Published:Updated:

``என் உயிர் இருக்கும்வரை கிராமியக் கலையை கற்றுக்கொடுப்பேன்!’’ - கலைமாமணி மோகன்

"வாழ்க்கை கடைசி வரைக்கும் வறுமையிலேயே பயணிக்கிறது என்ற வருத்தம் இருந்தாலும், கலையை இன்றுவரை மதிக்கிறேன். என்னுடைய சர்வீஸில் பல கலைஞர்களை வளர்த்துள்ளேன். அவர்கள் தற்போது தனியார் தொலைக்காட்சிகள், சினிமாக்கள் என்று சென்றுவிட்டனர்."

``என் உயிர் இருக்கும்வரை கிராமியக் கலையை கற்றுக்கொடுப்பேன்!’’ - கலைமாமணி மோகன்
``என் உயிர் இருக்கும்வரை கிராமியக் கலையை கற்றுக்கொடுப்பேன்!’’ - கலைமாமணி மோகன்

தான் கற்ற கிராமியக் கலையை பல்வேறு நாடுகளுக்கும், மாநிலங்களுக்கும் கொண்டு சென்ற மோகன் வாத்தியார் தற்போது தன் 8 வயது பேரனுக்கும், 7 வயது பேத்திக்கும் கிராமியக் கலையை கற்றுக்கொடுத்துவருகிறார்.

மதுரையில் பிரபலமான கிராமியக் கலைஞர்களான கலைமாமணி வேலு, லெட்சுமி, காவடி சுந்தரம், சுலோக்சனா, ஓம் பெரியசாமி உள்ளிட்ட கலைஞர்களுடன் இணைந்து பணி செய்த பிரபல கட்டைக்கால் கலைஞர் ஆர்.மோகன். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களின் பட்டி தொட்டிகள் வரை, கிராமியக் கலையைக் கொண்டு சென்று, பல கலைஞர்களை வளர்த்துள்ளார். சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். தற்போது 65 வயதாகிய இவர் தனது மகனுக்கு மட்டும் அல்லாமல் பேரன், பேத்திகளிடமும் கிராமியக் கலையை கற்றுக்கொடுத்து, கலையை வளர்த்துவருகிறார்.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில், பத்துக்கு பத்து அடி ஓட்டு வீட்டில் வசித்துவரும் மோகன் ஐயாவைச் சந்தித்து பேசினோம்...

``காலம் மாறிப்போச்சு தம்பி... கலைக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும் குறைஞ்சு போச்சு. ஆனா, என்னுடைய  நெஞ்சில் கிராமியக் கலையின் ஆர்வம் இன்னும் குறையலை. கஞ்சிக்குக் கஷ்டப்பட்டாளும் கிராமியக் கலையை என்னுடைய குடும்பம் விடாது’’ என ஆதங்கத்துடன் பேசத் தொடங்கினார். 

"அப்பா அடித்துவிட்டார். இனி வீட்டில் இருக்கக்கூடாது எனக் கிளம்பிய நான், சிவாஜி கணேசன் போல் பெரிய நடிகனாக வேண்டும் என ஆசைப்பட்டு, எட்டு வயதில், எட்டு ரூபாயுடன் சென்னைக்குச் சென்றேன். கோடம்பாக்கம் வாணி ஸ்டுடியோவில் லைட்பாயாக வேலைக்குச் சேர்ந்தேன். இயக்குநர் வின்செண்ட் `மதுரைக்காரன் துடுக்கா பேசுவான்’ என்று என்னை உடனே வேலைக்குச் சேர்த்துக்கொண்டார். அப்போது அன்னை வேளாங்கண்ணி என்ற திரைப்பட சூட்டிங் நடைபெற்றது.

அதில் கிராமியக் கலைஞர்கள் நிறையப் பேர் நடனமாடினார்கள். ஒரு வாரம் அதைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு கிராமியக் கலை மீது ஆர்வம் ஏற்பட்டது. சாப்பாடு நேரத்தில் ஆள் இல்லாத சமயம், கலைஞர்கள் வைத்திருந்த கட்டைக்காலை மாட்டி நடந்துபார்த்தேன். இதை மறைமுகமாகப் பார்த்துக்கொண்டிருந்த என்னுடைய குரு கே.டி.பெருமாள், என் ஆர்வத்தைப் பார்த்து கிராமியக் கலைகளைக் கற்றுக் கொடுத்தார்.

ஆட்டம் பழகி இரண்டு மாதத்திலேயே பெரும் கலைஞருடன் சவாலுக்காக என்னைக் களத்தில் இறக்கினார். பயந்து கொண்டே போட்டியில் இறங்கி நான் இரண்டு ஆட்டம் மட்டும் ஆடி அவரை வென்றேன். ஆனால், அது எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. அவரிடம் சென்று உங்களிடம் போட்டியிட்டது தவறு என்று மன்னிப்பு கேட்டேன். ஆனால், ஆவர் `இதற்கு நீ மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. நீ கலை உலகில் சிறந்து விளங்குவாய்’ என்று வாழ்த்தி சால்வை போர்த்தி அனுப்பிவைத்தார். தொடர்ந்து சென்னையில் இருந்துகொண்டு என்னுடைய வாத்தியாருடன் கலை நிகழ்ச்சிகளுக்குச் சென்று பெயர் எடுத்துவந்தேன்.

பல நாள்கள் பட்டினியும், பசியும் இருக்கும். கிராமங்களில் ரசிகர்களின் கைதட்டலால் மனது நிறையும். வாத்தியார் வாங்கித்தரும் காப்பிக்கும், டீ க்கும் வயிறு நிறையும். பல நேரம் சம்பளத்துக்காக ஆடுவோம். சில நேரம் சம்பளம் எதிர்பார்க்க முடியாது. இருந்தாலும் ஆட வரமாட்டோம் எனச் சொன்னதில்லை. கிடைத்த காசை வைத்து பஸ் ஏறி போயிருவோம்.

அதன்பின், எங்கள் வீட்டில் என்னைத் தீவரமாக தேடிக் கண்டுபிடித்தனர். 8 வயதில் சென்னைக்கு வந்த நான் 18 வயதில் மதுரைக்கு அப்பாவுடன் திரும்பி வந்துட்டேன். மதுரையில் பிரபல கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சிகள் நடத்தினேன். மாடு ஆட்டம், மயில் ஆட்டம், குதிரை ஆட்டம், கரகாட்டம் என்று எதற்கும் சலைக்காம நிகழ்ச்சிக்குப் போனேன். 2003-ல் அப்துல் கலாம் ஐயா அவர்களிடம் விருதும் பாராட்டும் பெற்றேன். அதே ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் `கலை நன்மணி’ விருது பெற்றேன். 2005-ல் `கலைமாமணி’ விருது பெற்றேன். 2007-ல் `கலைமணி’ விருது பெற்றேன்.

2006-ல் ஜெர்மனியில் உள்ள கலைப் பள்ளியின் மூலம் `கலைமுதுமணி’ விருது பெற்றேன். இப்படி பல்வேறு விருதுகள் பெற்றேன். தற்போது முதுமை அடைந்துவிட்டதால் கலைப் போட்டிகளுக்கு மார்க் போட செல்கிறேன். வாழ்க்கை கடைசி வரைக்கும் வறுமையிலேயே பயணிக்கிறது என்ற வருத்தம் இருந்தாலும், கலையை இன்றுவரை மதிக்கிறேன். என்னுடைய சர்வீஸில் பல கலைஞர்களை வளர்த்துள்ளேன். அவர்கள் தற்போது தனியார் தொலைக்காட்சிகள், சினிமாக்கள் என்று சென்றுவிட்டனர்.

என்னுடைய மகனுக்கும் கிராமிய கலையைக் கற்றுக்கொடுத்துள்ளேன். தற்போது என்னுடைய பேரனுக்கும், பேத்திக்கும் கற்றுக்கொடுத்துவருகிறேன். என் உயிர் இருக்கும்வரை கிராமியக் கலையை விரும்பும் நபர்களுக்குக் கற்றுக்கொடுப்பேன். என்னுடைய பல நாள் கோரிக்கை கிடப்பில் இருக்கிறது. கலைமாமணி உள்ளிட்ட அரசு சார்ந்த விருதுகளை அரசு வழங்க வேண்டும். முறையாகப் பயிற்சி பெற்று பணியாற்றும் கலைஞர்களுக்கு அதனை வழங்கி கௌரவப்படுத்த வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.

மோகன் மாஸ்டர் மகன் பாண்டி கூறுகையில், ``நானும் 8 வயதில் கரகத்தைப் பிடிக்க ஆரம்பித்தேன். தற்போது என்னுடைய குழந்தைகள் என் அப்பாவிடம் கட்டைக்கால் பயிற்சி எடுத்துவருகின்றனர். கலை வளர்மணி, கலை சக்கரவர்த்தி, கலை முரசு, உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளேன். கடந்தவாரம் சர்வதேச தமிழர் பல்கலை கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளேன். வருடத்தில் 6 மாதம் கலை நிகழ்ச்சிக்குச் செல்வதை வைத்து குடும்பம் நடத்திவருகிறேன். அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும்போது நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவருகிறேன்.

பொங்கல் நேரத்தில் நிகழ்ச்சிகள் அதிகமாக இருக்கும்.  அப்பாவுக்குப் பிறகு நானும், என்னுடைய குழந்தைகளும் கிராமியக் கலைகளைக் கொண்டு செல்வோம். பள்ளிகளுக்குச் சென்று தற்போது குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்துவருகிறேன். கிராமியக் கலை எப்போதும் அழிந்துவிடக்கூடாது என்று பல்வேறு முயற்சிகள் செய்துவருகிறேன். அரசு எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு வழங்கவேண்டிய இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட சலுகைகளை வழங்கிட வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

கிராமியக் கலைகள் அழியக்கூடாது என்றால், இவர்களைப் போன்ற ஏழ்மையான கலைஞர்களை அரசு மீட்டெடுக்க வேண்டும்!