Published:Updated:

மாலா அத்தை - சிறுகதை

மாலா அத்தை - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
மாலா அத்தை - சிறுகதை

மாலா அத்தை - சிறுகதை

‘கும்பகோணம் சி.ஆர்.சி ரெண்டு’ என ஐம்பது ரூபாய்த் தாளை நடத்துநரிடம் நீட்டினாள் வசந்தி. பள்ளிக் கூடம் தொடங்கும்நேரம் என்பதால் பேருந்தில் நிற்பதற்குக் கூட இடமில்லை. மகன் அஸ்வந்த், சீட் கம்பியைப் பிடித்தவாறே வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அவன் படிக்கும் பள்ளியைப் பேருந்து கடக்கும்போது குனிந்து தன் நண்பர்கள் யாராவது நிற்கிறார்களா எனப் பார்த்தான். வசந்தி ஒரு கையில் ஒயர்க்கூடை வைத்திருந்தாள். அதனுள் பழைய புடவை ஒன்றும், காபி நிரப்பப்பட்ட பிளாஸ்க்கும் இருந்தன. உட்கார இடம் கிடைத்தால் கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கும் என்றிருந்தது அவளுக்கு. 

மாலா அத்தை - சிறுகதை

எதிர்வீட்டு பாலு அண்ணன்தான் போன் பண்ணியிருந்தார்.  “மாலா அத்தைக்கு உடம்புக்கு முடியல. கும்மோணம் சுந்தர் ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போயிருக்காங்க”, அவ்வளவுதான் சொன்னார். வேறு விஷயங்களைக் கேட்க வாயெடுப்பதற்குள், “சீக்கிரம் போய்ப் பாரு” எனத் துண்டித்துவிட்டார். இன்னும் பலருக்கும் சொல்ல வேண்டிய அவசரம் அவர் குரலில் தெரிந்தது. இன்னும் அரைமணிநேரம் கழித்து போன் வந்திருந்தால், அஸ்வந்த் பள்ளிக்குப் போயிருப்பான். அவனை அழைத்துக்கொண்டு போவதா, இல்லை, பள்ளியில் விட்டுப் போவதா எனக் குழப்பம். ஆஸ்பிட்டலிலிருந்து திரும்ப இரவாகிவிட்டால் என்ன செய்வது என்று, அஸ்வந்த்தின் வகுப்பாசிரியைக்குப் போன் செய்து விவரத்தைச் சொல்லி ஒரு நாள் லீவ் சொல்லிவிட்டு, கூடவே அழைத்துச்செல்கிறாள்.

திருப்பனந்தாள் கடைத்தெருவைத் தாண்டியதும் இருவருக்கும் உட்கார இடம் கிடைத்தது. வசந்தியின் தோளில் சாய்ந்து கொண்டான் அஸ்வந்த். அஸ்வந்த்தை முதன்முதலில் தூக்கியது மாலா அத்தைதான். அஸ்வந்த்தை மட்டுமல்ல, ஊரில் பல குழந்தைகளையும் முதலில் தூக்கியது மாலா அத்தைதான்; மருத்துவச்சி அல்ல. நல்லது கெட்டதுக்கு முன்னாடி வந்து நிற்கும் மனுஷி. குறிப்பாக, குழந்தை பிறக்கும்போது. ஒயர்க் கூடையை சீட்டுக்கு அடியில் வைக்கும்போது புடவையில் சிந்திய காபியைத் தட்டிவிடும்போது தான் கவனித்தாள். மாலா அத்தையும் அவளும்தான் கும்பகோணம் வந்து அந்தப் புடவையை எடுத்திருந்தார்கள். மாலா அத்தை யாரோடும் சண்டை போட்டு யாரும் பார்த்திருக்க முடியாது. இழவு வீடுகளில் பார்க்கும்போது மாலா அத்தையின் முகத்தில் மெல்லிய சிரிப்பு இருப்பதாகத் தோன்றும். அவர் முகத்தில் ஏதோ ஓரிடத்தில் ஒவ்வொருவரும் தன் அம்மாவின் சாயலைக் காண முடியும். டீ குடிப்பதில் அவரோடு போட்டிபோட முடியாது. செல்லக் குட்டி கடையில், ஒரு நாளின் முதல் டீயையும் கடைசி டீயையும் வாங்குவது அவராகத்தான் இருக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மாலா அத்தை - சிறுகதைமாலா அத்தைக்கு பண்ருட்டி பக்கத்தில் வானாதிராயபுரம். ரத்தினத்துக்கு வாக்கப்பட்டு வந்ததிலிருந்து அந்த ஊருக்கே அத்தையாகிப் போனாள். சித்தி, அண்ணி, பெரியம்மா என உறவின்முறைகள் இருந்தாலும் அத்தை என்று அழைப்பதே ஊராரின் வாடிக்கையாகிவிட்டது. ஊரே அத்தை என்று அழைத்தாலும் கட்டிக்கொடுப்பதற்கு ஒரு குழந்தையும் இல்லை. மாமா ரத்தினம் கூத்துக்கலைஞர். நாகம்பாடி கோவிந்தராஜு குழுவில் அனுமார் வேஷம் போடுவார். லவகுசா, ராமாயணம் நாடகங்களில் மாமாவின் அனுமார் சேட்டைகளைப் பார்க்கவே தனிக்கூட்டம் வரும். நாடக மேடைக்கு முட்டுக்கொடுத்திருக்கும் சவுக்குக் கழியெல்லாம் ஏறி பல்டி அடிப்பார். ஒரு நொடிகூட ஓரிடத்தில் நிற்க மாட்டார். திடீரென்று மேடையை விட்டிறங்கி, கூட்டத்தினுள் இருக்கும் சின்னப் பையன்களை வம்பிழுப்பார். அவர்களும் மாமாவின் வாலைப் பிடித்து இழுக்க போட்டிபோடுவார்கள். அன்னியூரில் அப்படிச்செய்யும்போது, சேட்டைக்காரப் பையன்கள், வாலைத் தனியாக இழுத்தேவிட்டார்கள். மாமா ஒருவழியாகச் சமாளித்து, மேடையின் பின்பக்கமாக ஓடிச்சென்று வாலைக் கட்டிக்கொண்டு வந்தார். கணீரென்ற குரல் அவருக்கு. நாடகத்தின் முக்கியமான காட்சியே அனுமார் வேஷத்தில் ரத்தினம் பற்களால் தேங்காய் உரிப்பதுதான். அதைப் பார்க்கவே ஒரு கூட்டம் காத்திருக்கும். இதைத் தெரிந்துகொண்டே அந்தக் காட்சியைத் தள்ளிக்கொண்டே போய் விடியற்காலை மூன்று மணிக்குத் தேங்காயோடு ரத்தினத்தை மேடைக்கு அனுப்புவார்கள். மட்டையின் ஓர் இடத்தில் லேசாகக் கீறித்தான் வைத்திருப்பார். ஆனால், அது தெரியாதளவு ஒவ்வொரு பிரியாக உரித்து, பார்வையாளர்கள் மேல் வீசுவார். மட்டை முழுவதையும் உரித்ததும், அந்தத் தேங்காயை உடைத்துத் தண்ணீரைக் குடிப்பார். இல்லையென்றால், விடிந்ததும் நடக்கும் ராமன் - சீதா பட்டாபிஷேகக் காட்சியில் அர்ச்சனை செய்யக்கொடுப்பார். அனுமார் வேஷம் இல்லாத வள்ளி திருமணம் நாடகத்தின்போது பபூனாக வருவார். ஆனால், ‘அனுமார்’ ரத்தினம் என்பதுதான் அவருக்கான பெயராக மாறி விட்டது. திருவிழா நோட்டீஸ் அடிக்கும்போதும்  அவரின் பெயரை அப்படித்தான் அச்சிடுவார்கள். அதனால், அன்னியூர் ராமய்யா, வேம்பத்தூர் கலையரசன் நாடகக்குழுக்களிலிருந்தும் ரத்தினத்தை அனுமார் வேஷம் போட அழைப்பார்கள். அவரும் கூத்து வாத்தியாரிடம் சொல்லிவிட்டுச் செல்வார். பணத்தை அவர் பெரிதாகக் கருதியதில்லை.

நாடகத்தில் நடிப்பவர்கள், நாடகம் இல்லாத நாள்களில் விவசாய வேலைக்குச் செல்வது வழக்கம். ரத்தினம் மாமா ஒருநாளும் அப்படிச் சென்றதில்லை. முருகையன் சைக்கிள் கடையில் ரேடியோவில் பாட்டு கேட்டபடி உட்கார்ந்திருப்பார். வாடகைக்குப் போகும் சைக்கிளின் நேரத்தை எழுதுவார். முருகையன் கடையில் இல்லாதபோது பஞ்சருக்கு சைக்கிள் வந்தால் ஒட்டுவார். சாயந்திரம் ஆனதும் பனந்தோப்புக்குச் செல்லும் பழக்கத்துக்கு ஒருநாள்கூட விடுப்பு விடமாட்டார். கள் விற்கும் தஞ்சாவூரார், ரத்தினத்தின் பாட்டு அடிமை. ஒரு பாட்டாவது பாடாமல் விட மாட்டார். பாடிமுடித்ததும் மணக்க மணக்க சுட்ட கருவாட்டைக் கொடுப்பார். அங்கேயே இரண்டு கப் கள்ளைக் குடித்துவிட்டு, முருகையனுக்கும் தூக்குவாளியில் வாங்கிக்கொண்டு வருவார். ரத்தினத்துக்கு இரண்டு வயதாக இருக்கும்போது பாம்பு கடித்து, அவர் அப்பா இறந்துவிட்டார். ஐந்தாவது படிக்கும்போது அம்மாவும் மஞ்சள் காமாலையில் போய்ச்சேர்ந்துவிட்டார். பெரியப்பா வீட்டில் ஒண்டிக்கொண்டு வளர்ந்தவர். பெரியப்பா, நன்னிலம் பேருந்து நிலையத்தில் இருந்த டீக்கடையில் வேலைக்குச் சேர்த்துவிட்டார். அந்தக் கடைக்கு எதிரே இருந்த சத்திரத்தில்தான் ஒருவாரம் கோவிந்தராஜு நாடகக் குழு தங்கியிருந்தது. அவர்களுக்கு டீ கொடுக்கப்போய் அவர்களுடனே ஒட்டிக்கொண்டார் ரத்தினம். நாடகத்தில் சம்பளம் வாங்குமளவுக்கு நடிக்க ஆரம்பித்ததும், பெரியப்பா வீட்டுக்குப் பக்கத்தில் கிடந்த காலி மனையில் ஒரு குடிசை போட்டு அதில் தங்கிக்கொண்டார். அப்போதெல்லாம் மாதத்துக்கு இருபது நாள்கள்கூட நாடகம் இருக்கும். ஆனால், ஒரு ரூபாயைக்கூடச் சேர்த்துவைக்க மாட்டார். நாச்சியார் கோவில், நன்னிலம், ஆடுதுறை என முருகையனையும் துணைக்கு அழைத்துக்கொண்டு சினிமா பார்க்கப் போவார். ஏவி.எம்.ராஜன் நடிப்பு அவருக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ‘அழுகிற சீன்ல சிவாஜியை மிஞ்சிப்புட்டான்’னு அடிக்கடி சொல்வார்.

ரத்தினத்தின் புகழ் தஞ்சாவூர் ஜில்லாவைத் தாண்டியும் சென்றது. புதுக்கோட்டை நாடகக்குழுவுடன் ஒருமுறை நெய்வேலியில் நாடகம் போட்டார். அவ்வூரைச் சுற்றி இன்னும் சில நாள்கள் நாடகம்போடவிருந்ததால், வானாதிராயபுரத்திலிருந்த அவரின் மாமா வீட்டில் தங்கினார். அங்குதான் மாலாவைப் பார்த்தார். மாமன் மகளைத் திருமணம் முடிப்பதில் பிரச்னையேதும் இல்லை. மாலாவுக்கு ஓர் அண்ணன் மட்டும்தான். அவர் உள்ளூரிலேயே மராமத்து வேலைகளைப் பார்த்து கொண்டிருந்தார். அவர்தான் எப்போதாவது வந்து மாலாவைப் பார்த்துவிட்டுச் செல்வார்.

கல்யாணத்துக்குப் பிறகும் ரத்தினத்தின் செயல்பாடுகளில் மாற்றமில்லை. என்ன... முருகையனுக்குப் பதில் மாலாவை சினிமாவுக்கு அழைத்துக்கொண்டு போவார். மாலாவுக்கு நாடகம், சினிமா இரண்டுமே பிடிக்கவில்லை. இரவு முழுக்க விழித்திருக்க முடியவில்லை என நாடகத்துக்கு வர மறுத்துவிட்டாள். கொஞ்ச நாளில் சினிமாவுக்கும். ரத்தினத்தின் சினிமாத் துணையாக மறுபடியும் முருகையன் மாறிப்போனார். மாலாவுக்குக் கள்ளின் நாற்றம் ஒத்தே வரவில்லை. ஆனால், ரத்தினம் நாடகம் முடிந்ததும் செல்வது கள்ளுக்கடைக்குத்தான். மாலாவுக்கு வயல் வேலைக்குச் செல்வது பிடித்திருந்தது. ஓட்டுவீட்டு அம்சம் பெரியம்மாவோடு நாற்று நட, களை எடுக்க, பூப்பறிக்க என ஏதாவது வேலைக்குப் போய்விடுவாள். கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களாகியும் குழந்தைச் சத்தம் கேட்காதது மாலாவுக்குப் பெரும் குறை. ரத்தினத்தையும் நாடக்குழுவில் சாடை மாடையாக நக்கலடித்துக் கொண்டிருந்தார்கள். தெருவில் உள்ளவர்கள் சொல்லும் எல்லாக் கோயில்களுக்கும் மாலா சென்று வந்தாள். வடமட்டம் நாடி வைத்தியரிடம் சென்றபோது, ரத்தினத்தை ஒரு மண்டலம் குடிக்காமல் இருக்கச் சொன்னார். பல்லைக் கடித்துக்கொண்டு அந்த மண்டலத்தை ஓட்டினார். அடுத்த மாதமே மாலா கருவுற்றாள். ரத்தினம் நாடக் குழுவினருக்கு மூழ்க, மூழ்க சாராயம் வாங்கித்தந்தார். 

மாலா அத்தை - சிறுகதை

மாலாவுக்கு மூன்றாம் மாதம். அதிக தலைச்சுற்றலும் வாந்தியும் இருந்தது. பாலையூர்த் திருவிழாவில் நாடகம் நடிக்கச் சென்றிருந்தார் ரத்தினம். அடுத்த நாள் சாயந்தரமாகியும் ஆள் வரவில்லை. இரவில் முருகையனும் அவர் கடையில் புதிதாக வேலைக்குச் சேர்க்கப்பட்டிருந்த சின்னப் பையனும் கைத்தாங்கலாக ரத்தினத்தை அழைத்துவந்தார்கள். முழுக்குடியில் கொஞ்சமும் நிதானமின்றி இருந்தார். உடம்பெல்லாம் மண். படுக்க வைத்து, ஈரத்துணியால் அவரைத் துடைத்து விட்டாள் மாலா. அவர் ஓரமாகவே பாயை விரித்துப் படுத்துக்கொண்டாள். சிறிது நேரம் சென்றதும், ரத்தினத்துக்கு விக்கலெடுத்தது. அவர் எழுந்துபோய் தண்ணீர் குடிக்கும் நிலையில் இல்லை. மாலா மெதுவாக எழுந்து, சொம்பில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள். ஒரு மடக்கு குடித்தவுடனே, கபகபவென வாந்தி எடுத்தார். தலையை மேலும்கீழும் ஆட்டிக் கொண்டேயிருந்தார்.  மாலாவுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருக்க, ரத்தினம் எழுந்து நிற்க முயன்றார். ஆனால் முடியவில்லை. மாலா அவரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டாள். ரத்தினத்தின் பாரத்தை மாலாவால் தாங்க முடியாது தவித்தாள். தொப்பென்று கீழே விழுந்தார். வாசல் கதவில் தலை அடிபட்டு, அலறினார். குனிந்து தூக்கச் சென்ற மாலாவை எட்டி உதைத்தார். அது மாலாவின் வயிற்றில் பட்டது. பலத்த உதை. சுருண்டு படுத்துக்கொண்டாள். கரு கலைந்து விட்டது.

அன்றிலிருந்து ரத்தினத்தோடு பேசுவதை நிறுத்திக்கொண்டாள். அவனாக ஏதாவது கேட்டால்கூட பதிலேதும் சொல்லாமல் எழுந்து வீட்டின் பின்பக்கம் சென்றுவிடுவாள். மாலாவின் மெளனம் ரத்தினத்தை, நாடகத்தில் ரசித்து நடிக்க விடாமல் செய்தது, குடிக்கக்கூட முடியவில்லை. முருகையன் சபரிமலைக்கு மாலை போட்டார். அவரோடு தானும் மாலை போட்டுக்கொண்டார் ரத்தினம். அவர் கன்னி சாமி இல்லையா... அதனால் கன்னி பூஜை செய்ய வேண்டும் என்றார் முருகையன். நாடகக் குழுவில் முன்பணம் வாங்கிவந்து, பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்தார்.  நாச்சியார் கோவில் சென்று மாலை வாங்கி வரும்போது, எதிரில் வந்த லாரியில் மோதி அந்த இடத்திலேயே இறந்தார் ரத்தினம். அன்று மாலா அழுதபோது, வேறு யார் வீட்டு துக்கத்துக்கோ அழுவதுபோல அவளுக்கே தோன்றியது. அடுத்த வாரம் வந்த அண்ணன், வானாதிராயபுரத்துக்கே வந்துவிடக் கேட்டபோது, பிடிவாதமாக மறுத்துவிட்டாள். என்ன காரணம் என்று அவளுக்கும் தெரிய வில்லை.  இரண்டு வருஷம் கழித்து, அண்ணன் திரும்ப வந்து, சொத்துபிரித்ததில் என்று எட்டுச் சவரன் நகையை மாலாவிடம் கொடுத்தார். அதை வாங்கி உற்றுப்பார்த்துவிட்டு, “அண்ணே! ஒம் பொண்ணு கல்யாணத்தப்ப என் கையில காசு பணம் இருக்குமான்னு தெரியல. நான் இருப்பேனான்னு தெரியல. அதனால, இதை என் மருமவளுக்குக் கொடுத்ததா இருக்கட்டும்’’ என்று கொடுத்து விட்டாள். அண்ணன், குடிசை ஓட்டை வழியே வந்த சூரியப் பொத்தல்களை சலனமின்றிப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு முருங்கைக் கீரைத் தண்ணி சாறு என்றால் ரொம்பப் பிடிக்கும். பானு வீட்டு முருங்கை மரத்துக் கிளையை வளைத்து, கீரை பறித்து வந்து சமைத்துப்போட்டாள் மாலா. பஸ் ஸ்டாப்புக்குச் சென்று பஸ் ஏற்றிவிட்டாள். அடுத்த வாரமே, சொந்த ஊருக்குச் சென்றாள். அண்ணன் மகள் சுலோசனாவை, பண்ருட்டிக்கு அழைத்துச்சென்று பாவாடை, சட்டை வாங்கித்தந்தாள். அங்கிருந்த ஒருவாரமும் சுலோசனாவுடனே நேரத்தைக் கழித்தாள். ஊருக்குத் திரும்பும்போது, வசந்திக்குப் பிடித்த பலாக்கொட்டைகளை எடுத்துவந்து, குழம்பு வைத்துத்தந்தாள்.

இந்த ஊரின் நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் முதல் நபராகச் சென்று, கடைசி ஆளாக வருவது மாலாவின் வாடிக்கையாகிவிட்டது. ஊரில் யார் புதிதாக, தோசைக்கல் வாங்கினாலும், பஸ்ஸை விட்டு இறங்கியதும் மாலாவிடம்தான் கொடுத்துவிட்டுப் போவார்கள். புது தோசைக் கல்லைப் பழக்கப்படுத்துவதில் மாலா கைதேர்ந்திருந்தாள். தோசைக்கல்லைத் தண்ணீரில் கழுவிவிட்டு, வடிகஞ்சியில் ஊறப் போடுவாள். அதற்கு அடுத்த நாள் காலையில், அரிசியையும் உளுந்தையும் ஊறப்போட்டு, மாலையில் நைசாக அரைப்பாள். அடுத்த நாள் காலை, புது தோசைக்கல்லை வடிகஞ்சியிலிருந்து எடுத்து, பழந்துணியை வைத்துத் துடைத்து, தண்ணீரில் அலசுவாள். மறுபடியும் நல்ல துணியால் துடைப்பாள். பிறகு, அடுப்பைப் பற்ற வைத்து, தோசைக்கல்லை வைப்பாள். தோசைக்கல்லின் சூட்டை, அவள் முகக்குறிப்பை வைத்தே அளவிடலாம். தூண்டிலின் தக்கை அசைவதற்காகக் காத்திருப்பதுபோல, தோசைக்கல் சூட்டின் பதத்திற்குக் காத்திருந்து, டக்கென்று ஒரு கரண்டி எண்ணையை எடுத்து ஊற்றுவாள். ஏற்கெனவே கத்திரிக்காயைக் காம்பிலிருந்து பாதி வரை வெட்டி வைத்திருந்ததை எடுத்து, அந்த எண்ணெய் காய்வதற்குள், அதை தோசைக்கல் முழுவதும் பரப்புவாள். மெல்லிய எண்ணெய்ப் படலத்தில் கருவேல மர விறகின் தீயில் தோசைக்கல் ஜொலிக்கும். அருகில் யாராவது இருந்தால், ‘வெறகை வெளியே இழேண்டி’ எனச் சத்தம் போடுவாள். குழிக் கரண்டியில் மாவை அள்ளி, கன்றுக்குட்டியைத் தேய்த்துக் குளிப்பாட்டுவதைப்போல, தோசைக்கல்லில் தேய்ப்பாள். கிட்டத்தட்ட வட்டவடிவாக இருக்கும். கால் கரண்டி எண்ணெயை, தோசையின் விளிம்புகளில் ஊற்றுவாள். தங்கத்தில் மிக நுணுக்கமான ஆபரணத்தைச் செய்யும் கொல்லன் போல, கூர்ந்திருக்கும் அவள் கண்கள். தோசையின் விளிம்புகள் வாட ஆரம்பித்ததும், தோசைத் திருப்பியினை உள்ளே நுழைத்து, கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பக்கத்திலிருந்து அடுத்த பக்கம் செல்வாள். ஓரிரு நிமிடங்கள், லாகவமாக அந்தத் தோசையைத் திருப்பிப் போடுவாள். ஒரு பொட்டு மாவு கல்லில் ஒட்டியிருக்காது. அப்போதுதான் திருப்தியானவளைப்போல லேசாவாள். முதல் தோசையை சூரியசாமிக்கு எனக் கூரைமேல் வைப்பாள்.

தோசைக்கல் மட்டுமல்ல, பால் கறக்கும்போது உதைக்கும் கறவை மாட்டைப் பழக்குவது, பிரசவத்தில் மாடு இறந்ததும், கன்றுக்குட்டியை வளர்ப்பது, நாட்டுக்கோழியை வெட்டி, தோலை உரித்துக் கறியாக்கித் தருவது... என மாலாவை எதிர்பார்க்காத வீடே இல்லை என்றே சொல்லலாம். ஆடிமாதக் கடைசி செவ்வாய்க் கிழமையன்று, குளத்துமேட்டு காளியம்மன் கோயிலில் நள்ளிரவில் பூஜை நடக்கும். நாலைந்து கிடா வெட்டுவார்கள். சாமத்தில் ஆரம்பிக்கும் பந்தி முடிய அதிகாலை ஆகிவிடும். அங்கு வைக்கப்படும் கறிச்சாறு அவ்வளவு ருசியாக இருக்கும். அந்த ருசிக்கு மாலா அத்தை உயிரையே விடுவாள். யாருக்கும் தெரியாமல், டீக்கடை செல்லக்குடி ஒரு வாளியில் கறியும் சாறுமாகப் போட்டுக் கொடுத்து விடுவார்.

கல்யாணமான பெண்கள் மாசமாகி, அப்பா வீட்டுக்கு வரும்போது விழுந்து விழுந்து கவனிப்பாள். வயிற்றில் கை வைத்து, குழந்தையின் அசைவைப் பார்ப்பாள். அவள் கண்ணில் சிறு ஏக்கம் வந்துபோகும். எந்த டாக்டரிடம் காட்டலாம், நிற்காமல் வாந்தி வந்தால் என்ன செய்யலாம், வளைகாப்புக்கு எத்தனை வித சாதம் செய்யலாம் என எல்லாவற்றையும் மாலாவிடம் கேட்காமல் செய்வதில்லை. வயிறு பெருக்க, பெருக்க, சிசுவோடு மாலா அத்தை பேசுவதும் அதிகமாகிவிடும். ‘வெளியில வா! உன் மாமன்காரன் ஒழுங்கா பள்ளிக்கூடம் போகமாட்டேங்கறான். வந்து கேளு!’ என்பாள். ‘வெளியே வரும்போது அத்தைக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க... சொல்லுங்க, சொல்லுங்க” என்று அத்தையின் குரலில் மழலை கூடிக்கொண்டே போகும். ‘அண்ணி, ரொம்பக் கொஞ்சாதீங்க... இப்படி ஆசையா கொஞ்சறது யாருடின்னு புள்ள சீக்கிரமே வெளியில் வந்துடப் போறான்’ எனக் கிண்டல் செய்வார்கள். ‘அடி போடி, அபசகொணமா பேசாதே’ என்று வாயில் அடித்துக்கொள்வாள் அத்தை. வளைகாப்பின் போது சமையல் வேலைகளில் பரபரப்பாக இருப்பாள். இது வேண்டுமென்றே செய்வதுதான். வளைகாப்பு நடக்கும் வீட்டில் இருக்க வேண்டும். ஆனால் அந்த இடத்தில் இருக்கக்கூடாது. விதவை, கரு தங்காதவள் என யாராவது சொல்லிவிடுவார்கள் என்பதே அவள் ஒதுங்கி நிற்க காரணம். பிரசவத்தின்போது உடன் இருக்க, மாலாவை அழைக்காத வீடே இல்லை என்றாகிவிட்டது ஊரில். 

மாலா அத்தை - சிறுகதை

வலி வந்தவுடன் காருக்குச் சொல்வதற்கு முன், மாலாவுக்கு ஒரு வார்த்தை சொல்லிவிடுவார்கள். ஒயர்க்கூடையில் ஒரு புடவை, ஜாக்கெட், பாவாடை, துண்டு என எடுத்துத் தயாராக இருப்பாள். ஆனாலும், பிரசவத் தீட்டுச் சாப்பாடு அவளுக்கு ஒத்துக்கொள்வதில்லை. அதனால், கடைச் சாப்பாடுதான். கும்பகோணம் ஆஸ்பத்திரி என்றால், நாகேஸ்வரன் சந்நிதி வாசலில் இருக்கும், டைமண்ட் கடையில் வீச்சு புரோட்டோ வாங்கி வரச் சொல்வாள். கூடவே வெற்றிலை பாக்கு. ஆஸ்பத்திரிக் கொசுக்கெல்லாம் மாலாவை நன்கு தெரிந்திருக்கும்போல. மொய்க்கும் கொசுக்களை, ஒரு கையால் தட்டிவிட்டு, தலைக்குக் கையை வைத்துப் படுத்தால், ஐந்து நிமிடத்தில் தூங்கிவிடுவாள். ஆனால், அவள் காது தூங்காது என்றுதான் சொல்ல வேண்டும். பிரசவத்துக்கு அழைத்து வந்திருக்கும் பெண் வலியால் முனகினால்கூட எழுந்துவிடுவாள். காலம் அவளின் பெயரை மாலா அத்தையாக்கிவிட்டது. தைப்பூசத்தன்று யாரோடும் பேசாமல், சாப்பிடாமல் விரதம் இருப்பாள். காரணம் யாருக்கும் தெரியாது. ஒருநாள் வசந்தியிடம் பேச்சுவாக்கில் சொன்னாள். ‘அன்னிக்குத்தான் எம் புள்ள ரத்தமா வெளியே வந்துச்சு.’

‘காலார ஒரு நட நடந்துட்டு வாயேன்’ என வசந்தியின் அம்மா சொன்னதும், அவள் மாலா அத்தை வீட்டுக்குத்தான் வந்தாள். காலையில் வரப்பில் பறித்துவந்த உளுந்தச் செடியைக் காய வைத்து, தென்னமட்டையால் அடித்துக்கொண்டிருந்தாள். அத்தையுடன் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, வீட்டுக்குத் திரும்பும்போது வேப்பமரத்தைத் தாண்டும்போது வசந்திக்கு வலி வந்துவிட்டது. காரை, மாலா அத்தை வீட்டுக்கே வரச் சொல்லி, அங்கிருந்து கும்பகோணம் மாதா கோவில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துவருவதற்குள் நன்றாக இருட்டிவிட்டது. வசந்திக்குச் சுகப்பிரசவத்துக்கு வழியில்லை என்றதும், கணவன் செந்தில், வெளியே அழைச்சிட்டுப் போகலாம் எனச் சொன்னான். வசந்தியின் முகத்தில் தெரிந்த வலியைப் பார்த்தே வேண்டாம் எனத் தடுத்து, செந்திலை ஆபரேஷனுக்குச் சம்மதம் சொல்ல வைத்தாள். ‘ஆம்பளப் புள்ள’ என்றவாறே நர்ஸ் கையிலிருந்து குழந்தையை வாங்கியது அவள்தான். மாலா அத்தையைப் போல குழந்தையை லகுவாக ஏந்த இன்னொருவரால் முடியாது. இரண்டு நாள்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்கவே இல்லை வசந்தி. மூன்றாவது நாளில், அம்மா தாங்கிப்பிடிக்க, முதுகை நிமிர்த்தாது கழிவறைக்குச் சென்றாள். ‘குனிஞ்சே நடக்காத... கொஞ்சமாவது நிமுந்து நட...’ என்று மூத்த நர்ஸ் சத்தம்போட்டுச் சென்றார். வசந்திக்கு வலி பின்னி எடுத்ததில், நிமிர்ந்து நடப்பதை அவளால் யோசிக்கக்கூட முடியவில்லை. அடுத்த நாள், வசந்தியின் தோளில் கைபோட்டுக்கொண்டு, அவள் அளவுக்குக் குனிந்தவாறே நடந்தாள் மாலா அத்தை. கொஞ்சம் கொஞ்சமாக அத்தை நிமிர, அவளை அறியாமலே நிமிர்ந்தாள் வசந்தி. அன்றைக்கு இரவு பசும்பாலை வாங்கிவந்து, வசந்திக்குக் கொடுத்தாள். இளஞ் சூட்டோடு இறங்கி, பால் உடலெங்கும் அந்தச் சூட்டைப் பரப்புவதைப் போல இருந்தது வசந்திக்கு. அவள் மருத்துவமனையில் தங்கியிருந்த ஏழு நாள்களும் அத்தையும் இருந்தாள். நாளை டிஸ்சார்ஜ் செய்துவிடலாம் என டாக்டர் சொல்லிவிட்டுச் சென்றிருந்தார். அப்போது தான் சிந்துவும் அந்த மருத்துவமனையில் சேர்ந்திருப்பதாக பாலு அண்ணன் சொன்னார்.

சிந்துவும் அதே ஊர்தான். வசந்தியும் சிந்துவும் ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரி வரை ஒன்றாகவே படித்தவர்கள். கல்லூரியின் இறுதி ஆண்டில், அதே ஊரின் காலனியில் உள்ள சதீஷைக் காதலித்து, வீட்டுக்கு விஷயம் தெரியும் முன்பே ஊரை விட்டு ஓடிவிட்டார்கள். காஞ்சி புரத்தில் இருப்பதாக இடையில் ஒரு தகவல் வந்தது. ஆறு மாதங்கள் கழித்து சதீஷும் சிந்துவும் ஊருக்கு வந்தபோது, சிந்துவின் அப்பா பஞ்சாயத்தைக் கூட்டி அவள் உறவை அறுத்தெறிந்தார். அதோடு அவளைப் பற்றிய பேச்சே ஊரில் இல்லை. வசந்திகூட தன் கல்யாணத்துக்கு அவளை அழைக்கவில்லை. ‘ஒண்ணா படிச்சவளுங்க... ஒண்ணாவே புள்ள பெத்துக்க வந்திருக்காங்க’ என மாலா அத்தை சிரித்துக்கொண்டே சொன்னதை, அங்கிருந்த யாரும் ரசிக்கவில்லை.

‘டீத் தண்ணி குடிச்சிட்டு வாரேன்’ எனச் சொல்லிவிட்டு, சிந்துவைப் பார்த்து வருவாள் மாலா அத்தை. சிந்துவோடு அவளின் கணவன் மட்டுமே வந்திருந்தான். ‘பொம்பளைங்க யாரும் வரலையாப்பா?’ என்று கேட்டதற்கு, இல்லை என்பதாகத் தலையாட்டினான். காரணங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மாலா அத்தைக்கு இல்லை. பொதுவாக, புறணி பேசுவது, மற்றவர் ரகசியங்களைத் தெரிந்துகொள்வதில் அவளுக்கு எப்போதுமே ஆர்வம் கிடையாது. சிந்துவை மருத்துவமனையில் சேர்த்து, முப்பது மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது. பிரசவ வலி வரவில்லை. அவளை அங்கேயே விட்டுவிட்டு மாலா அத்தையால் வீட்டுக்குப் போக முடியவில்லை. அங்கேயே தங்கப்போவதாகச் சொன்னதும் வசந்தியைத் தவிர மற்றவர்கள் திட்டித்தீர்த்தனர். ஆனாலும் மாலா அத்தை தங்கினாள். அடுத்த நாள் சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது; அச்சு அசல் சிந்துவின் அம்மா சுமதியைப் போலவே இருந்தது. உச்சிமோந்து முத்தம் தந்தாள் அத்தை. மூன்றாம் நாளில் சிந்து வீட்டுக்குக் கிளம்பும் வரை மாலா அத்தை உடன் இருந்தாள். பிள்ளையோடு சிந்துவைக் காரில் ஏற்றிவிடும்போது, சதீஷ் ஒரு பிளாஸ்டிக் கவரைக் கொடுத்தான். அதில், மாலா அத்தைக்குப் பிடித்த கிளிப்பச்சையில் வாயில் புடவை இருந்தது. வாசலில், கைகளை ஏந்திய யேசு சாமியைப் பார்த்தபடியே சிறிது நேரம் உட்கார்ந்திருந்தாள் அத்தை. வாட்ச்மேன் தனக்கு என வாங்கிவந்த டீயில் பாதியை, பேப்பர் கப்பில் ஊற்றி அத்தைக்குத் தந்தார். கண்களைத் துடைத்துக்கொண்டே அதை வாங்கிக்குடித்தாள். சிந்துவுக்கு உதவியாக இருந்ததால், ஊரில் சில மாதங்கள் யாரும் சரியாகப் பேசவில்லை. பிறகு, தானாக அது சரியானது. வசந்திக்கு மாலா அத்தை என்றால் உயிர். அதனால், ‘ம’ அல்லது ‘மா’ வில் தொடங்கும் பெயரை வைக்க வேண்டும் என செந்திலிடம் எவ்வளவு கெஞ்சியும் எடுபடவில்லை. ‘அஸ்வந்த்’ என்று ஜோசியர் குறித்துக்கொடுத்த பெயரே முடிவானது. அஸ்வந்த் பிறந்து ஆறு வருடங்களாயிற்று. அவனின் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும், ஒரு செட் டிரஸோடு நேரில் வந்துவிடுவாள் மாலா அத்தை. பேருந்து, கும்பகோணம் நால்ரோடு சிக்னலைக் கடந்ததும் தூங்கிக்கொண்டிருந்த அஸ்வந்த்தை எழுப்பி, இறங்குவதற்கு வாசல் அருகே நின்றுகொண்டாள். 

மருத்துவமனை வாசலில் நின்றுகொண்டிருந்த சுந்தர் சித்தப்பா, மாலா அத்தை ஐ.சி.யூ வில் இருப்பதாகச் சொன்னார். மருத்துவமனையின் வலப்பக்கத்தில் ஐ.சி.யூ இருந்தது. கிட்டத்தட்ட ஓடினாள். மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வந்த அத்தை, திடீரென்று மயக்கம்போட்டு விழுந்துவிட்டாராம். மூளைக்குப் போகும் நரப்பில் அடைப்பு இருக்கிறதாம். பன்னிரண்டு மணிக்கு ஒருவர் அல்லது இருவர் மட்டுமே உள்ளே சென்று பார்க்க முடியுமாம். கஸ்தூரி அக்கா, சுந்தரி சித்தி, கல்பனா, சேகர் அண்ணன் எனப் பலரும் வந்திருந்தனர். பன்னிரண்டு மணி ஆகும்வரை நொடிக்கு ஒருமுறை வாட்சைப் பார்த்துக்கொண்டிருந்தாள் வசந்தி. யார், யார் உள்ளே செல்வது எனப் பேச்சு வந்தபோது, ‘வசந்தியோட யார் வேணாலும் போங்க’ என்று கறாராகச் சொல்லிவிட்டார் சுந்தர் சித்தப்பா.

கதவு திறக்கப்பட்டு, உள்ளே சென்றதும் அத்தை கிடந்த கிடப்பைப் பார்த்து அதிர்ந்துவிட்டாள் வசந்தி. புடவையின் நுனி கிழிந்தாலும் அதைக் கட்டிக்கொள்ள மறுக்கும் அத்தை பச்சைநிறப் போர்வையால் போர்த்தப்பட்டு, கையில், நெஞ்சில் எல்லாம் ஒயர்கள் செருகப்பட்டும் ஒட்டப்பட்டும் கிடந்தாள். அதைப் பார்த்ததும் வசந்தியால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ‘நைட்டெல்லாம் ஒரே கத்தல்... ஷ்ஷ்ப்பா’ என்று அலுத்துக்கொண்டவாறே நர்ஸ் சொல்லிச் சென்றார். மாலா அத்தையின் அருகே சென்று கைகளைப் பிடித்துகொண்டாள் வசந்தி. திரும்பிப்பார்த்த அத்தைக்கு, வசந்தியை அடையாளம் தெரியவில்லை. ஏதோ முணு முணுத்தாள். சத்தம் கேட்கவில்லை. தண்ணீர் வேண்டும் எனச் சைகை காட்டியதும் நர்ஸிடம் ஓடிச் சென்று சொன்னாள் வசந்தி. ‘அதெல்லாம் கொடுக்கக்கூடாது மேடம்’ என முகத்தில் கடுமையைக் காட்டியவாறே சொல்லிவிட்டார். மீண்டும் அத்தையிடம் வந்தபோது, மீண்டும் வாய் முணுமுணுக்க, குனிந்து அத்தையின் வாயருகே காதைக் கொண்டுசென்றாள் வசந்தி. அத்தையின் குரல் சன்னமாய் முணுமுணுத்தது...

‘சிந்து’

சில நிமிடங்களில் பார்வை நேரம் முடிந்துவிட்டதாகச் சொன்னதும் வெளியே வந்தாள் வசந்தி. அரைமணி நேரம் அங்கேயே யாரோடும் பேசக்கூடப் பிடிக்காமல் உட்கார்ந்திருந்தவள், அஸ்வந்த் சாக்லெட் கேட்டதும், அவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனையின் வாசல்பகுதி வந்தபோது, மகளை அழைத்துக்கொண்டு சிந்து அவசரம் அவசரமாக வந்துகொண்டிருந்தாள். வசந்தியைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிப்பிடித்து அழுதாள். ‘எல்லாம் சரியாயிடும் சிந்து’ எனச் சொல்லி, ஐ.சி.யூ இருக்கும் இடத்தைக் காட்டினாள். அவள் மகளுக்கும் தின்பதற்கு ஏதேனும் வாங்கித்தருவதாக இருக்கச் சொல்லி, சிந்துவை மட்டும் அனுப்பினாள். பெரிய லாலிபாப்பை வாங்கி சிந்துவின் மகள் கையில் தந்து, ‘`உன் பெயர் என்னடா?” என்றாள் வசந்தி. லாலிபாப்பை ஒரு சப்பு சப்பிவிட்டுச் சொன்னாள்.

“மாலா.”

விஷ்ணுபுரம் சரவணன் - ஓவியங்கள்: ஸ்யாம்