலோச்சனாவிடம் கேட்கலாம் என நினைத்திருந்தான். அதற்குள் காந்திமதி இதைச் சொன்னது கோபமாக வந்தது.

``என்னமோ பேர் சொன்னியே, ஆறுமுகச் சாமியோ என்னமோ! அவருக்குத் தெரிஞ்ச ஒர்க்‌ஷாப்தான்போல. கேட்டுச் சொல்லச் சொல்லுதேன்’’ என்று ராமராஜன் கொஞ்சம் வெறிக்க ஆரம்பித்திருந்த மழையில் போனான்.

``நனைஞ்சுகிட்டே போறாரு’’ என்று மட்டும் சுலோச்சனா கம்மலான குரலில் சொன்னாள். மடியில் இருக்கிற நாய்க்குட்டியை லேசாக கைகளுக்குள் உலுக்கி, அது கண்களை லேசாகத் திறந்து மூடுவதைப் பார்த்துக்கொண்டாள்.

``இந்த ஸ்மெல்லை பார்த்தியா. இது இருக்கக் கூடாது’’ என்று காந்தியிடம் சொல்லும்போது சுலோச்சனாவின் கண்களில் நீர் கோத்துவிட்டது. காந்திமதி, அவள் தோளில் கை வைத்தாள். சுலோச்சனா மூக்கை உறிஞ்சியபடி முகத்தைத் தோளொடு சேர்த்துத் துடைத்துக்கொண்டாள்.

``என்னை எங்க வீட்ல டிராப் பண்ணிரு காந்தி’’ என்று மடியில் இருந்த நாய்க்குட்டியை மறுபடியும் பேர் சொல்லிக் கூப்பிட்டாள். `இன்ஜெக்‌ஷன் போட்டிருக்காரு. சரியாப் போகும்னு நினைச்சேன்’ என்று மறுபடியும் சுலோச்சனாவுடனேயே சுலோச்சனா பேசிக்கொண்டாள்.

``வீட்டுச்சாவி, மொபைல் எல்லாம் ஹேண்ட்பேக்கோடு ஆக்டிவாவிலேயே கிடக்கு’’ என்றாள்.

காந்திமதி இறங்கி ஒர்க்‌ஷாப்புக்குப் போவதைக்கூட சுலோச்சனா தடுக்கவில்லை. ``இரு, வந்திருதேன்’’ என்று காந்திமதி திரும்பி வந்து அவளிடம் சொல்லிவிட்டு, ``நவீனா அப்பாவை வேணும்னா மெக்கானிக்கூட வண்டியை எடுத்துட்டு வரச்சொல்லுதேன். நாம நேரே உங்க வீட்டுக்குப் போயிருவமா?’’ என்று யோசனை கேட்டாள்.

``நீ போகவேண்டாம் என்கூட இரு. ப்ளீஸ்...’’ - சுலோச்சனாவின் குரல் ரொம்பத் தணிவாக இருந்தது. தார்ப்பாய்த் தடுப்பிலிருந்து சொட்டிய மழைத்தண்ணீர் மடியில் இருந்த நாய்க்குட்டியின் மேல் தெறிக்காமல் சுலோச்சனா நகர்ந்து உட்கார்ந்தாள். சீட்டின் நீல ரெக்ஸின் வழுவழுப்பில் மழைத்துளி தெறிக்க ஆரம்பித்தது.

காந்திமதி ஹேண்ட்பேக்கை எடுத்து மொபைல், வீட்டுச்சாவி எல்லாம் இருக்கின்றனவா என்று சரிபார்த்தபடியே வந்துகொண்டிருந்தாள். ``அவங்களுக்கு என்ன செய்யுது?’’ என்று சுலோச்சனாவைப் பற்றிக் கேட்டுக்கொண்டே ராமராஜன் அவளுடன் வந்துகொண்டிருந்தான்.

``ஒண்ணும் பிரச்னையில்லை மதினி. தெரிஞ்ச ஆள்கள்தான். வேலை முடிஞ்சதும் நம்ம வீட்லேன்னாலும் சரி, அவங்க வீட்லேன்னாலும் சரி, வண்டியைக் கொண்டுவந்து விட்டிருவாங்க. எங்கேன்னு போனில் விவரம் சொன்னாக்கூடப் போதும்’’ என்று ஆட்டோ டிரைவர் மூன்றாவது ஆளாக வந்துகொண்டிருந்தார்.

ஆட்டோ பக்கத்தில் வர வர, இவர்களைப் பார்த்ததும் சுலோச்சனா வாய்விட்டு அழ ஆரம்பித்திருந்தாள். காந்திமதி பதறிக்கொண்டு வெளிப்பக்கமாக வந்து நின்று சுலோச்சனாவின் கையைப் பிடித்தாள். சுலோச்சனா மேலும் அழுதாள்.

``இது பூபதி, என் கல்யாணத்தையொட்டி எனக்குக் கொடுத்த குட்டி காந்தி. ஒரு வயசுக் குட்டியா கொடுத்தான். ஒன்பது வருஷமா என்கூடதான் அது இருந்தது’’ என்று மடியைப் பார்த்துக் குனிந்து தலையில் அடித்தாள். காந்திமதி அவசரமாகச் சுற்றிவந்து ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து சுலோச்சனாவின் மடியில் இருந்த நாய்க்குட்டியை அவளுடைய கையை விலக்கிப் பார்த்தாள்.

``அந்த பூபதியைப் பத்தி உங்கிட்டே என்னைக்காவது சொல்லணும்னு நினைச்சுக் கிட்டு இருந்தேன். அதுக்குள்ளே அவன் போயிட்டான் காந்தி. மூணு நாளைக்கு முன்னே சூசைட் பண்ணிக்கிட்டான் கிறுக்கன்.’’ அவள் ஓங்கி ஆட்டோவின் விலாவைக் குத்தினாள். ``அது எனக்குத் தெரியும். இவளுக்கு யாரு சொன்னா பூபதி போயிட்டான்னு? மூணு நாளா இவ சாப்பிடவே இல்லை. சமைஞ்ச பிள்ளை மாதிரி ரீனா எங்க பாத்ரூமிலேயே அசையாமக் கிடந்தா. நான் கூப்பிட்டேன். பரி கூப்பிட்டாரு. கௌதம் கூப்பிட்டான். குரைக்கலை. முனங்கக்கூட இல்லை.’’

ராமராஜன் அவள் அழுவதையே பார்த்துக் கொண்டு வெளியில் நின்றான். நடைபாதையில் இருந்த எண்ணெய்யும் குங்குமமுமாகச் சாய்ந்திருந்த கறுப்புக் கல்லிலிருந்து மழைத்தண்ணீர் வினோதப் புள்ளிகளாக இறங்கியது. மேலிருந்து கால் வரை அவனுக்குக் கல்லாகி வருவதுபோலவும் அல்லது இதுவரை கல்லாக இருந்தவை மேல் காலாகி வருவதுபோலவும் இருந்தது. என்ன நடக்கிறது என்று புரியாமல் ஆட்டோ டிரைவர் ``என்ன விஷயம் அண்ணாச்சி?’’ என்று கேட்டதற்கு, ராமராஜனால் எந்தப் பதிலையும் சொல்ல முடியவில்லை. மஞ்சளும் கறுப்புமாக இருக்கிற ஒரு குகை சுலோச்சனாவை விழுங்கிக் கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது.

``பூபதியும் போயிட்டான். இவளும் போயிருவாபோல இருக்கு’’ என்று சுலோச்சனா தலையை அங்கே இங்கே உருட்டி அழுததிலும் கையை ஆட்டோவில் குத்தியதிலும் அவளுடைய சேலைத்தலைப்பு முற்றிலும் தோளைவிட்டு விலகி, மடியில் கிடந்த நாய்க்குட்டியை மூடுவதுபோல் கலைந்து கிடந்தது.

மழை அநேகமாக வெறித்துவிட்டதில் அங்கங்கே ஒதுங்கி நின்றவர்களெல்லாம் நடைபாதை ஓரமாகவும் சாலையிலும் இறங்கி நடக்க ஆரம்பித்திருந்தார்கள். இப்படி ஒரு பெண் பக்கத்தில் இருக்க, இன்னொரு பெண் ஆட்டோவில் இருந்து உரக்க அழுவதைக் கவனித்து, கொஞ்சம் பக்கத்தில் வந்து நின்று உற்றுப்பார்த்தார்கள். சிவப்பு டிராயரோடு ஒருத்தர் சாரத்தை அவிழ்த்து மழைக்குத் தலையில் போட்டிருந்தார்.

ராமராஜனுக்கு, எல்லோரும் சுலோச்சனாவை அந்த நிலைமையில் பார்ப்பது கஷ்டமாக இருந்தது. காந்திமதியிடம் சுலோச்சனாவின் சேலைத்தலைப்பை எப்படிச் சரிசெய்யச் சொல்வது என்று தெரியவில்லை. ``காந்தி, எல்லாரும் பார்க்காங்க பாரு’’ என்றான்.

சுலோச்சனா இருக்கிற வலது ஓரமாக வந்து, ``சுலோச்சனா... சுலோச்சனா’’ என்று அவளுடைய தோளைப் பிடித்து உலுக்கி, ``சரியா நிமிந்து உக்காருங்க, போவோம்’’ என்று சொல்லவும் சுலோச்சனா சேலைத்தலைப்பை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு காந்திமதிமேல் அப்படியே சாய்ந்துகொண்டாள்.

``பரி நம்பர் சொல்லுங்க சுலோச்சனா. நான் தகவல் சொல்லீருதேன்’’ என்று சொல்லிக் கொண்டே புறப்பட்டு அதிர்ந்துகொண்டிருந்த ஆட்டோவில் ஏறியபோது, ராமராஜனுக்கு காந்திமதிபோல சுலோச்சனாவும் இன்னொரு பெயர், அதற்குமேல் என்ன எனத் தோன்றியது.