Published:Updated:

“நல்ல எழுத்தாளன் கௌரவிக்கப்படவேண்டும்!”

“நல்ல எழுத்தாளன் கௌரவிக்கப்படவேண்டும்!”
பிரீமியம் ஸ்டோரி
“நல்ல எழுத்தாளன் கௌரவிக்கப்படவேண்டும்!”

“நல்ல எழுத்தாளன் கௌரவிக்கப்படவேண்டும்!”

“நல்ல எழுத்தாளன் கௌரவிக்கப்படவேண்டும்!”

“நல்ல எழுத்தாளன் கௌரவிக்கப்படவேண்டும்!”

Published:Updated:
“நல்ல எழுத்தாளன் கௌரவிக்கப்படவேண்டும்!”
பிரீமியம் ஸ்டோரி
“நல்ல எழுத்தாளன் கௌரவிக்கப்படவேண்டும்!”

ந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது. விகடனின் வாழ்த்துகளோடு  அவருடைய அலுவலகத்தில் சந்தித்தேன். எப்போதும் சிந்திவிடாத குட்டிப் புன்னகைதான்  எஸ்.ராமகிருஷ்ணனின் அடையாளம். அது கொஞ்சமும் குறையாமல் நிறைய உரையாடினார். 

“நல்ல எழுத்தாளன் கௌரவிக்கப்படவேண்டும்!”

“விருது வாங்கிய இந்தச் சூழலில் உங்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது?”

“ஓர் எழுத்தாளனுக்குக் கிடைக்கும் பாராட்டுகள், விருதுகள் எல்லாமே அவன் செய்த காரியங்களைச் சுயவிமர்சனம் செய்துகொள்வதற்கான வாய்ப்பாகத்தான் இருக்கும். வாசகர்களுக்குப் பிடிப்பது, இலக்கியம் எழுதுவோருக்குப் பிடிக்காமல் இருக்கும். அப்போது ஏற்படும் சோர்வை இந்த விருதுகள்தான் போக்குகின்றன. என்னைவிடப் பல மடங்கு மகிழ்ச்சியாக என் குடும்பமும் என் நண்பர்களும் இருக்கிறார்கள். அந்த மகிழ்ச்சி பொதுவெளியிலும் எதிரொலிக்கிறது என்பது இன்னும் உற்சாகமாக இருக்கிறது. என்னைத் தெரிந்த, என் எழுத்தைத் தெரிந்த எல்லோரும் அவர்களுக்கே இந்த விருது கிடைத்ததாக நினைப்பது எனக்கு இன்னும் கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது.”

“ஒவ்வொருமுறையும் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டவுடன் அந்தப் படைப்பாளர் விமர்சனத்திற்குள்ளாவார். உங்களை அப்படி யாரும் விமர்சிக்கவில்லையே?”

“நான் இந்த விருதுக்குச் சரியான ஆள் என்று அவர்கள் நம்புகிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டி என்னுடைய இவ்வளவு நாள் உழைப்பிற்குக் கிடைத்த மரியாதையாகவே இந்த விருதை நினைக்கிறார்கள். ஒரு நல்ல எழுத்தாளன், அதுவும் விரும்பியதை எழுதும் எழுத்தாளன் கௌரவிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது.’’

“பாரதிதாசனுக்கு நாடகம், அ.மாதவனுக்குக் கட்டுரைத் தொகுப்பு என, இப்போது படைப்பாளரை விட்டுவிட்டு ‘இந்தப் படைப்புக்கு விருது சரியானதா?’ என்ற விமர்சனம் எழுகின்றதே. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”


“அதுவும் நடந்துகொண்டுதானிருக்கிறது. ஒரு படைப்பாளியை மதிப்பிடும்போது ஒரு நூலை வைத்துத்தான் மதிப்பிடப்படுகிறது. ஒரு பரிந்துரைப் பட்டியல் உருவாகி ஒரு தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்படுகிறது. அந்தப் பட்டியலில் மூத்த எழுத்தாளரின் படைப்பு இருந்தால் அது தகுதி இல்லையென்றால் நிராகரிக்கத்தான் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் முதல் படைப்பை எழுதியவருக்கே விருதும் கிடைத்துள்ளது. `சஞ்சாரம்’ நாவலைப் பொறுத்தவரை அந்தப் படைப்புக்கும் படைப்பாளனுக்கும் கிடைத்த விருதாகவே கருதுகிறேன்.”

“ ‘சஞ்சாரம்’ நாவல் உருவான விதம் பற்றிச் சொல்லுங்களேன்...”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நல்ல எழுத்தாளன் கௌரவிக்கப்படவேண்டும்!”

“இந்த நாவல் எழுத ஒன்றரை ஆண்டுகள் எடுத்துக்கொண்டேன். ஆனால், இதற்காகக் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் உழைத்துள்ளேன். இயல்பிலேயே இசை கேட்பதில் ஆர்வம் இருந்ததால் நான் எப்போதும் ஏதாவதொரு இசையுடனே பயணித்து வந்துள்ளேன். அப்படி இசையோடு பயணித்த எனக்கு நாகஸ்வரம் மட்டும் ஏனோ மிகவும் நெருக்கமான இசையாக இருந்திருக்கிறது. கிராமத்தில் சுற்றித்திரிந்த காலகட்டங்களில் திருவிழாக்கள், குடும்ப நிகழ்வுகள் என எல்லாவற்றிலும் நாகஸ்வரம் இடம்பெற்றிருந்ததுகூடக் காரணமாக இருக்கலாம். அந்த ஈர்ப்பால் நாகஸ்வர இசையைப் பற்றியும் இசைக்கலைஞர்கள் பற்றியும் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். அப்போதுதான் அவர்களின் வாழ்க்கை எந்தளவிற்குத் துயரமானது என்று தெரிந்துகொள்ள முடிந்தது. அப்படித் தெரிந்துகொண்டவற்றை நாவலாக எழுதலாம் என்று நினைத்ததன் விளைவுதான் ‘சஞ்சாரம்.’ இந்த நாவல் நாகஸ்வர இசை பற்றியது இல்லை. அந்தக் கலைஞர்களின் வாழ்வியல் பற்றியது. இந்த நாவலைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் ‘நாம் பார்க்கும் நாகஸ்வரக் கலைஞர்கள் இவ்வளவு துயரங்களைக் கடந்துதான் வருகிறார்களா?’ என்ற ஆச்சர்யம் ஏற்படலாம். ஆனால், சஞ்சாரம் நாவலில் எழுதியதைவிடப் பல மடங்கு பிரச்னைகளோடுதான் அவர்கள் இருக்கிறார்கள்.”

“உங்கள் பார்வையில் இன்னும் கௌரவிக்கப்பட வேண்டிய எழுத்தாளர்கள் என யாரையெல்லாம் கருதுகிறீர்கள்?”

 ``சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன் என மூத்த படைப்பாளிகளுக்கு இந்த விருது வழங்கப்படவேயில்லை. இவர்கள் இறந்துவிட்டார்கள் என்றாலும் அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படாமலேயே போய்விடக் கூடாது. எனவே அவர்களைக் கௌரவிக்கும் வகையில் சாகித்ய அகாடமி என்றில்லை, வேறுசில புதிய விருதுகளை உருவாக்கியும்கூடக் கொடுக்க லாம். அல்லது அவர்கள் பெயரிலேயே சில விருதுகளை உருவாக்கலாம். இவற்றை யெல்லாம் தனி நபர்கள், தனியார் அமைப்புகள் இப்போது செய்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அவற்றை அரசே எடுத்துச் செய்யலாம்.”

“நீங்கள் எழுத்தை மட்டுமே நம்பி உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். அந்த முடிவு சரிதான் என்ற நம்பிக்கையை இந்த விருது உங்களுக்குக் கொடுத்துள்ளதா?”

“எல்லாத் தொழிலிலும் இருக்கும் இடர்கள் எழுத்துத் தொழிலிலும் இருக்கின்றன. அப்படி எடுத்த முடிவுதான் எனக்கு யாரும் என்னுடைய காலண்டரில் சிவப்புக் கோடு போட முடியாதபடிக்கு என்னுடைய விடுமுறையை நான் தேர்ந்தெடுக்கும் ஒரு சுதந்திரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்தச் சுதந்திரம் எனக்கு எழுதுவதற்கான பெரிய மனநிலையைக் கொடுத்தது. ஆனால், பொருளாதார ரீதியாக  ஒருவரைச் சார்ந்துதான் இருக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது. அதனால் ஏராளமான அவமானங்களைச் சந்தித்து எழுதிக்கொண்டிருந்தேன். அப்படி எழுத வேண்டுமா என்றால் ஆம் அப்படித்தான் எழுத வேண்டும். ஏனென்றால் கம்பருக்கும் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் கு.அழகிரிசாமிக்கும் நடந்ததைவிடவா எனக்கு நடந்துவிட்டது என்கிற எண்ணம் என்னைத் தொடர்ந்து எழுதச் செய்தது. அவர்கள் கொடுத்தது பெரிய விலை. நான் அவ்வளவெல்லாம் கொடுக்கவில்லையே. நான் அந்த முடிவை எடுக்கும்போது உறுதியாக எடுத்தேன். நான் எடுத்த அந்த முடிவின்மீது ஒரு மறுபரிசீலனையும் விமர்சனமும் எனக்கு எப்போதும் இருந்ததில்லை; இப்போதும் இல்லை.” 
 
“இன்றைய இலக்கியச் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“என்னுடைய சமகாலச் சூழல் என்பது வெறும் தமிழ்ச்சூழல் மட்டுமல்ல. எல்லா மொழி இலக்கியச் சூழலையும் என்னுடைய சமகால இலக்கியச் சூழலாகத்தான் பார்க்கிறேன். ஒவ்வொரு மொழியிலும் வரும் அனைத்து இலக்கியங்களையும் கவனிக்கின்றேன். எந்த மொழியில் ஒரு படைப்பு வெளியாகிக் கொண்டாடப்பட்டாலும் அது கொண்டாடப்படும் காரணத்தைப் பார்க்கிறேன். எனவே என்னுடைய இலக்கியச் சூழல் என்பது தமிழ் என்று ஒரு குறுகிய மொழி வட்டத்துக்குள் மட்டும் அடக்கிக்கொள்ள விரும்பவில்லை. புதிதாக எழுத வரும் எல்லோருடைய எழுத்தையும் படிக்கின்றேன். ஆனால் முழுவதுமாகப் படிக்க முடிவதில்லை. அதற்கு நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட வாசிப்பு முறையும் காரணமாக இருக்கலாம். புதிதாக எழுதும் ஒருவரின் படைப்பை உடனே  மதிப்பிட்டுவிடுவதில்லை. அதை அவரது எழுத்தின் தொடக்கமாகத்தான் பார்க்கின்றேன். நான் வாசித்த வரையில் சிறுகதையில் கார்த்திகைப் பாண்டியன், போகன் சங்கர் ஆகியோரின் படைப்புகளைத் தேடிப் படிக்கின்றேன். கவிதையில் கண்டராதித்தன். ஸ்ரீநேசன், வெய்யில், சபரிநாதன் ஆகியோர் என்னுடைய கவனத்தை ஈர்த்தவர்கள் என்று சொல்லலாம். தமிழ் நாவல்கள் அதிகமாகப் படிக்கவில்லை.”

“அடுத்தது என்ன?”


“ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கின்றேன். அதன் கருவைத் தெரியப்படுத்தும்போது அது எனக்குள் உருவான வடிவத்தை விட்டுவிட்டு வேறு வடிவத்தை அடைந்துவிடுகிறது. அதனால் அது வெளிவரும் வரை பகிர்ந்துகொள்வதில்லை. விரைவில் அறிவிப்பு வெளியிடுவேன்.’’

 ச.அழகு சுப்பையா - படங்கள்: க.பாலாஜி  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism