Published:Updated:

``ஒடுக்கப்பட்டோரின் நிலங்கள் கைமாற்றப்பட்ட கதையாடலே`படுகைத் தழல்’!’’ - புலியூர் முருகேசன்

``நாமெல்லாம் நம்பிக்கொண்டிருந்த `தமிழர்களின் குடவோலைமுறை’ தமிழர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக அல்ல; பிராமணர்கள் மட்டுமே நறுக்கோலையில் பெயர் எழுதி குடத்தில் இட்டுத் தேர்ந்தெடுக்கும்முறை இவை போன்ற இன்னும் பல சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து நாவல் பேசியிருப்பதால் இந்த நாவல் நிச்சயம் தமிழ்ச் சூழலில் ஒரு தாக்கம் ஏற்படுத்தும்.”

``ஒடுக்கப்பட்டோரின் நிலங்கள் கைமாற்றப்பட்ட கதையாடலே`படுகைத் தழல்’!’’ -  புலியூர் முருகேசன்
``ஒடுக்கப்பட்டோரின் நிலங்கள் கைமாற்றப்பட்ட கதையாடலே`படுகைத் தழல்’!’’ - புலியூர் முருகேசன்

பெருமாள் முருகனின்`மாதொரு பாகன்’ நாவலைத் தொடர்ந்து,  தன் சிறுகதை ஒன்றில் குறிப்பிட்ட ஒரு சாதியைத் தவறாகச் சித்திரித்துள்ளதாகத் தாக்குதலுக்குள்ளானவர் புலியூர் முருகேசன். இவர் எழுதிய `பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு' என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் `நான் ஏன் மிகை அலங்காரம் செய்துகொள்கிறேன்' என்ற சிறுகதை தங்கள் சமூகத்தை இழிவு படுத்துவதாகக் கூறி அவரை வீட்டிலிருந்து அழைத்துச் சென்று ஒரு காட்டுப்பகுதியில் வைத்துத் தாக்கியுள்ளனர். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகே அவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நடந்த பிறகு, தன்னுடைய சொந்த ஊரான புலியூரிலிருந்து வெளியேறி தற்போது தஞ்சை மாவட்டத்தில் வசித்துவருகிறார். இனி தன்னுடைய சொந்த கிராமத்துக்குத் திரும்பிச் செல்லவே முடியாதோ என்ற ஏக்கத்துடன் வாழ்ந்துவருகிறார். பிறந்த ஊரை விட்டாலும் எழுத்தை விடாமல் அந்தப் பிரச்னைக்குப் பிறகும் தொடர்ந்து எழுதிவருகிறார். ஒரு சிறுகதைத் தொகுப்பு, இரண்டு நாவல்கள் என அதன் பிறகு தொடர்ந்து எழுதிவரும் புலியூர் முருகேசனின் அடுத்த நாவல் `படுகைத் தழல்’. அந்தப் பிரச்னைக்குப் பின்னான எழுத்துப் பற்றியும், வெளிவந்த புதிய நாவல் குறித்தும் புலியூர் முருகேசன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்...

``உயிர்மை பதிப்பக வெளியீடாக இப்போது வந்திருக்கும் `படுகைத் தழல்’ என்னுடைய மூன்றாவது நாவல். உலகமயமாக்கலின் விளைவாகப் பாரம்பர்ய விதைகள் பறிபோய், மரபணு நீக்கப்பட்ட விதைகள் வருகையின் பொருட்டு, சமகால விவசாயிக்கு உண்டாகும் நிலம் சார்ந்த வலியை பிரிட்டிஷார் காலம், சோழர் காலம், ஆதி காலம் எனப் பின்னோக்கிப் பார்த்து, பறிபோன நிலம் பற்றியும் எழுதப்பட்டிருக்கும் விரிவான வரலாற்றுப் புனைவே `படுகைத் தழல்’. ஆரியப் படையெடுப்பால் நிலத்தினின்று வெளியேற்றப்பட்ட தொல்குடிகள், சோழர்காலத்தில் சதுர்வேதி மங்கலம், பிரம்மதேயம் எனக் கிராமம் கிராமமாகப் பறிகொடுக்கப்பட்ட ஒடுக்கப்பட்டோரின் நிலங்கள், பிரிட்டிஷ் காலத்தில் பார்ப்பனருக்கு ஒடுக்கப்பட்டோரின் நிலங்கள் கைமாற்றப்பட்ட கதையாடல், உலகமய பாதிப்பால் நஞ்சூட்டப்பட்ட விதைகள், நிலங்கள் இவை பற்றிய விரிவான வரலாறே `படுகைத் தழல்’ நாவல். 

இதுவரை, தமிழ்த் தேசியவாதிகள் ராசராசசோழனை தமிழரின் சிறப்பான அரசாட்சி முறைக்கு முன்னுதாரணமாகச் சொல்லிவந்திருக்கின்றனர். உழுகுடிகளின்மீது 400-க்கும் மேற்பட்ட வரி விதிப்பு, அதேசமயம் பிராமணர்களுக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட நிலங்களுக்கு எந்தவித வரியும் விதிக்காமல் `இறையிலி’ நிலம் என ஆணையிட்டவர்தான் ராசராசசோழன். இதுமட்டுமல்லாமல், கோயில்களுக்குப் பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் அடிமையாக்கியது, பிராமணர்களுக்குப் போஜனம் செய்விக்கவேண்டி ஏராளமான நிலங்களைத் தானமாக வழங்கியது, திருநந்தா விளக்கெரிக்க நெய்வேண்டி `மன்றாடியார்' எனப்படும் இடையர்களுக்கு நெருக்கடி கொடுத்தது, எல்லோருக்கும் தெரிந்த தேவரடியாள் துயரங்கள், உள்ளாலை, புறம்படி, பறைச்சேரி, புலைப்பாடி என சாதிவாரியாக ஊரின் வசிப்பிடத்தை உருவாக்கியது, `புல்லு பறிக்கிற பறையன், மாடுறிக்கும் புலையன்’ ஆகியோர் தீண்டத்தகாதவர் எனப் பிரிவினையை உண்டாக்கியது. எல்லாவற்றுக்கும் மேலாக, நாமெல்லாம் நம்பிக்கொண்டிருந்த `தமிழர்களின் குடவோலைமுறை’ தமிழர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக அல்ல; பிராமணர்கள் மட்டுமே நறுக்கோலையில் பெயர் எழுதி குடத்தில் இட்டுத் தேர்ந்தெடுக்கும்முறை ஆகியவற்றை நாவல் பேசியிருப்பதால், தமிழ்ச் சூழலில் ஒரு தாக்கம் ஏற்படும் என நம்புகிறேன்.

புலியூரிலிருந்து விரட்டப்பட்டு தஞ்சைக்கு வந்ததும், `உயிர்மை’ ஆசிரியர் கவிஞர் மனுஷ்ய புத்திரன் ஊக்கமளித்து சிறுகதைகளை எழுதச் சொன்னார். பிறகு நாவல் எழுதவும் சொன்னார். எம்.எல்.கட்சியின் தியாகத் தோழர்கள் மாடக்கோட்டை சுப்பு, மணலூர் சந்திரகுமார்-சந்திரசேகர் ஆகியோர் பற்றிய முதல் நாவல் `உடல் ஆயுதம்’. அடுத்ததாக, திருநங்கைகள் இந்தச் சமூகத்தில் எதிர்கொள்ளும் மனிதர்கள், சம்பவங்கள், பயணங்கள் பற்றிய நாவலாக `மூக்குத்தி காசி (முப்பாலி)’ வந்தது. அதனுடன் சேர்ந்து `மக்காச்சோளக் கணவாய்’ எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளியானது. என்னுடைய எல்லாப் படைப்புகளும் `உயிர்மை’ பதிப்பக வெளியீடாக வந்தவையே.

துயர்மிகு இடம்பெயர்தலுக்குப் பின்னான அடுத்த வருடத்திலேயே என்னுடைய முதல் நாவல் வெளியானது. மனம், உடல் இரண்டினுள்ளும்  ஆறாத புண் இருந்தாலும் என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. ஆனால், இன்னும் நான் கொலைவெறித் தாக்குதலுக்குள்ளான கொடும்நிகழ்வை எழுதவில்லை. என்றாவது ஒருநாள் எழுதலாம் அல்லது எழுதாமலும் போகலாம். ஏனெனில், அதைவிட கொந்தளிப்பானவை நாள்தோறும் நம்மைச் சுற்றி நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.''