Published:Updated:

‘‘காலையிலிருந்து பட்டினி... இதுக்கா வந்தார் எடப்பாடி?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘‘காலையிலிருந்து பட்டினி... இதுக்கா வந்தார் எடப்பாடி?’’
‘‘காலையிலிருந்து பட்டினி... இதுக்கா வந்தார் எடப்பாடி?’’

‘‘காலையிலிருந்து பட்டினி... இதுக்கா வந்தார் எடப்பாடி?’’

பிரீமியம் ஸ்டோரி

நாகை மாவட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல கடந்த 20-ம் தேதி ஹெலிகாப்டரில் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாதியில் திரும்பினார். அடுத்து 28-ம் தேதி அதிகாலையிலேயே ரயில் மூலம் நாகை வந்தார். முதல்வரின் வருகையையொட்டி முதல் நாள் இரவே, நாகை ஒன்றிய அலுவலகத்துக்குப் புயலால் பாதிக்கப்பட்ட 100 பெண்களை அழைத்துவந்து தங்கவைத்திருந்தார்கள். அவர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட 27 அத்தியாவசியப் பொருள்களை வழங்கி முதல்வர் தனது பயணத்தைத் தொடங்கினார். உடன் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் வந்தார்.

நாகப்பட்டினம் - வேதாரண்யம் சாலையில் பிரதாமராமபுரம் கிராமத்தில், விழுந்துகிடந்த மரங்களை இருவரும் பார்வையிட்டனர். பின்பு விழுந்தமாவடி வந்தவர்கள், அங்கு அமைக்கப்பட்டிருந்த குடிநீர் பம்பை அடித்து, தண்ணீரைக் குடித்துப்பார்த்து ஆய்வு செய்தார்கள். வேட்டைக்காரனிருப்பு பேரிடர் புயல் மையத்தை முதல்வர் வருகைக்காக அவசரமாகச் சுத்தப்படுத்தியிருந்தார்கள். அங்கு மக்களுக்கு முதல்வர் கையால் அளிப்பதற்காக, காலை 8 மணிக்கே பொங்கலும் சட்னியும் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், முதல்வர் வருகை தாமதமானது. அதனால், முதல்வர் மதியம் வரும்வரை அவர்களுக்கு உணவு அளிக்காமல் பட்டினியாக காத்திருக்க வைத்தனர் அதிகாரிகள். அங்கிருந்த பெண்கள், “காலையில இருந்து தண்ணி கூட குடிக்கல. கண் முன்னாடி டிபன் இருந்தும் குழந்தைக்குக்கூட கொடுக்க முடியாதுன்னுட்டாங்க... எங்களைப் பட்டினி போடுறதுக்காகவா முதல்வர் வந்தார்?” என்று கொந்தளித்தார்கள். முதல்வர் மதியம் 1 மணிக்கு வந்தபின்பே அவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டது. பின்பு நாலுவேதபதி, புஷ்பவனம், பெரிய குத்தகை உள்ளிட்ட கடலோரக் கிராமங்களைப் பார்வையிட்டார் முதல்வர்.

முதல்வர் வருகையின்போது சாலையின் இரு பக்கங்களிலும் மக்கள் வரிசையாக நின்று வரவேற்க, நூறு நாள் வேலை செய்துகொண்டிருந்த  பெண்கள் அழைத்துவரப்பட்டிருந்தார்கள். அவர்கள் காலை 9 மணியிலிருந்து மதியம் வரை நான்கு மணி நேரம் நிற்க முடியாமல் துவண்டுபோய் சாலையில் அமர்ந்துவிட்டார்கள். ஆனால், காத்திருந்த மக்களைப் பார்த்து ஒரு வார்த்தை ஆறுதல் சொல்லாமல் காரில் கடந்துச் சென்றுவிட்டார் முதல்வர். இதனால், கொதிப்படைந்தவர்கள் அங்கேயே சாலைமறியல் செய்தார்கள். போலீஸார், அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார்கள்.

‘‘காலையிலிருந்து பட்டினி... இதுக்கா வந்தார் எடப்பாடி?’’

திரும்பி வந்த அமைச்சர்... திட்டித்தீர்த்த மக்கள்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு தமிழக அரசின் எந்த உதவியும் சென்றடையவில்லை. இந்நிலையில், திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு அமைச்சர் காமராஜ் காரில் சென்று கொண்டிருந்தார். இடையே கிராம மக்கள் அமைச்சரின் காரை மறித்தார்கள். கார் நிற்காமல் வேகமாகச் சென்றது. காரில் அமைச்சர் செல்லூர் ராஜுவும் இருந்தார். இதனால், கோபமடைந்த பருத்திச்சேரி, தண்டளைச்சேரி, கண்ணந்தங்குடி மக்கள், சாலை மறியலில் இறங்கினார்கள். அமைச்சர் காமராஜ் எங்களைச் சந்தித்தால் மட்டுமே மறியலைக் கைவிடுவோம் என்று மக்கள் உறுதியாகச் சொல்லிவிட்டார்கள். அடுத்த சில மணி நேரத்தில் முதல்வர் அந்த வழியாக வர வேண்டியிருந்தது. பதறிப்போன அதிகாரிகள், அமைச்சர் காமராஜுக்குத் தகவல் அளிக்க, அவர் வேறு வழியில்லாமல் யூ-டர்ன் அடித்துத் திரும்பி வந்தார். ஆனாலும், ஆத்திரம் தணியாத மக்கள் அமைச்சரைக் கடுமையாகத் திட்டித்தீர்த்தார்கள்.

இப்பகுதியைச் சேர்ந்த பருத்திச்சேரி ராஜா, “புயல் அடிச்ச நாள்ல இருந்து இன்னைய வரைக்கும் அரசு எந்த உதவியும் பண்ணல. ஓசூர்ல இருந்து தமிழ் தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்தவங்க உணவுப் பொருள்கள், தார்பாய், போர்வை, பாய், சோலார் லைட் கொடுத்தாங்க. தண்டளைச்சேரி, பருத்திச்சேரி, கண்ணந்தங்குடி இந்த மூணு ஊருலயும் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். இந்த ஒட்டு மொத்தக் குடும்பங்களுக்கும் சேர்த்து இப்பதான் சாப்பாட்டுக்காக அரசு தரப்புல பத்தாயிரம் ரூபாய் கொடுத்திருக்காங்க. இதை வெச்சு எப்படிச் சமாளிக்க முடியும்?” என்றார் விரக்தியுடன்.

‘‘காலையிலிருந்து பட்டினி... இதுக்கா வந்தார் எடப்பாடி?’’

இருளில் தவிக்கும் புதுக்கோட்டை!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவித்துள்ளார். ஆனால், வீடுகளை இழந்த மக்களுக்கு இதுவரை தார்பாய்கூட வந்து சேரவில்லை என்பதே கள நிலவரம். புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி பகுதிகளில் நிவாரணப் பணிகளின் நிலைமை மிக மோசம். இதன் காரணமாக கோபமடைந்த கந்தர்வக்கோட்டை அ.தி.மு.க எம்.எல்.ஏ ஆறுமுகம், புதுக்கோட்டைக்கு வந்திருந்த முதல்வர் முன்னிலையிலேயே கலெக்டர் கணேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அடுத்து அங்கு வந்த சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணனையும் மக்கள் முற்றுகையிட்டனர்.

கஜா புயல் வீசிய ஒரு சில தினங்களில் திருச்சியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, ‘28 ஆயிரம் மின் கம்பங்கள் மட்டுமே சேதம் அடைந்துள்ளன. அவை விரைவில் சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்படும்’ என்றார். ஆனால், பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘ஒரு லட்சத்துக்கும் அதிகமான  மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன’ என்றார். இந்த முரண்பாடுகளால் மின்சார ஊழியர்கள் குழப்பத்தில் உள்ளனர். இரண்டு வாரங்களைத் தாண்டியும் ஏராளமான கிராமங்களில் மின்சாரம் எட்டிப் பார்க்கவில்லை. கல்லூரி மாணவர்களுக்குத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. மின்சாரம் இல்லாததால், மக்கள் இருளில் சிரமப்படுகின்றனர். ஆலங்குடி, அறந்தாங்கி பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களின் சேத  விவரங்கள் முறையாகக் கணக்கெடுக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இவ்வளவு பாதிப்புகளுக்கு இடையிலும் தங்களுக்காக இரவு பகலாக உழைத்த மின்வாரிய ஊழியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியில் மக்கள் அவர்களுக்குக் கறி விருந்து வைத்து அசத்தினர். இதேபோல் குரும்பூர், அறந்தாங்கி பகுதிகளில் மின்சார ஊழியர்களுக்கு பேனர் வைத்து தங்களது நன்றி உணர்வை வெளிப்படுத்தினர்.

‘‘காலையிலிருந்து பட்டினி... இதுக்கா வந்தார் எடப்பாடி?’’

“மறுபடியும் வீட்டை இடிச்சிட்டா போட்டோ பிடிக்க முடியும்?”

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் பகுதிகளில் உள்கிராமங்களுக்கு இன்னமும்கூட அதிகாரிகள் வரவில்லை. பேராவூரணியில் உள்ள பெத்தனாச்சி வயல், பெரியாத்திகோட்டை, பூலான் கொல்லை சாலைகள் சரியில்லாததால் எந்த வாகனமும் உள்ளே செல்லமுடியவில்லை. பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்த குமார், “பாதிக்கப்பட்ட நபர், சேதமடைந்த வீட்டுக்கு முன் நின்று போட்டோ எடுத்து கொடுத்தால்தான் அரசு நிவாரணம் கொடுக்கும் என்று சொல்லி மறு கணக்கு எடுத்து வருகின்றனர். பத்து நாள் காத்திருந்துவிட்டு, இப்பதான் சொந்தச் செலவுல கூரையைச் சரிசெஞ்சோம். மறுபடியும் வீட்டை இடிச்சிட்டா போட்டோ எடுத்துத்தர முடியும்? நிவாரணத் தொகையைக் குறைப்பதற்கே அரசு இதுபோன்ற செயல்களை அதிகாரிகளைக் கொண்டு செய்கிறது” என்றார் வருத்ததுடன்.

 தாமரங்கோட்டையைச் சேர்ந்த ராஜலிங்கம், “குடிசைகளை இழந்து முகாம்களில் தங்கிய மக்களுக்கு அரசு உடனடியாக 8.500 ரூபாய் தரப்படும் என்று அறிவித்தது. ஆனால் வருவாய்துறை அதிகாரிகள், ஆளும் கட்சியினர் சொல்லும் நபர்களை மட்டும் பட்டியலில் சேர்க்கிறார்கள்” என்றார்.

பேராவூரணி அருகே ஆதனூர் கிழக்கு கிராமத்தில் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்த 40 குடும்பங்கள் உள்ளன. அங்கும் அதிகாரிகள் யாரும் செல்லவில்லை!

- சி.ய.ஆனந்தகுமார், கு.ராமகிருஷ்ணன், மு.இராகவன், கே.குணசீலன்,  தெ.பாலமுருகன், இரா.மணிமாறன்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், தே.தீட்சித், ம.அரவிந்த், பா.பிரசன்னா

‘‘காலையிலிருந்து பட்டினி... இதுக்கா வந்தார் எடப்பாடி?’’

கட்சியினருக்கு கமகம விருந்து... மனமிரங்காத டிடிவி!

.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் தினகரன் நெடுவாசல் மேற்கு, கிழக்கு மற்றும் அணவயல் பகுதிகளைப் பார்வையிட்டார். அவர் ஏதேனும் நிவாரணம் தருவார் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்தனர். பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுக்க வந்த தினகரன், வாகனத்தில் இருந்து கீழே இறங்காமல், “ஆளும் கட்சியினரும் எதிர்க் கட்சியினரும் புயல் பாதித்த மக்கள்மீது அக்கறை இல்லாமல் செயல்படுகின்றனர்” என்று புகார் வாசித்தார். அவரது வாகன வரிசையில் கடைசியாக வந்த வாகனத்தில் பெரிய பாத்திரங்களில் சமைத்த உணவு இருந்தது. அதைத் தங்களுக்குத்தான் தினகரன் கொண்டுவந்திருக்கிறார் என்று நினைத்த மக்கள், உணவு வாங்க பாத்திரங்களுடன் கையேந்தியபடி திரண்டனர். ஆனால் அந்த வாகனங்கள், அந்தப் பகுதியில் இருந்த தென்னந்தோப்புக்குச் சென்றது. அங்கு கட்சிக்காரர்களுக்கு கமகம விருந்து பரிமாறப்பட்டது. நொந்துபோன மக்களோ, “இனிமே அவரு எது தந்தாலும் வாங்கக் கூடாது” என்றபடி கோபத்துடன் கலைந்துசென்றனர்.

‘‘காலையிலிருந்து பட்டினி... இதுக்கா வந்தார் எடப்பாடி?’’

விளம்பரம் தேடும் அமைச்சர்...

மைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை நகர்ப் பகுதிகள், விராலிமலை பகுதிகளை மட்டுமே சுற்றிவருகிறார். ஆலங்குடி பகுதிக்குள் மத்தியக் குழுவுடன் சென்ற அமைச்சர், அதன் பின்பு அங்கு சென்று மக்களைச் சந்திக்கவில்லை. ஆனால், மின்வாரிய அதிகாரிகளின் பணிகளைப் பார்த்து அமைச்சர் கையெடுத்துக் கும்பிடுவது போலவும்  மக்களுக்கு சப்பாத்தி சுட்டுக் கொடுப்பது போலவும் படம் எடுத்து, அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். திருச்சி மாத்தூரில் ‘இருள் நீக்கி ஒளி தந்தவனே’, ‘துயர் துடைத்தவனே’ என விதவிதமான வாசகங்களுடன் விஜயபாஸ்கரை வாழ்த்தி பேனர்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. இன்னொருபக்கம், அவரின் மனைவியும் குழந்தைகளும் ரொட்டித்துண்டுகளைப் பொதுமக்களுக்குக் கொடுத்த படத்தையும் ஃபேஸ்புக்கில் வைரலாக்கியுள்ளனர். இந்த விளம்பரங்கள் தேவையா என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் ஆதங்கமாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு