கூட்டத்தில் நானும்
தண்டவாளத்தில் ஊரும்
நீள்செவ்வக ரயிலின்
சதுர வடிவ சன்னலிலிருந்து
பார்த்துக்கொண்டே பயணிக்கிறேன்.
ஊர்களிடை கூவிச்செல்லும்
அந்த உலோகப் பிராணியை
வீதியோரம் நின்று கையசைக்கும்
சிறுவர் கூட்டத்தில்
நானும் தெரிகிறேன்.
- பாப்பனப்பட்டு வ.முருகன்

தானியங்கள் இறைப்பவன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
போர்வீரன் சிலையின் உயர்த்திய கையில்
சிறகுகள் விரித்த ஒரு புறாவையும்
வடித்திருந்தான் பண்டைய சிற்பி
சில நேரங்களில் அதன் சிறகுகள்
படபடப்பதாக பார்த்தவர்கள் சொல்கிறார்கள்
சிலையின் இறுக்கிய கைகளை
யாராவது இலகுவாக்கினால் போதுமானது.
நூற்றாண்டுகளைப் பின்னோக்கிப் பறக்கும் பறவை
தன் சமாதானப் பறத்தலில்
தொன்மத்தில் நடந்து முடிந்த போரை
ஆதியிலேயே நிறுத்தக்கூடும்
புறாவின் சிறகுகள் படபடப்பதைப் பார்த்தவர்கள்தாம்
இதையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
சிலையிருந்த ஸ்தலத்தில் அங்கே குழுமியிருக்கும்
புறாக்களுக்கு
தானியங்களை இறைத்துக்கொண்டிருப்பவன்
சிலையாக இருந்தவன்
சம்பவங்களை பீடத்தின் கல்வெட்டில்
கொத்திக்கொண்டிருக்கிறான் அதே பண்டைய சிற்பி.
- வலங்கைமான் நூர்தீன்
காகம் இனிது
கழுத்தை நெளித்து திசையெங்கும் கண்களை எறிந்து
இறகைக் கொத்தி சிறகை விரித்தது காகம்
அடைகாத்தோம் ஊட்டி வளர்த்தோமென்று
ஒருபொழுதும் குயிலை அடிமைப்படுத்தியதில்லை
கல்லில் துரத்தியடிக்கப்பட்ட பின்னும்
அழைத்தவுடன் வருவதில் அடங்கும்
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண... குறள்
அந்தியும் கூடு திரும்பாத அந்தப்பறவையை எங்ஙனம்
கணக்கில் கொள்ளும் காக்கை தொப்புள்கொடிகள்
றெக்கையொடிந்த அப்பறவையின் வயிற்றுள்
உடைந்த கருமுட்டைகளில் எத்தனை கூடுகள் சிதைந்துபோயிருக்கும்
அப்போதுதான் பறக்கத் தொடங்கிய காக்கை
வடையொன்றோடு கிளையில்
குட்டி நரிகளில் ஒன்று அண்ணாந்து பார்த்து
நாம்தான் வடை தின்ன மாட்டோமே என்று
சொல்லிக் கடந்தது
- பூர்ணா
இத்துடன் விடைபெறுகிறேன்...
சிறப்பு விருந்தினா்கள்
சிலாகித்துப்பேசிக்கொண்டிருக்கின்ற
மேடைகளின் அருகிலேயே
அம்மாக்களின் மடியில்
தூங்கிவழிகின்றன
அடுத்த பாடலுக்கு ஆடவேண்டிய
குழந்தைகள்
பள்ளி விழாக்களில்.
- காசாவயல் கண்ணன்
கிறிஸ்துமஸ்
கிறிஸ்துவை வரவேற்க
பால்கனிகளில்
தொங்குகின்றன
நட்சத்திரங்கள்.
அவரோ வருடந்தோறும்
மாட்டுத் தொழுவத்தில்தான்
அவதரிக்கிறார்.
- பா.ரமேஷ்