Published:Updated:

``உலகின்மீதான என் கோபமே `உலகின் மிக நீண்ட கழிவறை’ குறுநாவல்!” - அகரமுதல்வன்

``உலகின்மீதான என் கோபமே `உலகின் மிக நீண்ட கழிவறை’ குறுநாவல்!” - அகரமுதல்வன்
``உலகின்மீதான என் கோபமே `உலகின் மிக நீண்ட கழிவறை’ குறுநாவல்!” - அகரமுதல்வன்

`சுளகு(முறம்)கொண்டு புலியை விரட்டியடித்தாள் வீரத்தமிழ்ப் பெண்’ என்று பழந்தமிழ் இலக்கியத்தில் படித்திருப்போம் அல்லவா? ஆனால், முள்ளிவாய்க்கால் கடற்கரையில் மனித மாம்சங்களுக்கு நடுவில் சுளகுகளால் தங்கள் பிறப்பு உறுப்புக்களை மறைத்துக்கொண்டு கடற்கரையில் மலம் கழித்த எனது அம்மாக்களையும் அக்காக்களையும் தோழிகளையும் எழுதுமாறு காலம் என்னைப் பணித்திருக்கிறது.

ஈழப்போர் பற்றி தன்னுடைய படைப்புகள்மூலம் தொடர்ந்து பதிவுசெய்துவரும் எழுத்தாளர் அகரமுதல்வனின் அடுத்த ஈழப்பதிவு, `உலகின் மிக நீண்ட கழிவறை’ என்ற குறுநாவல் தொகுப்பு. சிறுகதைகள், கவிதைகள், குறும்படம் எனத் தான் முன்னெடுக்கும் அனைத்துக் கலைப்படைப்புகளிலும் ஈழ இனப்படுகொலை பற்றிப் பதிவுசெய்துவரும் அகரமுதல்வன், தன்னுடைய குறுநாவல்களிலும் அதைப் பதிவுசெய்துள்ளார். அவரது குறுநாவல் குறித்து நம்மிடம் அவர் பகிர்ந்துகொள்கிறார்...

`` `வரலாற்றாளன், ஒரு நிகழ்வின் விளைவுகளைக் கையாளவேண்டியவன் ஆகிறான். ஒரு கலைஞனோ, நிகழ்வின் உண்மைகளைக் கையாளவேண்டியவன் ஆகிறான்' என்கிற லியோ டால்ஸ்டாயின் கூற்று என்னை அதிகம் பாதித்தது. யுத்தத்தின் கதைகளை எழுதும் இந்த நூற்றாண்டின் மனிதர்களுள் நானும் ஒருவன். அவலத்தில் மிதக்கும் ஓர் அகதியின் கண்ணீர், இன்னோர் அகதியின் கண்களுக்கே தெரியும். மனிதகுல வரலாற்றில் மிகமிக மோசமான யுத்தத்தையும் சாவுகளையும் சந்தித்த ஈழத்தின் தலைமுறையைச் சேர்ந்தவன் என்ற வகையில், என்னுடைய கவிதைகளும் சிறுகதைகளும் தமிழ் இலக்கியவெளியில் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.

எழுத்தில் விரியும் ஈழநிலத்தின் செறிவையும் சனங்களின் வாழ்தல் முறைகளையும் வாசித்தவர்கள் என்னோடு உரையாடுகிறார்கள். `ஒரு நாவலை எழுதுங்கள்' என்று எழுத்தாளர்களான பாரதி கிருஷ்ணகுமாரும் நாஞ்சில் நாடனும் மீண்டும் மீண்டும் கோரிக்கையை வைத்தனர். அவர்களின் உந்துதல் `சொல்லாத சேதிகளையும் சொல்’ என்று எனக்குள் ஒரு நாவலைத் திரளச்செய்தது. அதற்கு முன்னர் கவிதை, சிறுகதை என்கிற கலை வடிவங்களில் எனது ஜீவிதத்தை எழுதிய நான், குறுநாவல் வழியாகவும் அதைப் பேச விழைந்தேன். அதுவே இப்போது வெளியாகவிருக்கும் `உலகின் மிக நீண்ட கழிவறை' என்ற குறுநாவல்கள் தொகுப்பு.

ஐந்து குறுநாவல்கள் அடங்கிய இந்தத் தொகுப்பு, போர்நிலத்துக்குள்ளும், புலம்பெயர்ந்து உழல்தலுக்கும் இடையில் வாழ விதிக்கப்பட்ட இரண்டு தலைமுறையினரையே மையப்படுத்துகிறது. புலிகள், அரசு, வெற்றி, தோல்வி, தியாகம், துரோகம், வீரச்சாவு, வீண்சாவு, பங்கர், கிபிர், பொட்டு, கருணா என எதிர்நிலைகளில் மட்டுமே நிறுத்தப்பட்டு, மகத்தான விடுதலைப் போராட்டம் அளவிடப்படுவதை ஒரு படைப்பாளியாக வெறுக்கிறேன்.

ஈழநிலத்தின் சனங்களான நாம், ஒரு நூற்றாண்டாய் உரிமைக்காக எழுப்பும் நீதியான பேரிகையை வெறும் 30 ஆண்டுக்கால ஆயுத விடுதலைப் போராட்டக் காலத்தோடு வைத்து மட்டும் சுருக்கிவிட முடியாது. ஈழநிலத்துக்கு எவ்வாறு ஒரு பண்பாடும் வரலாறும் இருக்கின்றனவோ, அதுபோலவே சனங்களின் விடுதலைப்போருக்கும் வரலாறும் இருக்கின்றன. அந்த வரலாற்றின் சிறு துண்டை எழுத, என் வாழ்வை ஒப்புக்கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு கலை இலக்கியத்திலும் அதை சிருஷ்டிக்கத் துணிந்திருக்கிறேன். நான் மட்டுமா? தமிழ்நதி, தீபச்செல்வன், குணாகவியழகன் என இந்த இலக்கியச்சேனை அணிவகுத்து நிற்கிறது.

என்னுடைய சிறுகதைகளுக்குக் கிடைத்த பெருமளவிலான வாசகப் பரப்பும் அவர்கள் உருவாக்கிய விவாதங்களும் வாசிப்பின் மீது நம்பிக்கைகொண்ட எனக்கு பெரும் உற்சாகத்தைத் தந்தன. அத்தோடு என் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களும் தனிமனிதக் காழ்ப்புகளும் வலுவிழந்து மாய்ந்தன. என்னுடைய முதல் குறுநாவலான `நெடுநீர் முழை' முழுக்க முழுக்கப் போர்க்களத்தில் போராளிகளின் வாழ்வை அதன் ரத்தப் பிசுபிசுப்போடு உயிர்ப்புப் பிசகாமல் எழுதப்பட்டிருப்பதாகப் போராளிகளாக இருந்த சிலர் குறிப்பிட்டது, மனமகிழ்ச்சியைத் தந்தது. சின்னச் சின்ன நினைவுகள் வலிகளாய்க் குத்தி எழுப்பும் ரணத்தைச் சொற்கள்கொண்டு ஆற்றுப்படுத்தும் விடுபடலை இந்தக் குறுநாவல்களும் எனக்குத் தந்தன.

போராளிகளின் உயிர்மூச்சு, மிகக் கறாராகக் களத்தில் கொதித்துக்கொண்டிருக்கும். குண்டுகள் வீழ்வதும், தோழன் களத்தில் சாவதும் என வாழ்வின் நித்தியம் அழ முடியாத துக்கங்களால் தோண்டப்பட்டிருக்கும். அந்த வகையில் ஈழத் தமிழ்க்குடியின் போர்மரபும் வீரமும் தியாகமும் நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு மிக முக்கியமான சொற்திரட்டையே உருவாக்கித் தந்துகொண்டிருக்கின்றன. தொகுப்புக்கு, மதிப்பிற்குரிய எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை எழுதியிருக்கிறார். அது எனக்குக் கிடைத்த  பெருமைகளில் ஒன்று.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் களத்தின் ஒரு நாள் காலைக்காட்சியைக் கண்ட வெளிநாட்டு மனித உரிமை ஆர்வலர்/அதிகாரி, உலகின் மிக நீண்ட மனிதக் கழிவறையாக முள்ளிவாய்க்கால் கடற்கரை இருப்பதாக ஊடகங்களுக்குச் சொல்லியிருந்தார். `சுளகு(முறம்)கொண்டு புலியை விரட்டியடித்தாள் வீரத்தமிழ் பெண்’ என்று பழந்தமிழ் இலக்கியத்தில் படித்திருப்போம். ஆனால், முள்ளிவாய்க்கால் கடற்கரையில் மனித மாமிசங்களுக்கு நடுவில் சுளகுகளால் தங்கள் பிறப்பு உறுப்புகளை மறைத்துக்கொண்டு கடற்கரையில் மலம் கழித்த எனது அம்மாக்களையும் அக்காக்களையும் தோழிகளையும் எழுதுமாறு காலம் என்னைப் பணித்திருக்கிறது. உலகின் மிக நீண்ட கழிவறையை உருவாக்கிய இந்த உலகத்தின் மீது, அதன் நாகரிக வரலாற்றின் மீது என் சொல்கொண்டு உமிழ்கிறேன். அதுவே என் இலக்கியம்.  

இந்த நூலில் வெளியாகும் ஐந்து குறுநாவல்களும் வெவ்வேறு களச்சூழல்களில் தன்னை அமைத்துக்கொண்டவை. 2006-ம் ஆண்டுக்குப் பிறகு வன்னி சந்தித்த மாபெரும் ராணுவ – அரசியல் நெருக்கடிகளை முன்வைத்து எழுதப்பட்டிருக்கும் `சித்தப்பாவின் கதை’ என்கிற குறுநாவல், கணையாழி இதழில் பிரசுரமாகியது. `அகல்’ என்ற இன்னொரு படைப்பு, விடுதலை அமைப்பான புலிகள் இயக்கம் மீது அதிருப்திகொண்ட ஒருவனின் வாழ்வைப் பேசுகிறது. இயக்க ஆதரவு/எதிர்ப்பு என்ற நிலையைக் கடந்து ஈழ இலக்கியம் உருவாக்கிவரும் மானுட வெளிச்சத்தை, இனி எந்த இருளாலும் காவுவாங்க முடியாது. அந்த ஒளியேற்றுகையில் இன்னுமொரு சுடரை அதிகரித்திருக்கிறேன்.

நூல்வனம் பதிப்பகத்தின் வாயிலாக மணிகண்டன் அவர்கள் பதிப்பிக்கும் இந்த `உலகின் மிக நீண்ட கழிவறை’ என்ற குறுநாவல், எனது எழுத்து ஊழியத்தில் இன்னொரு கல்வாரிப் பயணம்; இன்னொரு சிலுவைச் சுமப்பு அல்லது பாலகன் பிறப்பு அல்லது ஒளியின் பிழம்புபோல போரின் பிழம்பு. எதுவாகியினும் உலகின் காதுகளுக்கு விடுதலையின் அசரீரியாக ஒரேயொரு வாக்கியத்தைச் சொல்கிறேன். `என் இலக்கியம், உன் கொலைகளைத் தண்டிக்கும்; உன் அநியாயமான அமைதியைத் தண்டிக்கும்; உன் யுத்த வர்த்தகத்தைக் காட்டிக்கொடுக்கும். ஏனெனில், நான் முள்ளிவாய்க்காலில்  விளைந்தவன்.' ''

அடுத்த கட்டுரைக்கு