Published:Updated:

“கொழும்புவில் ஈழத் தமிழர்களின் வாழ்வும் அனுபவங்களுமே ‘கலாதீபம் லொட்ஜ்’ நாவல்!” - வாசு முருகவேல் #ChennaiBookFair2019

“கொழும்புவில் ஈழத் தமிழர்களின் வாழ்வும் அனுபவங்களுமே ‘கலாதீபம் லொட்ஜ்’ நாவல்!” - வாசு முருகவேல் #ChennaiBookFair2019
“கொழும்புவில் ஈழத் தமிழர்களின் வாழ்வும் அனுபவங்களுமே ‘கலாதீபம் லொட்ஜ்’ நாவல்!” - வாசு முருகவேல் #ChennaiBookFair2019

“எப்படி ஜெப்னா பேக்கரி ஒரு காலகட்டத்தில் இருந்த வாழ்வை அதன் உள் நிகழ்ந்த நிகழ்வுகளை அதன் பிரதிபலிப்புகளை காட்டியதோ அது போலவே இது வேறொரு வாழ்வு. வேறு மாந்தர்கள். அவர்களுடைய வாழ்வு ஏற்படுத்தும் அலைக்கழிவுகள், அதில் அவர்களை மீறி நிகழும் வாழ்வின் சூட்சமங்கள் என்று கலாதீபம் லொட்ஜ் மனதில் தங்கும்.”

'ஈழம்' என்ற சொல் தமிழகத்தின் அரசியலுக்கு உதவிய அளவுக்கு வேறு எந்தச் சொல்லும் உதவியதில்லை என்று சொல்லலாம். இதுவரை சினிமா, இலக்கியம் எனப் பல்வேறு படைப்புகளில் ஈழம் பேசப்பட்டாலும் அவை எதுவும் அந்த நிலத்தின் மொழியை, மக்களை, அவர்களின் வலியை முழுமையாகப் பதிவுசெய்து வெளிப்படுத்தவில்லை என்பதுதான் ஈழப் படைப்பாளிகள், ஈழம் பற்றிப் பேசுபவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது.

ஈழப் படைப்பாளிகளிடமிருந்து நேரடியாக வெளிவந்தவை இல்லை என்பதும் அதற்கொரு முக்கியக் காரணமாக இருக்கலாம். ஆனால், இப்போது பெருமளவில் ஈழப்படைப்பாளிகள் எழுத வந்துள்ளனர், அல்லது அவர்கள் எழுதுவது கவனம் ஈர்க்கிறது. அந்த அளவுக்கு ஈழநிலம் பற்றிய சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், குறும்படங்கள் எனப் படைப்புகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

அவற்றில் இலங்கை அரசின் போர்க்கொடுமைகள் மட்டுமல்லாது மக்களுக்குள் இருந்த சாதி, மத அடிப்படையிலான வேறுபாடுகள், இடப்பெயர்ச்சி, வன்கொடுமைகள் என ஈழப்போரின் பல்வேறு முகங்களைப் படைப்புகளாக எழுதி மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர்.  இவை ஓரளவு உண்மை நிகழ்வுக்கு நெருக்கமாக இருக்கும் என்று நம்பலாம். இதுவரை அகதிகளாக இருந்த ஈழ மக்களைப்போலவே அவர்களது படைப்புகளும் அகதிகளாகவேதான் இருந்தன. இனி அந்த நிலை நீடிக்காது எனும் அளவுக்கு ஈழப்படைப்புகளின் எண்ணிக்கையும் குணா கவியழகன், தமிழ்நதி, அகரமுதல்வன், வாசு முருகவேல் என ஈழ எழுத்தாளர்களின் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டிருக்கின்றன. 

அந்த வகையில் கடந்தமுறை ‘இலங்கைத் தீவிலிருந்து இந்திய ராணுவம் வெளியேறுவதற்கு முன்பாக ஊர்காவல் படை என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்களைக்கொண்டு ஒரு தனிப்படை அமைத்து அவர்களுக்கென அதிகாரம் கொடுத்தது. இந்த நடவடிக்கைக்குப் பிறகுதான், தமிழர் - இஸ்லாமியர் வெறுப்பின் குழப்பமான சூழல் தீவிரமடையக் காரணமாக இருந்தது. மத அடிப்படையிலான வன்முறைகளுக்கான தொடக்கத்தை இந்திய அமைதிப்படை விதைத்துவிட்டுப் போனதன் பின்னணியில் வாசு முருகவேல் எழுதியதுதான் ‘ஜெப்னா பேக்கரி, நாவல். அதன் களம், அவரின் எழுத்துநடை, கதையோட்டம் போன்ற காரணங்களுக்காக இந்த நாவல் வாசகர்களிடையே பரவலாக வாசிக்கப்பட்டது. இந்த நாவல் குறித்த பேச்சுகள் அடங்குவதற்கு முன்பே தனது அடுத்த நாவல் ‘கலாதீபம் லொட்ஜ்’-ஐ சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் வாசு முருகவேல். கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவல் குறித்தும், அடுத்தடுத்து நாவல் எழுதியதன் பின்னணி குறித்தும் தனது அனுபவத்தை நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார் வாசு முருகவேல்.

 “உடனடியாக அடுத்த நாவலை எழுதுகிறேன் என்று சொல்ல முடியாது. முதலாவது நாவலை எழுதும்போது தொடர்ந்து எழுதுவது என்ற எண்ணமே எழவில்லை. ஆனால், எனது முதல் நாவலான ஜெப்னா பேக்கரி எதையெல்லாமோ நிகழ்த்திவிட்டது. அதைக் கடந்து வர, எழுதுவதைவிட வேறு தீர்வு இல்லை என்று என் மனதுக்குத் தோன்றியிருக்கலாம். புதிதாக எதையும் தேட வேண்டியதில்லை. நமது வாழ்வில் இருந்தே நிறையக் கதைக்கான கருக்களை எடுக்கலாம். மிக இயல்பான வாழ்வில் இருந்து எடுத்து எழுதத்தொடங்கினேன். அது நிகழ்ந்து விட்டது. அவ்வளவு தான். 

கலாதீபம் லொட்ஜ் நாவலைப் பொறுத்தவரை இது புதிய களம்தான். சமீப காலங்களில் பேசப்படாத வேறு ஒரு வாழ்வைப் பதிவு செய்திருக்கிறேன். இலங்கையின் தலைநகரான கொழும்புக்கு பல்வேறு தேவைகளை ஒட்டி வருகிற வடக்கு கிழக்கு தமிழர்களின் வாழ்வும் அனுபவங்களும் இதில் பொதிந்திருக்கிறது. `ஈழத்தமிழர்கள் இலங்கையின் தலைநகரத்தில்’ என்றுகூட கூறலாம். அதில் இருக்கும் வாழ்வு தமிழீழர்களுடையது.

எதிர்வினைகளை எதிர்பார்த்து எந்த எழுத்தாளனும் எழுதுவான் என்று நான் கருதவில்லை. அது போன்ற எதிர்பார்ப்புகள் ஒரு இலக்கியப் படைப்பை சற்று சிதைக்கலாம் என்றுகூட கருதுகிறேன். எப்படி ஜெப்னா பேக்கரி ஒரு காலகட்டத்தில் இருந்த வாழ்வை அதன் உள் நிகழ்ந்த நிகழ்வுகளை அதன் பிரதிபலிப்புகளை காட்டியதோ அதுபோலவே இது வேறொரு வாழ்வு. வேறு மாந்தர்கள். அவர்களுடைய வாழ்வு ஏற்படுத்தும் அலைக்கழிவுகள், அதில் அவர்களை மீறி நிகழும் வாழ்வின் சூட்சுமங்கள் என்று கலாதீபம் லொட்ஜ் மனதில் தங்கும்.”

அடுத்த கட்டுரைக்கு