
20.12.2018 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை...
சசிதரன்தான் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். கிழக்குக் கடற்கரை சாலையில் மதியம் 12 மணிக்கும் போக்குவரத்து நெரிசலாய் இருந்தது. கேஎஃப்சி-க்கள், டோமினோஸ் பீஸாக்கள், காபி டே-க்கள் வந்துகொண்டே இருந்தன. பீச் ரிசார்ட்டுகளுக்கான அறிவிப்புப் பலகைகள் ஒவ்வொரு நூறடியிலும் இருந்தன.

சசி வண்டியை ஓட்டியபடியே காரின் முன்னிருக்கையில் அமர்ந்திருக்கிற அவன் மாமா அச்சுதன் நாயரிடம் `buyer என்ன சொல்றான்.’ அச்சுதன் அவன் பக்கம் திரும்பாமல் வெளியே பார்த்த வண்ணம், ‘ரெண்டரை சி-ன்னா முடிச்சிக்கலாம்றான்.’
‘நீங்க என்ன நினைக்கிறீங்க?’
‘இந்த இடத்தப் பார்த்துட்டு முடிவு பண்ணுவோம்.’
வண்டி இடது பக்கம் திரும்பி, சின்னாண்டி குப்பம் என்ற பலகை இருக்கும் மரங்களடர்ந்த சாலைக்குள் திரும்பியது. சாலையில் மரங்கள் இருபுறமும் உயர்ந்து ஒன்றையொன்று முத்தமிட்டுக்கொள்வதைப்போல ஊடலும் விலகலுமாக இருக்க, நிழல் அடர்த்தியாகப் படர்ந்திருக்க, வெளிச்சம் கிழிசல்போல ஆங்காங்கே கிடந்தது.
அச்சுதன் நாயர் சென்னையில் 1960-களின் நடுப்புறத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அவர் வேலை பார்த்த நிறுவனத்தின் தலைமையகம் சென்னையில் இருந்தது. வந்த காலந்தொட்டு ஈக்காட்டுத்தாங்கலில்தான் வீடு. ஈக்காட்டுத்தாங்கல் அப்போது பெரும் காடு. ஆங்காங்கே பனை மரங்கள் தெரிய, எங்கிருந்து பார்த்தாலும் பரங்கிமலை தோமையரின் ஆலயம் தெரியும். சாலையின் இருபுறமும் படகுகள் பழுதுபார்க்கும் நிறுவனங்கள். ஜாபர்கான்பேட்டைத் தரைப்பாலத்தைத் தாண்டினால் கத்திப்பாரா சந்திப்பு வரை ஆள் நடமாட்டமே கிடையாது.
அவர் வேலை பார்த்த ஈஎம் பெர்மிங்கோ லாஜிஸ்டிக் நிறுவனம் பாரிஸ் தம்புச்செட்டி தெருவில் இருந்தது. அதற்கு அண்ணாசாலை வழியாக பதினைந்து நிமிடத்தில் போய்விடுவார். அவர் நிறுவனத்திற்கு ஐந்து கப்பல்கள் சொந்தமாக இருந்தன. அவசரத் தேவைக்கு வாடகைக்கும் எடுத்துக்கொள்வார்கள். அந்த ஐந்து கப்பல்களில்தான் அச்சுதன் நாயர் இன்ஜினீயரிங் பிரிவில் மாறிமாறி 28 வருடங்களாக வேலை பார்த்தார். சாதாரண மெக்கானிக்காகத் தொடங்கி, படிப்படியாகக் கப்பலில் இருக்கும் இரும்பு ஏணிப்படிகளில் ஏறுவதுபோல மெதுவாக ஏறினார். கடைசிவரை உயரத்திற்குப் போகவே முடியவில்லை.

மெர்ச்சன்ட் நேவியில் வேலை என்று பின்னிரவு பார்ட்டிகளிலும் உறவினர்களிடமும் பெருமையாகச் சொல்லிக்கொண்டாலும், நிலத்துக்கு நிகராக அல்லது நிலத்தைவிடக் கூடுதலாகவே கப்பலில் வேற்றுமை நிலவியது. கேப்டன்கள் சக்ரவர்த்தியாகத் தங்களைக் கருதிக் கொள்வார்கள். நீ வேறு, நான் வேறு என்று ஒவ்வொன்றிலும் வெளிப்படும். கேப்டன் தனது டாப் டெக்கிலிருந்து உலாவும்பொழுது அந்தப் பக்கமே போகக் கூடாது என்பார்கள். அவர் தனது சுங்கான் அறையிலிருந்து கடலைப் பார்க்கும்போது இந்த மாபெரும் இரும்பு இயந்திரம் தன்னால்தான் இந்தச் சமுத்திரத்தில் நீந்திக்கொண்டிருக்கிறது என்ற பெருமிதத்தோடு நிற்பார். ஆனால், கப்பல்களில் வெப்பம் நிறைந்த நிலவறைகள் உண்டு. அதில் நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் வெப்பமும், கிரீஸும் எண்ணெயும் பிசுபிசுக்க வேலைபார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களாலும் அந்தக் கப்பல் இயங்குகிறது என்று கேப்டன் வர்க்கங்கள் ஒருபொழுதும் நம்புவதில்லை. கேப்டன்களைப் பொறுத்தவரை கடைநிலைத் தொழிலாளர்கள் என்பவர்கள் தண்ணீரிலிருந்து தப்பிக் கப்பலுக்கு ஏறிவந்த எலிகளைப் போலத்தான். அச்சுதன் நாயர் நிறைய கேப்டன்களையும் கடல்களையும் கடந்து வந்திருந்தார்.
ஈக்காட்டுத்தாங்கலில் அக்காலத்தில் சல்லிசாய் வாங்கிய ஐந்து கிரவுண்டு நிலத்தைச் சுற்றி, வாங்கும்போது வெற்றாய்க் கிடந்தது, பிறகு மெதுமெதுவாய் வீடுகள் முளைத்து ஒரு கட்டத்தில் கப்பலின் இன்ஜின் அறைபோல் ஆகி விட்டதாய் அச்சுதானந்தனுக்குத் தோன்றும். இடித்துக்கொள்ளாமல் எங்கும் நடக்க முடியாது. வீட்டை இடித்துப் பெரிதாக்கலாம் என்றால், அவர்கள் இருப்பது சிறிய சந்து, ஒரு கார் வந்தால் இன்னொரு கார் வர முடியாது. இதற்குள் லட்சங்களைச் செலவழித்து வீடு கட்டுவது வீண் என்று இன்ஜினீயர் உறுதியாகச் சொன்னார். புதிய வீடு எனும்போது அந்த வீட்டைப் பற்றி அச்சுதனுக்குத் தீர்க்கமான கனவு இருந்தது.
மருமகன் சசிதரன்தான் அந்த யோசனையைச் சொல்லிக்கொண்டேயிருந்தான். இந்த இடத்தை விற்றுவிட்டு வேறெங்காவது இடம் வாங்கி, பெரிய வீடாய்க் கட்டிவிடலாமென. அச்சுதன் நாயர் அந்த யோசனையை அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை.
சென்னையைக் கடும் மழையும் வெள்ளமும் தாக்கிய வாரத்தில், அடையாறு உடைத்துக்கொண்டு ஈக்காட்டுத்தாங்கலைச் சூழ்ந்த ஒரு காலை. அச்சுதன் நாயர் தம்பதியினர் வீட்டின் மேற்தளத்திலேயே குடியிருந்தார்கள். கீழ்த்தளத்தில் வேண்டாத சாமன்களைப் போட்டு வைத்திருந்தார். மகளும் மருமகனும் கேகே நகரில் இருந்தார்கள். காலையில் மாடி பால்கனிக் கதவைத் திறந்து வெளியே பார்த்தவர் அதிர்ந்துபோனார். தெருமுழுக்கத் தண்ணீர் சூழ்ந்து, ஒருகணம் தன் சொந்த ஊரான ஆலப்புழைக்கு வந்துவிட்டோமா என்ற மயக்கத்தை ஏற்படுத்தியது. எதிர்வீட்டிலிருந்து ராமச்சந்திரன், “நிங்கள ராத்திரி குறையக்க விளிச்சு. ஒரு அணக்கமுமில்லா...” அச்சுதன் நாயர் அக்கணம் தீர்மானித்தார், வேறு எங்காவது போய்விடுவதென.
அவர் சொன்ன மறுகணத்திலிருந்து சசிதரன் பரபரப்பாய் வேலை செய்தான். அவரின் ஒரே மகளான ஸ்ரீஜாவைக் காதலித்துக் கல்யாணம் செய்திருந்தான். மாமனாருக்குத் தன் சாதி குறித்து இளக்காரம் உண்டு என்ற சந்தேகம் எப்பொழுதும் உண்டு. அதோடு சமீபத்தில்தான் மாமனாரின் அண்ணன் ஆலப்புழையில் இறந்திருந்தார். கேஎஸ்ஆர்டிசியில் கண்டக்டராய் வேலை பார்த்தவர். வாங்கும் சம்பளத்தில் பாதி லாட்டரிக்குப் போய்விடும். அவரின் பாடையைத் தூக்குவதற்கு முன்னேயே கடன்காரர்களின் சத்தம் கேட்கத் தொடங்கிவிட்டது. அச்சுதன் நாயரின் அண்ணி தனி மலையாளத்தில் அவருக்கு இன்லேண்ட் லெட்டரில் கடிதம் எழுதுவாள். அண்ணனுக்கு கல்யாணமாகாத இரண்டு பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள். மனங்கனிந்து அவர்களுக்கு ஏதாவது கொடுத்துவிடுவதற்குள், அவருடைய சேமிப்பின் கணிசமானதை எதிலாவது முடக்கிவிட வேண்டுமென்று ஸ்ரீஜாவும் சசிதரனும் தீவிரமாய் இருந்தார்கள். எங்கேயாவது கடலோரமாய் இருந்தால் நல்லதென்று சொல்லியிருந்தார்.

டீக்கடையில் ஆட்கள் பிளாஸ்டிக் காகிதங்களில் சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். பெரிய பங்களாக்களில் நாய்கள் சோம்பிக் கிடந்தன. அப்பார்ட்மென்ட் வாசல்களில் செக்யூரிட்டிகளின் செல்போன்களில் ஒரியா பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. பிரமாண்ட, பிரமாண்ட பங்களாக்களைக் கடந்து சசிதரன் வண்டியை ஒரு தெருவுக்குள் திருப்பினான், சீவியூ அப்பார்ட்மென்ட் என்ற பெயர் பொறித்த அப்பார்ட்மென்ட் முன் வண்டியை நிறுத்தினான். பணக்காரப் பகுதி முடிந்து மீனவக்குப்பம் தொடங்குமிடமாக அந்த இடம் இருந்தது. பத்துப்பதினைந்து வீடுகள் அந்தப் பகுதிக்குச் சம்பந்தமில்லாத சிதிலமான தோற்றத்தில் இருந்தன. கட்சிக்கொடிகள் பறக்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருந்தன. சமீபத்தில் வந்துவிட்டுப்போன ஒரு அரசியல் தலைவரை வரவேற்கும் போஸ்டர்கள் அரையும்குறையுமாகக் கிழிந்து கிடந்தன. அப்பார்ட்மென்ட்காரர்கள் காலையில் கண்விழித்தால் குப்பத்து ஓட்டு வீடுகள்மீதுதான் விழிக்க வேண்டும். இரவு உயர்ரக மதுவோடு பால்கனியில் அமர்ந்தாலும் கீழிருந்து எழும் டாஸ்மாக்கின் தொண்ணூறு ரூபாய் சரக்கின் ஏப்பங்களும், வெளி நாட்டு விண்டேஜ் சரக்குகளின் ஏப்பங்களும் அந்தரத்தில் சந்தித்துக் கொள்ளவே செய்யும்.
சசிதரன் மாமாவுக்கு பவ்யமாகக் கதவைத் திறந்து விட்டான். ``இதுதான் மாமா நாம வாங்கப்போற பிராப்பர்ட்டி” என்று சுட்டிக் காட்டினான். சீவியூ காம்பவுண்டுக்கு அந்தப் பக்கம் வெற்றிடம் கிடந்தது. அந்த வெற்றிடம் முடியும் இடத்தில் சிதிலமான காம்பவுண்ட் சுவர் அருகே குப்பத்து வீடுகள் இருந்தன பிள்ளைகளும் நாய்களும் அங்குமிங்கும் ஓட, வருடக்கணக்காக வாராத குப்பைகள் மக்கிக் கிடந்தன. பாலித்தீன் கவர்கள் காற்றில் சுழன்று கொண்டிருந்தன. எம்ஜிஆர் போட்டோ ஒன்று காம்பவுண்ட் சுவரில் காய்ந்த மாலையோடு தொங்கிக்கொண்டிருந்தது. நாய் ஒன்று சந்தேகமாக இவர்களைப் பார்த்துக் குரைக்க, காம்பவுண்டுக்குள்ளிருந்து கைலியோடு வெளிவந்த ஒருவன் “ஏய் ராஜா சும்மா இரு” என்றவுடன், அது உடனடியாக சமாதானம் அடைந்தது.
அச்சுதன் “எதுவரைக்கும் நாம வாங்கப்போற இடம் சசி” என்று குப்பத்து வீடுகளைப் பார்த்தபடி கேட்க, ``அப்பார்ட்மென்ட் காம்பவுண்டிலிருந்து அந்தக் குப்பத்து வீடுகளையும் சேர்த்து மூணேமுக்கால் கிரவுண்ட்” என்று சொல்லிக்கொண்டிருந்த சசிதரனைச் சுற்றி வந்தது ராஜா என்றழைக்கப்பட்ட நாய். கைலி கட்டியவன் மெதுவாக அவர்களை நெருங்கி வந்து “இன்னா சார்... இந்த எடத்த வாங்கப்போறீங்களா… நாங்கல்லாம் ரெம்ப வருசமா இருக்கிறோம்” எனச் சொல்லிக் கொண்டிருக்க, சசி அவனைப் பொருட்படுத்தாதவனாய் காலியிடத்திற்குள் நுழைந்தான். நாயரும் அவனைப் பின்தொடர்ந்தார். நாயர் குறுக்கும் நெடுக்குமாக அந்த வெற்றிடத்தில் நடந்தார். ஒருமணி வெயில் சுள்ளென்று இருந்தது. நாயர் கிழக்குப்பக்கமாக நின்று கடலை நோக்கினார். கடல் சற்று தூரத்தில் தள்ளுவண்டிகளைத் தாண்டி ‘குளிக்காதே’ அபாய போர்டுக்கு அப்பால் மினுமினுத்துக்கொண்டிருந்தது. கைலி கட்டியவனோடு இப்போது இன்னும் கொஞ்சபேர் சேர்ந்துகொள்ள “இன்னாப்பா விசயம்… நாங்கல்லாம் எங்க தாத்தா பூட்டன் காலத்திலேருந்து இங்கதான் கிடக்கிறோம்” என்று புளிச்சென்று வெற்றிலை எச்சிலைத் துப்பியபடி கிழவி சொல்ல, ராஜா நாய் குரைத்து ஆமோதித்தது. ``வரியெல்லாம் கெட்றோம்பா” என்று யாரோ சொல்ல, சசிதரன், மாமாவிடம் சைகையில் போகலாமென்றான்.
காரில் திரும்பும்போது அச்சுதன் “ப்ராப்பர்ட்டியில ப்ராபளம் இருக்கோ…” “அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமா… அசிஸ்டென்ட் கமிஷனர் டொமினிக் சாக்கோ என் கிளாஸ்மேட்தான். அவன் வழியாத்தான் இந்த டீலிங்கே நடக்குது. அப்புறம் ப்ராபளம் இருக்கிறதனாலதான் இந்த ரேட்டே. உங்களுக்கு இடம் ஓ.கேதான?” அச்சுதன் மானசீகமாக கண்ணை மூடி யோசித்தவர் ``ஓகே” என்றார்.

மூன்று மாதம் கழித்து ரிஜிஸ்ட்ரேஷன் முடித்த பிறகு இன்ஜினீயர், சசிதரனோடு அச்சுத நாயர் இடத்திற்குப் போனபோது அந்த இடம் துப்புரவாக்கப்பட்டு வேலியடைத்து, This property is belongs to achuthan nair s/o parameswaran nair என்ற போர்டு காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. குப்பம் இருந்ததற்கான ஒரு சுவடும் இல்லை. ராஜா நாய் மாத்திரம் தூரமாய் அவர்களைப் பார்த்து சன்னமாய் உறுமிக்கொண்டிருந்தது. எம்ஜிஆர் போட்டோவை யாரோ பத்திரமாய் வேப்ப மரத்தின் கீழ் எடுத்து வைத்திருந்தார்கள்.
அடுத்த பதினைந்து நாள் அச்சுதன் நாயர் தன்னறையில் இருந்து சாப்பிடுவதற்கு மாத்திரம் வெளியே வந்தார். வழக்கமான அவரது காலை நடை மாலை நடை எதுவுமில்லை. அவருடைய அன்றாடம் முடங்கிக் கிடந்தது. மனைவி மகளிடம் சந்தேகமாய்ச் சொல்ல, அவள் ``விடு பார்த்துக்கலாம்” என்றாள். பதினைந்தாவது நாள் காலை அவர் வெளியே வந்தபோது, வீட்டில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் காத்திருந்தது. அச்சு அசலாய் அப்படியே ஒரு கப்பலை வீட்டின் வரைபடமாக மாற்றியிருந்தார். கடலுக்கு முகம் காட்டி நின்றது அந்தக் கப்பல் வீடு.
இருபத்து நான்கு தூண்கள் தரையிலிருந்து எட்டடி உயரத்திற்கு மேலே கட்டடத்தைத் தாங்கி நிற்க, கப்பலின் கீழ்த்தளம் அவர் பணியாற்றிய பகுதி வரவேற்பறையாகவும், அதற்கு அடுத்த தளம் கேப்டன் மற்றும் உதவி கேப்டன்களின் அறைகளாகவும், அதன் பக்கவாட்டில் உள்ள ஸ்டோரேஜ் ரூம் அடுப்படியாகவும், அதற்கு மேலே உள்ள கேப்டனின் டெக் நாயரின் அறையாகவும், கேப்டன் வந்து நிற்கும் முகப்பைத் தன் பால்கனியாகவும், நாலாயிரம் சதுர அடி விஸ்தாரத்தில் வரைந்திருந்தார். வெளிச்சுவருக்கு என்ன நிறம், உட்சுவருக்கு என்ன நிறம் என்ற குறிப்புகள் உட்பட வரைபடத்தில் குறித்திருந்தார். இன்ஜினீயர், சசிதரனைத் தனியாக அழைத்துப் போய், “இதுதான் பைனல் பிளானா சசி.” சசிதரன் அதற்கு. “நானும் என் வொய்ப்பும் எவ்வளவோ சொல்லிப் பார்த்திட்டோம்… ஆன்டியும் பேசிப் பார்த்திட்டாங்க… இந்தப் பிளான் இல்லனா வீடே கட்ட வேணாங்கிறார்.” ``செலவு எகிறும் சசி.” ``வேற வழி இல்ல சார்” என்று சலிப்பாய் எழுந்தான் சசிதரன்.
ஒரு வருடம் கட்டுமான வேலை நடந்தது. சின்னாண்டி குப்பம் முழுக்க ஒரே பேச்சாக இருந்தது. `கப்பல அப்படியே கட்டுறாங்கலாம்.’ யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக பிரமாண்டமான பச்சைத்திரையால் மூடியிருந்தார்கள். கைப்பிடிகள் பால்கனிக்கான கம்பிகள், கப்பலுக்கான கொடிக்கம்பம் போன்றவற்றை, கப்பலுக்காக அவற்றைத் தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனத்திடமே ஆர்டர் கொடுத்திருந்தார் அச்சுதன்.
புதுமனை புகுவிழாவின் பொழுது ஊரே வந்து பார்த்தது. ஒரு ஆங்கிலப் பத்திரிகை `A seaman desire’ என்று ஞாயிற்றுக்கிழமை supplymentary-யில் கட்டுரை வெளியிட்டது. அச்சு அசல் கப்பலைப் போலவே கடலைப் பார்த்து அரக்கு வண்ணத்தில் பிரமாண்டமாய் நின்றது. சின்னாண்டி குப்பத்தின் அடையாளங்களில் ஒன்றாக அது மாறியது.
“அந்தக் கப்பல் வீடு இருக்குல்ல… அதிலேருந்து லெஃப்ட்டு.”
“கப்பல் வீட்டுகிட்ட வந்திரு.”
``கப்பல் வீடு இருக்குல்ல… அதுக்கு நேர பின்னாடி.”
வேனிற்கால மாலைகளில் அச்சுதன் நாயர் தனது அறையிலிருந்து, அதாவது கேப்டன் அறையின் முகப்பில் வந்து நிற்பார். கடல்காற்று அவரையும் அவரின் குறைந்த அளவான தலைமுடியையும் பின் தள்ளும். உலோகத் திண்மை உள்ள பால்கனிக் கம்பிகளைப் பிடித்து நிற்கும்போது, தான் கீழடுக்கிலிருந்து மேலே பார்த்த கேப்டன்களின் முகம் நினைவுக்கு வரும்.
ஒரு பார்ட்டியில் மலையாள நடிகர் அந்த வீட்டை விலைக்குக் கேட்க, அச்சுதன் நாயர் சிரித்துக்கொண்டே “நாட் ஃபார் சேல்” என்று சொல்லியபடி நகர்ந்தார்.

வீடு கட்டும்பொழுதே சில பிரச்னைகளை சசி அவரிடம் சொல்லியிருந்தான். திடீரென வீட்டின் முன் கழுத்தறுக்கப்பட்ட சேவல் கிடக்கும். சில நாள் ரத்தச் சிவப்பான எலுமிச்சை. சில நாள் என்னவென்று கண்டுபிடிக்க முடியாத விநோதப்பொருள்கள். அச்சுதன் நாயரே உறங்காது இருந்த ஒரு ராத்திரியில் நேரடியாகவே அதைப் பார்த்தார். ஒருவன் அவர்கள் வீட்டை நோக்கி ஏதோ பிதற்றியபடி மண்ணை அள்ளி இரவு முழுக்க எறிந்துகொண்டிருந்தான். ராஜா நாய் ‘மூஸ் மூஸ்’ என அழும் குரலோடு அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது.
அங்கு முன்பு குப்பம் இருந்தற்கான சாட்சியமாய் ராஜா நாய் மாத்திரமே இருந்தது. அது கப்பல் வீட்டுப் பக்கம் வரவே வராது. அச்சுத நாயர் வீட்டு வேலைக்காரி மீனா மீந்த சாப்பாட்டைப் போட்டு அழைத்தாலும் பக்கத்தில் வரவே வராது. அடுத்த தெரு நாய்களே அதைச் சாப்பிட்டுவிட்டுப் போகும். கப்பல் வீட்டுக்கு எதிரே உள்ள குட்டிச்சுவரிலோ, வேப்பமரத்தடி எம்ஜிஆர் போட்டோ அருகிலோ அது இருக்கும். அச்சுதன் நாயர் ஒரேயொரு முறை இரவில் அதன் கண்ணைப் பார்த்தவர் பிறகு அதன் கண்ணைப் பார்த்ததேயில்லை. நாயை ஆள் வைத்துத் துரத்திப்பார்த்தார்கள். இரண்டொரு நாள் காணாமல் போய் மறுபடியும் வந்துவிடும்.
நகரில் நான்கு நாள்களாக மழை விடாது கொட்டித் தீர்த்துக்கொண்டிருந்தது, சாலையில் இடுப்பளவு தண்ணீர் ஓடியது. மழைக்குப் பாதுகாப்பாக அபார்ட்மென்ட் காம்பவுண்டின் சுவரின் மீது நின்ற நாய், தண்ணீரில் தெரியும் கப்பல் வீட்டின் தலைகீழ் பிம்பத்தையே பார்த்துக் கொண்டிருந்தது, திடீரென ஆவேசமாய்க் குரைத்தது. பிறகு ஆச்சர்யத்துடன் நிமிர்ந்து வீட்டைப் பார்க்க, கப்பல் வீடு தண்ணீரில் கடல் இருக்கும் திசை நோக்கி மெதுவாய் மிதந்து போய்க்கொண்டிருந்தது.
- சாம்ராஜ்
ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி
(20.12.2018 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)