Published:Updated:

''கலைஞர் இருந்திருந்தால் `வேள்பாரி’க்காக வெங்கடேசனை உச்சிமோந்து பாராட்டியிருப்பார்!’’ - மு.க.ஸ்டாலின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
''கலைஞர் இருந்திருந்தால் `வேள்பாரி’க்காக வெங்கடேசனை உச்சிமோந்து பாராட்டியிருப்பார்!’’ - மு.க.ஸ்டாலின்
''கலைஞர் இருந்திருந்தால் `வேள்பாரி’க்காக வெங்கடேசனை உச்சிமோந்து பாராட்டியிருப்பார்!’’ - மு.க.ஸ்டாலின்

ஆனந்த விகடனில் தொடராக வந்த `வீரயுக நாயகன் வேள்பாரி' புத்தக வடிவம் பெற்று வெளியிட்ட நிகழ்வை தங்களின் குடும்ப விழாவாக்கினார்கள் வாசகர்கள்.  

கபிலர்: ``மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் கடல் பார்க்க வேண்டும்"

நீலன்: ``ஏன்?"

கபிலர்: ``அது அவ்வளவு விரிந்து பரந்தது.... அளவற்றது"

நீலன்: ``எங்கள் பாரியின் கருணையை விடவா?"

இந்த வரிகள் ஏற்படுத்திய ஆச்சர்யம், பிரமிப்பு கொஞ்சமும் குறையாத வண்ணம் வேள்பாரி தொடர் தமிழர்களின் மனதில் நிறைந்தது. ஆனந்த விகடனில் தொடராக வந்த `வீரயுக நாயகன் வேள்பாரி' புத்தக வடிவம் பெற்று வெளியிட்ட நிகழ்வை தங்களின் குடும்ப விழாவாக்கினார்கள் வாசகர்கள்.  

பாரியுடன் செல்ஃபி, ம.செ வின் ஓவியங்கள், வேள்பாரி தொடர்பான அமர்வு எனப் புத்தக வெளியீட்டு விழா அமர்க்களமாகத் தொடங்கியது. தங்கள் `பாரி’யை வெளியிட வாசகர்கள் குடும்பத்துடன் அரங்கில் நிறைந்தனர். தமிழகத்தின் அரசியல், சூழலியல், இலக்கியம் எனத் துறை சார்ந்த சான்றோர் பெருமக்கள் மேடையில் நிறைந்திருக்க, `வீரயுக நாயகன் வேள்பாரி' வெளியிடப்பட்டது.

தமிழக எதிர்கட்சித் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியபோது, ``சு.வெங்கடேசனின் பேனாவிலும், ம.செ வின் தூரிகையிலும் உருவான வேள்பாரியை வெளியிடுவதில் நான் பெருமகிழ்வு கொள்கிறேன். கலைஞர் மட்டும் இருந்திருந்தால் இப்படியொரு படைப்பைக் கொடுத்ததற்காக வெங்கடேசனை உச்சி மோந்து பாராட்டியிருப்பார். சங்கத்தமிழ் தீட்டிய கலைஞர், வேள்பாரியைப் பெரிய அளவில் கொண்டாடியிருப்பார். இந்தக் காரணங்களால் இந்தப் புத்தகத்தை முன்கூட்டியே வெங்கடேசன் கொடுக்கவில்லையே என்ற ஏக்கம் எனக்கு உள்ளது.

பாரியை குறிஞ்சி மன்னன் எனவும் அழைப்பர். முன்பு நா.பார்த்தசாரதி எழுதிய, குறிஞ்சி மலர் நாவல் பொதிகைத் தொலைக்காட்சியில் நாடகமாக்கப்பட்டது. அப்போது அதில் நான் நாயகனாக நடித்தேன். குறிஞ்சி மலர் நாயகனாகவும் நான் வேள்பாரியை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். முன்பு கல்கியின் கதபாத்திரங்களான `வந்தியத் தேவன்', 'வானதி' என்ற பெயர்களும், நா.பார்த்தசாரதியின் 'அரவிந்தன்' கதாபாத்திரமும் குழந்தைகளுக்குப் பெயர்களாகச் சூட்டப்பட்டன. இதோ இப்போது பாரி, ஆதினி, நீலன், மயிலா, பொற்சுவை எனத் தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டியிருக்கியிருக்கிறார்கள். இது புத்தகமல்ல, மகா புரட்சி என்பேன்" எனச் சொன்னதும் அரங்கிலிருந்த நீலன், ஆதினிகளின் தாய்மார்கள் கண்கள் கலங்க கரகோஷம் எழுப்பினர். 

நீலன் எப்படி இருப்பான், பாரியின் கரங்கள் எவ்வளவு திடமாக இருக்கும், ஆதினியின் விழிகள் என்ன பேசும் என்பதையெல்லாம் தன் ஓவியங்களில் சொன்ன மணியம் செல்வன் உணர்ச்சிகரமாகப் பேசத் தொடங்கினார். ``ரயில் பயணம் மாதிரி என்னை ஒவ்வொரு வாரமும் மூழ்க வைத்தது வேள்பாரி. படிக்கும்போது ஏற்பட்ட என் உள் உணர்வுகள் அப்படியே வந்து ஓவியமாக அமர்ந்தது. வெங்கடேசன் எழுத்துக்கு இணையாக ஓவியங்களை வரைய முயற்சி செய்திருக்கிறேன். வாசன் சார் காலத்திலிருந்து, நாற்பது வருடங்களாக எனக்கும் விகடனுக்குமான உறவு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது என்பது மகிழ்ச்சியான ஒன்று. எனக்குள் இருக்கும் படைப்புகள் வெளிவர மிக முக்கியமான காரணமாக அவர் இருந்தார். வெங்கடேசன் தொடர்ந்து வேள்பாரி மாதிரியான படைப்புகளைச் செய்ய வேண்டும்" என ம.செ பேசி முடிக்கையில் தங்கள் கனவு நாயகர்களுக்கு உயிர் கொடுத்த தூரிகைச் செல்வனுக்கு, கரவொலியால் அன்பையும், நன்றியையும் சொல்லியது அரங்கம். 

விழா நாயகன், வேள்பாரி என்னும் மாபெரும் வரலாற்று நாயகனை தமிழ்ச் சமூகத்தின் குடும்பத்தில் ஒருவனாக்கிய எழுத்தாளர் சு.வெங்கடேசன் ஏற்புரை வழங்கவந்தபோது, வாசகர்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர். 

`` `வேள்பாரி நீதான் எழுதினாயா?' என்று தமிழ்செல்வன் கேட்டார். 111-வது வாரம் வரும்போது அதே கேள்வியை வெய்யில் கேட்டார். இந்தக் கேள்வி எனக்குப் புதிதல்ல. காவல்கோட்டம் வந்தபோதும் இதே கேள்வியை என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சிலர்,  சு.வெங்கடேசன் இதை எழுதவில்லை என்று எழுதவும் செய்தார்கள். வேள்பாரி என்னுடைய நாவல் அல்ல. தமிழ்ச்சமூகத்தின் ஈராயிரம் ஆண்டு நினைவின் படைப்பு அது.

2,281 சங்க கவிதைகளிலிருந்து எடுத்து கோத்த முத்துகள், வேள்பாரி. பாரியைப் பற்றி, தமிழ் அறம், தமிழ்ப் பரப்பு, தமிழ் மாண்புகளைப் பற்றித் தொகுத்து வைத்த வேலையைத்தான் நான் செய்திருக்கிறேன். வாழ்க்கையே இதற்காக அர்ப்பணித்த முன்னோர்கள் சொல்லெடுத்து கொடுத்துதான் நான் வேள்பாரியை உருவாக்கி இருக்கிறேன். பாரியைப் பற்றி பெரும் காவியமே எழுதப்பட்டிருக்க வேண்டும். கணினியைக் கண்காணிக்கும் அரசு, ஆயிரம் ஆண்டுகளாக எதிரியை எப்படி விட்டிருப்பார்கள்?

பாரியை வென்ற மூவேந்தர்கள் அடுத்த ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்தனர். பாரியின் நினைவு ஆட்சியாளர்களின் தொண்டையில் சிக்கிய முள். அவர்கள் மறைக்க நினைத்தாலும் குத்திக் குத்தி வெளியே வந்துகொண்டுதான் இருக்கும். எனவேதான், பாரியின் நினைவு அழிக்க முடியாத ஒன்றாக இருந்துகொண்டிருக்கிறது. கைலாசபதியின் ஒருவரிதான் பாரியை எழுத வேண்டும் என்று என்னைத் தூண்டியது. 10 ஆண்டுகள் கழித்து வேள்பாரியை எழுதினால் பத்தாயிரம் பக்கங்கள் எழுதுவேன்" என அவர் பேசி முடிக்க மக்கள் மகிழச்சியில் திளைத்தனர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கௌரவத் தலைவர் ச.தமிழ் செல்வன், ``காலம் எழுதிய காவியம் வேள்பாரி. சு.வெங்கடேசன் ஒரு கருவி. இதில் எல்லோருக்கும் பங்கு இருக்கிறது. தமிழ் இனத்தின் அழிக்கப்பட்ட கதைகள் காற்றிலே உலவிக்கொண்டிருக்கின்றன. அந்தக் கதைகள் தன்னைக் கூறுவதற்காக ஒருவரைத் தேர்வு செய்யும். அப்படித்தான் சு.வெங்கடேசன் வழியாக நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறான் வேள்பாரி. 60களின் காலம் சங்க இலக்கியத்தின் மீது ஈர்ப்பு உருவான காலம். கலைஞர் காலம். இன்று காயங்கள் ஊடுருவி இருக்கின்ற காலம். தமிழர்களுக்கும் மரபு உண்டு. எது மரபு, எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்ற திகைப்புக்கு வெங்கடேசன், வேள்பாரி வழியாக பதில் கொடுத்திருக்கிறார். ஆட்சியாளர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்த நாவல் கூறுகிறது. பாரியின் அறத்தோடு அதற்குரிய போர் தந்திரங்களை உருவாக்க வேண்டுமென்று கலைஞர்களைக் கேட்டுக்கொள்கிறேன். கற்ற மரபுக்கும், கற்காத மரபுக்கும் இடையிலான உரையாடல் இந்த நாவல். போரைப் பற்றிய நாவல். ஆனால், போருக்கு எதிரான நாவல். மிக முக்கியமான அரசியலை வேள்பாரி பேசுகிறது" என நிதர்சனத்தைக் கூறினார். 

விகடனின் நிர்வாக இயக்குநரும், ஆனந்த விகடனின் ஆசிரியருமான பா.சீனிவாசன், ``மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் கடல் பார்க்க வேண்டும். ஏனெனில், கடல் அவ்வளவு விரிந்து பரந்தது. அளவற்றது. முன்னால் போய்க்கொண்டிருந்த நீலன் சட்டெனத் திரும்பி கபிலரை நேர்கொண்டு பார்த்துக் கேட்டார். 'எங்கள் பாரியின் கருணையை விடவா?'.

தமிழ் இலக்கிய வரலாற்றில் 100, 200 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு புலவன் பாரியைப் பற்றி எழுதிக்கொண்டுதான் இருக்கிறான். சு.வெ-யின் அழகு தமிழில், மா.செ-வின் தூரிகை சித்திரத்துடன், ஆனந்த விகடனில் 111 வாரம் இயற்றப்பட்ட வீரயுக நாயகன் வேள்பாரி, அந்த வம்சாவழியில் தோன்றிய பொற்கிழி. அறம் சார்ந்த வாழ்வுக்கு எப்போதும் ஆதரவு இருக்கத்தான் செய்கிறது என வேள்பாரி மீண்டும் நிருபித்திருக்கிறான். கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என மூவேந்தர்கள் சூழ்ந்த காலத்தில் எழுத்தையே மூலாதாரமாகக் கொண்ட ஆனந்த விகடன், இன்றும் வெற்றிப் பதையில் பயணிக்கிறான் என்றால் அதற்கும் வேள்பாரிதான் காரணம். விரைவில் ஒலிச்சித்திரமாக, நாடகமாக, வெப் சீரீஸாக, கற்பனைக்கு ஈடுகொடுக்க இருக்கும் வெள்ளித்திரையில் வேள்பாரி பல அவதாரம் எடுக்க இருக்கிறான்" எனச் சொன்னதும், மக்கள் தங்களின் காத்திருப்பைக் கரவொலியால் வெளிப்படுத்தினர். 

``சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் படித்துவிட்டு மதுரையைச் சுற்றிப்பார்த்தேன். அவருடைய எழுத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  இரண்டு கதைகள் நாங்கள் சேர்ந்து எழுதியிருக்கிறோம். சு. வெங்கடேசன் எழுத்து மீது அவ்வளவு ஈர்ப்பு எனக்கு. அதன்பிறகு வேள்பாரி எழுதும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ``கரெக்டா உங்களத் தூக்கிட்டாங்கனு" அவர்கிட்ட சொன்னேன். என்னுடைய நண்பர் வெங்கடேசன் அவர்களை இவ்வளவு கௌரவித்து புத்தகம் வெளியிட்டதற்கு நன்றி" என பன்ச் பேசி முடித்தார் இயக்குநரும், நடிகருமான சசிகுமார்.

இயற்கை குறித்தும் சூழலியல் குறித்தும் அழுத்தமாகப் பதிவுசெய்த வேள்பாரியைப் பற்றி, `பூவுலகின் நண்பர்கள்’ ஜி.சுந்தர்ராஜன் பெருமகிழ்வுடன் பேசத் தொடங்கினார். ``ஒவ்வொரு அத்தியாயமும் நமக்குப் புதிது புதிதாக பல விஷயங்களை சொல்லிக்கொண்டே இருந்தது. தமிழகம் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து பல்வேறு விதங்களில் தனித்து நிற்கிறது. அது வேள்பாரியை வாசிக்கிறபோது இந்த நிலத்துக்கான தனித்துவமான கருத்தாக்கத்தின் மீது நம்பிக்கை ஏற்படுகிறது. நாம் ஏன் வேள்பாரியைக் கொண்டாடுகிறோம் என்றால் இன்று தமிழகம் முழுவதும் எளிய மக்கள் தூத்துக்குடி தொடங்கி எண்ணூர் வரை பெரு நிறுவனங்களுக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இயற்கையை அழிப்பவனை இயற்கை அழிக்கும் என்றான் பாரி. அதைத்தான் ஒகி புயலும், தானே புயலும், கஜா புயலும் விளக்குகின்றன.

`காட்டு விலங்குகளால் உடைத்து நொறுக்கவோ, தாண்டிக் கடக்கவோ முடியாத மதில் சுவரை மனிதனால் கட்டிவிட முடியுமோ' என பாரி கேட்பான். இதைப் படிக்கிறபோது `இயற்கைச் சீற்றங்களிலிருந்து அடுத்த ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு, கூடங்குளம் அணு உலையின் கழிவுகளை எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள்?’ என்கிற இடிந்தகரை கிராமத்து மக்களின் கேள்விதான் நினைவுக்கு வருகிறது. ஏன் பாரியை தமிழ்ச் சமூகம் தூக்கிக்கொண்டாடுகிறது என்றால், சுனாமியிலிருந்து பாதுகாக்க கடற்கரையில் மதில் சுவர் கட்டுவோம் எனக் கூறிய முதலமைச்சரும், வைகை அணையின் நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மாகோல் பயன்படுத்திய அமைச்சரும் இருக்கையில், அன்றே பாரிக்கு இருந்த இயற்கையின் மீதான அன்பும், அறத்தின் மீதான பற்றும்தான் காரணம்.

ஃபீனிக்ஸ் பறவை என இன்று யார் யாரையோ சொல்கிறோம். கபிலர் `நெருப்பாலும் வெல்ல முடியாத வேள்பாரியைப் பாடுவது என் தமிழுக்கு அழகு' எனச் சொல்கிறார். நிச்சயமாக பாரி நம் எல்லோராலும் கொண்டாடப்பட வேண்டியவன். நட்பில் அவன் ஆசிரியன், அறம் சார்ந்த வாழ்க்கையை வாழ்வதில் அவன் வழிகாட்டி. அறம், வீரம், இயற்கையைக் காக்கும் பணி என இன்று நம்மோடு இணைந்து வேள்பாரியை வீட்டுக்கு அழைத்துச் செல்ல இருக்கிறோம். நம்மோடு உடன் பயணிக்கப் போகிறான் வேள்பாரி. இயற்கையை நேசிக்கிற ஒவ்வொருவரும், தமிழை நேசிக்கக்கூடிய ஒவ்வொருவரும், வீட்டில் வைத்திருக்க வேண்டிய நூல்தான் இந்த `வீரயுக நாயகன் வேள்பாரி’ " எனச் சொன்னதும், நம்பிக்கைப் பெருமூச்சால் நிறைந்தது அரங்கம்.

சிந்து சமவெளி நாகரிகம் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட எழுத்தாளர் ஆர்.பாலகிருஷ்னன் I.A.S எத்தனை பாரி இருக்கிறார்கள் என்ற தகவலுடன் பேசத் தொடங்கினார்.

``ஆனந்த விகடன் வாங்கி வேள்பாரியைப் படிக்கக்கூடிய பேறு எனக்கு கிடைக்கவில்லை. இந்த விழாவில் பேச வேண்டும் என்பதற்காக ஐந்து நாள்களுக்கு முன்பாக வந்து இரண்டு பெரிய புத்தகங்களை கொடுத்துவிட்டு போய்விட்டார்கள். ஐந்து நாள்களுக்காகப் பயணித்த இடங்களிலெல்லாம் இந்தப் புத்தகத்தை எடுத்துச் சென்று அடிக்கோடிட்டுக்கொண்டே படித்தேன்.

இன்று தமிழர்கள் மத்தியில் வேள்பாரியைப் பற்றிய பேச்சே இருந்து வருகிறது. இது இன்று நேற்று நடக்கிற விஷயம் கிடையாது. பாரி என்றாலே பேச்சு என்பது, கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இன்று புதிதாக பாரியை தமிழ்ச் சமூகம் பேசிவிடவில்லை. ஒரு மனிதனை எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்ச் சமூகம் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது என்றால், அது பாரியைத்தான். வேள்பாரியை தமிழர்கள் இப்போதும் எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதைத் தரவுகளின் மூலம் தெரிந்துகொண்டேன். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் பட்டியலைப் பார்க்கையில் 3,446 பேர் பாரி அல்லது பாரியோடு தொடர்புடைய பெயரை வைத்திருக்கிறார்கள். பாரி - 2109 பேர், பாரி வள்ளல் - 827 பாரி வேந்தன் - 87, பாரி மன்னன் -66, வேள்பாரி என்று தமிழ்நாட்டில் 17 பேர் இருக்கிறார்கள். பாரிவேள் என்கிற பெயரில் 16 பேர் இருக்கிறார்கள். தமிழ்பாரி என இருவர் இருக்கிறார்கள், செந்தமிழ் பாரி என்று 7 பேர் இருக்கிறார்கள்" என அவர் புள்ளிவிவரங்களை அடுக்கியபோது ஆச்சர்யத்தில் புருவம் உயர்த்தினர் பாரியின் ரசிகர்கள். 

விழா நிறைவடைந்தபின், வந்திருந்த மக்கள் அனைவரின் முகத்திலும் பெருமகிழ்வு குடிகொண்டது. தங்கள் குடும்ப விழா அமர்க்களமாக நிறைவடைந்த பெருமிதம் அவர்கள் முகத்தில்..! காலம் முழுவதும் பறம்பின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதை நிரூபித்தது அந்த மாலை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு