Published:Updated:

வாத்தியார் - சிறுகதை

வாத்தியார் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
வாத்தியார் - சிறுகதை

கவிப்பித்தன் - ஓவியங்கள்: ரமணன்

வாத்தியார் - சிறுகதை

கவிப்பித்தன் - ஓவியங்கள்: ரமணன்

Published:Updated:
வாத்தியார் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
வாத்தியார் - சிறுகதை

கார்த்திகேயன் அலுவல கத்திற்குக் கிளம்பத் தயாராகிக்கொண்டி ருந்தான். குளித்துவிட்டு வெள்ளைநிறக் கைபனிய னுக்குள் தலையை நுழைத்துக்கொண்டிருந்தபோது அவனது கைப்பேசி ஒலித்தது.

பெரிய மகள் வினோதினி கைப்பேசியின் பட்டனைத் தட்டி அவனிடம் நீட்டினாள். ஊரிலிருந்து பேசிய அவன் தம்பி துரை, ‘வாத்தியார் செத்துட்டார்ணா’ என்றதும் திக்கென்றது. மாலையே எடுத்துவிடுவார்கள் என்று அவன் சொன்னது மேலும் கவலையளித்தது.

வாத்தியார் - சிறுகதை

அலுவலகத்தில் அன்று மிக முக்கியமான வேலை இருந்தது. அலுவலகத்திற்குப் போயே தீரவேண்டும். அந்தத் தவிப்பில் வாத்தியார் எப்படி இறந்தார் என்றுகூடக் கேட்கத் தோன்றவில்லை.

சட்டென்று வாத்தியாரின் முகம் அவன் மனசுக்குள் வந்து நின்றது.

வாத்தியார் என்று சொல்லப்படும் கங்காதரன் வாத்தியார், பள்ளிக்கூட வாத்தியார் இல்லை. நாடக வாத்தியார். தொழில்முறை நாடக வாத்தியாரும் இல்லை. ஊரில் இருந்த பத்திருபது நாடகப் பிரியர்களைச் சேர்த்து ‘சரவண பவா நாடக மன்றம்’ என ஒன்றை உருவாக்கி வைத்திருந்தார். கல்யாணமாகாத இளவட்டங்கள் முதல் பேரன் பேத்தி எடுத்த தாத்தாக்கள் வரை அதில் இருந்தனர். ஒவ்வோர் ஆண்டும் சித்திரை அல்லது வைகாசி மாதங்களில் ஊரில் நடக்கிற கெங்கையம்மன் ஜாத்திரைக்கு அவர்களின் நாடகம்தான் நடக்கும்.

வாத்தியார் கங்காதரனின் அப்பா தனக்கோட்டியும் கூத்து வாத்தியார்தான். அவர் தன் சிநேகிதர்களுடன் சேர்ந்து ‘கெங்கையம்மன் அவதாரம்’, `கர்ண மோட்சம்’ எனத் தெருக்கூத்து நடத்துவார். அவரோடு சேர்ந்து கங்காதரனும் அந்தக் கூத்துகளில் சில வேசங்கள் கட்டியிருக்கிறார்.

தனக்கோட்டிக்கும் அவர் கூட்டாளிகளுக்கும் கால்களில் வலு குறைந்து, ரத்தம் சுண்டியபிறகு… கங்காதரன் அந்தக் குழுவிலிருந்த சிலரையும் வேறு சில இளவட்டங்களையும் சேர்த்துதான் புதிய நாடகக் குழுவைத் தொடங்கினார்.

வாலி மோட்சம், ராமர் பட்டா பிசேகம், மங்கையின் மணாளன் போன்ற நாடகக் கதைகளை வெளியிலிருந்து வாங்கிவந்து, ஒத்திகை நடத்தி மேடையேற்றுவார். பிரபலமான சினிமாப் பாடல்களின் மெட்டுகளில் அவரே பாடல்கள் எழுதுவார். அதுதான் ஊர் மக்களை அப்போது சுண்டி இழுத்தது.

மண் தரையில் புழுதி பறக்கக் கூத்து ஆடுவதை மாற்றியதும் அவர்தான். அரசாங்கப் பள்ளிக்கூடத்திலிருந்து மர பெஞ்சுகளைத் தூக்கி வந்து உயரமான மேடை அமைத்து… அந்த மேடை அதிர அதிர அவர்களை ஆடவைத்தார்.

வாலி மோட்சம் நாடகத்தில் மாட்டு வியாபாரம் செய்யும் முனிசாமிதான் வாலியாக நடிப்பார். வாலியின் தம்பி சுக்ரீவனாக பால்காரன் கணேசன் வெளுத்துவாங்க, செம்மறி ஆடு மேய்க்கிற ராமசாமி பத்துத்தலை ராவணனாகக் கலக்குவார். ராமனாக வாத்தியார் கங்காதரனே வேசம் கட்டுவார்.

ராவணன் ராமசாமி செம்மறி ஆடுகளைத் தவிர வேறெதுவும் அறியாதவர். அவருக்கு ஓர் எழுத்துகூட எழுதப் படிக்கத் தெரியாது. காகிதத்தில் இருக்கிற எழுத்துகளைப் பார்த்தாலே அவருக்குக் கண்களை இருட்டிக்கொண்டு வரும்.

``துண்டு துண்டா கிள்ளிப் போட்ட நாக்குப் பூச்சிங்க மாதிரி கலாமுலானு நிகிண்டுகினு கீது. இதப்போயி எய்த்துனு எவன்டா கண்டுபுட்சது..?” என்று தலையை உதறிக்கொள்வார்.

அவர் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறபோதே மாரியம்மன் கோயில் ஆலமர நிழலிலோ, கருங்கல் பாறையிலோ, சதுர மலையின் ஒற்றைப் பனையின் நிழலிலோ உட்கார்ந்து அவருக்கான வசனங்களை வாத்தியார்தான் படித்துக்காட்டுவார். பேசிக்காட்டுவார். ஒத்திகையின்போது பாவனைகளோடு நடித்துக்காட்டுவார்.

ராவணனின் மகன் துந்துபியாக நடிக்கிற ரங்கநாதனுக்கு மாட்டு வியாபாரம்தான் தொழில். மாட்டு வண்டியில் மக்கிய சாண எருவை நிலங்களுக்கு ஓட்டுகிற பெருமாள்தான் வாலியின் பட்டத்து ராணி தாரை.

நாடகக் குழுவில் இருக்கிற நான்கைந்து பேருக்குத்தான் வசனங்களைப் பார்த்துத் தானாகப் படிக்கத் தெரியும். அதுவும் எழுத்துக் கூட்டித்தான். தினமும் முன்னிரவில் நடக்கிற ஒத்திகையில் எல்லோருக்கும் வசனம் பேச, பாடல் பாட, நடனம் ஆட, நடை போட என சகலத்தையும் வாத்தியார்தான் சொல்லித்தருவார். யாராவது வசனங்களை மறந்துவிட்டுத் தலையைச் சொரிந்துகொண்டு நின்றால் திட்டவே மாட்டார். சிரித்துவிட்டு மீண்டும் மீண்டும் சொல்லித் தருவார். தாரையாகவும் சீதையாகவும் நடிக்கிறவர்களுக்கு நடையின் நளினத்தை நுட்பமாகச் சொல்லித்தருவார்.

“டேய் மச்சாங்… இப்ப நீ சீதா தேவிடா… ஸ்ரீமான் ராமனோட மகாராணி. நடக்கும்போது பூமேல நடக்கற மாதிரி நடக்கணும். நடக்கற சத்தம் மண்ணுக்கே கேக்கக் கூடாது. நீயின்னாடானா மாட்டு வண்டி மாதிரி தடதடதடன்னு ஓடற… த… என்னப் பாரு…” என்று சொல்லிவிட்டு, லுங்கி முனையை இடது கை விரல் நுனியால் பிடித்தவாறு நளினமாக நடந்து காட்டுவார். அவர்கள் அந்த நடையில் ஓரளவாவது பிடித்துக்கொள்ள நான்கைந்து நாள்களாவது ஆகும்.

அனுமனாக நடிக்கிற டெய்லர் ரங்கசாமிக்குத் திக்குவாய். அவருக்குக் கோபம் வந்து மனைவியையோ பிள்ளைகளையோ திட்டத் தொடங்கினால் அவர் திட்டி முடிப்பதற்குள் அவர்கள் தூங்கிவிடுவார்கள். அது அவருக்குள் மேலும் அதிகமான ஆத்திரத்தைக் கிளறும். ஆனால் மேடையேறி அனுமனாக அவர் வசனம் பேசும்போது மட்டும் திக்கவே திக்காது. அந்த அதிசயத்துக்கு ஆஞ்சநேயர்தான் காரணம் என்று ஊரே நம்பியது.

அரசவையில் நடன மாதர்களாக நடிக்க ஒவ்வொரு முறையும் புதிய புதிய இளவயசுப் பையன்களைச் சேர்த்துக்கொள்வார். சினிமா மெட்டுப் பாடல்களுக்கு துள்ளிக் குதித்து, சுற்றிச் சுழன்று, தாவணிகளில் குத்தாட்டம் போடும் அவர்களின் ஆட்டத்தை உதட்டோரம் உமிழ்நீர் வழிய வழிய குதூகலத்தோடு பார்ப்பார்கள் ஆண்களும் பெண்களும்.

நாடகம் தொடங்குவதற்கு முன்பாக மேடையில் நாற்காலி போட்டு அதில் வாத்தியாரை உட்கார வைத்து சாமந்திப் பூ மாலை போட்டு வெள்ளைநிறக் கதர்த்துண்டு அணிவித்து அவருக்கு முதல் மரியாதை நடக்கும். அதன்பிறகு மிருதங்கமும் பெட்டியும் தாளமும் உச்சத்தில் ஒலிக்க… கட்டியக்காரனின் தடாலடி பாடலோடு தொடங்குகிற நாடகம், விடிய விடிய மக்களின் கண்கள்மீது இமைகளை மூடவிடாமல் தொடரும்.

கட்டியக்காரனாக வரும் கங்கன் விடிய விடிய மக்களைச் சிரிக்க வைப்பதில் கில்லாடி. ஆனால் மற்ற நேரங்களில் உம்மனாம்மூஞ்சி. சதா உர்ரென்ற முகத்தோடு யாரிடமும் பேசாமல் கிடப்பான்.

அனுமனுக்காக ஆலமரத்திலிருந்து ஒரு பெரிய கிளையையே வெட்டி எடுத்து வந்து மேடையின் முன்பாக நடச்சொல்வார். நீண்ட வாலோடு அனுமன் அந்தக் கிளையில் ஏறிக்குதித்து அதகளம் செய்ய… சிறுவர்கள் ஓஓஓவென்று ஆர்ப்பரிப்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பத்தாவது வரை மட்டுமே படித்திருந்தாலும் வாத்தியார் கங்காதரன் மெட்டுக் கட்டுகிற பாடல்கள் எல்லோரையும் அசர வைக்கும்.

மாரீசன் மாய மானாக வந்து பர்ணசாலையிலிருக்கிற சீதையை மயக்கி, கானகத்துக்குள் அழைத்துப்போக… அங்கிருந்து அவளை ராவணன் சிறையெடுத்துச் சென்றுவிட… சீதையைக் காணாத ராமன்… கானகமெல்லாம் அவளைத் தேடித் தவிக்கிறபோது…

வாத்தியார் - சிறுகதை

“சீதா …

உனைப் பிரிந்த ராமன்…

சீர்குலைந்த தேவன்…

கண்ணீரிலே தள்ளாடுதே கண்ணான கண்ணே…

சென்ற இடம் ஏது… நீ சென்ற இடம் ஏது…?”

என்று உருகி உருகி அவர் பாடுகிற பாடல் கல் மனசையும் கரைய வைக்கும்.

அந்த ஊரின் முதல் பட்டதாரியான இந்தக் கார்த்திகேயனுக்கும் வாத்தியாரை ரொம்பவும் பிடிக்கும். படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்த காலத்தில் பகலெல்லாம் வாத்தியாருடன்தான் பேசிக்கொண்டிருப்பான். அப்போது கவிதை என்று எதையோ எழுதிக் கொண்டு கிடந்த கார்த்திகேயனை வாத்தியாருக்கும் ரொம்பவே பிடிக்கும்.

ஒரு பெரிய நோட்டில் அவன் எழுதி வைத்திருந்த காதல் கவிதைகளை ஒரு நாள் வாங்கிப் படித்துவிட்டு அவனைக் கட்டிப்பிடித்து ‘நீ கவிஞன்டா’ என்று பெருமை பொங்கப் பாராட்டினார்.

வாலி ராமனால் வதம் செய்யப்பட்ட பின்னர்… விதவையான வாலியின் மனைவி தாரையும், ராவணனின் கோட்டைக்குள் சிறை வாசமிருக்கிற சீதையும் பாடுவதைப்போல சில சோகப் பாடல்ளை அவனை எழுதித்தரச் சொன்னார் ஒருமுறை.
ஆள் அரவமற்ற ஏரிக்கரையை ஒட்டிக்கொண்டிருக்கும் அரைவட்ட மதகின் உள்ளேயும், யாருமற்ற பொன்னியம்மன் கோயில் எட்டிமரத்துக்குக் கீழேயும் தனியாக உட்கார்ந்து மும்முரமாக யோசித்து யோசித்து… மூன்று பாடல்களை எழுதி அவரிடம் கொடுத்தான். அன்று இரவு நடந்த ஒத்திகையின்போது அந்தப் பாடல்கள் தாளக் கட்டோடு வாத்தியாரின் மனசைப் பிசைந்தெடுக்கும் குரலில் பாடப்பட்ட போது தேசிய விருதே வாங்கிவிட்டதைப் போல புளகாங்கிதமடைந்தான் கார்த்திகேயன்.

“ம்கூம்… உனுக்கும் வேல வெட்டி இல்ல… அந்தக் கூத்தாடிக்கும் இல்ல… இனிமே குடும்பம் குட்டிச்செவுருதாங்…” என்று இவன் அப்பா அப்போது திட்டியதுகூட இவனுக்கு உறைக்கவேயில்லை. அவருக்கு நாடகம், கூத்து, பாட்டு என்றாலே பச்சை மிளகாயைக் கிள்ளி ஆசன வாயில் வைத்துவிட்டதைப்போல திகுதிகுவென எரியும்.

ஆனால் வாத்தியார் ஒன்றும் இவனைப்போல வேலை வெட்டி இல்லாமல் ஊரைச் சுற்றவில்லை. கிடைத்த இரண்டு சர்க்கார் வேலைகளையும் தூக்கிக் கடாசிவிட்டு வந்தவர் அவர்.

ஆள் நல்ல உயரம். உயரத்துக்கு ஏற்ற உடம்பு. மாநிறம்தான். கூரான மூக்கு. அதற்குக் கீழே கருகருவெனச் செழிப்பான மீசை. அடியுரம் போட்டுப் புசுபுசுவென வளர்ந்த கேழ்வரகு நாற்றைப் போல… பார்க்க அழகாக இருக்கும் அந்த மீசை. அந்த ஊரிலேயே அதைப்போல அழகான மீசை வேறு யாருக்குமே இல்லை.

அவருக்கு இடது கண் மட்டும் லேசான கருட பார்வை. காகத்தைப்போல தலையைச் சற்று சாய்த்துச் சாய்த்துப் பார்ப்பார். ஆனால் தூரத்திலிருந்து பார்க்கிறவர்களுக்கு அவருக்கு அப்படி ஒரு குறை இருப்பதே தெரியாது.

ஒரு முறை சேலத்தில் ராணுவத்திற்கு ஆள் எடுத்தபோது சில சிநேகிதர்களோடு சேர்ந்து விளையாட்டாகத்தான் போயிருக்கிறார். ராணுவத்தில் சேரவேண்டும் என்ற கனவோடு போன மற்றவர்கள் எல்லாம் ஓட்டப் போட்டியிலேயே வெளியேறிவிட… ஒப்புக்குச் சேர்ந்து ஓடிய இவர் மட்டும் எல்லாவற்றிலும் முதல் ஆளாக வந்து தேர்வாகிவிட்டார்.

ஊரை விட்டுப் போகவே மாட்டேன் என்று அடம் பிடித்தவரை எல்லோரும் சேர்ந்து வேதம் ஓதுவதைப் போல ஓதி ஓதிதான் ராணுவத்துக்கு அனுப்பி வைத்தனர். வேண்டா வெறுப்பாகத்தான் போனார்.

முதலில் மீரட், பிறகு ராஜஸ்தான், மூன்றாவதாக ஜம்மு. அங்கிருக்கும்போதுதான் திருமணமும் ஆனது. ஒரு மாத விடுப்பில் வந்து திருமணம் முடிந்தபின் மீண்டும் திரும்பிப்போக மனசே இல்லாமல் போனார். அடுத்த முறை விடுப்பில் வந்தவர் திரும்பிப் போகாமலே இருந்துவிட்டார்.

ராணுவத்திலிருந்து தகவல் வந்து, உள்ளூர் காவல் நிலையத்தினர் அவரைப் பிடித்துக் கொண்டுபோய் ராணுவத்தில் ஒப்படைத்தனர். ஒரு வருடம்தான். ஆண் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் அங்கிருந்து ஓடிவந்துவிட்டார். அவரின் அப்பா, அம்மா, உறவினர்கள் எவ்வளவோ கெஞ்சியும் பில்கோல் போகவே முடியாது என்று தனது ராஜினாமாக் கடிதத்தைத் தபாலில் அனுப்பி வைத்துவிட்டார்.

அவர் அம்மா பூச்சியம்மாதான் சதா சர்வ நேரமும் திட்டிக்கொண்டே கிடப்பாள். திட்டெல்லாம் செத்துப்போன அவள் கணவன் தனக்கோட்டிக்குத்தான்.

“அந்த கம்னேட்டிதாங் கட்சி வரைக்கும் கூத்தாடியா இர்ந்து எண்ணம் எசனமில்லாமப் போயி சேர்ந்துட்டாங்… போன புண்ணியவாங் ஒத்தப் புள்ளயயும் இப்டி கூத்தாடியா ஆக்கிட்டுப் பூட்டானே… இது பட்டாளத்து வேலயக்கூட உட்டுட்டு வந்து பாட்டு கூத்துன்னு ஊரச் சுத்திகினு கீதே… கெங்கம்மா தாயே… உனுக்குனுதான வேசம் கட்டிகினு இவ்ளோ ஆட்டத்தயும் ஆடறாங்… அவனுக்கு நல்ல புத்திய குடுக்க மாட்டியா..?” என்று கூன் விழுந்த முதுகோடு புலம்பிக்கொண்டே கிடப்பாள்.

நான்கு கால் ஊதிவத்தி மணைக்குக் கீழே கால்களை நீட்டி உட்கார்ந்து… அசையும் கைகளுக்கு ஏற்ப முதுகை முன்னும் பின்னும் சாய்த்து சாய்த்து ஆடியபடி ஊதுவத்தி உருட்டி உருட்டியே அவள் முதுகு வளைந்து கூனாகிப் போனது. மொத்தக் குடும்பத்துக்கும் சேர்த்து அவள்தான் உழைத்தாள். அவள் உருட்டும் ஊதுவத்திகள் வீட்டு வாசலில் கரும்புடவையை விரித்ததுபோல வரிசை வரிசையாய் எப்போதும் காய்ந்துகொண்டே இருக்கும்.

அவளது புலம்பல் எல்லாம் வாத்தியார் வீட்டுக்குள் இல்லாத நேரத்தில்தான். அவர் வீட்டுக்கு வந்தால் போதும்… களியோ, சோறோ… எதையோ ஒன்றை வெங்கலக் கிண்ணத்தில் போட்டு அவர் எதிரில் வைத்துவிட்டு, ‘துண்றா நைனா…’ என்று வேண்டுவாள்.

இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்த பிறகும் ஆட்டம் கூத்து என்றே ஏகாந்தமாய் இருந்தவர்… திடீரென ஏதோ ஒரு வேகத்தில்… வேலூரில் போலீசுக்கு ஆள் எடுத்தபோது போய் வரிசையில் நின்றார்.

பட்டாளத்தில் இருந்தவர் என்பதால் உடனே போலீசிலும் வேலை கிடைத்துவிட்டது.

ஆனால் அந்த வேலையும் இரண்டு வருடங்கள் தான். அதையும் அவர் தலைமுழுகிவிட்டு வந்து நின்றபோது ஊரே வாயடைத்துப்போனது.

அப்போதுதான் பத்ரகாளியானாள் அவர் மனைவி ராணி. அதற்கு மேலும் அந்த நாடகப் பைத்தியத்துடன் சேர்ந்து வாழமுடியாது என்று அவர் முகத்துக்கு நேராக மண்ணை வாரி வாரித் தூற்றிவிட்டு… நண்டும் சிண்டுமாய் இருந்த இரண்டு குழந்தைகளையும் இழுத்துக்கொண்டு தன் தாய் வீட்டுக்குப் போனவள்தான். மீண்டும் அந்த ஊருக்குத் திரும்பி வரவேயில்லை.

ஒரு வெள்ளிக்கிழமை. ஊரின் தொடர்ச்சியாய் நீண்டிருந்த ஏரிக்கரை ஆலமரத்திற்குக் கீழே கொட்டியிருந்த மணல் குவியலின் மீது குந்தியிருந்தார் வாத்தியார். தகிக்கும் வெயிலை எல்லாம் தன் முரட்டு இலைகளால் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்த ஆலமரம் குளுமையை மட்டும் தன் கீழே படரவிட்டிருந்தது. அந்தக் குளுமையில் மனசு லயித்திருந்த வாத்தியார் மணலைக் கை நிறைய அள்ளி விரல்களுக்கிடையில் ஒழுகவிட்டுக்கொண்டிருந்தார்.

“ஒண்ணுக்கு ரெண்டு வாட்டி கவுருமென்ட்டு வேல வந்தும்… துணிமேல கீற தூச தட்றமாதிரி தட்டி உட்டுட்டு வன்ட்டியே மாமா… நாங்கல்லாம் டிகிரி முட்சிட்டு கவுருமென்ட்ல பெருக்கற வேல கெடச்சாக்கூட போதும்டா கடவுளேனு வேண்டிகினு இருக்கறம்… நீ பண்றது உனுக்கே ரொம்ப ஓவரா இல்ல..?” என்று அப்போது அவரிடமே கேட்டான் கார்த்திகேயன்.

இவனை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தார். அவரின் விரலிடுக்குகளிலிருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்த மணலைப் போலவே பிசிரின்றி இருந்தது அந்தச் சிரிப்பு.

“வேல இன்னாடா வேல… தட்டு நெறைய்ய கறிச்சோறு போட்டு வெச்சாக்கூட மனசுக்குப் புடிக்கலன்னா அதுல கைய வைக்க முடியாது மச்சாங்… நாம ஆடும்போதும் பாடும்போதும் மன்சுல கீற கஸ்டத்த எல்லாம் மறந்துட்டு ரசிக்கறாங்க பார்ரா ஜனங்க… அதுலதான்டா எனுக்கு நிம்மதி… அதான்டா எனுக்கு எல்லாம்” என்று இவனிடம் சொல்லிவிட்டு அந்த வெள்ளை மணலைப் போல மீண்டும் சிரித்தார்.

அவர் சிரித்தாலே பார்க்க அழகாக இருக்கும். அப்போது மேலும் அழகாக இருந்தது.

“அவன் ஒரு பொய்க்கத் தெரியாத பய்த்திக்காரங்” என்று இவன் அப்பா சொல்வது சரியாக இருக்குமோ என்ற எண்ணம் அந்த நொடியில் அவனுக்குள் தோன்றியது. ஆனாலும் அவர்மீது கோபமே வரவில்லை இவனுக்கு.

வாத்தியார் - சிறுகதை

சென்னையில் ஒரு தனியார் நிறுவன அலுவலகத்தில் இவனுக்கு வேலை கிடைத்து, திருமணமாகி, சென்னைவாசி ஆகிவிட்ட பின்னர் வாத்தியாருடனான தொடர்பு முற்றிலுமாய் அறுந்துபோனது என்றாலும், ஜாத்திரைக்கு ஊருக்குப் போனால் அவரின் நாடகத்தைப் பார்க்காமல் திரும்பி வரமாட்டான். வருடம் தவறாமல் ஊருக்குப் போனது பல்வேறு காரணங்களால் படிப்படியாகக் குறைந்து… கடைசியாக ஐந்து வருடங்களுக்கு முன்னால் இவன் ஊருக்குப் போனபோது வெளியூர் நாடகக்குழுவின் நாடகம்தான் நடந்தது.

உள்ளூர்க் குழுவினர்மீதான மவுசு குறைந்துவிட்டது என்றனர் ஊர்க்காரர்கள். முன்புபோல ஊர்ப் பிள்ளைகளுக்கு நாடகம் நடிப்பதில் ஆர்வம் இல்லை என்றார் கவலையோடு வாத்தியார்.

மாலை ஆறு மணிக்குள் அடக்கம் நடந்துவிடும் என்று அவன் தம்பி மீண்டும் மதியம் கைப்பேசியில் நினைவுபடுத்திய பிறகுதான் அனுமதி பெற்று அலுவலகத்திலிருந்து அவசர அவசரமாகக் கிளம்பினான் கார்த்திகேயன்.

இப்போதெல்லாம் அவன் ஊருக்குப் போவதே அபூர்வமாகிவிட்டது. நான்கு மணி நேரப் பயணம்தான் என்றாலும் அது வாய்ப்பதற்கே இப்படி யாராவது சாக வேண்டியிருக்கிறது.

ஆட்டோவில் கோயம்பேடு வந்து ஆற்காடு பேருந்தில் ஏறி சன்னலோர இருக்கையில் அமர்ந்தபோது மனசு கனத்திருந்தது. மதிய வெயிலின் வெக்கை வேறு எரிச்சல் படுத்தியது. திடீரென எப்படி இறந்திருப்பார் என்ற கேள்வி அப்போதுதான் அவனுக்குள் முளைத்தது.

கடந்த முறை பார்த்தபோதே அவர் மெலிந்து கருத்திருந்தது அவன் நினைவுக்கு வந்தது.

அப்போதே அவரின் பழைய துள்ளல் நடை இல்லை. ஐம்பதை நெருங்குகிற வயது தான். ஆனாலும் பார்க்க முழுக் கிழவனைப்போலத்தான் இருந்தார். அந்த கம்பீரமான குரலும், கொத்தான மீசையும் மட்டும் அப்படியே இருந்தன.

“இன்னாடா மச்சாங்… எப்பிடி சேமலாபம்…? பசங்க இன்னா படிக்குறாங்க..? பொட்டக் குட்டிய நல்லா வளத்து வைய்யி… என்னைக்கி இருந்தாலும் அவ எங்க ஊட்டுக்கு தாங் வந்தாவணும்…” என்றார் இவனிடம் பழைய உற்சாகத்தோடு.

அவரின் மனைவியும் பிள்ளைகளும் அவருடன் இல்லை என்பதை மறந்துவிட்டவரைப்போல அவர் பேசியது அவனுக்கு வியப்பாக இருந்தது.

வத்தி உருட்டுவதோடு நிற்காமல் நடவுக்கும் களை எடுப்புக்கும் போனாலும்… அவருக்குச் சோறு பொங்கிப் போட்டுவிட்டுத்தான் போவாள் கிழவி. அதைக்கூட அவர் ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை என எல்லோரிடமும் அப்போதே புலம்பிக்கொண்டு திரியும்.

ஆரம்பத்தில் உள்ளூர் கெங்கையம்மன் திருவிழாவில் மட்டும் ஆடிவந்த குழுவை சில வெளியூர்த் திருவிழாக்களிலும் ஆடவைத்தார். அங்கும் நல்ல பேர் கிடைத்தது. பல ஊர்களில் தொடர்ந்து ஆட அழைப்புகளும் வந்தன. ஆனால் ஆடுகிற எல்லோருமே சம்சாரிகள். கால்காணி, அரைக்காணி என்று உழுது… பயிரை நம்பியிருப்பவர்கள். மண்ணை நம்பிக் கூழ் குடிக்கும் சம்சாரிகளுக்கு அரிதாரம் பூசும் கூத்தை நம்பி உலை வைக்க தைரியமில்லை.

“வாத்யாரே… ஆட்ன காலும்… பாட்ன வாயும் சொம்மா இருக்காதுதாங்… அதுக்கு ஊர்ல கெங்கம்மா, மாரியம்மா ஜாத்திரைக்கி ஆட்னா மட்டும் போதும்… அப்பவும் ஆச அடங்கலனா ஊர்ல எதுனா சாவுக்கு காரியத்தன்னிக்கு ஆடலாம். இந்த அசலூரு ஆட்டம்லாம் நமக்கு வாணாம்… குடி கெட்டுப்புடும்…” என்றார் கறாராக ராவணன் ராமசாமி. ஆனால் வாத்தியார் மட்டும் ஏதாவது வெளியூர்க் குழுக்களில் வேசம் கட்டக் கூப்பிட்டால் எப்போதாவது போவதுமுண்டு.

நாளாக நாளாக உள்ளூரில் வேசம் கட்டுவதற்குக்கூட படாத பாடு படவேண்டியிருந்தது.

கெங்கையம்மன் திருவிழாவுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே ஒத்திகை தொடங்கி நடந்து வந்தாலும்… விழா நெருங்குகிறபோது நடக்கிற ஊர்க்கூட்டத்தில் வெளியூர் நாடகம்தான் வேண்டும் என்று யாராவது கொளுத்திப் போட்டுவிடுவார்கள்.

வீடியோ படம்தான் போட வேண்டும் என்று அடம்பிடித்து இரண்டு முறை பெரிய பெட்டி வைத்துப் படம் காட்டினார்கள். பிறகு திரைகட்டிப் படம் காட்டினார்கள். அதுவும் அலுத்துப்போன போது ஆடலும் பாடலும்தான் வேண்டும் என்று இளசுகள் அடம்பிடித்தன.

இப்படியான காரணங்களால் இவர்களின் நாடகம் மேடை ஏறாத வருசங்களில் பித்துப்பிடித்தவரைப் போலக் கிடப்பார் வாத்தியார்.

நெரிசலில் முக்கி முனகி நகர்ந்து கொண்டிருந்த பேருந்து பூந்தமல்லியைக் கடந்த பிறகுதான் வேகமெடுத்தது. நான்கு மணிக்குள் வாலாஜாப்பேட்டைக்குப் போய்விட்டால் போதும். அங்கே ஒரு பூமாலையை வாங்கிக்கொண்டால் அங்கிருந்து ஒரு மணி நேரம். ஐந்து மணிக்குள் ஊருக்குப் போய்விடலாம்.

பேருந்து சீராக ஓடிக்கொண்டிருக்க… சன்னல் கண்ணாடியை இறக்கி விட்டு, கைப்பேசியில் துரையிடம் பேசினான்.

“மூணு மாசமாவே ஒடம்பு செரியில்லாம இருந்தாரு. எந்நேரமும் குடி. பாத்துக்க பொண்டாட்டியும் இல்ல… அதட்டி வைக்க புள்ளைங்களும் இல்ல… அந்தக் கூனி கெய்வி இன்னா பண்ணும் பாவம்..? இன்னிக்கி வெடிகாலம்பற படுக்கையில இருக்கும்போதே வயிறு நோவுதுன்னு சொன்னாராம்… நம்ப பங்காளிங்க முனிசாமியும், ரங்கநாதனும் ஸ்கூட்டர்ல ஒக்கார வெச்சிகினு ஆஸ்பத்திரிக்கி போயிகீறாங்க… ஆஸ்பத்திரியில சேக்கறதுக்கு முன்னாடியே ஒண்ணுக்கு வருதுன்னு சொன்னாராம். பாத்ரூம்ல ஒக்காந்துகினு இருக்கும்போதே ரத்த ரத்தமா வாந்தி எட்த்துக் கீறாரு. வாந்தி எடுக்கும்போதே கீழ சாய்ஞ்சிட்டாராம்” என்றான் துரை. அதைக் கேட்கக் கேட்க அதிர்ச்சியாக இருந்தது இவனுக்கு.

“பதறிப்போயி தூக்கி எட்துகினு டாக்டரு கிட்ட ஓடிக் கீறாங்க… நாடி புட்சிப் பாத்துட்டு உயிரு பூட்சுன்னு சொல்ட்டாராம் டாக்டரு. அட்மிசன் போட்டா போஸ்ட்மார்டம் பண்ணணும்… அப்டியே சொல்லாம கொள்ளாம எட்துகினு போய்டச் சொல்லிக் கீதுங்க நர்சுங்க… காருக்காரங் மூவாயிரம் ரூபா கேட்டுக் கீறாங்…. அவ்ளோ துட்டு அவங்ககிட்ட இல்ல… பொணத்துத் தலையில தலப்பா கட்டி அதே ஸ்கூட்டர்ல நடுவுல ஒக்கார வெச்சி தோள்ல சாச்சி புட்சிகினு வந்துட்டாங்களாம்” என்றான் துரை.

கேட்கும்போதே தொண்டை அடைத்தது கார்த்திகேயனுக்கு. கூத்துக்காக எல்லாவற்றையும் பறிகொடுத்த ஒரு கலைஞனின் மரணம் இப்படி கக்கூசிலா நிகழவேண்டும்..? அவனது பிணத்தைக்கூட கௌரவமாக ஒரு காரில் கொண்டுபோக முடியாமல் இருசக்கர வாகனத்தில் கொண்டு போன துர்பாக்கியத்தை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. மனசு கசகசத்தது. கசப்போடு கண்களை மூடிக்கொண்டான்.

அவரது நெடுநெடுவென்ற உயரம்… பரந்த மார்பு… கருடப் பார்வை… கொத்தான மீசை… அத்தனையும் அவனது மூடிய கண்களுக்குள் மாறி மாறி படம் போல ஆடின.

மீசையை எப்போதும் கட்டை விரலாலும், ஆட்காட்டி விரலாலும் நெருடிக்கொண்டே அவர் பேசுவது அவன் கண்களுக்குள் படம்போல ஓடியது. அவருடைய மீசையைத் தானும் ஒருமுறை ஆசையாகத் தடவி விடவேண்டும் என்று பல முறை நினைத்திருக்கிறான் இவன்.

திருப்பெரும்புதூர், சுங்கவார்சத்திரம், வெள்ளை கேட் எனத் தங்க நாற்கரச் சாலையில் குலுங்கியும் குதித்தும் ஓடிய பேருந்து ஒரு வழியாக வாலாசாப்பேட்டையைத் தொட்டபோது அவனது உடம்பும் மனசும் கசங்கிவிட்டது.

அடுத்த ஒருமணி நேரத்தில் மாலையோடு அவன் ஊருக்குள் நுழைந்தபோது பறை மேளம், பேண்டு வாத்தியம், பட்டாசுச் சத்தம் என ஊரே களேபரமாக இருந்தது.

ஊரில் பல கூரை வீடுகள் பசுமை வீடுகளாகவும், மண் தெரு சிமென்ட் தெருவாகவும் மாறியிருக்க… காண்ட்ராக்டரின் புண்ணியத்தில் சிமென்ட்டில் ஒட்டாத ஜல்லிக் கற்கள்… நீர் வற்றிய குளத்தில் செத்துக் கிடக்கும் நத்தை ஓடுகளைப்போலத் தெருவெல்லாம் சிதறிக் கிடந்தன.

அந்த ஜல்லிக்கற்களுக்குப் போட்டியாகத் தெரு முழுவதும் பல நிறங்களில் சிதறியிருந்த பட்டாசுக் காகிதங்களில் சிதைந்த நடிகைகளின் வண்ணப் படங்கள் மட்டும் பளிச்செனத் தெரிந்தன. தெருவையே பனிமூட்டம்போலச் சூழ்ந்திருந்த கந்தக நெடியை அருவருப்பாய் மோந்தபடி நடந்தான் கார்த்திகேயன். பொதுவாகவே பட்டாசு வாசனை அவனுக்கு ரொம்பவும் பிடிக்கும். தீபாவளி, திருவிழா, கட்சி ஊர்வலங்கள் என எங்கே பட்டாசு வெடித்தாலும் ஆழமாக மூச்சை இழுத்து அந்த வாசனையை அனுபவிப்பான். ஆனால் சவ ஊர்வலத்தில் வெடிக்கிற பட்டாசு வாசனை மட்டும் அவனுக்குப் பிடிக்கவே பிடிக்காது. பிண வாசனையோடு சேர்ந்து அது நாறுவதாக அவனுக்குக் குமட்டும்.

வாத்தியாரின் வீட்டு வாசலில் பெரிய தேர்ப்பாடை கிழக்கும் மேற்குமாய் நின்றிருந்தது. பிணத்தைக் குளிப்பாட்டுவதற்குத் தயாராக இருந்தனர்.

கூட்டத்தை விலக்கி உள்ளே நுழைந்து மாலையைப் போட்டான் கார்த்திகேயன். கண்கள் மூடியிருக்க, நெற்றியில் புதிய ஒரு ரூபாய் நாணயம் மின்னியது. திறந்த வாயில் இடித்த வெற்றிலையை வைத்திருந்தனர். அந்த முகத்தைப் பார்த்ததும் அது வாத்தியார்தானா என்ற சந்தேகம் வந்தது அவனுக்கு.

உடலை உற்றுப்பார்த்தான். மேலே போர்த்தப்பட்டிருந்த வெள்ளை வேட்டிக்குக் கீழே குச்சி குச்சியான கைகால்கள் கோடு கோடாய்த் தெரிந்தன. கருத்துப்போன கன்ன எலும்புகள் துருத்திய முகம். கூரான மூக்கிற்குக் கீழே கொத்தான அதே மீசை.

“சீதா… உனைப் பிரிந்த ராமன்…. சீர் குலைந்த தேவன்…”

வாலி மோட்சத்தில் அவர் பாடுகிற பாடல் வரிகள் அவன் காதுகளில் ஒலிக்க… கண்களில் கண்ணீர் துளித்தது.

“குளிப்பாட்டுங்க… பொய்து சாய்து…” என்று யாரோ கூட்டத்துக்குள்ளிருந்து கத்த…. பரபரப்பானது கூட்டம். மேலே போர்த்தியிருந்த வேட்டியை உருவி… உடலைத் தூக்கிப் பரம்புப் பலகை மீது உட்கார வைத்து, சாயாமல் பிடித்துக் கொண்டனர். வாத்தியாரின் மனைவியையும் பிணத்தின் பக்கத்தில் அமரவைத்து ஐந்து பித்தளைத் தவலைகளில் கொண்டு வந்திருந்த ஆற்றுத் தண்ணீரை இருவர்மீதும் ஊற்றிக் குளிப்பாட்டினர்.

எல்லா சாங்கியங்களும் முடிந்ததும் உலர்ந்த முருங்கைக் கட்டையை லேசாகத் தூக்குவதைப் போல இரண்டு பேர் எளிதாக அந்த உடலைத் தூக்கிக்கொண்டு போனார்கள். பாடையில் பரப்பியிருந்த வைக்கோல் மீதிருந்த பச்சைத் தென்னை ஓலையில் படுக்க வைத்தனர். சரடுகளால் மார்பில் ஒரு கட்டு, இடுப்பில் ஒரு கட்டு, கால் முட்டிக்குக் கீழே ஒரு கட்டு என பாடையோடு சேர்த்து இறுக்கிக் கட்டினார் ஈசாக்.

“அரோகரா… அரோகரா…” எனக் கூட்டம் பெருங்கத்தலாகக் கத்த… அசைந்தபடி தேர்ப்பாடை மேலெழுந்தபோது பெண்களின் ஒப்பாரியும் பாடையோடு சேர்ந்து மேலெழுந்தது. காதுகளை அலற வைத்தபடி வெடித்துச் சிதறிய சரவெடி ஒப்பாரியைச் சுருட்டி தன் வெண்புகைக்குள் மறைத்துக்கொண்டது. வெடித்து ஓய்ந்தபோது அது ஒப்பாரிச் சத்தத்தை மீண்டும் துப்பியது.

பாடைக்கு முன்னால் கொள்ளிச் சட்டியோடு நின்றிருந்த அந்த இளைஞனை அப்போதுதான் கவனித்தான் கார்த்திகேயன்.

“வாத்தியாரு பையன்…. காலேஜ்ல படிக்கறானாம்…” என்றான் துரை.

கண்கள் விரிய அவனைப் பார்த்தான் கார்த்திகேயன். குழந்தையாக இருக்கும்போது பார்த்தது. இப்போது நெடுநெடுவென வளர்ந்து விட்டிருந்தான்.

வாத்தியாரைப் போன்ற அதே உயரம். அதே உடம்பு. அதே நிறம். அதே மூக்கு. மீசை மழிக்கப்பட்டிருந்தது.

இவனுக்கும் வாத்தியாரைப் போன்று கணீர் குரலும், கொத்தான மீசையும் இருக்குமா?

அவன் குரலைக் கேட்க ஆசையாக இருந்தது கார்த்திகேயனுக்கு. பாடைக்கு முன்னால் அவன் நடக்க… அவனை ஒட்டி நடந்தபடியே அவனிடம் கேட்டான்…

“என்னப்பா படிக்கற…?”

“பி.பி.ஏ.” என்றான் அவன்.

அதே குரல். வாத்தியாரே பேசியதுபோல இருந்தது. அதிர்ச்சியோடு திரும்பிப் பாடையைப் பார்த்தான். கண்களை மூடியபடி கிடந்த வாத்தியாரின் பிணம் ஊஞ்சலில் ஆடுவதுபோல வலதும் இடதுமாய் அசைந்தது. மீண்டும் திரும்பி, பையனைப் பார்த்தான். சட்டென்று அவனது மனசு தளும்பியது. இவனுக்கும் நாடகத்தில் நடிக்கிற ஆர்வமிருக்குமா?

ஒருமுறை அவனை மீசையோடு பார்க்க வேண்டும் என்று நினைத்தபடியே அவனோடு சேர்ந்து நடக்கத் தொடங்கினான். வாத்தியாரோடு சேர்ந்து நடப்பதைப் போலவே பிரமிப்பாக இருந்தது அவனுக்கு. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism