
ஏந்தும் விரல்களற்று
தனித்த புல்லாங்குழலின்மீது
மயிலிறகைக் கிடத்தி
அதன் துயரை ஆற்றலாம்
நானோ நம் பழைய
புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
எவ்வளவு கண்ணீர்
விரயமற்ற கண்கள் நமக்கு!?
சன்னலின் வெளிர்நீலத் திரைச்சீலை
நளினிப்பது நிறைவாக இருக்கிறது
இசை எங்கிருந்து வருகிறதென
அறியாத மிரட்சியான கண்களோடு
நாதப்படிகளின்மீது
ஒரு மயில்புறா நடந்து செல்லும்
இப்படித்தான் பழைய இசை தொடங்குகிறதில்லையா
உன் கனவுக்குள்ளிருந்து
இரண்டு கறுப்பு வெள்ளைக் கட்டைகள்
வெளியே வந்து கிடக்கின்றன
இனியந்தப் பியானோவை
வாசிக்காதே
எரித்துவிடேன்
அதிலிருந்து ஒரு நல்ல புகையெழும்பட்டும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism